மெலூஹாவின் அமரர்கள் - அமிஷ் திரிபாதி

சிவபெருமான் மனிதனாக இருந்தால் எப்படி இருந்திருப்பார் என்கிற கற்பனையில் எழுதப்பட்டிருக்கும் புதினம். இதையடுத்து இதே வரிசையில் மேலும் இரு நூல்கள் வந்தன. கைலாயப் பகுதியில் பிறந்து வளர்ந்த ஒரு காட்டுவாசியான சிவன் கீழே இறங்கி, காஷ்மீர் மற்றும் வட இந்தியாவின் பிற பகுதிகளுக்குள் வந்து, ராமராஜ்யத்துக்குப் பின் ஒரு நல்ல ராஜ்யம் அமைப்பது போல வந்து வேறு பல வேலைகளும் செய்யப்போகிற கதை போல இருக்கிறது. ராமர் வாழ்ந்த காலத்துக்குப் பின்பு சிவன் வாழ்ந்தது போலக் கற்பனை செய்யப்பட்டிருக்கிறது. சிவனே கூட ராமனை வணங்குவது போன்ற ஒரு காட்சி கூட வருகிறது. நம்மூர்ச் சைவர்களுக்கு இது கசக்கலாம். இதைவிட சுவாரசியமான விஷயம், சிவனே ஒரு கடவுள் நம்பிக்கை அற்றவராக இருக்கிறார்.

கைலாயத்திலிருந்து ஸ்ரீநகர் வழியாக மெலூஹாவுக்குள் வருகிறார்கள் சிவனும் அவருடைய தோழர்களும். மெலூஹா என்பது இந்தியாவுக்கு மத்திய கிழக்குப் பகுதிகளில் இருந்த ஒரு பெயர் எனப்படுகிறது புதினத்துக்கு வெளியில் செய்த தேடலில். அந்த நாடு நீலக் கழுத்துடைய ஒருவர் வந்து தம்மைத் தம் எதிரிகளிடமிருந்து காப்பாற்றுவார் என்று காத்திருக்கிறது. மெலூஹா சூர்யவம்சிகளின் நாடு. "சூரியனைப் போல், நாங்களும் யாரிடமும் எதையும் பெறுவதில்லை; அளிக்க மட்டுமே செய்வோம்" என்று பெருமைப்படுகிற கூட்டம். 

அவர்களுடைய எதிரிகள் சந்திரவம்சிகள். அவர்கள் மட்டுமல்ல, அவர்களுக்குப் பின்னால் இருந்து உதவும் நாகர்களும். நாகர்கள் உண்மையிலேயே சந்திரவம்சிகளின் கூட்டாளிகளா, சந்திரவம்சிகள் உண்மையிலேயே தீயவர்களா என்பன போன்ற சில ரகசியங்களையும் ஒளித்துவைத்திருக்கிறது இப்புதினம்.

நாகர்களைப் பற்றிய சூர்யவம்சிகளின் எண்ணம்: "கேடுகெட்ட, மானங்கெட்ட, மதிகெட்ட மரபினர்; சோம்பேறிகள். எந்தக் கோட்பாடுகளுக்கும், சட்டதிட்டங்களுக்கும், மனசாட்சிக்குமே தங்களை உட்படுத்திக்கொள்ளாத மக்கள். சுத்த க்ஷத்ரியர்களைப் போலல்லாமல், மறைந்திருந்து தாக்கும் கோழைகள். அவர்களை ஆளும் அரசர்களே உண்மைக்குப் புறம்பானவர்கள்; தன்னலம் ஒன்றையே பின்பற்றுபவர்கள். ஏன், மனித இனத்துக்கே அவர்கள் ஒரு சாபக்கேடு! சபிக்கப்பட்ட பிறவிகள், முன் ஜென்மங்களில் செய்த கொடிய பாவங்களின் விளைவாக கோரமான உருவங்களுடனும், உடற்கோளாறுகளுடனும் பிறந்தவர்கள். இரண்டுக்கு மேற்பட்ட கைகள், அல்லது கடூரமான, அழகற்ற முகம், இப்படி... என்றாலும், அசாத்தியமான உடற்கட்டும், பல சக்திகளும் படைத்தவர்கள். ‘நாகன்’ என்ற சொல்லைக் கேட்டாலே எங்கள் மக்கள் குலைநடுங்குவார்கள்.’’ 

