பொன்னியின் செல்வன் - சில குறிப்புகள்


இதுவும் சிவகாமியின் சபதம் - சில குறிப்புகள் போல், குறிப்புகளின் தொகுப்பே. நூல் விமர்சனம் அல்ல. அந்த அளவுக்குக் கூட நீளமானதோ விரிவானதோ அல்ல இது. மிகச் சில குறிப்புகளே.

"ஆதித்த சோழன் காவேரி நதி உற்பத்தியாகும் இடத்தில் இருந்து கடலில் சேரும் இடம் வரையில் 64 சிவாலயங்கள் எடுப்பித்தான்." என்றொரு வரி வருகிறது. தமிழ் மன்னர்கள் பெரும்பாலும் கோயில் கட்டுவதை ஒரு பெரும் அரும் பணியாகவே செய்திருக்கிறார்கள். பக்தி மார்க்கம் தவறில்லை. ஆனால், அதே அளவு நேரத்தையும் ஆற்றலையும் மக்கள் நலப் பணிகளில் செலவிட்டிருந்தால் தமிழகம் இன்னும் நன்றாக இருந்திருக்குமோ என்றொரு எண்ணவோட்டம். நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

"கூட்டாஞ்சோறும் சித்திரான்னமும் எடுத்துக் கொண்டு பலர் குடும்பங் குடும்பமாக வந்திருந்தார்கள்." என்றொரு வரி வருகிறது. சித்திரான்னம் என்பது இன்றைக்கும் கர்நாடகத்தில் ஒரு முக்கிய உணவு வகை. அது வேறொன்றுமில்லை. நம்ம ஊரில் எலுமிச்சை சாதம் என்றழைக்கப் பட்டு இப்போது லெமன் ரைஸ் ஆகியிருக்கும் அதே உணவுதான் கர்நாடகத்தில் சித்திரான்னம் என்றழைக்கப் படுகிறது. ஒரே ஒரு சின்ன வேறுபாடு - கர்நாடக சித்திரான்னத்தில் எலுமிச்சையின் அறிகுறியே தெரியாது. மஞ்சள் பொடி போட்டு நிறம் மட்டும் கொண்டு வந்து விடுவார்கள். இது கடைகளிலேயே சாப்பிட்டுள்ளதால் எனக்கு அப்படித் தவறாகவும் தோன்றலாம். கடைகளில்தான் எதையுமே தேவையான அளவு போட மாட்டார்களே. ஒருவேளை, வீடுகளில் தயார் செய்யப் படும் சித்திரான்னங்களில் கூடுதல் எலுமிச்சை வாடை வரலாம். அல்லது, சித்திரான்னம் என்றாலே அதற்கு மஞ்சள் நிறம்தான் முக்கியம் என்றும் எலுமிச்சை வாடை அல்ல என்றும் கூட இருக்கலாம். எது எப்படியோ, இங்கு நான் பேச வந்தது அது பற்றி அல்ல. இங்கே எப்படி எலுமிச்சை வாடை என்பது அரிதோ அது போல, நம்ம ஊரில் நான் இதுவரை இந்த வார்த்தையைக் கேள்விப் பட்டதே இல்லை. ஆனால், கல்கி அந்தச் சொல்லைப் பயன்படுத்தி இருப்பதன் மூலம், ஒருவேளை இதுவும் நம்முடைய சொல்லாக இருந்து, பின்னர் மறக்கப் பட்டு விட்டதோ என்றொரு சந்தேகம் வருகிறது. இது பற்றி உங்களுக்கு ஏதாவது தெரியுமானால் கருத்துரையில் எழுதுங்கள்.

