ஜெயகாந்தன் பற்றிய ஆவணப் படம்

ஜெயகாந்தனின் 'ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள்' படித்து விட்டு அது பற்றி ஓர் இடுகை போட்டேன். அதற்குக் கருத்துரையாக தோகா டாக்கீஸ் என்கிற நண்பர் இந்தக் காணொளிகளின் இணைப்பைக் கொடுத்துப் பார்க்கச் சொன்னார். அனைத்துப் பாகங்களையும் இரவோடு இரவாக ஒரே மூச்சாக உட்கார்ந்து பார்த்து முடித்தேன். தமிழகம் கொண்டாட வேண்டிய - ஓரளவு கொண்டாடி விட்ட - ஒரு மாபெரும் படைப்பாளியை, அவருடைய அன்றாடத்தில் எப்படி இருக்கிறார் என்று மிக அருகாமையில் காட்டியிருப்பதன் மூலம் இந்த ஆவணப் படம் மிகப் பெரும் சாதனையைச் செய்திருக்கிறது. நன்றி, ரவி சுப்பிரமணியன் அவர்களே! வரலாற்றில் ஒரு வரியில் இடம் பெற்று விட்டீர்கள்!!

மொத்தத்தில் ஆவணப் படம் அருமையோ அருமை. ஆனால், பாகங்களாகப் போடப்படும் காணொளிகளுக்கே உரிய பிரச்சனையை இந்தத் தொடரும் சந்தித்திருக்கிறது. முதல் பாகத்தில் ஆரம்பித்து கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்திருக்கிறது பார்த்தவர்களின் எண்ணிக்கை. ஒரே படமாகப் போட்டிருந்தாலும் பாதியில் போபவர்கள் போகத்தான் செய்திருப்பார்கள். அது தெரிந்திருக்காது நமக்கு. அவ்வளவுதானே! :)

1 முதல் 7 வரை 9 பாகங்கள் போட்டிருக்கிறார்கள். அதெப்படி என்கிறீர்களா? 2A மற்றும் 5A என்று இரண்டு குறுக்குச்சால்கள் இருக்கின்றன.

நிறையச் சின்னச் சின்னப் பெரிய விசயங்களைச் சொல்லியிருக்கிறார். தமிழ் கூறும் நல்லுலகில் எழுதத் துடிக்கும் - வாசிப்புக்கு வாழ்க்கைப் பட்டிருக்கும் - எல்லோரும் கண்டு தீர வேண்டியது.

ஒரு பழைய பாட்டு; அப்புறம் பாரதியின் இருட்டு-வெளிச்சம் பற்றி ஜெயகாந்தன் பேசுவதோடு ஆரம்பிக்கிறது. எழுத்தாளர்களுக்கே கவுரவம் பெற்றுத் தந்தவர் என்கிற அறிமுகம் கொடுக்கிறார் காணொளித் தொகுப்பாளர்.

ரஷ்யாவுக்கும் இந்தியாவுக்குமான உறவுக்குத் தமிழர்கள் எப்படி முக்கியக் காரணமாக இருந்தார்கள் என்பதும் பாரதிதான் ரஷ்யப் புரட்சி பற்றிப் பாடிய முதல் உலகக் கவிஞன் என்பதும் காந்திக்கு எப்படி தென்னாப்பிரிக்காவில் வாழ்ந்த தமிழர்கள் ஆரம்பமாக இருந்தார்கள் என்பதும் நல்ல தகவல்கள். இதுதான் காணொளியில் வரும் அவருடைய முதல் மேடைப் பேச்சு.

அவர் இருக்கும் இடமெல்லாம் ஒரு சபை கூடி விடும் என்பது சுவாரசியமான தகவல். காணொளி முழுக்கவும் அப்படியான காட்சிகள் நிறைந்திருக்கிறது. கிட்டத்தட்ட முக்கால்வாசி எழுத்தாளர்கள் அப்படித்தான் இருக்கிறார்கள். "நான் ஒருத்தன் இருந்தால் போதும்; சபை கூடி விடும். சில நேரம் இருவர்; சில நேரம் இருபது பேர்!" என்கிறார்.

