வேற வியப்புகள் - உள்ளுணர்வும் கனவுகளும்!

இன்று கலாச்சார வியப்புகள் பற்றி எழுதுவதாகச் சொல்லி இருந்தேன். அதற்குள் வேறொரு வியப்பு வந்து இன்றைய நாளையே ஆட்டி விட்டது. வியப்பு என்பதை விட அதிர்ச்சி என்றே சொல்லலாம். காலை படுக்கையில் இருந்து எழும் போதே பயத்துடனேயே எழுந்தேன். அதிகாலை அயர்ந்த தூக்கத்தில் ஒரு கனவு. தலைக்கு மேலே பறக்கும் விமானம் ஒன்று தலைக்கு மேலேயே விழுகிற மாதிரிக் கனவு. 'ஐயோ, சோலி முடிஞ்சதே!' என்று அலறுகையில் தரையில் முட்டிய விமானம் சிரிக்கும் பலூனாக (விமானம் அளவுக்கு இராட்சத பலூன்!) மாறி ஏதோ வாழ்த்துச் சொல்கிறது. கெட்ட கனவாக ஆரம்பித்து சுபமாக முடிந்ததால் பயப்பட வேண்டியதில்லை என்று மனதைத் தேற்றிக் கொண்டு அலுவலகம் சென்றேன்.

அலுவலகம் விமான நிலையத்துக்கு அருகில் என்பதால் ஐந்து நிமிடங்களுக்கு ஒரு விமானம் மேலெழும்புவதைக் காண முடியும். அப்படிக் கண்ட முதல் விமானம் எங்கே கீழே விழுந்து விடுமோ என்கிற பயத்திலேயே நடந்து அலுவலகத்துக்குள் சென்றேன். பின்னர் செய்தித் தளங்களைத் திறந்ததும், நைஜீரியாவில் விமானம் ஒன்று விழுந்து விட்ட செய்தி. சிறிது நேரம் கழித்து, நான் பார்த்த காட்சியைப் போன்றே ஒரு காட்சியைப் பெண்மணி ஒருவர் விழி பிதுங்க விவரித்துக் கொண்டிருந்தார். அதைப் பார்த்ததும் ஆடிப் போய் விட்டேன். நான் கண்ட கனவுக்கும் நிகழ்ந்த நிகழ்வுக்கும் தொடர்பேதும் இருக்கிறதா?! ஒருவேளை, இவ்விரு நிகழ்வுகளும் ஒன்றோடொன்று எந்தத் தொடர்பும் அற்ற தற்செயல் நிகழ்வுகளாகவும் இருக்கக் கூடும். ஆனால், அதன் பின்பு நாள் முழுக்க இது போன்று வாழ்வில் இதுவரை நடந்த பல சம்பவங்கள் பற்றிய நினைவுகள் ஓடின. இன்று முழுக்க இந்த நினைவுகளே என்னை ஆட்கொண்டு விட்டன என்று சொல்லலாம். என்றாவது ஒருநாள் எப்படியும் எழுதப் பட வேண்டிய முக்கியமான பொருட்களில் ஒன்றே இதுவும். இதை விடச் சிறந்த தருணம் இருக்கவா முடியும்?!

எல்லோருக்குமே எதிர் காலத்தைக் காணும் சக்தி ஒன்று இருக்கிறது. அது சிலருக்கு அதிகமாக வேலை செய்கிறது. சிலருக்குக் குறைவாக வேலை செய்கிறது. சிலருக்கு மரணப் படுக்கையில் சரியாக எத்தனை மணிக்குத் தன் உயிர் பிரியும் என்பதைச் சொல்லும் அளவுக்கு மட்டும் வேலை செய்கிறது. சிலருக்கு வேலை செய்தாலும் அதை அவர்கள் உணர்வதில்லை. அந்த வகையில் சின்ன வயதில் இருந்தே எனக்கு உள்ளுணர்வோடு நிறைய அனுபவங்கள் ஏற்பட்டிருக்கின்றன. "நான் பெரிய பருப்பு!" என்று நிரூபிக்க முயலும் இடுகையல்ல இது. ஒரு தனி மனிதனின் பார்வையில் உள்ளுணர்வு எப்படியெல்லாம் வேலை செய்யும் என்பதைப் பேச முயலும் சிறிய முயற்சி. அவ்வளவுதான்.