மெலூஹா மனித நாகரிகத்தின் உச்சம். எல்லாமே சிறப்பாக, நிறைவாக, அழகாக இருக்கும் இடம். ஆனாலும் மக்கள் எளிமையான வாழ்க்கையே வாழ்கிறார்கள். ஆடம்பரம் அனைத்தையும் கடவுளுக்கு மட்டுமே அர்ப்பணிக்கிறார்கள் (இது பண்டைய தமிழர்களைப் பற்றிச் சொல்லப்படுவதுண்டு. சோழர்களும் பாண்டியர்களும் கட்டிய கோயில்களின் அளவுக்கு எங்குமே அவர்களின் அரண்மனையைக் காண முடிவதில்லை என்பதால்!). மெலூஹாவின் மக்கள் நல்லவர்கள், ஆள்வோர் நல்லவர்கள், எல்லோரும் நல்லவர்கள். மக்கள் பல நூறு ஆண்டுகள் வாழும் அளவுக்கு ஆரோக்கியமான வாழ்வு வாழ்கிறார்கள். அதற்கு அவர்கள் அருந்தும் சோமரசம் என்னும் மந்திர பானம் உதவுகிறது. இவர்களின் எதிரிகளிடம் சோமரசம் தயாரிக்கும் தொழில்நுட்பமோ உத்தியோ இல்லாததால் அவர்கள் இதை அழிக்க முயல்கிறார்கள். 

பிராமணர், க்ஷத்திரியர், வைசியர், சூத்திரர் என்று நான்கு வர்ணத்தினர் இருக்கிறார்கள். அவர்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு நிறம் இருக்கிறது. பிராமணர்களுக்கு வௌ்ளை; க்ஷத்ரியர்களுக்கு சிவப்பு; வைஸ்யர்களுக்கு பச்சை; சூத்திரர்களுக்கு கறுப்பு. அதனாலேயே அதற்கு வர்ணம் என்று பெயர். இதனால்தான் நம்மூரில் திராவிட இயக்கத்தினர் கறுப்புக் கொடி கட்டினார்களோ!

"ஒரு அந்தணருக்கு பிறக்குற குழந்தைக்குக் கெடைக்கிற படிப்புக்கும் வசதிவாய்ப்புக்கும், ஒரு சூத்திரக் குழந்தைக்குக் கெடைக்கக்கூடியதுக்கும் வித்தியாசம் இருக்குமில்லையா? அந்தணருக்குப் பிறக்கும் குழந்தை, சூத்திரக் குழந்தையைவிட ஆற்றல்ல குறைவா இருந்தாலும், அந்தணனாத்தான் வளரும். அப்ப, சூத்திரக் குழந்தைக்கு நடக்கறது அநியாயம் இல்லையா? இந்த மாதிரி இயங்கற சமூகத்துல என்ன உசத்தி?’’ என்று தேச விரோதக் கேள்விகளைக் கேட்பவராக இருக்கிறார் சிவன்.

அதற்கு, "ஒரு மனிதனின் கர்மாவை தீர்மானிப்பது அவனுடன் பிறந்த ஆற்றல்தானேயொழிய, வேறில்லை. அதுதான் மெலூஹாவின் உயர்வுக்கு – உலக வரலாற்றின் மிகச்சிறந்த தேசம் என்ற புகழுக்கு – ஆதாரம்" என்றொரு விளக்கம் கொடுக்கப்படுகிறது. 

ஆனால் ஒருவரின் வர்ணம் பிறப்பால் நிர்ணயிக்கப்படுவதில்லை. குழந்தைகள் பிறந்தவுடனேயே தாய்-தந்தையரிடம் இருந்து பிரித்து எடுத்துச் செல்லப்படுவார்கள். அவர்கள் வளர்ந்து ஆளானதும் அவர்களின் திறமையைப் பொறுத்து அவர்கள் எந்த நிறம் என்று தீர்மானிக்கப்படும். பிராமணர்கள், வைத்தியர், வாத்தியார், வக்கீல், பூசாரின்னு புத்தி தேவப்படற எல்லா தொழில்லயும் இருப்பவர்கள். நாட்டை ஆள, சண்டைக்குப் போக க்ஷத்திரியர். வியாபாரம், வாணிபம், கைவினைப்பொருள் தயாரிக்க வைசியர்கள். விவசாயம், பணியாளர்களாக சூத்திரர்கள். இதில் எந்த நிறத்தையும் சேராதவராகச் சிவனை வைத்திருப்பது நல்ல சிந்தனை. அடிக்கடி அவரைச் 'சாதியற்றவன்', 'வர்ணமற்றவன்' என்று திட்டக் கூடச் செய்கிறார்கள்.

