ஜெயகாந்தனின் 'ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள்' - 2/4
தொடர்ச்சி...
நல்ல எழுத்தாளர்கள் எல்லோருமே நன்றாகச் செய்யும் வேலை, மனவோட்டங்களைச் சரியாகப் படம் பிடித்துக் காட்டுதல். அதைத் தலைவரும் ("அடப்பாவி, இவரையுமாடா?!" என்கிறீர்களா? நமக்கு எல்லோரும் தலைவர்தானே!) சிறப்பாகச் செய்திருக்கிறார். இப்படியான ஒரு நடையைத் தமிழுக்கு இவர்தான் முதலில் கொண்டு வந்திருக்க வேண்டும் என நினைக்கிறன். அதனால்தான் அவரை இவ்வளவு கொண்டாடுகிறார்களோ என்னவோ.
அது மட்டுமில்லை, அவருக்கென்று ஒரு மொழி நடையும் வைத்திருக்கிறார். பாரதியின் உரைநடையில் வரும் வடமொழித் தாக்கம் போல் இவருடைய எழுத்தில் கொஞ்சம் ஏற்றுக் கொள்ள முடியாத அளவுக்கு ஆங்கிலத் தாக்கம் மற்றும் கலப்பு இருக்கிறது. தாக்கம் தவறில்லை. கலப்புதான் தாங்க முடிவதில்லை. லாயரை வழக்கறிஞர் என்று சொல்லாவிட்டாலும் வக்கீல் என்று சொல்லியிருக்கலாம். பாத்திரங்கள் பேசும் போது சொல்வது வேறு. அது பிரச்சனையில்லை. ஆசிரியரே தான் சொல்வதாகச் சொல்லும் வரிகளில் கூட அப்படியான சொற்களைப் பயன்படுத்துவது கொஞ்சம் இடிக்கிறது. அது போலவே ஸெல்ஃப் என்கிற சொல். அதற்கு சுயம் என்கிற சொல் நன்றாகப் பொருந்தியிருக்கும். ஒருவேளை அதெல்லாம் அவருக்குப் பிந்தைய காலத்துத் தமிழாக்கமோ என்னவோ. குறைந்த பட்சம் செல்ஃப் என்றாவது சொல்லியிருக்கலாம். 'ஸார்' என்பதை 'சார்' என்றிருக்கலாம். 'ச' தான் சகலகலா எழுத்தாயிற்றே. அது மட்டுமின்றி மூர்த்தாட்சண்யம், சமத்காரம் போன்ற சொற்களும் அடிக்கடி நடமாடுகின்றன. மூர்த்தாட்சண்யம் இப்போது மூர்க்கத்தனம் ஆகிவிட்டது நல்ல முன்னேற்றம். 'ஒப்புத்துக்கிட்டோம்' என்பது தேவையில்லாத நீளம் கொண்டிருக்கிறது. 'ஒத்துக்கிட்டோம்' என்றால் போதுமே. வக்கிரம் என்கிற வார்த்தை திரும்பத் திரும்பத் தவறாகப் பயன்படுத்தப் பட்டிருப்பது போலவே இருக்கிறது. அண்ணாசாமி எதற்கெடுத்தாலும் வக்கிரம் வக்கிரம் என்று வைது தீர்க்கிறார். செல்லமாகச் சொல்லும் போது கூட "அவன் ஒரு வக்கிரம்" என்கிறார். ஒருவேளை அது அந்தக் காலத்து ஐயர் பேச்சோ என்னவோ. நம்முடைய காலத்தில் வக்கிரம் என்பது மிகக் கேவலமான ஒரு உணர்வுக்குக் கொடுக்கப் பட்டிருக்கும் பெயர். பிற்காலத் தமிழ்ச் சமூகம் இதில் கொஞ்சம் குழம்பிப் போகலாம்.
