கல்லூரி வாழ்க்கை - ஆதித்தனார் கல்லூரி, திருச்செந்தூர் (3/6)

ரூபஸ் அண்ணன் 
ரூபஸ் அண்ணன் ஆங்கில மாணவர். கொள்கையால் ஈர்க்கப் பட்டு ஏற்பட்ட கூட்டணி. முதல் நாளே நமக்கு ஏற்ற ஆள் யாராவது இருக்கிறார்களா என்று தேடுவோமே அப்படித் தேடித் பிடித்துக் கொண்ட ஆள். அவரால் என்னுடைய பல அடிப்படைக் குணாதிசயங்களே மாறியது. எளிதில் எதிரிகளை உருவாக்கிக் கொள்ளக் கூடிய ஆளாக இருந்தவன் நான். அவரைப் பார்த்த பின்புதான் எல்லோருடனும் நல்ல பிள்ளையாக இருப்பது ஒன்றே நாம் சாதிக்க விரும்பும் சாதனைகளை எளிதாக அடைவதற்கான உருப்படியான வழி என்பதைக் கற்றுக் கொண்டேன். அது அவருக்கு இயல்பாகவே வந்தது. அதைப் பார்த்து முயன்று மாற்றிக் கொண்டேன் நான். அவரிடம் நிறைய அரசியல் ஆர்வம் இருந்தது. எனக்கும் அது இருந்தது. ஆனால், நம்ம அரசியல் வெறும் பேச்சுக்கு மட்டும்தான். அவர் அப்போதே நிறையக் களப் பணிகள் செய்வார். அதனால் அவரைக் கூடுதலாகப் பிடிக்கும்.

பொதுவாகவே கல்லூரி வயதில் தண்ணி-தம் போன்ற பழக்கங்கள் இருப்பவர்கள்தான் சக மாணவர்களிடம் எளிதில் பெரிய ஆளாக முடியும். அப்படி எல்லாம் இல்லாமல் இவர் எப்படி அவர்களுடைய செட்டில் இப்படி மதிக்கப் படுகிறார் என்று ஆச்சரியப் பட்டிருக்கிறேன். எல்லோருமே அவரை "தலைவரே!" என்றுதான் சொல்வார்கள். சில நேரங்களில் பொறாமையாகவும் இருக்கும். நாமும் தலைவன் ஆகா வேண்டும் நினைத்துக் கொண்டிருக்கும் ஆள். ஆனால், அதற்கான சரக்கு இல்லை. அவரிடம் அது இருந்ததால்தான் அத்தனை பேருக்குத் தலைவன் ஆகி விட்டார். அதுவும் ஆட்டோமேட்டிக்காகவே ஏற்றுக் கொள்ளப் பட்ட தலைவன் என்றால் சும்மாவா? அவரும் தன்னைச் சுற்றியிருக்கும் மக்கள் மீது அளவுக்கு மிஞ்சிய நம்பிக்கை வைத்திருப்பவர். காங்கிரஸ் கட்சியில் இருந்தபோது அந்தக் கட்சியில் இருந்தவர்களை எல்லாம் மிகவும் நல்லவர்களாக நம்பியவர். எனக்கு அதில் (மக்களை நம்புவதில்) நிறையவே எதிர்மறைக் கருத்துகள் இருந்தன. அவர் போன்றவர்கள் அப்படி இருக்கலாம் என்றே இப்போது தோன்றுகிறது. மக்களை நம்பாதவன் மக்கள் பணியில் இறங்கி என்ன சாதிக்க முடியும்? இன்றைக்கு பெரும்பாலானோர் மக்களின் மூடத்தனத்தை நம்பி பொது வாழ்க்கையில் இருக்கிறார்கள். அவர் மக்களின் நல்ல பகுதியை மட்டும் பார்ப்பவர் - அதில் முழு நம்பிக்கை கொண்டவர். அப்படித்தான் இருக்க வேண்டும். அதனால்தானே அவரையும் அவர்கள் நம்புகிறார்கள். விமர்சனம் மட்டுமே செய்து கொண்டிருக்கும் நமக்கு மட்டும்தான் இரு பக்கங்களையும் பார்க்க வேண்டிய கட்டாயம். குறைகளைப் பபற்றிச் சொல்லிச் சொல்லிக் குறை பட்டுக் கொள்ள வேண்டிய கட்டாயம். களத்தில் இருப்பவர்கள் நம்பிக்கையை மட்டுமே நம்பி இறங்கியவர்கள். அவர் களத்தில் இருப்பவர். அதனால் தப்பில்லை.

