ஐ.மு.கூ-2: தேறும் அமைச்சர்கள்

எல்லாக் கட்சிகளிலும் உள்ள பிடித்த தலைவர்கள் பற்றி எழுதலாம் என்றுதான் எண்ணினேன் முதலில். இடுகையின் அளவைச் சிறிதாக்கிக் கொள்ள வேண்டி ஆளும் கூட்டணியின் முக்கியக் கட்சியான காங்கிரசின் முக்கியத் தலைகள் பற்றி மட்டும் பேசலாம் என நினைக்கிறேன் இவ்விடுகையில். பிறிதொரு நாளில் மற்ற கட்சிகளின் தலைகள் பற்றியும் பேசலாம் கண்டிப்பாக. சரி, கேள்விக்கு வருவோம். இப்போதைய அரசில் உள்ளோரில் தேறுவது யார் யார்? தேறுவது போலத் தெரிந்தாலும் தேறாதோர் யார்? அவர்களைப் பற்றி மட்டும் இவ்விடுகையில் பேசுவோம். மற்றோரை விட்டு விடலாம். அவர்கள் யாவரும் சராசரிகள் அல்லது பெரிதாக நம்முடைய கவனம் தேவையில்லாதவர்கள். வெறும் அரசியல்வாதிகள்; தலைவர்கள் அல்லர். உங்கள் கருத்துரைகளைப் பொறுத்து இதைத் திருத்தவும் தயாராக இருக்கிறேன்.

சொல்லவே வேண்டியதில்லை. முதலில் வருவது பிரணாப் முகர்ஜி. அவர் ஒரு சகலகலா வல்லவர். அவருடைய சமகாலத்தவர்களில் இவர் ஒருவர்தான் இன்றும் உருப்படியாக நிலைத்திருப்பவர். அவருடைய சமகாலத்தோர் என்று நான் சொல்வது அர்ஜுன் சிங்குகள், என். டி. திவாரிகள், சிவராஜ் பாட்டில்கள், நட்வர் சிங்குகள் போன்றோர். இவர் அடுத்த பிரதமர் ஆனால் அதில் சிறிதும் ஆச்சரியப்படுவதற்கில்லை. அவருடைய கட்சிக்கும் அந்தக் கடமை இருக்கிறது. அரசியல் அனுபவம் இல்லாத அவருடைய தலைவருக்குத் (அதாவது பிரதமருக்கு) தேவைப்படும் எல்லாப் பொழுதுகளிலும் உறுதுணையாக இருந்து எல்லாச் சிக்கல்களையும் தீர்த்து வைக்க உதவியவர். அவரையே தூக்கிச் சாப்பிட முயற்சிக்காமல் இட்ட பணியைச் சிறப்பாகச் செய்வது அவ்வளவு சாதாரண விஷயமில்லை. எல்லா அலுவலகங்களிலுமே இவரை மாதிரி முக்கியத்துவம் கிடைக்கிற ஆட்கள் செய்கிற வேலை - தனக்கு மேலே இருப்பவரை விழுங்க முயற்சிப்பதுதான். காங்கிரசை மறந்துவிட்ட ஒரு மாநிலத்திலிருந்து வருகிற ஒருவர் அது போன்ற வேலையைச் செய்வது அவ்வளவு எளிதான வேலையில்லைதான். ஆனால், நல்ல தொண்டனாக இருப்பது என்பது இன்னும் நிறையத் தலைவர்களுக்குச் சரியாகக் கைவராத கலை. அர்ஜுன் சிங் என்றொருவர் சமீபத்தில்தானே தன்னை ஓர் அதிபுத்திசாலியாகக் காட்டிக் கொள்ள முயன்று கையைச் சுட்டுக் கொண்டார்.