வேட்டி, துண்டு என்றில்லாமல் தோத்தி, அங்கவஸ்திரம் என்ற சொற்கள் பயன்படுத்தப்படுகின்றன. நமஸ்தேதான். வணக்கம் இல்லை. அது கதை வட இந்தியாவில் நடப்பதைக் காட்டுவதற்காக என்று வைத்துக்கொள்ளலாம். 

மனு பற்றிச் சிறிது தகவல்கள் வருகின்றன. அவர் பாண்டிய நாட்டைச் சேர்ந்தவர் - இளவரசர் என்றும் கூடச் சொல்லப்படுகிறது. எட்டரை ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தையவர் எனப்படுகிறது. அது கொஞ்சம் இடிக்கிறது. பாண்டியர்களுக்கும் பாண்டியா என்ற வட மாநிலத்துக் குழு (குறிப்பாகச் சொன்னால் குஜராத்தியக் குழு) ஒன்றுக்கும் தொடர்புண்டு என்று ஏற்கனவே எங்கோ படித்த நினைவு. அது போலவே, பாண்டியர்களுக்கும் பண்டிதர்களுக்குமே தொடர்பு இருப்பது போல் சொல்லப்படுகிறது. 'இட்லி' பற்றி ஓரிடத்தில் வருகிறது. 'சங்கத்தமிழ்' என்பது இடத்தின் பெயர் போலச் சொல்லப்படுகிறது. "அப்போது உலகில் செல்வத்திலும் செல்வாக்கிலும் மிகச் சிறந்து விளங்கிய நாடு அது ஒன்று மட்டுமே. மனுப்பிரபு தோன்றிய பாண்டிய வம்சம், எத்தனையோ தலைமுறைகளாய் ஆட்சி செய்து வளப்படுத்திய பூமி" என்கிற வரியைப் படித்துவிட்டு, சோழர்களைத் தொடை தட்டிப் போருக்குக் கூப்பிட வேண்டும் போலத் தினவெடுத்தன என் தோள்கள்! 

"கடல் பெருஞ்சீற்றம் கொண்டு பொங்கி வந்து, அவர்கள் நாகரீகத்தையே அழித்துச் சென்றுவிட்டது’’ என்பது கொஞ்சம் நம்பத்தக்கதாக இருக்கிறது. அதன் பின்பு பாண்டிய வம்சமே குடிபெயர்வதாகவும் மனுவும் அப்படிக் குடிபெயர்ந்து கோயில் அர்ச்சகராக மாறுவதாகவும் வருகிறது. இன்னமும் பழைய தமிழ்ச் சங்க நகரங்கள் கடலுக்கடியில் இருப்பதாகவும் சங்கத் தமிழில் அழிவால்தான் சப்த சிந்து என்ற தேசம் உருவானதாகவும் சொல்லப்படுகிறது. இது ஒரு வகையில் சிந்து சமவெளி நாகரிகம் பற்றிச் சொல்லப்படும் கதைகளின் எதிர்க் கோணம். அங்கிருந்து இங்கு வந்தார்கள் என்பதை இங்கிருந்து அங்கு சென்றார்கள் என்று சொல்கிறார். "தன் வழித்தோன்றல்கள் யாரும் நர்மதைக்குத் தெற்கே ஒரு போதும் செல்லக்கூடாது; சென்றால், திரும்பக் கூடாது என்பது மனுவின் கடுமையான கட்டளை" என்றும் சொல்லப்படுகிறது.

