கலாச்சார வியப்புகள்: இலண்டன் - 5/12

கலாச்சார அதிர்ச்சி (CULTURE SHOCK) என்றொரு சொல்லாடல் இருக்கிறதே ஆங்கிலத்தில். அது போல இது கலாச்சார வியப்புகள் (CULTURE SURPRISES). கலாச்சார வியப்புகள் என்பது என் பயணக் கட்டுரைகள் மற்றும் வேறுபட்ட கலாச்சாரத்தவருடனான பழக்கக் கட்டுரைகள். புதிதாக நான் போய் இறங்கும் ஊர்களைப் பற்றியும் இதில் நிறைய வரும். எனவே, இதில் நான் பேசும் விஷயங்கள் எல்லாமே கலாச்சாரம் பற்றியதாகவே இருக்கும் என்று எதிர் பார்க்க வேண்டியதில்லை. எனக்குப் புதிதாகப் பட்ட எல்லாமே இதில் வரும். பொறுத்தருள்க!

தொடர்ச்சி...

அலுவலக வாயிலில் இருந்த காவலாளர் சிரிக்காமலே வரவேற்றார். 'மீண்டும் ஒரு முறைத்த முகமா?!' என்று எனக்கு ஏமாற்றமும் கவலையும் ஏற்பட்டது. வெளிநாடுகளில் இருந்து வரும் ஆட்களைப் புன்முறுவலோடு வரவேற்க வேண்டும் என்று இங்கே நம் நிறுவனங்களில் பணிபுரியும் காவலாளர்களுக்கு சிறப்புப் பயிற்சி எல்லாம் கொடுக்கிறோம். அதையெல்லாம் பார்த்து ஒருவேளை அது மேற்குலகப் பழக்கமாக இருக்கும் போலும் என்றுதான் எண்ணிக் கொண்டிருந்தேன். அப்படியானால் அங்கே இருக்கிற காவலாளர்கள் ஏன் நம்மை மட்டும் சிரித்து வரவேற்பதில்லை?! அங்கே இருந்த காலம் முழுக்க வாய்ப்புக் கிடைக்கும் போதெல்லாம் இந்தப் புன்னகை விவகாரம் என்னை விடாமல் துளைத்துக் கொண்டே இருந்தது. போகட்டும், காவலாளர்கள் தேவையில்லாமல் சிரிக்கவெல்லாம் கூடாது என்று விதிமுறைகள் இருக்கக் கூடும் என்று எண்ணிக் கொண்டு உள்ளே நுழைந்தேன்.

வரவேற்பறையில் ஒரு வயதான பெண்மணி இருந்தார். அவருக்கும் சிரித்த முகத்தோடு காலை வணக்கம் சொன்னேன். மீண்டும் ஏமாற்றம். அவரும் சிரிக்காமலே பதில் வணக்கம் சொன்னார். அதன் பின்பும் பத்து நாட்கள் நான் சிரித்துச் சிரித்து வணக்கம் சொல்லிப் பார்த்தேன். அவர் பதிலுக்குச் சிரிக்காமலே வணக்கம் சொன்னார். ஒருவேளை நம்மையெல்லாம் கண்டாலே அவர்களுக்குப் பிடிக்காதோ என்று கூடத் தோன்றியது. ஆனால் என்னுடன் வந்த மற்றொரு பெண் சகாவிடம் நன்றாகச் சிரித்துத்தான் பேசினார். பெண் என்பதாலா, அவர் என்னை விடச் சிவப்பாக இருந்ததாலா, அவர் என்னை விட நன்றாகப் பேசியதாலா, என்ன கருமத்தால் என்று என்னால் கண்டு பிடிக்கவே முடியவில்லை. நம் மொகரையில் ஏதோ கோளாறு இருக்கிறதோ என்னவோ என்று எண்ணிக் கொண்டேன். அல்லது, என் பேச்சில் அவர்கள் எதிர் பார்க்கும் அளவுக்கு ப்ளீஸ், தேங்க்ஸ், சாரி எல்லாம் இல்லாமல் இருந்திருக்கலாம்.

