பதிவிடுதல் - பல கேள்விகள்

சக ஆங்கிலப் பதிவர் திரு. ஹரிஹரன் அவர்கள், இன்று வெள்ளி விழா கொண்டாடுகிறார். Valady Views என்ற தளத்தில் கடந்த இரண்டு மாதங்களாகத் தொடர்ந்து சுறுசுறுப்பாக இயங்கி வருகிறார். இன்று அவருடைய இருபத்தி ஐந்தாவது இடுகையை இட்டிருக்கிறார். அந்த இடுகையின் தலைப்பு ???. அவ்வளவுதான். மூன்றே மூன்று கேள்விக் குறிகள். ஆனால், உள்ளே ஏகப் பட்ட கேள்விகள் கேட்டிருக்கிறார். அனைத்தும் சக பதிவர்களுக்கான கேள்விகள். முதலில் இவ்வளவு சீக்கிரமாக இருபத்தி ஐந்து இடுகைகள் இட்டமைக்கு அவரை வாழ்த்துவோம். இரண்டே மாதங்களில் இதைச் செய்திருப்பதுதான் சாதனை. அதிரடி ஆட்டம் ஆடியிருக்கிறார், இல்லையா? என் பதில்களை அவருடைய இடுகைக்குக் கீழ் ஒரு கருத்துரையாக இட்டிருக்கலாம். ஆனால், அது அவருடைய இடுகையை விடப் பெரிதாக வருவதால், அதையே ஒரு இடுகையாக என் பதிவில் இட்டு விடலாம் என்று முடிவு செய்து விட்டேன். நமக்கும் ஒரு நம்பர் கூடிய பெருமை கிடைக்கும் அல்லவா? இதோ...

முதலில் அவரையே அவர் கேட்டுக் கொண்டிருக்கும் கேள்விகள். அவற்றுக்கு என் பதில்களையும் கொடுத்து விட்டு, பின்னர் அவர் மற்றவர்களுக்குக் கேட்டிருக்கும் கேள்விகளைப் பார்ப்போம்...

கே: எது என் முதல் இடுகையை எழுத உந்துதலாக இருந்தது?
ப: எனக்கு எப்போதுமே எழுதுதல் பிடிக்கும். தமிழில் நிறைய எழுதுவேன். ஆனால், தமிழில் எப்படித் தட்டச்சு செய்வது என்று தெரியாததால் பதிவுலகில் முதலில் ஆங்கிலத்தில்தான் ஆரம்பித்தேன். இப்போது ஆங்கிலத்தை விடத் தமிழில்தான் அதிகமாக இயங்கிக் கொண்டிருக்கிறேன். இருப்பினும், என் பெரும்பாலான இடுகைகள் இரண்டு மொழிகளிலும் இருக்கின்றன. ஒன்றில் எழுதி மற்றொன்றுக்கு மொழி பெயர்ப்பு செய்கிறேன். தமிழ் தெரியாத நண்பர்களும் எனக்கு சமமான அல்லது அதிகமான அளவில் இருப்பதால் இப்படிச் செய்கிறேன். முதன் முதலில் பதிவிட ஆரம்பித்ததும் நான் எழுதிய முதல் இடுகையில் சொன்னது போல... எனக்கு நிறைய எழுத வேண்டுமென்ற ஆசை இருந்தது; ஆனால், என் எழுத்துக்களை அவை எழுதப் பட்டதன் பின்னணி அறியாத ஒருவர் திருத்தம் செய்வதில் எனக்கு ஈடுபாடு இல்லை. சின்ன வயதில் இருந்தே டைரி எழுதும் பழக்கமும் எனக்கு இருந்து வந்தது. பதிவிடுதல் என்பது டைரி எழுதல் மற்றும் பத்திரிகையியல் ஆகிய இரண்டின் பரிபூரணக் கலவையாக இருக்கிறது. என் முதல் ஆங்கில இடுகை இன்னும் இங்கு இருக்கிறது - "Well begun is half done". பின்னர், அதற்கு முன்பு எழுதியிருந்த பல எழுத்துக்களையும் பழைய தேதிகளில் ஏற்றினேன். இப்போதும், என் பழைய டைரிகளில் இருந்தும் கிழிந்த பேப்பர்களில் இருந்தும் கிடைக்கும் என் பழைய எழுத்துக்களைக் கண்டெடுக்கும் போதெல்லாம் அதைச் செய்கிறேன். தேவைக்கும் மேலான விளக்கம் இது என்பதை நன்கறிவேன். ஆனால், இப்படித்தான் நான் கேள்விகளுக்குப் பதில் அளித்துப் பழகி விட்டேன். :)

கே: இப்போதும் அந்த உந்துதல் இருக்கிறதா?
ப: ஆம். அப்படியே இருக்கிறது. இதில் வசதிகள் அதிகம் இருப்பதால் டைரி எழுதுவதைக் கூட நிறுத்தி விட்டேன் இப்போது.

