தமிழ்நாடு: நல்லவை 10!

நம்மைப் போன்று ஓரளவு படித்து, தொழில்நுட்பத் துறையில் நுழைந்து, அனுதினமும் பாதி நேரம் ஆங்கிலத்தில் பேசிக்கொண்டு, மீதி நேரத்தில் தாய்மொழியையும் விட்டு விடாமல் தமிழில் வாதித்தும் வாசித்தும் கொண்டும் இருக்கிற இளைய தலைமுறையினருக்கு சுஜாதா ஒரு முக்கியமான எழுத்தாளர். அது மட்டுமில்லை. கண்டிப்பாக ஞான பீட விருது கிடைக்கப் பெற்றிருக்க வேண்டிய தமிழ் எழுத்தாளர் அவர் என்பது என் கருத்து. நம்மைப் போன்ற வாழ்க்கை முறை கொண்டிருந்தவர் என்பதால் அவர் மீதான நம் ஈர்ப்பைத் தவிர்க்க முடிவதில்லை. அவருடைய மொழியும் நம்முடையதைப் போல நிறைய அறிவியலும் ஆங்கில வாசிப்பின் தாக்கமும் நகைச்சுவை உணர்வும் நக்கலும் நிறைந்து இருப்பதால் நம் இனத்தவராகவே நாம் அவரைப் பார்க்கிறோம். எழுத்துலக அறிவாளர் பலர் அவரைக் கடுமையாக விமர்சிப்பதையும் வெறுப்பதையும் கண்டு புரியாமல் விழித்திருக்கிறேன். வாசிப்பின் ஆரம்ப கட்டத்தில் இருக்கிற நாம் அதில் பல கரைகள் கண்டு விட்ட அவர்களுடைய சிந்தனை அடுக்கை அடையப் பல காலம் ஆகும் என்பதால், அவர்கள் வெறுக்கும் ஒரே காரணத்துக்காக நாமும் அவரை வெறுக்க வேண்டியதில்லை என்பதை உணர்ந்து அதுவரை அவரையும் அவர் எழுத்தையும் நாம் காதலிப்போம்.

முழுமையாக அவருடைய புத்தகம் எதுவும் படித்ததில்லை. ஆனால், அவர் ஆனந்த விகடனில் ‘கற்றதும் பெற்றதும்’ எழுதிக் கொண்டிருந்த காலத்தில் சில வாரங்கள் அவற்றைப் படித்து அளவிலாத மகிழ்ச்சி அடைந்திருக்கிறேன். அப்படி இரு வாரங்கள் அவர் தமிழ் நாட்டில் தனக்குப் பிடித்த மற்றும் பிடிக்காத பத்து விஷயங்கள் பற்றி எழுதியிருந்தார். அதில் அவருடைய பெருமைகள், பெருமிதங்கள், மகிழ்ச்சிகள், பெருமூச்சுகள், ஆசைகள், ஏக்கங்கள், இயலாமைகள், கோபங்கள் எனப் பல வித உணர்வுகள் நேரடியாகவும் மறைமுகமாகமும் வெளிப்பட்டிருந்தன. அது போலவே எனக்கும் பல உணர்வுகள் உண்டு. அவற்றைப் பற்றி எழுதலாமே எனத் தோன்றியது. ஒரு சில (மிகச் சில) முக்கியமானவை தவிர்த்து அவர் சொன்ன விஷயங்கள் எதுவும் சரியாக நினைவில்லை. எனவே, அதே பழைய உணவைச் சூடு பண்ணிக் கொடுக்கும் திட்டமில்லை. ஒரு வேளை ஏதாவது ஒற்றுமைகள் இருந்தால் அவை முழுக்க முழுக்க தற்செயலானவையே.

கண்டிப்பாகச் சொல்லியாக வேண்டிய மற்றொரு கருத்து என்னவென்றால், இதில் சொல்லப்படுகிற எல்லாக் கருத்துகளும் ஒட்டு மொத்தத் தமிழினத்துக்கும் சரியாகாது. விதி விலக்குகள் எல்லா விதிகளிலும் உண்டு. எனவே, நாம் பேசப்போவதனைத்தும் சராசரித் தமிழனை மனதில் வைத்தே. நம்ம ஊர்க்காரன் யாரோ ஒருத்தன் செய்கிற தப்பை வைத்து நம் ஒட்டு மொத்த இனத்தையே இழிவாகப் பேசுகிற சிலரைக் கண்டால் பல் உதிர்கிற அளவுக்கு - வாயில் ரத்தம் வருகிற மாதிரி – ஒரு குத்துக் குத்தலாம் என்றுதான் தோன்றும். எனவே, தனி மனிதப் பண்புகளை அவர் சார்ந்த இனத்தினுடையதாகப் பேசுவது அவ்வளவு நல்ல பழக்கமில்லை. அதே வேளை, ஒரு சில நல்ல விஷயங்களும் கெட்ட குணங்களும் தன்னுடையதல்ல; தான் சார்ந்த – பிறந்து வளர்ந்த – மண்ணின் மற்றும் அங்குள்ள மனிதர்களின் நிறைகுறைபாடுகள் என்பதை உணர்தல் அவற்றை வேறு விதமாகக் கையாள உதவுமென நம்புகிறேன். பார்க்கலாம்.

