நண்பன் - திரைப்பட விமர்சனம்


வாரம் முழுக்க மூச்சு விடக் கூட முடியாத மாதிரி வேலை கொன்றெடுக்கிறது. சனி-ஞாயிறு மட்டும்தான் நமக்கு வேண்டிய வேலைகளைச் செய்து கொள்ள முடியும். சில சனி-ஞாயிறுகளில் அதுவும் முடியாத மாதிரிப் பார்த்துக் கொள்ளப் படுகிறது. இரண்டு வாரங்களுக்கு முன்பு ஒரு ஞாயிற்றுக் கிழமையும் அப்படித்தான் அன்று முடிக்க வேண்டிய வேலைகள் என்று ஒரு பெரிய பட்டியலை வைத்துக் கொண்டு அன்றைய நாளைத் தொடங்கினேன். வழக்கமாகவே தொலைக்காட்சியிடம் எளிதாகச் சிக்கிக் கொள்வதில்லை. சில நேரங்களில் சிறப்பான நிகழ்ச்சி ஏதாவது கட்டிப் போட்டு விடும். அப்படி அந்த வாரத்தைத் தொடங்கி வைத்தது - "இந்தியத் தொலைக்காட்சிகளில் முதன் முறையாக..." என்று ஆரம்பித்து "திரைக்கு வந்து சில மாதங்களே ஆன... நண்பன்" என்று முடிந்த விளம்பரம். விளம்பரம் போட்டு சில நிமிடங்களிலேயே படத்தையும் போட்டு விட்டார்கள். தமிழ்நாட்டு விளம்பரங்களை இங்கு போடுவதால் பிரயோசனம் இல்லையென்பதால் இடையிடையில் விளம்பரங்களும் கடுப்படிப்பதில்லை. எப்போதாவது ஒன்றோ இரண்டோதான் விளம்பரம் வருகிறது. அதனால் தொலைக்காட்சியில் படம் பார்ப்பது என்பது அவ்வளவு எரிச்சல் பிடித்த வேலையாக இல்லை.

ஷங்கர் படம் என்றால் நமக்குத்தான் தெரியுமே. வேறு யாராவது தயாரித்தால் அவரை ஆண்டி ஆக்காமல் விட மாட்டார். அவரே தயாரித்து இயக்கினால் அல்லது அவருடைய தயாரிப்பில் வேறு யாராவது இயக்கினால் காசுக்கு மோசம் இராது. இந்தப் படம் அவர் தயாரிப்பு இல்லை என்ற போதும் அவரே தயாரித்து இயக்கியது போலவே அடக்கி வாசித்திருக்கிறார். கண்ணில் நீர் வர வைக்கிற அளவுக்குக் காசைக் கொட்டாமல் எடுத்திருக்கும் அவருடைய மிகச் சில படங்களில் ஒன்றாக இருக்கும் என நினைக்கிறேன். அவருடைய படைப்பாற்றலில் எனக்கு மிகப் பெரும் மரியாதை உண்டு என்ற போதும் அவர் காலி பண்ணும் பணத்தைப் பற்றிக் கேள்விப் பட்டதும் அது கொஞ்சம் குறையத்தான் செய்யும். உலகத் திரைப்படங்களுக்கு இணையாக எடுக்கும் ஒரே இயக்குனர் என்கிற பெருமை ஒருபுறம் இருந்தாலும் ஒரு திரைப்படத்துக்கு இம்புட்டுத் துட்டைக் கொட்டுகிற அளவுக்கு நாம் இன்னும் பணக்காரர்கள் ஆகவில்லை என்பதால் அது எனக்கு நெருடத்தான் செய்கிறது.