இலக்கணம் படித்துத் தமிழில் எழுத முயலும் எல்லோருக்குமே செய்யுள் வடிவம்தான் முந்திக் கொண்டு வரும். அது உரைநடை எழுத ஆசைப் படுபவனுக்கு உதவாது. முந்திரிக் கொட்டை போல முந்திக் கொண்டு வரும் செய்யுளைத் தவிர்த்து உரைநடையில் எழுதுவது எவ்வளவு முக்கியம் என்பது பற்றிச் சொல்லியிருப்பது சூப்பர். அவருடைய பாடலாசிரியர் அனுபவம் அருமை.

ஒரு குழந்தையைப் போலச் சிரித்துச் சிரித்துப் பேசுவது மனத்தைக் கொள்ளை கொள்கிறது. அந்தக் குழந்தைத்தனம்தான் எழுத்துக்கு அடிப்படைத் தேவை போலும். இது போன்ற பல விசயங்களில் கோணங்கியை நினைவு படுத்துகிறார் (இருவரும் இருவேறு விதமான எழுத்தாளர்கள் எனினும்!).

கடவுள் நம்பிக்கை உண்டா என்றால், "எதையாவது நம்பித் தொலைப்போம்!" என்று சொல்லி முடித்து விட்டார். "ஓயாமல் மயிறு மயிறு என்கிறீர்களே!" என்றால், "மயிறு திருவள்ளுவர் கூடச் சொல்லியிருக்கார்!" என்று அது பற்றி நீண்ட விளக்கம் கொடுக்கிறார். "உங்கள் கெட்ட பழக்கங்களை உங்களோடு சேர்வோருக்கும் கற்றுக் கொடுத்துக் கெடுக்கிறீர்களாமே?!" என்பதற்கு, "இந்த சமூகம் என்னை எப்படிக் கெடுத்ததோ அப்படியே இந்த சமூகத்தையும் கெடுப்பதாக உத்தேசம்!" என்கிறார்.

"ஆறாம் வகுப்பில் படிப்பை நிறுத்திய நீங்கள் எங்கே இவ்வளவு ஆங்கிலம் கற்றீர்கள்?!" என்ற கேள்விக்கு, "எல்லாமே கம்யூனிஸ்ட் கட்சியில்தான்! இராமாயணம், மகாபாரதம்... எல்லாமே அங்கேதான்!" என்கிறார். கம்யூனிஸ்ட் கட்சியில் இருப்பவனெல்லாம் வெறும் பஞ்சம் பற்றி மட்டுமே தெரிந்த பரதேசிகள் என்று எண்ணிக் கொண்டிருப்பவர்கள் இதைக் குறித்து வைத்துக் கொள்ளுங்கள்.

கி.வீரமணி இவரோடு ஏதோ இளமைக் காலப் பழக்கம் கொண்டவராக இருந்திருக்கிறார் என்பது இப்போதுதான் தெரிகிறது. அவர் வந்து, "சின்ன வயதிலேயே பீடி குடித்தல் போன்ற அரும் பெரும் பழக்கங்களை எல்லாம் முயன்று பார்த்து விட்டவர் இவர்!" என்று நல்ல அறிமுகமும் கொடுக்கிறார்.

"நம்முடைய விருப்பமில்லாமல் நடப்பதற்கு விதி என்று பெயர். பிறக்கும் நாம் இறக்கக் கூடாது என்று நினைக்கிறோம். இறப்பதுதான் விதி!" என்கிறார் ஒரு மேடையில்.

"கலைஞர் ஒரு மேடையில் சொன்னார் - 'பெரியாரையும் அண்ணாவையும் பார்த்திரா விட்டால் நான் கம்யூனிஸ்ட் ஆகியிருப்பேன்' என்று! கூத்து என்ன தெரியுமா? அவர்கள் இருவரையும் பார்த்ததால்தான் நான் கம்யூனிஸ்ட் ஆனேன்! அவரவர் கோணத்தில்தானே அவரவர் பேசுவர்!" என்று ஒரு மேடையில் அவர் சொல்வது தமிழக அரசியல் வரலாற்றை ஊன்றிப் படிக்க வேண்டியதன் கட்டாயத்தைச் சொல்லிச் செல்கிறது. அதை அவர் சொல்லும் போது ஒரே கலகலப்பு மேடையில்.

