மடமும் அடமும்

பொன்னும் மணியும் ஒரு நல்ல நாகரீகமான - தப்பு செய்யப் பயப்படும் குடும்பத்தில் பல தன்மையான சகோதரர்களோடு பிறந்த சகோதரிகள். பொன் மூத்தவள். எனவே மணி இளையவள். பொன் மிகவும் நல்லவள். பயந்த சுபாவமுடையவள். யார் என்ன திட்டினாலும் வாங்கிக்கொண்டு பதிலுக்கு வம்பு பண்ணாதவள். எனவே, அவள் வைக்கிற குழம்புகளில் உப்பும் உரைப்பும் அதிகம் இருந்த போதிலும் மனதில் கொஞ்சம் சூடும் சொரணையும் குறைவு என்று பெயர் வாங்கியவள். சூடு சொரணையோடு வாழ்ந்தவர்களெல்லாம் என்னத்தை வாரிக் கொட்டி விட்டார்கள் என்று மனதில் தோன்றினாலும் அதை வாதிடக்கூட விரும்பாதவள். சொல்ல வேண்டியதே இல்லை - எந்த வீட்டில் என்ன நல்ல காரியம் ஆனாலும் கெட்ட காரியம் ஆனாலும் முதல் ஆளாக நின்று பரிமாறுவது முதல் இலை எடுப்பது வரை எல்லா வேலைகளையும் முன்னின்று பார்ப்பாள். எனவே, சொல்ல வேண்டியதே இல்லை - அவளை எல்லோருக்குமே பிடிக்கும். ஆனாலும் அவ்வப்போது சின்னச் சின்னக் கழுதைகள் கூட (சொந்தக்காரக் கழுதைகள்தாம்) அவளை மரியாதையில்லாமல் நடத்தி விடும். இறங்கி வருபவரை ஏற்றிக் காட்டும் பழக்கம்தான் நம் இனத்துக்கே கிடையாதே. யார் வீட்டில் என்ன துக்கமாக இருந்தாலும் அதைத் தன் சொந்தத் துக்கம் போல எண்ணிக் கதறி அழுவாள். அதை எல்லார் வீட்டிலும் செய்வதால் மிகவும் நெருக்கமானவர்களுக்கு அது நெருடலாக இருக்கும். எல்லாரிடமும் போலத்தானே நம்மிடமும் இருக்கிறாள் என்று கடுப்படிக்கும். சிலருக்குக் காமெடியாகக் கூட இருக்கும். இல்லை, அழுவதும் வேலை செய்வதும் இவளுக்கு மிகவும் பிடித்த வேலைகள் போல என்று எண்ணி விடுவோரும் உண்டு. வாக்கப்பட்டுப் போன வீட்டில் எல்லோரையும் தன் வீட்டார் போலவே மதிப்பாள். போன இடமும் நல்ல இடமாக இருந்ததால் அதற்கான மரியாதையும் கிடைத்தது. வாழ்க்கை முழுக்க நினைத்து சந்தோசப்படும் படியான ஒரு நல்ல விஷயம். பின்னர் பொருளாதாரப் பிரச்சனைகள் வந்து வாட்டியபோதெல்லாம் அண்ணன்மாரிடம் ஓடி வந்து உதவி பெறும் நிலையில் அவர்களும் இருந்ததால் வண்டி இழுப்பதற்கு மிகவும் சிரமப் படவில்லை.