இன்றைக்கு விபரமான ஆள் போல் பேசுகிற எல்லோருமே தவிர்க்க முடியாமல் அடிக்கடிப் பயன்படுத்தும் சொல் - விஷயம். "தவிர்க்க முடியாத விஷயம் என்னன்னா...", "பாராட்டப் பட வேண்டிய விஷயம் என்னன்னா..." என்று எதற்கெடுத்தாலும் போட்டுத் தாக்க ஆரம்பித்து விட்டோம். அது எங்கிருந்து வந்தது என்று பார்த்தால், ஆங்கிலத்தின் THING-இலிருந்து வந்திருக்க வேண்டும் என்று என் ஊகம். இந்த நூலைப் படித்த பின்பு தமிழுக்கு அதைக் கொண்டு வந்ததே இவராகத்தான் இருக்குமோ என்றொரு சந்தேகம் வருகிறது. ஜெயகாந்தனும் அவருடைய ஆரம்ப கால வாழ்க்கை பற்றிச் சொல்லியிருக்கிறார். கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் இருந்த காலத்தில் அங்கு வரும் தலைவர்கள் ஆங்கிலத்தில் சரளமாகப் பேசிக் கொள்வதைப் பார்த்து இவரும் ஓரளவு ஆங்கில அறிவை வளர்த்துக் கொள்ள முயன்ற கதைகள் எல்லாம் அந்தக் காலத்திலேயே கேள்விப் பட்டிருக்கிறேன். அதுதான் அவரை எழுத்தில் இந்த மாதிரியான ஒரு நடையைப் பிக்-அப் பண்ண வைத்ததோ என்று தோன்றுகிறது. நடை மட்டுமில்லை; ஒட்டு மொத்தத்தில் சிறந்த எழுத்தாளராக ஆகவே அந்த வாழ்க்கை உதவியிருக்க வேண்டும் என்றுதான் எண்ணுகிறேன். சிறுகதை என்ற இலக்கிய வடிவமே மேற்கத்தியது. அன்றைய நாட்களில் உலக இலக்கியங்கள் படித்தவர்கள்தாம் புதிய நடைகளில் எழுத ஆரம்பித்தார்கள். அப்படித்தான் இவரும் இருக்க வேண்டும் என்றெண்ணுகிறேன்.
ஐயர் பேச்சு, சென்னைத் தமிழ் இரண்டுமே சரளமாக வருகிறது ஆசிரியருக்கு. அண்ணாசாமி ஐயர் அப்படியே ஐயராத்துப் பேச்சு பேசுகிறார். ரங்காவின் க்ரூப் முழுக்க சென்னைத் தமிழ் பேசும் மண்ணின் மைந்தர் கூட்டம். இரண்டுமே இப்போது ஓரளவு ந்யூற்றல் ஆகி வருகிறது என்றே எண்ணுகிறேன். ஐயர்கள் எல்லோருமே இப்போது வீட்டுக்கு வெளியே ஐயர் தமிழ் பேசுவதில்லை. அது போலவே சென்னைக்காரர்களும் ஓரளவுக்கு ந்யூற்றலான மொழியைப் பழகி வருகிறார்கள். 'வாங்க', 'போங்க', 'சொல்லுங்க' எல்லாம் ஓரளவுக்கு வர ஆரம்பித்திருக்கிறது. தன்னை மறந்து வந்து விடுகிற அவர்களுக்கே உரிய 'அந்தச்' சில வார்த்தைகளைப் பெரிது படுத்த வேண்டியதில்லை இங்கே. :)
"கவிதை, நாடகம், கலை, ரசனை என்பதெல்லாம் வசதி படைத்தவர்கள் வாழ்க்கையை விரயமாக்கிக் கொள்ளக் கண்டு பிடித்த வக்கரிப்பு என்றுகூட அவன் நினைக்கிறான். இதை வெளியில் சொல்ல அவன் அஞ்சுகிறானோ? அல்லது சொல்லிப் பயனில்லை என்று சும்மா இருக்கிறானோ! ஆனால் சில சமயங்களில் அவன் இவ்விதம் நினைப்பது மட்டும் உண்மை." என்ற வரிகளைப் படித்த போது எங்கே நம்மைப் பற்றித்தான் பேசுகிறாரோ என்று கூடத் தோன்றியது. இளமைக்காலத்தில் இடதுசாரிச் சிந்தனையின் தாக்கம் கொண்ட - உலகத்தைப் பசியின் பால் துடிப்பவனின் பார்வை வழியே பார்க்கும் - எல்லோருக்குமே இப்படித்தான் தோன்றுமோ என்னவோ. இன்று வரை இதில் ஒரு தெளிவு பிறந்த பாடில்லை. சின்ன வயதிலேயே சினிமா