"அதிலும் நீல நிறம், வண்ணங்களின் அணிவகுப்பில் பச்சைக்கு முன்னதாக அமைந்திருந்ததை, இயற்கையின் பேரதிசயமாகவே கண்டனர். வானம் பச்சை நிற பூமிக்கு மேலே திகழ்ந்ததைப் போல" என்றொரு வரி வருகிறது. இது ஒரு நுட்பமான விஷயம். பச்சை என்பது பூமியின் நிறம் என்பது போல, நீலம் என்பது பிரபஞ்சத்தின் நிறம் என்று சொல்வார்கள். பூமியிலேயே கூட நிலப்பகுதிதான் பச்சை. முக்கால்வாசி நீர் இருக்கும் கடற்பகுதி நீலம் என்று சொல்வதுண்டு. அதாவது, இயற்கையின் நிறம் பச்சை அல்ல, நீலம் எனும் கருத்து. நாம் வேண்டுமானால் நீலமும் பச்சையும் சேர்ந்ததுதான் இயற்கை என்று முடித்துக்கொள்ளலாம்!

மெலூஹாவின் முன்னாள் மன்னர்களில் ஒருவராகப் பிரம்ம தேவர் சொல்லப்படுகிறார். அதாவது ஆதியில் ராமன் ஆண்ட நாட்டை, சிறிது காலம் முன்பு பிரம்மன் ஆண்ட நாட்டைக் காக்க வந்திருக்கிறார் சிவன். இதில் கொடுமை என்னவென்றால் ராமன் பிறந்த மண்ணான அயோத்தி சந்திரவம்சிகளிடம் சிக்கிக்கொண்டுள்ளது. அதையும் மீட்க வேண்டிய வேலை வேறு இருக்கிறது சூரியவம்சிகளுக்கு.

ரிஷிகள் மற்றும் பிராமணர்கள் பற்றிச் சில தகவல்கள்: "மிகச்சிறந்த இந்திய விஞ்ஞானியாகத் திகழ்ந்த பிரம்மதேவர். பிரம்மதேவர் தேர்ந்தெடுத்தவர்கள் மொத்தம் ஏழு பேர் என்பதால், அவர்கள் சப்தரிஷி என்று வழங்கப்பட்டனர். பிரம்மாவின் குலத்தோராக வழங்கப்பட்டனர். காலப்போக்கில், அதுவே மருவி, அவர்கள் பிராமணர் என்றழைக்கப்படலாயினர்.’’

'குறைபாட்டுடன் பிறப்பவர்கள் முந்தைய பிறவியில் ஏதோ பாவம் செய்தவர்கள்' என்று வேடிக்கையான நம்பிக்கையை நாடு முழுக்கவும் பரப்பி அதை நம்பவும் வைத்திருக்கிறார்கள். அவர்களுக்குப் பெயர் 'விகர்மா'க்கள். முக்கியமாக இதை ராமனே அமல் படுத்தியிருக்கிறார். இதை வந்து பார்த்துவிட்டுச் சிவனுக்கே பொறுக்க முடிவதில்லை. இதைக் காலி செய்யாமல் விட மாட்டேன் என்று கொதிக்கிறார். அதற்கு இன்னொரு காரணமாக இருப்பது, அவர் மனதுக்குப் பிடித்தவளான சதியும் அப்படியான ஒருத்தியாக ஒதுக்கி வைக்கப்பட்டிருப்பது. சதியே அதைக் கேள்வி கேட்க விரும்பாதவளாக இருக்கும் போது இவர் புகுந்து குட்டையைக் குழப்புகிறார். சதி யார் தெரியுமா? சரிதான். அவர்தான் பார்வதி. ஆனால் ஏற்கனவே திருமணமானவள். அதில் ஏதோ கோளாறாகி வாழ்விழந்து நிற்பவள். அதற்கெல்லாம் மேல் அவள் மன்னனின் மகள். 