பாரதியார் மற்றும் பாரதிதாசன் மீது அளவிலாக் காதலோடு பேசுகிறார். பார்ப்பன எதிர்ப்பு அரசியலை முதலில் ஆரம்பித்து வைத்ததே பாரதிதாசன்தான் என்கிறார். பெரியாரெல்லாம் அதற்குப் பின்புதானாம். பாரதியைப் பற்றி யாராவது தவறாகப் பேசினால் அடித்துப் போடுவாராம் பாரதிதாசன். அப்படியொரு ஐயர் மீது வெறி கலந்த அன்பு கொண்டிருந்த பாரதிதாசன் மற்ற ஐயர்களை வெறி கலந்து வெறுத்திருக்கிறார். கேட்டால், "அவன் ஒருத்தன்தான் உண்மையான ஐயர்!" என்பாராம்.

"கும்பல் எதுக்குத்தான் வராது. அதெல்லாம் ஒரு விசயமா?! ORGANIZED MEETING IS DIFFERENT FROM KUMBAL, இல்லையா?"என்கிறார் ஓரிடத்தில்... அப்பப்பா... எங்கயோ போயிட்டிங்க தலைவா நீங்க!!! :)

"எனக்கு திராவிட மாயை வராமல் காப்பாற்றியது ஜீவாதான். தமிழ் வந்தாலே அதுவும் கூட வந்துடுதே!" என்கிறார் ஜீவா பற்றிப் பேசும்போது. "அவர் மட்டும் கம்யூனிஸ்ட் கட்சிக்கு வராமல் இருந்திருந்தால், கம்யூனிஸ்ட்டுகள் எல்லாம் தமிழை ஒரு மாதிரிப் புதைத்து விட்டிருப்போம்!" என்று சிரிப்பலைகளைக் கிளப்புகிறார் ஒரு மேடையில். நல்ல பேச்சாளருக்குரிய ஒரு முக்கிய அம்சம் - நவரசங்களையும் வரவைக்க முடிய வேண்டும். அவர் பேச்சில் அது இருக்கிறது. எல்லா மேடைகளிலுமே தீப்பொறியும் பறக்கிறது. சிரிப்பொலியும் கேட்கிறது.

அதே மேடையில், "திருக்குறள் படிக்காமல் மார்க்சிசம் படிக்கிற தமிழன் உருப்பட மாட்டான் என்று ஜீவா தெளிவாகச் சொன்னார்!" என்கிறார். "நீ அடங்காப் பிடாரிடா" என்று ஜீவா தன்னைச் சொல்லியதுதான் தனக்குக் கிடைத்த அற்புதமான சான்றிதழ் என்று பூரிக்கிறார். "அவருக்கே அடங்காதவன் எவனுக்கு அடங்குவான்!?" என்கிறார். கம்பராமாயணம் படித்து விட்டு அப்புறம் மார்க்சிசம் படித்தவர் ஜீவா என்கிறார். "தமிழுக்கு அமுதென்று பெயர் என்று சொன்ன பாரதிதாசன், தமிழுக்கு ஜீவா என்றும் ஒரு பெயருண்டு என்று சொல்லியும் கேட்டிருக்கிறேன்!" என்கிறார்.

இந்திரா காந்தியோடு தன் தொடர்பு பற்றிச் சொல்கிறார். அவரிடம் சஞ்சய் காந்தி பற்றிப் பேச விரும்புவதாகச் சொன்ன பின்பு கழற்றி விட்டு விட்டார்கள் என்றும் சொல்லிச் சிரிக்கிறார். "எம்.ஜி.ஆர். என்னைச் சந்திக்க விரும்பினார்; ஆனால் நான் அதை விரும்பவில்லை. நல்லதோ-கெட்டதோ, சில விசயங்களை நான் விரும்புவதில்லை. பழகியவர்கள் அவர் நல்லவர் என்கிறார்கள். நல்லவராகவே இருக்கட்டும் என்று விட்டு விட்டேன்!" என்கிறார். "அப்படின்னா உனக்கு யார்தான்யா பிடிக்கும்?!" என்கிற போது, "காமராஜரைப் பிடிக்கும்! சங்கராச்சாரியாரைப் பிடிக்கும்!! கலாமைப் பிடிக்கும்!!!"என்று அடுக்குகிறார். காமராஜரின் எளிமை-நேர்மை பற்றி அழகாகச் சொல்கிறார். அவரைப் பிடிக்காதவரும் இந்த மண்ணில் உண்டோ என்ன? கொஞ்ச நஞ்சம் அவரைப் பிடிக்காத மாதிரிப் பேசுகிறவர்கள் கூட அவர் பற்றி எதுவும் தெரியாமல் வேறு சில கணக்குகளின் படி வெறுப்பவர்களே. அது என்ன கணக்குகள் என்று தெரிய வேண்டுமானால் எங்கள் பகுதிக்காரர்களைக் கேட்டுப் பாருங்கள்.

