ஜெயகாந்தனின் 'ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள்' - 4/4


தொடர்ச்சி...

வக்கீல் ராகவன் பாத்திரம் சூப்பராக இருக்கிறது. பெரும் திறமைசாலியாகவும் அறிவாளியாகவும்  இருப்பான். ரங்கா அவன் பற்றிச் சொன்னதும் 'ஐயரா?' என்று கல்யாணி கேட்பதுதான், கதையில் வரும் கதைக்குச் சம்பந்தமில்லாத கேள்விகளிலேயே முக்கியமான கேள்வி என்று நினைக்கிறேன். சரியோ தவறோ, ஒருத்தன் இப்படி என்று சொன்னதும் அவன் இன்ன ஆளா என்று கேட்பதுதானே நம் பரம்பரைப் பழக்கம்!? ராகவன் பற்றிய இளமைக் காலக் கதை அருமையாக இருக்கும். இந்த நாவல் படிக்கிற அளவுக்குப் படித்த முக்கால்வாசித் தமிழ் இளைஞர்கள் அது போன்றதொரு வாழ்க்கையைக் கனவு கண்டிருப்போம். அது பெரும்பாலும் ஐயர் பையன்களுக்கு மட்டும்தான் நனவு என்கிற நிலைக்குச் சென்றிருக்கும். மற்றவர்களுக்கெல்லாம் இளமைக் காலக் கனவாகவே இருந்து விடும். அல்லது பிள்ளைகளுக்கான பிளான் ஆகி விடும். "எந்த விஷயத்தையும் - எல்லா விஷயத்துக்குமே ஒரு ஆழமிருக்குமில்லையா? அந்த ஆழத்தோடதான் பேசுவான்..." என்கிற அவன் பற்றிய அறிமுகம் ஜெயகாந்தன் பற்றியது போலவும் இருக்கும். பெரிய வக்கீல் என்று சொல்லி அழைத்துச் செல்வான். நேரில் போய்ப் பார்த்தால் பங்கரை போல் இருப்பான். சிகரெட்டைப் போட்டு ஊதித் தள்ளுவான். அவனும் பயங்கர விபரமாகப் பேசிப் போட்டுத் தாக்குவான். "சட்டங்களுக்கு இருக்கிற ரொம்ப விசேஷமான அம்சம் என்னன்னா சட்டத்தையேகூட மாத்தலாம். ஆனா இன்னொரு சட்டம் மூலமாத்தான் மாத்தலாம்!" என்கிற மாதிரி முத்தாய்ப்பாகப் பேசும் அவனுடைய வசனங்கள் அவன் எவ்வளவு பெரிய திறமைசாலி என்பதை நேரடியாக வாசகனுக்கு உணர்த்துபவையாக இருக்கும்.

ரங்காவோடு அவன் ஆங்கிலத்திலேயே பேசிக் கொளல், வெளியுலகம் அறியாத அன்றைய கிராமத்து வாசகர்களுக்கு, "தமிழைத் தவிர வேறொன்றறியேன் பராபரமே!" என்று வாழும் நாம் வாழும் அதே நாட்டிற்குள்ளேயே அப்படியோர் உலகமும் இருப்பதை அறிமுகப் படுத்தியிருக்கும். அவனும் ஒரு கம்யூனிஸ்ட் என்பது அன்றைக்கு மிகப் பொருத்தமான பாத்திர அமைப்பு. தமிழகத்தின் தலைசிறந்த வழக்கறிஞர்கள் எல்லோரும் கம்யூனிஸ்ட்களாக இருந்த காலமும் ஒன்று உண்டு. இன்றைக்கு அத்தகையவர்கள் கம்யூனிஸ்ட்டாக இல்லை என்பது மட்டுமில்லை; அப்படி வழக்கறிஞர்களும் இல்லை என்றே தோன்றுகிறது. அந்த அளவுக்கு விபரமான ஆட்கள் எல்லாம் அமெரிக்காவில் போய் சாப்ட்வேர் எழுத ஆரம்பித்து விட்டார்கள். அது மட்டுமில்லாமல், ராகவன் வீட்டில் இருக்கும் கார்ல் மார்க்ஸ் படத்தைக் காட்டி இவன் "யார் என்று தெரிகிறதா?" என்று கேட்பதும், இவளும் சரியாகச் சொல்லி விடுவதும் ஆசிரியரின் பால்ய காலக் கம்யூனிஸ்ட் தொடர்பை நினைவு படுத்துபவையாக இருக்கின்றன.

