ஜெயகாந்தனின் 'ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள்' - 3/4

தொடர்ச்சி...

கல்யாணியைத் திருமணம் செய்து கொள்ளப் போகும் முன் எல்லா சராசரி ஆணையும் போலவே தன் மனைவி தன்னை விட அதிகம் சம்பாதிப்பவளாக இருப்பது தனக்குப் பின்னர் பிரச்சனையாக மாறி விடுமா என்று யோசிக்கிறான் ரங்கா. ஒருவர் மீதொருவர் அவ்வளவு காதலும் கவர்ச்சியும் கொண்டு அவர்களுக்கும் கூட திருமணத்தை நெருங்கும் பொழுதில் துளிர் விட ஆரம்பிக்கும் வேறுபாடுகள் நன்றாக விவரிக்கப் பட்டிருக்கின்றன.

பொதுவாகப் பெண்கள் மட்டுமே திரும்பத் திரும்ப இந்தக் கேள்விகளைக் கேட்டுக் கொள்வதைப் பார்க்கவும் கேள்விப் படவும் செய்திருக்கிறோம். இந்தக் கதையில் வித்தியாசமாக ஆண்மகன் அதைச் செய்கிறான். "நீ என்னை உண்மையிலேயே விரும்புகிறாயா? இன்னமும் காதலிக்கிறாயா?" என்கிற மாதிரித் திரும்பத் திரும்ப அவளிடம் கேட்க வேண்டி அவனுக்குள்ளேயே கேட்டுக் கொள்கிறான். அந்தக் கேள்வி ஒன்றே அவர்களுக்குள் பெரும் இடைவெளியை உண்டு பண்ணுகிறது. "உனக்காக நான் எல்லாத்தையும் விட்டு விட்டு வந்தேன்; நீ என்ன எனக்காக விடுகிறாய்?" என்று மீண்டும் மீண்டும் கேட்டுக் கடுப்படிக்கிறான். அழகும் அறிவும் முதிர்ச்சியும் பெற்ற ஒரு நடிகையைக் கலியாணம் செய்து கொண்டதால் ஒருவேளை அவனுக்கு அப்படித் தோன்றியிருக்கலாம். ஆண்களுக்கும் அது போன்ற சிந்தனைகள் வரத்தான் செய்யும் என்பதையும் இந்தக் கதை நினைவு படுத்துகிறது. அது மட்டுமில்லை, இதை ஒரு கதையில் படிக்கும் போது வேடிக்கையாகப் பார்க்கிற-பேசுகிற நாம், அவனுடைய இடத்தில் இருந்திருந்தால் அப்படியேவோ அதை விடக் கொடூரமாகவோ கூட இருந்திருக்கலாம் என்பதையும் மறுப்பதற்கில்லை.

கல்யாணியின் சித்தி மகள் பட்டு மற்றும் அவளுடைய நாடகக் குழுவில் தாளம் போடும் தாமுவின் காதற் கதை ஒன்று ஒரு கதைக்குள் இன்னொரு கதையாக ஓடுகிறது. அந்தக் கதையும் ஆண்-பெண் உறவின் மற்றும் கவர்ச்சியின் சிக்கல்களையும் நிலைப்பற்ற தன்மையையும் சொல்லிச் செல்கிறது. மணந்தால் தாமு மாமு இல்லையேல் மரண மாமு என்று துடித்து அவனைக் கட்டிக் கொள்ளும் அவளும் மணவாழ்க்கை என்று வரும்போது பிரச்சனைகளில் சிக்கித் தவிப்பது நமக்குப் பலமுறை சொல்லப் பட்டு விட்ட கதைதான். ஆனால் ஜெயகாந்தனின் காலத்தில் அதையும் எதிர்த்துக் கல்லூரி மாணவர்கள் மறியல் போராட்டம் நடத்தியிருக்கக் கூடும். காதற் திருமணங்களிலும் இது போன்ற பிரச்சனைகள் வரும் அல்லது அதில்தான் அதிகம் வரும் என்கிற தெளிவே நம் தலைமுறையில்தான் நடைமுறைக்கு வந்தது என்று நினைக்கிறேன்.