முகர்ஜிஜி தேவைப்படும்போதெல்லாம் உதவிக்கரம் நீட்டிக் காப்பாற்றியிருக்கிறார் இந்த அரசை. கட்சித் தலைமையின் நம்பிக்கையையும் வென்றிருக்கிறார். அவரைக் குடியரசுத் தலைவராக்க முயன்றது - அதன் பின்பு கட்சிக்கும் அரசுக்கும் அவரது இருப்பின் தேவை உணர்ந்து அந்தத் திட்டத்தைக் கைவிட்டது போன்ற நிகழ்வுகள் அவருடைய முக்கியத்துவத்தை நன்குணர்த்துகின்றன. இடதுசாரிகளும் வலதுசாரிகளும் ஒருங்கே விரும்பும் ஒரே காங்கிரஸ் தலைவர் இவர்தான் என்பது போலும் தெரிகிறது. எல்லோரும் நினைப்பது சிங்கைத் தொடர்ந்து ராகுல் வருவார் என்பது. ஆனால், காங்கிரஸ் தன் மீதுள்ள குடும்ப அரசியல்க் கறையைத் துடைக்க முயல்வதாகவும் கேள்விப் படுகிறோம். அது உண்மையானால் அடுத்துக் கொஞ்ச காலமாவது பிரணாப்ஜியை பிரதமராக்க வாய்ப்புகள் நிறைய இருக்கின்றன. அப்படிச் செய்தாலும் எந்தச் சிக்கலும் இல்லாமல் ராகுல் பிரதமராக முடியும். ஏனென்றால், பிரணாப்ஜி கண்டிப்பாக நீண்ட காலம் அந்தப் பதவியில் தொங்கிக் கொண்டிருக்க மாட்டார். அவரே பாவம் வயசானவர்.

அடுத்து இருப்பவர் நம்ம ஊர்க்காரர் சிதம்பரம். ஒருகாலத்தில் நான் அளவுக்கு மீறி மதித்த தலைவர்களுள் ஒருவர். என்னைப் போலவே தென் தமிழகத்துக்காரர் என்பதால் அவருடைய தேய்பிறைக் காலங்களிலும் அவருடைய ஒவ்வோர் அசைவையும் கூர்மையாக நோக்கியிருக்கிறேன். ஒரு காலத்தில் அவருடைய நேர்மையை யாரும் கேள்வி கேட்க முடியாத அளவு நல்லவர் என நினைத்திருக்கிறேன். நீண்ட காலமாக ராஜீவ் காந்தியின் கண்டுபிடிப்புகளில் தலைசிறந்தவராகக் கருதப்பட்டவர். பணத்துக்காக ஒருபோதும் அவர் அரசியலைச் சார்ந்திருக்க வேண்டி இருந்ததில்லை. பதவி இல்லாத காலங்களில் பேசாமல் போய் பேசும் வேலை (வக்கீல் வேலை) பார்த்தார். தேவைக்கும் அதிகமாகப் பேசுகிற அரசியல்வாதிகளைக் கொண்ட ஒரு மாநிலத்தில், ஆங்கிலத்திலும் தமிழிலும் சிறப்பாக உரையாற்றும் ஆற்றல் படைத்த அவர் ஒரு நல்ல அரசியல்வாதிக்குரிய அனைத்துத் தகுதிகளையும் ஒருங்கே பெற்றவர் போலத் தெரிந்தார். அவருடைய பேச்சுகள் கருத்தாழம் மிக்கவையாக இருந்தன. அதனால்தானோ என்னவோ அவர் ஒரு மக்கள் தலைவராக உருவெடுக்க முடியவில்லை. அரசியல்ப் பேச்சுக்களில் மக்கள் சரக்கை அதிகம் எதிர்பார்ப்பதில்லை. அனல் பறக்க வேண்டும் என்று மட்டும்தான் ஆசைப் படுகிறார்கள். அதையும் அவர் கற்றுக் கொண்டால் நல்லது.

