கல்லூரி வாழ்க்கை - ஆதித்தனார் கல்லூரி, திருச்செந்தூர் (4/6)

விடுதி நாள் விழா & கல்லூரி நாள் விழா
விழாக்களுக்கெல்லாம் முத்தாய்ப்பாக ஆண்டிறுதியில் விடுதி நாள் விழா நடைபெறும். விடுதி நாள் விழா என்பது ஒரு நாள் விழா அல்ல. அந்த வாரம் முழுவதும் நடக்கும் பெருவிழா. வாரம் முழுக்க வித விதமாக நிறையப் போட்டிகள் நடக்கும். அவை எல்லாவற்றிலும் முக்கியமானது கிரிக்கெட் தொடர். உலகக் கோப்பை ரேஞ்சுக்கு பல அணிகள் மோதி அரையிறுதி, இறுதிப் போட்டிகள் எல்லாம் தாண்டி வெல்ல வேண்டும். கபடி, கைப்பந்து, அந்தப் பந்து, இந்தப் பந்து என்று மற்ற பல விளையாட்டுப் போட்டிகளும் நடக்கும். அதற்கெல்லாம் முடிவாக விழா நடக்கும். விழாவில் பல கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்ற போட்டிகளுக்குப் பரிசுகள் வழங்கலும் நடைபெறும். எல்லாவற்றுக்கும் மேலாக, அந்த ஆண்டு வெளியேறிச் செல்லும் சிலர் பிரிவுபச்சார உரையாற்றுவார்கள். ஒவ்வோர் ஆண்டும் அதில் ஒருத்தர் கலக்கி எடுப்பார். நான் மூன்றாம் ஆண்டு வரும்போது அந்த ஒருவர் நாமாக இருக்க வேண்டும் என்று எவ்வளவோ திட்டங்கள் போட்டிருந்தேன். கடைசியில் விழாவே நடக்க இல்லை. அது ஏன் என்கிறீர்களா? அது ஒரு பெரிய கதை. இன்னும் சில வாரங்கள் பொறுத்திருங்கள். அதையும் பேசி விடுவோம்.

ஆனால், ஒவ்வொரு துறையிலும் இருக்கும் மூன்றாமாண்டு மாணவர்கள் மட்டும் அவர்களுக்குள்ளாகவே ஏற்பாடு செய்து ஒரு பிரிவுபச்சார விழா எடுத்துக் கொள்வார்கள். எல்லோரையும் போல், கணிப்பொறியியல் மூன்றாமாண்டு மாணவர்கள் மட்டுமாக நாங்களும் ஒரு சிறிய விழா எடுத்துக் கொண்டோம். கல்லூரி முதல்வர் கலந்து கொண்டார். பயங்கர உணர்ச்சிப் பெருக்கெடுத்து நானும் அதில் ஓர் உரையாற்றி மனதைத் தேற்றிக் கொண்டேன். எங்கள் துறைத் தலைவர் பேராசிரியர் சேதுராமலிங்கம் அவர்கள் பேசும்போது "உங்கள் நண்பர்களுடன் காலம் முழுவதும் தொடர்பு வைத்துக் கொள்ளுங்கள்!" என்று சொன்னார். அந்த அறிவுரை அன்றைக்கு மிகவும் பிடித்தது. அதன் பிறகு அதை எவ்வளவுக் கடைப் பிடித்தோம் என்பது வேறு கதை. மற்ற துறை நண்பர்களை விட நாங்கள் பரவாயில்லை. கணிப்பொறியின் துணையோடு கதையை ஓட்டிக் கொண்டிருக்கிறோம். தனிப்பட்ட முறையில் எனக்கும் ஓர் அறிவுரை சொன்னார். "இந்தப் பேச்சு, எழுத்து இதையெல்லாம் அப்படியே விட்டு விடாதே. இந்தத் திறமைகள் வேலைக்குப் போகும் போதும் பயன்படும்!" என்றார். அதனால், எவ்வளவு சம்பளம் கிடைத்தது என்றெல்லாம் கேட்கக் கூடாது. ஆனால், அந்த அனுபவம் பல இடங்களில் கை கொடுத்தது என்றுதான் சொல்ல வேண்டும்.