"முதற்பராந்தகச் சோழன் தில்லைச் சிற்றம்பலத்துக்கு பொற்கூரை வேய்ந்தான். வீரநாராயணன் என்ற சிறப்புப் பெயர் பெற்றிருந்தான். பராந்தகனுடைய காலத்தில் வடக்கே இரட்டை மண்டலத்து ராஷ்டிரகூட மன்னர்கள் வலிமை பெற்று விளங்கினார்கள். மானிய கேடத்திலிருந்து அவர்கள் படையெடுத்து வரக்கூடுமென்று பராந்தகன் எதிர்பார்த்தான். எனவே, தனது முதற்புதல்வனாகிய இளவரசன் இராஜாதித்தனை ஒரு பெரிய சைன்யத்துடன் திருமுனைப்பாடி நாட்டில் இருக்கச் செய்தான். அந்தச் சைன்யத்தைச் சேர்ந்த லட்சக் கணக்கான வீரர்கள் வேலையின்றி சும்மா இருக்க நேர்ந்த காலத்தில் இராஜாதித்தன் ஒரு யோசனை செய்தான். குடிமக்களுக்கு உபயோகமான ஒரு பெரும்பணியை அவர்களைக் கொண்டு செய்விக்க எண்ணினான். வடகாவேரி என்று பக்தர்களாலும் கொள்ளிடம் என்று மற்றவர்களாலும் அழைக்கப் பட்ட பெருநதியின் வழியாக அளவில்லாத வெள்ள நீர் ஓடி வீணே கடலில் கலந்து கொண்டிருந்தது. அதில் ஒரு பகுதியைப் பயன் படுத்த எண்ணித் தன் வசமிருந்த வீரர்களைக் கொண்டு கடல் போன்ற விசாலமான ஏறி ஒன்றை அமைத்தான். அதைத் தன் அருமைத் தந்தையின் பெயரில் வீர நாராயண ஏரி என்று அழைத்தான். அதன் கரையில் வீரநாராயண புரத்தை ஏற்படுத்தி அதில் ஒரு விண்ணகரையும் எடுத்தான். விஷ்ணுக்கிருஹம் என்பது அந்நாளில் விண்ணகரம் என்று தமிழாக்கப் பட்டு விளங்கிற்று. ஸ்ரீமந் நாராயண மூர்த்தி நீரில் பள்ளி கொண்டு நீர்மயமாக இருப்பவர் அல்லவா? எனவே, ஏரிகளைக் காத்தருளுவதற்காக எரிக்கரையையோட்டி ஸ்ரீமந் நாராயண மூர்த்திக்குக் கோயில் எடுப்பது அக்காலத்து வழக்கம். அதன்படி வீரநாராயணபுர விண்ணகரத்தில் வீரநாராயணப் பெருமாளைக் கோயில் கொண்டு எழுந்தருளச் செய்தான். அதுவே இப்போது வீராணம் ஏரி என்றழைக்கப் படுகிறது." என்றொரு நீண்ட பத்தி வருகிறது.

அருமை. அருமை. இதைத் தான் முதல் குறிப்பில் சொல்லியிருந்தேன். ஆட்சி புரிவோர் இப்படிப் பட்ட வேலைகளைச் செய்கிற போது, வரலாற்றில் அவர்களுடைய பெயர் இன்னும் சிறப்பாக இடம் பெறும். வீராணம் ஏரிக்கு இப்படியொரு சூப்பர்க்கதை இருந்தது இப்போதுதான் தெரிகிறது. அத்தோடு கடவுளுக்கும் பணிகள் செய்வது அருமையோ அருமை. அதையே முழு முதற் பணியாகக் கொள்வதுதான் அவ்வளவு அருமையாக இருப்பதில்லை. பின்னாளில் அதே சோழ நாட்டில் இருந்து வந்தவர்தான் இதே வீராணம் ஏரியை வைத்து அறிவியல் பூர்வமான ஊழல் செய்து இந்திய ஊழல் வரைபடத்தில் நமக்கு மிகச் சிறப்பான ஓர் இடத்தைப் பிடித்துக் கொடுத்தார். தமிழகம் ஆனதும் சோழராலே அழிந்ததும் சோழராலே என்று ஒரு கிண்டல் வரி சொன்னால், இன்றைய சோழர்கள் யாரும் கோபித்துக் கொள்ள மாட்டீர்களே! :)

"விஜயாலயச் சோழர் முத்தரையர்களை முறியடித்துத் தஞ்சாவூரைக் கைப்பற்றினார். திருப்புறம்பியம் போரில் பல்லவ சைன்யத்துக்குத் துணையாக நின்று மதுரைப் பாண்டியரின் படையை நிர்மூலமாக்கினார்." என்றொரு குறிப்பு வருகிறது. சோழர்களுக்கு முத்தரையர்கள் மிகப் பெரும் அளவில் தலைவலியாய் இருந்திருப்பார்கள் போல்த் தெரிகிறது. தமிழகத்தில் இருக்கும் முரட்டு இனங்களில் (பெருமையாகச் சொல்ல வேண்டுமானால், 'வீரப் பரம்பரைகளில்...') இவர்களும் குறிப்பிடப் பட வேண்டியவர்கள் என நினைக்கிறேன். எல்லாப் பகுதிகளிலும் பெரும்பான்மையாக நிறைந்தில்லாததால் அவர்கள் கதைகள் நிறைய வெளிவரவில்லை போல்த் தெரிகிறது.