"ஒரு பெண்ணுக்குக் குழந்தை இறந்தே பிறக்கிறது என்று வைத்துக்கொள்வோம். பூர்வ ஜென்மத்தில் ஏதோ கொடிய பாவம் செய்ததினாலல்லவா இந்த ஜென்மத்தில் அவளுக்கு இந்த தண்டனை?" என்கிறார்கள். "எல்லாமே பேத்தலா இருக்கு. கர்ப்பமாயிருக்கும்போது சரியாத் தன்னைக் கவனிச்சுக்காததினாலகூட ஒரு பொண்ணுக்குக் குழந்தை செத்துப் பிறக்கலாம். இல்லை, ஏதாவது வியாதியா இருக்கலாம். போன ஜென்மப் பாவத்தோட பலன்னு எப்படிச் சொல்ல முடியும்?’’ என்று கொதித்துக் கேள்வி கேட்கிறார். இதற்குப் பிற்பகுதியில் ஒரு நியாயம் சொல்லப்படுகிறது. இப்படி ஏதாவது சொல்லி அவர்களை ஓர் ஓரத்தில் வைக்காவிட்டால், அவர்களுக்குச் சமூகத்தின் மீது ஏக்கமும் பொறாமையும் வெறுப்பும் ஏற்பட்டு அதுவே அவர்களைச் சமூக விரோதச் செயல்களில் ஈடுபடுத்திவிடும் என்று.

"இராமபிரானுக்கு இது புரிந்தே இருந்தது. இதனாலேயே விகர்மா தத்துவம் வழக்கில் வந்தது. இந்த ஜென்மத்தில் அவனுக்கு நிகழும் அநியாயங்களுக்குக் காரணம், முற்பிறவியில் செய்த வினையின் பயன் என்று அவனை நம்ப வைத்துவிட்டால், வேறு வழியின்றி, மனதைச் சமாதானம் செய்துகொண்டு வாழப் பழகிவிடுவான்; தன் கோபத்தை சமூகத்தின் மீது காட்டாமலும் இருப்பான்.’’

நம்மைக் காக்கும் ஆக்சிஜனே மிகும் போது ஆக்சிடெண்ட் (oxident) ஆகி நம்மைக் கொல்ல வல்லது. அதைக் கட்டுப்படுத்தும் சக்திகள் கொண்டதே சோமரசம் என்று நவீன அறிவியலோடு ஒரு விளக்கம்.

"நீலகண்டர், சூர்யவம்சிகளைக் காப்பாற்றுவார் என்று எங்கள் புராணங்கள் சொல்லவில்லை. உண்மையில், அவை இரு விஷயங்களை அறுதியிடுகின்றன: ஒன்று, நீலகண்டர் சப்த–சிந்துவைச் சேர்ந்தவராக இருக்கமாட்டார். இரண்டாவது, தீய சக்திகளை ஒழிப்பார். சந்திரவம்சிகள்தான் தீயவர்கள் என்று மெலூஹர்கள் நினைப்பதால், அவர்களை அதம் செய்யப்போகிறார் என்பது பலரின் நம்பிக்கை. இது நடந்துவிட்டால், சூர்யவம்சிகள் காப்பாற்றப்படுவார்கள் என்று அர்த்தமில்லை! சந்திரவம்சிகளை வீழ்த்துவதைத் தவிர்த்து, தீர்க்க வேண்டிய பிரச்சனைகள் இன்னும் எத்தனையோ.’’ - இதைப் படிக்கும் போது நமக்குக் கதை என்னவிதமான திருப்பங்களைச் சந்திக்கப் போகிறது என்கிற சந்தேகம் நமக்கு வருகிறது.

‘அசுரர்களுக்கெதிரான தர்ம யுத்தம்’ என்று வருகிறது. நாகர்கள் அசுரர்கள். சந்திரவம்சிகள் அசுரர்களா என்று தெரியவில்லை. வெற்றியடையும் பொருட்டு தேவர்களே சில சமயம் அதர்மத்தைக் கையாண்டார்கள் என்று வருகிறது. 

"அந்தண, க்ஷத்ரிய மற்றும் வைஸ்யர்களில் தொண்ணூறு சதவிகிதம் பேர் மாற்றம் வேண்டி வாக்களிக்கும் பட்சத்தில், எந்த சட்டத்தையும் மெலூஹாவில் திருத்தியமைக்கலாம்" எனப்படுகிறது. சூத்திரர்களுக்கு மட்டும் அதில் இடமில்லை.

"காயம்பட்ட சந்திரவம்சிகள் கையோடு வைத்திருந்த விஷத்தை விழுங்கிவிட்டனர், பிரபு" என்கிற வரியைப் படிக்கிற போது நமக்கு விடுதலைப் புலிகளின் தற்கொலைப் படையும் அவர்களின் குப்பியும் நினைவுக்கு வருகிறது.