அதுபோலவே, கல்லூரி நாள் விழா ஒரு முக்கியமான நிகழ்ச்சி. பொதுவாக மார்ச் மாதம் வரும். பிரிவுக்குச் சற்று முன்பு நடப்பதால் மூன்றாம் ஆண்டு மாணவர்களுக்கு அது ஒரு மிக முக்கிய நாள். பிரியப் போகிற ஓர் உறவோடு சேர்ந்து சுவைக்கும் ஒவ்வொரு நல்ல நிகழ்வும் முக்கியமானதுதானே. மிகப் பிரம்மாண்டமாகவும் நடைபெறும். கண்டிப்பாக சின்னையா (உயர்திரு. சிவந்தி ஆதித்தன் அவர்களை அந்தப் பகுதியில் எல்லோருமே இப்படித்தான் அழைப்போம்!) இருப்பார். அவருடைய செல்வாக்கைப் பயன்படுத்தி, சிறப்பு விருந்தினராக யாரேனும் ஒரு பெரும்புள்ளியை அழைத்து வருவார்கள். அதையெல்லாம் பார்க்கிறபோது நாம் சாதாரணக் கல்லூரியில் படிக்கவில்லை என்ற ஓர் உணர்வு வரும். அன்று மதியம், இருவருக்கும் (சின்னையாவுக்கும் சிறப்பு விருந்தினருக்கும்) தேசிய மாணவர் படையின் அணிவகுப்பு மரியாதை அளிக்கப் படும். அதற்கான பயிற்சியே ஒரு மாதத்துக்கும் மேலாக நடக்கும். டெல்லி செங்கோட்டையில் நடக்கும் அணிவகுப்பு மரியாதையிலேயே கலந்து கொண்டு விட்ட மாதிரி ஓர் உணர்வு கிடைக்கும். அணிவகுப்பின் போது இசைக்கப் படும் பின்னணி இசை, பின்னணியில் கடல் மற்றும் பல வண்ணங்களில் கொடிகள் பறக்கும் சூழல் என்று எல்லாம் புல்லரிக்க வைக்கும். அப்பப்பா, இப்போது நினைத்தாலும் புல்லரிக்கிறதப்பா. முதல் இரண்டாண்டுகள் நானும் அதில் பங்கெடுத்தேன். மூன்றாம் ஆண்டு விருப்பம் இல்லாமல் என்.சி.சி.யில் தொடர வில்லை. சுதந்திரம் பறிபோவதாகச் சொல்லி சுதாரித்துக் கொண்ட ஆட்களில் நானும் ஒருவன். இரவு நடைபெறும் கலை நிகழ்சிகள் பட்டையைக் கிளப்பும். அனைத்து நிகழ்ச்சிகளுமே மிகத் தரமாக இருக்கும். ஒரு மாதத்துக்கும் மேலான பயிற்சி என்றால் சும்மாவா? நான் கல்லூரி நாள் விழா மேடையில் ஏறியதாக நினைவேதும் இல்லை. அதுதான் நிகழ்ச்சிகள் அனைத்தும் தரமாக இருக்கும் என்று சொல்லி விட்டேனே. அதிலேயே சொன்ன மாதிரித் தானே.