"வேற்று நாடுகளில் படையெடுத்துச் செல்லும் போது, படை வீரர்களின் உணவுக்கு அந்தந்த நாடுகளிலேயே பறிமுதல் செய்வதே நியதியாக இருந்தது. முதல் முறையாக அருள்மொழி வர்மன் (இராஜராஜன்) தான் ஈழ நாட்டின் மீது படையெடுத்த போது கப்பல்களில் உணவு அனுப்பச் செய்திருக்கிறான். 'அரசியலில் அறிவியல்'." என்று ஒரு பத்தி வருகிறது. அந்த நாளில் இது எவ்வளவு பெரிய புரட்சியாக இருந்திருக்க வேண்டும் பாருங்கள். எவ்வளவு பெரிய மனிதாபிமானியாக இருந்திருக்க வேண்டும் அவன். சூப்பரப்பு. இன்னொன்றைப் பாருங்கள் - ஈழ நாடாம். இலங்கை என்றால் தமிழர் எதிரி என்றும் ஈழம் என்றால் மட்டுமே தமிழ் உணர்வாளர் என்றும் ஒரு கருத்தோட்டம் உருவாக்கி வருகிறது இப்போது. ஏனென்றால், ஈழம்தான் தமிழ்ப் பெயர்; இலங்கை பின்னாளில் பிறர் கொண்டு வந்த பெயர் என்று கருதப் படுகிறது. அந்தக் காலத்திலேயே கல்கி அவர்கள் ஈழ நாடு என்று சொல்லியிருப்பதைப் பார்த்தால் பன்னெடுங்காலமாகவே இந்தப் பெயர் இருப்பது தெரிகிறது. அருள்மொழி வர்மன் காலத்து ஈழப் படையெடுப்புகள் வரலாற்றுச் சிறப்பு வாய்ந்தவை. விடுதலைப் புலிகள் என்று பெயரில் புலிகளைச் சேர்த்தமைக்கு சோழர்களின் புலிச் சின்னமும் காரணம் என்று சொல்லப் படுவதுண்டு.

பொதுவாகச் சொல்ல வேண்டுமானால், பொன்னியின் செல்வனின் சிறப்பம்சங்களில் ஒன்றாக நான் நினைப்பது - அருள்மொழி வர்மனின் (இராஜராஜனை விட எனக்கு இந்தப் பெயர் மிகவும் பிடிக்கும்!) பாத்திரத்தைப் பற்றி கல்கி அவர்கள் உருவாக்கியிருக்கும் சித்திரம். இந்த நாவலைப் படிக்கும் எவருக்கும் அவன் மீது ஒரு அளவிலாத காதல் வரும். பெண்களுக்கு அதுவே குண்டக்க மண்டக்க என்று போய் விடும் என நினைக்கிறேன். அப்படியொரு கதையைப் படமாக எடுப்பதாக இருந்தால் அதற்குச் சரியான நடிகர்கள் பிடிப்பதே பெரும் சிரமம் என்று எழுத்தாளர் சுஜாதா கூடக் கூறியிருந்தார் ஒருமுறை. அதையேதான் நானும் வழிமொழிகிறேன். எவர் நடித்தாலும் அவர் மீது கதை படிக்கும்போது நாம் அருள்மொழி வர்மன் மீது பெற்ற அபிமானத்தைப் பெற முடியாது. இப்படியும் ஒரு மனிதன் நாம் வாழ்ந்த இதே மண்ணின் வாழ்ந்தானா என்று திக்கு முக்காட வைக்கும் கதை. கதைக்காகப் பல மிகைப் படுத்தல்கள் இருக்கும் எனினும் அப்படியொரு சித்திரத்தை உருவாக்குவதே ஒரு கதையாளரின் மிகப் பெரும் வெற்றி. எவ்வளவு மனிதாபிமானம், புரட்சிச் சிந்தனைகள், தியாக உணர்வு, இன்னும் என்னென்னவோ...