"விவாகரத்து செய்ய விரும்புபவர்கள் அதற்கென்று ஒரு திட்டவட்டமான காரணம் வைத்திருக்க வேண்டும். உங்கள் கேசில் அது என்ன?" என்று ராகவன் கேட்கும் போது, இந்தப் பார்ட்டிகள் ரெண்டும் திருதிருவென்று ஒன்றை மாற்றி ஒன்று பார்த்து விழிக்கும். அது அவ்வளவு வழக்குகளைப் பார்த்திருக்கும் அவனுக்கே பெரிய அதிர்ச்சியாகத்தான் இருந்திருக்க வேண்டும். நமக்குக் குறைவாகவா இருக்கும்? இதெல்லாம் கண்டிப்பாக அவர்களுக்கு எப்படியோ, வேடிக்கை பார்க்கும் நமக்குக் கனவு  வாழ்க்கை போல இருக்கும். சில வலிகளுக்கு அப்படியோர் ஆற்றல் - வேடிக்கை பார்க்கையிலும் கனவாகக் காண்கையிலும் அவ்வளவு சுகமாக இருக்கும்!

ஆணை பலவீனமாகவும் பெண்ணை பலமாகவும் காட்டும் படைப்புகளுக்கென்று ஒரு மரியாதை இருந்து வருகிறது. பல வீடுகளில் உண்மையிலேயே ஆண்களை விட பெண்கள் பலமானவர்களாகவும் இருக்கிறார்கள். அல்லது, நாம் நினைக்கும் அளவுக்கு ஆண்கள் பலமானவர்களும் இல்லை; நாம் நினைக்கும் அளவுக்கு பெண்கள் பலமற்றவர்களும் இல்லை என்பதைச் சொல்ல முயன்றதாகவும் இதை எடுத்துக் கொள்ளலாம். இலக்கியம் என்றால், அப்படி எல்லாம்தானே இருக்க வேண்டும். எப்படி எல்லாம்? சிறிதைப் பெரிதாக்கி... அல்லது, பாதி உண்மையை முழு உண்மையாக்கி... அழுத்தி அழுத்திப் பேசுவதன் மூலம் அதையே உண்மையாக்குவது! அதுவும் நல்லதுக்குத்தானே செய்கிறார்கள்.

ஆணின் தாழ்வு மனப்பான்மை அழகாகச் சொல்லப் பட்டிருக்கிறது. திருமணம் வரை அல்லது முதன்முறையாகப் பெண்ணொருத்தியோடு இணையும் வரை ஆண்கள் அளவிலாத தாழ்வு மனப்பான்மையோடே அலைகிறார்கள். பெண்கள் இந்த உலகமே தன்னைக் கண்டு வழிகிறது என்றுதான் எண்ணிக் கொண்டிருக்கிறார்கள். பல குடும்பங்களில் அதன் பின்பு எல்லாமே தலை கீழாகி விடும். ஓர் ஆண் எவ்வளவு பெரிய அறிவாளியாக இருப்பினும் இந்த உணர்சிகளோடேதான் திரிவான். சிலர் திருமணத்துக்குப் பின்னும் இந்த மனப்பான்மையை விட முடியாமல் தவிப்பார்கள். வெளியில் மட்டும்தான் அப்பாட்டக்கர் போலக் காட்டிக் கொள்வதெல்லாம்.

இவன் பிரச்சனைக்குரிய மாதிரிப் பேசும் போதெல்லாம் கல்யாணி ஒன்றுமே சொல்லாமல் சிரித்துக் குழப்பும் திறமை அவளுடைய முதிர்ச்சியைக் காட்டுவதாக இருக்கிறது. அது எல்லாப் பெண்களுக்கும் (அல்லது ஆண்களுக்கும்) கை வந்த கலை அல்ல. ரங்கா மட்டுமல்ல, நாமுமே இதற்கு என்னதான் பொருள் என்று மண்டையைக் குடையும் விதமாக இருக்கும். அந்த வகையில், இருவருமே பெரும் அறிவாளிகள்தாம் - விபரமானவர்கள்தாம். ஆனால், அறிவாளியாக இருப்பது மட்டுமே சுமூகமான மண வாழ்க்கைக்கு உத்திரவாதம் அளிக்க முடியாது என்பதும் அந்தக் காலத்திலேயே நிரூபிக்கப் பட்டிருக்கிறது. இன்னும் சொல்லப் போனால், கொஞ்சம் விபரம் குறைவானவர்களாக இருந்திருந்தாலே போதும், அவர்கள் மண வாழ்க்கை சுமூகமாக இருந்திருக்கும்!