உலகின் எந்தெந்த மூலைகளுக்குச் சென்றாலும் வருடத்தில் அந்த ஒரு வாரம் மட்டும் தன் சொந்த மண்ணுக்காக என்று ஒதுக்கி வைத்திருக்கிறார் சின்னையா. கல்லூரி நாள், அடுத்து திருச்செந்தூர்க் கோயிலில் தேரோட்டம் (அவர்தான் வடம் பிடித்து இழுத்து ஆரம்பித்து வைப்பார்!), அடுத்து சொந்த ஊரான காயாமொழியில் கோயில்க் கொடை, அடுத்து சேரன்மாதேவியில் இருக்கும் சன் பேப்பர் மில்லில் விழா என்று அந்த வாரம் முழுக்க சொந்த ஊரைச் சுற்றியே இருப்பார். அந்த நேரத்தில் நடு இரவில் உள்ளூர் உறவினர்களோடு சேர்ந்து வேட்டைக்கெல்லாம் போவார் என்று கேள்விப் பட்டிருக்கிறேன்.  ஆகா! என்ன ஒரு வாழ்க்கை! இப்படியொரு வாழ்க்கைக்குத்தானே எல்லோருமே ஏங்குகிறோம்? அவர் மட்டுமில்லை. தென் தமிழகத்து நாடார்கள் எல்லோருமே இப்படியொரு சூப்பரான வழக்கத்தை வைத்திருக்கிறார்கள். வருடத்தில் ஒரு வாரம் ஊருக்கு ஒதுக்கி, பங்குனிப் பொங்கல் அல்லது கோயில்க் கொடைக்கு குடும்பத்தோடு வந்திருந்து மகிழ்ச்சியாக இருந்து விட்டுப் போவார்கள். சென்னை வாழ், மும்பை வாழ், பெங்களூர் வாழ் தென்னகத்தார் பலர் வீடுகளில் உள்ள குழந்தைகளிடம் கேட்டால் அவர்களுடைய வாழ்க்கையில் அதிகம் மகிழ்ந்த நாட்களில் ஒவ்வோர் ஆண்டும் வரும் இந்த ஒரு வாரம் கண்டிப்பாக இருக்கும். கேட்டுப் பாருங்கள். இது போல நம்ம ஊரிலெல்லாம் இல்லையே என்று பொறாமையாக இருக்கும்.

சனி-ஞாயிறு, கிரிக்கெட், கடற்கரை
இப்போது  விடுதி நாள் விழாக் கிரிக்கெட் தொடருக்கு வருவோம். அதற்கு வேண்டிய பயிற்சியை நாங்கள் கல்லூரியில் சேர்ந்த முதல் நாளே ஆரம்பித்து விடுவோம். நான்கு மணிக்குக் கல்லூரி முடிந்ததும் ஓடி வந்து சரியாக 4:15 க்கு ஆரம்பித்து விடுவோம். இருட்டும் வரை ஆட்டம் நடைபெறும். சதுரமான விடுதியில் நடுப்பகுதி மரங்கள் நிறைந்த மைதானம். சற்று சிறிய மைதானம். அதுதான் வசதியே. நிறையப் பேர் சிக்சர் அடித்துப் பழகுவதே அங்கு வந்த பின்புதான். அது கொடுக்கிற நம்பிக்கையில் பின்னர் பெரிய பெரிய மைதானங்களிலும் விலாச ஆரம்பித்து விடுவோம். கடற்கரை ஓரம் என்பதால் மைதானம் முழுக்க மணலாக இருக்கும். எனவே, விழுந்து விழுந்து பிடிக்கவும் பிடிக்கிற மாதிரி நடிக்கவும் வசதியாக இருக்கும். மரங்கள் வேறு இருப்பதால் கேட்ச் என்பது திறமை மட்டுமின்றி ஓரளவு விதியும் சார்ந்தது. சிக்சர் போக வேண்டிய பந்து கூட மரத்தில் பட்டால் கேட்ச் ஆகி விடும். கேட்ச் ஆக வேண்டிய ஷாட்டுகள் கூட சில நேரம் மரத்தால் காப்பாற்றப் பட்டு விடும். மரத்தில் பட்டு, ஒவ்வொரு கிளையிலும் தட்டி அது கீழே விழும் முன், நம் பீல்டர் இங்கிட்டும் அங்கிட்டும் தள்ளாடி அதைப் பிடிக்கும் அல்லது விடும் காட்சி அவ்வளவு அழகாக இருக்கும். பந்தை விட்டு மரத்தில் இருந்து விழும் பழத்தைப் பிடித்த காட்சிகளும் உண்டு. சிலர் பேட்டிங் அதிகம் விரும்புவார்கள். சிலர் பவுலிங் அதிகம் விரும்புவார்கள். சிலர் ஆல்-ரவுண்டர். நான் ஆல்-ரவுண்டர். இரண்டும் நன்றாகச் செய்வோருக்கும் இரண்டிலும் சொதப்புவோருக்கும் ஒரே பெயர்தானே.

