மொழியை நிறையப் பெயர்க்க விருப்பம்

எல்லோருக்கும் போல எனக்கும் பல பேராசைகள் உண்டு. அதில் ஒன்று பிற்காலத்தில் (கண்டிப்பாக இப்போது இல்லை) அரசியலில் நுழைய வேண்டும். நிச்சயமாக என் வாழ் நாளில் ஒரு நாள் நம் அரசியல் இன்று இருப்பதை விட ஓரளவாவது சிறப்பாக இருக்கும் என்ற ஒரு மகா நம்பிக்கை எனக்கு இருக்கிறது. எனக்கு முன்னால் பின்னால் அருகில் உட்கார்ந்து இருக்கிற யாருக்கும் அந்த நம்பிக்கையில் நம்பிக்கை இருப்பது போல் தெரியவில்லை. அதற்கும் நியாயம் இருக்கிறது. ஒரு வேளை அவர்கள் பொய்ப்பிக்கப் பட்டு நான் நினைப்பது போல ஆங்காங்கே சில நல்லவர்களும் கண்ணில் படும் அளவுக்கு ஒரு மாற்றம் வருமேயானால், தனக்கும் தன்னைச் சார்ந்த குடும்பத்துக்கும் அதற்கடுத்த சில வட்டங்களுக்கும் ஆற்ற வேண்டிய அடிப்படைக் கடமைகள் அனைத்தையும் முடித்து விட்டு, சிறிய அளவில் ஏதாவது செய்ய முயலலாம் என்றோர் ஆசை. இப்போதே கையில் இருப்பதை எல்லாம் தூக்கிப் போட்டு விட்டு இறங்கலாம். ஆனால் அதில் ஒரு சிக்கல் இருக்கிறது. அப்படி இறங்கியோர் யாவரும் தத்தம் தனி மனித, குடும்பக் கடமைகளைச் செய்யப் பிற்காலத்தில் அரசியலைச் சாரவேண்டிய சூழ்நிலை உருவாகிவிடும். அப்படித்தான் இதுவரை பெரும்பாலும் நடந்திருக்கிறது. எனவே ஒவ்வொரு படியாக மேலே போவது நல்லதுதானே.

அடுத்தது, நிறைய இலக்கியங்கள் படைக்க வேண்டும் என்பது. முந்தையதைப் போலவே இதுவும் பிற்காலத்தில் தான். அடிப்படைக் கடமைகள் யாவும் முடிந்த பின்புதான். இல்லையேல், என்ன ஆகும் என்றால், இருக்கிற வேலையில் கவனம் சிதறும். கொடுக்கிற சம்பளத்துக்கு மரியாதை கொடுக்க வேண்டும். வேலை நேரத்தில் ஓரத் தொழில் செய்கிற அரசு ஊழியர் போல் ஆகி விடக் கூடாது. அனால், அதற்கான ஒத்திகை அல்லது பயிற்சிக் காலமாக இதை எடுத்துக் கொள்ளலாம். நேரம் கிடைக்கிற பொழுதுகளில் சிற்சிறு முயற்சிகள் செய்து பார்க்கலாம். அப்படிப் படைக்கிற படைப்புகள் பல்வேறு விதமானவைகளாக இருக்கும். சிறுகதை, புதினம், கவிதை, கட்டுரை, இவை தவிர்த்துப் புதிதாக ஏதாவது படிவம் வருமானால் அது எனப் பல்வேறு விதங்கள்.

