மடமும் அடமும்
பொன்னும் மணியும் ஒரு நல்ல நாகரீகமான - தப்பு செய்யப் பயப்படும் குடும்பத்தில் பல தன்மையான சகோதரர்களோடு பிறந்த சகோதரிகள். பொன் மூத்தவள். எனவே மணி இளையவள். பொன் மிகவும் நல்லவள். பயந்த சுபாவமுடையவள். யார் என்ன திட்டினாலும் வாங்கிக்கொண்டு பதிலுக்கு வம்பு பண்ணாதவள். எனவே, அவள் வைக்கிற குழம்புகளில் உப்பும் உரைப்பும் அதிகம் இருந்த போதிலும் மனதில் கொஞ்சம் சூடும் சொரணையும் குறைவு என்று பெயர் வாங்கியவள். சூடு சொரணையோடு வாழ்ந்தவர்களெல்லாம் என்னத்தை வாரிக் கொட்டி விட்டார்கள் என்று மனதில் தோன்றினாலும் அதை வாதிடக்கூட விரும்பாதவள். சொல்ல வேண்டியதே இல்லை - எந்த வீட்டில் என்ன நல்ல காரியம் ஆனாலும் கெட்ட காரியம் ஆனாலும் முதல் ஆளாக நின்று பரிமாறுவது முதல் இலை எடுப்பது வரை எல்லா வேலைகளையும் முன்னின்று பார்ப்பாள். எனவே, சொல்ல வேண்டியதே இல்லை - அவளை எல்லோருக்குமே பிடிக்கும். ஆனாலும் அவ்வப்போது சின்னச் சின்னக் கழுதைகள் கூட (சொந்தக்காரக் கழுதைகள்தாம்) அவளை மரியாதையில்லாமல் நடத்தி விடும். இறங்கி வருபவரை ஏற்றிக் காட்டும் பழக்கம்தான் நம் இனத்துக்கே கிடையாதே. யார் வீட்டில் என்ன துக்கமாக இருந்தாலும் அதைத் தன் சொ...