உணவு, உலகக் கோப்பை மற்றும் ஊழல்!
உலகக் கோப்பைக் கால்ப்பந்தாட்டம் எப்போதுமே நமக்கு எட்டாக் கனியாகவே இருக்கிறது. கோப்பையைப் பற்றிச் சொல்ல வில்லை... அதில் ஆடுவதே அவ்வளவு சிரமமாக இருக்கிறது நமக்கு. கிரிக்கெட் என்றால் நமக்குக் கிறுக்கு. மற்ற ஆட்டங்கள் அனைத்துமே நமக்கு ஆடப் பிடிப்பதில்லை. பார்க்க மட்டும்தான். ஏன்? நம் வாழ்க்கை முறைக்கும் அதற்கும் ஏதாவது தொடர்பு இருக்கிறதா? உணவு முறை ஒரு காரணமா? இருக்கலாம். அதனால்தான் நம்மால் கிரிக்கெட்டிலும் ஒரு ஷோயப் அக்தரோ ப்ரெட் லீயோ உருவாக்க முடியவில்லை. எந்த விளையாட்டுக்குமே அதீத உடல் வலிமையும் ஆற்றலும் வேண்டும். அறிவியல் பூர்வமான ஓர் உண்மை என்னவென்றால் நாம் அதில் கடைசி. சைவம் ஆரோக்கியம்; ஆனால் பலம் அல்ல.
அப்படியானால், எப்போதுதான் நாம் அதே அளவு கிறுக்கோடு கால்ப்பந்தாடுவோம்? அசைவம் சாப்பிடுவோர் கால்ப்பந்தாட்டக் களங்களுக்கு அருகில் வரும்போதுதான் அது சாத்தியம். யார் அவர்களை வர விடாமல் தடுப்பது? கிரிக்கெட். ஏன்? மாலை வேளையில் தினமும் விளையாட வேண்டும் என்ற பழக்கமே சைவம் சாப்பிடுபவர்களிடம்தான் இருந்தது. அவர்கள்தாம் நம்மை எல்லா விளையாட்டுகளுக்கும் அறிமுகப் படுத்துவது. அவர்கள் கிரிக்கெட்டை நமக்கு அறிமுகப் படுத்திய பின் அது நம் நரம்பில் ஏறி விட்டது. இப்போது நம் பைக்கையோ சைக்கிளையோ கால்ப்பந்தாட்டக் களங்களில் நிறுத்த வேண்டுமானால், அது கிரிக்கெட்டை விட உயர்ந்த விளையாட்டாக நம் மனதில் பதிய வேண்டும். அது எப்போது நடக்கும்? ஒருவேளை, சைவம் மட்டும் சாப்பிடுபவர்கள் கறி சாப்பிட ஆரம்பித்து கால்ப்பந்தாட ஆரம்பித்தால் நடக்கலாம்.
அதில் ஏதாவது பிரயோசனம் இருக்கிறதா? இல்லை என்பதே என்னுடைய கருத்து. சைவம் என்பது நாம் உலகுக்கு அளித்த உயர்ந்த வாழ்வியல் நெறி. அவர்களுக்கு அது பெரிய ஈர்ப்பை ஏற்படுத்தியிராமல் இருக்கலாம். ஓர் உயிரை மதிப்பது ஒரு புனிதப் பண்பு. அதுவும் மனிதரல்லாத உயிரையும் மதிப்பது அதனினும் மேலானது. 'பெற்றோர் சொல்லிக் கொடுத்ததால் மற்ற உயிர்களின் உயிரை மதிப்பதும் அவர்கள் சொல்லிக் கொடுக்காததால் பிழைப்புக்காக மனித உயிர்களின் உயிரைக்கூட மதியாதிருப்பதும் சரியா?' என்பது போன்ற பிரச்சனைகள் பற்றி இப்போது பேச வேண்டியதில்லை. அது வேறொரு பொழுதில் செய்ய வேண்டியது.
மிருகக்காட்சி சாலைகளில் பணத்தைக் கொடுத்து மிருகங்களைக் காணப் போகும் நேரங்களில் எல்லோரும் அங்கிருக்கும் புலிகளையும் சிங்கங்களையும் கண்டு ரசிக்கிற வேளைகளில் எனக்கு மட்டும் அவற்றை வாழ்விப்பதற்காகக் கொல்லப்பட்ட ஆடு மாடுகள் பற்றிய கவலை வந்து ஆட்கொள்கிறது. என்னவொரு கொடூரமான படைப்பு அல்லது இயற்கை இது?! இன்னோர் உயிர் கொள்ளப்படாவிட்டால் உன் உயிர்வாழ்வே கேள்விக்குறி. பல ஆண்டுகளுக்கு முன் டிஸ்கவரி சேனலில் புலி மானை விரட்டுவது கண்டு இன்றுவரை வருந்திக்கொண்டு இருக்கிறேன். இதைப்பற்றி எழுத எனக்கென்ன அருகதை இருக்கிறது என்று கேட்கலாம். குறைந்த பட்சம் நான் வருந்தவாவது செய்கிறேனே. அது போதாதா?
ஆகவே, இந்தக் கதையின்(!) முடிவு என்னவென்றால், சைவம் சாப்பிடுவதில் உலகின் முதல் நாடு என்ற பெயர் இருக்கும் வரை கால்ப்பந்தாடுவதில் நூறாவது அல்லது இருநூறாவது இடத்தில் நமக்கொன்றும் பிரச்சனை இல்லை. இந்த இரண்டையும் விட அதிகமாகக் கவலைப் பட வேண்டிய இன்னும் எத்தனையோ தரவரிசைகள் இருக்கின்றன இந்த உலகில். அவற்றுள் ஒன்று ஊழலில் நாம் வகிக்கும் இடம். 64-ஆம் இடத்தில் இருக்கிறோம். இந்த எண்ணை கால்ப்பந்தில் நாம் வகிக்கும் இடத்தைவிட ஒரு எண் கீழே தள்ள முடிந்தால் கூட அது ஒரு மிகப்பெரிய சாதனையாக இருக்கும். இந்தப் புதிய புத்தாயிரத்தாண்டின் முதல் பத்தாண்டுகளை முடித்து வைக்க இதை விடச் சிறந்த நற்செய்தி ஒன்று இருக்க முடியுமோ!
முக்கியமாகச் சொல்ல வேண்டியது - இந்த ஊழல், உணவு (சைவம் மற்றும் அசைவம் இரண்டிலுமே) முதல் விளையாட்டு வரை எங்கும் நிறைந்திருக்கிறது இந்த இந்தியத் திருநாட்டில்.
* 12/06/2010 ஆங்கிலப் பதிவில் எழுதியதன் தமிழாக்கம்...
* 12/06/2010 ஆங்கிலப் பதிவில் எழுதியதன் தமிழாக்கம்...
கருத்துகள்
கருத்துரையிடுக