2011 தமிழக சட்டப் பேரவைத் தேர்தல் – என் ஆசைகள்

ஒரு நாகரீகமான அரசியல் (என்னது? நாகரீகமான அரசியலா? இதென்னய்யா புதுக் கதையா இருக்கு என்ற உங்கள் குழப்பம் புரிகிறது!) குடும்பத்தில் பிறந்து விட்டதால் அதன் மீதான ஆர்வம் அடங்காமல் உடன் வந்து கொண்டே இருக்கிறது. பெரிதளவில் அரசியல் ஞானம் ஒன்றும் இல்லா விட்டாலும் நாளிதழ் பார்க்கும் போதெல்லாம் நேரடியாகச் சினிமாச் செய்திகளையோ விளையாட்டுச் செய்திகளையோ தேடி ஓடாமல் முதல் பக்கத்தில் இருந்து முழுமையாய் நுனிப்புல் மேய்கிற ஆர்வமும் அவ்வப்போது பணிக்கிடையில் இணையத்தில் நுழைந்து அரசியல் நடப்புகளை பறவைப் பார்வை பார்த்து விட்டு வருகிற உந்துதலும் உயிரோடு இருக்கின்றன.

தமிழ் மண்ணில் தேனாறும் பாலாறும் ஓட வேண்டும் என்ற பேராசை எனக்கும் உண்டு. குறைந்த பட்சம் அவ்வாறுகளில் நீராவது ஓட வேண்டும் என்ற சிற்றாசையாவது உண்டு. திராவிடக் கட்சிகள் எல்லாம் பாடை ஏற்றப் பட வேண்டும்; திருடர்கள் எல்லாம் அவர்கள்தம் மாமியார் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட வேண்டும்; மனு நீதிச் சோழன் வந்து ஆட்சி புரிய வேண்டும்; நீதி தலை தூக்க வேண்டும்; அநீதி வால் நறுக்கப் பட வேண்டும்; குடும்ப அரசியல் நடத்தும் கொடியோர் எல்லாம் கூட்டாஞ்சோறு சாப்பிட அனுப்பி வைக்கப் பட வேண்டும்; தன் திருட்டு வேலைகளுக்குக் கூடாரமாக அல்லாமல் உண்மையிலேயே மக்களுக்கு உழைப்பதற்காக வருகிறவர்கள் மட்டும் ஊக்குவிக்கப் பட வேண்டும்; ஒரு தமிழன் இலங்கையில் கொல்லப் பட்டால் ஒவ்வொரு தமிழனும் அதற்காக வருந்தவாவது வேண்டும்; டெல்லியில் இருக்கிற எல்லோருக்கும் தமிழ் நாடும் ஓர் இந்திய மாநிலம் என்கிற இணைவு மனப்பான்மை வர வேண்டும்; தீண்டாமை என்கிற சொல்லுக்கே பொருள் தெரியாத அடுத்த தலைமுறை வர வேண்டும்; இட ஒதுக்கீடு எங்களுக்கு வேண்டாம் என்று சொல்கிற அளவுக்கு எல்லா இனங்களும் சமச்சீர் வளர்ச்சி பெற வேண்டும்; மதம் பிடியாத யானைகளும் மனிதர்களும் உலா வரும் வீதிகள் வேண்டும்; அரசில் இடது - வலது எவர் வரினும், அரசுப் பணிகளில் கடமை உணர்ந்த கண்ணியவான்கள் நிறையக் காணக் கிடைக்க வேண்டும்; அறிவும் ஆற்றலும் இருக்கிற யார் வேண்டுமானாலும் காசும் ஜாதியும் உதவாமலேயே வெல்ல முடிகிற அளவுக்கு எம் மண்ணாங்கட்டி மக்களுக்கு புத்தி வர வேண்டும்... இப்படி எத்தனையோ ஆசைகள். இந்த ஆசைகளோடு நாளிதழ் புரட்டினால் படம் கூடப் பார்க்க முடியாது. கொஞ்சமாவது நடக்கிற சமாச்சாரமாக யோசிக்க வேண்டும்தானே!