அடுத்தது நம்ம இளைய தளபதி. அவரை அடக்கி வாசிக்க வைப்பது அதை விடப் பெரிய பிரச்சனை. கொடுமைக்கார வில்லனைப் பார்த்து தொடையைத் தட்டிக் கத்துகிற காட்சி ஒன்று இல்லையென்றால் அந்தப் படத்துக்கு அவர் ஒத்துக் கொள்ளவே மாட்டார் போல என்று எண்ணிக் கொண்டிருந்தேன். ஷங்கர் ஒத்துக் கொள்ள வைத்திருக்கிறார். அங்குதான் ஷங்கரின் திறமை நிரூபணம் ஆகிறது. நாயகன் அசாதாரணத் திறமை கொண்டவனாக இருப்பதில் நமக்கொன்றும் வருத்தமில்லை. அது இந்தப் படத்தில் வருவது போன்ற திறமையாக இருந்தால் எல்லோருக்குமே நல்லது. அதை விடுத்து ஆயிரம் தலை வாங்கும் அபூர்வ சிகாமணிகள் நாம் நிறையப் பார்த்து விட்டதால் அதையே திரும்பத் திரும்பப் பார்க்கப் போரடிக்கிறது. அவ்வளவுதான்.

IIT வாழ்க்கை பற்றிய FIVE POINT SOMEONE என்கிற சேத்தன் பகத்தின் நாவலை 3 IDIOTS என்று இந்தியில் எடுத்துச் சக்கைப் போடு போட்டது. அண்ணன் அமீர் கான் கலக்கு கலக்கென்று கலக்கி இருந்ததாக தினமும் அலுவலகத்தில் கேள்விப் பட்ட நினைவு இருக்கிறது. அதைத் தமிழில் எடுக்கப் போவதாகக் கேள்விப் பட்டபோது மகிழ்ச்சியாகத்தான் இருந்தது. மூல நூலை நான் படித்ததில்லை - இந்தியில் வந்த படத்தைப் பார்த்ததில்லை என்பதால், பல காட்சிகள் நூலில் எப்படி எழுதப் பட்டிருக்கும் - இந்தியில் எப்படி எடுக்கப் பட்டிருக்கும் என்று பின்னணியில் கணக்கு ஓடிக் கொண்டே இருந்தது. எடுத்துக்காட்டாக, விருமாண்டி சந்தானம் என்ற வைரஸ் என்ற கல்லூரி முதல்வரின் பெயர், இந்தியில் எப்படி இருந்திருக்கும்? வீரேந்திர சேவாக் மாதிரி ஏதாவது ஒரு பெயராக இருந்திருக்கும் என நினைக்கிறேன்! கொசக்சி பசப்புகழ் இந்தியில் என்னவாக இருந்தாரோ தெரியவில்லை.

விஜய் நடிப்பதாக இருந்து சூர்யா நடிப்பதாக மாறி மீண்டும் விஜய்யே நடிப்பதாக ஆன கதையெல்லாம் அவ்வப்போது கேள்விப் பட்டுக் கொண்டேதான் இருந்தேன். சூர்யா நடித்திருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும் என்றாலும் விஜய்யும் தன் பணியை நன்றாகவே செய்திருக்கிறார். விடுவாரா ஷங்கர்? ஜீவா, ஸ்ரீகாந்த், சத்யராஜ், சத்யன் என எல்லோருமே வாங்கிய காசுக்கு நன்றாக உழைத்திருக்கிறார்கள்.

வழக்கம் போலவே கதாபாத்திரங்களின் பெயர்கள் கலக்கல். பஞ்சவன் பாரிவேந்தன், சேவற்கொடி செந்தில், விருமாண்டி சந்தானம் போன்ற பெயர்கள் ஷங்கரின் ட்ரேட் மார்க். கொசக்சி பசப்புகழ் கூட தமிழும் ஐரோப்பியமும் கலந்த ஓர் அருமையான பெயர்.