நிறைய இலக்கிய ஆர்வமும் உள்ளவர். இதிலும் நமக்குப் பேச்சு மட்டும்தான். அவர் உண்மையாகவே உள்ளே போய்ப் பார்த்தார். நாம் வாரப் பத்திரிகைகளைப் படித்து இலக்கியம் பேசுபவர்கள். அவர் அப்போதே நிறைய ஜெயகாந்தனைப் படித்ததாக நினைவு. ஆன்மிகம் பற்றியும் நிறையப் பேசுவோம். 'என் மதத்தை என் கண்ணில் மாட்டியவர்களிடம் எல்லாம் எப்படியேனும் திணிப்பது ஒன்றே என் பிறப்பின் நோக்கம் - அது ஒன்றே எனக்கு நன்மையளிக்கும்!' என்றெண்ணும் பின்னணியில் பிறந்து, அதில் பெருமளவு நம்பிக்கையோடும் இருபத்தைந்து ஆண்டுகளைக் கழித்து, பின்னர் அதிலெல்லாம் ஆர்வமிழந்து, 'என் வாழ்க்கை முழுமையையும் பிறருக்குப் பயன்படும் பணிகளில் கழிப்பதே என் பிறவிப் பெரும்பயன்!' என்று வாழ ஆரம்பித்திருப்பவர். கல்லூரிக் காலத்தில் காங்கிரஸ் கட்சியில் படு தீவிரமாகச் செயல்பட்டு இப்போது காங்கிரஸ் கட்சியை அழித்தே தீருவேன் என்று அலையும் முக்கியமான ஆட்களில் ஒருவராக இருக்கிறார். உள்ளே போய்ப் பார்த்தால்தானே எல்லோருடைய இலட்சணமுமே சரியாகப் புரிபடும். டெல்லியில் உச்ச நீதி மன்றத்தில் கொஞ்ச காலம் கழித்து விட்டு, மண்ணோடும் மக்களோடும் வாழ வேண்டியதன் கட்டாயம் உணர்ந்து, இப்போது மதுரை உயர் நீதி மன்றத்துக்கு வந்து விட்டார்.

இப்போது மேலும் மூர்க்கமாகச் செயல் பட்டுக் கொண்டிருக்கிறார். பெயருக்கு வழக்கறிஞர் தொழில் செய்து கொண்டு, முழுக்க முழுக்க சமூகப் பணிகளில் சுழன்று கொண்டிருக்கிறார். டெல்லியின் புண்ணியத்தில் தீவிரத் தமிழ் தேசியவாதியாக மாறியிருக்கிறார். அவர்கள்தானே நம்மை மறந்தாலும் நினைவு படுத்தி நினைவு படுத்தி அப்படி ஆக்குபவர்கள். இன்னும் திருமணம் செய்து கொள்ளவில்லை. நாங்கள் இருவரும் கனவு கண்ட வாழ்க்கையை அவர் அவருக்கு அமைத்துக் கொண்டிருக்கிறார். நான் புறவாழ்க்கை வெற்றிகளைத் தேடி ஓடி வந்ததால், அதைப் பார்த்துப் பொறாமை மட்டும் பட்டுக் கொண்டிருக்கிறேன். போயிருந்தாலும் அவரளவுக்குத் தீவிரமாகச் செயல் பட்டிருப்பேனா என்று தெரியவில்லை. அதற்கான தைரியமெல்லாம் நமக்கு இல்லையே. இப்போதும் எப்போதாவது அழைத்து மணிக்கணக்காகப் பேசுவதுண்டு. முன்பு போல நிறைய ஒத்துப் போகவும் முடியவில்லை. தீவிர வாசிப்பும் செயல்பாடும் சிந்தனையில் அவரைப் பல மைல் தொலைவு முன்னால் கொண்டு சென்றிருப்பதால், நாம் இங்கே பிழைப்புவாதியாய் ஓட்டிக் கொண்டிருப்பதால், இடைவெளி கூடி இருக்கிறது. இது ஓர் ஆயுட்கால உறவு என்றுதான் சொல்ல வேண்டும். அவர் இன்னும் வேகமாக வெகு தொலைவு செல்லாமல் இருந்தால் அல்லது நான் இன்னும் வேகமாக அவருடைய திசையில் முன்னேறினால் மீண்டும் இணைந்து செயல்படுவது பற்றி யோசிக்கலாம். இப்போதைக்கு அதற்கான வாய்ப்பு இல்லையென்றுதான் எண்ணுகிறேன். ஆனால், கண்டிப்பாக வாழ்க்கையில் கொஞ்ச காலமாவது அவரோடு செயல்பட்டால்தான் அவரைச் சந்தித்ததன் பயனை அடைந்து விட்டதாகக் கொள்ள முடியும். பார்க்கலாம்.