சனி-ஞாயிறுகளில் வெறித்தனமாக விளையாடுவோம். கூடுதலான ஆட்கள் வந்து சேர்வார்கள். பேருந்து நிலையம், கடற்கரை, கோவில்ப் பக்கம் போவோரும் வெயிலில் வெளியில் சுற்ற முடியாது என்பதால் பகலில் உள்ளேயே இருப்பார்கள். அவர்களையும் சேர்த்துக் கொள்ளலாம் அல்லவா! சனிக்கிழமை காலையில் பொங்கலைத் தின்று விட்டு ஆரம்பித்தால் மதியச் சாப்பாட்டுக்குள் எதற்கும் கரையாத அந்தக் கல்லுப் பொங்கல் கரைந்து பசி பட்டையைக் கிளப்ப ஆரம்பித்து விடும். இந்தப் பொங்கல் எங்கள் வாழக்கையில் மிக முக்கியமான ஒன்று. முதல் நாள் அதைச் சாப்பிடும் எல்லோருமே 'ஏன்டா இந்த விடுதியில் வந்து மாட்டினோம்?' என்று நொந்து நூலாகி விடுவார்கள். அன்றிரவு வீட்டுக்குப் போன் பேசும்போது கண்டிப்பாக அந்தப் பொங்கல் பற்றிப் பேசியிருப்பார்கள். சொல்லி வைத்த மாதிரி அடுத்த ஓரிரு மாதங்களில் எல்லோருமே அந்தப் பொங்கல் மீது மீள முடியாக் காதலில் விழுந்து விடுவார்கள். இது ஒவ்வொரு வருடமும் தொடர்ந்து கொண்டிருக்கும் உலக அதிசயம். 'அதெப்படி அவ்வளவு வெறுக்கப் பட்ட ஒன்று அவ்வளவு விரும்பும் படி மாறுகிறது!' என்று வியக்க வைக்கும் சக்திகளில் பொங்கலும் ஒன்றா என்று வியப்பாக இருக்கிறதா?

சனி ஞாயிறுகளில் வேறு சில வேலைகளும் நடக்கும். அதில் ஒன்று கடலுக்குக் குளிக்கச் செல்தல். அது போக, குளிக்காமல் வேடிக்கை பார்க்க, பவுர்ணமி இரவுகளில் கடற்கரைக்குச் செல்வோம் (அமாவாசை இரவுகளிலும் செல்வோர் உண்டு. அவர்கள் வேறு விதமான கூட்டம்!). செல்வோம் என்றால் ஏதோ நான்கைந்து பேர் இல்லை. முக்கால்வாசி விடுதியே வரும். இரவுக்குப் பயந்த என் போன்ற வேறு சிலர் மட்டுமே விடுதியிலேயே இருந்து விடுவார்கள். ஆளே இல்லாத விடுதியில் இருக்கப் பயந்து கூட்டத்தோடு சேர்ந்து கடற்கரைக்கே போவது மேல் என்றெண்ணி அணி சேர்ந்து கொண்டதும் உண்டு. அலை அதிகமாக அடிக்கும். பயங்கர சப்தம் எழுப்பும். அலையின் மூர்க்கத்தனம் கண்டு மனம் அரளும். முதன் முதலில் கடல் பார்த்தபோது அடுத்த நிமிடம் கடலில் மூழ்கி உலகம் அழியப் போவது போல ஒரு பயம் வந்தது என்பதைச் சொல்லி இருந்தேன். அதன் பின்பு தினமும் அதைப் பார்த்துப் பார்த்து அந்த பயம் குறைந்து விட்டது. அந்த பயம் ஓரளவு நினைவு படுத்தப் படுவது பவுர்ணமி நாளில் தான்.