கே: எது என்னைத் தொடர்ந்து இயங்க வைக்கிறது?
ப: சின்ன வயதில் இருந்தே நான் ஒரு பெரிய எழுத்தாளர் ஆகப் போவதாகக் கனவு கண்டு கொண்டிருக்கிறேன். அதில் துளி கூட இன்னும் வரவில்லை என்பதையும் அறிவேன். இது என் பயிற்சிக் களம். அவ்வளவுதான். இந்தப் பயிற்சி மூலம் இன்று நான் எழுதுவது நேற்றை விடச் சிறப்பாக இருக்க முடியுமானால் அதுவே போதும். அது ஒன்றுதான் என் பதிவிடலுக்கான காரணம். எனவே, ஓர் இடுகையில் கிடைக்கும் ஒரே ஒரு பாராட்டு அல்லது ஒரு கருத்துரை கூட என்னை மேன்மைப் படுத்துகிறது அல்லது அப்படி உணர்கிறேன். இரண்டுமே தொலை நோக்கில் நல்லதுதானே. இதுதான் என்னைத் தொடர்ந்து இயங்க வைக்கிறது. எவருமே என் பதிவைப் பற்றி எதுவுமே சொல்லியிரா விட்டால் 'ஒருவேளை' நான் பதிவிடுவதை நிறுத்தி இருக்கலாம். 'ஒருவேளை' என்று ஏன் சொல்கிறேன் என்றால், ஒரு பாராட்டும் இல்லாமலே நீண்ட காலம் எழுதிக் கொண்டும் வந்தேன். அதன் காரணம் - வாசிக்க ஓர் ஆள் இருக்கிறாரா இல்லையா என்பதை மீறி எழுத்தின் மீது எனக்கிருந்த ஆர்வம். ஒருத்தரும் சிக்கா விட்டால், நானே என் வாசகனாக இருந்து விட்டுப் போகிறேன் என்பதுதான் நான் நினைத்தது.

கே: ஒவ்வொரு படைப்புக்கும் தலைப்பை எப்படித் தேர்வு செய்தேன்?
ப: இந்த உலகத்தில் உள்ள எல்லாம் பற்றிப் பேச வேண்டும் என்பதே என் பேராசை. சர்ச்சைக்குரிய எல்லா விஷயத்திலும் சமச்சீரான ஒரு கருத்துக் கொண்டிருக்க வேண்டும் என்று ஆசைப் படுபவன் நான். ஆங்கிலத்தில் துலாம் இராசிக்காரனான நான், சரியான பக்கம் நிற்பதை விட சமமான இடத்தில் நிற்க விரும்புவது இயற்கைதானே. மற்றபடி, சர்ச்சைகள் எனக்குப் பிடிக்கவே பிடிக்காது. வாதத்துக்கு மருந்தே இல்லை என்று நம்புவோரில் நானும் ஒருவன். அந்த வகையில் பதிவுலகமும் நிறைய முதிர்ச்சி பெற்றிருக்கிறது. தன் கருத்துக்கு ஒத்து வராத மாதிரி யோசிப்பவர்களை எவரும் கண்டு கொள்வதில்லை. பொதுவாக, ஒத்து வரும் மாதிரியான பதிவர்களின் படைப்புகளை மட்டுமே நாம் வாசிக்கிறோம். இந்த வசதியும் பதிவுலகை நான் விரும்புவதற்கு இன்னொரு காரணம். விஷயத்துக்கு வருவோம்... நான் எழுத விரும்பும் விஷயங்கள் என்று என்னிடம் ஒரு மிகப் பெரிய பட்டியல் இருக்கிறது. ஒவ்வொரு நாளும் இது வளர்ந்து கொண்டே வருகிறது. இவற்றைப் பற்றி நேரம் கிடைக்கும்போது மட்டுமே எழுதுவேன். அது பொதுவாக வார இறுதி நாட்கள். இன்னொரு வகைத் தலைப்புக்கள் இருக்கின்றன. அவை ஒருபோதும் அந்தப் பட்டியலில் இடம் பிடிப்பதில்லை. நேரடியாக வந்து எழுத ஆரம்பித்து விடுவேன். அவைதான் எழுதியே ஆக வேண்டும் என்று கட்டாயப் படுத்தும் விஷயங்கள். பெரும்பாலும் நாட்டு நடப்புகள் பற்றிய விஷயங்கள். ஹரிஹரன் அவர்களின் இருபத்தி ஐந்தாவது இடுகையும் அப்படியொரு கட்டாயப் படுத்திய விஷயம். அந்தப் பெரிய பட்டியலுக்குள் நுழையாமலே பதிவுக்குள் வந்த ஒரு விஷயம். அவருடைய இடுகையைப் படித்த உடனேயே இதை எழுத ஆரம்பித்து விட்டேன். ஒருவேளை, அது வார இறுதியில் வந்ததும் ஒரு காரணமாக இருக்கலாம். :)

கே: தலைப்பை உண்மையிலேயே தேர்வு செய்தேனா அல்லது எழுதுவதற்குக் கட்டாயப் படுத்தப் பட்டு எழுதினேனா?
ப: இரண்டும். என் முந்தைய பதில் இதற்கான பதிலைச் சொல்லி விட்டது என நினைக்கிறேன். நீளமான பதில்கள் சொல்வதில் உள்ள வசதி இதுதான். :)

இதோ இவைதான் அவர் தன் சக பதிவர்களைக் கேட்டிருக்கும் கேள்விகள்...