இன்றும் அவருக்கே உரிய பாணியில் அவருடைய அமைச்சகம் செயல்படுகிறது. ஆனால் காலப்போக்கில் அவர் நிறைய மாறிவிட்டதையும் மறுப்பதற்கில்லை. ராஜீவ் காந்தியால் கொண்டுவரப்பட்ட அதே ப.சி. போல் தெரியவில்லை இவர். பதவிப் பசி கூடி விட்டது போல்த் தெரிகிறது. இன்றைய அரசியல் சூழலுக்கேற்ப அவருடைய அணுகுமுறையை மாற்றிக் கொள்ளாவிட்டால் அவர் போக விரும்பும் இடத்துக்குப் போக முடியாது என்பதை அவருடைய தோல்விகள் கற்றுக் கொடுத்து விட்டன போலும். எதையும் எளிதில் பற்றிக் கொள்ளும் அவருடைய திறமையே தவறான தந்திரங்களையும் கற்றுக் கொள்ள உதவி விட்டன போலும். அவர் பற்றிய எல்லாக் குற்றச்சாட்டுகளையும் (தோற்றுவிட்டு வென்றதாகச் சொன்னது முதல்) கேள்விப்பட்ட பின்பும் அவர் பிரதமர் பதவிக்கு ஏற்ற ஓர் ஆள் போலத்தான் எனக்குப் பட்டது. தன் பதவியைக் காப்பாற்றிக் கொள்வதற்காக எதுவும் செய்யக் கூடிய ஒரு தலைவராக மாறிவிட்டார் போல்த் தெரிகிறது. அதைத்தானே ஆட்சி அதிகாரங்களைச் சுவைத்து விட்ட எல்லோருமே செய்கிறார்கள். உள்துறையைவிட நிதித்துறை அவருக்கு அதிகம் ஒத்து வந்த ஒன்றாகப் பட்டது. சி.என்.என்.ஐ.பி.என்-இன் ராஜ்தீப் சர்தேசாய் சொல்கிறார் - பட்டேலுக்குப் பிறகு இவர்தான் தலைசிறந்த உள்துறை அமைச்சர் என்று (அது அத்வானி என்று நான் நினைத்தேன்). வாராவாரம் நக்சலைட்டுகள் பாதுகாப்புப் படையினரை மொத்த மொத்தமாகக் கொன்று குவித்துக் கொண்டு இருக்கிறார்கள். திக்விஜய் சிங்கின் இவர் மீதான "அதிமேதாவித்தனத் திமிர்" குற்றச்சாட்டும் சரிதான் போல்த் தெரிகிறது. அறிவுத்திறமும் அன்பும் கலந்த ஓர் அணுகுமுறை நக்சலைட்டுகள் விவகாரத்தில் இதை விட நன்றாக உதவியிருக்கும்.

ஒருகாலத்தில் தமிழ்நாட்டின் முதல்வராகத் தகுதியுடையவர் யார் என்று படித்தவர் எவரைக் கேட்டாலும் சொல்லப்பட்டவர் இவர்தான். இப்போது தமிழகத்தில் காங்கிரசே ஆட்சிக்கு வரும் அதிசயம் கூட நிகழ்ந்தாலும் இவர் முதல்வராக நினைத்துக் கூடப் பார்க்க முடியுமா தெரியவில்லை. கோள்களின் இடங்கள் மாறிவிட்டன இப்போது. அவரே ஒருமுறை ஒத்துக் கொண்டதுபோல, மாநில அரசியலுக்குத் தேவையான சில பண்புகள் அவரிடமில்லை என்றுதான் நினைக்கிறேன். ஈழ விவகாரத்தில் இவர் பதவியைத் தூக்கி வீசியிருந்தால் மக்கள் இவரைக் கொண்டாடியிருப்பார்கள். தோற்றபோது தோற்றதை ஒத்துக் கொண்டு ஒதுங்கியிருந்தால் கொஞ்சம் பரிதாபமாவது பட்டிருப்பார்கள். நானே இவருக்காக எத்தனையோ பேரிடம் வாதாடியிருக்கிறேன். இப்போது அதெல்லாம் முடியாது என்பதை உணர்ந்து இந்த இடுகையில் கூடப் பல மாற்றங்களைச் செய்ய முன் வந்து விட்டேன். படிப்பவர் சிந்தனையைத் தூண்டாவிட்டாலும் எழுதுபவன் சிந்தனையையாவது எழுத்து தூண்டும் என்றொரு முறை சொல்லியிருந்தேன். அது இவரால் - இந்த இடுகையால் எனக்கு நிகழ்ந்தது. பல நண்பர்களோடு இவரைப் பற்றிய நீண்ட விவாதங்களுக்குப் பின் இந்த மாற்றங்களைச் செய்கிறேன். எனவே, ஊர் சாட்சியாக என் லிஸ்ட்டில் இருந்து இவரைத்தூக்கி வீசி விடுகிறேன். கருத்துக்களை சூப்பராகச் சொல்லிய அனைவருக்கும் (கோபமாகச் சொன்னோரும் அடக்கம் இதில்) நன்றியும் கண்டிப்பாகச் சொல்லவேண்டும்.