எனவே, சில நடக்க வாய்ப்பிருக்கிற சமாச்சாரங்களைப் பற்றிப் பேசுவோம். ‘யார் வேண்டுமானாலும் வரட்டும். இலங்கையில் திட்டமிட்டு இனப் பெரும்படுகொலை செய்த காங்கிரஸ் ஒரு சீட்டில் கூட வரக்கூடாது’ என்பதே என் அறிவார்ந்த நண்பர்களின் ஆசை. என் கருத்து சற்று மாறுபட்டிருக்கிறது. தம் கட்சியின் தலைவரைக் கொன்ற இயக்கத்தை அழிக்க வேண்டும் என்று இறங்கிய இயக்கத்தைக் கூட (தலைவர் செய்தது சரியா தவறா என்பதையும் வாதிப்போம் ஒரு நாள்) மன்னிக்கலாம். “தமிழ் இனத்தின் ஒவ்வொரு முடியும் பிடுங்கும் தகுதி எனக்கு மட்டுமே உண்டு” என்று, தம் மர மண்டையைக் கொடுத்து வாயைப் பிளந்து கிடக்கும் வண்ணத் தொலைகாட்சி கலா ரசிகப் பெருமக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கும் தமிழினத் தலைவரை எப்படி அவ்வளவு எளிதாக மன்னிக்கிறீர்கள்? ஒரே ஒரு கடிதம் எழுதுவாராம். உலகம் சுபிட்சமாகி விடுமாம். இதெல்லாம் கொள்ளை அடித்த காசில் குளுகுளு அறை போட்டு எழுதுகிற கதைகளில் வைத்துக் கொள்ள வேண்டும். ஒட்டு மொத்தத் தமிழினத்தையே காலில் விழ வைத்து, அவர்கள் சொத்தை எல்லாம் காலணிகளும் காதணிகளும் செய்து அழகு பார்த்த சீமாட்டி, பக்கத்து நாட்டில் அவர்தம் உறவினரின் உயிர் போகும்போது மட்டும் “இதெல்லாம் அரசியலில் சகஜம்” என்றதை எப்படி அவ்வளவு எளிதாக மன்னிக்கிறீர்கள்? “ஐந்தாண்டு ஆளுவேன். அப்புறம் ஐந்தாண்டு எங்காவது போய் ஆடுவேன். எவன் எக்கேடு கேட்டால் என்ன? எனக்குத் தேவை சுகபோகமான சாப்பாடும் தூக்கமும்!” என்ற பொறுப்பின்மையை எப்படி மன்னிக்கிறீர்கள்? ஆகவே, இதன் மூலம் நான் சொல்ல வருவது என்னவென்றால், இலங்கைப் பிரச்சனையைப் பொருத்த மட்டில் எல்லோருமே துரோகிகளே. எதிரி அல்லது துரோகி. நல்லவர்கள் வைகோவும் திருமாவும் உண்மை உணர்வோடு இருக்கிறார்கள். ஆனால் அவர்களுடைய கூட்டணி நிலைப்பாடுகள் ஒரு போதும் அவர்களை துரோகிகளாக்கக் கூடாது. ஏனெனில் அது அவர்களது வாழ்வாதாரப் பிரச்சனை. இன்றைய நிலையில் பெரும்பான்மைத் தமிழர்களுக்கு ஈழப் பிரச்சனை ஒரு முக்கியப் பிரச்சனையாக இல்லாததால் இங்குள்ள பெரிய கட்சிகளுக்கும் அது ஒரு பெரும் பிரச்சனையாக இல்லை. இதன் பொருள் கண்டிப்பாக எனக்கும் அதில் அக்கறை இல்லை என்பதில்லை. ஆனால் இருக்கிற பேய்களில் எந்தப் பேய் அல்லது எந்தப் பேய்க் கூட்டணி பரவாயில்லை என்கிற குறுகிய வட்டத்துக்குள் நின்று செய்யும் ஒரு சின்ன அலசல்தான் இது.

