தமிழ்ப் படைப்பாளிகளில் தலை சிறந்த அப்பாடக்கர்

இன்றைக்குத் தமிழ் நாட்டில் இருக்கிற முக்கால்வாசிக் கவிஞர்கள் மற்றும் எழுத்தாளர்கள் தமிழின் தலை சிறந்த படைப்பாளி தான்தான் என்றும் மற்றவர்கள் எல்லாம் அதற்குப் பின்னால்தான் என்றும் தலை சிறந்த படைப்புகள் என்றால் தன்னுடையவை அனைத்துக்கும் பிறகுதான் பிறருடையவை எல்லாம் என்றுமே சொல்கிறார்கள். சில நேரம் இவர்கள் எல்லோருமே ஏதோ விதமான மனநோய்க்கு உள்ளானவர்களோ என்று கூடத் தோன்றுகிறது. இது தமிழில் மட்டும் இருக்கும் பிரச்சனையா அல்லது கணிப்பொறி பார்த்துக் கொண்டே இருந்தால் வரும் பிரச்சனைகள் போல பேனா பிடித்துக் கொண்டே இருந்தால் வரும் பிரச்சனைகளில் ஒன்றா? மற்ற மொழி எழுத்தாளர்கள் பற்றித் தெரிந்தவர்கள் யாராவது கொஞ்சம் வெளிச்சம் காட்டினால் நன்றாக இருக்கும். அச்சார நன்றிகள் (அட்வான்சுக்குத் தமிழில் சொல்லளித்த தமிழின் தலை சிறந்த படைப்பாளி வைரக் கவிஞருக்கு நன்றிகள்!).

வைரக் கவிஞர் என்றதும்தான் நினைவுக்கு வருகிறது. பத்துப் பதினைந்து வருடங்களுக்கு முன்பு காமராசன் என்றொரு கவிஞர் திரிந்தார். இப்போது அவர் என்ன ஆனார் என்று தெரியவில்லை. கல்லூரிக் காலத்தில் அவருடைய பேட்டி ஒன்றைப் படித்து விட்டு எனக்கு மண்டையெல்லாம் கிர்ரென்று சுற்றி விட்டது. "வள்ளுவனையும் கம்பனையும் தவிர்த்து தமிழில் உருவான எவனுமே கவிஞனே அல்ல. கம்பனைத் தூக்கிச் சாப்பிடும் படியான படைப்பு ஒன்றை உருவாக்கிக் கொண்டிருக்கிறேன். அதன் பின்பு நான் காலி பண்ண வேண்டிய ஒரே ஆள் வள்ளுவன் மட்டுமாகத்தான் இருக்கும்!" என்று விளாசியிருந்தார். அதன் பின்பு அவர் யார் யாரைத் தூக்கிச் சாப்பிட்டார் என்பது பற்றியெல்லாம் கேள்விப் படவே இல்லை. நீங்கள் யாராவது கேள்விப் பட்டிருந்தாலும் கீழே கருத்துரையில் அது பற்றித் தெரிவித்து இவ்வையகமும் அவ்வின்பம் பெற்றிட உதவிடுவீர், ப்ளீஸ்!

அதே காலத்தில் சாகாவரம் வாங்கி வந்திருக்கும் நம் செத்தமிழ் அறிஞர் அவர்களின் பேட்டி ஒன்றும் படித்து விட்டு சில காலம் அது போலக் கிறுக்குப் பிடித்து அலைந்தேன். "என்னை மாதிரி ஒருவன் பிறக்கவில்லை என்றால் தமிழே தேங்கிப் போயிருக்கும். என்னை வெறும் அரசியல்வாதியாக மட்டும் பார்த்ததால் தமிழுக்கும் தமிழர்க்கும்தான் இழப்பு!" என்றிருந்தார். உண்மை என்னவென்றால், அரசியல்வாதியாக இருந்த ஒரே காரணத்தால்தான் தமிழின் தலைசிறந்த படைப்பாளி தான்தான் என்று சொல்லிக் கொள்ளும் அளவுக்கு வரலாற்றிலும் ஊழல் செய்ய முடிந்தது. அதனால்தான் வெளி வரும் தன் ஒவ்வொரு நூலுக்கும் திரைப்படத்துக்கும் கட்சியில் இருக்கும் மாவட்டச் செயலாளர்களுக்கும் ஒன்றியச் செயலாளர்களுக்கும் விற்பனைப் பிரதிநிதி (SALES REPRESENTATIVE) போல இலக்கு (TARGET) நிர்ணயித்துப் பணத்தைப் பிடுங்கிக் கொள்ள முடிந்தது. அவர்கள் எல்லாம் அதை விற்றுப் பிரபலம் ஆக்கவில்லை. இலவசமாய்க் கொடுத்துத்தான் பிரபலம் ஆக்கினார்கள். அதில் இழந்த பணத்தை அவர்கள் எப்படிச் சரிக் கட்டிக் கொண்டார்கள் என்பது நம் எல்லோருக்குமே தெரிந்த கதை.