தமிழனாகப் பிறந்ததற்காகப் பூரித்துப் புளகாங்கிதம் அடையும் பத்து விஷயங்கள்:

1. நம் மொழி: 
தன்னை ஒரு சிங்கம் போல நினைத்துக் கொண்டு மிடுக்கு நடை போடும் – ஆனால் சில சுயநல ஆதாயங்களுக்காக ஆளும் வர்க்கத்துக்கு சிங்கி அடிக்கிற கவிஞர் ஒருமுறை சொன்னார், “உலகில் இருக்கிற எல்லா மொழிகளும் அழிந்து விடும். கடைசியில் ஓர் அறுபது மொழிகள் மட்டும் உயிரோடிருக்கும். அதில் ஒன்று நம் தமிழாக இருக்கும்” என்று. அவருடைய சிங்கி அடிக்கும் தொழில் எனக்குப் பிடிக்காதென்றாலும் அவர் எழுத்தும் பேச்சும் நிறையப் பிடிக்கும் எனக்கும் (ஆளைப் பிடிக்காவிட்டாலும் எழுத்தைப் பிடிப்பதொன்றும் பெரும் குற்றமில்லை என நினைக்கிறேன்). இந்தக் கருத்தும் அப்படித்தான். அது உண்மையாகும் போல்தான் தெரிகிறது. அப்படியான ஆர்வம் நம் மொழி மீது நம்மிடம் காலங்காலமாக இருந்து வருகிறது. அது மேலோட்டமாகப் பார்த்தால் குறைவது போலத் தெரிந்தாலும், மற்றவர்களைப் பார்க்கிலும் நாம் பல மடங்கு பரவாயில்லை என்றுதான் வெளியில் வந்து பார்த்த பின்பு படுகிறது. அதன் பழமை, எளிமை, இலக்கண பலம், இலக்கியச் செறிவு, வாசகர் சந்தை (எல்லாமே இப்போது சந்தைதான்), விழுந்து விழுந்து எல்லாச் சொற்களையும் மொழி பெயர்க்கிற வேட்கை... இத்தோடு திரைப்பட வசனங்களையும் கூடச் சேர்த்துக் கொள்ளலாம். படிக்கிற பழக்கம் நாடெங்கும் குறைகிறது என்றாலும், தமிழ் நாட்டில் பரவாயில்லை என்றுதான் சொல்ல வேண்டும். நாளேடுகளும் வார இதழ்களும் ஏனைய பிற பத்திரிகை வடிவங்களும் இங்கு போல் எங்கும் விற்பனை ஆவதில்லை. காதலிக்காகவாவது – பைத்தியக்காரத்தனமாகவாவது – தாய் மொழியில் கவிதை எழுதும் பழக்கம் தமிழ் நாட்டில்தான் அதிகம் உள்ளது. கல்லூரியில் கவிதைப் போட்டி வைக்கப்பட்டபோது வந்திருந்த கூட்டத்தைப் பார்த்து மலைத்துப் போய் விட்டேன். இன்று இணையத்தில் நுழைந்தால் இந்திய மொழிகளிலேயே அதிகம் இருப்பது நம் தாய்த்தமிழே! அதற்கு ஈழத்தமிழரும் முக்கியக் காரணம் எனினும், மொத்தத்தில் இவற்றையெல்லாம் பார்க்கையில் மெல்லத்தான் தமிழினிச் சாகும் என்றே படுகிறது.

2. நம் வரலாறு: 
ஒரு இனத்துக்கென்று தனி வரலாறு இருக்க வேண்டியது எவ்வளவு அவசியம் என்பதில் எனக்கு இன்னமும் தெளிவான சிந்தனை கிடைத்த பாடில்லை. என்றைக்கு ஒருத்தன் தனக்கென்று தனி வரலாறு இருக்கிறது என்று சொல்லிக் கொண்டு வருகிறானோ அன்றைக்கே ஏற்றத்தாழ்வுக்கு இலை போட்டுவிட்டதாகிவிடுகிறது. அதே நேரம், அப்படி நல்ல வரலாற்றைக் கொண்டு வருகிற சிலர் அந்த ஒரே காரணத்துக்காக தவறு செய்ய யோசிப்பதைப் பார்க்கும் போது, தவறு செய்ய முனையும் ஒருத்தனுடைய கையைக் கட்டிப் போட உதவும் ஒரு நல்ல கயிறாக இருக்க முடியுமானால் வரலாறு நல்லதுதான் என்றே படுகிறது. அது போலவே, சமீபத்தில் நல்லவர் எம். எஸ். உதய மூர்த்தியின் நூலொன்று படிக்கும் போது அவர் சொல்லி உணர்ந்த ஒரு விசயம் – அது போல வரலாறு பற்றிப் பேசுவதன் மூலம் தாம் ஒன்றுக்கும் லாயக்கில்லாத உருப்படாத கூட்டம் என நினைக்கிற ஓர் இனத்துக்கு அளவிலாத நம்பிக்கை கொடுக்க முடியும் என்பது. ஆனால், அப்படிப் பட்ட வரலாற்றின் பின் ஒளிந்து கொண்டு அனைத்து விதமான மொள்ளமாரித்தனங்களும் செய்கிறவர்களையும் பார்க்கத்தான் செய்கிறோம். எப்படியிருப்பினும் நமக்கென்று ஒரு வரலாறு இருக்கிறது. அது மற்ற பிறருடையதைவிட பலமானதாகவும் பெருமைப் படத்தக்கதாகவும் உள்ளது.