அங்கே போகும் நம்மவர்களுக்கு இது ஒரு பெரும் பிரச்சனை. சின்ன வயதில் இருந்தே ரெம்பவும் குழைவது எனக்குச் சுத்தமாகப் பிடிக்காது. பின்னர் ஒரு காலத்தில் அதை நடிப்புக்காகச் செய்வதுதான் தப்பு; உண்மையாகவே அப்படி நடந்து கொள்வது நாகரிகம் என்று அந்த நாகரிகத்தையும் ஏற்றுக் கொண்டு விட்டேன். ஆனாலும் சாரி சொல்லும் அளவுக்கு தேங்க்ஸ் அல்லது ப்ளீஸ் வருவதில்லை. அங்கு சென்றால் அது நிறையச் சொல்ல வேண்டும் என்று தயாராகவே சென்றேன். இருந்தாலும் மனிதர்கள் இவ்வளவு சொல்லக் கூடாதப்பா என்றுதான் தோன்றியது.

நம்மிடம் இருக்கும் நியாயம் என்னவென்றால், 'பெரும் பெரும் உதவிகளையெல்லாம் செய்து விட்டே நாங்கள் எல்லாம் பேசாமல் நன்றி எதிர் பார்க்காமல் போகிறவர்கள். நீங்கள் என்னப்பா விலகி நிற்பதற்கு... விக்கல் எடுப்பதற்கு... என்று எது எதுக்கோ எல்லாம் இப்படி நன்றியும் மன்னிப்பும் அள்ளிக் கொட்டுகிறீர்கள்?' என்பது. அதுவும் நியாயம்தான். ஆனால் அது நம்ம ஊர் நியாயம். அவுக ஊர் நியாயம் என்ன தெரியுமா? 'சின்னச் சின்ன விஷயத்துக்குக் கூட இதெல்லாம் சொல்லிப் பாருங்கள். நல்லெண்ணம்-நாகரிகம் எல்லாம் கூடும்!' என்பது. அதுவும் சரிதான். அப்படியெல்லாம் சொல்லிப் பழகியிருந்தால் நங்குன்னு நம் மண்டையில் எதையாவது போட்டு விட்டு அதற்கும் நம்மையே திட்டி விட்டுப் போகும் பண்பாடெல்லாம் நம் மண்ணில் வந்திராது. என்ன சொல்கிறீர்கள்? கூடக் கொஞ்ச காலம் இருந்திருந்தால், கூடக் கொஞ்சம் நாகரிகங்களைக் கற்றுக் கொண்டு வந்திருக்கலாம். என்ன செய்ய? போக எட்டியது இருக்க எட்டவில்லை.

உள்ளே நுழைந்து வேலைகள் ஆரம்பித்தன. பின்னால் ஒருவர் வரும்போது கதவைத் திறந்து தான் மட்டும் போய் விட்டு கதவை அப்படியே விட்டு விடக் கூடாது; அவரும் கடந்த பின்தான் விட வேண்டும் என்கிற பண்பாடெல்லாம் பத்துப் பதினைந்து வருடங்களுக்கு முன்பே வெளிநாடு போய் வந்தவர்கள் நமக்குச் சொல்லிக் கொடுத்திருக்கிறார்கள் என்பதால் அதெல்லாம் எளிதாகச் செய்ய முடிந்தது. நம்மைச் சுற்றியிருக்கும் எல்லோருமே அதைச் செய்கிறார்கள் என்பதுதான் ஓரளவு ஆச்சரியம். அதற்குப் பெயர்தானே பண்பாடு. எல்லோருமே செய்வது மட்டுமில்லை. அதனால் பயன் பெரும் எல்லோருமே வாய் நிறையச் சிரித்து நன்றி சொல்கிறார்கள். இத்தனை முறை சிரித்தால் - நன்றி சொன்னால், வாய் வலிக்காதா இவர்களுக்கு என்று கூட எண்ணத் தோன்றியது சில நேரங்களில். ஆனால் அப்படியெல்லாம் பதில் பெறுகையில்தான் இது போன்ற பழக்கங்கள் மென்மேலும் வலுப் பெறும். இல்லாவிட்டால், உதவி செய்பவனையும் முறைத்து முழுங்கி விட்டுப் போகும் பண்பாடுதானே வளரும். ஆக, அந்த ஊரிலும் இரண்டு விதமான ஆட்களும் இருக்கிறார்கள். சிரித்தால் பதிலுக்குச் சிரிக்காதவர்களும் இருக்கிறார்கள். சின்னச் சின்ன விஷயங்களுக்குக் கூட விரட்டி விரட்டிப் புன்னகைப்போரும் இருக்கிறார்கள். எங்கே யார் இருக்கிறார்கள் என்பதுதான் கொஞ்சம் சரியாகப் புரிபடவில்லை.