அப்படிக் கடல் பார்க்கப் போகும் இரவுகளில் இன்னொரு வேலையும் நடக்கும். வரும்போது ஏகப்பட்ட நண்டுகள் பிடித்து வருவோம். எனக்கு அந்தக் கலை கடைசி வரை கைவரவே இல்லை. ஆனால், சில நண்பர்கள் சூப்பராகப் பிடிப்பார்கள். பிடித்து வந்து மசால் தேய்த்து சூப்பராகச் சமைத்தும் கொடுப்பார்கள். நண்டின் சுவையும் என்னை இன்று வரை ஈர்க்க வில்லை. சும்மா உடன் இருப்பேன். அவ்வளவுதான். ஒருநாள் அதிகாலை நான்கு மணி வரை இந்த விளையாட்டு தொடர்ந்தது. எனக்கு எப்போதுமே சுலபமாகத் தின்ன முடிந்த பொருட்கள் மட்டுமே பிடிக்கும். கொட்டைகளைப் பிரித்துத் தின்றல், தோலை உரித்துத் தின்றல், எலும்பைப் பிரித்துத் தின்றல் ஆகிய நுணுக்கங்கள் கற்க ஆர்வமே வரவில்லை. எவ்வளவு சுவையாக இருப்பினும் அதற்காகக் கூடுதல் உழைப்பைப் போட வேண்டும் என்றால் அப்பொருட்களை எனக்குப் பிடிக்காமல் போய் விடும். வாழைப்பழச் சோம்பேறி என்பார்களே. அதன் அர்த்தம் தெரியாதவர்கள் இப்போது புரிந்து கொள்ளுங்கள். நான்தான் அது.

திருட்டுத் திரைப்படங்கள்
பள்ளிக்காலம் முதல் இன்றுவரை எனக்கு மிக மிகச் சிரமமான வேலைகளில் ஒன்று - லீவ் போடுவது. எப்போதுமே யாரையுமே நிற்க வைத்துக் கேள்வி கேட்க அனுமதிப்பதில் சுத்தமாக ஆர்வம் இருப்பதில்லை. இன்னொருவர் அனுமதித்துச் செய்யும் ஒரு வேலையை செய்யவே வேண்டாம் என்று கூடத் தோன்றும். அதனால், எவ்வளவோ பிரச்சனைகள் வந்ததுண்டு. கல்லூரி என்றாலே வகுப்புக்கு மட்டம் போடுவது (கட் அடித்தல்) ஒரு முக்கியமான அனுபவம் அல்லவா? முதலாமாண்டு படித்த போதும் சரி, இரண்டாமாண்டு படித்த போதும் சரி, நண்பர்கள் எல்லோருமே சாதாரணமாகக் கட் அடிப்பார்கள். அந்த நேரத்தைப் பல பயனுள்ள வேலைகளுக்குப் பயன் படுத்திக் கொள்வார்கள். அதில் படத்துக்குப் போவது முதல் ஊர் சுற்றுவது வரை எத்தனையோ வேலைகள் அடக்கம். மூன்றாமாண்டு படிக்கும்போதுதான் நானும் அதை ஓரளவு செய்ய ஆரம்பித்தேன். படம் பார்ப்பதற்காகக் கட் அடித்தது என்பது மிகக் குறைவு. ஆனால், கட் அடித்து விட்டுப் படுத்துத் தூங்குவது நிறையச் செய்திருக்கிறேன்.