மனிதர் இராமனைப் பற்றிக் கேட்டதும் கடும் கோபம் அடைந்து விடுகிறார். கெட்ட வார்த்தைகள் கூடச் சொல்லித் திட்டுவது போலத் தெரிகிறது. "ஏன்யா இப்டி?" என்றதும் அதற்கு ஒரு விளக்கம் கொடுக்கிறார். "கவிஞர்கள்-கலைஞர்கள்-வாத்தியார்கள் எல்லாம் இப்படித்தான். இதைக் கோபம் என்று எடுத்துக் கொள்ளக் கூடாது. அதற்குரிய உணர்ச்சியோடு ஒன்றைப் பேசுவது!"என்று கலகலவெனச் சிரிக்கிறார். இந்த ஒரு காட்சியில்தான் எங்கே சோமபானம் வேலை செய்கிறதோ என்ற சந்தேகம் வருகிறது. அதையும் சில காட்சிகளில் காட்டத்தான் செய்கிறார்கள். இப்போது புரிகிறது, சீமான் யாரைப் பார்த்துக் கெட்டுப் போனார் என்று (பேட்டி எடுப்பவர்களிடம் கோபப் படுவதைச் சொல்கிறேன்!). :)

அடுத்து, "இராமன் வாலியைக் கொன்ற விதத்தைக் கூடப் புரிந்து கொள்கிறேன். ஆனால், சூர்ப்பநகையை மார்பை அறுத்தது நியாயமா?" என்று கொதிக்கிறார்.அடுத்த நிமிடமே அதை மறந்து வேறெதற்கோ கெக்கேக் கெக்கேவென்று சிரிக்கிறார்.

மேசையில் அவருடைய மொபைல் போனும் தேமேவென்று கிடக்கிறது. இருப்பதிலேயே விலை குறைவான நோக்கியா மாடல். அப்பாடா, "என்னப்பா இன்னமும் இந்த போனை வச்சிக்கிட்டு..." என்று இழுப்பவர்களிடம் எடுத்துக் காட்டிப் பேச இன்னோர் ஆள் சிக்கி விட்டார்.

"ஆத்மா என்பது கடவுள் சம்பந்தப் பட்டதல்ல. அது மனிதன் சம்பந்தப் பட்டது. கடவுள் வேறு மனிதன் வேறு என்பது லௌகீகம். நானே கடவுள் என்பதே ஆன்மிகம்!" என்கிறார்.  அதைத்தான் நேற்று வேறொரு காணொளியில் ஸ்ரீ ஸ்ரீ இரவிசங்கரும் சொல்லிக் கொண்டிருந்தார். அதைத்தான் சாமியை நம்பாத கமலும் 'அன்பே சிவத்தில்' சொன்னார்.

"உலகமயமாக்கலை ஆதரித்துப் பேசுகிறார். ஓர் உலகம் என்பதற்கு நெருங்கி வருகிறது உலகமயமாக்கல். முதலாளித்துவத்தால் கொண்டு வரப் படுவதால் அதை எதிர்க்கக் கூடாது!" என்கிறார். "முன்னாள் கம்யூனிஸ்ட் உறுப்பினரான நீங்களா?" என்றால், "17-ஆம், 18-ஆம் நூற்றாண்டின் கம்யூனிசத்தை வைத்துக் கொண்டு பேசாதே!" என்கிறார். "கருத்தை மாற்றி மாற்றிச் சொல்கிறீர்கள்!" என்று கண்ணதாசன் மீது வைத்த பழைய குற்றச்சாட்டை இவர் மீதும் வைக்கும் போது, கண்ணதாசன் மாதிரியே, "கருத்துன்னா மாறணும்" என்கிற மாதிரி ஏதோ சொல்கிறார். "எல்லா எழுத்தாளர்களையும் விட நீங்கள் EGO-CENTRIC ஆக இருக்கிறீர்கள்!" என்றால், "எல்லோருக்குமே இருக்கணும்; ஆனா இல்லையே, என்ன செய்ய?!" என்கிறார்.