இலண்டன் போனால் இது பார்க்க வேண்டும் அது பார்க்க வேண்டும் என்கிற ஆசைகள் எல்லாம் போய், ஒரு நேரத்தில் நல்ல வெயில் பார்க்க வேண்டும் என்கிற ஆசை அதிகமாகி விட்டது. முதல் நாள் முழுக்க அதற்கான வாய்ப்பே கிடைக்கவில்லை. கும்மென்று இருந்தது. மேல் மாடியில் இருந்து பார்க்கும் போது ஊர் அழகோ அழகென்று இருந்தது. ஆனாலும் ஒன்றைப் பார்த்து விட்ட பின்பு இதில் என்ன இருக்கிறது என்று உடனடியாகவே ஓர் உணர்வு வந்து விடுகிறது. மறுநாள் ஏதோவொரு பகுதியில் மட்டும் ஓர் சிறிய ஒளிக்கற்றை தெரிந்தது. அதைப் பார்த்த போது அவ்வளவு மகிழ்ச்சியாக இருந்தது.

உச்சி மதியம் வெளியில் சாப்பிடலாம் என்று கிளம்பி வந்தோம். அப்போதும் குளிர் கொன்று எடுத்தது. நான் போன நேரம் அப்படி. உச்ச கட்டக் குளிர் நேரம். அருகிலேயே பஞ்சாபி கடை ஒன்று இருந்தது. போய் அமர்ந்தோம். பரிமாற வந்தவர் (சர்தார்ஜி இளைஞர்) பேச்சுக் கொடுத்துக் கொண்டே "எந்தக் கம்பெனி?" என்றார். சொன்னோம். ஆச்சரியமாகி "நீங்கள் எப்படி இங்கே? உங்கள் கம்பெனி, அங்கே அல்லவா இருக்கிறது?" என்று எங்கள் வரலாறு-புவியியல் எல்லாம் பேசினார். வேறென்ன? வியப்புதான்! முதல் நாளேவா? கண்ணக் கட்டுதுப்பா. "இதெல்லாம் எப்படியா உனக்கு...?" என்று இழுக்கும் முன், "MBA-க்கு உங்கள் கம்பெனியில்தான் தீசிஸ் பண்ணினேன்!" என்றார். "அடக் கருமம் புடிச்சவனே, MBA முடிச்சிட்டு இங்க என்னடா பண்ற பரதேசி?" என்று நம்ம ஊரில்தான் திட்டுவார்கள். அங்கே அப்படியில்லை. அதைத்தான் முன்பே கேள்விப் பட்டிருக்கிறோமே. பெரியாளான வெளிநாட்டுக்காரர் எவருடைய வரலாற்றைப் படித்தாலும் கல்லூரியில் படிக்கிற காலத்தில் கடை ஒன்றில் பரிமாறும் வேலை பார்த்தது பற்றிப் பெருமையாகப் பேசுவார்களே. அது நினைவு வந்தது. ஆனாலும் கேள்விப் படுவதை விட நேரில் பார்ப்பதில் வியப்பதிகம் என்பதில் வேறு கருத்து இருக்கிறதா என்ன உங்களுக்கு? அந்தப் பண்பாடு மிகவும் பிடித்திருந்தது. அது நம்ம ஊரிலும் வந்து விட்டால் ஒரு வகையில் நல்லது நடக்கும். இது கேவலம்; அது கேவலம் என்கிற அக்கப்போர்கள் இராது. ஒரு வகையில் அது சிக்கலும் கூட. படித்தவனும் வந்து இலையில் கையை வைத்தால், அப்புறம் படிக்காதவர்களுக்கு இந்த நாட்டில் வாழ வழியே இல்லை என்றாகி விடும். புலி-மான் கதை எல்லாம் சொல்ல ஆரம்பித்து விடுவார்கள்.