திமுக இந்த முறை கண்டிப்பாகத் தோற்கடிக்கப் பட வேண்டும். எதனால்? தவறு செய்பவர்கள் தண்டிக்கப் பட வேண்டும். என்ன ஆட்டம்? ஆட்டமான ஆட்டம்! மொத்த மாநிலமே தன் சொத்து போல நினைத்துக் கொண்டு, அதைக் கூறு போட்டு இந்த மகனுக்குக் கொஞ்சம், அந்த மகனுக்குக் கொஞ்சம், மகளுக்குக் கொஞ்சம், புதுசா வந்த மூன்றாவது மருமகனுக்குக் கொஞ்சம், சொந்தக் காரன் எல்லோருக்கும் கொஞ்சம் கொஞ்சம் என்று இருக்கிற இளிச்ச வாயனுக்கெல்லாம் வித விதமாக அல்வா கொடுத்ததுக்குக் தண்டிக்கப் பட வேண்டுமா கூடாதா? உடன் இருக்கிற ஊதாரிகளெல்லாம் ஒன்றும் கேட்க முடியாத அளவுக்கு அவனவனுக்கு ஏற்ற மாதிரி அளவில் எலும்புத் துண்டுகளைப் போட்டு விட்டால் அதுகள் பாட்டுக்கு வாய் நீரை வடித்துக் கொண்டு பின்னால் வரும் என்ற தெனாவட்டு தண்டிக்கப் பட வேண்டுமா கூடாதா? தன் குடும்பத்துக்குக் கலர் கலராகப் பதவி வாங்க மட்டும் இறக்கை கட்டிக் கொண்டு போகத் தெரிகிற நரிக்கு தன் இனம் அழிகிற கொடுமையை மட்டும் பார்த்துக் கொண்டு எப்படிச் சும்மா இருக்க முடியும் என்கிற ரகசியம் தெரிய வேண்டுமென்றால் தண்டனை கொடுத்துதான் தீர வேண்டும்.

சிறிய ஊழல்கள் பரவாயில்லை. சிறிய கொண்டாட்டங்கள் பரவாயில்லை. ஒரு வாரிசைக் கொண்டு வந்து விட்டுப் போவது கூடப் பரவாயில்லை. ஆங்காங்கே தந்திரங்கள் செய்வது பரவாயில்லை. எதிர்க் கருத்தை ஏற்க மறுக்கும் மனிதக் குறைபாடு பரவாயில்லை. எப்போதாவது சங்கடமான கேள்விகளைச் சமாளிப்பதற்காக சாதுர்யமாக எதாவது சொல்லித் தப்பித்தல் பரவாயில்லை. ஆட்சிப் பணத்தில் கட்சியை வளர்த்தல் பரவாயில்லை. திரைக்குப் பின்னால் திட்டங்கள் தீட்டுதல் பரவாயில்லை. இவை எல்லாமே கேள்விப் பட்ட வரையில் உலக அரசியலில் எல்லா மூலையிலும் இருக்குக் கூடிய, தவிர்க்க முடியாத, இயல்பான குறைபாடுகள்தான்.

உலக மகா ஊழல்கள், கஞ்சிக்கு வழியில்லாதவர்களிடம் பிடுங்கிய காசில் மாதமொருமுறை மாநாடுகள், கட்சியை-அரசியலை-ஆட்சியை-தொழில்களைக் குடும்பமயமாக்கல், அளவுக்கு மீறிய நய வஞ்சகத்தனம், எதிர்க் கருத்து சொல்வோருக்கெதிராக வன்முறை வீச்சு, அக்கறையோடு ஏதாவது கேட்டால் சிறு பிள்ளைத்தனமாகப் பதிலளித்தல், காசு கொடுத்து மக்களையும் எதிரிகளையும் கூட்டணிக் கட்சியினரையும் விலைக்கு வாங்குதல், திரையே கிழியும் அளவுக்கு திரை மறைவு வேலைகள் செய்தல், இவை எல்லாம் தமிழ் கூறும் நல்லுலக அரசியலுக்குத் தவறான முன் உதாரணங்கள். இப்போது பாடம் புகட்டத் தவறினால், வகுப்பறை கூட மிஞ்சாது போய் விடும். தயாரா?

ஆதரவாளர்களின் கேள்வி – “வரப் போகிற ஆள் என்ன யோக்கியமா? எல்லாம் திருடர்கள்தானே?”. ஐயமே இல்லை. ஆனால், ஒவ்வொருவரும் உடனடியாக அவரவர் தப்புக்குத் தண்டிக்கப் படுவதே அடுத்த முறை அதை அவர்கள் திரும்பச் செய்யாமலிருக்க வழி. புதிய தவறுகள் செய்யட்டும். பரவாயில்லை. ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை மாற்றிப் மாற்றிப் போடுவதே மக்களாட்சித் தத்துவத்தின் அடுத்த கட்டத்தை நாம் அடைந்து விட்டதற்கான ஓர் அறிகுறி என்கிறார் பண்பாளர் நந்தன் நிலேகனி. யோசித்துப் பார்த்தால் சரி என்றுதான் படுகிறது. ஒரே திருடனுக்கு உரிமம் போட்டுக் கொடுத்து விட்டால் அது ஒன்றும் இல்லாமல் நாசமாப் போவதற்கான வழி. இரண்டு பெரும் திராவிடக் கட்சிகளும் பாடை ஏற வேண்டும் என்பது நம் பேராசை. ஐந்தாண்டுகள் கழித்து அடுத்த தேர்தல் வரும்போது திரும்பவும் திமுகவே வர வேண்டும் என்று விரும்பக் கூடிய சூழ்நிலை வருமாயினும் பரவாயில்லை. ஆனால், இந்தத் தேர்தலில் அவர்கள் மண்ணைக் கவ்வ வேண்டும். மண்ணெல்லாம் அவர்கள் குருதி படிய வேண்டும். அது அரசியல் நுழைவோர் அனைவருக்கும் நல்ல பாடமாக இருக்க வேண்டும். அதுவே திமுகவுக்கும் நல்ல மாற்றங்கள் செய்ய வழி வகுக்கும். அரசியல் ஆரோக்கியம் பெற ஏற்பாடு செய்யும்.