மணியும் நல்லவள்தான். ஆனால் யாரும் எளிதில் இளிச்சவாய் ஆக்க முடியாத அளவுக்கு விவரமானவளும்கூட. விவரமாக இருந்து விட்டால் நல்ல பிள்ளையென்று எப்படிப் பெயரெடுக்க முடியும்? அதிகம் பய உணர்வுகள் இல்லாதவள். யாரும் பொழுது போகாவிட்டால் வந்து வம்பளந்து விட்டுப் போகிற அளவுக்கு ஈனா வானா இல்லை. அதற்கான வாய்ப்பே கொடுப்பதில்லை என்றாகிவிட்ட பிறகு அந்தக் குணாதிசயம் பற்றிப் பேசவே தேவையில்லை. நம்மை ஏதாவது வாட்டாமல் விட்டால் போதும் என்று விலகிப் போகத்தான் விரும்புவார்கள் வெட்டிக் கூட்டத்தார். சூடு சொரணையெல்லாம் கொஞ்சம் தேவைக்கும் கூடுதல். கறுவாட்டு உப்புப் போல. உப்பில்லாப் பண்டம் குப்பையிலே என்ற உறுதியான நம்பிக்கை கொண்டவள். அக்கா போல நல்ல பெயர் வாங்க முடியவில்லையே என்று என்றும் வருந்தியதில்லை. அக்கா இப்படி ஏமாளித்தனமாக இருக்கிறாளே என்றுதான் வருத்தப் பட்டிருக்கிறாள். அக்காவும்கூட தன்னால் ஏன் தன் தங்கச்சி போல விறைப்பாக இருக்க முடியவில்லை என்றுதான் வருந்தியிருக்கிறாள். வாரிக்கொட்டாவிட்டாலும் கொஞ்சம் தன்மானத்தோடு வாழலாமே என்று அது குறைவதை உணர முடிந்த நேரங்களில் மட்டும் தோன்றும். விறைப்பாக இருப்பவர்களுக்குக் கிடைக்கும் மரியாதைகள் யாவும் குறைவிலாமல் கிடைக்கும் மணிக்கு. பொன் விறைப்பின்மைக்காகக் கொடுத்த விலை மரியாதை என்றால், மணி விறைப்புக்காகப் பெற்ற பரிசுகள் பல சிரமங்களும் கஷ்டங்களும் அசௌகரியங்களும். போன வீட்டில் வாழ்க்கை குதூகலமாக இல்லை. முதன்மைப் பிரச்சனையாகப் பொருளாதாரச் சிக்கல்கள். பற்றாக்குறைக்கு மாமியார், நார்த்தனார் பிரச்சனைகள்.

"உங்க அக்கா மட்டும் அண்ணன்மார் வீட்டில் போய் அவ்வளவு அரிக்கிறாளே உனக்கு என்ன கஷ்டம்?" என்று மாமியாரின் அரிப்பு நாளுக்கு நாள் வலுத்தது. "இங்கேயே கிடந்து செத்தாலும் சாவேனே ஒழிய எந்தச் சூழ்நிலையிலும் போய் எங்க அண்ணன்மாரிடம் ஒரு பைசாக் காசு கேட்டு நிற்க மாட்டேன்" என்று பிடிவாதமாய் நின்றாள். கல்யாணம்னு பண்ணி வந்த பின்னாடி அப்பன் வீட்டில் போய் நிற்பது தன் கணவனுடைய ஆண்மைக்கே கேவலம் என்பது அவள் கருத்து. மூத்தவள் எதற்கெடுத்தாலும் போய் நிற்கிறாள். இளையவளோ எதற்குமே போக மாட்டேனென்று அடம் பிடிக்கிறாள். அவ்வப்போது கடன் என்ற பெயரில் வீட்டுக்காரரின் வியாபாரத்துக்குப் பணம் (அதைப் பயன் படுத்தி ஒருபோதும் வியாபாரத்தை வளர்த்தபாடில்லை; கடன் தான் வளர்ந்தது!)... எந்தப் பெயரும் இல்லாமல் பிள்ளைகளின் படிப்புச் செலவுக்குப் பணம்... மொத்தக் குடும்பத்துக்கும் ஒவ்வொரு திருநாளுக்கும் துணிமணிகள்... இப்படி எல்லா வசதிகளையும் அனுபவித்துக் கொண்டிருக்கிறாள் அக்காக்காரி. நம்பவே முடியாத மாதிரி, என்ன செய்தாலும் ஏன் எதற்கு என்று கேள்வியே கேட்காத தங்கமான மதினிமார் வேறு. யாராக இருந்தாலும் கேட்டால்தானே செய்வார்கள்? நம்ம பாட்டுக்கு நெஞ்சை விடைச்சுக்குட்டு அலைஞ்சா யார் வந்து வழிய உதவுவார்கள்? இந்தப் பிரச்சனை மாமியார் சாகும் வரை நடந்து கொண்டுதான் இருந்தது. மாமியார் செத்தது எப்போது? மணி பேரன் பேத்தி எடுத்தபின்பு! அப்போதும் அணத்திக்கொண்டுதான் இருந்தது. தன் பேத்தியாளின் திருமணச் செலவுக்கு "உங்க அண்ணமார் நல்லாப் பிழைக்கிறாங்கல்ல... போய்க் கேளு..." என்று பிரச்சனை பண்ணும் அளவுக்கு விடாமுயற்சியும் நம்பிக்கையும் கொண்ட மாமியார்.