மாலை வீடு திரும்பும் போது குளிர் அதை விடக் கொடுமையாக இருந்தது. ஐந்து மணிக்கு இருட்டி விடுகிறது. இரண்டு-மூன்று நாட்கள் ப்ளேசர் மட்டும் அணிந்து சமாளித்துப் பார்த்தேன். முடியவில்லை. கால் கூசுகிறது. உடம்பு நடுங்குகிறது. கை விறைக்கிறது. முகம் இறுகுகிறது. இரண்டு-மூன்று நாட்கள் ஆனால் எல்லாம் பழகி விடும் என்று எண்ணிக் கொண்டு இருந்து விட்டு, மூன்று நாட்கள் ஆன பின்பும் ஒன்றும் மாறாததால், ஒவ்வொன்றாக ஒவ்வொன்றையும் சரிப் படுத்தினேன். குளிருக்குக் கோட் வாங்கினேன். காதுக்கும் முகத்துக்கும் குல்லா வாங்கினேன். கைக்கு உறை வாங்கினேன். இவையெல்லாம் அணிந்த பின்புதான் ஓரளவு அங்கே வாழ்வது ஒன்றும் அவ்வளவு சிரமம் இல்லை என்று புரிந்தது.

சீக்கிரமே இருட்டி விடுகிறது என்பதால் அலுவலகத்தில் இருந்தும் எல்லோரும் சீக்கிரமே கிளம்பி விடுகிறார்கள். அதற்கேற்ற மாதிரி காலையில் சீக்கிரமே வேலையை ஆரம்பித்து விடுகிறார்கள். நம்ம ஊரில் போல நடு இரவு வரை யாரும் வேலை பார்ப்பதில்லை. ஓரளவுக்கு மேல் தாமதமானால் பாதுகாப்புப் பிரச்சனைகள் வேறு இருக்கின்றனவே. மாலை எப்படியும் சீக்கிரம் வீடு திரும்பி விடுவதால் சொந்த வாழ்க்கைக்குக் கொஞ்சம் நேரம் கிடைக்கிறது. வீட்டுக்கு வேண்டிய சாமான்கள் வாங்கி வரலாம் என்று குடும்பத்தோடு கடைகளுக்குப் போய் வரவும் முடியும். கிட்டத்தட்ட வாரத்தில் மூன்று-நான்கு நாட்கள் அப்படி வெளியே போய் வந்தோம். இருட்டும் முன் திரும்பி விட்டால், பிரச்சனைக்கு உரிய பகுதி என்று எல்லோரும் சொன்ன மேற்குக் க்ராய்டன் பக்கம் போய் வருவோம். இருட்டிய பின்பாக இருந்தால் கிழக்குப் பக்கமே இருந்து கொள்வோம்.

பொதுவாகவே ஆள் நடமாட்டமில்லாத வீதிகளைக் கண்டால் கொஞ்சம் அச்சம்தான். அதுவும் இலண்டன் பற்றிக் கேள்விப் பட்ட கதைகள் எல்லாம் இன்னும் அச்சுறுத்துபவையாகத்தான் இருந்தன. குறிப்பாகக் க்ராய்டன் பற்றிக் கேள்விப் பட்ட கதைகள். அலுவலகத்தில் இருந்து திரும்பும் நேரங்களிலும் சுற்றும் முற்றும் பார்த்துப் பயந்து கொண்டேதான் வேக வேகமாக நடந்து வருவேன். க்ராய்டனுக்குப் பதிலாக வேறு ஏதாவதோர் இடத்தில் போய் இறங்கியிருந்தால் இப்படியெல்லாம் கிறுக்காகி இருக்க மாட்டேன் என நினைக்கிறேன்.

கிராய்டனில் இருந்த ஹை ஸ்ட்ரீட் நாங்கள் நடமாடிய நேரங்களில் எல்லாம் பரபரப்பாகவே இருக்கும். அங்கு செல்லும் போதெல்லாம் பெங்களூரில் இருக்கும் எம்.ஜி.ரோடு இன்னும் பல மடங்கு அழகாயிருந்தால் எப்படி இருக்குமோ அப்படி ஓர் உணர்வு உண்டாகும். தரையெல்லாம் சிமெண்ட்-மொசைக் போட்டு சுத்தமாக இருக்கும். ஆங்காங்கே போவோர்-வருவோர் சிலாத்தலாக உட்கார்ந்து அனுபவிக்க வசதியாக சிமெண்ட் பெஞ்சுகள் போட்டிருக்கிறார்கள். எப்போதும் அதில் இளைஞர்கள்-இளைஞிகள் அமர்ந்து ஏதாவது குடித்துக் கொண்டு - குலாவிக் கொண்டு இருப்பார்கள். பீர்க் கேன்களும் சிகரெட் துண்டுகளும் நிறையச் சிதறிக் கிடக்கும். கண்டிப்பாக இலண்டனின் மற்ற பகுதிகளில் அப்படியெல்லாம் இருக்க வாய்ப்பில்லை. அது க்ராய்டனுக்கே உரிய சிறப்பம்சமாக இருக்க வேண்டும்.