மொழி பெயர்ப்புகள் நிறையச் செய்ய வேண்டும் என்று இன்னோர் ஆர்வமும் இருக்கிறது. தமிழும் ஆங்கிலமும் ஒருங்கே நாவில் அல்லது பேனாவில் நர்த்தனமாட்டுவிக்கின்ற மனிதர்கள் நிறையப் பார்க்க முடிவதில்லை இங்கே. செம்மொழியின் பெருமைகள் உலகறிய வேண்டுமாயின் அப்படிப் பட்டோர் நிறையத் தேவைப் படுகிறது. அது ஓரளவு கைகூடி வருமேயானால், நிறைய மொழி பெயர்ப்புகள் செய்ய வேண்டும். அதற்கு இன்னொரு காரணம், வங்கக் கடலில் மட்டும் மீன் பிடிக்கற “ஓர்” இனம் (ஆங்கிலத்தில் போலவே தமிழிலும் உயிரெழுத்தில் ஆரம்பிக்கும் சொல்லுக்கு முன்பு “ஒரு” போடாமல் “ஓர்” போட வேண்டும் என்ற பாடம் இருப்பது நினைவு இருக்கிறது!) உலகக் கடல்களுக்கெல்லாம் செல்ல முடிந்தால் அதிகம் பிடிக்க முடியும் என்பது மிக அடிப்படையான ஒன்றாகத்தானே படுகிறது. குண்டுச்சட்டியில் குதிரை ஓட்டக்கூடாது அல்லது கிணற்றுத் தவளையாக இராதே என்றெல்லாம் பேசுவது கொஞ்சம் அதிகப் பிரசங்கித் தனம் போலத் தோன்றும் என்பதால் கொஞ்சம் கவனமாக ஒரு புதிய முயற்சி செய்து பார்த்தேன். :)

இன்னொரு காரணம், ஆங்கிலத்தில் படைக்கப் பட்டிருக்கிற பல படைப்புகள் தமிழில் பலரால் தேடப் பட்டும் கிடைக்காதவை. ஆங்கில அறிவு இல்லாத ஒரே காரணத்தால் தனியொரு மனிதனுக்குச் சென்றடையாமல் போகிற பல படைப்புகள் அந்த அறிவை வைத்துக் கொண்டிருக்கிற பலருக்குப் பயன் படாமலே சும்மா தூங்கிக் கொண்டிருப்பதைப் பார்க்கும் போது, அங்கும் மேடு பள்ளம் சரி செய்ய வேண்டிய வேலை நிறைய இருப்பது தெரிகிறது. அதற்கொரு மண் வெட்டியாக நம் மொழி பெயர்ப்புகள் அமையலாம் என்றும் தோன்றுகிறது.

இலக்கியத்தில் பல விதமானவை. கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே தோன்றிய, எளிதில் படித்துப் புரிந்து கொள்ள முடியாத விதம் ஒன்று. அதைப் புரிந்து கொள்ள முடியாமைக்குக் காரணம் கால இடைவெளி. எளியோரும் புரியும் விதமாக அவற்றைப் புதுப்பித்துக் கொண்டு வருவதும் ஒரு நல்ல மண் வெட்டி. அது பற்றியும் சிறிது பின்னர் யோசிக்கலாம்.

ஆனால், கல் தோன்றி, மண் தோன்றி, கள் தோன்றி, கள்ளச் சாராயம் தோன்றி, அதன் பின் கணிப்பொறி தோன்றி, காலம் எவ்வளவோ மாறி விட்ட பின்பும், எளிதில் படித்துப் புரிந்து கொள்ள முடியாத விதம் ஒன்று தொடர்கிறது. அத்தகைய படைப்புகளைப் புரியும் முன்பே அதுபோல் எழுத வேண்டும் என்ற ஆசை எனக்கும் வந்து விட்டது ஒரு தனிக்கதை. அதே வேளையில், எல்லோரும் புரிந்து கொள்ளும் படியாகத் தெளிவாக இருக்கிற எழுத்துக்கள் மீதும் ஒரு மரியாதையும் ஈர்ப்பும் இருக்கிறது. பல மொழி மெயர்ப்பாளர்கள், புரியா வரம் வாங்கி வந்த புதிய தலைமுறை எழுத்தாளர்களின் ஒன்னு விட்ட உறவினர்களாகவே இருப்பது எனக்குக் கொஞ்சம் வேலை இருப்பதை உறுதி செய்கிறது. தப்புத் தப்பாக மொழி பெயர்க்கும் பாவப் பட்டவர்களுக்கும் (இது வியாபார வேகத்தில் நடக்கிற தப்பு) அப்படியே அச்சு அசலாகக் கொண்டு வந்து தருகிற முற்போக்காளர்களுக்கும் நடுவில் ஒரு சந்து போகிறது. அதுதான் நான் நுழைய நினைக்கும் சந்து.