கடைக்கோடியில் இருந்ததாலோ என்னவோ படையெடுத்து வந்தோரெல்லாம் மற்றவர்களிடம் செய்தது போல பெரிதளவில் நம்மிடம் சேட்டைகள் செய்ய முடிந்ததில்லை. நம் மொழியையும் நம்பிக்கைகளையும் சிதைத்தார்களே ஒழிய அழிக்க முடியவில்லை. இன்றும் ஏதோ ஒரு படிவத்தில் அவை வாழ்ந்து கொண்டிருக்கின்றன. உலக வரைபடத்தில் தெளிவாகத் தெரியுமளவுக்கு ஒரு கோடு போட்டுக் காட்டுமளவுக்கு ஒரு பெரும்பகுதியை நம்மன்னர்கள் இராஜராஜனும் இராஜேந்திரனும் வென்றுவந்தார்கள் என்பது பெருமையாகத்தான் இருக்கிறது. மனித உரிமைக் கருத்துகள் பரவியிராத காலம் என்பதால் – மண்ணாசை பிடித்தலைதல் ஒன்றும் பெரிய பெருமிதத்துக்குரிய பண்பாடில்லை என்கிற முதிர்ச்சி வந்திராத காலம் என்பதால், எத்தனை உயிர்களைக் கொன்று இப்படிப்பட்ட சாதனைகள் எல்லாம் செய்தான் என்பதைப் பற்றி யோசிக்க வேண்டியதில்லை.

3. நம் எளிமை: 
சாப்பாட்டுக்குக் கூட காசில்லாமல் இருக்கிற போது கூட ‘உபயம்’ என்று கொட்டெழுத்தில் தன் பெயர் போட விரும்பி நன்கொடை கொடுக்கும் விளம்பர விரும்பிகள் நம் மண்ணில் நிறைய இருக்கிறார்கள். அதே வேளையில், மற்ற பலரிடம் இல்லாத ஒரு குணாதிசயம் நம்மவர் நிறையப் பேரிடம் இருக்கிறது. அது எளிமை மீதான காதல் அல்லது குறைந்த பட்சம் எளிமையாகக் காட்டிக் கொள்ள வேண்டும் என்றாவது நினைக்கிற எண்ணம். ஒரு மேடையில் பல ஊரைச் சேர்ந்த பத்து சாதனையார்களை நிற்க வைத்து இதில் யார் தமிழ் நாட்டவர் என்று கேட்டால், பெரும்பாலும் அவரைச் சரியாக அடையாளம் கண்டு பிடித்து விடுவேன். எண்ணெய் வடிந்த மூஞ்சியோடும் அழுக்குப் படிந்த சட்டையோடும் கிழிந்த செருப்போடும் கூச்சப் படாமல் யாராவது நின்றால் அவராகத்தான் இருக்குமது. அப்படியொரு வளர்ப்பு நம்முடையது. பல நேரங்களில் அது தவறாகக் கூடப் போய் விடுகிறது. ஷூ போட்டுக் கொண்டு வரவேண்டிய அலுவலகத்துக்கு வார்ச்செருப்பு போட்டு வருகிற ஆட்கள் என்ற பேச்சு பெருமைப் படத்தக்கதில்லையென்ற போதிலும் சிறிது பெருமையாகத்தான் இருக்கிறது. உடுப்பை நம்பாமல் சரக்கை நம்புகிற ஆட்கள் குறைந்து விட்டது உலகத்தின் சாபக்கேடோ என்னவோ, மற்ற இடங்களை விட நம் இடத்தில் அத்தகையவர்கள் அதிகம் இருக்கிறார்கள். ஆராய்ச்சியாளர் எல்லோருமே அப்துல் கலாம் மாதிரி இருப்பார்களா என்று தெரியவில்லை. ஒப்பனைக்கு ஒரு குறிப்பிட்ட தொகை மாதாமாதம் ஒதுக்குகிற கூட்டம் நம்மிடமும் பெரிதாகிக் கொண்டே இருக்கிறது என்ற போதிலும், மற்ற ஊர்ப் பெண்களை விட நம்ம சீமாட்டிகள் சிறிது குறைவாகத்தான் அது பற்றிக் கவலைப் படுகிறார்கள் போலத் தெரிகிறது. முகத்திலும் வாயிலும் பெயிண்ட் அடிக்கிற பண்பாடு பெரிதளவில் ஆட்கொள்ள வில்லை நம்ம வீட்டுப் பெண்களை இன்னும் என்பது பெருமைப் பட வேண்டிய விசயம்தானே! அரசியலில் கூட கொள்ளை அடிக்கிற குள்ள நரிகளைக் கூட நம் இனத்தின் தலைவராக ஏற்றுக் கொள்கிறோம் ‘அவற்றுக்கு’ எளிமையான ஆள் போல நடிக்கத் தெரிந்தால்!

4. உலகெங்கும் பரவியிருக்கும் வீச்சு: 
இராஜராஜ சோழன் தொடங்கி வைத்தது என நினைக்கிறேன். அது முதல் நம்மவர்கள் உலகெங்கும் சென்று வென்று கொண்டுதான் இருக்கிறார்கள். எல்லோருடைய மண்ணையும் தன்னுடையதாக்கும் வேட்கையில் எனக்கு உடன்பாடில்லை. அதுதான் – அடுத்தவருடையதைத் தனதாக்கும் வெறிதான் – அந்தப் பைத்தியக்காரத் தனம்தான் இன்று உலகம் முழுக்கத் தீவிரவாதத்தையும் போர்களையும் அறிமுகப் படுத்தி இருக்கிறது. ஆனால் அம்மணமாய்த் திரிகிற உலகத்தில் கோவணம் கட்ட முடியாதே?! உலகமே அந்த மதம் பிடித்து அலைந்த காலத்தில் – அடிமைப் பட்டுக் கிடப்பதை விட படுத்தி விட்டு வருவது மேல் என்று இருந்த காலத்தில் – நம்மவர்கள் கடல் கடந்து வென்று விட்டு வந்த கதைகள் புல்லரிக்க வைக்கத்தான் செய்கின்றன. அப்படி இலங்கைத் தீவுக்குள் நுழைந்தவர்களும் இன்றைய ஈழத் தமிழர்களில் ஒரு சாரார் (அதே வேளையில் ஈழத்தையே பூர்வீகமாகக் கொண்ட தமிழரும் உண்டு என்பதையும் இங்கு மறுப்பதற்கில்லை). அதன் பொருள் அது அவர்களுக்கு வேற்று மண் என்பதல்ல. நம்ம ஊரில் அதற்குப் பின்பு வந்தவர்கள் எல்லாம் இந்தியர்கள் என்று ஏற்றுக் கொள்ளப் பட்டு விட்டது போல் அங்கே அவர்கள் ஏற்றுக் கொள்ளப் பட்டிருக்க வேண்டும். அவர்களுடைய அடிப்படை உரிமைகள் காக்கப் பட்டிருக்க வேண்டும். அது நடக்க வில்லை. இன வெறி பிடித்த ஈனர்கள் தமிழினம் உலகம் முழுக்கப் பரவ உதவினார்கள். இராஜராஜ சோழன் செல்லாத நாடுகளுக்கும் சென்று சேரச் செய்தனர். கொடுமை என்னவென்றால் இம்முறை அகதிகள் என்ற பெயரோடு செல்ல நேர்ந்தது.

