மூன்றாவது அணி!

சமீப காலத்தில் நான் மிக மிக வருந்திய நாட்களில் நேற்று ஒரு நாள். அதேபோல மிக மிக மகிழ்ச்சி அடைந்த நாள் இன்று. எனக்கு விபரம் தெரிந்து அரசியல் நோக்க ஆரம்பித்ததில் இருந்து நான் ஆசைப்பட்ட ஒன்று இன்று நடந்திருக்கிறது. மூன்றாவது அணிக்கான பேச்சு எழுந்திருக்கிறது. இவ்வளவு காலமாகக் கொஞ்சம் கூட சொரணை இல்லாமல் இந்த தேசம் கண்ட இரு பெரும் திருடர்கள் (திருடா திருடி) பின்பு சிங்கி அடித்துக் கொண்டு அலைந்தவர்கள் இன்றுதான் கொஞ்சம் ரோஷப்பட்டு இருக்கிறார்கள். இதற்கான நன்றியைக் கண்டிப்பாகச் செல்விக்குச் சொல்ல வேண்டும். மொத்த நாடும் கொள்ளைக்காரக் குடும்பத்தின் மீது கொலை வெறி கொண்டு இருக்கும் வேளையில் - வெற்றி மிக எளிதாகக் கிடைக்கும் என்று பெருமளவு தீர்மானமாகி இருந்த வேளையில் – “நீங்கள் நினைக்கிற மாதிரி நான் ஒன்றும் திருந்தி விட வில்லை. எனக்குப் பிடித்த கிறுக்கு நிரந்தரமானது” என்று நிரூபிக்கும் வகையில் நேற்று சில ஈன வேலைகளைச் செய்து விட்டார்.

ஒருபுறம் தொகுதிப் பங்கீடு பற்றிய ஆலோசனை நிறைவுறாமல் இருக்கும் போது மயிறு போச்சென தன் லிஸ்டை அறிவித்து விட்டார். அதன் அர்த்தம் என்னவென்றால், ‘நான் இப்படித்தான் இருப்பேன்; இதையெல்லாம் தாங்கிக் கொண்டு மானங்கெட்டுப் போய் என்னுடன் இருப்பதாக இருந்தால் இருங்கள்; இல்லையேல் தொலைந்து போங்கள்’ என்பதுதான். அப்பப்பா இவ்வளவு திமிரா?! ஐந்து வருடங்களாக இந்தச் சிங்காரி பின்னால் எவ்வளவு நன்றியோடு அலைந்தார் வைகோ. பாவம். எல்லோருமே அவரை நம்ப வைத்துக் கழுத்தறுக்கிறார்கள். கடைசியில் அவருக்கே துரோகி பட்டம் கட்டி விடுகிறார்கள். இடதுசாரிகள் ஒருபுறம் வேறு வழியில்லாமல் இவர் பின்னாலேயே சுற்றினார்கள். எல்லோருக்கும் ஒரே அறிவிப்பில் ஆப்பு. எதிரிக்கும் நண்பனுக்கும் ஒரே மாதிரி மரியாதை என்றால் உனக்கு மண்டையில் ஏதோ கோளாறு என்றுதானே அர்த்தம்.

இதற்கெல்லாம் காரணம் யார் என்று நமக்கெல்லாம் தெரியாமல் இல்லை. நாமெல்லாம் பெரிய அறிவாளி என்று நினைத்துக் கொண்டிருக்கிற – மாமா வேலை பார்க்கிற அந்தப் பத்திரிகைக்காரன்தான். உனக்கும் ஒருநாள் ஆப்பு இருக்கு மவனே. சங்கராச்சாரியருக்கே ஆப்பு வைக்கத் தயங்காத உன் தோழி உனக்கா பயப்படுவாள்? உன் தனிமனிதக் காழ்ப்புணர்ச்சியைத் தீர்ப்பதற்காக இப்படி ஒரு தவறான ஐடியா கொடுத்து செல்வியின் வாழ்க்கைக்கே முடிவு கட்டி விட்டாயே! சும்மா விட்டு விடுவாளா உன்னை? பொறுத்திருந்து பார் மவனே; பொறுத்திருந்து பார்!

இதில் ஒரு பெரிய வசதி என்னவென்றால் எல்லோருக்குமே ஆசைப்பட்டதுக்கு மேல் அதிகமான சீட்டுகள் கிடைக்கும். ஓரளவு செலவழிக்க முடிந்து – சிறப்பான பிரச்சாரம் செய்ய முடியும் என்றால் கண்டிப்பாக ஆட்சியைக் கூடப் பிடிக்க முடியும். குறைந்தபட்சம் யார் முதல்வர் என்பதைத் தீர்மானிக்கும் சக்தியாவது கிடைக்கும். அதுவும் இல்லையென்றால் அடுத்த தேர்தலுக்காவது வெல்லும் அளவுக்கு ஒரு சலசலப்பை உண்டு பண்ண முடியும். அதற்கு முன் சாக வேண்டியவர்கள் செத்து, மற்ற இரு கட்சிகளும் ஓரளவு சுத்தம் செய்யப்பட்டு – புது வடிவம் பெற்று வந்தால், புதியதொரு அரசியல் எதிர்காலத்துக்கு இவர்கள் எல்லாம் சேர்ந்து பாதை அமைக்கலாம். இதைவிடச் சிறந்த வாய்ப்பு இனி கிடைக்கப்போவதில்லை. நாடாளுமன்றத் தேர்தலின் போதே செய்திருக்க வேண்டும். தவறி விட்டார்கள். இந்த முறையும் விட்டு விடாதீர்களப்பா! ப்ளீஸ்!

வேலூரிலிருந்து திரும்பிக் கொண்டிருக்கும் வைகோவின் வரவை முன்னெப்போதும் இல்லாத அளவு ஆவலோடு எதிர் பார்த்துக் கொண்டிருக்கிறோம். சீக்கிரம் வாருங்கள். எல்லோரும் சேர்ந்து நல்லதொரு முடிவெடுங்கள். அது உங்களுக்கு மட்டுமல்ல; எங்களுக்கும் நல்ல முடிவாக இருக்கும் என்று நம்புகிறோம். புரட்சி ஆப்பிரிக்காவிலும் மத்திய கிழக்கிலும் மட்டுமே நடக்க வேண்டுமென்றில்லை. இங்கேயும் நடக்கலாம். அதில் பங்கு பெறும் அரும் பெரும் வாய்ப்பு உங்களுக்குக் கிடைத்திருக்கிறது இன்று. கவ்விப் பிடித்துக் கொள்ளுங்கள். இது கடைசி வாய்ப்பாகக் கூட இருக்கலாம்! வாழ்த்துக்கள்!

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம் - ஜெயகாந்தன்

நாத்திகம் - இன்னொரு மதம்!

வைகோ என்றோர் அரசியல் ஏமாளி