அப்படியானால், அதிமுக வரட்டுமா? வரட்டும். ஆனால் ஏதாவது கடிவாளம் போட்டு அழைத்து வர முடியுமா? ஆம். அதற்கொரு கடிவாளம் இருக்கிறது. என்ன கடிவாளம்? கூட்டணி. திமுகவும் அதிமுகவும் ஆண்டதை விட ஓரளவு பரவாயில்லாத ஆட்சி அவர்களுள் ஒருவரோடு காங்கிரசோ தேமுதிகவோ இணைந்து கூட்டணி ஆட்சி அமைத்து குடைந்து கொண்டே இருந்தால் அமையும். சரத் குமார், டி ராஜேந்தர் போன்றோர் தவிர எல்லோரும் அதிமுக அணியில் ஒன்று சேர்ந்து திமுகவை வீழ்த்திக் கோட்டையைப் பிடித்தால் அது ஆட்சி செய்யப் போகிற யாவருக்கும் நல்ல பாடமாக இருக்கும். இனிமேல், 'அதிகமாக ஆட்டம் போட்டால் எல்லாரும் ஒன்னு கூடிருவாய்ங்கய்யா' என்ற பயமாவது இருக்கும். அப்படி ஒன்று 96-ல் நடந்தும் ஏன் சில மாங்காய் மண்டைகளுக்கு ஏற வில்லை என்பதுதான் புரியவில்லை. சரி, திரும்ப ஒரு முறை நினைவு படுத்துவோம்.

91-96 ஆட்சிதான் இதுவரை தமிழ் மண் கண்ட மகாக் கொடூரமான ஆட்சி. அதற்கு அடுத்தது இப்போது நடப்பதாக இருக்கும் என்று தோன்றுகிறது. சில நண்பர்கள் அதை விடவும் இது பெரும் மோசம் என்று அடித்துச் சொல்கிறார்கள். இருக்கலாம். அதற்கொரு காரணம் வாத்தியார் (எம்.ஜி.ஆர்) இருந்த வரை தொலைவில் இருந்து எச்சில் வடித்துக் கொண்டிருந்தவர்கள் வாய்ப்புக் கிடைத்த உடன் காஞ்ச மாடு கம்பில் விழுந்தது போலப் பாய்ந்து கவ்வி விட்டார்கள் பதவிகளை. அதில் இருந்து சுக்கிர தசை நடக்கிறது தலைவருக்கு. அவ்வப்போது இடைவெளி ஏற்பட்டாலும் பிழைப்பு நன்றாகத்தான் ஓடிக் கொண்டிருக்கிறது. சரியான பாடம் எதுவும் கிடைக்க வில்லை. இப்படியே கதை முடிந்து விட்டால், நம்ம ஊரில் அரசியலில் நுழைகிற எல்லோரும் நரி மாதிரி நடந்து கொள்வதுதான் அரசியல் சாணக்கியத்தனம் என்று தவறாகப் புரிந்து கொண்டு பக்கத்துக்கு ஊர்க்காரர்களுக்கும் பாடம் நடத்த ஆரம்பித்து விடுவார்கள். ஏற்கனவே, இந்தக் காசு கொடுக்கிற பழக்கம் இப்படித்தான் பரவிக் கொண்டிருக்கிறது.