அது மட்டுமில்லை. சோழர் காலம் முதலே க்ரீசுக்கும் ரோமுக்கும் நம் வணிகர்கள் சென்ற கதைகளை நம் வரலாறு சொல்கிறது. கிளியோபட்ரா தமிழ்த்தாய்க்குப் பிறந்ததால்தான் கருப்பாக இருந்ததாகக் கூட இனமான உணர்வாளர் நம்மவர் ஒருத்தர் எழுதியிருந்ததையும் படித்திருக்கிறேன்.

இன்னொரு சேதி - இந்தியாவைத் தேடிய கொலம்பஸ் அமெரிக்கா கண்டுபிடித்த கதை உங்களுக்குத் தெரிந்திருக்கலாம். இன்றைக்கு அமெரிக்காவில் இந்தியர்கள் எவ்வளவு கொயக் கொயவென நிறைந்திருக்கிறார்கள் என்ற புள்ளிவிபரங்கள் உங்களுக்குத் தெரிந்திருக்கலாம். அமெரிக்காவுக்கு முதன் முதலில் சென்றிறங்கிய இந்தியர் யாரென்று தெரியுமா? அவர் பெயர் மெட்ராஸ் மேன். 1790-இலேயே சென்னையிலிருந்து ஒரு சிங்கக் குட்டி கப்பலில் போய் மசாச்சுசெட்சில் இறங்கி இருக்கிறது. அதனால்தான் அதன் பெயர் மெட்ராஸ் மேன். அதன் உண்மைப் பெயர் கருப்பசாமியோ கந்தசாமியோ இருந்திருக்க வேண்டும். அந்த அளவுக்கு திரை கடல் ஓடித் திரவியம் தேடுபவர்களாகத்தான் நாம் இருக்கிறோம். அதன் காரணம் நம் பூமி வறண்டிருப்பதோ என்னவோ?! இன்றைக்கு நம்ம ஆட்கள் இல்லாத நாடே இல்லை என்பது போல்தான் தெரிகிறது.

5. நம் திரைப்படங்கள்: 
சென்னை மாநகராட்சி கொட்டுகிற அளவுக்குக் குப்பைகளைக் கோடம்பாக்கமும் வாராவாரம் கொட்டிக்கொண்டுதான் இருக்கிறது என்கிற உங்கள் கருத்தில் எனக்கு எவ்வித வேறுபாடும் இல்லை. ஆனால் அப்போதைக்கப்போது ஏதோ ஒரு மூலையில் இருந்து சென்னை வந்து சேர்கிற சில தரமான கலைஞர்களையும் நம் திரைப்படங்கள் வெளிச்சம் போட்டுக் காட்டிக் கொண்டுதான் இருக்கின்றன. அப்படிப் பட்டவர்கள் காலம் முழுக்க நல்ல படம் எடுக்கிற அளவு எனக்குக் கட்டுபடியாகாது என்று சொல்லிக் கொண்டாவது அவ்வப்போது சில நல்ல முயற்சிகளையாவது செய்து பார்க்கிற அளவு நம் திரைப்படத்துறை முதிர்ச்சி அடைந்திருப்பது நல்ல விசயம்தானே. என்ன ஒரு பிரச்சனை... வருகிறவர்கள் நடிப்பதோடு – எழுதுவதோடு நின்று கொண்டிருந்தால் நாடு பிழைத்திருக்கும். கொஞ்சம் அதிகமாகப் போய் எம் ஏமாளி மக்களைக் கோமாளிகளாக்கி ஆடாத ஆட்டமெல்லாம் போட்டு நிறைய வரலாறு படைத்து விடுகிறார்கள். அதுதான் கொஞ்சம் இரத்தக்கொதிப்பை உண்டு பண்ணி விடுகிறது. மற்றபடி, சிவாஜி போன்று – ரஹ்மான் போன்று – மணிரத்னம் போன்று – அவர்கள் போன்ற இன்னும் பல திறமைசாலிகளை வெளிக்கொண்டு வந்த பெருமை இத்துறைக்கு இருப்பதை யாரும் மறுக்க முடியாது. அந்த லிஸ்டில் சில ராஜாக்களையும் சேர்த்திருக்க வேண்டும். நேற்றுதான் அவர்களுடைய சின்னத்தனத்தை ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பார்த்து விட்டு சரியான கடுப்பில் இருப்பதால் வேண்டாமென விட்டு விட்டேன். வேலையில் எவ்வளவுதான் பெரிய பிடுங்கியாக இருந்தாலும் கொஞ்சம்கூட அடிப்படை நாகரிகம் தெரியாதவர்கள் – பேசத் தெரியாதவர்கள் – மித மிஞ்சிய திமிர் பிடித்தவர்கள் என்னதான் சாதித்தாலும் அவை எல்லாமே இப்படித்தான் ஒரே நிமிடத்தில் அடி பட்டுப் போய் விடுகின்றன. மேலும், நம் மொழி புரியாதோருக்கும் கூட நம் திரைப்படங்கள் பிடிக்கின்றன. கடந்த இருபது – முப்பது ஆண்டுகளில் நம் பண்பாடும் மொழியும் காக்கப்பட்டதில் திரைப்படங்களுக்குப் பெரும் பங்கு உண்டு. சந்தேகமே இல்லாமல் இதுதான் நம்முடைய தலைசிறந்த நவீன கலை. ஓரளவு இலக்கியமும் கூட!