ஆர்வம் கொண்ட தம்பியிடம், "உலகத்தில் எத்தனையோ பேர் சோற்றுக்கு வழியில்லாமல் இருக்கிறான்; ஏன் நம்மைச் சுற்றியே நிறையப் பேர் இருக்கிறார்கள்; நீ இப்படியெல்லாம் செய்வது தவறு!" என்று வாதிட்டபோது, "அப்படியானால், நீ மட்டும் ஏன் விளையாட்டுச் செய்தி படிக்க வார இதழ் வாங்குகிறாய்?!" என்று சிந்தனையை மேலும் தூண்டி தோல்வியை ஒப்புக் கொள்ள வைத்தான். அத்தோடு அதையும் நிறுத்தி விட்டேன் (அப்படியெல்லாம் பேசிவிட்டு இப்போது எப்படி வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்பது வேறு கதை!).
"செடி கொடி வளர்த்தல், நாய் வளர்த்தல், மீன் வளர்ப்பு, கிரிக்கெட் கமெண்டரி கேட்டல், திருவிழாக்கள், ஆடம்பரங்கள், பணக்காரர்களின் வெற்று விளையாட்டுகள் மேல்வர்க்க இரவல்; அதில் கடைசிவரை மாறாத பிடிவாதம், ஆனாலும் கடைசியில் அதை மனைவிக்காகச் செய்யும் விட்டுக் கொடுக்கும் நற்குணம்" என்று சொல்லும் போதும் அதன் தொடர்ச்சியாகவே தீவிரமாகச் சிந்தித்தேன். இதில் முக்கால்வாசி விசயங்களில் எனக்கும் அந்தப் பிடிவாதங்கள் அப்படியே இருக்கின்றன. சிலவற்றை மனைவிக்காக விட்டுக் கொடுக்கும் நற்குணம் இன்னும் கைவரவில்லை. இப்போதும் இது பற்றிய வாதங்கள் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றன. இதை எல்லா விசயத்திலும் காட்டி விட்டால் பிரச்சனையில்லை. சிலவற்றில் வியாக்கியானம் பேசி சிலவற்றில் தளர்ச்சி காட்டும் போதுதான் விவாதங்கள் சூடு பிடித்து விடுகின்றன. யோக்கியன் எல்லா விசயத்திலும் யோக்கியமாக இருக்க வேண்டுமே. எனக்குப் பிடித்ததில் மட்டும் வேறு மாதிரி இருந்து கொள்வேன் என்றால் எப்படி முடியும்?
கல்யாணி முதல் முறையாக அவனுக்கு மொட்டையாய் இரு வரிகள் மட்டும் எழுதி, "நான் யாரென்று கண்டுபிடித்து விட்டால் வந்து சந்தியுங்கள்!" என்று கடிதம் அனுப்புவதும் அவன் அதைப் புரிந்து கொண்டு - ஆனால் காட்டிக் கொள்ளாமல் - பேட்டி எடுக்க வந்திருப்பதாகச் சொல்லி நிற்கும் போது 'புரிந்து வந்தனா அல்லது புரியாமல் வந்தனா?!' என்று இவள் குழம்புவதும் பயங்கர ரொமாண்டிக். இது ஐம்பது வருடங்களுக்கு முன்பே சாத்தியம் எனும் போது காதல் மட்டும் பரிணாம வளர்ச்சியெல்லாம் இல்லாமல் ஆரம்பத்தில் இருந்தே வளர்ந்தே இருக்கிற ஒன்றோ என்று தோன்ற வைக்கிறது. ஆசிரியர் காதல் உணர்வில் கை தேர்ந்தவர் என்பதும் பல இடங்களில் சிறப்பாக வெளிப்பட்டிருக்கிறது. அது போலவே 1971-இல் வெளிவந்த இந்த நாவலிலேயே பதிவுத் திருமணம் பற்றிப் பேசியிருப்பது எங்க ஊரை விட இருபது வருடங்களுக்கு முன்பே இதெல்லாம் சென்னையில் ஆரம்பித்து விட்டது என்பதைத் தெரியப் படுத்துகிறது. பேட்டி எடுக்க வந்ததாகச் சொல்லி வீட்டுக்குள் நுழைந்து எடுத்த அந்த வரலாற்றுச் சிறப்பு மிக்க பேட்டி கடைசிவரை வெளிவராமலே போய்விடும். கதையில் எதற்கென்றே தெரியாமல் பிடித்து விட்ட அம்சங்களில் ஒன்று இது.