வரலாறு திருப்பி அடிக்குமாம். அது அம்மாவை ரூம் போட்டு அடிக்கட்டும் இந்த முறை. வாஜ்பாயைப் படுத்திய பாட்டுக்கு பதிலுக்கு விஜயகாந்திடமோ காங்கிரசிடமோ வாங்கிக் கட்டிக் கொள்ளட்டும். அந்த அளவுக்குக் காங்கிரசிடம் தெம்பு இருக்கிறதா தெரியவில்லை. விஜயகாந்த் ஓரளவு ஒடுக்கக் கூடும். ஒரே உறையில் இரு கத்திகள் பிரச்சனை ஆகிவிடக் கூடாது. எப்படி இருப்பினும் அம்மா அதிகம் ஆட மாட்டார். காரணம்: 91-96ல் ஆடிய ஆட்டம் 01-06ல் ஆட வில்லை. மிக மிக நாகரீகமான ஆட்சி. ஒரு பெரிய பிரச்சனை – உடன் இருக்கிற ரத்தங்களுக்கு உயிரே கிடையாது. ஒற்றை மனிதப் படையாகக் (ONE MAN ARMY-க்குத் தமிழ்!) காட்சி அளிக்கும். அது பரவாயில்லை. ஊரே ஒன்னு கூடிக் கொள்ளை அடிப்பதற்கு ஒரு தனியாள் மேற்பார்வையில் கொஞ்சம் குறைவாகக் கொள்ளை அடிப்பது பரவாயில்லைதானே.

இதை விடச் சிறப்பாக ஏதாவது இருக்கிறதா? ம்ம்ம். இருக்கிறது. இரண்டு பெரும் கொள்ளையர்களையும் ஊரை விட்டு ஒதுக்கி வைத்து விட்டு, மற்ற பொடுசுகளெல்லாம் ஒன்னு கூடி ஒரு கூட்டணி அமைப்பது. இதைத்தான் நம்ம ஊரில் நீண்ட காலமாக எதிர் பார்த்துக் காத்துக் கிடக்கிறார்கள். யாருக்கும் அந்தத் தைரியம் வந்த பாடில்லை. வந்தாலும் அது நீடிக்க முடிவதில்லை. காசைக் காட்டி மிரட்டி விடுகிறார்கள். தேமுதிக கட்சி ஆரம்பித்ததே அந்த ஆசையில்தான். காசு காலி ஆகி விட்டது அங்கும். வேறு வழியில்லை. காங்கிரஸ் செலவை ஏற்றுக் கொண்டால் கேப்டன் தயாராகத்தான் இருப்பார். காங்கிரசுக்கு இழப்பதற்கு ஒன்றுமில்லை. மூன்றாவது அணி ஆட்சியைப் பிடிக்கா விட்டாலும் கண்டிப்பாகத் தீர்மானிக்கிற அணியாக இருக்கும். தேர்தலுக்குப் பிறகு ஆசைகளை நிறைவேற்றிக் கொள்ளலாம். குறைந்த பட்சம் காமராஜர் ஆட்சியை 2016-இலாவது அமைக்க அடிக்கல் நாட்டலாம். குதிரை ஏறிக்கொண்டு திரிந்தால் அப்பவும் இப்படியே காமெடி பீஸ் போலப் பேசிக் கொண்டு திரிய வேண்டியதுதான். இந்தக் கூட்டணியால் ஒரு சலசலப்பையாவது உண்டு பண்ண முடியும். காங்கிரசுக்கு ஏன்தான் பாவம் சூடு சொரணையே வர மாட்டேன் என்கிறதோ? பீகாரில் செய்ததையாவது செய்ய முயலுங்கள் சாமிகளா. ப்ளீஸ். ராகுல் அண்ணாவுக்கு அப்படி ஒரு திட்டம் இருப்பதாகக் கேள்வி. நடந்தால் நல்லது. உங்களுக்கென்று இங்கே ஒரு வாக்கு வங்கி மண்ணாங்கட்டியும் கிடையாது. ஆனால், இந்த முறை நல்ல வாய்ப்பு இருக்கிறது. அடித்துப் பேசுங்கள். ஆட்சியில் பங்கு கேளுங்கள். எங்களுக்கும் மசால் இருக்கிறது என்று காட்டுங்கள். அடுத்த முறை காமராஜர் ஆவி வாசனுக்கோ சிதம்பரம் தாத்தாவுக்கோ (2016ல். இப்போதைக்கு அவர் ஐயாதான்) வந்து இறங்கலாம். ஐயோ, அதை நினைக்கவே பயமாக இருக்கிறது. தலைவர் தங்கபாலு வேறு கோபப்படுவார். இன்னும் ஒரு நூறு பேர் குறைந்த பட்சம் கோபப் படுவார்கள். என் பெயரை ஏன் விட்டாய் என்று. உங்களை எல்லாம் எப்படிக் கட்டி மேய்த்து அந்தச் சின்னப் பையன் (ராகுல் அண்ணா) கரை சேர்க்கப் போகிறாரோ!