"கடைசியாக, சோழ குலத்தார் பாண்டியர்களின் தொல்லையைப் பொறுக்க முடியாமல் அவர்களுடைய நெடுங்காலத் தலைநகரமான உரையூரைவிட்டு நகர வேண்டி வந்தது. அப்படி நகர்ந்தவர்கள் குடந்தைக்கு அருகில் இருந்த பழையாறை என்னும் நகருக்கு வந்து சேர்ந்தார்கள்." என்றொரு பத்தி வருகிறது. ஆக, உறையூரில் இருந்து தலைநகரை மாற்றியதற்கு இவர்கள் தான் காரணமா? உறையூர் அளவுக்குப் பழையாறை வரலாற்றில் நிற்க வில்லை என நினைக்கிறேன். சோழர்கள் என்றாலே நமக்கு நினைவுக்கு வருவது தஞ்சாவூரும் உறையூரும்தானே. உறையூருக்கருகில் இருக்கும் சிராப்பள்ளி என்பார்களாம் அந்தக் காலத்தில். இப்போது சிராப்பள்ளிக்கு அருகில் அல்ல, சிராப்பள்ளிக்கு உள்ளேயே ஒரு பகுதியாக சுருங்கி விட்டது உறையூர். அதென்ன சிராப்பள்ளி? திருச்சிராப்பள்ளிதான்! நெல்வேலி தானே திருநெல்வேலி.

இவ்வளவுதான் இப்போதைக்குக் கிடைத்திருக்கிறது. மிச்ச சொச்சம் கிடைக்கிறபோது வந்து சேர்த்து விடுகிறேன்.

* 2005 நாட்குறிப்பில் இருந்து...

கருத்துகள்

  1. "ஆதித்த சோழன் காவேரி நதி உற்பத்தியாகும் இடத்தில் இருந்து கடலில் சேரும் இடம் வரையில் 64 சிவாலயங்கள் எடுப்பித்தான்." என்றொரு வரி வருகிறது. தமிழ் மன்னர்கள் பெரும்பாலும் கோயில் கட்டுவதை ஒரு பெரும் அரும் பணியாகவே செய்திருக்கிறார்கள். பக்தி மார்க்கம் தவறில்லை. ஆனால், அதே அளவு நேரத்தையும் ஆற்றலையும் மக்கள் நலப் பணிகளில் செலவிட்டிருந்தால் தமிழகம் இன்னும் நன்றாக இருந்திருக்குமோ என்றொரு எண்ணவோட்டம். நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

    உறையூரில் இருந்து சோழர்கள் பழையாறை செல்ல பாண்டியர்கள் காரணமாக இருந்திருக்கலாம், ஆனால் பழையாறைக்கு சிறப்பு இல்லை என்று கூற முடியாது. உதாரணம் கங்கை கொண்ட சோழபுரம் மற்றும் உறையூர்.
    தவிர கோவில்கள் வெறுமனே பக்தியுடன் கட்டப்படவில்லை எதிர்கால தேவையுடனும் அமையப்பெற்றது
    என்றைய தொளில்நுட்ப்பதுடன் நோக்கினால் சாதாரணமே அன்றைய காலகட்டத்துக்கு அது நிகரற்றது.
    விமர்சனம் தேவையே நல்ல நோக்கத்துடன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாசிப்புக்கும் கருத்துரைக்கும் நன்றி ஐயா. விமர்சனம் தவறான நோக்கத்துடன் வைக்கப்பட்டுள்ளதாக முடிவு செய்து விட்டீர்கள். அதனால் மேலும் உரையாட ஒன்றுமில்லாமல் போய்விட்டது!

      நீக்கு

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம் - ஜெயகாந்தன்

"நான் என்னை ஒரு மேதையும் புனித வேசியும் போல் உணர்கிறேன்": அலெஹாண்ட்ரோ ஜோடராவ்ஸ்கிக்குச் சில கேள்விகள்

சாம, தான, பேத, தண்டம்