வாழ்க்கை முழுக்க இந்தப் பிரச்சனை துரத்தியபோதும் பிடிவாதமாக மணி தன் நிலைப்பாட்டில் ஊன்றி நின்று விட்ட போதிலும் இடையில் சில மிக இக்கட்டான தருணங்களில் தன் மாமியார் தவிர்த்து மற்ற பல பேருடைய பேச்சுக்கும் கோபத்துக்கும் ஆளாக நேரிட்டது பெரும் வருத்தம்தான். அவற்றுள் முதன்மையானது அவள் உடல் நிலை பாதிக்கப் பட்டு ஆஸ்பத்திரியில் கிடந்தபோது நிகழ்ந்தது. ஆப்பரேஷன் பண்ண ஒரு லட்ச ரூபாய் ஆகும் என்கிறார் டாக்டர். கையில் அந்த அளவுக்குப் பணம் இல்லை. அண்ணன்மார் எல்லோரும் வந்து பார்த்தார்கள். "செலவுக்குப் பணம் இருக்கிறதா?" என்றும் கேட்டார்கள். ஆனால் இவள் அதெல்லாம் வேண்டாம் என்று கூறிவிட்டாள். "இருக்கிற காசில் என்ன முடியுதோ அதைப் பார்த்துக் கொள்வோம்" என்று உடும்பாய்த் தொங்குகிறாள். மாமியார் பொருமியது. "என் மகன் தேவைக்குக் கேட்க மாட்டேன்ன... சரி. உன் பிள்ளைக படிப்புக்குக் கேட்க மாட்டேன்ன... சரி. இப்ப நீ சாகக் கிடக்கிறியே... இப்பவுமா கேட்க மாட்ட?" என்று இதற்கு முன்பு தான் கேட்டதெல்லாம் தவறு என்று உணர்ந்து விட்டது போலப் பேசியது. "இப்படியுமா ஒரு பொம்பள இருப்பா உலகத்துல? தன் அண்ணன்மார் நல்லா இருக்கணும்... புருசன் நாசமாப் போகணும்னு நினைச்சுக்கிட்டு...?!" என்று வருவோர் போவோரிடமெல்லாம் முறையிட்டுப் புலம்பியது. இந்த ஓட்டை ரிக்கார்டைக் கேட்பதிலேயே உடம்பு இன்னும் மோசமாகி விடும் போல இருந்தது அவளுக்கு. சண்டை போடவும் தெம்பில்லை. கேட்டுக் கொண்டே இருக்கவும் பொறுமையில்லை. "உனக்கு வைத்தியம் பாக்கிறதிலேயே எல்லாத்தையும் இழந்துட்டு என் மகன் நடுத் தெருவுக்கு வந்துருவான் போல. கொஞ்சமாவது நல்லெண்ணம் இருக்கணும்" என்று அடி மேல அடி கொடுத்துக் கொண்டு இருந்தது. வந்த நாள் முதல் வாழ்க்கை இப்படித்தான் போகிறதென்றாலும் இதுதான் உச்ச கட்ட சோதனைக் காலம் போல்ப் பட்டது. "மணி போல வருமா?" என்று அவளுடைய வாழ்க்கை முறையைப் பார்த்துப் பெருமைப்பட்டவர்கள்கூட "இவள் ஏன் இப்படி வீண் வீராப்பு காட்டிக்கொண்டிருக்கிறாள்?" என்று கடிந்து கொள்ள ஆரம்பித்து விட்டார்கள். "இப்படியே போனால், போய்ச் சேர்ந்து விடுவாள். அதன் பிறகு இந்த வீராப்பை வைத்துக் கொண்டு விறகு கூட வாங்க முடியாது" என்று மணியடிக்கத் தொடங்கி விட்டார்கள். ஆனாலும் அவள் இறங்கி வருகிற மாதிரித் தெரியவில்லை. உடல்நிலையில் பெரிதாக முன்னேற்றம் உண்டாகவில்லையென்ற போதிலும் ஆளுக்கு ஒன்றும் ஆகவில்லை. நல்ல வேளை.