6. சமூக நீதி: 
ஊரில் இருந்த காலங்களில் பல நேரங்களில் பார்த்துக் கொதித்த விசயம், நம்ம முட்டா மக்களின் ஜாதி ஈடுபாடு. கண்மூடித்தனமான ஜாதி வெறியைக் காணும் போதெல்லாம் கிறுக்குப் பிடிக்கும். இனத்தவரிடம் மட்டும் பழகுவது, இனத்தவரிடம் மட்டும் தொழில் செய்வது, இனத்தவரிடம் மட்டும் தொடர்பு வைத்துக் கொள்வது, இனத்தவர் என்ன செய்தாலும் நியாயப் படுத்துவது, உப்புச் சப்பில்லாத கதைகளையெல்லாம் தன் ஜாதித் தலைவரின் பெருமையாகச் சொல்லிக் கொண்டலைவது, காமெடியன் மாதிரி (நடிப்பதென்னவோ நாயகன் வேடம்தான்) இருக்கிற தன் ஜாதி நடிகரை எல்லாம் பெரிய நாயகன் போல சித்தரிப்பது, நேரங்கெட்ட நேரத்திலெல்லாம் கூச்சப்படாமல் அந்நியர்களின் ஜாதி பற்றிக் கேட்பது எனப் பல விஷயங்களைப் பார்த்தாலே வாந்தி வரும். என்றைக்குச் சென்னை போய் இறங்கினேனோ அன்றைக்கே புரிந்து விட்டது நகரமயமாக்கல் ஒன்றுதான் இந்தப் பைத்தியக்காரத் தனத்துக்கு வேகமாக முடிவு கட்ட வழி என்று. அங்கேயும் குண்டுச் சட்டியும் குதிரையும் வைத்துக் கொண்டு அலைபவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். ஆனால் அதையெல்லாம் கொஞ்ச நாளில் மறந்து விடுவார்கள். இல்லாவிட்டால், அவர்களுடைய பிள்ளைகள் அவர்களைப் பார்த்துக் காமெடி கீமெடி பண்ணி விடுவார்கள். இந்த உணர்வுகள் எல்லாமே தமிழ்நாட்டை விட்டு வெளியேறி மற்றவர்களுடன் பேச ஆரம்பித்த பின்பு வேறொரு உருக் கொண்டன. வடக்கர்கள் ஜாதி விஷயத்தில் கிறுக்கர்கள். இன்னமும் அதை ஒரு பெரிய விஷயம் போலப் பேசி பேசி நாசம் பண்ணுகிறார்கள். பெரும்பாலானவர்கள் தான் உயர்ந்த ஜாதிக்காரன் என்பதைக் கேட்காமலேயே சொல்லிச் சொல்லிப் பெருமிதம் அடைந்து கொள்கிறார்கள். சுற்றி இருப்பவர்கள் பற்றியும் அறிந்து கொள்ள முனைகிறார்கள். அதையெல்லாம் பார்த்த பின்பு எங்க ஊர் முட்டாப்பயகள் எவ்வளவோ பரவாயில்லை என்று தோன்றியது. அவர்களாவது படிக்காத முட்டாள்கள். இவர்கள் இதைப் போய் வெளியூர்களில் சொல்வதற்காகவே படித்து விட்டு இந்தப் பக்கம் வந்திருக்கிறார்களோ என நினைக்கும் அளவுக்கு நடந்து கொள்வதைப் பார்த்தால் கொடுமையாக இருக்கும். அதை விடக் கொடுமையாக நான் உணர்ந்தது, நாம் சின்ன வயசில் இருந்து அறிவாளிகள் என்று கேள்விப் பட்டுக் கொண்டிருக்கும் கேரளத்து சகோதரர்கள் கூட இந்த விசயத்தில் நம் அளவுக்கு முன்னுக்கு வரவில்லை இன்னும். உயர்ந்தவன் – தாழ்ந்தவன் பேச்சுகளில் அளவில்லாத நேரத்தை வீணடிக்கிறார்கள். நான் பார்த்தவரை நம்மவர்கள் – அதுவும் படித்தவர்கள் பொது இடங்களில் இது போலக் கேவலமாக நடந்து கொள்வதில்லை. ஒரு எடுத்துக்காட்டுக்கு பெங்களூரில் ஒவ்வொரு மாநிலத்தில் இருந்தும் வந்திருக்கிற பத்துப்பத்துப் பேரை அழைத்து விசாரித்தால் எல்லா இனங்களிலும் இருந்து பரவலாக முன்னுக்கு வந்திருப்பவர்கள் யார் என்று பார்த்தால், அடித்துச் சொல்வேன் – அது நம்மவர்களாகத்தான் இருக்கும். மற்ற எல்லா ஊர்களிலுமே குறிப்பிட்ட சில இனங்கள்தான் எல்லாத்தையுமே நிர்ணயம் செய்கிறார்கள்.