ஏ.கே. அந்தோணி அவர்களும் அவர் முதலமைச்சராக இருந்த காலத்திலிருந்தே நான் பெரிதும் மதித்த ஒருவர். பக்கத்து மாநிலத்துக்காரர் என்பதால் நம்ம ஊர் அரசியல்வாதிகளின் எளிமையை விட இவருடையதைப் பற்றி அதிகம் கேள்விப் பட்டிருக்கிறேன். ஏனென்றால், நம்ம ஊரில் அப்படியோர் எளிமையான முதலமைச்சர்தான் இருக்கவே இல்லையே. ஆனால், அவருடைய செயல்திறம் பற்றி அதிகம் செய்திகள் வருவதில்லை. நம் மலையாள நண்பர்கள் விட்டுக் கொடுக்காமல் பேசுவார்கள். "நாங்கள் எல்லோருமே இப்படித்தான். உங்களை மாதிரி சீன் போடவெல்லாம் எங்களுக்குத் தெரியாது!" என்பார்கள். ஆனாலும், ஆட்சி செய்வதில் அவர் திறம் பட்டவராகத் தெரியவில்லை. இடதுசாரிகள் போல. சுத்தமானவர்; ஆனால் சுறுசுறுப்பில்லை. தேசிய அரசியலில் நற்பெயர் பெற வேண்டுமென்றால், தூய்மையானவர் என்ற பெயரோடு வளர்ச்சி சார்ந்த - சுறுசுறுப்பான -கவர்ச்சியான தலைவர் என்ற பெயரும் பெற வேண்டும். அது இவருக்குச் சிரமமாக இருக்கலாம். ஒரு மலையாள நண்பன் சொன்னான் - அந்தோணி மிகவும் நல்லவர் ஆனால் செயல்திறம் மிக்கவரல்ல; ஆனால் கருணாகரனோ ஊழல்ப் பேர்வழி என்றாலும் திறமையாகச் செயல்படுபவர். அரசியலில் கை சுத்தமான நல்லவர்கள் போலன்றி நான் பார்த்த பெரும்பாலான ஊழல்ப் பேர்வழிகள் சுறுசுறுப்பான செயல்வீரர்கள். ஏனென்றால் அவர்கள் செயல்படுவதற்குத்தான் ஓர் உந்து சக்தி இருக்கிறதே.

கிருஷ்ணா பெங்களூரில் இருந்தபோது எனக்கு மிகவும் பிடித்தது. படு சுறுசுறுப்பாகச் செயல்பட்டார். பெங்களூரையும் கர்நாடகத்தையும் தகவல் தொழில்நுட்ப மயமாக்கினார். எங்கெங்கு காணினும் செயல்திறம். முதலமைச்சர் என்ற முறையில் உச்ச கட்டக் கண்ணியம் காத்தார். "நம்ம முதல்வர் அளவுக்கதிமாகக் கண்ணியமானவரா?" என்றொரு கருத்துக் கணிப்பு கூட நடத்தியது பெங்களூர் டைம்ஸ் ஆப் இந்தியா. அப்போது தமிழக முதல்வராக இருந்த தைரிய லட்சுமி தினம் தினம் அவரைத் தகாத வார்த்தைகளில் தரம் தாழ்ந்து திட்டியபோது, ஒவ்வொரு நாளும் நம்மவரை விட கண்ணியமானவர் என்று நிரூபித்துக் கொண்டே இருந்தார். நான் பார்த்தவரை மாநிலங்களுக்கிடையிலான பிரச்சனையில் உச்ச நீதி மன்றத்தின் பேச்சை மதித்த முதல் முதல்வர் இவர்தான். அதுதான் அவர் மீது அவருடைய மண்ணில் எல்லோருக்கும் வெறுப்பை உண்டாக்கியது. இறுதியில் அவருடைய மக்களின் பிடிவாதத்துக்குத்தான் வளைந்து கொடுத்தார். அது மட்டுமில்லை, இயற்கையும் அவருக்கு எதிராகத்தான் இருந்தது. மழை இரு மாநில விவசாயிகளுக்கும் ஆப்படித்தது; அதுவே அவருக்கும் கடைசியில் ஆப்பானது. 