ஒரு புறம் பொன் எந்தக் கூச்சமுமில்லாமல் வேண்டிய உதவிகளைப் பெற்றுக் கொண்டு ஓரளவு நிம்மதியாகப் பிழைப்பை நகர்த்தினாள்.கொஞ்ச நாட்களில் அவளுடைய பிள்ளைகள் பெரிய ஆட்கள் ஆனார்கள். சம்பாதிக்க ஆரம்பித்தார்கள். குடும்ப நிலவரமும் கொஞ்ச கொஞ்சமாக முன்னேறத் தொடங்கியது. அவளுக்கும் அவளுடைய பிள்ளைகளுக்கும் தாங்கள் முன்னுக்கு வர உதவிய தன் அண்ணன்/மாமா மார் மீது அளவிலாத நன்றியுணர்வு. அண்ணன்/மாமா மாருக்கும் தாங்கள் உதவியது வீண் போகவில்லை என்ற திருப்தி. முடிந்த அளவு திருப்பிக் கொடுக்க முடிந்ததைக் கொஞ்சம் கொஞ்சமாகக் கொடுத்தார்கள். காலத்தால் செய்த உதவி அளவு சரியாகத் திருப்பிக் கொடுப்பதன் மூலமோ வட்டியோடு திருப்பிக் கொடுத்தலின் மூலமோ ஒருபோதும் திருப்பிக் கொடுத்ததாகாது. கடன் அடைக்கப் பட்ட பின்னும் நன்றி என்ற பெயரில் அது காலம் முழுக்க வராக்கடனாகவே வைக்கப்பட்டிருக்கும். அதற்குப் பல மடங்கு பெரிய கைம்மாறுகள் செய்தாலும் எந்த நேரத்திலும் எவருடைய கேள்விக்கும் ஆளாகலாம் என்ற அரைகுறை நிம்மதியுடனேயேதான் நீண்டு கொண்டிருக்கும். இதற்குப் பயந்து கொண்டுதான் மணி தலையை உலுக்கிக் கொண்டிருக்கிறாள் என்பது சிற்சிலருக்கு ஓரளவுக்குப் புரிந்தாலும் எவருக்கும் முழுமையாகப் புரிந்திருக்குமா என்று புரியவில்லை. இவ்வளவும் யோசித்துத்தான் அவள் அப்படிப் பிடிவாதம் செய்கிறாளா அல்லது இது இயற்கையாகவே சிலருக்கு மட்டும் அமைந்து விடுகிற தனி மனிதக் குணாதிசயமா என்றும் புரிந்து கொள்ள முடியவில்லை. ஆனாலும் ஓர் உயிரையோ வாழ்க்கையையோ விலையாகக் கொடுக்கும் அளவுக்கு அது ஓர் உயரிய நற்குணமா இது என்பதுதான் இப்போதைய கேள்வி. அவரவர்க்கு முடிகிற காலங்களில் முடியாதவர்க்கு உதவுவதும் பின்னர் பதிலுதவி பெற்றுக் கொள்வதும்தானே இந்த உலகத்தின் நியதி. அதுகூட இல்லையென்றால் இந்த உலகத்தில் இத்தனை கோடிப் பேர் கூடி வாழ்வதில் என்ன பயன்? ஒவ்வொரு மனிதனும் ஒவ்வொரு வேற்றுக்கிரகத்தில் வாழ்வது போலல்லவா ஆகிவிடும்?

அடுத்த சிக்கல் வந்தது மணியின் மகன் படிப்புச் செலவுக்குச் சிக்கல் வந்த போது வந்தது. மூத்தவள் பிள்ளைகளெல்லாம் மாமமார் புண்ணியத்தில் முன்னுக்கு வந்து விட்டார்கள். தேவைப்படும் நேரங்களில் உதவி கேட்கத் தயங்காதவர்களுக்குத்தான் வெற்றி எளிதில் கிட்டுகிறது என்பதற்கு வாழும் சாட்சிகளாக அக்கா பிள்ளைகள் இருந்தபோதும் அந்த வெற்றி தன் பிள்ளைகளுக்கு வேண்டாமென்று உறுதியாய் நின்றாள். இவளும் அப்படியே இறங்கிப் போனால் - "இந்த உதவி தேவைப்படுகிறது" என்று ஒரு வார்த்தை சொன்னால் போதும். அள்ளிக்கொடுக்க ஆள் இருக்கிறது. ஆனால் அவளுக்கு அது வேண்டாம். "அவள் கேட்கட்டும்; நான் செய்கிறேன்" என்று செய்வோரும் விட்டுப் பிடித்தார்கள். இந்த முறை மாமியாரின் பாட்டில் ஒரு சிறிய மாற்றம் - "என் மகன் தேவைக்குக் கேட்க மாட்டேன்ன... சரி. உன் உயிரைக் காப்பாத்தக் கேட்க மாட்டேன்ன... சரி. இப்ப உன் பிள்ளை வாழ்க்கையே கேள்விக்குறியா இருக்கு... இப்பவுமா கேட்க மாட்ட? ஒரு பையனின் வாழ்க்கையைக் கெடுத்த பாவம் உன்னைச் சும்மா விடாது". "ஒரு விவரமும் இல்லாத பெரியம்மா கையில் ஒரு பைசாக் காசில்லாமல் தன் பிள்ளைகளைப் படித்துப் பெரியாட்களாக்கி விட்டது. நீ ஏம்மா இவ்வளவு விவரமான ஆளா இருந்தும் எங்க வாழ்க்கையை இப்படி நாசம் பண்ணிட்ட?" என்று நாளைக்கு நம்ம பிள்ளைகளே கேட்டு விடுவார்களோ என்ற பயம் ஒரு பக்கம் வரத்தொடங்கி விட்டது.