விரசமான காட்சிகளை கோட்டைத் தாண்டாமல் விளக்கியிருப்பது மரியாதைக்குரியது. கதவு மூடியது, கன்னத்தில் மை போன்ற சில சொற்களில் மிச்சத்தை வாசகனின் கற்பனைக்கு விட்டு விடுவது நாகரிகமாக இருக்கிறது. இளைய தலைமுறை எழுத்தாளர்களும் வாசகர்களும் (இருவருக்கும் சமமான பொறுப்பு இருக்கிறதே!) இதையே சரியான எழுத்துமுறையாகக் கொண்டால் நல்லது. "தெருவில் ஸ்கூட்டர் சத்தம் கேட்டது", "இன்னும் கொஞ்சம் சாதம் வைக்கும் முன்பே ரங்கா கை கழுவி விட்டான்" போன்ற பாரதிராஜா பாணிக் குறிப்பு விவரிப்புகளும் அன்றைக்குப் புதியதாக இருந்திருக்க வேண்டும்.

"பெர்னாட்ஷா சொன்னது போல இது அங்கீகரிக்கப்பட்ட விபசாரமல்லவா?" என்று திருமணம் பற்றி ரங்கா யோசிக்கிறான். நிச்சயிக்கப் படும் திருமணங்கள் இருக்கும் வரையும் இந்தக் கேள்வியும் நம் பண்பாட்டில் இருந்து கொண்டே இருக்கும் போல்தான் தெரிகிறது. மௌனராகம் படத்தில் கூட இது போலத்தான் ரேவதி ஏதோ கேட்பார். இது மாதிரியான ஒரு கேள்வி இளமைக்காலத்தில் நிறையவே வந்தது. இப்போது பழகிப் போய் விட்டது. இப்படி அங்கீகரிக்கப் பட்டிராவிட்டால் எம்மைப் போல் நிறையப் பேருக்குத் திருமணமே நடந்திருக்காதே என்று எண்ணிப் பார்க்கையில் கழுதை இப்படியே இருந்து விட்டுப் போகட்டும் இந்தக் கலாச்சாரம் என்றுதான் தோன்றுகிறது.

கல்யாணியோடு கொஞ்ச காலம் வாழ்ந்து விட்டு தன் தெருவுக்குத் திரும்பிப் போகையில், அங்கே இருக்கிறவர்கள் புருஷனை 'நீ, வா போ' என்று அழைக்கும் ஒருமை விளி அப்போது ரங்காவுக்கு மிகவும் வித்தியாசமாகத் தெரியும். முன்பெல்லாம் அது மிகவும் சாதாரணம். ஏன், தன் முதல் மனைவி தேவகிகூடத் தன்னை அப்படித்தான் அழைப்பாள் என்கிற நினைப்பு வரும். இதுதான் வேறுபட்ட பண்பாடுகளைப் பழகுவதில் உள்ள நல்லது-கெட்டது இரண்டுமே. அப்படிப் புதிதாக ஒன்றைப் பார்த்து விட்டு வரும் போது, நமக்கென்று இருந்த பண்பாடு கேள்விக்குள்ளாகும். இதைத்தான் மேற்கு நாடுகளுக்குச் சென்று திரும்பும் நிறையப் பேர் நம்ம ஊரில் வந்து செய்கிறார்கள்; பெருநகரங்களுக்குச் சென்று வரும் நம் கிராமத்தவர்கள் ஊரில் வந்து செய்கிறார்கள். அது எல்லா நேரத்திலும் தப்பென்றும் சொல்ல முடியாது; சரியென்றும் சொல்ல முடியாது. அவர்கள் எடுத்துக் கொண்டு வருவதில் நல்லதும் இருக்கிறது; கெட்டதும் இருக்கிறது; பயனும் கேடும் அற்ற அவர்களின் பம்மாத்தும் இருக்கிறது.