இப்போதைய நிலவரப்படி நம் ஆசைப்படி எதுவுமே நடக்கா விட்டாலும் கூட ஒன்றும் குறைந்து போய்விடாது. திமுக-காங்கிரஸ் ஒரு கூட்டணி. காங்கிரஸ் எப்படியும் 60-70 சீட்டுகள் வாங்காமல் விட மாட்டார்கள். அதிமுக-தேமுதிக-உதிரிகள் ஒரு கூட்டணி. இங்கேயும் அப்படித்தான். ஆகவே, எப்படி ஆனாலும் கூட்டணி ஆட்சிக்கான வாய்ப்பு இந்த முறை அதிகம். அது கண்டிப்பாக இதுவரை நடந்த கொள்ளைகளை விடக் குறைவான கொள்ளையாகவே இருக்கும்.

திமுக கூட்டணியில் தயாநிதி மாறன் நட்சத்திரப் பேச்சாளர் பெயர் வாங்குவார். நன்றி: சூரியத் தொலைக்காட்சி. மற்றபடி நன்றாகப் பேசுகிற யாரையும் பேச விடுவதாகத் திட்டம் இல்லை. அவன் வேறு பெரிய ஆள் ஆகி விட்டால் குடும்பக் கட்டுக்கோப்பு குழைந்து விடுமப்பா. சிதம்பரம் ஒரு வாரம் டெல்லி வேலையைப் போட்டு விட்டு வந்து தூய தமிழில் தெளிவாகப் பேசி விட்டுப் போவார். என் கருத்துப்படி இன்றைய நிலையில் தமிழகத்தின் தலை சிறந்த பேச்சாளர் அவர்தான். கருத்துக்களைத் தேடி விதைக்கிற பக்குவம் அவரிடம் மட்டுமே இருக்கிறது. சும்மா கூப்பாடு போடுவதுதான் அரசியலுக்கு ஏற்ற தொனி என்ற கருத்துக் கொண்டவர்கள் தயை கூர்ந்து மன்னித்து விடுங்கள்.

இந்தப் பக்கமும் அனல் பறக்கும். ஜெயலலிதா, வைகோ, விஜயகாந்த்... ஆஹா... நினைத்துப் பார்க்கவே இனிக்கிறது. வைகோ பாவம் மீண்டும் ஒருமுறை ஏமாற்றப் பட்டு, கிடைத்த ஏழெட்டுச் சீட்டுகளோடு (அதுவும் வெல்ல முடியாதவை) மனதைத் தேற்றிக் கொண்டு நல்ல நம்பிக்கைக்குரிய தோழனாக ஊர் ஊராகப் போய் உழைப்பார். ஒரு நல்ல மனிதருடைய அரசியல் இப்படிக் கிடந்து பாடாய்ப் படுகிறதே என்ற வேதனையைச் சொல்லித் தேற்றிக் கொள்ளக் கூட ஆள் இல்லை இந்த நாட்டில். “இந்த ஆள் அரசியலுக்கு லாயக்கு இல்லைய்யா. சும்மா இங்கிட்டும் அங்கிட்டும் மாறிக்கிட்டே இருக்காரு” என்று திட்டுவார்கள் அவரை, அவர் திட்டமிட்டு விரட்டி அடிக்கப்பட்ட கதைகள் தெரியாதவர்கள். அவருக்கு இருபது ஆண்டுகளாக என்ன தசை நடக்கிறது என்றுதான் புரியவில்லை. தொட்டதெல்லாம் சாம்பல் ஆகுது. விஜயகாந்த் பிரச்சாரம் சூடு பறக்கும். சிதம்பரம் பேச்சு பிடிக்காதவர்கள் இங்கு வரலாம். நல்லாப் புரியிற மாதிரித் திட்டுவார்.வைகோவும் விஜயகாந்தும் ஒரே மேடையில் தோன்றினால் ஜாதிச் சாயம் வேறு பூசுவார்கள். தெலுங்கு பேசுகிறவர்கள் கஷ்டப்பட்டுச் சம்பாதித்து சொந்தக்காசு போட்டுக் கட்டிய வீடு கூட அவர்களுக்குச் சொந்தம் இல்லை என்று கூறுவார்கள் சில இன மான உணர்வாளர்கள். வைகோவை விட தமிழ் இன உணர்வு கொண்ட ஏமாளி இந்த மண்ணில் எங்கும் இல்லை என்பது என் தாழ்மையான கருத்து. எல்லோருக்கும் அவருடைய பேச்சு பிடிக்கிறது. ஆளைப் பிடிக்கவில்லை. எனக்கு அவர் பேச்சு பிடிக்கவே இல்லை. அந்தக் கூப்பாடும் செயற்கையான உடல் அசைவுகளும். அப்பப்பா... தாங்க முடியாது. ஆனால் ஆளை நிறையப் பிடிக்கிறது. இப்பவும் அவர் ஒரு தொலை நோக்குச் சிந்தனை கொண்ட பெரும் மேதாவியாகவெல்லாம் பட வில்லை. ஆனால் பாவப்படுகிற அளவுக்குத் துவண்டு விட்ட ஒரு நல்ல - நாகரிகமானவராக இருக்கிறார் (மூனா கானா காலத்துக்குப் பின்பு இதைப் பல உடன் பிறப்புகள் ஒத்துக் கொள்வார்கள்; ஆனால் இப்போதைக்கு ஒத்துக் கொள்ள மாட்டார்கள்!) இந்த முறை அவர் ஒரு பத்து - இருபது சீட்டுகளாவது வென்று குவித்தால் நன்றாக இருக்கும். இது ஒரு பெரும் ஆசை.