பெயர்கள் மட்டுமல்ல. கதாபாத்திரங்களை அமைத்திருக்கும் விதமும் சூப்பர். இது சேத்தன் பகத்துக்குச் சேர வேண்டிய பெருமையாக இருக்கும் என நினைக்கிறேன். முதலில், சத்யராஜின் கதாபாத்திரம் - விருமாண்டி சந்தானம். கல்லூரி முதல்வரான இவர், படிப்பும் அதன் மூலம் அடையும் உலகியல் வெற்றியும் மட்டுமே வாழ்க்கையில் எல்லாம் என்று எண்ணுபவர். கல்வித் துறையில் இருக்கிற எல்லோருமே இப்படித்தான் இருக்கிறார்கள். கல்வித் துறையில் மட்டுமல்ல. எல்லாத் துறைகளிலும் இந்தப் பிரச்சனை இருக்கிறது. வாங்கும் சம்பளத்துக்குப் பாதி கூட உழைக்காத ஒரு கூட்டம் ஒரு புறம். எதற்குள் நுழைந்தாலும் அதே முழு நேரக் கிறுக்காக மாறி விடும் கூட்டம் ஒரு புறம். இது ஒரு மிகப் பெரும் சமூகப் பிரச்சனை. தான் செய்யும் பணியில் ஆர்வம் இருப்பது நல்ல பண்பு. அதிலேயே மூழ்கிப் போவதும் அதை விட நல்ல பண்பு. ஆனால் உலகத்தையே அந்த ஒற்றைக் கண்ணாடியில்தான் பார்ப்பேன் என்று அடம் பிடிப்பதுதான் கொடுமை. எழுதுபவர்கள் எழுதுவது மட்டுமே வாழ்க்கை என்பது போலப் பேசுவதும், வாத்தியார்கள் மதிப்பெண்கள் மட்டுமே வாழ்க்கை என்பது போலப் பேசுவதும், சாமி கும்பிடுபவர்கள் எந்த நேரமும் இறைவனின் பாதத்தில் விழுந்து கிடப்பதே என் பணி என்பதும், சமூகப் பணி ஆற்றுபவர்கள் உலகத்தில் உள்ள எல்லோருமே தன்னைப் போலவே குடும்பத்தை நடு வீதியில் விட்டு விட்டு வர வேண்டும் என்று சொல்வதும் போல ஒரு குறிப்பிட்ட விஷயத்தில் கிறுக்காகி விடுவது நல்லதில்லை. அதற்கு அப்பால் தொண்ணூற்றி ஒன்பது விஷயங்கள் இருக்கின்றன என்பதை எல்லோரும் உணர்வதே சக மனிதர்களை சரியாக நடத்தவும் மதிக்கவும் உதவும். கல்வித் துறையில் இருப்போர் மட்டுமல்ல எல்லா வீடுகளிலுமே இப்போது இது போன்ற ஓரிரு சமூக விரோதிகள் ("இவர்களையும் கூட அப்படிச் சொல்லலாமா?" என்று விழிக்கிறீர்களா? சொல்லலாம்! தான் சரியென நினைக்கும் ஒன்றுக்காக அடுத்தவர் உயிரை எடுக்கும் எல்லோருமே சமூக விரோதிகள்தானே!) உருவாகி விட்டார்கள்.

வெங்கட் இராமகிருஷ்ணனின் தந்தை இராமகிருஷ்ணனும் அப்படியொரு சமூக விரோதிதான். புகைப்படம் பிடிப்பதில் ஆர்வம் மிகுந்த தன் மகனை எல்லோரையும் போல் பொறியாளர் ஆக்க ஆசைப்படுகிறார். தன் காலத்துக்குப் பின்பும் தன் பிள்ளை சாப்பாட்டுக்குப் பிரச்சனை இல்லாமல் வாழ வேண்டும் என்று ஆசைப் படுவதும் அதற்கான சரியான துறையைத் தேர்ந்தெடுத்துப் படிக்கச் சொல்வதும் தந்தை என்ற முறையில் அவருடைய கடமை - நல்லெண்ணம். பிள்ளையைப் பெற்றுக் குப்பைத் தொட்டியில் போட்டு விட்டுப் போகிற ஆட்களும் இருக்கிற நாட்டில் இப்படியான ஒரு சமூக மாற்றம் நல்ல மாற்றம்தான். அது அளவுக்கு மிஞ்சிப் போகையில்தான் பிரச்சனையாகிறது. உலகத்துக்கு இலட்சக் கணக்கான புகைப்படக் கலைஞர்கள் தேவைப் படவில்லை. ஆனால், பொறியாளர்கள் தேவைப் படுகிறது. எல்லோரும் தனக்கு விருப்பமுள்ள துறையைத்தான் தேர்ந்தெடுப்பேன் என்றால் முக்கால்வாசிப் பேர் யாருக்கும் பயனில்லாத ஏதோவொரு வேலையைத்தான் தேர்ந்தெடுப்பார்கள். எடுத்துக்காட்டுக்கு, படிக்கிற காலத்தில் என்னை என் நோக்கம் போல விட்டிருந்தால், நாள் முழுக்க ஒருத்தருக்கும் ஒரு பயனும் இல்லாமல் புத்தகங்களைப் படிப்பவனாகவும், தமிழ் நாட்டில் வெளியாகும் இதழ்கள் அனைத்திலும் கதையும் கட்டுரையும் எழுதுபவனாகவும், ஊர் ஊராகப் போய் மேடையில் கவிதை வாசித்துக் கைத்தட்டு வாங்குபவனாகவுமே இருக்க விரும்பியிருப்பேன். அது கூட ஒரு வழியில் சோம்பேறித்தனம் தானே.