ஆர் கே நாராயணின் வழிகாட்டிக்கும் (THE GUIDE) இந்த நாவலுக்கும் நிறைய ஒற்றுமைகள் பார்க்க முடிந்தது. இரண்டிலுமே காதல் மரபானதாயில்லை என்பது தவிர்த்து, வேறு பல ஒற்றுமைகளும் இருக்கின்றன. இரண்டிலுமே நாயகிகள் தேவதாசிக் குடும்பத்தில் பிறந்தவர்கள். அந்த நேரத்து இளைஞர்கள் - அதுவும் எழுதும் இளைஞர்கள் - அவர்களைப் பற்றி 'கிக்'கான ஓர் உணர்வு கொண்டிருந்திருக்கிறார்கள் என்பதையே இது காட்டுகிறது. அது மட்டுமில்லை, அதில் நாயகி நாட்டியக்காரி; இதில் நாடகக்காரி. கதைகளில் மட்டுமில்லை, எழுத்தாளர் என்ற முறையிலும் இருவருக்கும் ஓர் ஒற்றுமை - இருவருமே காதலை மிக நாகரிகமான முறையில் சொல்கிறார்கள். விரசமான காட்சிகளை விளக்காமலேயே அவரவர் சக்திக்கேற்பக் கற்பனை செய்து கொள்ள விட்டு விடுகிறார்கள். இப்படி எழுதும் போது இவர்கள் மீது, "அப்படியான சிந்தனைக்கு என்னை நினைவு படுத்தினார்கள்!" என்பதைத் தவிர வேறெதுவும் குற்றம் சாற்ற முடியாது. இப்போதெல்லாம் அந்த மாதிரிக் காட்சிகளை - ஐந்து நிமிடம் நடந்ததை அரை மணி நேரம் படிக்கிற மாதிரிக் காட்டும் எழுத்தாளர்களையே இளைஞ-இளைஞிகளுக்கு நிறையப் பிடிக்கிறது.
"எனக்கு இதிலே எல்லாம் நம்பிக்கை இல்லை. ஆனாலும் நீ இதை இடவரும்போது வேணாம்னு தடுக்கற பிடிவாதமும் இல்லை" என்று விபூதியை ஏற்றுக் கொள்ளும் ரங்காவைப் போல்தான் நானும் இருக்கிறேன். நம்மில் நிறையப் பேர் இருக்கிறோம். கடவுள் இல்லை என்று உறுதியாகச் சொல்கிற அளவு விபரமும் இல்லை. கடவுளை இப்படித்தான் வணங்க வேண்டும் என்று ஒவ்வொருவரும் வைத்திருக்கும் முறைகளில் எது சரியென்று தேர்ந்தெடுக்கும் அளவுக்கும் விபரமில்லை. இந்த விசயத்தில் மிகவும் ஆர்வமுள்ள ஆளாக இருந்தால் "நாத்திகம் - இன்னொரு மதம்!" என்கிற என் பழைய இடுகையை வாசித்துப் பாருங்கள்.