ரங்காவின் சித்தப்பு அவனுக்கு ஒரு பழைய நாடக நடிகையின் கதையைச் சொல்வார். ஊர் ஊராகப் போய் நாடகங்களில் நடிக்கும் அந்த நடிகையை மடக்க சுற்று வட்டாரத்தில் இருக்கும் அத்தனை பணக்காரர்களும் வந்து கழுகாக வட்டமடிப்பார்கள். அப்படிச் சுற்றிச் சூழ்ந்த ஜமீன்தார்களையும் சேட்டுகளையும் 'இத்தினி பேரு இப்படியெல்லாம் வரீங்களே-எவனாவது என்னைக் கல்யாணம் கட்டிக்கினு சம்சாரம் நடத்திறீங்களாடா?' என்று அவள் ஒரு கேள்வி கேட்பாளாம். அத்தனை பெரும் கடுப்பாகி அடிக்க வருவானுகளாம் - ஓடிப் போவானுகளாம். இந்தக் கேள்வி இன்று வரை நடிகைகளுக்குப் பொருந்துவதாகத்தான் இருக்கிறது. ஏதோ அப்பா-அம்மா கட்டுப்பாட்டில் இல்லாத சில அமெரிக்கத் தொழிலதிபர்கள்தாம் அவர்களைக் கட்டிக் கொண்டு தாம்பாளத் தட்டில் வைத்துத் தூக்கிப் போகிறார்கள்; பின்னர் சில மாதங்களில் திரும்பி வந்து விட்டு விட்டும் போய் விடுகிறார்கள் அல்லது டிக்கெட் போட்டு அனுப்பி வைத்து விடுகிறார்கள்.

கல்யாணி போன்ற அழகியிடம் மயங்கிப் போய்க் கொஞ்ச காலம் வாழ்ந்து விட்டு மீண்டும் தெருவுக்குள் நுழைகிற போது புதிதாகப் புத்தி வந்தவன் போல் யோசிக்கிறான்: "நாம் பார்க்கவும் கூசுகிற மாதிரி இருக்கிற பெண்களையும் குழந்தைகளையும் இங்கே வாழ்கிற ஆண்மகன் உயிருக்குயிராய் நேசிக்கின்றான். இவர்களிடையே இருக்கின்ற உறவுகள் மரணத்தால் மட்டுமே பிரிக்கப் படுகின்றன. எப்படி?" என்று. ஆக, அந்த நேசிப்பு எப்படி சாத்தியமாகிறது? அதுதான் அந்தப் பண்பாடு என்கிற மண்ணாங்கட்டியின் பவர். அந்தச் சொல்கூடக் கொஞ்சம் பெரிதாகப் பயமுறுத்துகிற மாதிரி இருக்கிறது. எனவே இப்படிச் சொல்லலாம் - எல்லோரும் காலங்காலமாகச் சொல்லிக் கொடுக்கிற பயக்க வயக்கங்களுக்கு எப்போதுமே அப்படியான ஒரு கட்டிப் போடும் தன்மை இருக்கிறது. அதுதானேஉலகப் பெரும் பந்தின் இந்த நிலப் பகுதியில் வாழும் கோடானு கோடி மக்கள் நம்மை இப்படிக் கட்டிப் போட்டு வைக்கிறது. அதுவும் இப்போது கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்து வருவது நல்லதுக்கா-கெட்டதுக்கா என்பது, ரங்கா-கல்யாணிகள் மட்டுமின்றி பெரும்பாலானவர்கள் அப்படி வாழ ஆரம்பித்த பின்புதான் முழுமையாகப் புரிபடும்.