'வங்கியில் கடன் வாங்கிப் படிக்க வைக்கிறார்களே, அது போல இதுவும் ஓர் உதவித்தொகை, அவ்வளவுதானே. ஒரு குறிப்பிட்ட காரணத்தோடும் கண்டிப்பாகத் திருப்பிக் கொடுத்து விடும் எண்ணத்தோடும்தானே வாங்கப்போகிறோம். அதனால் தப்பில்லை என்றொரு முடிவுக்கு வந்தாள். சொந்த அண்ணனிடம் வாங்குவது வங்கியில் வாங்குவதை விட எந்த வகையிலும் தப்பானதில்லை என்று எல்லோரும் போல சராசரித் தத்துவத் தளத்துக்கு வந்தாள். தான் தன் மானம் என்று இத்தனை நாளும் நினைத்துப் பெருமைப் பட்டுக் கொண்டதெல்லாம் எல்லாரும் சொல்வது போல பிடிவாதம் - மண்டைக்கணம் - திமிர் போன்ற வார்த்தைகளுக்கு நானே கொடுத்துக் கொண்ட புனை பெயரோ? இதுவும் கூட சரி தப்புகளுக்கு அப்பாற்பட்டு சுய பெருமைக்கு அடிமைப்பட்டுப் பிறரையும் அதற்காகக் காவு கொடுக்கிற ஈனப்புத்தியோ? என்னுடைய கர்வத்தால் என் பிள்ளைகளல்லவா நாசமாகப் போகிறார்கள்! அது மட்டுமா, அவர்களுடைய பிள்ளைகளும் அதன் பின் அவர்களுடைய பிள்ளைகளும்கூட பாதிக்கப்பட வாய்ப்பு வளர்க்கும் குணமல்லவா இது? இன்னும் பதினைந்து நாட்களுக்குள் தயார் பண்ண வேண்டும். இல்லையேல் பையன் இஞ்சினியர் ஆவது பழைய கனவாகி விடும். எல்லோரையும் போல ஆசைக்குச் சொல்லிப் பார்த்துக் கொண்ட இன்னுமொரு இயலாத அம்மாவாகி விடுவேன். சாகும் வரை தன்மானத்தோடு இருந்து தங்களையும் பட்டினி போட்டுக் கொன்ற அம்மாவாகப் பார்க்கப் படாமல் தான் தலை கவிழ்ந்தாவது தன் பிள்ளைகளை முன்னுக்குக் கொண்டு வந்த தியாகத் தாயாகப் பார்க்கப் பட வேண்டும். என்ன ஆனாலும் பரவாயில்லை. எப்படி ஆரம்பிப்பது - பேசுவது - கேட்பது - வாங்கி வருவது என்ற எது பற்றியும் கவலைப் படக் கூடாது. இன்று இரவு கிளம்பிப் போக வேண்டியது - அண்ணன் வீட்டில் நன்றாகத் தூங்கி விட்டு, நாளை காலை எழுந்து அண்ணன் நல்ல மன நிலையில் இருக்கும் போது பேச்சைத் தொடங்கினால் - தொடங்கினாலே போதும், கேட்கும் முன்பே புரிந்து கொண்டு அண்ணன் கை நிறையப் பணத்தை அள்ளிக் கொடுத்து அனுப்பி விடும். இப்போதைக்கு நிறைய யோசிக்க வேண்டாம்' என்றொரு முடிவுக்கு வந்தாள். இதில் இன்னொரு போனஸ் - இந்த மாமியாரம்மா வாயை அடைத்து விடலாம் இத்தோடு. அதுவும் வேறு ஏதாவது புதிய பிரச்சனை ஒன்றைக் கண்டு பிடிக்க வேண்டி இருக்கும். காவிரிப் பிரச்சனை போல வந்த நாள் முதல் எவ்வளவு நாட்களுக்குத்தான் ஒரே பிரச்சனையை மையமாக வைத்து அரசியல் பண்ணிச் சலித்துப் போயிருக்கும் மனுசி.

