குறிஞ்சி மலர் - நா. பார்த்தசாரதி (2/3)

மலர்ச்சி...

தமிழை முறையாகக் கற்றுத் தேர்ந்த நா.பா.வின் நடை அன்றைய தமிழகத்தில் பெரும் வரவேற்பைப் பெற்றிருக்கிறது. தன் முதல் புதினத்திலேயே ஒவ்வொரு அத்தியாயத்தையும் ஒரு செய்யுளோடு - கவிதையோடு தொடங்கிய அந்தப் புதுமை அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறது. கவிதைக்கும் பேச்சுக்கும் மரியாதை இருந்த காலமாதலால் அரவிந்தனும் பூரணியும் அன்றைய இளைஞர்களின் மனதை எளிதில் கொள்ளை கொண்டிருக்கிறார்கள். கவிதையைப் பெரிதாக நினைத்த கடைசித் தலைமுறையைச் சேர்ந்தவன் என்ற முறையில் அதன் ஆற்றலை ஓரளவு உணர முடிந்தது. இத்தோடு கவிதையும் பேச்சும் அழிந்து விடும் என்று சொல்வதற்கில்லை. கவிதை கண்டிப்பாக வாழும். கைபேசியில் குறுந்தகவலாக அனுப்ப முடியும் அளவுக்கு எழுதப் படும் காதல்க் கவிதைகள் மட்டும் வாழும். பிழைப்புக்கு உதவும் வகையில் இருக்கும் பேச்சாற்றல் மட்டும் வாழும். அதன் பின் குறிஞ்சி மலர் கூட அன்றைய சூழலுக்கு ஏற்ற மாதிரி ரீமேக் பண்ணப் பட்டால்தான் படித்துப் பார்க்கப் படும்.

"பாக்கியைக் கொடுய்யா!" என்று கேட்கப் போகும்  பூரணியிடம், புதுமண்டபத்துப் புத்தகக் கடைக்காரர் புன்னகை பூக்கக் கையெடுத்துக் கும்பிட்ட காட்சியை ஆசிரியர் விளக்கியிருந்த விதம் நன்றாக இருந்தது. அது போலக் கும்பிடுவோர் நிறையப் பேரைப் பார்த்திருக்கும் அனுபவம் இருப்பதால் அதை முழுமையாகப் புரிந்து ரசிக்க முடிந்தது. என் உறவினரே ஒருவர் இருக்கிறார். கொடுத்த காசைக் கேட்கப் போனால், வாயெல்லாம் பல்லாக வரவேற்பார், வித விதமாகச் சாப்பாடு வாங்கிப் போடுவார், எல்லாம் முடிந்ததும் ஒரு கும்பிடு போடுவார். அதன் பொருள், "இதுக்கு மேல் ஒன்றும் கேட்கக் கூடாது. மரியாதையாக இடத்தைக் காலி பண்ணு!" என்பது. புரிந்தவர்கள் பேசாமல் கிளம்பி விடுவார்கள். புரியாத மக்கு மண்டையர்கள் கேவலப் பட்டுத்தான் கிளம்புவார்கள். இதெல்லாம் ஒரு கலை. அது எல்லோருக்கும் வருவதில்லை. ஆனால் அந்தக் கலையைக் கற்றுக் கொள்வதற்குக் கையேந்தி "ஐயா... சாமி... தர்மம் போடுங்கய்யா..." என்று அலைவது மேல் என்கிறீர்களா? ஒத்துக் கொள்கிறேன்!