எல்லாத்தையும் இழந்து விட்டு வருகிறவன், அதற்காகவே அவளும் அவளுடைய எல்லாத்தையும் இழக்க வேண்டும் என்று நினைக்கிறான். தன் வரவு எந்த வகையிலும் அவளின் சுயத்தில் மாற்றத்தை ஏற்படுத்தவில்லை என்கிற உணர்வு அவனை மிகவும் வலிக்க வைக்கிறது. அப்படியே கொஞ்சம் கொஞ்சமாக வீட்டுக்கு வருவதைக் குறைத்துக் கொள்ள ஆரம்பித்து, பின்னர் ஒரு பொழுதில் நிறுத்தியே விடுகிறான். இதில் இடையில் சொந்த மண்ணுக்குப் போய் வரும் ஒரு நாளில் ரெம்பவும் அய்யாவுக்கு மனமாற்றம் நிகழ்ந்து விடும்.

வீட்டுக்கு வராமல் இருக்கும் கணவனை ஒருநாள் கூடக் கேள்வி கேட்காத மனைவி - இழுக்கிற இழுவைக்கெல்லாம் உடன் செல்லும் பாங்கு - 'உன் சுகமே என் சுகம்; உனக்குப் பிடிக்காத எதையும் வற்புறுத்த மாட்டேன்' என்கிற முதிர்ச்சி - எதிலும் 'பற்றில்லாத அன்பு' கொண்டிருக்கும் பாங்கு என்று கல்யாணியின் பண்புகள் எல்லாமே அன்றைய நாளில் தமிழ் கூறும் நல்லுலகுக்குப் புதுமையான கதாநாயகி ஒருத்தியை அறிமுகப் படுத்தி நம்மவர்களின் தூக்கத்தைக் கெடுத்திருக்க வேண்டும். எத்தனை பேர் புரோக்கரிடம் கல்யாணி மாதிரிப் பெண் வேண்டும் என்று சொன்னார்களோ! இந்த நாவலின் மிகப் பெரும் தத்துவம் என்னவென்றால், இதற்கெல்லாம் காரணம் என்று ரங்கா உணர்வதும் அவன் மூலம் ஆசிரியர் உணர்த்தியிருப்பதுமான இதுதான் - 'அவள் வாழ்க்கையை ஒரு நாடகம் போல் ரசித்துப் பார்க்கிறாள். அதனாலே எதுவுமே அவளைக் கலங்கடிப்பதில்லை!'. ஜெயகாந்தன் அப்படியான ஒரு வாழ்க்கை வாழ்பவராகத்தான் இருக்க வேண்டும். அப்படியில்லாமல் அப்படியான வாழ்க்கையின் ஆகப் பெரும் சுகத்தை இவ்வளவு சுகமாக எழுதியிருக்க முடியாது. நம்மில் பலர் அது போன்றதொரு வாழ்க்கையை வாழ்கிறோம். ஆனால் அதில் ஒரு சிறிய வேறுபாடு இருக்கிறது. நாம் பிறர் வாழ்க்கையை மட்டும் நாடகமாகப் பார்ப்போம்; கல்யாணியோ அவளுடைய வாழ்க்கையையும் அப்படிப் பார்ப்பவளாக இருப்பாள். அதைத்தானே இப்போது பல ஆன்மீகவாதிகள் நமக்குச் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.

கல்யாணி, "அம்பிகாபதி-அமராவதி காதலின் பெருமையே அவர்களுடைய காதல் கைகூடாமல் போனதுதான்" என்று தத்துவம் சொல்லும் போதும், உணர்ச்சிக் காதல்களைப் பெரிதாக மதியாமையும் அவளுடைய மனமுதிர்ச்சி மீது நமக்கு அபரிமிதமான ஒரு மரியாதையை வரவழைக்கிறது. இதே நாம் ரங்கா இடத்தில் இருந்திருந்தால் எப்படி நடந்து கொண்டிருந்திருப்போம் என்பது வேறு கதை. :)

ரங்காவும் முழுக்க முழுக்கக் கெட்டவனில்லை. அவனும் முற்போக்காக நிறைய யோசிக்கிறான். ஆனால் பாவம் பயலுக்கு முடியாது. 'மனைவிக்கு என்று ஒன்றும் தனி இலக்கணம் இல்லை.அது கணவனைப் பொறுத்தது' என்றெல்லாம் யோசிப்பான். அதுவும் சுய பரிதாபத்தில்தான் முடியும் பாவம்.