சின்ன வயதில் இருந்தே திரைப்படங்களில் எப்போதுமே எனக்கு ஆர்வம் இருந்ததில்லை. திரைப்படம் என்பது சராசரி மக்களின் பொழுதுபோக்கு; நான் சராசரி அல்ல என்றோர் ஆணவச் சிந்தனையில் ஆரம்பித்து, அதன்பின் எந்தக் காரணத்துக்காகவும் அவற்றின் மீது ஈர்ப்பு ஏற்படுத்திக் கொள்ளவே முடியவில்லை. விடுதி மாணவர்கள் என்றாலே அவர்களுடைய முக்கியமான நினைவுகளில் ஒன்றாக இருப்பது - திருட்டுத் தனமாக சினிமாப் பார்ப்பது. கல்லூரிகளில் அதன் சாகசத் தன்மை கொஞ்சம் குறைவு. ஏனென்றால், வார இறுதியில் சனிக்கிழமை இரவு படம் பார்ப்பதற்காகவே அவிழ்த்து விட்டு விடுவார்கள். அப்புறம் ஏன் திருட்டுத் தனமாக அதையே செய்ய வேண்டும்? "அவர்கள் என்ன விடுவது? நாமாகவே போக வேண்டும்!" என்று மற்ற நாட்களில் படம் பார்க்கப் போகும் சாகச வேலைகளை வழக்கமாகச் செய்யும் ஒரு கூட்டம் எல்லா வருடமுமே இருக்கும் என நினைக்கிறேன். எங்கள் செட்டிலும் இருந்தார்கள். 'வருத்தப் படாத வாலிபர் சங்கம்' போல் ஒரு சங்கம் வைத்திருந்தார்கள் எங்கள் செட்டில் சில நண்பர்கள். இரண்டாம் ஆண்டு - மூன்றாம் ஆண்டு படிக்கும்போது கிட்டத்தட்ட தினமும் இரண்டாம் காட்சிக்குப் போய் விடுவார்கள். அதே படத்தைக் கூடத் திரும்பத் திரும்பப் பார்ப்பார்கள். ஆனால், ரூமில் படுத்துத் தூங்க மாட்டார்கள்.

திருச்செந்தூரில் ஐந்து தியேட்டர்கள் இருந்தன. விட்டால், ஆறுமுகநேரியில் கொஞ்சம் தியேட்டர்கள் இருந்தன. ஆத்தூரில் ஒரு தியேட்டர் இருந்தது. எங்கள் நண்பன் மாதவனுடைய தியேட்டர். அவன் இருந்தால் அன்று படம் இலவசம். ஆறுமுகநேரிக்கும் ஆத்தூருக்கும் முன்பே இருந்த காயல்பட்டினத்தில் தியேட்டர் கிடையாது. ஆறுமுகநேரியும் காயல்பட்டினமும் மூன்று கிலோ மீட்டர் இடைவெளியில் அடுத்தடுத்துள்ள இரு நகரங்கள். சில நண்பர்கள் தூத்துக்குடி வரை கூடச் சென்று வருவார்கள். பஸ்ஸில் போக வரவே இரண்டரை மணி நேரம் வேண்டும் என்பதால் அது வார இறுதி விடுமுறை நாட்களில் மட்டுமே முடியும்.

மூன்றாம் ஆண்டு படிக்கும்போது நானும் அந்தச் சங்கத்தில் பகுதி நேர உறுப்பினரானேன். அதாவது, எப்போதாவது சில படங்களுக்கு மட்டும் போவேன். போவது எளிது. அங்கே போகிறேன் இங்கே போகிறேன் என்று சொன்னால் விட்டு விடுவார்கள் காவலாளிகள். பள்ளி விடுதி போல சிறை விதிமுறைகள் எல்லாம் கிடையாது. இரவு திரும்பும்போதுதான் பிரச்சனை. இதற்குப் பல வழிகள் உண்டு. கேட்டில் ஏறிக் குதிப்பது எளிதான வழி. காவல்காரர் விழித்து விட்டால் சோலி முடிந்தது. மறுநாள் அத்தனை பேருடைய அப்பாவும் எங்கள் வார்டனையும் திருச்செந்தூர் முருகனையும் பார்க்க வர வேண்டியதாகி விடும். அதனால், முழு நேர சங்க உறுப்பினர்கள் காவல்காரர்களை அவ்வப்போது கவனித்து வைப்பார்கள். அதற்குப் பதிலுதவியாக அவர்கள் அந்த நேரத்தில் மட்டும் கேட்டைத் திறந்து வைப்பார்கள் அல்லது ஏறிக் குதிப்பதைக் கண்டு கொள்ள மாட்டார்கள்.