இந்தியர்கள் போகும் நாடுகள் பெரும்பாலும் இந்தியாவை விட வளம் கூடிய நாடுகளே என்பது உண்மைதான் என்றாலும் இங்கிருந்து போகும் போதே நாம் எல்லாத்தையும் அள்ளிப் போட்டுக் கொண்டு போக வேண்டியதில்லை. தினசரித் தேவைக்குப் பயன் படும் பெரும்பாலான பொருட்கள் நாம் வாங்கும் அளவுக்குக் குறைந்த விலையில் கிடைக்கத்தான் செய்கின்றன. இந்தியப் பணத்துக்குக் கணக்குப் போட்டுப் பார்த்தால் சரிப்பட்டு வராது. ஆனால் அந்த ஊர்க் கணக்குப் படி பார்த்தால் அவை ஒன்றும் பெரும் செலவுகளாக இராது. அங்கும் எல்லா விதமான கடைகளும் இருக்கின்றன. கூடின விலைக் கடைகள், குறைந்த விலைக் கடைகள், அவர்களுக்கேற்ற மாதிரிக் கடைகள். நமக்கேற்ற மாதிரிக் கடைகள்... என்று எல்லா விதமான கடைகளும் இருக்கின்றன. எனவே நாம் பயப்படுகிற மாதிரி பெட்டிகள் பிதுங்கப் பிதுங்க அள்ளிப் போட்டுக் கொண்டு போக வேண்டியதில்லை. அங்கு கிடைக்காதவை மட்டும் வாங்கிக் கொண்டு போனால் போதும்.

இந்த விஷயத்தில் இன்னொன்றையும் உணர்ந்தேன். ஊரில் இருக்கும் போது நான் ஒவ்வொரு ரூபாயையும் கணக்குப் போட்டுச் செலவளிக்கிற ஆள்தான். ஆனால், அங்கு போய் செலவழிக்கும் போது எல்லோரும் சொன்னது போல இந்திய நாணயத்தின் மதிப்பைக் கணக்குப் போட்டுக் கணக்குப் போட்டு நேரத்தை வீணாக்க வில்லை. அதற்கொரு காரணம் கணக்குப் போடக் கூடச் சோம்பேறித்தனப் படும் என் பிறவிக் கோளாறாக இருக்கலாம். இன்னொன்று என்னவென்றால், அவைகளுடைய ஒரு பவுண்டு நம் பணம் எண்பது ரூபாய்க்குச் சமம். எனவே நம்ம ஊரில் நூறு ரூபாய் நோட்டுகளை நீட்டி வாங்கும் சாமான்களை பத்துப் பவுண்டுகளுக்குள் வாங்க முடியும் போது ஏதோ குறைவான விலைக்குக் கிடைத்து விட்டது போல உணர்கிறோம்.

நான் சொல்ல வருவது சரியாகப் புரிகிறதா என்று புரியவில்லை. அதாவது, நம்முடைய நாணயம் பலவீனமானதாக இருப்பதால் பெரிய பெரிய எண்கள் கூட நமக்கு மிகச் சிறியதாகப் படுகின்றன. எடுத்துக்காட்டாக, அவர்களுக்கு ஆயிரம் என்பது மிகப் பெரிய எண். ஏனென்றால், ஆயிரம் பவுண்டுக்கு அவர்கள் ஒரு பழைய கார் கூட வாங்கி விட முடியும். நமக்கு ஆயிரம் ரூபாய் என்பது, குடும்பத்தோடு வெளியில் போனால் ஆகிற சாப்பாட்டுச் செலவு. அதுதான் காரணம். எந்த சாமான் வாங்கினாலும் அதை வாங்கும் போது, 'கண்டிப்பாக இது வாங்கியே ஆக வேண்டுமா இப்போது?' என்று ஒரு கேள்வி எழும். அந்தக் கேள்வி எப்போதும் போல எழத்தான் செய்தது. ஆனால் அதற்காக இதை வாங்கினால் இந்திய நாணய மதிப்புப் படி எவ்வளவு வீணாகும் என்று போடும் கணக்குகள் அதிகம் போடவேயில்லை.