அவரே கவுடாவின் ஆதரவோடு இரண்டாம் முறையும் தொடர்ந்திருக்க வேண்டும். ஆனால் நடந்தது என் மனதை உடைத்தது. தரமான ஓர் தலைவர் தரந்தாழ்ந்த அரசியலின் பலிகடாவானார். இப்போதும் நான் நினைப்பது என்னவென்றால், கடைசிவரை காங்கிரஸ் அவரை ஆதரித்திருக்க வேண்டும்; "அவரை ஆதிரிப்பதாக இருந்தால் பேசலாம் அல்லது நடையைக் கட்டு!" என்று சொல்லியிருக்க வேண்டும் கவுடாவிடம். விலையுயர்ந்த அரசியல் வியாபாரங்களில் இதெல்லாம் எழுதுவதுதான் எளிது; செய்வது கடினம். அவர்களுக்கு எத்தனை கட்டாயங்களோ. என் கன்னட நண்பன் ஒருவன் சொன்னான் - "கிருஷ்ணா மேல்த்தட்டு மக்களுக்கு மட்டுமே தலைவர்; கவுடாவோ அதைவிடப் பல மடங்கு இருக்கும் அடித்தட்டு மக்களின் தலைவர்!". எனவே, மேல்த்தட்டு மக்களின் தலைவர் வயதான காலத்தில் மேலவையில் அமர்வதும் அடித்தட்டு மக்களின் தலைவர் எத்தனை பித்தலாட்டங்கள் செய்தாலும் - எத்தனை முறை அழிக்கப்பட்டாலும் மீண்டும் மீண்டும் எழுந்து வருவதும்தானே இயற்கை.

சென்ற முறை, கவுடாவின் பேச்சைக் கேட்டு அவரைக் கழட்டி விட்டு - மராட்டிய மாநிலத்தின் ஆளுநராக அனுப்பியபோது, மத்திய அரசில் நல்லதொரு துறை ஒன்றைக் கொடுக்கலாமே அவருக்கு என ஆசைப்பட்டேன். அது அப்போது நடக்காவிட்டாலும் அடுத்த முறை காங்கிரஸ் வென்று ஆட்சியைப் பிடித்தபோது நடந்தேறியது. என் உள்மன ஓசையை யாரோ ஒட்டுக் கேட்டது போல் இருந்தது எனக்கு. அப்படியெல்லாம் அவருக்காக ஆசைப்பட்ட நான் அவருடைய டெல்லிப் பணி பற்றி என்ன நினைக்கிறேன்? அவ்வளவு சிறப்பாகச் சொல்வதற்கு எதுவுமில்லை. சிறப்பாக எதுவும் கேள்விப்படவுமில்லை. அடிக்கடி அவருடைய துறையின் சொதப்பல்கள் பற்றித்தான் செய்திகள் வந்த வண்ணம் இருக்கிறது. வயதோ - அவர் பழக்கப்பட்டிராத பெருந்தலை நகரத்தின் பின்னணி அரசியலோ - வேறு ஏதோ ஒன்றோ அவருடைய டெல்லி இருப்பை (பெங்களூரில் போலன்றி) நமக்கு அதிகம் உணர்த்த முடியாமல் ஆக்கியிருக்கிறது. கொஞ்சம் கூட வாய்ப்பே இல்லையென்ற போதிலும், ஒரு காலத்தில் பிரதமராகத் தகுதியானவர்களின் பட்டியலில் இவரையும் வைத்திருந்திருக்கிறேன். இனியும் அவரை அந்தப் பட்டியலில் வைத்திருக்க முடியாது. ஆனாலும், வேறு ஏதோவொரு துறையில் போட்டுப்பார்க்கலாம் - கொஞ்சம் மாற்றம் தெரிகிறதா என்று பார்ப்பதற்கு (கண்டிப்பாக நிதி, உள்துறை, பாதுகாப்பு போன்றவை அல்ல). வெளியுறவு அவருக்கு ஒத்துவரவில்லையோ என்றோர் ஐயம் எனக்கு. வேறு ஏதும் காரணம் தென்படவில்லை அவரின் நீடித்த செயலின்மைக்கு.