மாணவர் சங்கம்
ரூபஸ் அண்ணன் என்றாலே அடுத்து உடனடியாக நினைவுக்கு வருவது மாணவர் சங்கம். நாங்கள் முதலாண்டு படித்த போது மாணவர் சங்கம் இருந்தது. அடுத்த ஆண்டில் மாணவர் சங்கத் தலைவர் ஆகி விட வேண்டும் என்று அண்ணன் திட்டமிட்டுருந்தார். அவர் போன்றவர்கள் - கொஞ்சம் நீதி நியாயமெல்லாம் பேசுபவர்கள், இது போன்ற பதவிகளில் சிக்கினால், சீரழிந்து சின்னாபின்னமாகி விடுவார்கள் என்று நான் எண்ணினேன். அவரிடமே அடிக்கடி இந்த எதிர்விதையை விதைத்துக் கொண்டே இருப்பேன். அதையெல்லாம் எளிதில் சமாளித்து விடலாம் என்று நிறையத் திட்டங்கள் இருப்பதாகச் சொல்வார். மாணவர் சங்கத் தலைவர் என்றாலே காரணமே இல்லாமல் பிரச்சனை கிளப்பத் தெரிந்திருக்க வேண்டும் என்று எதிர் பார்க்கும் கூட்டம் மாணவர் கூட்டம். அவர்களிடம் போய், "காரணம் இல்லாமல் - விடுமுறைக்காகப் போராட்டங்கள் பண்ணக் கூடாது; மறியல் செய்வது தவறு; பேருந்தில் கல் வீசக் கூடாது!" என்றெல்லாம் பேசினால் எடுபடாது என்று எண்ணினேன் நான். எண்ணிக் கொண்டே இருந்தால் ஒன்றும் செய்ய முடியாது; அதை மாற்ற நான் என்ன செய்ய முடியும் என்று யோசிக்கக் கூடிய ஆள் அவர். அப்போது அது வீண் முயற்சியாகப் பட்டது. இப்போது எண்ணிப் பார்க்கையில் ஒருவேளை அவர் அதையெல்லாம் சாதித்திருக்க முடியும் என்றுதான் தோன்றுகிறது. தற்காலிகமாகவாவது முடிந்திருக்கும். அடுத்த வருடம் மீண்டும் அவர்களுக்கேற்ற மாதிரித் தலைவனிடம் ஓடியிருப்பார்கள்.