மதுரை நகரின் அழகு பற்றிப் பல இடங்களில் சுவைத்துச் சுவைத்து எழுதியிருக்கிறார் நா.பா. சங்க காலத்திலும் அதற்கு முந்தைய காலத்திலும் மதுரை அப்படி இருந்திருக்கலாம் என்பதில் எந்த ஐயமும் எனக்கில்லை என்ற போதிலும் ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு மதுரை அந்த அளவுக்கு அழகாக இருந்திருக்குமா என்று சந்தேகமாகவே இருக்கிறது. அதன் பின்பு படையெடுப்பு எதுவும் நடக்க வில்லை. புதிதாக யாரும் வந்து புகுந்து விட வில்லை. அதே ஆட்கள்தான் அந்த ஊரில் ஆண்டு கொண்டும் ஆட்டம் போட்டுக் கொண்டும் இருக்கிறார்கள். அதெப்படி ஐம்பதாண்டு காலத்தில் ஒரு நகரம் பண்பாட்டு ரீதியாக இப்படியோர் அதல பாதாள வீழ்ச்சியைச் சந்தித்திருக்க முடியும்?! நான் பார்த்த-பார்க்கும் மதுரையில் அதற்கான அறிகுறியே தென்படவில்லை. இப்போதெல்லாம் மதுரை என்றாலே, பிக்பாக்கெட் அடிக்கிற - பித்தலாட்டம் செய்கிற - கூலிக்குக் கூப்பாடு போடுகிற கூட்டம்தான் நினைவுக்கு வருகிறது (மதுரைக்காரர்கள் கோபித்துக் கொள்ள வேண்டாம். மதுரை, உங்களைப் போன்ற நல்லவர்களே இல்லாத ஊர் என்று சிறுமைப் படுத்துவதல்ல என் நோக்கம். இந்தப் புதினத்தில் வரும் அளவுக்கு மதுரை இப்போது நல்ல ஊராக இல்லையே என்ற ஏமாற்றத்தை வெளிப்படுத்தவே முயல்கிறேன்!).

ஒருவேளை அப்போதைய மதுரை என்பது கோபுரங்களைச் சுற்றிய மையப் பகுதி மட்டுமாகவும் அங்கு மட்டும் அந்த அழகும் பொலிவும் இருந்திருக்கக் கூடும். இப்போதும் நிறையப் பேர் காலையில் எழுந்ததும் தலைக்கு இரண்டு செம்புத் தண்ணீரை ஊற்றி விட்டு, வெள்ளையும் சொள்ளையுமாக நெற்றி நிறையப் பட்டை அடித்துக் கொண்டு திரிகிறார்கள். அவர்கள் எல்லோருமே குறிஞ்சி மலரில் வருவது போல எப்போதும் இறைவனடி போற்றும் அடியார்ப் பெருந்தகைகளா என்பதுதான் தெரியவில்லை.

தொலைக்காட்சித் தொடரில் பார்த்ததாகச் சென்ற இடுகையில் பேசிய பல காட்சிகள் (அரவிந்தனும் பூரணியும் திருப்பரங்குன்றம் மலையில் பெயர் பொறித்தல், பொற்றாமரைக் குளத்தின் முன் சந்தித்தல் போன்ற காட்சிகள்) இடுகையிட்ட அடுத்த நாளே நூலிலும் வந்து விட்டன. பரவாயில்லை. தொலைக்காட்சித் தொடருக்கும் மூல நூலுக்கும் ஓரளவு தொடர்பு இருக்கும் போலத் தெரிகிறது. :)

அடுத்ததாக நான் சொல்ல மறந்த இன்னொன்றும் வந்து விட்டது. அரவிந்தனுடைய நண்பனாக முருகானந்தம் என்றொரு கதாபாத்திரம். தொலைக்காட்சியில் தொடர் பார்த்த போதே எனக்கு அரவிந்தனை விட முருகானந்தத்தை மிகவும் பிடிக்கும். அரவிந்தன் நல்லவன் - நாயகன் என்றாலும் கொஞ்சம் நளினம் கிளினம் என்று ஒரு மாதிரியாகச் சித்தரிக்கப் பட்டிருப்பான். ஆனால் முருகானந்தம் தடாலடிப் பேர்வழி. தவறைத் தட்டிக் கேட்டால் மட்டும் போதாது; அதைச் செய்பவர்களை ரெண்டு தட்டுத் தட்டவும் வேண்டும் என்று சொல்கிற ஆள். அதெல்லாம் செய்ய முடியாத கையாலாகாதவர் அனைவருக்கும் அப்படிப் பட்டவர்களைத்தானே திரையில் காணும் போதும் கதைகளில் படிக்கும் போதும் அளவிலாமல் பிடிக்கிறது. அது மட்டுமில்லை, அவன் ஒரு தொழிற்சங்கவாதியும் கூட. அதனால் இயல்பாகவே அவனை நிறையப் பிடித்து விட்டது. முருகானந்தமாக நடித்தவரின் முகம் இன்னமும் அப்படியே நினைவிருக்கிறது. டி இராஜெந்தரின் தம்பி போல - ஆனால் இன்னும் கொஞ்சம் களையாக இருப்பார். அவர் பெயர் கூட நினைவிருக்கிறது. வெங்கடேஷ். அந்த நேரத்தில் சில திரைப்படங்களில் கூட துணைப் பாத்திரங்களில் அவரைப் பார்த்திருக்கிறேன்.