"காசுக்கு மாரடிக்கிறோம்!" என்று இன்று செய்து கொண்டிருக்கும் வேலையைச் சுருக்கமாகச் சிறுமைப் படுத்தி விடலாம். அதை அப்படி மட்டும் பார்க்க முடியாது. அதுதான் இந்தச் சமூகம் என்னிடம் இருந்து எதிர் பார்க்கும் வேலை. அதனால்தான் அவ்வளவு சம்பளம் கொடுக்கிறது (சம்பளம் கொடுப்பதில் இருக்கும் ஏற்றத்தாழ்வுகள் என்பது வேறொரு விஷயம்!). 'நான் ஒருத்தருக்கும் பயனில்லாத வாசித்தலும் எழுதுதலும் செய்து கொண்டிருப்பேன். அதற்கு இதே மாதிரிச் சம்பளம் தர வேண்டும். அப்படி இல்லாவிட்டால், சமூகத்தைக் கோளாறு சொல்லிப் புலம்புவேன்!' என்பது எந்த வகையிலும் நியாயமாக இருக்க முடியாது. எழுதிக் கொண்டிருக்கிற எல்லோரும் ஜெயகாந்தன் ஆக முடியாது. அதை அந்த வயதில் சொன்னால் புரிந்திருக்காது. நுழைந்த போது கணிப்பொறிகளைக் கண்டால் ஆர்வம் இல்லாமல்தான் இருந்தேன். அந்த வேலை நம் வாழ்க்கை முறையை இவ்வளவு மாற்றியிருக்கிறது - நம்மை விடப் பல மடங்கு தரமான ஒரு வாழ்க்கையை நம் பிள்ளைகளுக்கு ஏற்படுத்திக் கொடுக்க உதவுகிறது என்கிற போது இன்று அந்த ஆர்வம் வந்து விட்டது. ஆனால் இதெல்லாம் நம்மைப் போன்ற சாமானியக் குடும்பங்களில் இருந்து வருபவர்களுக்கான கதை. சேத்தன் பகத் சொல்லியிருப்பது விரும்பியதைத் தேர்ந்தெடுத்தாலும் கஞ்சிக்குக் கஷ்டம் வராத மேல்நடுத்தர வர்க்கத்துக் கதை. நாம் அடிப்படை வசதிகளை நிவர்த்தி செய்து கொள்ளும் அடுத்த கட்ட வாழ்க்கையை நோக்கி ஓடும் வேளையில் அதெல்லாம் அமையப் பெற்றவர்கள் விருப்பம் இருக்கிற துறையில் பெரிய ஆளாக முயல்கிற அதற்கடுத்த கட்ட வாழ்க்கையை நோக்கி ஓட வேண்டும் என்பதே அவர் சொல்ல வந்த கருத்து என்று நினைக்கிறேன்.

