உலகம் சமநிலை பெற வேண்டும்?!
"உலகம் சமநிலை பெற வேண்டும்; அதில் உயர்வு தாழ்விலா நிலை வேண்டும்!" என்ற பாடலைக் கேட்கும் போதெல்லாம் இது சாத்தியமா என்றொரு கேள்வி உடனடியாக வந்து எதிர்மறைச் சிந்தனை கொடுக்கும். இதை இரண்டாகப் பிரிக்கலாம். உலகில் உள்ள எல்லா மனிதரும் சமமாக வேண்டும் என்பது ஒன்று. உலகில் உள்ள நாடுகள் அனைத்தும் சமமாக வேண்டும் என்பது இன்னொன்று. இரண்டும் ஒன்றுக்கொன்று தொடர்புடையவையே என்றாலும் இரண்டுமே சிரமம்தான். ஆனால், அதற்கு எல்லா வகையிலும் எல்லோரும் சமமாக வேண்டும் என்பதல்ல பொருள். வேற்றுமைகளைத் தாண்டி சமநிலையை நோக்கி நடை போட வேண்டும் என்பதே அதன் பொருள். சில நாடுகளில் ஏழை-பணக்கார இடைவெளி பெரிதாக இருக்கிறது. சில நாடுகளில் சிறிதாக இருக்கிறது. சில கண்டங்களில் நாடுகளுக்கு இடையே ஏழை-பணக்கார இடைவெளி குறைவாக இருக்கிறது. சில கண்டங்களில் அதிகமாக இருக்கிறது. இடைவெளி இல்லாமல் செய்வது இயலாதது என்றாலும் இடைவெளியைக் குறைப்பதுதான் எல்லோருக்கும் நோக்கமாக இருக்க வேண்டும் என்பதே சமதர்மம் பேசும் எல்லோருடைய நோக்கம். சமம் என்ற சொல்லைக் கேட்டாலே நம்ம நாட்டில் நிறையப் பேருக்குக் கோபம் வந்து விடுகிறது. அது இயற்கைக்கு எத...