வார்த்தைக்கு வார்த்தை வாக்கியத்துக்கு வாக்கியம் அப்படியே கொண்டு வருவதில் இருக்கிற பிரச்சனை என்னவென்றால், அது தமிழ் போலவே இருப்பதில்லை பல நேரங்களில். தமிழுக்கு அது ஒரு புதிய நடையை அறிமுகப் படுத்துகிறது உண்மைதான் என்றபோதிலும். ஆங்கிலம் அறியாதவர்கள் அந்தப் புதிய நடையைத் தூக்கிக் குப்பையில் போடுகிறார்கள் அல்லது தூர ஓடுகிறார்கள் அல்லது “ஆகா, ஓகோ, என்ன ஒரு புதிய நடை” என்று உடன் ஓடுகிறார்கள்.

ஆனால் ஆங்கிலம் அறிந்தவர்களுக்கு அது பெரும் பிரச்சனை. படத்தைப் பார்ப்பதை விட்டு விட்டு இப்படித்தான் இந்தக் காட்சியைப் படம் பிடித்திருப்பார்கள் என்று பார்ப்பவன் யோசிக்க ஆரம்பித்து விட்டால் காட்சிக்கு அது ஒரு தோல்வி ஆகி விடும் அல்லவா? “ஆங்கிலம் அறிந்தவன் ஏன் தமிழ் மொழி பெயர்ப்பைப் படிக்கிறாய்? இது உனக்கு மட்டுமே பிரச்சனை, அனைவருக்கும் அல்ல!” என்ற வாதம் புரிகிறது. ஆனால், இதன் மூலம் நான் புரிந்து கொண்டது என்னவென்றால், குப்பையில் போட்டார்களே ஒரு குழுவினர், தூர ஓடினார்களே இன்னொரு குழுவினர், அவர்கள் இருவரும் ஏன் அப்படிச் செய்தார்கள் என்பதற்கான காரணம். இதில் இன்னொரு பிரச்சனையும் கண்டேன். அது என்னவென்றால், தமிழில் எழுதப் பட்டிருப்பதும் முழுக்க முழுக்க ஆங்கில வாடை (நெடி என்றும் சொல்லலாம்) அடிக்கிறது. மொழியில் மட்டுமல்ல. மொத்தச் சூழலிலும். சூழலையும் ஓரளவு தமிழ் படுத்தலாம் என்பது அடியேன் கருத்து. கம்பனின் மாபெரும் வெற்றி அதுதான். வடநாட்டுக் கதையை தென்னாட்டுக் காரனுக்கு ஏற்றபடிச் சொன்னது. வடநாட்டுக் கலாச்சாரத்தைப் புரிய அது உதவ வில்லை என்கிற வாதம் சரிதான். ஆனால் கலாச்சாரத்தைப் புரிய வைப்பது மட்டுமே அந்தப் படைப்பின் நோக்கமல்ல. அதை விடப் பெரிய பல நோக்கங்கள் இருந்தன. கலாச்சாரத்தைப் புரிய வைக்கிற ஆர்வத்தில் முழு முதல் நோக்கம் சமரசம் செய்யப் படக்கூடாது என்பது நம் வாதம். (“வாதத்துக்குத்தான் ஒரு போதும் மருந்தில்லையே!” என்கிறீர்களா?)

தனிப் பட்ட முறையில் இதில் இன்னொரு நல்லது நடக்கும். இரண்டு மொழிகளுமே இன்னும் கொஞ்சம் நன்றாகப் புரிபடும். இரண்டிலும் சொந்தமாகப் படைப்பதற்கான எரிபொருள் நிறையக் கிடைக்கும். ஆனால், கண்டிப்பாகக் கருத்துத் திருட்டுகள் செய்கிற திட்டங்கள் எதுவும் இல்லை.

எனவே, கலாச்சாரப் புரிதலை முழு முதல் நோக்கமாகக் கொண்ட படைப்புகளை விடுத்து மற்றவை அனைத்தையும் சன்னம் சன்னமாக (எங்க ஊர்ப் பேச்சு) நான் விரும்புகிற பாணியில் மொழி பெயர்க்க ஆரம்பிக்கலாம் என்றோர் ஆசை. இது சரிப்பட்டு வருமா? உருப்படுவதற்க்கான வழியா? நீங்கள்தான் சொல்லணும்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம் - ஜெயகாந்தன்

"நான் என்னை ஒரு மேதையும் புனித வேசியும் போல் உணர்கிறேன்": அலெஹாண்ட்ரோ ஜோடராவ்ஸ்கிக்குச் சில கேள்விகள்

சாம, தான, பேத, தண்டம்