நான் என்ன படிக்க வேண்டும் என்கிற முடிவை எடுக்கும் உரிமை என்னைச் சுற்றியுள்ளவர்களுக்கு இல்லை என்பது போலவே, பிள்ளை படித்து முடித்து வந்தால் வயதான காலத்தில் நிம்மதியாக மூன்று வேளைக் கஞ்சி குடிக்க முடியும் என்று எண்ணிப் படிக்க வைக்கும் பெரியவர்களைப் பட்டினி போடும் உரிமையும் எனக்குக் கிடையாதே. தான் ஆக முடியாததைத் தன் பிள்ளையை ஆக்கிப் பார்க்க வேண்டும் என்பது நியாயமான ஆசைதான். அதில் பிள்ளையின் கனவுகளைக் காவு கொடுப்பதில் எந்த அளவுக்குப் போகலாம் என்பதே எல்லோரும் கவனமாக இருக்க வேண்டியது. எல்லாப் பிள்ளைகளுக்குமே தம் எதிர்காலம் பற்றிய தெளிவு இருப்பதில்லை. அதனால் ஒரு குறிப்பிட்ட காலம் வரை பெற்றோரின் வழி காட்டுதல் தேவைப் படத்தான் செய்கிறது. ஆனால், எல்லாப் பெற்றோருமே, "என் பிள்ளை உன் பிள்ளையை விடப் பெரிய ஆள்!" என்று எல்லோரிடமுமே நிரூபிக்க முயற்சிக்கிறார்கள். அதற்காகக் குருவி தலையில் பனங்காயை வைக்கிறார்கள். அங்குதான் பிரச்சனை ஆரம்பிக்கிறது. அந்த வகையில் சேத்தன் பகத்தின் கோபம் நியாயமானதே.

பொறியியல் படித்து அதன் பின் எம்.பி.ஏ. படித்து அமெரிக்காவில் போய் வங்கியில் வேலை பார்க்கும் கொடுமை பற்றித் தன் நியாயமான கேள்வியை எழுப்பியிருக்கிறார். அந்த வகையில் நாம் எல்லோருமே பல் குத்தக் கூட உதவாத பல பாடங்களைப் படித்து ஏகப் பட்ட இளமைக் காலத்தை வீணாக்கி விட்டோம் என்பது உண்மைதான். வங்கியில் வேலை பார்க்கப் போகிறவன் ஆரம்பித்திலேயே வணிகவியலும் கணக்குப் பதிவியலும் படித்திருந்தால் எவ்வளவு நன்றாக இருந்திருக்கும்! வேதியியல் ஆய்வுக் கூடத்தில் வீணான அமிலங்களையும் விலங்கியல் ஆய்வுக் கூடத்தில் வீணான தவளைகளின் உயிர்களையும் மட்டுமல்ல, அவற்றில் வீணான வாழ்க்கையின் மிக முக்கியமான நேரத்தையும் மிச்சப் படுத்தியிருக்கலாமே. அதற்குக் காரணம் விருமாண்டி சந்தானங்களும் இராமகிருஷ்ணன்களுமே என்பதுதான் உண்மை.

ஸ்ரீவத்சன் போன்று வாழ்க்கை முழுக்கவும் வெற்றியின் பின்னால் ஓடிக் கொண்டிருக்கும் ஒரு கூட்டம் ஒவ்வோர் ஆண்டும் வெளியேறிக் கொண்டுதான் இருக்கிறது. அவர்களின் எண்ணிக்கையும் ஒவ்வோர் ஆண்டும் நம்மைப் போன்ற வளரும் நாடுகளில் கூடிக் கொண்டேதான் இருக்கின்றது. அவர்களும் அவர்களுடைய பெற்றோரும்தான் இந்த உலகத்தை ஓட்டப் பந்தயக் களமாக்கி, அருமையான இளமைக் காலத்தையும் அதன் பின் இல்லற வாழ்க்கையையும் சராசரி மனிதர்கள் அளவுக்கு அனுபவிக்க முடியாமல், வெளியில் காட்டிக் கொள்வதற்கு மட்டும் பெருமையாக இருக்கிற வாழ்வற்ற வாழ்க்கை ஒன்றை வாழ்ந்து மடிகிறார்கள். அந்த போதைக்குள் ஓரளவு மாட்டிக் கொண்டவன் என்ற முறையில், கண்ணை மூடிக் கொண்டு வெறி பிடித்து ஓடிக் கொண்டிருக்கிற நம்மையெல்லாம் ஒரு நிமிடம் கையைப் பிடித்து இழுத்து உட்கார வைத்து யோசிக்க வைத்ததன் மூலம், இந்தப் படம் அதன் பணியைச் சிறப்பாகச் செய்திருப்பதாகவே உணர்கிறேன்.