திராவிட இயக்கங்கள் நமக்குச் செய்த நல்லதுகள் ஒருபுறம் என்றால், அவை செய்த தீமைகளில் ஒன்று மற்ற படைப்பாளிகளையும் கலைஞர்களையும் அழித்து வீசியது. சிவாஜி கணேசனுக்கு ஏன் விருது கொடுக்க வில்லை என்று எல்லோருமே வியந்திருக்கிறோம். அதன் பின்னால் இருந்த அரசியல் பற்றி விசாரித்துப் பாருங்கள். மூப்பனாரை முன்னுக்கு வரவிடாமல் செய்த அதே காவிரித் தண்ணீர்தான் அவரையும் அழிக்க முயன்றது என்கிறார்கள். திராவிட இலக்கியங்களுக்குக் கொடுக்கப் பட்ட முக்கியத்துவம் மற்ற இலக்கியங்களுக்கும் கொடுக்கப் பட்டிருந்தால் குறைந்த பட்சம் அவற்றைச் சிறுமைப் படுத்தாமல் இருந்திருந்தால் இன்னும் சில ஞான பீடங்கள் கிடைத்திருக்கலாம் என்று சமீபத்தில் ஒருவர் எழுதியிருந்ததைப் படித்த போது பாவி மக்கள் இவ்வளவா பண்ணினார்கள் என்று வியப்பாக இருந்தது. அவர்கள் தன் மற்றும் தன் பிள்ளைகுட்டிகள் பிழைப்புக்காக எவ்வளவும் பண்ணுபவர்கள் என்பதைப் பார்த்து விட்ட தலைமுறை நாம் என்பதால் எளிதில் நம்பவும் முடிந்தது.

இது பழைய கதை என்றால், இப்போதைய கதை அதுக்கும் மேல் இருக்கிறது. நம் போன்ற இளைய தலைமுறையினரின் பசிக்கெல்லாம் இணையத்தில் திகட்டத் திகட்டத் தீனி போட்டுக் கொண்டு இருக்கும் இரு பெரும் எழுத்தாளர்களின் சில எழுத்துக்களைப் படித்தபோதும் இதே அக்கப்போர்தான். இருவரில் யார் பெரிய இது என்கிற சண்டை ஒருபுறம் தரம் தாழ்ந்த நிலையில் நடக்கிறது. இன்னொரு புறம் இதுவரை இந்த மண்ணில் தோன்றிய எழுத்து மகான்களிலேயே தான்தான் பெரிய இது என்கிற நினைவூட்டல்கள் வேறு அடிக்கடிச் செய்து கொள்கிறார்கள். அதைக் காலம் முடிவு செய்ய வேண்டும் என்பது ஒன்று. மற்றவர்களுக்கு மண்டையில் சரக்கில்லை என்றெண்ணி உண்மையிலேயே அப்படித் தோன்றினாலும் (அறிவாளுகளுக்கேல்லாம் அப்படித்தானே தோன்றும்!) அதை மறைத்துக் கொள்ளும் சாமர்த்தியமாவது வேண்டும். கருமம் பிடித்தவர்கள் பேனா மீதே வெறுப்பு வர வைத்து விடுவார்கள் போலத் தெரிகிறது.

அடுத்து வருபவர் முதல் பத்தியில் பார்த்த திரைக் கவிஞர். இவர் பண்ணுகிற அட்டகாசமோ அதைவிட அதிகம். தன்னை வெல்லத் தன் மகன் மட்டுமே வர வேண்டும் என்கிறார். "இதுவரை என்னை விடச் சிறப்பாக யாரும் வந்து விட வில்லை; அப்படி வருகிற நாளில் குன்றின் மீதேறி நின்று கூவுவேன்!" என்கிறார். ஒன்று இந்தக் கோழி கூவாமலே போய்ச் சேரும் அல்லது தன் மகனுடைய பெயரையே கூவி விட்டுச் செல்லும் என்பது என் கணிப்பு. மானங்கெட்டவர்கள்! உங்களை எல்லாம் எவ்வளவு மதித்து விட்டேன் என்று கவலையாக இருக்கிறது. இதற்கு சும்மாவாவது தன்னடக்கம் காட்டிக் கொண்டே இருக்கும் கண்ணதாசன்களும் வாலிகளும் பல மடங்கு பரவாயில்லை என்றே தோன்றுகிறது. ஏமாற்று வேலையாக இருந்தாலும் அது பார்வைக்காவது நாகரீகமாக இருக்கிறது.

கருத்துகள்

  1. வணக்கம் பாரதிராஜா...

    தங்களின் பதிவுன் உள்நோக்கம் எனக்கு புரிகிறது..

    நான் தான் பெரியவன் என்று வருவோர் எல்லாம் மண்ணைக்கவ்விய வரலாறுதான் இங்கு... அது எந்த துறையானாலும் சரி...