இதோ அடுத்த அத்தியாயமும் வந்து விட்டது. சினிமா மோகத்தில் வசந்தி தொலைந்து போவதும் அவளை அழைத்து வரச் செல்லும் குழுவில் முருகானந்தமும் இடம் பெறுவதும் வந்து விட்டது. நல்ல குடும்பத்துப் பெண்களிடம் சினிமாவில் நடிக்க வேண்டும் என்கிற கிறுக்கு அப்போதே ஆரம்பித்திருக்கிறது. அதில் ஆரம்பித்ததுதான் குடும்பப் பெண்கள் குத்துப் பாட்டுக்கு ஆடும் அளவுக்கு வளர்ச்சி கண்டிருக்கிறது. திருச்சியில் வைத்து முருகானந்தம் அவளைக் காத்தோடு அறைகிற காட்சி ஒன்று தொலைக்காட்சித் தொடரில் கண்ட நினைவு. அப்போது மிகவும் ரசித்துப் பார்த்த காட்சிகளில் ஒன்று. அப்போதைய வயதும் பின்னணியும் அப்படி. மிடுக்கான பெண்களை அட்டுப் பையன்கள் அடித்தால் பார்த்துப் பரவசப் படும் காலம் அது. அதுவே இப்போதாக இருந்தால் பார்த்துக் கொதித்துப் போயிருப்போம். இல்லையா?! ஆனால் புதினத்தில் அந்தக் காட்சியே இல்லை. ஆனால் அதன் பின்பு இருவருக்கும் காதல் உண்டாகிற கதை அப்படியேதான் இருக்கிறது. வசந்தியாக நடித்தவரின் முகம் கூட நினைவில் இருக்கிறது. பெயர் கூட இராஜஸ்ரீ அல்லது ஏதோவொரு ஸ்ரீ என்பதாக நினைவு. அதன் பின்பு அவரும் சில திரைப் படங்களில் தங்கையாக நடித்துக் கண்ட நினைவும் இருக்கிறது.

வசந்தியின் குடும்பம் பற்றிக் கொஞ்சம் பேசி விடுவோம். வசந்தியின் தந்தை இலங்கையில் வாழ்வாங்கு வாழ்ந்தவர். அவருடைய காலத்தில் குடும்பத்தோடு அங்குதான் இருந்திருக்கிறார்கள். அவ்வப்போது தமிழகம் வந்து சென்று கொண்டிருந்திருக்கிறார்கள். இலங்கைக்கும் தமிழகத்துக்குமான உறவு எப்படி இருந்தது என்பதைப் பிற்காலச் சந்ததிக்குச் சொல்லும் ஒரு சிறிய சாட்சியாக இந்த நூலும் இருக்கும். அவருடைய தந்தையாரின் மறைவுக்குப் பின் மதுரையில் அவருடைய தாய் தன் இரு பெண்மக்கள் சகிதம் செட்டில் ஆகி விடுகிறார். அவர்களுக்குக் கொடைக்கானலில் ஒரு எஸ்டேட் இருக்கிறது. அந்த அளவுக்கு வசதி. மூத்த மகள் வசந்தா தறுதலையாகத் தலையெடுக்கிறாள். அடுத்த பெண் செல்லம் அடக்கமும் பண்பும் நிறைந்த அழகுப் பிள்ளையாக வளர்கிறாள். ஒரே வீட்டில் பிறந்த இரு பெண்பிள்ளைகள் இப்படி எப்படி முற்றிலும் மாறுபட்டவர்களாக வருகிறார்கள் என்பது நாம் இப்போதும் பல வீடுகளில் பார்த்து ஆச்சரியப் படுவதுதானே. பணக்கார வீட்டுப் பிள்ளைகள் எல்லாமே ஒரு மாதிரித்தான் வளரும் என்கிற வார்ப்புகள் (STEREOTYPES) எல்லாம் இல்லாமல் பார்த்துக் கொண்டது அன்றைய தேதிக்குப் பெரிய சாதனை.