இந்தக் 'கவனிக்கும் வேலை' விடுதி விதிமுறைகளின்படி குற்றம். வார்டனுக்குத் தெரிந்தால் நடவடிக்கை பாயும். ஆனால், கொடுப்பவர்களும் வாங்குபவர்களும் எப்போதுமே இருந்து கொண்டுதான் இருப்பார்கள். பொழுதுபோக்குப் பிரியர்கள் காவல்காரர்களைக் கவனிப்பது போல், தீனிப் பிரியர்கள் சமையல்காரர்களைக் கவனிப்பார்கள். அவர்கள் மட்டும் எல்லோரும் சாப்பிட்டு முடிந்த பின் போவார்கள். எல்லாமே அளவுக்கு அதிகமாகக் கிடைக்கும். அசைவம் போடும் நாட்களில் கொடுத்த காசை எடுத்து விடுவார்கள் தின்னிச் சாமிகள். தேடிச் சென்று கொடுப்பவர்கள் ஒருபுறம் என்றால், கொடுக்கக் கூடாது என்று நினைத்தாலும் சில சமையல்க்காரர்கள் வழிய வந்து, பாவமாக மூஞ்சியை வைத்துக் கொண்டு காசு கேட்பார்கள். இல்லையென்று சொல்ல முடியாது. பாவப்பட்டு, கவனிப்பெல்லாம் எதிர் பார்க்காமல் காசு மட்டும் கொடுப்போரும் உண்டு. ஊழல் எங்கே ஆரம்பிக்கிறது பாருங்கள். இதற்கெல்லாம் அன்னா ஹசாரே என்ன செய்ய முடியும்?

சைக்கிள் மற்றும் பைக் பார்ட்டிகள்
நடு நிசிச் செய்திகளைக் கொண்டு வரும் பணி திருட்டுத் திரைப்படங்கள் பார்க்கச் செல்வோர் வசம் இருந்தது. அது போல, அதி காலையிலேயே வெளியில் நடக்கும் நடப்புகள் பற்றித் தெரிந்து கொள்ள சில குழுக்கள் இருந்தன. அதில் ஒன்று அதிகாலையிலேயே எழுந்து திருச்செந்தூர் நகருக்குள் தட்டச்சு (TYPE WRITING) படிக்கச் சென்றோர். தட்டச்சின் கடைசித் தலைமுறை நாங்களாகத்தான் இருக்கும். அதன் பின்பு கணிப்பொறி வந்துதான் முழுமையாகத் தட்டச்சு இயந்திரங்களை விழுங்கி விட்டனவே. சிலர் கணிப்பொறி வகுப்புகளுக்குப் போனார்கள். நானும் சில மாதங்கள் மாலை நேரக் கணிப்பொறி வகுப்புக்குப் போனேன். இதற்காகவே பிரத்தியேகமாக வசதியான வீட்டுப் பையன்கள் வீட்டில் இருந்து சைக்கிள் எடுத்து வந்திருந்தார்கள். சைக்கிள் ஓரளவு நிறைந்திருந்தது. அதிலும் சிலர் சைக்கிளை ஏதோ காதலி போல (பெண்டாட்டி போல என்றெல்லாம் சொல்வதில் எனக்கு உடன்பாடில்லை!) வைத்துக் கொள்வார்கள். ஒருநாள் இரவலாக சைக்கிள் வேண்டும் என்று கேட்டு உறவை இழந்த கதைகள் எல்லாம் உண்டு. கல்லூரியில் சேர்ந்ததே ஏதோ சைக்கிளைப் பராமரிக்க என்பது போல அதையே துடைப்பதும் கழுவுவதும் தடவிக் கொடுப்பதுமாக இருப்பார்கள்.

