கி.மு. கி.பி. - மதன்

தமிழின் தலைசிறந்த நூல்கள் வரிசையில் 'கி.மு. கி.பி.' எப்போதும் மேலே இருக்கிறது. குறிப்பாக புனைவிலி (non-fiction) வகையில் இதுதான் தமிழில் எழுதப்பட்ட சிறந்த நூல் என்று இணையம் கொண்டாடுகிறது.

இந்த நூல் எது பற்றிப் பேசுகிறது என்று பார்த்தால், இது ஒரு தமிழ் 'சேப்பியன்ஸ்' (Sapiens) எனலாம். மனித குலம் தோன்றியதிலிருந்து நிகழ்ந்துள்ள பெரும் மாற்றங்கள் பற்றியும் நாகரிகங்கள் பற்றியும் பேசுகிறது. பெயர் 'கி.மு. கி.பி.' என்றிருந்தாலும் இந்த நூலில் அதிகம் பேசப்படுவது கி.மு.வே. கி.பி. அதிகம் இல்லை. கடைசியில் சில பக்கங்கள் மட்டுமே.

ஏற்கனவே நிறையப் பேர் சொல்வது போல, மனிதன் ஆப்பிரிக்காவில் தோன்றிய உயிரினம் என்றும் அதுவும் குறிப்பாக முதலில் தோன்றியது பெண்தான் என்றும் தொடங்குகிறார். எகிப்திய நாகரிகம், பாரசீக நாகரிகம், கிரேக்க நாகரிகம், இந்திய நாகரிகம் என்று பல்வேறு பண்டைய நாகரிகங்கள் பற்றியும் அவை மனிதகுலத்துக்குச் செய்த பெரும் உதவிகள் பற்றியும் பேசுகிறது.

முதலில் கடலில் பாக்டீரியா உருவாகிறது, அடுத்து மீன்கள், அடுத்து நிலத்தில் ஊர்வன, இப்படியே போய் குரங்கும் குரங்கிலிருந்து மனிதனும் உருவாகிறார்கள். வெவ்வேறு கண்டங்கள் உருவாகவில்லை. பின்னர் நிலப்பகுதிகள் சிறிது சிறிதாக நகன்றும் பிரிந்தும் கண்டங்கள் உருவாகின்றன. இந்தியா வந்து ஆசியாவில் மோதும் போது இமயமலை உருவாகிறது. இடையில் தானியம் தவறி விழுந்து நாமே அதை விதைக்கலாம் என்ற கண்டுபிடிப்பு நடக்கிறது. நாடோடி மனிதன் ஓரிடத்தில் தேங்கத் தொடங்குகிறான். விவசாயம் செய்கிறான், வீடு கட்டுகிறான், ஊர் வருகிறது, சமுதாயங்கள், நதிக்கரை நாகரிகங்கள் உருவாகின்றன. முதன்முதலில் பயிரிட்டது பெண் என்றும் ஆடு, மாடு, பன்றி போன்ற விலங்குகளை வளர்த்தது ஆண் என்றும் சொல்கிறார்.

உலகின் முதற் பெரும் நாகரிகம் மெசபடோமிய நாகரிகம். அதாவது பாபிலோனிய நாகரிகம். இன்றைய ஈராக் இருக்கும் இடத்தில் உருவான நாகரிகம். இன்றும் ஈராக்கில் 'ஊர்' (Ur) என்று ஓர் ஊர் இருக்கிறது. அதுதான் மனிதர்கள் உருவாக்கிய முதல் ஊர் என்கிறார். 'கண்ணுக்குக் கண், பல்லுக்குப் பல்' என்று சட்டத்தை அறிமுகப்படுத்திய ஹமுராபி மன்னன் இங்கிருந்தவன்தான். இன்றைய நவீன நீதி - சட்டங்களுக்கு ஒத்துவராத எவ்வளவோ கூறுகள் இருப்பினும் ஹமுராபியின் சட்டங்கள்தாம் இதற்கெல்லாம் அடிப்படை. அதில் தொடங்கியதுதான் சிறிது சிறிதாக மாற்றங்கள் செய்து இங்கு வந்து நிற்கிறது. அதற்கு முன்பு மனிதர்கள் கிட்டத்தட்ட விலங்குகளைப் போலத்தான் வாழ்ந்திருக்கிறார்கள். அல்லது அங்கொன்றும் இங்கொன்றுமாக அரைகுறைச் சட்டங்கள் இருந்திருக்கலாம். 

பூசாரிகள் ஆதி காலம் தொட்டே பெரும் அதிகாரங்கள் படைத்தவர்களாக இருந்தார்கள் என்கிறார். அரசர்களைக் கூட ஆட்டிவைப்பவர்களாக இருந்தார்களாம். அடுத்து, எகிப்தியர்களின் பிரமிட் மற்றும் மம்மிகள் பற்றி விரிவாகப் பேசப்படுகிறது.

அடுத்து கிரேக்க நாகரிகத்தில் சாக்ரடீஸ், பிளாட்டோ, அரிஸ்டாட்டில் மற்றும் அவருடைய சீடரான அலெக்ஸ்சாண்டர் ஆகியோர் பற்றிப் பேசப்படுகிறது. சாக்ரடீஸ் எப்படி இளைஞர்களை எழுச்சி பெறச் செய்தார் என்றும் எப்படிக் கொல்லப்பட்டார் என்றும் வருகிறது. அடுத்து அவருடைய சீடரான பிளாட்டோ எப்படிக் கிரேக்கத் தத்துவங்களை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் சென்றார் என்றும் அவருடைய சீடர் அரிஸ்டாட்டில் எப்படி அதற்கடுத்த கட்டத்துக்கு எடுத்துச் சென்றார் என்றும் சொல்லப்படுகிறது. கிரேக்கர்களின் சோக நாடகங்கள் பற்றிப் பேசப்படுகிறது.

கிரேக்கர்களுக்கு எப்படி அரிஸ்டாட்டிலோ அது போல் இந்தியர்களுக்குச் சாணக்கியர். அவர் அலெக்ஸ்சாண்டரை உருவாக்கியது போல், சாணக்கியர் இங்கே மௌரியப் பேரரசைக் கட்டியெழுப்புகிறார். இதுதான் இந்தியாவில் எழுந்த முதற் பேரரசு. அந்த வரிசையில் வந்த பிந்து சாராவும் அசோகரும்தான் பின்னர் அதை மேலும் பெரிதாக விரித்தவர்கள். அசோகர் பெரும் கொடுங்கோலராக இருக்கிறார். கலிங்கப் போருக்குப் பின்பே அன்பே வடிவான பௌத்தர் ஆகிறார். கடைசியாக ஓரிரு பக்கங்களில் கி.பி. பற்றிப் பேசிவிட்டு முடிந்து போகிறது.

வரலாற்றில் ஆர்வம் இருப்பவர்கள், ஏற்கனவே நிறையப் படித்திருப்பவர்களுக்கு இந்த நூல் அந்த அளவுக்குப் பிடிக்கும் என்று சொல்ல முடியாது. அடிப்படை வரலாறு தெரிந்துகொள்ள முயல்பவர்களுக்கு நல்ல தொடக்கப்புள்ளி எனலாம். நூலின் சிறப்பு அதன் எளிய மொழி. அதையே சிலர் மிகவும் பேச்சு பாணியில் இருக்கிறது என்று விமர்சிப்பதும் உண்டு.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம் - ஜெயகாந்தன்

நாத்திகம் - இன்னொரு மதம்!

வைகோ என்றோர் அரசியல் ஏமாளி