கபில் சிபலைப் பற்றிப் பேசாமல் இந்த இடுகை முழுமையடையாது. மனிதவள மேம்பாட்டுத்துறையில் அவருடைய திறமையை நிரூபிக்கும் வரை அவர் மீது எனக்குப் பெரிய மரியாதை ஏதும் இருக்கவில்லை. தன் கட்சி செய்யும் எந்தக் காரியத்தையும் நன்றாக நியாயப்படுத்தத் தெரிந்த - நீளமான நாக்கு மட்டும் கொண்ட (அவர்கள்தானே திறமையான வக்கீல்கள்) - திறமையான வக்கீல் என்று மட்டும்தான் நினைத்தேன். பெரும்பாலான ஆங்கிலச் சேனல்களில் ஏகப்பட்ட வாதங்களில் மிகத் திறம்பட வெல்வதைப் பார்த்திருக்கிறேன். ஆனால் அவற்றின் மூலம் அவர் ஒரு சிறந்த தலைவராக எப்போதும் என் மனதை வென்றதில்லை. ஆனால், இன்று நான் நினைப்பது என்னவென்றால், இந்திய அரசியலில் அவருக்கொரு பெரிய இடம் இருக்கிறது. மனிதவள மேம்பாட்டுத் துறையில் மிகப் பெரிய அளவில் சாதித்து விட்டார் என்றே சொல்ல வேண்டும். கல்வியுரிமைச் சட்டத்தில் ஆரம்பித்து பொதுத் தேர்வுகளைத் தூக்கி எறிந்ததுவரை அவருடைய செயல்பாடு அனைத்துமே அருமை. இப்போதைய அமைச்சரவையில் சிறப்பாகச் செயல்படும் சிலரில் கண்டிப்பாக இவரும் ஒருவர். எவ்வளவு பெரிய பேச்சாளர் ஆனாலும் சிலருடைய செயல்பாடுகள்தான் அவர்களுடைய பேச்சைவிட நன்றாகப் பேசுகின்றன. அப்படிப்பட்டோரை அதிகம் பேச வைப்பதன் மூலம் அவர்களை எவ்வளவு பெரிய சோம்பேறிகளாக்கி விடுகிறோம். கபில் சிபலைப் பற்றி மென்மேலும் செய்திகளில் கேள்விப்படத்தான் விரும்புகிறேன்; அவரே பேசுவதைப் பார்க்க எனக்கு விருப்பம் இல்லை. காங்கிரஸ் அவருடைய நாக்கைப் பயன்படுத்தாமல் மூளையைப் பயன்படுத்த முயற்சிக்க வேண்டும் என்பதே என் ஆசையெல்லாம். கல்விதான் நம் கலங்கரை விளக்கம் என்றாகி விட்ட காலத்தில் சரியான திசையில் பயணிக்க இது நமக்கு மிக மிக முக்கியம்.

பட்டியலில் அடுத்து இருப்பவர் திருவாளர் சர்ச்சை. இப்போது அவையில் இல்லாவிட்டாலும் இவர் பற்றிக் கண்டிப்பாகச் சொல்ல வேண்டும். சசி தரூர் அரசியலுக்கு வருகிறார் என்றதும் அளவிலா மகிழ்ச்சி அடைந்தோரில் நானும் ஒருவன். மன்மோகன் சிங் பிரதமரானபோது ஏற்பட்ட அதே மகிழ்ச்சிதான். நம் அரசியல் இதைவிட நன்றாக வேண்டுமென்றால் இது போன்றவர்கள் நிறைய வர வேண்டும். திருவனந்தபுரத்தில் அவர் வென்றபோது மகிழ்ச்சி இரட்டிப்பானது. வெளியுறவுத் துறை காபினெட் அமைச்சராவார் என எதிர்பார்த்தேன். அதுதான் ஐ.நா. சபையின் பொதுச் செயலாளர் பதவிக்குப் போட்டியிட்ட ஒருவருக்குச் சிறப்பாக இருந்திருக்கும். ஆனால், காங்கிரஸ் வேறு விதமாக யோசித்தது. அதே துறையின் துணை அமைச்சர் ஆனார். அது ஒன்றும் மோசமில்லை. ஆனால், அடுத்தடுத்து ஏதாவதொரு சிக்கலில் மாட்டிக் கொண்டிருந்தார். அவர் செய்ததெல்லாம் சரியாகக் கூட இருக்கலாம். ஆனால், இந்திய மைதானங்களில் வேறு விதமாக விளையாடியிருக்க வேண்டும் அவர். அது அவருடைய மேற்கத்தியத் தொடர்புகளால் வந்த வினை. இந்திய அரசியலில் இருப்பதற்கு அவருடைய மேற்கத்தியத் தனம் பெரிய பிரச்சனை. ரோமில் ரோமனாக இருக்க முடியவில்லை அவரால். சுற்றியிருப்பவர்களைப் போல நடந்து கொள்ள முடியாவிட்டால் அவர்கள் கண்டிப்பாக முதுகில் குத்துவார்கள் என்பது இயற்கையின் விதி. அதற்கு நம் அரசியல்வாதிகள் விதிவிலக்குகள் அல்லர். உண்மையில் அவர்கள்தான் மிகச் சரியான எடுத்துக்காட்டுகள். 