இன்று நாம் அரசியலில் காணும் எல்லாத்தையுமே அன்றைய மாணவர் சங்கத் தேர்தலில் காண முடிந்தது. நாக்கு வழிக்கக் கூடப் பயன் படாத வகுப்புப் பிரதிநிதி பதவிக்கு ஓட்டுக்குப் பத்து ரூபாய் கொடுக்கிறேன் என்றெல்லாம் ஒருவன் சொன்னதாகக் கேள்விப் பட்டிருக்கிறேன். தேர்தல் அன்று உடன் இருப்பவர்களுக்கு எல்லாம் தண்ணி வாங்கி ஊற்ற வேண்டும். வென்ற பிரதிநிதிகள் கடைசி நிமிடத்தில் அணி மாறி விடுவார்கள் என்று பத்து - இருபது பேர் வளையமாகச் சுற்றி வென்றவர்களைப் பாதுகாப்பாக அழைத்துச் செல்வார்கள். பணம், தைரியம் - இரண்டும் மிக முக்கியமான தேவைகள். தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலியில் இருக்கும் சில கல்லூரிகள் பற்றி நிறையப் பெருமையாகப் பேசுவார்கள். அங்கெல்லாம் அத்தனை பேருந்துகள் உடைபடும்; இதெல்லாம் தடைபடும் என்று வேதனைக்குரிய விஷயங்களை எல்லாம் பெருமையாகப் பேசுவார்கள். இதெல்லாம் எங்கள் கல்லூரியில் நடைபெறாது. ஆரம்ப காலத்தில் இருந்தே கல்லூரிக்கென்று ஒரு பண்பாட்டை மிக உறுதியாக உருவாக்கி விட்டார்கள். யாருடைய கல்லூரி? சில நேரங்களில் அது எல்லை மீறும்போது அதையும் எந்த விதத்தில் கொண்டு வர முடியுமோ அந்த விதத்தில் வழிக்குக் கொண்டு வந்து விடுவார்கள். அந்த ஆண்டு கொஞ்சம் அதிகமாகவே எல்லை மீறி விட்டது. அதனால், நீண்ட விவாதங்களுக்குப் பிறகு மறு வருடம் முதல் மாணவர் சங்கம் இல்லாமல் செய்து விட்டார்கள்.

ஏற்கனவே தொழிலாளர் சங்கங்களை ஒருபுறம் மரியாதையோடு பார்த்தாலும் அவர்கள் செய்யும் அட்டூழியங்கள் மீது வெறுப்புணர்வு உருவாகிக் கொண்டு வந்தது. இங்கே வந்து மாணவர் சங்கம் என்ற பெயரில் செய்யப்படும் அட்டூழியங்களைப் பார்த்த பின்பு சங்கங்கள் மீதே கடுமையான வெறுப்புணர்வு வர ஆரம்பித்தது. உரிமைக்கான போராட்டம் என்றாலே அதை அருவருப்பாகப் பார்க்கத் தோன்றியது. இளைய சமுதாயம் புழுத்துப் போய் விட்டதோ என்றோர் எண்ணம் வந்தது. இந்த நிலையில் மாணவர் சங்கம் கலைக்கப் பட வேண்டும் என்று கொதித்துக் கொண்டிருந்த உள்ளங்களில் ஒன்று என்னுடையது. கலைக்கப் பட்ட செய்தி அறிந்து அளவிலாத மகிழ்ச்சியும் அடைந்தேன். போராட்டங்கள் செய்வதன் ஒரே நோக்கம் - அதில் கிடைக்கும் விடுமுறை. ஒரு நாள் என்றால் மகிழ்ச்சி. கூடக் கொஞ்சம் நாட்கள் என்றால் மிக்க மகிழ்ச்சி. "அந்தக் கல்லூரிகளில் எல்லாம் மாதக் கணக்கில் விடுமுறை கிடைக்கும் படிக்கு உடைக்கிறார்கள்; இங்கேதான் இப்படி!" என்று அலுத்துக் கொள்வோரைக் கண்டால் துடிப்பேன். போராட்டம் செய்யும் நாட்களில் பொதுச் சொத்துகளுக்கு அதிகளவில் சேதம் செய்யக் கூடியவர்கள்தாம் மாணவர்களின் நாயகர்கள். இப்படிப் பட்டவர்களுக்கெல்லாம் தலைவர்களாகி அவர்களின் தேவைகளை எப்படிப் பூர்த்தி செய்யப் போகிறார் அண்ணன் என்று எண்ணியிருக்கிறேன். ஒருவேளை அதற்கான வாய்ப்பை அளித்திருந்தால் அப்படியொரு பண்பாட்டு மாற்றத்தையே செய்து காட்டியிருப்பாரோ என்று இப்போது நினைக்கிறேன்.