கே: எதைப் பற்றி எழுதுவது என்பதை எப்படி முடிவு செய்கிறீர்கள்?எப்போதுமே கட்டாயப் படுத்தும் கதை ஒன்று உங்களிடம் இருக்கிறதா - அரசியல்க் கதையாகட்டும், சொந்தக் கதையாகட்டும், ஒரு காதல்க் கவிதையாகட்டும், புகைப்படம் ஆகட்டும், சமையல்க் குறிப்பு ஆகட்டும், வரலாற்றுச் சிறப்பு மிக்க ஓர் இடத்தைச் சென்று பார்த்த அனுபவமாகட்டும் - ஏதோவொன்றைப் பிறரிடம் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்கிற கட்டாயம் இருக்கிறதா? அப்படிக் கட்டாயப் பட்டு எழுத நேர்கையில் அதில் ஆய்வுக்கான பங்கு என்ன? ஆய்வு செய்யாமல் புதிய சிந்தனைகள் எப்படிக் கிடைக்கின்றன? புதுப் புது விஷயங்களில் எப்படிக் கருத்துக்கள் பெறுவது?
அல்லது முதலில் தலைப்பை முடிவு செய்து அதில் ஆய்வு செய்கிறீர்களா? அப்படியானால், உணர்வு பூர்வமாக அதில் எப்படி இறங்க முடியும்? அது அறிவார்ந்ததாகவும் படைப்பாற்றலுக்கு வேலையில்லாததாகவும் ஆகி விடாதா? அது கருத்தை விடப் படிவத்துக்கு முக்கியத்துவம் கொடுப்பதாகி விடாதா?
ப: கேள்வியின் சில பகுதிகள் ஏற்கனவே பதில் அளிக்கப் பட்டு விட்டன. பதில் அளிக்கப் படாத பகுதிகளுக்குப் பதில் அளிக்க முயல்வோம் இப்போது. பொதுவாக நான் பதிவிடும் விஷயங்கள் பற்றி அதிக அளவில் ஆய்வுகள் செய்வதில்லை. பெரும்பாலும் மனதில் ஏற்கனவே பதிவாகி இருக்கும் விஷயங்களையே இங்கு இறக்கி வைக்கிறேன். கருத்துருவாக்கமோ பிரச்சாரமோ நியாயப் படுத்தல்களோ செய்ய வேண்டிய கட்டாயம் இல்லாததால் தகவல்கள் பற்றி அதிகம் கவலைப் பட வேண்டியதில்லை. மாறாக, ஒரு பதிவன் என்ற முறையில் என் குழப்பங்களைப் பகிர்ந்து கொள்வதையும் அதன் மூலம் வாசிப்போரையும் குழப்பமடைய வைப்பதையும் அவர்களுக்கும் புதிது புதிதாகப் பல கேள்விகளை எழ வைப்பதையும் அதன் மூலம் அவர்களையும் பதில்கள் தேட வைப்பதையும் என் முதன்மையான கடமையாகக் கருதுகிறேன். மேலும், ஒரு சாப்ட்வேர் நிறுவனத்தில் முழு நேர ஊழியனாக இருந்து கொண்டு, எடுத்துக் கொள்ளும் எந்தப் பிரச்சனையிலுமே அதன் வேரை அடைய முயற்சிக்கும் அளவுக்கு எனக்கு ஒருபோதும் நேரம் கிடைக்கும் என்று தோன்றவில்லை. அவ்வாறு பிரச்சனைகளின் வேரை அடைந்தவர்களும் ஒரு வேரைத்தான் அடைந்திருப்பார்கள்; மற்ற பல வேர்களை மறந்திருப்பார்கள் அல்லது மறுத்திருப்பார்கள். எப்போதுமே இப்படித்தான் இருப்பேனா என்று தெரியவில்லை. இப்போதைக்கு எனக்குப் போதுமான அறிவு இல்லை; போதுமான வாசிப்பு இல்லை; எனவே, இப்படி இருப்பதே நல்லது. ஒருவேளை இன்னும் கொஞ்சம் அறிவாளியாகும்போது கருத்துருவாக்கங்கள் செய்து அவற்றைப் பற்றி வெளிப்படையாகப் பேசவும் செய்வேன். இப்போதைக்கு என் நிலைப்பாடு என்னவென்றால், இந்த உலகம் இவ்வளவு பிரச்சனைக்குரியதாக இருப்பதற்கு மூல காரணம் எல்லாத்தையும் ஏற்றுக் கொள்வோர் அல்ல; ஏற்கனவே ஏகப் பட்ட கருத்துக்கள் கொண்டிருப்போரே; எனவே எல்லாத்திலும் ஒரு பிடிவாதமான கருத்துக் கொண்டிருப்பதை விட எல்லாத்தையும் கேட்டுக் கொள்ளும் திறந்த மனம் கொண்டிருப்பதே மேல். மற்றபடி, மிக எளிதாக நிலைப்பாடு எடுக்க முடிந்த பிரச்சனைகளில் எனக்கும் கருத்துக்கள் இருக்கின்றன; நானும் அவற்றை நேரடியாகவே வெளிப் படுத்துகிறேன். மென்மேலும் படித்து உங்களைப் போன்ற பலரிடம் உரையாடி மற்ற விஷயங்களிலும் நான் இந்த நிலையை அடையலாம் ஒரு நாள்.