7. உழைப்பை வாழ்க்கையின் பங்காகப் பார்க்கும் முதிர்ச்சி: 
குஜராத்திகள் – மார்வாடிகள் அளவுக்கு நாம் தொழில் முனைவில் முன்னணியில் இல்லை. ஆனால் எல்லாத் தொழில்களிலும் நம்மவர்கள் இருக்கிறார்கள். முதலாளியாக வேண்டுமென்கிற முனைப்பு சற்று குறைவு எனினும் முன்னுக்கு வர வேண்டுமென்ற தாகம் இருந்து கொண்டே இருக்கிறது. அதுவும் நல்லதுதான். அதனால்தானோ என்னவோ உழைப்புக்கு அலாதியான மரியாதை உள்ளது நம்மவர்களிடம். உழைத்து முன்னுக்கு வரவேண்டும் என்கிற கொள்கை பெரும்பாலானவர்களிடம் மனதில் இயல்பாகவே பதிந்திருக்கிறது. உழைக்காமல் ஏமாற்றிப் பிழைக்கும் பிழைப்பு ஒரு சில க்ரூப்களிடம் மட்டுமே உள்ள குணாதிசயம். எந்தக் கம்பெனியாக இருந்தாலும் – குழுவாக இருந்தாலும் அங்கே இருப்பவர்களிலேயே கடுமையான உழைப்பாளி யார் என்று கேட்டுப் பாருங்கள். அது நம்ம ஆளாகத்தான் இருக்கும். குறைந்த பட்சம் இரண்டாவது மூன்றாவது இடத்திலாவது நம்ம ஆள் ஒருத்தன் தூக்கிப் பிடித்துக் கொண்டு இருப்பான். நிறையப் பேருக்குத் தெரியாத ஒரு ரகசியம் என்னவென்றால் அதி வேகமாக முன்னுக்கு வருவதற்கு ஒரு மிகச் சிறந்த குறுக்கு வழி – கடுமையாக உழைப்பது. திறமை இல்லாத பலபேர் நம்ம ஆட்கள் அந்த வழியில்தான் இன்றைக்கு முன்னுக்கு வந்து கொண்டிருக்கிறார்கள். அப்புறம் வெற்றி வீட்டுக்கு வந்த பின்பு – தன்னம்பிக்கையும் தைரியமும் உள்ளத்தில் குடியேறிய பிறகு – அதெல்லாம் (திறமை) வந்து விடும் என்பது வேறு கதை. இது ஒரு புறம் இருக்கட்டும். இன்னொரு சாரார் நம்மில் நிறையப் பேர் இருக்கிறார்கள். வெற்றி – தோல்வி – உலகை ஆள்வது – வீணாப் போவது – எது பற்றியும் கவலைப்படுவது கிடையாது. உண்பது போல் – உரையாடுவது போல் – சுவாசிப்பது போல் தினமும் எழுந்தது முதல் சாய்வது வரை ஏதாவதொரு வேலையைப் பார்த்துக் கொண்டு இருக்க வேண்டும் என்ற ஒரே கொள்கையோடு வாழ்பவர்கள் அவர்கள். அவர்களைப் பொருத்த மட்டில் மனிதப் பிறப்பின் ஒரு முக்கியமான நோக்கம் – உழைப்பது. ஒவ்வொரு வேலையும் முடியும்போது கிடைக்கும் மன நிறைவுதான் அவர்கள் எதிர்பார்க்கும் மிகப் பெரிய ஆதாயம். அப்படிப் பட்டவர்களால்தான் இந்த உலகம் இயங்கிக் கொண்டிருக்கிறது. அப்படிப் பட்டவர்களால்தான் சோம்பேறிகள் நிறையப் பேர் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அப்படிப் பட்ட நல்லவர்கள் நம்மில்தான் நிறைய இருக்கிறார்கள். அப்படியொரு மன முதிர்ச்சி நம்மிடம்தான் நிறைய இருக்கிறது. கடமையைச் செய்து பலனை எதிர் பாராமல் போகிற பைத்தியக்காரத்தனம் என்று கீதையைப் படிக்க மட்டுமே செய்கிற பலர் நினைத்துக் கொண்டிருக்கும் நாட்டில் இப்படியும் பலர் அதெல்லாம் படிக்காமலேயே வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். முக்கியமாக அவர்கள்தாம் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அவர்களால்தான் நிரம்ப விவரமாக இருப்பதாக நினைத்துக் கொண்டு கடமையை என்னவென்று கூடப் புரிய முயலாமல் பலனை அடைவதற்கான மற்ற எல்லா ஏற்பாடுகளையும் சிறப்பாகச் செய்து கொண்டு தினம் தினம் முன்னேறிக் கொண்டிருப்பதாக எண்ணி ஏமாந்து கொண்டிருக்கும் எல்லோரும் தாம் தோற்றுக் கொண்டிருக்கிறோம் என்பதைக் கூட உணரவே இல்லை இன்னும்.