மற்றபடி, இலியானா, தனுஷ்கோடி, ஆள் மாறாட்டம், "ஆல் இஸ் வெல்" எல்லாம் திரைக்கதைக்கு வலுச் சேர்க்கும் சராசரித் தமிழ் பட உத்திகளே.

கருத்துகள்

  1. // தமிழ்நாட்டு விளம்பரங்களை இங்கு போடுவதால் பிரயோசனம் இல்லையென்பதால் இடையிடையில் விளம்பரங்களும் கடுப்படிப்பதில்லை. எப்போதாவது ஒன்றோ இரண்டோதான் விளம்பரம் வருகிறது. அதனால் தொலைக்காட்சியில் படம் பார்ப்பது என்பது அவ்வளவு எரிச்சல் பிடித்த வேலையாக இல்லை. //

    அதெப்படி இங்கே விளம்பரம் போடும்போது அங்கே மட்டும் போடாமல் ஒளிபரப்ப முடியும்...

    பதிலளிநீக்கு
  2. // சமூகப் பணி ஆற்றுபவர்கள் உலகத்தில் உள்ள எல்லோருமே தன்னைப் போலவே குடும்பத்தை நடு வீதியில் விட்டு விட்டு வர வேண்டும் என்று சொல்வதும் போல //

    ஹி ஹி... நீங்களும் பாதிக்கப்பட்டிருக்கீங்க...

    பதிலளிநீக்கு
  3. பதிவின் பாதி வரைக்கும் சுவாரஸ்யமாக இருந்தது... அதற்குப்பின் ஏனோ இலக்கிய நெடி அடிக்க ஆரம்பித்துவிட்டது...

    பதிலளிநீக்கு
  4. வாசிப்புக்கும் கருத்துரைகளுக்கும் நன்றி, பிரபாகரன்.

    தொலைகாட்சி நிகழ்ச்சிகள் யாவும் வெளிநாடுகளுக்கு ஒரு வாரம் தாமதமாகவே வரும். அதனால் அதற்குள் தமிழ் நாட்டு விளம்பரங்களை நீக்கி விட்டு உள்ளூர் விளம்பரங்கள் சேர்த்து விடுகிறார்கள்.

    முதல் பாதி-இரண்டாம் பாதி பற்றிய உங்கள் கருத்து புரிகிறது. ஒரு சமூகப் பிரச்சினையைப் பற்றிப் பேசியதால் நடை கொஞ்சம் கட்டுப்பாடு இல்லாமல் போய் விட்டது. :)

    பதிலளிநீக்கு
  5. அந்த போதைக்குள் ஓரளவு மாட்டிக் கொண்டவன் என்ற முறையில், கண்ணை மூடிக் கொண்டு வெறி பிடித்து ஓடிக் கொண்டிருக்கிற நம்மையெல்லாம் ஒரு நிமிடம் கையைப் பிடித்து இழுத்து உட்கார வைத்து யோசிக்க வைத்ததன் மூலம், இந்தப் படம் அதன் பணியைச் சிறப்பாகச் செய்திருப்பதாகவே உணர்கிறேன்//

    .அருமையாக விமர்சனம் செய்துள்ளீர்கள்
    தொடர வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  6. I like your vimarsanam. Talking about the concept and not the story itself. Beautifully written.

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம் - ஜெயகாந்தன்

"நான் என்னை ஒரு மேதையும் புனித வேசியும் போல் உணர்கிறேன்": அலெஹாண்ட்ரோ ஜோடராவ்ஸ்கிக்குச் சில கேள்விகள்

சாம, தான, பேத, தண்டம்