கே: அடக்க முடியாத ஏதோவோர் உள்ளுணர்வு உங்களை எழுதத் தூண்டுகிறதா? அல்லது பிறருடைய கவனத்தை ஈர்ப்பதற்காக எழுதுகிறீர்களா? 

இப்போதைய நிலவரத்தைப் (TREND) பார்த்து அதற்குள் குதிக்கிறீர்களா? எதார்த்தவாதம் எனலாம் அதை. அல்லது ஒரு விஷயத்தைப் பற்றித் தீவிரமாக உணர்ந்து அதுவே ஒருநாள் 'நிலவரம்' ஆகும் என்று உணர்கிறீர்களா? எதார்த்தவாதமா அல்லது இலட்சியவாதமா? எது உங்களை இயக்குவிப்பது?

ப: இரண்டுமே. ஏற்கனவே சொன்னது போல, நான் என்ன செய்து கொண்டிருந்தாலும் அதை நிறுத்தி விட்டு உடனடியாக அது பற்றி எழுதப் பணிக்கும் விஷயங்களும் உண்டு. என் நீண்ட பட்டியலுக்குள் இடம் பிடித்து நேரம் கிடைக்கும் போது மட்டும் எழுதப் படும் விஷயங்களும் உண்டு. இரண்டாவது வகை, என் கருத்துக்களையும் வெளிப்படுத்தி, கூட்டம் சேர்க்கவும் பயன்படுத்தப் படும் விஷயங்கள். கூட்டம் ஏன் சேர்க்க வேண்டும்? பிறர் கவனத்துக்காக ஏன் அலைய வேண்டும்? என் எழுத்துக்களை நிறையப் பேர் படித்து அவர்களுடைய கருத்துக்களைச் சொன்னால் என் எழுத்தாற்றலை மேன்மைப் படுத்த அது உதவும். வெளிப்படையாகச் சொல்ல வேண்டும் என்றால், எனக்கு விமர்சனங்களில் அதிக ஆர்வம் இல்லை. என்னை வாசிப்போர் என்னைப் பாராட்ட வேண்டும், என் தன்னம்பிக்கையை வளர்க்க வேண்டும், என்னை இதை விடப் பரவாயில்லாத எழுதுபவனாக மாற்ற வேண்டும் என்றே ஆசைப் படுகிறேன். எனக்கு ஒருவருடைய எழுத்து ஈர்க்காத போது அவர்களைக் கண்டு கொள்ளாமல் போய் விடுவேன். அவர்கள் எழுதியது குப்பை என்று ஒருபோதும் சொல்வதில்லை. அதையே நான் பிறரிடமும் எதிர் பார்க்கிறேன். மற்றபடி, குறிப்பிட்டுச் சொல்லப் படும் குறைபாடுகள் எனக்குப் பிடிக்கும். அவைதான் என்னைச் சரி செய்து கொள்ளவும் வளர்த்துக் கொளவும் உதவப் போகின்றவை. வேறுபாடு சரியாகப் புரிகிறது என்று கருதுகிறேன். ஒரு விஷயத்தைப் பற்றித் தீவிரமாக உணர்ந்து அதுவே ஒரு நாள் 'நிலவரம்' ஆகும் என்று உணர்கிறேனா? இல்லை. அபூர்வமாக அப்படி உணர்ந்திருக்கிறேன். மாறாக, நான் தீவிரமாக உணரக் கூடிய ஆனால் ஒருநாளும் அது ஒரு நிலவரம் ஆகாது என்று எண்ணக் கூடிய விஷயங்கள் நிறைய உண்டு. அவ்விஷயங்களைப் பற்றி நான் எழுதாமல் விட்டு விடுவதில்லை. அதைப் பெரும்பாலானவர்கள் மதிக்க மாட்டார்கள் என்று தெரிந்தும் யாரோ ஓரிருவர் அதை விரும்புவார்கள் என்ற நம்பிக்கையில் எழுதி விடுவேன். அதுவே எனக்குப் போதும். அதுவும் இல்லாவிட்டாலும் பரவாயில்லை. யார் மதித்தாலும் மதிக்கா விட்டாலும் என்றுமே நான் அவற்றைப் புரிந்து கொள்ள முடியும் என்ற நம்பிக்கையில் எழுதி விடுவேன். ஒருவேளை, நான் இதை விடப் பரவாயில்லாத எழுதுபவனாக ஆகையில் இவற்றை மேன்மைப் படுத்தி வேறுவிதமாக உலகத்தாருக்குப் படைக்கலாம். ஆனால், அவற்றை விட்டு விட்டுப் போவது மட்டும் இல்லை. ஏனென்றால், அவை விரிசல்களுக்குள் விழுந்து தொலைந்து போக நேரலாம்.