ஐ.பி.எல். சர்ச்சை வரும் வரை அதீத நம்பிக்கைகள் கொண்டிருந்தேன். அவர் நியாயத்தின் பக்கம் இருந்தாரா அநியாயத்தின் பக்கம் இருந்தாரா என்பது எனக்குச் சத்தியமாகத் தெரியாது. ஆனால், தவறான நேரத்தில் தேவையில்லாத பிரச்சனைகளுக்குள் சிக்கிக் கொண்டிருந்தார். மூன்றாவது திருமணம் செய்தபோது கடைசி அடி விழுந்தது. அதற்கும் அரசியல்வாதி என்ற முறையில் அவருடைய செயல்பாட்டுக்கும் எந்த சம்பந்தமும் இல்லாமல் இருக்கலாம். ஆனால், அது (மூன்று திருமணங்கள்) எம்.ஜி.ஆர். போன்ற மக்கள் தலைவராக இருந்தால் ஒழிய நம்முடைய கலாச்சாரத்தில் நன்றாக ஏற்றுக் கொள்ளப்படும் என்று எனக்குப் பட வில்லை. இப்பவும் அவருடைய மக்கள் அவரைக் கீழே விழ விட மாட்டார்கள் என்று நம்புகிறேன். ஏனென்றால், கேரளா மற்ற மாநிலங்களை விட வேறுபட்ட மாநிலம். ஆனால், காங்கிரசின் திட்டங்கள் பற்றி எனக்கு நன்றாகத் தெரியவில்லை. ஒருவேளை, அவருக்கு சரியாக ஒத்துப் போகாத அல்லது அவரால் சரியாக ஒத்துப் போக முடியாத ஒரு சூழ்நிலைக்கு ஏற்றவாறு மாற்றிக் கொள்ள முடியாத அவருடைய குறைபாடுகளாலேயே ஒரு பெரும் திறமைசாலியையும் தேசியத் தலைவரையும் (அவர் அதற்கும் மேல் என்பதைச் சொல்லத் தேவையில்லை) இழந்து விட்டோமோ என்று தோன்றுகின்றது. 

அடுத்ததாக, இந்த அமைச்சரவையில் இல்லாதவர் என்றாலும் மணி சங்கர் ஐயரின் தைரியமும் புத்திசாலித்தனமும் எனக்குப் பிடிக்கும். காங்கிரஸ்காரராக இருந்தால்கூடக் கூச்சமில்லாமல் விமர்சிக்கும் அவருடைய குணாதிசயம் எனக்குப் பிடிக்கும். தன் கட்சி ஆட்களாக இருக்கட்டும் - கூட்டணிக் கட்சி ஆட்களாக இருக்கட்டும் - எதிர்க்கட்சியினராக இருக்கட்டும் - அவர் எப்போதுமே யாருடனும் நல்ல பிள்ளை பெயர் எடுக்க முனைவதில்லை. கருணாநிதி, ஜெயலலிதா - இருவர் மீதுமே கடுமையான விமர்சனங்களை வைத்த வெகு சிலரில் ஒருவர். அதி விரைவில் அவரையும் ஓர் அமைச்சராகப் பார்க்க விரும்புகிறேன். அவருடைய கட்சி ஆண்டு கொண்டிருக்கும்போது அவரை நீண்ட நேரம் வெளியில் நின்று வேடிக்கை பார்க்க வைப்பது அவ்வளவு நன்றாக இல்லை. 