விஜயகாந்தும் நிறைய வெல்லட்டும். சினிமாக்காரர்கள் நடிப்பு பழகும் முன்பே நாட்டை ஆள விரும்புவது கடுப்பேற்றுகிறது. ஆனால், இரண்டு கழகங்களுக்கு எதிராகக் கலகம் செய்கிற தைரியம் தேசியக் கட்சிக்கே இல்லாத போது, கைக்காசைப் போட்டு, களத்தில் இறங்கிய அந்தத் துணிச்சல் பாராட்டப் பட வேண்டி இருக்கிறது. பேராசைக்குச் செய்த முதலீடு என்று வேண்டுமானாலும் சொல்லுங்கள். அது கூடச் செய்கிற துணிச்சல் வேறு எவருக்கும் இருக்க வில்லையே. இவருக்குப் பெரிய அரசியல் ஞானம் இருப்பது போல் தெரியவில்லை. ஆனால், முடிந்த அளவு நல்லது செய்ய வேண்டும் என்கிற ஆசை இருப்பது தெரிகிறது. ஆகவே அவரும் நிறைய வெல்லட்டும். சென்ற முறை அவர் நிறுத்திய ஆட்கள் எல்லாம் பெரும்பாலும் படித்தவர்களாகவும் பல நற்பணிகள் செய்தவர்களாகவும் இருந்தனர். நாமெல்லாம் அரசியலில் போய் என்ன செய்ய முடியும் என நினைத்துக் கொண்டிருந்த பலருக்குத் தளம் போட்டுக் கொடுத்தவராக இருக்கிறார் இன்று. அவரிடம் கொஞ்சம் நம்பிக்கை ஒளி தெரிகிறது. இவருடைய ஆட்களுக்கு வாக்களிப்பதில் இன்னொரு வசதி இருக்கிறது. அவை அனைத்தும் இதுவரை நடத்தப் பட்டு வரும் அரசியலுக்கு எதிரான வாக்குகளாகவும் கருதப்படும். கொஞ்சம் நல்ல சிந்தனைகளுக்கு அது அடித்தளம் போடும்.

எந்த அணியில் இருந்தாலும் திருமா குழுவினர் நிறைய வெல்ல வேண்டும். ஜெ பின்னால் போனது எப்படி வைகோவின் கட்டாயமோ அது போல் காங்கிரஸ் மற்றும் திமுக பின்னால் போனது இவரது அரசியல் கட்டாயம். இவருடைய ஜாதியை மனதில் வைத்து வெறுக்கிற யாரும் இவருடைய அரசியலின் தரத்தைச் சரியாக எடை போட வில்லை என்றே எனக்குத் தோன்றுகிறது. பல சூழ்நிலைகளில் திரும்பத் திரும்பத் தான் எவ்வளவு நல்லவன் என்பதைக் காட்டி வருகிறார். ஆனாலும் உள்ளே குதிக்காமலேயே உப்புத் தண்ணி என்று சொல்கிறவர்கள் தான் இவரையும் வெறுக்கிறார்கள். திறந்த மனதுடன் இவரை அறிய முயலுங்கள். கண்டிப்பாக என் கருத்தை ஏற்றுக் கொள்வீர்கள். சென்ற முறை இவர் நிறுத்திய ஆட்களும் மெத்தப் படித்தவர்களாகவும் மேன்மை தங்கியவர்களாகவுமே இருந்தனர்.