கே: எழுதும் போது மொழி மற்றும் அதன் தரம் பற்றிய உணர்வு எப்போதுமே இருக்குமா? எழுதி எழுதி அழித்து அழித்து எழுதும் பழக்கம் உள்ளதா? மேலும் சக்தி வாய்ந்ததாக மாற்ற ஒரு சொல்லையோ சொற்றொடரையோ அதை விடச் சிறப்பான ஒன்றைக் கொண்டு மாற்றி அமைப்பீர்களா? அல்லது கருத்தில் மட்டுமே கவனம் செலுத்துவீர்களா?
ப: ஆம். அந்த உணர்வு எப்போதும் உண்டு. ஒரு முறை முதல் வரைவு தயாரானதும் பெரும்பாலும் ஒரே ஒரு முறைதான் வாசித்துப் பார்ப்பேன். அதுவும் எழுத்துப் பிழைகளைச் சரி செய்யத்தான். மற்றபடி, தரம் பற்றி இப்போதைக்கு அதிகம் மண்டையை உடைத்துக் கொள்ள விருப்பம் இல்லை. முடிந்த அளவு உற்பத்தி செய்ய வேண்டும் முதலில். பின்னர், அளவிலாத நேரம் செலவிட்டு அவை ஒவ்வொன்றின் தரத்தையும் கூட்டிக் கொள்ளலாம். இப்போது அவை மிகவும் மோசமாக இல்லை என்றும் எண்ணுகிறேன். எனவே, அந்த எண்ணம்தான் என்னைத் திருத்தங்கள் செய்ய விடாமல் சோம்பேறியாக்குகிறது. இருப்பினும், பிற்காலத்தில் என் இடுகைகளின் தரத்தை மேன்மைப் படுத்த ஏகப் பட்ட நேரம் செலவிட வேண்டும் என்று எண்ணிக் கொண்டிருக்கிறேன். பிற்காலத்தில்தான்... இப்போதல்ல!


கே: வெளியிடும் முன் உங்கள் இடுகைகளைத் திரும்பத் திரும்பத் திரும்பப் படித்துப் பார்ப்பீர்களா? 
வாசிப்போர் உங்கள் கருத்தைப் புரிந்து கொள்ள முடியாதோ என்று கவலைப் படுவீர்களா? வாசிப்போரின் மனம் புண்படும் எனப் பயந்து அடக்கி வாசிப்பீர்களா? இடதுசாரி, வலதுசாரி, மதச்சார்பற்றவர் அல்லது பழமைவாதி போன்ற பெயரிடல்களுக்குப் பயந்து நேர்மையான உங்கள் கருத்துக்களை வெளியிடாமல் தவிர்ப்பீர்களா?
ப: ஆம். முடிந்த அளவு எந்த ஒரு பக்கமும் சாய்ந்து விடாமல் தப்ப முயல்வேன். பணியிடங்களில் பயின்ற நுட்பங்களைப் பயன்படுத்துவேன். எல்லா அப்ரைசல்களிலுமே முதலில் நல்லவற்றைச் சொல்லி விட்டுத்தானே அடுத்து கெட்டவற்றைப் பற்றிப் பேசுவார்கள். கெட்டவை அதிகமாக இருப்பினும் அதிக பிரச்சனைக்குரியவை எனினும் கூட, முதலில் நல்லவை பற்றித்தான் பேசுவேன். அதுதான் வாசிக்க வந்திருப்பவரைச் சரியாகத் தயார் படுத்தும். முதல் பத்தியிலேயே முடிவு சொல்வது போலப் பேசினால் அடுத்த பத்திக்கே போக மாட்டார்களே. என்னை ஒரு பெயர் சொல்லி அழைத்து விட்டு அவர்கள் அவர்களாகவே இருந்து விடுவார்கள்.

ஒருபோதும் யாரையும் புண்படுத்த விரும்பவில்லை. அதுபோலவே, என்னை யாரும் புன்படுத்துவதையும் நான் விரும்புவதில்லை. அப்ரைசல்களில் போலவே, நல்லதை மட்டுமே எடுத்துக் கொண்டு குறைகளை வசதியாக விட்டு விட்டுப் போவோரும் இருக்கிறார்கள். அதுதான் இந்த அணுகுமுறையின் மற்றொரு பக்கம்.