"யாருக்குமே இவன் ஒரு நாடகக்காரியைக் கல்யாணம் செய்து கொள்வதில் சம்மதமில்லை" என்ற வரி வைரமுத்துவின் "நடிகை மாப்பிள்ளை தேடுகிறாள்" கவிதையை நினைவு படுத்தியது. நடிகைகளின் வாழ்க்கையே ஒரு விசித்திரம். கனவுகளில் எல்லோருமே இவர்களோடு வாழ்ந்து பார்ப்பார்கள். ஆனால், அதே ஆளைக் கட்டிக் கொள்ள வேண்டுமென்றால் ஒரு பய வர மாட்டான். இதையும் வேறொரு நாடக நடிகையின் அனுபவம் பற்றி ரங்காவின் சித்தப்பு சொல்வதாக விளக்கியிருப்பார் ஆசிரியர்.
"அவனை விருந்துக்கு அழைத்தாளே, அன்றே இவன் கேட்கவும் தான் தரவும் இனிமேல் எதுவும் இல்லை என்கிற விதமாக எந்தப் பேரமும் பேசாமல் தன்னை முழுமையாக அவள் இவனிடம் சமர்ப்பித்துக் கொண்டு விட்டாள். அப்படித் தன்னை அளிப்பதன் மூலம் தனக்கு எந்த விதமான நஷ்டமும் ஏற்படும் என்று அவள் நினைக்கவில்லை. அதற்கு மறுநாளிலிருந்து அவன் அவளிடம் வராமல் போய்விட்டாலும்கூட, அவன் வந்ததை லாபமாகக் கருதி நிறைவு கொள்ளும் அளவுக்கு அவள் மனம் பக்குவம் பெற்றிருந்தது. அதனால் அவன் வியந்து பிரமிக்கிறமாதிரி அவனிடம் அவள் தன்னைச் சமர்ப்பித்துக்கொள்ள முடிந்தது." என்கிற வரிகள் எந்த அளவுக்கு நம்ப முடியாதவையாக இருந்ததோ அந்த அளவுக்கு அது சாத்தியம் என்பதையும் புரிந்து கொள்ள முடிகிறது. கல்லூரிக் காலங்களிலேயே காதற் தோல்வி அடைந்த நண்பன் ஒருவனிடம் இது போன்ற மனவோட்டத்தைப் பார்த்திருக்கிறேன். "போய் விட்டாளே என்று வருத்தப் படுவதை விட இவ்வளவு நாள் உடன் இருந்தாளே என்று உடன் இருந்த நாட்களைப் பற்றி நினைத்து நினைத்து மகிழ்ச்சியடைந்து கொள்வதுதான் சரி!" என்பான். ஒரே வேறுபாடு அவன் ஆண்மகன். இவள் பெண். ஆணுக்கு முடிவது பெண்ணுக்கும் முடியத்தானே வேணும். எத்தனையோ பெண்பிள்ளைகளை ஆண் போல வளர்க்கிறார்கள் இப்போது. அவளும் அப்படி ஆண் போல வளர்க்கப் பட்டிருந்தால் அது சாத்தியம்தானே.
தன் பிள்ளைத் தன்னை யாரோவென்று எண்ணி விலகி ஓடுவதும் அவளை வளர்க்கும் தன் மச்சினிச்சி தன் மீதே ஆசை கொண்டிருப்பதையும் கதையில் கூடுதற் குழப்பமாகச் சேர்த்திருக்கிறார் ஆசிரியர். இறந்த மனைவியை விட்டு வாழ்வதை விட இருக்கும் மகளை விட்டுப் பிரிந்து வாழ்வது சிரமமான ஒன்றாகப் படுகிறது. வேறு வழியே இல்லை என்று ஆகிற போது அது போல மச்சினிச்சி என்ற வசதியிருப்பவர்கள் அதைத்தான் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். அந்த ஒரே காரணத்துக்காகத் தன் மனைவியின் தங்கையை மனைவியாக ஏற்றுக் கொள்வது கடினம் என்பதும் புரிகிறது.
தொடரும்...

கருத்துகள்
கருத்துரையிடுக