மாலை நேரம் வந்ததும் மண்டை குடைச்சலெடுக்க ஆரம்பித்தது. இருட்ட இருட்ட கண்ணெல்லாம் இருண்டது. எப்படித்தான் போய் ஆரம்பிப்பதோ என்ற வயிற்றுலைச்சல். 'மகனை உடன் அழைத்துச் செல்வதா வேண்டாமா? அழைத்துச் சென்றால் வந்த காரியம் என்ன என்பது வரவேற்பவர்களுக்குப் புரிந்து கொள்ள வசதியாக இருக்கும். வந்திருப்பதின் நியாயமும் கட்டாயமும் அழுத்தமாகச் சொல்லப்படும். உதவ வேண்டியதன் முக்கியத்துவத்தையும் உணர்த்துவதாகவும் இருக்கும். அவனுக்கும் நிலைமை நன்றாகப் புரியும். ஆனால் நான் மட்டும் போய் விட்டு வந்தால் நான் மட்டுமே கடனாளியாக இருந்து விட்டுப் போய்விடலாம். அவனையும் அழைத்துச் சென்றால் காலம் முழுக்க அவனும் கடனாளிப் பாரத்தோடே அலைய வேண்டும். அதற்கு இப்படி ஓர் உதவியே செய்திருக்க வேண்டாம் அம்மா என்று எண்ணி விடவும் கூடும். அண்ணன் பிள்ளைகளைப் பார்க்கும் போது 'உங்கப்பா பணக்காரர் எங்கப்பா ஓட்டாண்டி' என்றொரு சிந்தனை வந்து விடவும் கூடாது. அல்லது அவர்களுடைய பிள்ளைகளுக்கு நம்ம பிள்ளையைப் பார்த்து அப்படி ஏதும் தோன்றி விடக் கூடாது. இதெல்லாம் ஆயிரங்காலத்துக் களை. தியாகம் செய்கிறேன் என்றெண்ணிக் கொண்டு அதற்கான விதையை நானே தூவி விட்டுப் போய் விடக் கூடாது. 'ஒவ்வொரு முறையும் தோல்ப்பையைத் தோளில் மாட்டிக் கொண்டு பிள்ளைகளைப் பற்றிக் கொண்டு காசு வாங்க வரும் போதும் இவ்வளவையும் அக்கா யோசிப்பாளா?' என்றொரு சிந்தனை வேறு வந்து சென்றது இடையில். 'அப்படியெல்லாம் யோசித்திருந்தால் பிள்ளைகளை எப்படி இஞ்சினியிர்களாக்கியிருக்க முடியும்?'

எல்லாக் குழப்பங்களுக்கும் பின்னால் ஒரு தீர்க்கமான முடிவுக்கு வந்தாள். 'எல்லோரும் சொல்வது போல இப்படி எல்லாத்தையும் தேவைக்கு அதிகமாகக் கலங்கலாக்கி மண்ணாப் போவதுதான் என் பிரச்சனை போல. இந்தந்தப் பிரச்சனைக்கு இவ்வளவுதான் யோசிக்க வேண்டும் என்று வரையரையில்லாமல் யோசித்தால் ஆம்பளையா இருந்தாலும் பொம்பளையா இருந்தாலும் மண்டையில இருக்கிற மயிர் மட்டும்தான் உதிரும். பிழைப்பு செழிப்பாக இராது. ஒன்னுமே பண்ண முடியாதவங்க வேலைதான் இந்த அளவுக்கதிகமான பேச்சு - யோசனை எல்லாமோ! பேசாமல் அவனையும் கூட்டிட்டுப் போயிர வேண்டியதுதான். என்ன இருந்தாலும் கூட ஓர் ஆளைத் துணைக்கு அழைத்துச் செல்வது என்பது தனியாகப் போவதைவிடப் பல மடங்கு பலம் கொடுக்கிற அதிசயமான விஷயம். அது நேற்றுப் பிறந்த குழந்தையாகக் கூட இருப்பினும். அதுவும் முதல் முறை தப்பு செய்பவர்களுக்குக் கண்டிப்பாக ஆள்த்துணை அவசியம்.