ஆம். அப்போதைய தேவை அதுதான் என்றில்லாத சில நேரங்களில் நான் நேர்மையாக இருக்க முயல்வதில்லை. அது சரியான எழுத்து தர்மம் அல்ல; அரசியல் ரீதியான அணுகுமுறை என்பதையும் அறிவேன். அதையே இப்படிச் சொன்னால் நேர்மறையாக இருக்கும் என நினைக்கிறேன் - உளவியல் ரீதியாக அது மேலான அணுகுமுறை!

ஆம். பெயரிடப் படல் எனக்கும் பிடிக்கவே பிடிக்காது. இவன் இப்படி என்று பெயரிடப்படுவதைத் தவிர்ப்பதற்காகவே ஒரு சில விஷயங்களில் என் கருத்தைக் கூட மாற்றிக் கொள்வேன். அது சரியில்லை என்பதை அறிவேன். ஆனால், முன்பு சொன்னது போல, ஆங்கிலத்தில் துலாம் இராசிக்காரன் என்பதால், பொதுக் கருத்து உருவாக்கலும் அமைதியும்தான் மற்ற எல்லாத்தையும் விட எனக்கு முக்கியம். மற்ற எல்லாத்திலும் போலவே, இதிலும் விதிவிலக்குகள் உண்டு. சில விஷயங்களில் இவன் இப்படித்தான் என்று பெயரிடப் படுதளுக்காகக் கவலைப் படுவதில்லை. 'இருக்கட்டும்' என்று விட்டு விடுவேன். 

கே: ஒவ்வொரு இடுகைக்குப் பின்பும் ஒரு சாதனை உணர்வு வருகிறதா? அல்லது இதை விடச் சிறப்பாகச் செய்திருக்கலாமே என்று நினைப்பீர்களா?
ப: ஆம். சாதனை உணர்வு வரத்தான் செய்கிறது. ஒவ்வொரு முறை இடுகைகளின் மொத்த எண்ணிக்கையைப் பார்க்கும்போதும் என் தன்னம்பிக்கை இன்னும் கொஞ்சம் கூடும். ஒருத்தர் பாராட்டி விட்டாலும், திருப்தி அடைந்து விடுவேன். அது மட்டுமில்லை, இதை விடச் சிறப்பாகச் செய்திருக்கலாமே என்றும் அடிக்கடி உணர்ந்திருக்கிறேன். ஆனால், மற்ற வேலைகளையும் நேரமின்மையையும் கருத்தில் கொண்டு அவற்றைப் பெரிது படுத்துவதில்லை.

கே: ஓர் இடுகை இடுவதைத் தவிர வேறொன்றும் செய்ய முடிய வில்லையே என்று ஆற்றாமையில் துடிப்பதுண்டா? எடுத்துக்காட்டாக, ஒரு தீவிரவாதிகளின் தாக்குதல் பற்றி எழுதிய பின்... அல்லது ஒரு பிச்சைக்காரரின் நிலையைப் படம் பிடித்த பின்... அல்லது சரியாகக் கண்டு கொள்ளப் படாத ஒரு கோயிலைப் பார்த்த பின்பு? அல்லது ஒரு பதிவர் என்ற முறையில் உங்கள் கடமையைச் செய்து விட்டதாகத் திருப்திப் படுவீர்களா?
ப: ஆம். ஆற்றாமையை உணர்வதுண்டு. அதையே இப்படிப் பார்ப்போம். நான் அடிக்கடிச் சொல்வதுண்டு - நான் எழுதுவதைக் காதலிப்பதற்கான ஒரு முக்கியமான காரணங்களில் ஒன்று, என் வெறுப்புகளை - வயிற்றெரிச்சலை ஏதோவொரு படிவத்தில் வெளிப்படுத்த இது உதவுகிறது; இன்னொருவர் மேலும் வெறுப்படையவும் என்னால் உதவ முடிகிறது; அதுவே கண்டிப்பாக என்றோ ஒருநாள் ஏதோவொரு மாற்றம் உண்டாக வழி வகுக்கும். ஓர் அமைதிப் புரட்சியில் பங்கு வகிப்பது போன்ற உணர்வு. பதிவுலகிலும் சமூக ஊடகங்களிலும் அதுதான் இப்போது நடந்து கொண்டிருக்கிறது. பல துளிகள் சேர்ந்து... ஒரு சமுத்திரம் உண்டாதல்!