மிகச் சிறிய வயதில் தம்பியை விடுதியில் சேர்ந்து படிக்கக் கட்டாயப் படுத்திச் சேர்த்து விட்டு வந்தார் தந்தையார். காலையில் கண்ணீர் மல்கக் கிளம்பியவனை வழி அனுப்பி விட்டு வந்தோம். சிறிது நேரத்தில் விடப் போனவரும் விட்டு விட்டுத் திரும்பி விட்டார். அன்று மாலை ஒரு விளையாட்டுக்காக ஓடி வந்து அம்மாவிடம், "எம்மா, தம்பி அழுதுக்கிட்டு வர்றாம்மா. ஹாஸ்டலில் இருந்து தப்பிச்சு வந்துட்டான்!" என்று சொன்னேன். அடுத்த சில மணி நேரத்துக்குள் அதே போலத் தம்பி அழுது துடித்துக் கொண்டு வந்து சேர்ந்தான். "பாவிப்பய... இப்பத்தானே சொன்னான்... அதே மாதிரி ஆயிருச்சே!" என்று நம் படங்களில் வருவது போல ஒப்பாரி வைத்துக் கதறினார் எங்கள் தாயார். அன்றில் இருந்தே நான் என்ன சொன்னாலும், "அன்னைக்கே இவன் சொன்ன மாதிரியே அப்பிடி நடந்துச்சே. இதுவும் நடந்து தொலைச்சுட்டா என்ன செய்றது?" என்று பதறிப் பதறி மகனைப் பெரிய மகான் ஆக்கி விட்டார். வெளியுலகம் தெரியாத பெண்கள் எல்லோருமே செய்கிற வேலை தானே இது!

அன்றிலிருந்தே எனக்கும் எதிர் காலத்தைக் கணிக்கும் ஏதோ பெரிய சக்தி ஒன்று இருக்கிறது என்பது போல எண்ணிக் கொண்டு திரிய ஆரம்பித்தேன். அவ்வப்போது அதை உணரவும் ஆரம்பித்தேன். கூடிய விரைவில், நான் மட்டுமல்ல, எல்லோருமே அது போல அவ்வப்போது உணர்வார்கள் என்பதையும் அறிந்து கொண்டேன்.

பின்பொரு முறை நாகலாபுரத்தில் இருந்து சிவகாசி செல்வதற்காக சாத்தூர் செல்லும் நகரப் பேருந்தில் ஏறி அமர்ந்து, முதல் நொடியில் இருந்தே ஒரு விதமான பட படப்பு. சிறிது நேரத்தில் பேருந்தின் பின் பகுதியில் வெடி குண்டு ஒன்று வெடிக்கப் போவது போல மீண்டும் மீண்டும் மனதில் ஒரு காட்சி வந்து செல்கிறது. தலை வலி வேறு வந்து கொல்கிறது. தீவிரவாதம் தலையெடுக்க ஆரம்பித்திருந்த காலம். ஆனாலும், மொத்த இந்தியாவில் அந்தக் கிராமத்து மக்களையா குறி வைத்து வெடி குண்டு வைத்து விடப் போகிறார்கள் பாதகர்கள் என்றொரு கேள்வி வந்து வந்து செல்கிறது. பாதி வழியில் நென்மேனிக்கருகில் டயர் வெடித்து வண்டி நின்றது. எனக்குத் தலையே சுற்றி விட்டது. ஏதோ ஒன்றை நினைத்து ஏதோ ஒன்று நடந்தது. ஆனாலும் இரண்டுக்கும் ஒரு சம்பந்தம் இருக்கத்தானே செய்கிறது. ஏதோவொன்று வெடித்ததே!