அவருடைய நாடக நடிப்பனுபவம் பற்றி மிக வேடிக்கையாக விளக்கியுமிருக்கிறார். அவர் உன்னைப் போல் ஒருவன் என்றொரு திரைப்படத்தை எடுத்து "இது நூறு நாட்கள் ஓடுவதற்காக எடுக்கப் பட்ட படமல்ல; நூறு ஆண்டுகள் பேசப்படுவதற்காக எடுக்கப்பட்ட படம் என்றாராம். அது தேசிய விருது பெற்றதாம். அதன் பின் ஏன் சினிமாவில் அதிகம் ஆர்வம் காட்டவில்லை என்று வருத்தமாக இருக்கிறது. அந்தப் படத்தை இன்னும் பார்க்க வில்லையே என்றும் கூட வருத்தமாக இருக்கிறது. அவருடைய 'ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள்' மற்றும் 'சில நேரங்களில் சில மனிதர்கள்' நாவல்களும் கூடப் படமாக்கப் பட்டது பேசப் பட்டிருக்கிறது. அவருடைய கதாபாத்திரங்களுக்கு இலட்சுமியை விடச் சிறந்த நடிகையை உலகத்தில் எங்குமே பிடித்திருக்க முடியாது என்றுதான் நினைக்கிறேன்.

பெண்ணியம் பற்றியும் ஓர் எளிதில் புரிபடாத மொழியில் பேசுகிறார். அவ்வையார் பற்றி அருமையாகச் சொல்லியிருக்கிறார்.

"இந்தியா விடுதலை அடைந்து விட்டதா?" என்று கேட்கும் போது, "ஒரு விடுதலை மொத்த விடுதலை ஆகாது. 1947-இல் நிகழ்ந்தது GATEWAY OF FREEDOM!" என்று சூப்பராகச் சொல்கிறார். "சனநாயகத்தில் சரி-தப்பு பார்க்க முடியாது. சனநாயகம் மட்டுமே பார்க்க முடியும்!" என்று எளிமையான பெரும் தத்துவத்தைச் சொல்கிறார்.

"கர்நாடகத்தில் தமிழ் கற்றுக் கொள்ளவே முடியாதாம்!" என்றால், "அவன் பிசிநாறியாக இருந்தால் நீ தாராளமாக இருந்து அவனுக்குக் கற்றுக் கொடு!" என்கிற கருத்து நிச்சயமாக நிறையப் பேருக்குப் புரியாது. கர்நாடகத்தில் இருந்ததால் எனக்கு ஓரளவு புரிகிறது. கன்னட வெறி என்பதே "தமிழன் பார், வெறியாய் இருக்கிறான்... தமிழன் பார், வெறியாய் இருக்கிறான்..." என்று சொல்லி வளர்க்கப் படுவது. அது எவ்வளவு உண்மை என்பது வேறு விஷயம். "நாங்கள் அப்படி இல்லை!" என்று காட்டுவதன் மூலம் அவர்களையும் திருந்தச் சொல்லி அழுத்தம் கொடுக்கலாம் என்றொரு கருத்து வைக்கிறார். அதை விரிவாகவும் விளக்கமாகவும் சொல்லாததால் நாம் தவறாகப் புரிந்து கொள்ள வாய்ப்புள்ளது. விவாதங்களுக்கெல்லாம் முடிவில் அவர் கருத்தில் ஓர் உட்பொருள் இருப்பதை ஒத்துக் கொள்ள வேண்டியுள்ளது. "பாரதி சொன்னது போல், வையத் தலைமை கொள்; வட்டாரத் தலைமை போதாது எனக்கு!" என்கிறார். இந்த ஒரு விஷயம் மட்டுமே ஒரு கட்டுரைக்கான அளவு கருத்துக்களைக் கொண்டிருக்கிறது. அதனால் அதை அப்படியே விட்டு விடுகிறேன் இப்போதைக்கு. இதைப் பார்த்த பின்பு பாரதியை நிறையப் படிக்க வேண்டும் என்கிற ஆர்வம் குண்டக்க மண்டக்கக் கூடியிருக்கிறது.