அதே போலவே ஒழுக்க சீலர் பேராசிரியர் அழகிய சிற்றம்பலத்தின் மகன் - பூரணியின் தம்பி - திருநாவுக்கரசு என்று பெயர் கொண்டவன், தறுதலையாவதும் அந்தக் காலத்திலேயே எதார்த்தம் அறிந்து எழுதி இருப்பதைக் காட்டுகிறது. ஐம்பது வருடங்களுக்கு முன்பே பதினைந்து வயதுப் பையன் சீட்டாடுவதும் பீடி குடிப்பதும் நடந்திருக்கிறது. ஒருவேளை, அது மதுரை போன்ற மாநகரங்களில் மட்டுமாக இருக்கலாம். இது போன்ற சேட்டைகள் சிறுநகரங்களையும் கிராமங்களையும் சென்று சேரக் கொஞ்சம் காலம் பிடித்திருக்கும் என்றே எண்ணுகிறேன். சினிமாக்காரர்கள்தான் அதற்குப் பிந்தைய காலத்திலும் பணக்காரன் கெட்டவன், ஏழை நல்லவன், நல்லவர் பிள்ளை நல்லவர், கெட்டவன் பிள்ளை ரெம்பக் கெட்டவன் என்பது போன்ற பாடாவதியான கதைகளைச் சொல்லிக் கொண்டு இருந்திருப்பார்கள் போலும். இப்போது அதுவும் கூடப் பெருமளவில் குறைந்து விட்டது என்றே சொல்ல வேண்டும்.

எதார்த்தத்துக்கு ஏற்பற்ற பல விஷயங்களும் இந்தக் கதையில் இருக்கின்றன. வசந்தியின் அம்மா மங்களேசுவரி அம்மாள் அவ்வளவு நல்லவராக எப்படி இருந்தார் என்பது புரிபடவில்லை. மதுரக் கோட்டையில் அப்படியெல்லாம் இருந்தால் மங்களேசுவரி அம்மாளை மங்குனி அம்மாள் என்று நினைத்து அஞ்சு வருடங்களில் ஆண்டியம்மாள் ஆக்கி இருப்பார்கள். நாயகனும் நாயகியும் வர்ணிக்கிற அளவுக்கு அழகாக இருக்க வேண்டும் என்ற ரீதியில் பாத்திரங்களைப் படைத்திருப்பதும் கூட அப்படியோர் அம்சமே. ஆண்களைக் கூட அசிங்கமாகக் காட்டுகிற முதிர்ச்சி இப்போதைய படைப்பாளிகளுக்கு வந்து விட்டது. பெண்களை அழகுக்கு அப்பாற்பட்டு நாயகியாகச் சித்தரிக்கும் காலம் இன்னும் வரவில்லை என்றே தோன்றுகிறது. அல்லது, அப்படியான கதைகளைப் படிக்க வில்லை - படங்களைப் பார்க்க வில்லை என்றும் இருக்கலாம். அதே வேளையில், நாம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும், அழகாய் இருப்பவர்களின் மற்ற திறமைகள், சர்க்கரை அதிகம் போட்ட காப்பி போல நம் சமூகத்தின் கண்களுக்குச் சற்றுத் தூக்கலாகத் தெரியும் என்பதும் ஏற்றுக் கொண்டே ஆக வேண்டிய உண்மை. அந்த வகையில் நா.பா.வின் பாத்திர அமைப்பு எதார்த்துக்கு ஏற்ற மாதிரி இருக்கிறதென்றும் ஏற்றுக் கொள்ளலாம்.

இந்தக் கதையின் முதல் பாதியில் சேவை மனப்பான்மையும் நல்லெண்ணமும் மித மிஞ்சித் தென்படுகின்றன. ஒருவேளை அந்த நேரத்தில் நா.பா.வைச் சுற்றி அவ்வளவு நல்லவர்கள் வாழ்ந்தார்களோ என்னவோ. நல்லவர்கள் அதிகமிருக்கும் கதைகளில் மட்டுமல்ல; மெய் வாழ்க்கையிலேயே அடுத்தடுத்து நிறைய நல்லவர்களைக் கண்டால் கிள்ளிப் பார்த்துக் கொள்ளும் அளவுக்குத்தான் நாம் வாழும் சூழல் இருக்கிறது. அப்படியிருக்கையில், எம்.ஜி.ஆர். படங்களில் வருவது போல, கையில் கிடைப்பதையெல்லாம் பங்கு வைக்கும் அரவிந்தனும், முன் பின் தெரியாத பூரணிக்கு கணக்குப் பார்க்காமல் செய்யும் மங்களேசுவரி அம்மாளும் சில நேரங்களில் காமெடிக் கேரக்டர்கள் போல் இருக்கிறார்கள். அதற்குக் கால இடைவெளிதான் காரணமாக இருக்க வேண்டும்.