8. நம் மாறுபாடுகள்: 
முன்பொரு முறை சொன்னது போல, பெரியவர் அமர்த்யா சென் என்ன சொல்கிறார் என்றால், ஒரு இனம் நீடித்திருக்க அவசியமான ஒரு குணாதிசயம் எதுவென்றால் அது ‘வேற்றுமையில் ஒற்றுமை’ காணும் பரந்த மனப்பான்மை. மாறுபாடுகளுக்கு மத்தியிலும் ஒன்றிணைந்து செயல்படும் முதிர்ச்சி. நம்மிடம் அது காலம் காலமாக இருந்து கொண்டிருக்கிறது. இந்தியாவிலேயே அதிகமான கோயில்கள் இருப்பதும் இங்கேதான்; இந்தியாவிலேயே அதிகமான இறை நம்பிக்கை இல்லாதோர் இருப்பதும் இங்கேதான். இறை நம்பிக்கை இருப்போரிலும் இவ்வளவு பேதம் வேறெங்கும் இல்லை. சைவ – வைணவச் சண்டை நம் அளவில் வேறெங்கும் நடந்ததில்லை என நினைக்கிறேன். கேரளாவுக்கு அடுத்த படியாக இந்தியாவிலேயே அதிகமான மதம் மாறியோர் இருப்பதும் இங்கேதான். வெள்ளைக்காரனை உள்ளே விட்டோரும் நம்மில்தான் நிறைய இருந்தார்; அவனை அடித்து விரட்டப் போராடியோரும் நம்மில்தான் (தென்னிந்தியாவிலேயே என்று சொல்லலாம்) நிறைய இருந்தார். வேற்று மொழி பேசுவோரும் வந்து குடியேறி நம்மில் நாமாக ஆகியிருப்பது வேறெந்த ஊரிலும் இந்த அளவு இல்லை. இந்துக்களும் முஸ்லீம்களும் மச்சான்-மாமா முறை போட்டுக் கொண்டுதான் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். மற்ற ஊர்களைப் போல நம் ஊர்களில் உள்ள யானைகளுக்கும் மனிதர்களுக்கும் மதம் அதிகம் பிடிக்கவில்லை (ஓரளவு பிடிக்க ஆரம்பித்திருக்கிறது என்பதை ஒப்புக் கொண்டுதான் ஆக வேண்டும்; அதிலும் கடைசியாகத்தானே நமக்குப் பிடிக்க ஆரம்பித்து இருக்கிறது என்பது பெருமைதானே நமக்கு!). நகரமயமாதல் வேகமாக நடந்து கொண்டிருக்கும் மாநிலங்களில் நம்முடையதும் ஒன்று. அதே வேளையில், கிராமங்களில் இருந்தும் வெற்றியாளர்கள் நிறைய உருவாகிக் கொண்டிருக்கிறார்கள். அரசியலாலும் பிளவுண்டுதான் கிடக்கிறோம். இத்தனைக்கும் மத்தியில் நாம் அமைதியாகத்தான் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். நம் வீதிகளில் குண்டுகளோ கொலைகளோ தினம் தினம் விழுவதில்லை.

9. நம் தைரியம்: 
இராணுவத்தில் இருக்கும் என் நண்பன் ஒருவன் சொன்னான் – இந்திய இராணுவத்தில் பஞ்சாபிகளுக்கு அடுத்த படியாக அதிகம் மதிக்கப் படுவது நம்மவர்கள்தாம் என்று. எந்த வேலையாக இருந்தாலும் “தம்பிப் பார்ட்டி நாலு பேரைக் கூப்பிடு” என்பார்களாம். இது உழைப்புக்கு மட்டுமல்ல, தைரியத்துக்கும் உதாரணம்தான். அது போலவே இங்கே பெங்களூரில் என் நண்பர் ஒருவர் சொன்னது என்னவென்றால், இங்கே சிவாஜி நகர்ப் பகுதியில் இந்து – முஸ்லீம் கலவரம் வந்த காலத்தில் இரண்டு அணிகளிலுமே அடித்துக் கொண்டவர்கள் நம்ம ஊர்க்காரர்கள் தானாம். மகிழ்ச்சிக்குரிய விசயமில்லை என்றாலும், அது நம் கேனைத்தனத்தோடு சேர்த்து வீர உணர்வையும் பறை சாற்றத்தான் செய்கிறது. பம்பாயில் இருக்கிற ரவுடிகள் நிறையப் பேர் திருநெல்வேலிக்காரர்கள் என்று கேள்விப் பட்டு இருக்கிறேன். சமீபத்தில் டெல்லியில் சிக்கிய பிக் பாக்கெட் பேர்வழிகள் எல்லோருமே தமிழர்கள் என்றொரு நண்பர் சொன்னார். இவையெல்லாம் நம்மை வெட்கித் தலை குனிய வைத்தாலும் அவற்றுக்குள் இருக்கிற தைரியம் ஆச்சர்யப் படத்தான் வைக்கிறது. எல்லாவற்றுக்கும் மேல், ஜல்லிக்கட்டு ஒன்று போதும் – நாம் இன்னும் முழுமையாக மனிதர்களாகி விட வில்லை என்பதை நிரூபிக்க. வீரத்தில் நாம் விலங்குகள்தாம். குடிபோதையில் தள்ளி விடப்படும் காளைகளைக் குடி போதையில் அடக்கும் எங்கள் காளைகள் அவற்றை விட – அதைச் செய்ய முடியாத மற்றோரை விட வீரம் செறிந்தவர்கள் தாமே!? ஈழத் தமிழர்க்கு அவர்கள் எதிர் பார்த்தபடி நாம் ஏதும் செய்யவில்லை. ஆனாலும் அவர்களுடைய பெருமையில் மட்டும் கொஞ்சம் பங்கெடுத்துக் கொள்வோம். கிட்டத்தட்ட முப்பதாண்டு காலம் பெரும்பான்மை சமூகத்தின் அரசாங்கத்துக்கும் அவர்களின் இராணுவத்துக்கும் எதிராக ஒரு போட்டி அரசாங்கத்தையும் இராணுவத்தையும் போரையும் நடத்துவதென்பது தமிழ் நாட்டில் நடத்தப்படும் மொள்ளமாரி அரசியல் போல எளிதான வேலை இல்லை. உலகத்திலேயே அப்படி ஓர் இயக்கம் வேறெங்கும் நடந்ததில்லை. இது போதாதா நம் வீரம் பற்றி விவாதிக்க?