கே: உங்கள் இடுகையில் வரும் கடுமையான கருத்துரை ஒன்றை எப்படி எடுத்துக் கொள்வீர்கள்? ஆதரவுக் கருத்தை விட அது மேல் என்பீர்களா? கருத்துரையே இல்லாமல் இருப்பதை விட அது மேல் என்பீர்களா? 
ப: இங்கும் நேர்மையாகவே இருக்க விரும்புகிறேன். அது போன்ற கருத்துரைகள் எனக்குப் பிடிப்பதில்லை. ஒருவரிடம் நேரடியாகப் பேசுவதில் மற்றும் எழுதுவதில் ஒரு குறிப்பிட்ட அளவு நாகரிகம் காக்க வேண்டும் என்று ஆணித் தரமாக நம்புகிறேன். எனக்குப் பிடிக்காத விஷயங்களைக் கண்டு கொள்ளாமல் போவதற்காவது எனக்கு முதிர்ச்சி இருக்கிறது. குறைந்த பட்சம், பிறரிடம் இருந்து இதை நான் எதிர் பார்க்கிறேன். இருப்பினும், என்னைத் திருத்திக் கொள்ளவும் மேன்மைப் படுத்தவும் கொடுக்கப் படும் - குறிப்பிட்டுச் சொல்லும்படியான கருத்துக்களை ஏற்றுக் கொள்ளும் திறந்த மனம் எனக்குண்டு. சகிப்பின்மையை ஆக்கபூர்வமான விமர்சனம் என்று ஏற்றுக் கொள்ள முடியாது. அவை வெவ்வேறு. அந்த வேறுபாடு எனக்குத் தெரியும் என்றே நினைக்கிறேன். இந்த விஷயத்தில் நான் சரி என்றே எண்ணுகிறேன்! :)

மற்றபடி, 'கேவலமான நடத்தை'யைக் கேவலமான சொற்கள் கொண்டுதான் விமர்சிக்க வேண்டும் என்றும் அழுத்தமாக நம்புகிறேன். 

கே: இந்தக் கேள்விகளுக்கெல்லாம் உங்கள் பதில் ஓர் 'ஆம்' அல்லது 'இல்லை'யா? அல்லது இரண்டுக்கும் நடுவில் எங்கோவா?
ப: இரண்டும். 'ஆம் அல்லது இல்லை' மற்றும் 'இரண்டுக்கும் நடுவில்' ஆகிய இரண்டுமே.

கருத்துகள்

  1. பாரதிராஜா அவர்களே, உறக்கமின்றி நள்ளிரவில் விழிக்க நேர்ந்தது, எனது வலைப்பதிவில் நுழைந்தேன். என் சமீபத்திய இடுகையை சற்றே மெருகேற்ற அல்லது என் வலைப்பக்கத்தை மாற்று உருவாக்கம் (வடிவமைப்பு) செய்யலாம் என்று க்ளிக்கினேன். எப்படியோ தங்களின் இந்தப் பக்கம் கண்ணில் பட்டது.

    சக நண்பர் ஹரிஹரன் எழுப்பிய 3 கேள்விகள், பதில்களை மேற்கோள்காட்டிய தங்கள் பதிவைக்கண்டு சற்றே அதிர்ந்து போனேனா மெய்சிலிர்த்துப்போனேனா என்று புரியவில்லை.

    நண்பர் ஹரிஹரனின் மனஓட்டம், வலையுலகில் அவரது சமீபத்திய வெள்ளிவிழாப்பதிவு இன்னபிற கருத்துக்களை தங்கள் பதிவு வாயிலாகப் படித்தபின், சற்றே நான் என்னைக் கிள்ளிப்பார்த்துக்கொண்டேன். காரணம், யார் இந்தப் பாரதிராஜா சார், என்னைப்பற்றி அசரீரி கேட்டதுபோல அச்சு அசலாக என் மன ஓட்டத்தை டெலிபதியில் படித்தது போல அப்படியே எழுதியுள்ளாரே என்று ஒருக்கணம் தோன்றியது. பின் தான் பகுத்தறிவு என்னை நிஜ உலகிற்கு மீண்டும் அழைத்து வந்தது.

    'நம்மைப்போலவே பலரும் இப்படித்தான் வலையுலகில் உலா வருகிறார்கள் போலும்' என்று என்னைத் தேற்றிக்கொண்டேன்.


    நண்பர் ஹரிஹரனின் பார்வை, கருத்துருவாக்கம், அந்த 3 கேள்விகளுக்கான அவர்தம் பதில் தரும் பாங்கு நூற்றுக்கு நூறு என் இயல்போடு ஒத்துப்போனது எந்த விதமான தற்செயல் அனுபவம் என்று எனக்கு சிலிர்க்கிறது.

    நானும் கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளாக அவ்வப்போது என் மன ஓட்டத்தை பல பரிமாணத்தில் என் இடுகைகளாக பதிவுசெய்துவருகிறேன். மொத்தம் 3 வலைப்பக்கங்களை எனக்காக தெரிவுசெய்து கொண்டு தமிழுக்கு ஒன்று, ஆங்கிலத்திற்கு ஒன்று, பின் பொதுவாக அக்கப்போர், ஜோக்ஸ் இன்ன பிற என்று வகை பிரித்து நேரம் கிட்டும்போதெல்லாம் எழுதிவருகிறேன்.

    நானும் கிட்டத்தட்ட 20 பதிவுகளை நெருங்கிவருகிறேன். நினைவில்லை (3 பக்கங்களையும் சேர்த்து). ஆங்காங்கே மறு பதிவுகளும் (ஒரு பக்கத்தில் வந்தது வேறுபக்கத்திலும் வந்திருக்கக்கூடும்). இந்த விஷயத்தில் நிறைய அக்கறை எடுத்துக்கொள்ளவில்லை, மறுபதிவுகளை (ஓரே பதிவை ஒன்றுக்குமேல் பக்கங்களில் பதிவுசெய்வது) தவிர்க்கவேண்டும் என்று உள்ளுணர்வு சொல்கிறது.