பெரும்பாலும் இந்திய சாமான்கள் கிடைத்தன. சில சாமான்கள் மட்டுமே கிடைப்பது சிரமமாக இருந்தது. அப்படிப் பட்டவற்றை முன்பே கேள்விப் பட்டு எடுத்துச் சென்றிருந்தோம். முக்கியமாக மசால் பொடி, மல்லிப் பொடி போன்ற சாமான்கள். அவை கூட இந்திய-பாகிஸ்தானி கடைகளில் கிடைக்கத்தான் செய்தன. மிக்சி மட்டும் அங்கு கிடைக்காது என்று இந்தியாவில் இருந்தே நிறையப் பேர் எடுத்துச் சென்று விடுவார்கள். நாங்கள் எடுத்துச் செல்லவில்லை. ஆனால், நாங்கள் தங்கியிருந்த சர்வீஸ் அபார்ட்மென்ட் இந்தியர்களுடையது என்பதால் எங்களுக்கு அந்தப் பிரச்சனை இல்லை.

குளிர் காரணமாகக் கடைகள் அனைத்தும் (குறிப்பாகச் சிறிய கடைகள்) கண்ணாடிக் கதவுகளால் முழுதும் அடைத்தே இருக்கின்றன. நம்ம ஊரில் போல வாடிக்கையாளரை வரவேற்ற வண்ணம் திறந்தே இருப்பதில்லை. அதனால் அங்குள்ள கடைகளைக் கண்டால் கடைகள் போலவே உணர முடிவதில்லை. அது போலவேதான் வீடுகளும். வெளியில் போகவும் திரும்பி வரவும் தவிர அபார்ட்மெண்டுகளில் ஆட்கள் நடமாடுவதைக் காணவே முடிவதில்லை. குளிர் தாங்க முடியாமல் கதவைப் பூட்டி வைத்துக் கொள்ளும் பண்பாடு கூட அங்கிருந்துதான் குளிரே இல்லாத இங்கும் வந்து விட்டது போலும்.

வியப்புகள் தொடரும்...

கருத்துகள்

 1. வாவ்! அருமையாக எழுதியிருக்கிறீர்கள். லண்டனில் உலாவுவது போல் உள்ளது.

  பதிலளிநீக்கு
 2. லண்டன் பற்றி இன்னும் நிறைய தெரிந்து கொள்ள ஆசை. தொடர் அருமையாய் இருக்கிறது

  பதிலளிநீக்கு
 3. @வடுவூர் குமார், மிக்க நன்றி. மகிழ்ச்சியாக இருக்கிறது.

  பதிலளிநீக்கு
 4. @அமுதா கிருஷ்ணா, நன்றி அமுதா அவர்களே. இன்னும் ஐந்து பாகங்களாவது வரும் என நினைக்கிறேன். பார்க்கலாம்.

  பதிலளிநீக்கு
 5. இந்தியர்கள் போகும் நாடுகள் பெரும்பாலும் இந்தியாவை விட வளம் கூடிய நாடுகளே என்பது உண்மைதான்////////////// wow supera soneenga
  by ungal nanban nadi
  http://nadikavithai.blogspot.in

  பதிலளிநீக்கு
 6. லண்டனில் காலடி எடுத்துவைத்த மாதத்தைத் தெரியப்படுத்தலாமே...

  பதிலளிநீக்கு
 7. படிக்கும் பொது ஸ்வெட்டர் போட்டு தான் படிக்க வேண்டும் போல இருக்கு... லண்டன் குளிர் படிக்கும்போது எனக்கும் அப்படிதான் இருந்தது.

  பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

சாம, தான, பேத, தண்டம்

யுவால் நோவா ஹராரி: “21-ஆம் நூற்றாண்டுக்கான 21 பாடங்கள்” | கூகுள் உரையாடல்கள்

சிவகாமியின் சபதம் - சில குறிப்புகள்!