இதன் பின்பு கல்லூரியில் படிக்கும் காலத்தில் விடுமுறை முடிந்து கல்லூரி திரும்பும் நாட்களில் காலை நான்கு மணிக்கே வயிறு நிறையத் தண்ணீர் குடித்துக் காலைக் கடன்களை முடித்து விட்டு வண்டி ஏறுவேன். குடித்த இரண்டு லிட்டர்த் தண்ணீர் வேலையைக் காட்ட ஆரம்பிக்கும் போது வண்டி சரியாகப் பாதி வழியில் போய்க் கொண்டிருக்கும். நெடுஞ்சாலையில் வேகமாகச் செல்லும் வண்டியை நிறுத்தச் சொல்லவும் முடியாது. வண்டி தூத்துக்குடி போய்ச் சேரும்வரை பொறுத்திருக்கவும் முடியாது. முதல் முறை இது நிகழ்ந்த போது மரண வேதனையில் துடித்தேன். என்ன செய்வதென்றே புரிபடவில்லை. 'ஏதாவது ஆகியாவது வண்டி நின்று விடக் கூடாதா!' என்று துடித்தேன். இதற்கு மேல் ஒரு நிமிடம் கூட முடியாது என்கிற மாதிரிச் சூழ்நிலையில் வண்டி டயர் வெடித்து நின்றது. இது எனக்காகவே நிகழ்ந்தது போல இருந்தது. இதுவும் ஏதோ ஓர் அதிசயம் போலவே இருந்தது. அடுத்த முறை இதே மாதிரி மாட்டிக் கொண்ட போது டயர் வெடிக்க வில்லை என்பது வேறு கதை.

கல்லூரிக் காலத்தில் உளவியல் பற்றியெல்லாம் நிறையப் பேச ஆரம்பித்திருந்தோம். சீனியர் ரூபஸ் அண்ணன் நிறையத் தத்துவங்கள் சொல்லுவார். பார்வையிலேயே ஒரு மனிதன் ஓடாத கடிகாரங்களை ஓட்ட வைத்த கதை, மேகங்களை எதிர்த் திசையில் நகர வைத்த கதை என்று நிறைய வெளிநாட்டுக் கதைகள் எல்லாம் சொன்னார். மனித மனத்தின் ஆற்றல் பற்றி நிறைய ஆராய்ச்சிகள் செய்து கொண்டிருந்த காலம் அது. "பின்னால் இருந்து ஒருவர் பிடரியைப் பார்த்துக் கொண்டே இருந்தால் அவர் கண்டிப்பாகத் திரும்பிப் பார்ப்பார்; அதனால்தான் பெண்கள் சடை போடுகிறார்கள். ஒருவரின் நெற்றிப் பொட்டை உற்றுப் பார்த்தால் அவரை மயங்கக் கூட வைக்கலாம்; அதனால்தான் பெண்கள் பொட்டு வைக்கிறார்கள்!" என்றெல்லாம் நிறையச் சொல்வார். அதையெல்லாம் சோதனை செய்து பார்த்து ஓரளவு உறுதியும் செய்ய முடிந்தது.

பின்னர் "ஐயர் தி கிரேட்" என்றொரு மலையாளப் படம் பற்றிக் கேள்விப் பட்ட போது கண்டிப்பாக அந்தப் படத்தைப் பார்த்து விட வேண்டும் என்று எண்ணிக் கொண்டிருந்தேன். கிட்டத் தட்ட அந்த ஆர்வம் தொலைந்து போன பின்பு ஒரு முறை தமிழிலேயே அந்தப் படம் ஓடிக் கொண்டிருப்பதைக் கண்டு அப்படியே அடங்கி முடிவு வரை அமர்ந்து கண்டு முடித்தேன். கேள்விப் பட்ட அளவு பரபரப்பு படத்தைப் பார்த்த போது இருக்க வில்லை. அதற்குக் காரணம் - படத்தைப் பார்க்க வேண்டும் என்று எண்ணிய நாளில் இருந்து படத்தைப் பார்க்க ஏற்பட்ட கால இடைவெளி. ஆனால், படத்தின் கரு என்பது இப்போது நினைத்தாலும் புல்லரிக்க வைக்கத்தான் செய்கிறது. அதற்குக் காரணம் - அதே போல நானும் பல முறை உணர்ந்திருக்கின்ற அனுபவம்தான்.