விளக்குப் போட்டதும் இருட்டு வேலையைக் காட்ட ஆரம்பித்தது. தயக்கம் மாலைக்குள் ஒளிந்து மயக்கமானது. "தம்பி, நாளைக்குக் காலையில நம்ம ரெண்டு பேருமாக் கிளம்பி மாமா வீட்டுக்குப் போய்ட்டு வந்துருவம்டா" என்று அருவமில்லாமல் அவள் காதுக்கே கேட்காத படிக்குத் தம்பியின் துணையோடு தள்ளிப் போட்டாள் பிரயாணத்தை. பாதைப் பழக்கத்தில் சரியாக வீடு திரும்புகிற மாடு மாதிரி அனிச்சையாகவே அனைத்து வேலைகளையும் செய்து முடித்தாள். அன்றைய பொழுது கழிந்தது. வாழ்க்கையில் மிக முக்கியமான ஒரு முடிவெடுத்த நாள். அவளைப் பொருத்த மட்டில் அண்ணா தனி நாடு கொள்கையைக் கை விட்ட நாள் தமிழ்நாட்டுக்குக் கொண்டு வந்த திருப்பத்தை விடப் பெரிய திருப்பத்தைத் தன் வாழ்க்கைக்குக் கொண்டு வரப் போகும் நாள். முடிவெடுக்கிற நாட்கள் வேகமாக ஓடி விடும். செயல்படுத்துகிற நாட்கள்தாம் வரவே செய்யாமல் வம்பு பண்ணித் தொலைக்கும். இரவெல்லாம் புரண்டு புரண்டு படுத்ததில் அழுக்குப் போர்வைக்குத்தான் அலுத்தது. அவள் சளைக்காமல் யோசித்தாள். இந்தச் சிக்கலிலிருந்து எப்படித் தப்புவது???

திருமணத்துக்குப் பின்பு இப்போதுதான் இப்படியொரு சிக்கலில் சிக்கியிருக்கிறாள். எப்படியொரு சிக்கல்? சில நிமிடங்களில் முடிந்து விடப் போகிற ஒரு விஷயம் பற்றி இரவெல்லாம் தூக்கமில்லாமல் சிந்திக்கிற சிந்தனைச் சிக்கல். ஆனால் ஒரு சின்ன வேறுபாடு. அப்போதையது முடிவிலா இன்பங்களின் துவக்கமென்றெண்ணிக் களித்த இன்பச் சிக்கல். முடிந்தபின்தான் தெரிந்தது அது அப்படியல்ல என்பது. இப்போதையது முடிவிலாத் துன்பங்களின் முடிவு வரப் போகிறது என்பதை எண்ணிக் களிக்க முடியாமல் அதை எப்படிக் கடக்கப் போகிறோம் என்று எண்ணிக் கவலைப் பட்டுக் கொண்டிருக்கிற துன்பச் சிக்கல். அதற்காகவாவது நாளை எல்லாம் நல்லபடி நடந்து முடியும் என்றொரு நம்பிக்கை. களிப்பவன் நரகத்துக்குப் போவதும் கஷ்டப்படுபவன் சொர்க்கத்துக்குப் போவதும் தானே நம்ம கதைகளின்படி நியாயம். அதுவும் நம்ம தாய்மார்கள் சொர்க்கத்துக்குப் போயே ஆக வேண்டுமென்ற ஒரே குறிக்கோளோடு கஷ்டப்படுவதையே இஷ்டப்பட்டு ஏற்றுக் கொண்டவர்கள்.