மங்கையர் கழகத்தில் இருக்கும் பெண்கள் நிறையப்பேர் வம்பளப்பதே வேலையாய்க் கொண்டவர்கள் என்கிற வரி, இரண்டு முக்கியமான கருத்துக்களைச் சொல்லிச் செல்கிறது. ஒன்று, சங்கம் வைப்பதில், அது எந்தச் சங்கமானாலும் சரி, எந்தக் காலத்திலும் மதுரையை அடித்துக் கொள்ள முடியாது. அப்போதே அப்படி ஒரு சங்கம் தோன்றி விட்டதென்றால் பார்த்துக் கொள்ளுங்களேன். இரண்டு, மகளிர் சங்கங்கள் என்றாலே, வம்பளக்கும் பெண்களின் கூடாரம் என்கிற நிலைமையோ கருத்தோ (கவனமாகப் பேசணுமோல்லியோ!) அந்தக் காலத்திலேயே இருந்தும் இருக்கிறது. இன்னொன்று, பூரணியின் சொற்பொழிவுக்குப் படம் போட்டு சுவரொட்டிகள் ஒட்டியதைப் பற்றிப் படித்த போது, சுவரொட்டி ஒட்டுவதிலும் மதுரை எப்போதும் முன்னோடிதான் என்பதும் உறுதியாகிறது. "வெற்றிகரமாக உச்சாப் போன அருமை அண்ணனுடைய அன்பு மகனுக்கு எங்கள் இனிய வாழ்த்துக்கள்!" என்கிற ஒன்றுதான் நான் மதுரையில் இன்னும் வாசித்திராத ஒரே சுவரொட்டி வாசகம். மற்றபடி எல்லாத்துக்கும் எல்லா விதமான வார்த்தைகளோடும் சுவரொட்டி ஒட்டி ஒட்டி மதுரைச் சுவர்கள் அனைத்தும் மரத்துப் போய் விட்டன என்பதை மதுரையையும் அதைச் சுற்றிலும் இருக்கிற ஊர்களையும் சேர்ந்த எம் போன்றவர்கள் நன்கறிவர்.

ஒரு கட்டத்தில், எவ்வளவோ திறமையோடும் பேரோடும் புகழோடும் இருந்த போதும் தனக்குத் திருமணமாகாத ஒரு காரணத்துக்காக சமுதாயத்தில் தன்னைப் பற்றிப் பிறர் இழித்துப் பேசுவதைக் கேட்டு உடைந்து போகிறாள் பூரணி. என்னதான் சாதித்தாலும், பேரோடும் புகழோடும் வாழ்ந்தாலும், சாதாரண மக்கள் வாழும் சாதாரண வாழ்க்கையை வாழ முடியா விட்டால் வாழ்க்கை நிறைவற்றதாகத்தானே இருக்கிறது என்று எண்ணி எண்ணி அழுகிறாள். இதுதான் இலட்சியவாதிகளுக்கு நேரும் மிகப் பெரிய நெருக்கடி. இதை வெல்ல முடியாமல் மாட்டிக் கொள்வோர்தான் முக்கால்வாசிப் பேர். அந்தச் சிந்தனை வரும்போதே முளையிலேயே கிள்ளி எறிய முடிகிறவர்கள் மிக மிகக் குறைவே. அப்படியே எறிந்து கொண்டே இருந்தாலும் திரும்பத் திரும்பக் கேள்வி கேட்டுக் கொல்கிறவர்களிடம் இருந்து தப்பிப்பதற்காகவாவது சமரசம் ஆகி விடுவார்கள் சிலர். அதுதான் மனிதர்களைத் தம் திறமையைப் பிறருக்காகவன்றிப் பிழைப்புக்காகப் பயன் படுத்திக் கொள்வோராக ஆக்குகிறது. அது கூடப் பரவாயில்லை. இன்ன பிற சிற்றின்பங்களுக்காகக் கூடப் பயன்படுத்தப் பணிக்கிறது.

மேலும் மலரும்...

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம் - ஜெயகாந்தன்

"நான் என்னை ஒரு மேதையும் புனித வேசியும் போல் உணர்கிறேன்": அலெஹாண்ட்ரோ ஜோடராவ்ஸ்கிக்குச் சில கேள்விகள்

சாம, தான, பேத, தண்டம்