    மேலும் என் கருத்துக்களை எழுத சற்று அவகாசம் தேவை. பிறகு வருகிறேன். நன்றி. மேன்மேலும் எழுதத் தூண்டிவிட்டீர்கள் என்று மட்டும் சொல்லிக்கொள்ள விழைகிறேன்.

    என் பக்கங்களில் வடிவமைப்பை மாற்றவேண்டியுள்ளது. பின் என் பதிவுப் பக்கங்களைப் பகிர்ந்து கொள்கிறேன்.
    நன்றி, வணக்கம், சோலையூரான்.

    பதிலளிநீக்கு
  2. சோலையூரான் அவர்களே. மிக்க நன்றி. நீங்கள் சொல்லும் ஒவ்வொன்றும் கேட்கக் கேட்க இனிக்கிறது. படித்தால் திரு. ஹரிஹரன் அவர்களும் மகிழ்வார். நீங்கள் இழந்த தூக்கத்தால் கிடைத்த மகிழ்ச்சி எனக்கு மகிழ்ச்சியான தூக்கத்தைக் கொடுக்கும் அளவுக்கு உள்ளது. :)

    நிறைய எழுதுங்கள். கலக்கத்தானே இணையம். மீண்டும் சந்திப்போம்.

    முன்பே ஒருமுறை என் வலைப் பதிவுக்கு வந்திருக்கிறீர்கள் என நினைக்கிறேன். சிங்கப்பூர் பற்றிய இடுகையில் உங்கள் கருத்துரை இருக்கிறது. நானும் உங்கள் இடுகைகளை வாசித்திருக்கிறேன். ஆங்காங்கே சில கருத்துரைகளும் இட்டிருக்கக் கூடும்.

    பதிலளிநீக்கு
  3. முக்கியமாக ஒரு விஷயம் - முதல் பகுதியில் கொடுக்கப் பட்டிருக்கும் கேள்விகள் ஹரிஹரன் அவர்களுடையவை. பதில்கள் என்னுடையவை. பதில்களும் அவருடையவை அல்ல. அப்படித்தான் நீங்கள் எடுத்துக் கொண்டிருப்பது போலத் தெரிகிறது. :)

    பதிலளிநீக்கு
  4. நன்றி. இத்தனை சீக்கிரம் பதில்வரும் என்று எதிர்பார்க்கவில்லை. தாங்கள் இந்தியாவில் உள்ளீர்கள் என்று மட்டும் புரிகிறது.

    இங்கே எனது மூன்று வலைப்பக்கங்களையும் அளித்துள்ளேன். நேரம் கிட்டும்போது வாருங்கள், பின்னூட்டம் தாருங்கள், சற்றே மெருகேற்றியபின் என் பக்கங்கள் இன்னமும் பார்க்க, படிக்கத் தூண்டும் என்று நம்புகிறேன்.

    ஆங்கிலத்தில் சொல்வது போல கருத்துக்களை எழுதக் கொடுத்த நேரத்தை பக்கங்களை வடிவமைக்க, மாற்றியமைக்க செலவிடவில்லை. இன்னமும் வளர வேண்டும் என்றுமட்டும் உள்மனது சொல்கிறது.

    தங்களின் மேலான ஆதரவுக்கு மிக்க நன்றி.

    http://singaisivas.wordpress.com/
    http://simplyfutureperfect.blogspot.com/
    http://solaiyoooran.blogspot.com/

    பதிலளிநீக்கு
  5. தங்களின் யூகம் சரி. நான் அப்படித்தான் புரிந்துகொண்டேன், முதலில். தெளிவு தந்தமைக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  6. ஆம். இந்தியாதான். கண்டிப்பாகப் படிக்கிறேன். தொடர்ந்து எழுதுங்கள். அதெல்லாம் தானாகவே வரும். வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  7. பரவாயில்லை. நன்றி. மீண்டும் சந்திப்போம்.

    பதிலளிநீக்கு
  8. I am impressed with your translation. Your Tamil is very powerful. (How do you type in Tamil, by the way? I would like to blog in Tamil.)

    பதிலளிநீக்கு
  9. Thanks you so much, sir. You may look for "Google Transliteration", download and install it in your system. It will help you type in Tamil anywhere. Or, you may directly type in www.google.com/transliterate/tamil page if you are typing something very short. You may also directly type in Tamil in Blogger if you have selected Tamil as your other language in Settings. Please try and let me know. I shall help you set it up.

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம் - ஜெயகாந்தன்

"நான் என்னை ஒரு மேதையும் புனித வேசியும் போல் உணர்கிறேன்": அலெஹாண்ட்ரோ ஜோடராவ்ஸ்கிக்குச் சில கேள்விகள்

சாம, தான, பேத, தண்டம்