இந்த அமைச்சரவையின் சராசரி மேதமையை உயர்த்துவதில் முக்கியமானவர் ஜெய்ராம் ரமேஷ். சுற்றுச் சூழற் பிரச்சனைகளில் இந்திய அணுகுமுறையில் அவர் செய்துள்ள மாற்றங்களை நம் நாடு கைதட்டி ஆரவாரிக்கிறது. ஐந்தாண்டு கால ஆட்சி முடியும்போது இதுவரை யாரும் செய்திராத அளவுக்கு மிகப் பெரும் செயல்களைச் செய்திருப்பார். அதி விரைவில் அவருடைய பதவி உயர்வு நிகழ என் வேண்டுதல்கள்.

குட்டி சிந்தியா மற்றும் குட்டி பைலட் ஆகிய இருவருமே எனக்குப் பிடித்திருக்கிறது. அவர்களுடைய புத்திக் கூர்மையையும் தம் கருத்தைத் தெளிவாக விளக்கும் பேச்சுத் திறமும் கண்டு வியக்கிறேன். அவர்களுடைய தந்தைமார் ராஜீவ் காந்தியின் அவையை அலங்கரித்தது போல, ராகுலின் அவையில் இவர்கள் முக்கிய இடங்களில் அமர்வார்கள் என்பது உறுதி. இவர்களுக்கும் சுயரூபம் என்று வேறு ஏதோ ஒரு ரூபம் இருக்கக் கூடாது என்பது மட்டுமே இப்போதைய என் வேண்டுதல்கள்.

சரத் பவார் (தேசியவாதக் காங்கிரஸ்), வீரப்ப மொய்லி, குலாம் நபி ஆசாத், ஜெய்பால் ரெட்டி, கமல் நாத் போன்ற வேறு யாருமே பெரிதாக ஈர்க்கவில்லை. இவர்களுக்கெல்லாம் ஓய்வு கொடுக்கும் திட்டமொன்றோடு காங்கிரஸ் விரைவில் தயாராக வேண்டும். அது விருப்ப ஓய்வானாலும் சரி. கழுத்தைப் பிடித்துத் தள்ளும் ஓய்வானாலும் சரி.

மற்ற கட்சிகளில் இருக்கும் தலைவர்கள் பற்றியும் நேரம் கிடைக்கும் தருவாயில் எழுதுவேன். நேரு வழி வந்த காந்திகள் பற்றியும் ஓர் இடுகையில் கண்டிப்பாக எழுத வேண்டும். அவர்கள்தாம் இந்திய அரசியலின் வானளாவிய அதிகார மையமாகி விட்டார்களே. பல தலைமுறைகளையும் கடந்து அவர்களின் வீச்சு தொடர்ந்து கொண்டிருக்கிறதே. அதனால் எழுதித்தான் ஆக வேண்டும்.

கருத்துகள்

  1. இதுவும் காங்கிரஸ் மீதான அபிமானத்தில் எழுதியதென்று தவறாக நினைத்து யாரும் அவசரப்பட்டுச் சண்டைக்கு வந்து விட வேண்டியதில்லை. இதுவும் முன்பொரு காலத்தில் ஆங்கிலத்தில் அனைவருக்குமாக எழுதிய இடுகையின் மொழிபெயர்ப்பே. குப்பைக்குள் இருந்து சில குட் பாய்களை வெளியில் தூக்கிக் காட்டும் முயற்சியே. மற்றபடி, சத்தியமாக இதை எழுதிய போதை விட இப்போது காங்கிரஸ் மீது எனக்கு வெறுப்புக் கூடியிருக்கிறது.

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

சாம, தான, பேத, தண்டம்

உயர் தனிச் செம்மொழி?!

யுவால் நோவா ஹராரி: “21-ஆம் நூற்றாண்டுக்கான 21 பாடங்கள்” | கூகுள் உரையாடல்கள்