அன்று பேருந்துகளில் கல்லெறிந்து கண்ணாடி உடைத்தவர்கள், அமைதியாகப் போய்க் கொண்டிருந்த பொது மக்களுக்கு ஊரு விளைவித்தவர்கள், பத்து-இருபது வருடங்கள் கழித்து அதே இடத்தில் குடும்பத்தோடு வரும்போது கல்லடி பட்டு மண்டை உடைந்து கதற வேண்டும் என்றெல்லாம் கடுமையாக வேண்டியிருக்கிறேன். காளிமுத்து, வைகோ போன்று கல்லூரிக் காலத்தில் மாணவர் சங்கங்களில் தலைவர்களாக இருந்தவர்கள்தாம் பின்னாளில் பெரும் அரசியல்வாதியாக ஆனார்கள் என்று கேள்விப் பட்டு, நாமும் அதில் பங்கெடுத்துப் பயிற்சி எடுத்துக் கொள்ள வேண்டும் என்று எண்ணியிருக்கிறேன். ஆனால், அதற்காகக் கொடுக்கும் விலை மிக மிக அதிகம். அப்படியொரு பயிற்சியும் அனுபவமும் தேவையே இல்லை என்றே தோன்றும். காமராஜர் என்ன கல்லூரியில் மாணவர் தலைவராக இருந்தா அவ்வளவு பெரிய தலைவர் ஆனார்? அப்படிப் பார்த்தால், அந்த அளவுக்குப் பெரிய ஆளான யாருமே கல்லூரியில் மாணவர் சங்கத் தலைவராக இருந்தவர்கள் இல்லை. பலர் கல்லூரிக்கே சென்றதில்லை. இரண்டாம் கட்டத் தலைவர்களாக இருப்பவர்களுக்குத்தான் - அதுவும் மிகச் சிலருக்குத்தான் கல்லூரிப் படிப்பெல்லாம் தேவைப் படுகிறது.

பொதுவுடமைக் குடும்பப் பின்னணியில் இருந்து வந்திருந்தாலும் இப்போதும் நான் உறுதியாக நம்புவது - மாணவர்களுக்கெல்லாம் காக்கப் பட வேண்டிய உரிமை என்று எதுவுமே இல்லை. ஒழுங்காகப் படிக்கிற வேலையைப் பார்த்தால் போதும். அவர்களுடைய குடும்பங்கள் காக்கப் பட வேண்டியது அதையெல்லாம் விட முக்கியம். சில நேரங்களில் ஆசிரியர் சங்கங்களும் இவர்களைப் பயன் படுத்தி விடுகிறார்கள். ஊதிய உயர்வுக்கு மட்டும் போராடும் எந்தச் சங்கமும் சும்மா டுபுக்கு. இதில் இலங்கைப் பிரச்சனை, காவிரிப் பிரச்சனை, காஷ்மீர்ப் பிரசினைக்காகவெல்லாம் வேறு போராடுவார்கள். வேண்டிய இரண்டு நாட்கள் விடுமுறை கிடைத்தவுடன் அந்தப் பிரச்சனைகள் எல்லாம் தீர்க்கப் பட்டு விட்டது போல அமைதியாகி விடுவார்கள். தொழிலாளர் சங்கங்கள் பற்றி இன்னும் கொஞ்சம் குழப்பம் இருக்கிறது. அவர்களும் பல நேரங்களில் அப்படித்தான் தோன்ற வைக்கிறார்கள். ஆனாலும் அவர்களுக்குச் சங்கங்கள் இல்லாவிட்டால் முழுமையாக ஏமாற்றப் பட்டு விடுவார்கள் - அழிக்கப் பட்டு விடுவார்கள் என்றும் உறுதியாகத் தோன்றுகிறது. எதுவுமே நல்ல நோக்கத்தில் ஆரம்பிக்கப் பட்டால் மட்டும் போதாது. காலம் முழுக்க அந்த நோக்கத்திற்காக மட்டும் பயன்படுத்தப் பட வேண்டும். அதில்தான் இருக்கிறது அவர்களின் நீண்ட கால வெற்றி - தோல்வி.