    கவிதை என்பது தன்னுடைய வாழ்க்கைப்பதிவுகளின் அடையாளம் அவ்வளவே அதை வைத்துக்கொண்டு யாரும் மிகப்பெரிய பிரம்மன் என்று சொல்லிக்கொள்ள முடியாது.

    மிகப்பபெரிய கவிஞர்கள் என்று நான் கருதுவது எவருடைய எழுத்துக்கள் காலம் தாண்டியும் வாழ்கிறதோ அவர்களைத்தான்...

    வைரமுத்துவின் கவிதைகளில் அவருடைய எழுத்துக்களில் மயங்கியவனில் நானும் ஒருவன்... ஆனால் அவருடைய பிண்ணனியை மட்டுமே வைத்துக்கொண்டு அவரது குடும்பத்தில் யாரும் கவிச்சக்கரவர்த்தி என்று சொல்லிக் கொள்ள முடியாது.

    மேலும் யாரையும் குறை சொல்லும் அதிகாரமும் நம்மிடத்தில் இல்லைதானே...

    பதிலளிநீக்கு
  2. அருமையான விளாசல் ஆனால் இந்த எருமைத்தோல் படைத்தோருக்கு இது உறைக்காது.
    நீங்கள் குறிப்பிட்ட கடைசி இரண்டில் ஒன்று தனக்கு தன் வாசகனிடமிருந்து வந்த கடிதமாம் என ஒன்றை தன் வலைப்பூவில் பிரசுரித்துள்ளது.
    அக்கடிதத்தில் அவர் வாசகன் எழுதுகிறார் " நான் இதுவரை எதையுமே படித்ததில்லை. முதல் முதல் உங்கள் இந்த நாவலைத் தான் படித்தேன், நிச்சயம் சொல்வேன் உலகத்தில் சிறந்ததே இந்த நாவல் தான்"...
    அந்த லூசுதான் எதையுமே படிக்காமல் இதை உலகத்தில் சிறந்த தெனக் கடிதமெழுதினாலும் , இந்த விளம்பரப்பிரியனுக்கு சிந்தனையில்லையா?

    சமீபகாலமாக இவர்கள் கொடுமை தாங்கமுடியவில்லை. இப்படியே போனால் நிச்சயம் அமெரிக்காவில் அப்பப்போ நடப்பதுபோல் இந்த அலட்டல் கொடுமை தாங்காமல் யாராவது இவர்கள் கூட்டத்துள் சென்று துப்பாக்கிச் சூடு நடத்தும் அசம்பாவிதங்கள் நடக்க சாத்தியக்கூறுகள் உண்டு.

    பதிலளிநீக்கு
  3. வருகைக்கும் வாசிப்புக்கும் மிக்க நன்றி யோகன் அவர்களே. ஹா ஹா ஹா... கொடுமைதான் போங்கள். இவர்கள்தாம் தமிழில் உலக இலக்கியங்கள் படைப்போர். இந்த விளம்பரம்தான் அவர்களைப் பொறுத்த மட்டில் முதிர்ந்த விமர்சனம்.

    பதிலளிநீக்கு
  4. @கவிதை வீதி... // சௌந்தர் //, வணக்கம் சௌந்தர் அவர்களே. வருகைக்கும் வாசிப்புக்கும் மிக்க நன்றி. படைப்புகள் என்று வந்து விட்டால் வைரமுத்துவின் எழுத்துக்களுக்கு இன்னமும் நான் கிறங்கவே செய்கிறேன். ஆனால், நீங்கள் சொன்னது போல் தன்னை பிரம்மன் போல் நினைத்துப் பேசும் பேச்சுக்கள் கொஞ்சம் கடுப்படிக்க வைக்கின்றன. அதில் சக கவிஞர்களை மதியாத போக்கு இன்னும் கூடுதலாகவே எரிச்சலூட்டுகிறது.

    பொது வாழ்க்கைக்கு வந்து விடுகிற யாரும் குறை சொல்லல்களுக்கு உள்ளாக்கத் தக்கவர்கள் என்றே கருதுகிறேன். ஏனென்றால், அவர்களைப் பார்த்துத்தான் நாமெல்லாம் நிறையப் பழகுகிறோம். அவர்கள்தாம் ஓரளவுக்கு நம் பண்பாட்டைத் தீர்மானிப்போர். மற்றபடி, குறை சொல்லிக் கொண்டே பிழைப்பு நடத்தி வாழ்வதுதான் எனக்குத் தவறாகப் படுகிறது.

    பதிலளிநீக்கு
  5. நன்றி ஸ்ரீ சரவணகுமார் அவர்களே.

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம் - ஜெயகாந்தன்

"நான் என்னை ஒரு மேதையும் புனித வேசியும் போல் உணர்கிறேன்": அலெஹாண்ட்ரோ ஜோடராவ்ஸ்கிக்குச் சில கேள்விகள்

சாம, தான, பேத, தண்டம்