திருமணத்துக்கு முன்பு வருங்கால மனைவியோடு விடிய விடிய வெட்டிப் பேச்சு பேசும் காலத்தில் ஒருநாள், "என்ன இன்னைக்குக் கம கமவென மணக்கிறது?!" என்று எதற்கப்படிக் கேட்டேன் என்றே தெரியாமல் லூசு மாதிரி ஒரு கேள்வி கேட்டேன். ஆடிப் போய் விட்டாள் ஆத்துக்காரி. "எப்டிங்க?! இன்னைக்குத்தான் சாதி மல்லி வாங்கி வச்சிருக்கேன். இப்டி ஒரு கேள்வி கேட்டுக் கொன்னுப்பிட்டிங்க?!" என்று தலை கால் புரியாமல் தவித்து விட்டாள். அந்தக் கேள்வி கேட்ட போது அப்படியொரு கேள்வியை ஏன் கேட்டேன் என்று எனக்குப் புரிபடவே இல்லை. ஆனால், அதன் பின்பு சாதி மல்லிக் கதையைக் கேட்டதும் எனக்கும் தலை சுற்றியது.

இது மட்டுமில்லை. கனவுகளும் கூட சின்ன வயதில் இருந்தே இது போல ஏதாவது ஒரு சேதியைச் சொல்லிச் சென்று கொண்டே இருக்கின்றன. கனவுகளைப் பற்றிய ஆராய்ச்சி செய்ய வேண்டும் என்கிற ஆர்வம் இருந்து கொண்டே இருந்தது. அடிக்கடி பறக்கிற மாதிரிக் கனவுகள் வேறு வந்து கொண்டே இருக்கும். நண்பன் கோபாலிடம் இது பற்றிப் பேசிக் கொண்டிருந்த போது, INTERPRETATION OF DREAMS நூலில் ஃபிராய்ட் இது பற்றி எழுதியிருக்கிறார் என்று சொன்னான். "ஐயர் தி கிரேட்" பார்க்க வேண்டும் என்கிற ஆசையைப் போலவே இந்தப் புத்தகத்தையும் படித்து விட வேண்டும் என்று அவாவெடுத்துத் திரிந்தேன். ஆசை ஆசையாகப் புத்தகத்தை வாங்கிப் பார்த்தால், முதல் பக்கத்திலேயே மூஞ்சியில் அடித்து விட்டது. ஒன்றும் புரிகிற மாதிரித் தெரியவில்லை. பின்பொரு காலத்தில் திரும்ப எடுத்துப் பார்த்தால் புரியும் என்ற நம்பிக்கையில் அப்படியே அலமாரியை அழகு படுத்த வைத்து விட்டேன்.

ஆனாலும் கனவுகள் வந்து கொண்டேதான் இருக்கின்றன. அவற்றுக்கு உள்ளாகப் பல தகவல்களும் வந்து கொண்டேதான் இருக்கின்றன. வயிறு சரியில்லாத நாட்களில் எல்லாம் கனவில் அருவருப்பூட்டும் காட்சிகள் ஏதாவது வரும். இது பற்றி ஃபிராய்ட் சொல்லத்தான் செய்கிறார். ஒவ்வொரு கனவுக்கும் பின்னணியில் ஓர் உடல்நிலைக் காரணமோ மனநிலைக் காரணமோ இருக்கும் என்கிறார். உச்சாவை அடக்கிக் கொண்டு தூங்கும் இரவுகள் எல்லாம் ஒரு குறிப்பிட்ட விதமான கனவுகள் வருவதை கண்டிப்பாக உங்களில் நிறையப் பேர் உணர்ந்திருப்பீர்கள். இவை இரண்டுக்கும் அப்பாற்பட்டு (உடற்காரணமும் இன்றி மனக்காரணமும் இன்றி) சம்பந்தமே இல்லாமல் சில கனவுகள் வருவதுண்டு. அவற்றில்தாம் இருக்கின்றன இந்தக் குறிப்புச் சேதிகள். அவற்றை உற்றுக் கவனித்தல் சில நேரங்களில் நம்மைப் பெரும் பிரச்சனைகளில் இருந்து காக்கலாம்.