"சகல ஆதிக்கங்களுக்கும் எதிரான எழுத்து அது!" என்று சமகால எழுத்தாளர் பிரபஞ்சன் வந்து ஜெயகாந்தன் எழுத்து பற்றி ஒரு வரியில் சொல்லி விடுகிறார்.

பிற எழுத்தாளர்களைப் பற்றிப் பேசுகிற வேலையை இவர் எப்போதும் தவிர்த்திருக்கிறார் என்று தகவல் கிடைக்கிறது. "நான் எழுத்தாளன் மட்டுமே; வாசகன் அல்ல!" என்றொரு விளக்கமும் கொடுக்கிறார்.

"எங்கள் ஊர் இருக்கிறது. எங்கள் வீட்டைக் காணோம். எனக்குத் தெரிந்த மனிதர்கள் யாரையும் காணோம்!" என்று கடலூரைக் காட்டிப் பேசுவது நன்றாக இருக்கிறது.

பொடிப் பையனாக இருக்கும் போதே பெரியாரையே எதிர்த்து அதே மேடையில் இவர் பேசிய விவகாரம் பற்றி இன்றுதான் தெரிந்து கொண்டேன்.

அப்துல் கலாமிடம் ஞான பீட விருது வாங்கியது கூட ஒருவகையில் வரலாற்றுச் சிறப்புதான். அந்த நேரம் பார்த்து ஏன் போய் அந்தக் கம்பீரமான மீசையை எடுத்துத் தொலைத்தாரோ! அவ்வளவு அகோரமாக இருக்கிறது!

நிகழ்ச்சித் தொகுப்பாளர் இடையில் ஓரிடத்தில் இப்படிச் சொல்கிறார்: "ஏற்றுக் கொள்ள முடியாத மாதிரியான கருத்துக்களைச் சொன்னது மட்டுமல்லாமல், தான் வாழும் காலத்திலேயே தான் வாழ்ந்த சமூகத்தால் அக்கருத்துக்களை ஏற்றுக் கொள்ளவும் வைத்தவர் இவர்!". சரியாகச் சொல்லப் பட்டிருக்கும் வாக்கியம். அவருடைய கதைகளில் வருபவை அனைத்தும் இன்று நடந்திருந்தால் நம்பத் தக்கவை. அன்று நடந்ததால் நம்ப முடியவில்லை. அதன் பொருள் இதுவன்றி வேறென்ன?!

இந்த இடுகை ஓரளவுக்காவது உங்களுக்கு சுவாரசியமாக இருந்தால், கண்டிப்பாக இந்த இணைப்பைச் சொடுக்கி மொத்தத் தொடரையும் பாருங்கள். இது சுத்தமாக சுவாரசியம் இல்லாமல் இருந்தால், கண்டிப்பாக இந்த இணைப்பைச் சொடுக்கி மொத்தத் தொடரையும் பாருங்கள். காணொளி எழுத்தை விட ஆற்றல் மிக்கது என்பது மட்டுமில்லை. இதை நான் எழுதியிருக்கிறேன்; அதை வேறொருவர் எடுத்திருக்கிறார் என்பதையும் மனதில் வைத்துச் சொல்கிறேன். குறைந்த பட்சம் ஒரு மணி நேரமாவது தயார் பண்ணிக் கொண்டு உட்காருங்கள். நன்றி.

இதோ முதல் பாகம்: http://www.youtube.com/watch?v=t2NR8bFmhpI&feature=relmfu

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம் - ஜெயகாந்தன்

"நான் என்னை ஒரு மேதையும் புனித வேசியும் போல் உணர்கிறேன்": அலெஹாண்ட்ரோ ஜோடராவ்ஸ்கிக்குச் சில கேள்விகள்

சாம, தான, பேத, தண்டம்