ஒரே ஒருவன் (என் மூன்றாமாண்டு அறைத் தோழன் சசிதரன்) மட்டும் பைக் வைத்திருந்தான். அவன் எப்பேர்பட்ட பணக்காரனாக இருந்திருப்பான் என்று எண்ணிக் கொள்ளுங்கள். அவனிடம் யாரும் பைக்கைக் கேட்டு உறவைக் கெடுத்துக் கொண்டதாக நினைவில்லை. ஆனால், பைக் பற்றிப் பேசக் கொஞ்சப் பேர் இருந்தார்கள். வீட்டில் இருக்கும் தன் தந்தையின் அல்லது ஒன்னு விட்ட மாமாவின் பைக் பற்றிப் பல நுட்பமான விஷயங்களை அள்ளி வீசுவார்கள். எந்தெந்த பைக் எதற்கு லாயக்கு, எதற்கு லாயக்கில்லை, எது அதிகம் விற்பது, எது அதிகம் விற்காதது என்றெல்லாம் புள்ளி விபரங்கள் பேசுவார்கள். இதையெல்லாம் தெரிந்து கொண்டு இவர்கள் என்னதான் சாதிக்கப் போகிறார்களோ என்று புலம்புவேன். ஆனால், அவர்கள்தான் அந்தக் காலத்திலேயே காலத்தை விட முன்பாகச் சென்ற முன்னோடிகள் என்று பின்னர் நானும் ஒரு பைக் வாங்கி அந்தப் புள்ளி விபரங்களையும் நுட்பங்களையும் பேசத் தொடங்கிய நாட்களில் புரிந்து கொண்டேன். ஆனந்த் ராம், ராம் குமார், அருண் - நீங்கள் எல்லாம் எவ்வளவு பெரிய ஆட்கள் என்பதைக் கொஞ்ச நாள் கழித்துத்தான் புரிந்து கொண்டேன் மக்கா. மன்னியுங்கள். :)

இப்படி பைக் பற்றிய புள்ளி விபரங்களை அள்ளி விடுவோர் பெரும்பாலானோர் வேறு பல ஒற்றுமைகளும் கொண்டவர்களாக இருந்தார்கள். அவர்கள் அனைவரிடமும் அடுத்து என்ன படிப்பது - என்ன செய்வது என்று எதிர் காலத்தைப் பற்றிய தெளிவு இருந்தது. அவர்கள்தான் பெரும்பாலும் பிற்காலத்தில் பெருநகரங்களில் எளிதில் செட்டில் ஆனார்கள். நல்ல உடையுணர்வு இருந்தது. அவர்கள் மட்டுமே அப்போது ஜீன்ஸ் அணிபவர்களாக இருந்தார்கள். பெரும்பாலும் அவர்கள் ஆங்கில வழியில் அல்லது பெருநகரங்களில் படித்து வந்தவர்களாக இருந்தார்கள். ஆங்கிலப் படங்கள் பற்றிய ஞானம் நிறைய இருந்தது. அவர்களுக்கு இந்திப் படங்கள் மற்றும் பாடல்கள் பற்றியும் நிறையத் தெரிந்திருந்தது. புழுதிக் காட்டில் பிறந்து வளர்ந்தவர்களுக்கு அவர்களைப் பார்த்தால் 'பந்தாப் பார்ட்டிகள்' போலத் தெரிந்தது. அவர்கள் சிறுபான்மையாக இருந்ததால் அவர்களுடைய ஆசைகளுக்கெதிராக எப்போதுமே ஓரணி இருக்கும். நானும் அந்த அணியில் பல நேரங்களில் இருந்திருக்கிறேன். அந்த அணி இந்திப் பாடல்கள் போட்டாலே பொறும ஆரம்பிக்கும். பின்னர் ரஹ்மான் வந்து அதே இசையை இரண்டு மொழிகளிலும் வழங்கிய போது இரு சாராருக்குமே வேலையில்லாமல் போய் விட்டது.

-தொடரும்...

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம் - ஜெயகாந்தன்

"நான் என்னை ஒரு மேதையும் புனித வேசியும் போல் உணர்கிறேன்": அலெஹாண்ட்ரோ ஜோடராவ்ஸ்கிக்குச் சில கேள்விகள்

சாம, தான, பேத, தண்டம்