சில வருடங்களுக்கு முன்பு சின்ன வயதில் உடன் படித்த நண்பன் ஒருவன் பற்றிய நினைவு வந்தது. சில நாட்கள் கழித்து சற்றும் எதிர் பாராத விதமாக எதிர் பாராத ஓரிடத்தில் அவனை நேரில் சந்திக்கும் வாய்ப்புக் கிடைத்தது. கடந்த பத்து வருடங்களில் அவனை ஓரிரு முறை கூட நினைத்துப் பார்த்ததில்லை. அப்படியிருக்கையில் அவன் பற்றிய நினைப்பு வந்த ஓரிரு நாட்களிலேயே எதிர் பாராத ஓரிடத்தில் அவனைச் சந்திக்க முடிந்தது எப்படி? இந்தக் கேள்வி அதன் பின்பும் பல நாட்கள் என்னைத் துளைத்தெடுத்தது.

போன வாரம் கூட பள்ளித்தோழன் சுப்ரமணி பற்றித் திடீரெனச் சிந்தனை. 'நீண்ட நாட்களாகப் பேசவேயில்லையே!' என்று எண்ணிக் கொண்டிருந்தேன். வருடத்தில் ஓரிரு முறை பேசுபவனிடம் கிட்டத்தட்ட ஆறு மாதத்துக்கும் மேலாகப் பேசவே இல்லை. ஆனால், அவன் பற்றிய சிந்தனை வந்து அடுத்த அரை மணி நேரத்தில் மின்னஞ்சலைத் திறந்தால், நான் அவனைப் பற்றிச் சிந்தித்த அதே நேரத்தில் அவனிடம் இருந்து ஒரு மின்னஞ்சல் - "உன் செல்போனுக்கு அழைத்துப் பார்த்தேன். கிடைக்கவில்லை. என்ன ஆச்சு?" என்று. ஆடிப் போய் விட்டேன். உடனடியாக அழைத்துப் பேசினேன்.

எனக்கு மட்டுமில்லை. நிறையப் பேருக்கு இது போன்ற அனுபவங்கள் இருப்பதைப் பற்றிக் கேள்விப் பட்டிருக்கிறேன். முதன் முதலில் வேலைக்குச் சேர்ந்து கொஞ்ச காலத்தில் வந்த சம்பள உயர்வை நான் சொல்வதற்கு முன்பே என் அம்மா கனவில் கண்டதாகச் சொன்னது இப்போதும் எனக்கு அருள் வர வைக்கிறது.

அது போலவே என் பாட்டி (தாயின் தாய்) இறந்த அன்று செய்தி போவதற்கு முன்பே அவருடைய தங்கை மகள் ஒருவர், "இன்னைக்கு ஏதோ கெட்ட செய்தி வரப் போகிறது!" என்று சொல்லித் துடித்ததாகக் கேள்விப் பட்ட போது எங்களுக்கெல்லாம் உடம்பெல்லாம் மயிர்க் கூச்செறிந்தது.

இது எல்லாமே ஒரே மாதிரியான அனுபவங்கள் இல்லை. ஆனால், இவை எல்லாவற்றுக்கும் பொதுவான அம்சம் ஏதோ ஒன்று இருக்கிறது என்பதை ஒத்துக் கொள்வீர்கள் என நினைக்கிறேன். அது நடக்கப் போகும் ஒன்றை முன்பே உணர்தல் அல்லது நடந்த ஒன்றை அது பற்றிக் கேள்விப் படும் முன்பே தொலைவில் இருந்து உணர்தல். "அவன் வாயில் விழுந்தால் நடந்து விடும்!", "ஆக்கங்கெட்ட மாதிரிப் பேசாதே, அப்படியே நடந்து விடப் போகிறது!" என்று சொல்வார்கள். எனக்கென்னவோ அது வேறு மாதிரியாகப் படுகிறது. அத்தகைய நிகழ்வுகள் சொன்னதால் நடப்பதாகப் படவில்லை; நடப்பதைத்தான் முன் கூட்டிச் சொல்லி விடுகிறோம் என்றெண்ணுகிறேன்.