10. வந்தாரை வாழ வைக்கும் பண்பு: 
நாம் உலகெலாம் சென்று வென்று குவிப்பது ஒரு பெருமை என்றால், அதற்கு இணையான பெருமை நாடெங்கும் இருந்து வருவோரை இங்கு வெல்ல விட்டுப் பார்க்கும் பெருந்தன்மை. தமிழகம் முழுக்கப் பரவியிருக்கும் மலையாளிகளும் – பல நூற்றாண்டுகளுக்கு முன்பே வந்து குடியேறி நம்மில் ஒருவராய் மாறியிருக்கும் நம் தெலுங்கு பேசும் சகோதரருமே இதற்கான சாட்சி. எங்கள் பகுதியில் சில ஊர்களில் கன்னடம் பேசுவோரும் நிறைந்திருக்கிறார்கள். நம் வாழ்விலும் கலையிலும் அரசியலிலும் எத்தனை பேர் அன்னியர் வந்து கொடி கட்டியிருக்கிறார்கள் - கோலோச்சியிருக்கிறார்கள்! வேறெங்காவது இது முடியுமா? அவருக்காக உயிரையுமல்லவா மாய்த்துக் கொள்கிறார்கள் நம் மடையர்கள்! மடமையும் பெருமை என்றுதானே சொல்கின்றன நம் இலக்கியங்கள். இருக்க இடம் கொடுப்போம்; படுக்கவும் இடம் கொடுப்போம்; நீங்கள் விரும்பினால் வீட்டையும் உமக்காக எழுதிக் கொடுப்போம் என்கிற ஏமாளித்தனம் நம் பாரம்பரியச் சொத்து. உரிமையை இழப்பதும் எங்கள் உரிமை என்று கருதும் உயர்ந்த உள்ளம கொண்டவர்கள் நாம். வீதி வீதியாகப் போய் இந்தியை அழித்த போதும் கூட ஒரு நாளும் சவுகார் பேட்டையில் நுழைந்து அசம்பாவிதங்கள் செய்ததில்லை நம்மவர்கள். கொடுங்கொலைகாரன் ராஜபக்சேவே வந்து தேர்தலில் நின்றாலும் அவனையும் ஏதோவொரு கூட்டணியில் சேர்த்துக் கொண்டு அவனுடைய வெற்றிக்காகவும் கடுமையாக உழைக்கும் திறந்த - வெள்ளுள்ளம் கொண்டோர் நாம். ஒரே ஒரு கண்டிஷன் – ஓட்டுக்கு ஆயிரம் ரூபாயாவது குறைந்த பட்சம் கொடுக்க வேண்டும்! யாதும் ஊரே யாவரும் கேளிர். எம் ஊரும் உம் ஊரும் உமக்கும் எமக்கும்!

இத்தோடு முடிவதில்லை நம் உரையாடல். அடுத்து வருவதுதான் இதனினும் முக்கியமானது. தமிழனாகப் பிறந்ததற்காக நொந்து நூலாகி வெளியில் சொல்லவே வெட்கப்படும் – வேதனைப் படும் – கூச்சப் படும் பத்து விஷயங்கள்! வயிற்றெரிச்சலை எல்லாம் கொட்டிக் கொள்ள உதவப் போகும் பகுதி. கூடிய விரைவில் அவை பற்றியும் பேசுவோம்.

அதைப் படிக்க இங்கே சொடுக்குங்கள் - http://bharatheechudar.blogspot.com/2011/07/10.html.

கருத்துகள்

  1. 1. நம் மொழி: "மொத்தத்தில் இவற்றையெல்லாம் பார்க்கையில் மெல்லத்தான் தமிழினிச் சாகும் என்றே படுகிறது." - இல்லை ஒருபொழுதும் நம் தமிழ் மொழிக்கு சாவில்லை. சாகும் என்பதற்குப்பதில் சாகாது என்று முடித்திருந்தால் மகிழ்ச்சி அடைந்திருப்பேன்
    9. நம் தைரியம்: தமிழ் நாட்டு அரசியல் கோமாளித்தனங்களை பார்த்தும், காசுக்கு ஓட்டை விற்ற மானங்கெட்ட பிழைப்பை பார்த்தும் நொந்து போன மனது திருடன், ரவுடி என்ற போதிலும் வீரமாய் இந்தியத் தமிழன் எங்கோ ஒரு மூலையில் வாழ்ந்து கொண்டிருப்பதில் பெருமைகொள்ளதான் வேண்டியுள்ளது :(
    மற்ற அனைத்து கருத்துக்களும் அருமை. இக்கட்டுரையை என் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளவுள்ளேன்.

    பதிலளிநீக்கு
  2. மீண்டும் நன்றி கவி அவர்களே. மெல்லத்தான் என்பதை மிக மிக மெல்லத்தான் என்று கூடச் சொல்லலாம். அல்லது நம் ஆசைப்படி சாகாது என்றும் சொல்லலாம். அது ஒரு குறியீட்டுச் சொல்லே ஒழிய தீர்க்கதரிசனம் அல்ல. உங்கள் ஆர்வத்துக்கும் ஆதரவுக்கும் கூடுதல் நன்றிகள்.

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம் - ஜெயகாந்தன்

"நான் என்னை ஒரு மேதையும் புனித வேசியும் போல் உணர்கிறேன்": அலெஹாண்ட்ரோ ஜோடராவ்ஸ்கிக்குச் சில கேள்விகள்

சாம, தான, பேத, தண்டம்