மணவாழ்க்கை என்பது தினமும் அடித்துக் கட்டி உருளும் கணவன்-மனைவிக்கு மட்டுமே தோல்வியடையும் என்றில்லை. எதுவுமே பேசிக் கொள்ளாமலே கூட விரிசல் பெரிசாகலாம் என்று காட்டும் விதமாகத்தான் ரங்கா-கல்யாணி பிரிவு காட்டப்பட்டிருக்கும். குரல் கனத்த பேச்சோ, சச்சரவோ, ஊடலோ, வாதப் பிரதிவாதங்களோ எதுவும் இல்லாத ஒருவகை மனஸ்தாபம் உறுதியாகிக் கெட்டிதட்டிப் போய் விட்டது என்று சொல்லியிருக்கிறாரே அப்படி நடக்கும் அந்தக் கொடுமை. இது நாம் பலரும் பல உறவுகளில் அனுபவித்திருக்கிற ஒன்றுதான். சில உறவினர்களிடமும் நண்பர்களிடமும் சண்டையிடுவதற்கு ஒன்றும் இராது; ஆனால் கொஞ்சிக் குலாவவும் ஒன்றும் இராமல் மெது மெதுவாக விலகிப் போய் விடுவோம். ஐந்தறிவு விலங்குகளைப் போலே அடித்துக் கொண்டு சாவதற்கு இது எவ்வளவோ மேல்தானே. இதெல்லாம்தான் மனிதகுலத்தை நாகரிகத்தின் அடுத்த கட்டத்துக்கு அழைத்துச் செல்லும் நடத்தைகள் அல்லவா. இதைத்தான் ஜெயகாந்தன் தமிழ்ச் சமூகத்தில் நடத்திக் காட்டியிருக்கிறார். அதனால்தான் அவரை இவ்வளவு கொண்டாடுகிறார்கள்.

திடீரென்று ஒருநாள், மிக சுமூகமாக, "நாம் விவாகரத்து பெற்றுக் கொள்வோம்!" என்று முடிவு செய்வார்கள். இருவரும் ஒன்றாகச் சேர்ந்தே கதைகள் பேசிக் கொண்டு வக்கீலைப் பார்க்கப் போவார்கள். எழுபதுகளில் இதெல்லாம் எவ்வளவு பெரிய புரட்சிக் கருத்து?! எழுத்தாளர் ஞானி கூட இது போல ஏதோ அவருடைய வாழ்க்கை பற்றிச் சொல்லியிருக்கிறார். "கணவனும் மனைவியுமாக வாழ்ந்த எங்களுக்குள் இருந்த பிரச்சனைகள் எல்லாம் நாங்கள் நண்பர்களாக வாழ்ந்து விடலாம் என்று தீர்மானித்த நாள் முதல் இல்லாமல் போய் விட்டது!" என்கிற மாதிரிச் சொல்லியிருந்தார். இப்போதும் அவருடைய முன்னாள் மனைவியும் அவரும் அப்படித்தான் திருமண உறவை முறித்துக் கொண்டு நண்பர்களாக வாழ்கிறார்களாம். பிற்காலத்தில் அது போன்ற பல உறவுகளுக்கு இந்த நாவல் நல்வழி காட்டியிருக்கலாம் என்று நினைக்கிறேன். இப்போது நிறையப் பேர் அது போல ஆரம்பித்து விட்டார்கள் - "நாங்கள் நண்பர்களாக வாழ முடிவு செய்து கொண்டோம்!" என்று. நல்ல முன்னேற்றம்தானே!

தொடரும்...

கருத்துகள்

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

சாம, தான, பேத, தண்டம்

உயர் தனிச் செம்மொழி?!

யுவால் நோவா ஹராரி: “21-ஆம் நூற்றாண்டுக்கான 21 பாடங்கள்” | கூகுள் உரையாடல்கள்