இந்த சக்தி அதிகம் இருப்பவர்கள்தாம் குறி சொல்பவர்களாக இருக்கிறார்கள். ஆக, குறி சொல்வதே அறிவியலுக்கு எதிரான ஒன்றல்ல. அது ஆன்மிகம். ஆன்மிகம் என்பது கடவுள் பற்றியது மட்டுமல்ல. அது உளவியல். உளவியல் ஒன்றும் உளறியல் அல்ல. அதுவும் அறிவியல்தான். ஒவ்வொருவருக்கும் குறிகள் வெவ்வேறு உருவங்களில் வந்து கொண்டேதான் இருக்கின்றன. அவற்றைப் பயன் படுத்தத்தான் பழகிக் கொள்ள வேண்டும். என்ன சொல்கிறீர்கள்?! உங்களிடமும் இது போலக் கதைகள் நிறைய இருக்கும் என்று தெரியும் எனக்கு. அவை பற்றி இதற்குக் கீழே எழுதுங்கள். அல்லது, உங்கள் பதிவுகளில் எழுதி விட்டு இங்கே இணைப்புக் கொடுங்கள். மேலும் பேசுவோம்.

கருத்துகள்

  1. நல்ல அனுபவம், எனக்கும் ஒரு முறை பேருந்து பயணத்தின் போது நடு இரவில் ஒண்ணுக்கு முட்டிய போது பட்ட அவஸ்தை, நல்ல வேளையாக ஒரு லெவல் கிராசிங்க் வர பேருந்து ஓட்டுனர் வண்டியை நிறுத்தினார். அது போன்ற பிற வேளைகளிலும் இதற்குமேல் முடியவே முடியாது என்ற நிலையில் கண்டிப்பாக டாய்லெட் கிடைத்தேவிடும்.

    எங்கப்பா இறந்த அன்னிக்கு முதல்நாள் இரவில் நான் பேச்சிலராக இருக்கும் போது நன்றாக கவனமாக இருந்தும் சமைத்த உணவு தீய்ந்து போக எதோ நடக்கப் போகிறது என்று நினைத்து தூங்கினேன், மறுநாள் செய்தி வந்தது.

    பதிலளிநீக்கு
  2. ஒத்த அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி கண்ணன் அவர்களே.

    ம்ம்ம்... ஓ! இப்படியும் ஒரு குறிப்பு இருக்கிறதா? என் தாத்தா இறந்த செய்தி வருவதற்கு முந்தைய காலைப் பொழுதில் கண்ணில் ஈ அடித்து விட்டது என்று பாட்டி மிகவும் பதற்றப் பட்டார். அது போலவே அடுத்த ஒரு மணி நேரத்தில் கெட்ட செய்தி வந்தது. இது போல எத்தனையோ குறிப்புகள்...

    பதிலளிநீக்கு
  3. உங்களுக்கு தமிழ்மண நட்சத்திரம் ஆகும் வாய்ப்பு கிடைக்கும் என்று உங்கள் பதிவை படிக்கும் போது என் உள்மனம் கூறியது நடந்துவிட்டது (இது நகைச்சுவைக்காக). பேருந்து பயணத்தின் போது ஒண்ணுக்கு முட்டும் தொல்லை நிறைய பேருக்கு உள்ளது என்பதை நினைக்கும் போது அப்பாடா இது எனக்கு மட்டுமான தொல்லை இல்லை என மகிழ்வு ஏற்படுகிறது (என்ன மோசமான எண்ணம் என்று நினைத்தாலும் நினைத்தது அது தான்). இதனாலயே வெளியே செல்வதாக இருந்தால் 1 மணி நேரத்துக்கு முன்பே தண்ணீர் குடிப்பதை நிறுத்திவிடுவேன், அனுபவமே சிறந்த ஆசிரியர் :).

    பதிலளிநீக்கு
  4. குறும்பூ... :)

    வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி குறும்பன் அவர்களே.

    பதிலளிநீக்கு
  5. சில விஷயங்கள் கேள்வி படும் போது பிரம்மிப்பாக தான் இருக்கிறது. நீங்கள் குறி சொல்ல போகலாம்.

    பதிலளிநீக்கு
  6. எனக்கும் நினைத்துப் பார்க்கும் போதே பிரம்மிப்பாகத்தான் இருக்கின்றன.

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம் - ஜெயகாந்தன்

"நான் என்னை ஒரு மேதையும் புனித வேசியும் போல் உணர்கிறேன்": அலெஹாண்ட்ரோ ஜோடராவ்ஸ்கிக்குச் சில கேள்விகள்

சாம, தான, பேத, தண்டம்