விழாக்கள்
நாங்கள் சேர்ந்த வருடத்துக்கு முன்பு வரை, கல்லூரியில் போலவே விடுதியிலும் ஏகப்பட்ட போராட்டங்கள் நடக்குமாம். அங்கே எப்படி என்றால், ஏதாவது பிரச்சனை என்றால் அன்றிரவு உண்ணாவிரதம் இருந்து விடுவது. அன்றைய இரவு செய்யப் படும் உணவு முழுக்க வீணாவது மட்டுமின்றி, அதற்கான செலவும் மாணவர்களின் தலையில்தான் விழும். சில நேரங்களில் ஏதோ காரணங்கள் இருந்திருக்கலாம். ஆனால், பெரும்பாலான நேரங்களில் அது அர்த்தமில்லாமலும் வார்டன்களைச் சீண்டிப் பார்க்கவும் கடுப்பேற்றவுமே நடந்திருக்கிறது. பிறரைத் துடிக்க விட்டுப் பார்க்கும் பண்பு எல்லா வயதுக்குமே இருக்கும் என்றாலும் அந்த வயதுக்கு அதிகம். இதில் ஓர் ஆசாமி என்ன செய்திருக்கிறார் - தினமும் இரவு விடுதிக்குள் ஏதாவதொரு இடத்தில் வெடி வெடிக்குமாம். ஒருநாள் வார்டன் அறைக்கு முன், ஒருநாள் கழிப்பறையில், ஒருநாள் உணவகத்தில், ஒருநாள் தொலைக்காட்சி அறையில் என்று ஒவ்வொரு நாளும் ஓரிடத்தில் வெடிக்குமாம். கடைசிவரை அதை யார் செய்தார் என்று யாருக்குமே தெரியாமல் போய் விட்டதாம். புண்ணியவான் இப்போது எங்கே இருக்கிறாரோ தெரியவில்லை. மாணவர்களைப் பொருத்த மட்டில் இது ஒரு பெரிய வேடிக்கை. ஒவ்வொரு நாளும் வெடித்தவுடன் கூடிக் கும்மாளமிட்டுச் சிரித்துப் பிரிவார்களாம். ஆனால் அது கல்லூரி - விடுதி நிர்வாகத்துக்குப் பெரிய பிரச்சனை - சவால்.

மாணவர்கள் அப்படிச் செய்ததற்கு - அடிக்கடி உண்ணாவிரதங்கள் இருந்ததற்குச் சொன்ன காரணம், அப்போதைய நிர்வாகம் மிகவும் கெடுபிடியாக இருந்தது. இவர்களை இப்படி வைத்திருந்தால்தான் சரியாக இருக்கும் என்று எண்ணிச் செய்வது இப்படியும் திரும்பிக் கொண்டு எரிச்சலூட்டும். அளவுக்கு மீறி நெருக்கடிகள் கொடுத்தால், கொடுப்பவர்களைத் துடிக்க விட்டுப் பார்க்க வேண்டும் என்றே நெருக்கடிக்கு உள்ளாபவர்கள் நினைப்பார்கள் அல்லவா? அதுதான் நடந்திருக்கிறது. நாங்கள் சேர்ந்த ஆண்டில் நிர்வாகத்தில் மாற்றம் நடந்திருந்தது. மாணவர்களிடம் நட்புறவோடு பழகி, அவர்களையும் ஆளாக மதித்து, ஜாலியாக இருந்தால் அவர்களும் நல்ல பிள்ளையாகத்தான் இருப்பார்கள் என்று நிரூபிக்கப் பட்டது. இப்படியெல்லாம் அவர்களைச் சொறிந்து விட்டு அவர்களை அமைதிப் படுத்த வேண்டுமா என்றும் நினைக்கலாம். அதை அமைதிக்கான சூத்திரம் என்று பார்ப்பதை விட, அமைதி என்பது முறையான நடத்துதலுக்குக் கிடைக்கும் பதில் மரியாதை என்றும் கொள்ளலாம். இது கல்லூரி - விடுதி மாணவர்களுக்கு மட்டுமில்லை, எல்லாச் சமூகப் பிரச்சனைகளுக்குமே பொருந்தும் என்றே நினைக்கிறேன்.