இடது சாரிகள் எப்போதும் போல் காங்கிரசுக்கு எதிரான கூட்டணியில் இருப்பார்கள். அதற்கேற்றார் போல் அவர்களுடைய முதல் அமைச்சர் முன்னுரிமை மாறும். ஆனால் அவர்களில் ஒருவர் கூடத் திருடனாக மொள்ளமாரியாக இருக்க மாட்டார்கள். ஒரு வேளை ஒரு வேலையும் செய்யாத சோம்பேறியாகக் கூட இருக்க வாய்ப்பு உண்டு. ஆனால் ஊரான் காசில் கும்மி அடிக்கிற ஈனர்களாக இருக்க மாட்டார்கள். எனவே இவர்கள் எல்லோரும் வென்றாலும் இழப்பு ஏதும் இல்லை.

சீமான் என்ற உணர்வாளர் இருக்கிறார். அவர் எப்படி இந்தத் தேர்தலை அணுகப் போகிறார் என்று தெரியவில்லை. எப்படி இருப்பினும் அவரும் கண்டிப்பாக நிறையத் தரமான ஆட்களை நிறுத்துவார். எனவே அவர்களையும் ஆதரிக்கலாம். நம்பிக்கை அளிக்கும் படியாக நிறைய ஒளிக்கதிர்கள் தெரிகின்றன. எல்லோருக்கும் நம் ஆதரவைப் பகிர்ந்தளித்தால், ஓரளவு நல்லது நடக்கலாம் போல் தெரிகிறது. சுருங்கச் சொல்ல வேண்டுமானால், திமுக அதிமுக அல்லாத யாராக இருந்தாலும் பரவாயில்லை. நாம் கண்டிப்பாக நம் முதிர்ச்சியின் அடுத்த கட்டத்தை அடையலாம். புதியவர்களுக்கு நம்பிக்கை கிடைக்கும். பழையவர்களுக்குப் புதுத் தொழில் தேடக் கொஞ்சம் கால அவகாசமும் கிடைக்கும்.

இத்தனைக்கும் மேல், திமுக-காங்கிரஸ் கூட்டணி உடைந்தால் நமக்கொரு நன்மை இருக்கிறது. தேர்தலை விபச்சாரம் (காசு வாங்கிக் கொண்டு வாக்களிக்கும் பாவப் பட்ட மக்களைக் கேவலமாகப் பேச விரும்பி இப்படி எழுத வில்லை. ஆனால் அது தானே உண்மை? வேறு என்ன செய்ய முடியும்?) போல் செய்கிற இந்த அவலத்துக்கு ஒரு முடிவு வரும். முறைகேடுகள் ஓரளவு குறையும். மத்திய அரசுக்கு ஊழலற்ற ஆட்சி நடத்தச் சிறிது வாய்ப்புக் கூடும். இதெல்லாம் நல்ல செய்திகள் அல்லவா? எனவே, அது நடக்க வேண்டும் என்றே வேண்டிக் கொள்வோம்.

எந்தக் கூட்டணி வென்றாலும் இந்த முறை மக்கள் கொஞ்சம் கண்டிப்பாக வெல்வார்கள். முன் எப்போதும் இல்லாத மாதிரி. பாவிகள் காசை வாங்கி விட்டு, சத்தியத்துக்குக் கட்டுப்பட்டு விடக்கூடாது. காங்கிரசோ தேமுதிகவோ தேவே கவுடா அளவுக்குக் கேவலமாக நடந்து கொள்ள மாட்டார்கள் என்ற பெரும் நம்பிக்கை. காப்பாற்றி விடுங்களப்பா!

ஒன்று மட்டும் உறுதியாகத் தெரிகிறது. இந்தத் தேர்தலும் அதற்குப் பிந்தைய அரசியலும் இதுவரை இருந்ததைவிட ஓரளவு பரவாயில்லாமல் இருக்கும். அப்படியே நடக்கக் கடவ.

கருத்துகள்

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

சாம, தான, பேத, தண்டம்

உயர் தனிச் செம்மொழி?!

யுவால் நோவா ஹராரி: “21-ஆம் நூற்றாண்டுக்கான 21 பாடங்கள்” | கூகுள் உரையாடல்கள்