சூரியன் உதிக்கும் முன் திடீரென்று ஒரு திட்டம் உதித்தது. விடிந்தால் செவ்வாய்க் கிழமை. விடியாமலே கூடக் கொஞ்ச நேரம் நீடித்தால் நன்றாகத்தானிருக்கும். நல்ல வேளை புதன் கிழமை இல்லை. இருந்திருந்தால் "நல்ல நாள்... பொண்ணு கிடைத்தாலும் புதன் கிடைக்காது" என்று சொல்லிக் கொண்டு அண்ணன் வீட்டுக்குக் கிளம்ப வேண்டியதாகியிருக்கும். ஆக, விடிந்தால் செவ்வாய்க் கிழமையாக இருப்பதால், செவ்வாய்க் கிழமை வேலை நாளாக இருப்பதால், ஞாயிற்றுக் கிழமை போகலாம்ம்ம். மகன் சேரப் போகிற கல்லூரியில் செவ்வாய்க் கிழமை வேலை நாளாக இருக்கலாம் என்பதைத் தவிர இப்போதைக்குச் செவ்வாய்க் கிழமை என்பது பற்றி அவள் கவலைப்படுவது அர்த்தமேயில்லாதது. அவள் வேலைக்குப் போகிற வேலை இல்லாத வீட்டு மனைவி. வேலைக்குப் போகிற வீட்டுக்காரரோ (வாடகை வீட்டில் தான் இருக்கிறார்கள்) அண்ணன் வீட்டுக்கு வந்து சம்மணம் போட்டுச் சாப்பிட்டு விட்டுக் கை நீட்டிக் காசு வாங்கப் போவதில்லை. அண்ணனும் ஆஃபீஸ் போகிறவரில்லை. அல்லது ஞாயிற்றுக் கிழமை ஆனால் வீட்டை விட்டே வெளியில் போகாமல் ஓய்வு எடுப்பவருமில்லை. அப்துல் காதரின் அமாவாசை ஆர்வத்துக்குக் கூட அர்த்தமிருக்கிறது. ஆகவே இந்த அம்மாவின் செவ்வாய்க் கிழமைக்கும் ஏதாவதொரு காரணமிருக்கக் கூடும். மீண்டுமொரு தள்ளிவைப்பு!!! அவளையே அவள் மனசு ஏமாற்றிக் கொண்டிருப்பது அவளுக்குப் புரியவில்லை.

வராமலேயா போய்விடப் போகிறது ஞாயிற்றுக் கிழமை? அதுவும் வந்தது. திரும்பவும் தலை சுற்றுகிறது - சுடுகிறது - வலிக்கிறது. எப்படித் தப்புவது??? உலகியல் நியாயங்கள் எல்லாம் ஒப்புக் கொண்டாகி விட்டது. ஆனாலும் ஏதோ இடிக்கிறது - தடுக்கிறது. பிள்ளை படிப்பும் முக்கியம். கோட்டைச் சுவரைத் தாண்டவும் முடியவில்லை. "வங்கிக் கடனை விட அண்ணங்கிட்ட வாங்குற கடன் தப்பா?" என்ற கேள்வி புரண்டு படுத்தது. 'அண்ணங்கிட்டப் போய் நிக்கிறதுக்கு முன்னாடி வங்கியில் கேட்டுப் பார்த்துரலாமே?!' ஞாயிற்றுக் கிழமை வழக்கத்தை விட மெதுவாகவும் இந்த வாரம் எதிர் பார்த்திருந்ததை விட வேகமாகவும் ஓடியது.

மறுநாள் காலை வங்கிக்குப் போனார்கள். தாயும் மகனும். ஒரு வார அலைச்சலுக்குப் பிறகு மகனுக்குக் கிடைக்க வேண்டிய எல்லாம் கிடைத்தது. கிடைத்திருக்கக் கூடாத எதுவும் கிடைக்க வில்லை. அலைச்சல் உளைச்சலைக் கொடுக்க வில்லை.

அடுத்த காட்சி - பத்துப் பதினைந்து ஆண்டுகட்குப் பிந்தையது. மடம் பிடித்த பொன்னின் மணிகளெல்லாம் அன்னியப் பெண்களைக் கட்டிக் கொண்டு மாமமார் வீட்டுப் பக்கமே தலை காட்ட முடியாமல் தூற்றப்பட்ட புழுதியில் மறைந்து வாழ்ந்து கொண்டிருந்தார்கள். அடம் பிடித்த மணியின் பொற்களெல்லாம் அன்னியப் பெண்களைத்தான்... கட்டிக் கொண்டு மாமமார் வீட்டு விருந்துக்கு வந்து போய்க்கொண்டு இருந்தார்கள்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

சாம, தான, பேத, தண்டம்

உயர் தனிச் செம்மொழி?!

யுவால் நோவா ஹராரி: “21-ஆம் நூற்றாண்டுக்கான 21 பாடங்கள்” | கூகுள் உரையாடல்கள்