புதிய வார்டன் மிகவும் நல்லவர். எந்த நேரமும் சிரித்த முகத்துடனே இருப்பார். எல்லோரிடமும் நன்றாகப் பேசுவார். அவர் வந்த நாள் முதல் ஒரே கொண்டாட்டம்தான். ஒன்று மாற்றி ஒன்றாக ஏதாவதொரு விழா கொண்டாடப்படும். விநாயகர் சதுர்த்தி விழாவில் ஆரம்பித்து, வினாடி வினாப் போட்டி, கிறிஸ்துமஸ் விழா, பொங்கல் விழா, ரமலான் விழா, மரம் நடுவிழா, சர்வமதக் கலந்துரையாடல் என்று முதலாண்டு முழுக்க ஒரே விழா மயம். விநாயகர் சதுர்த்தியில் சிறிய உரை ஆற்றினேன். வினாடி வினாவில் கலந்து கொண்டு வெற்றி பெறவில்லை. கிறிஸ்துமஸ் விழாவில் கவிதை வாசித்தேன். பொங்கல் விழாவில் கவிதைப் போட்டி நடந்தது. அதில் வாசித்த கவிதைக்கு முதல்ப் பரிசு கிடைத்தது. ரூபஸ் அண்ணன் கவிதை அதை விட நன்றாக இருந்தாலும் இரண்டாம் பரிசு பெற்றது. காரணம் – அப்போதே அவர் கொஞ்சம் புரியாத மாதிரி எல்லாம் எழுதுவார். இப்போது அதை வாசித்தாலும், “ஆகா, என்ன ஒரு கவிதை!” என்று தோன்றும். நாம் எழுதியது, “ஓ! இதுக்கு அந்த ஊரில் அப்போது கவிதைன்னு பேரா?!” என்று தோன்ற வைக்கும். அதையும் இந்த வலைப்பதிவில் போட்டிருக்கிறேன். இதோ இங்கு இருக்கிறது. பொறுமையிருந்தால் போய்ப் பாருங்கள். ரமலான் விழாவை வேடிக்கை மட்டும் பார்த்தேன். எனக்கு மிகவும் பிடித்த பேச்சாளர் அப்துல் ரசாக் சார் அருமையான உரை ஒன்று ஆற்றினார். மரம் நடுவிழாவில் சில மரங்களை நட்டு போட்டோவுக்கு போஸ் கொடுத்தேன். அவையெல்லாம் இப்போது பெரும் மரங்களாக வளர்ந்திருக்க வேண்டும். சர்வமதக் கலந்துரையாடலில் அனைவரின் பேச்சையும் தொகுத்து வழங்கும் வேலை செய்தேன்.

அப்போதே ஒரே அறக்கட்டளையின் கீழ் ஐந்து கல்லூரிகள் இருந்தன. இப்போது எண்ணிக்கை கூடியிருக்கலாம். அப்போதே பல்கலைக் கழகம் ஆவது பற்றியெல்லாம் பேச்சு வந்தது. இன்னும் ஆகவில்லையே என்று ஆச்சரியமாக இருக்கிறது. விடுதியில் நடக்கும் விழாக்களுக்கு பிற கல்லூரிகளில் இருந்தும் ஆசிரியர்கள் விருந்தினராக அழைத்து வரப் படுவார்கள். நான் சொன்னவை போக, ஏகப்பட்ட விளையாட்டுப் போட்டிகளும் கலை நிகழ்ச்சிகளும் நடை பெற்றன. பொங்கல் விழாவில் எங்கள் பகுதிக்காரர் சரவண கிருஷ்ணன் ஊரில் இருந்து அவருடைய மாமாவை வரவைத்து இருவரும் சிலம்பாட்டம் ஆடி சிலிர்க்க வைத்தார்கள்.

-தொடரும்...

கருத்துகள்

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம் - ஜெயகாந்தன்

"நான் என்னை ஒரு மேதையும் புனித வேசியும் போல் உணர்கிறேன்": அலெஹாண்ட்ரோ ஜோடராவ்ஸ்கிக்குச் சில கேள்விகள்

சாம, தான, பேத, தண்டம்