கடைசியில் போர் வந்தே விடுகிறது. சந்திரவம்சிகளைப் போரில் வீழ்த்தி அவர்களுடைய மன்னம் திலீபனையும் அவன் மகளையும் சிறைபிடிக்கிறார்கள். அயோத்தி செல்கிறார்கள். அங்கு போய்ப் பார்த்தால் எல்லாமே வேறு மாதிரியாக இருக்கிறது. எங்கும் ஒழுங்கின்மை. "இங்கு எல்லாமே அதிகம். அதீத அன்பு, அல்லது அதீத வெறுப்பு, எல்லாம் ஒன்றின் தலைக்கு மேல் ஒன்றாய், மிகுந்த ஆர்ப்பாட்டத்துடன், தேவைக்கு மீறிய உஷ்ணத்துடன் வெளிப்படுத்தப்பட்டன. பேரம் பேசுவதில் இருந்த அபார ருசிக்காகவே வாயடி-கையடியில் இறங்குவார்கள் போலும்" என்று அவர்களைப் பற்றி அறிமுகப்படுத்தப்படுகிறது.

"இந்த தர்மயுத்தத்துல, ஒதுங்கி நின்னு வேடிக்கை பாக்கறவங்களுக்கு எடமில்ல" எனப்படுகிறது. "ஒருத்தன் நல்ல விஷயத்துக்காகப் பாடுபடும்போது, மகாதேவர் ஆகறான். நாமெல்லோரும் மகாதேவர்களே!" எனப்படுகிறது.

முடிவை நெருங்கியதும் சட்டென்று திரும்பி, "ஆனால், எப்போதும் அடித்துக்கொள்வார்கள் என்று எண்ணாதே. நீண்ட காலம், சச்சரவு ஏதுமின்றி, ஓரளவு ஒற்றுமையாய் அவர்கள் வாழ்வதும் உண்டு. கெட்ட காலம் வரும்போது, சண்டையும் போரும் யுத்தமும் கொந்தளிக்கும் சமயங்களில் மற்றவர்தான் காரணம் என்று குற்றம் சொல்வது வழக்கம். முற்றிலும் வேறுபடும் இரு வேறு வாழ்க்கை முறைகளை, நல்லவற்றுக்கும், தீயவற்றுக்குமான போராட்டமாக உருவகப்படுத்துவது மிகச் சுலபம். இதற்குமுன், பல மகாதேவர்கள் இம்மாதிரித் தவறான பாதையில் சென்றிருக்கின்றனர்; தீய சக்திகளை அழிப்பது உன் வேலை என்று யார் சொன்னது? தீய சக்திகளுக்குரிய பலமும், அவற்றால் விளையக்கூடிய அனர்த்தங்களும் பெரும்பாலும் மிகைப்படுத்தப்பட்டவை, நண்பா. இந்தப் பிரபஞ்சத்தின் மிக முக்கியக் கேள்விக்கு, மிக அத்தியாவசியமான கேள்விக்கு, பதில் அளிப்பதே உன் கடன்" என்று முடிகிறது.

அந்தக் கேள்வி என்ன?

"தீமை என்றால் என்ன?"

அதாவது, சந்திரவம்சிகள் கண்டிப்பாகத் தீயவர்கள் அல்லர். நாகர்கள் தீயவர்கள் என்று எண்ண வைத்து அவர்களும் அப்படி இல்லை என்று அடுத்தடுத்த நூல்கள் முடியலாம். எல்லோருக்குள்ளும் தீமை இருக்கிறது, நன்மையும் இருக்கிறது. தீமையை அடக்கி நன்மையை எப்படி வெளிக்கொணர்வது என்று முடியலாம் என்று தோன்றுகிறது. முழுதும் படித்தால்தான் சொல்ல முடியும்.

கருத்துகள்

  1. சிறப்பான ஒரு நாவல் என நண்பர்கள் சொல்லி இருக்கிறார்கள். இன்னும் வாசிக்க வில்லை. உங்களது பதிவு ஒரு முன்னோட்டமாக அமைந்துள்ளது.

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம் - ஜெயகாந்தன்

"நான் என்னை ஒரு மேதையும் புனித வேசியும் போல் உணர்கிறேன்": அலெஹாண்ட்ரோ ஜோடராவ்ஸ்கிக்குச் சில கேள்விகள்

சாம, தான, பேத, தண்டம்