"வர்க்கங்களும் ஜாதிகளும் இனபேதங்களும் அழிந்து போனாலும் தனி மனிதர்களின் தனி வாழ்வில், அந்தரங்கமான அகவாழ்வில் அவற்றின் தன்மைகள், அவற்றின் பாதிப்புகள் கொஞ்ச காலத்திற்கு - ஏன் வெகு காலத்திற்கு - ஏற்பட்டுக் கொண்டுதானிருக்குமோ என்று அவனுக்குத் தோன்றியது" என்ற வரிகள் அன்றைய ஜெயகாந்தனின் இடதுசாரிச் சிந்தனையோடு வந்திருந்தாலும், இன்று அதை இப்படிப் பொதுப் படையாகச் சொல்லிக் கொள்ளலாம்: "உலகப் பிரச்சனைகள் அனைத்தும் முடிவுக்கு வந்து விட்டாலும் இந்தப் பிரச்சனை மட்டும் என்றைக்கும் முடியாதப்பா!".

அடுத்ததாக, "ஆணும் பெண்ணும் சமம் என்பதும் மனிதர்கள் எல்லாரும் ஒரே நிறை என்பதும், உயிர்கள் அனைத்தும் பரமாத்மாவினின்றும் தோன்றுகிற அதன் அம்சங்களே என்பதும் - ஜனநாயக நாகரிகம், சோஷலிசம், அத்வைதம் என்று இவற்றுக்கு என்ன பெயர் கூறினாலும் - இவை எல்லாமே வாழ்க்கையை அறிவாலும், அறிவு சார்ந்த மனத்தாலும் புரிந்து கொள்ளுகிற, அவ்விதம் ஆக்குகிற முயற்சிதானே தவிர, சமம் எனப்படுபவை எல்லாம் இரண்டும் ஒன்று என்றாகிவிடாது. முரண்படுவதும், ஒத்திசைவதும் பொதுவான இயற்கையின் இயல்பாக இருக்கையில், சமம் என்ற மனோபாவத்தினால் மட்டும் முரண்பாடுகளே இல்லாமற் போய்விடுகிறது என்பது கற்பனை அல்லவா?" என்று கல்யாணியோடு தன்னை ஒப்பிட்டுத் தாழ்த்திக் கொள்ளும் ரங்காவின் மூலம் ஆசிரியர் ஒரு பெரும் தத்துவத்தைச் சொல்லியிருக்கிறார். இதுவும் ஒரு ட்ரேட்மார்க் ஜெயகாந்தன் விதம். சாதி பற்றிச் சொல்லும் போது கூட இப்படித்தான் சொல்வார். அதன் பொருள், அந்தச் சமமின்மை (அல்லது ஏற்றத்தாழ்வு) வேண்டும் என்பதல்ல. அது இருக்கிறது என்பதை மட்டும் அழுத்தமாகச்ச் சொல்வதாக எடுத்துக் கொள்ளலாம். சாதி வேறுபாடு இல்லாமல் போகக்கூட வாய்ப்பு உள்ளது. ஏனென்றால், ஒருவேளை, வெள்ளைக்காரர்களைக் காப்பி அடித்து நாமும் அதெல்லாம் இல்லாமல் செய்யும் காலம் வரலாம். ஆனால், எந்த ஏற்றத்தாழ்வும் இல்லாமல் போகும் நாள் சாத்தியம் என்று சொல்லும் அளவுக்கு வெள்ளைக்காரர்களே இன்னும் முன்னுக்கு வரவில்லை. அப்புறம் எப்படி அது சாத்தியம் ஆகும்? அப்படியே ஒரு பேச்சுக்கு ஏற்றத்தாழ்வு எதுவும் இல்லாமல் போய் விட்டாலும் கூட, வேறுபாடுகள் என்பது இருந்துதானே தீரும்.

"பசிக்கிறபோது தன் பசியளவு வேட்டையாடித் தின்று மிச்சத்தைத் திரும்பிப் பாராமல் ஒதுக்கிவிட்டுத் திரிந்தலையும் கம்பீர இயல்பு பொருந்திய சிங்கமும் பிணத்தையே மேய்ந்து, அழுகலையே தின்று அதிலேயே உழலும் கழுதைப் புலியும் - மிருகம் என்கிற பொதுவான பிரிவின் பொதுவான பிறப்பு, இறப்பு, உயிர் தரிப்பு, வம்ச விருத்தி, நாலு கால், ஒரு வால் என்கிற பொதுத்தன்மைகளினால் மட்டுமே ஒன்றாகிவிட முடியுமா?" என்று மேலும் அந்த வாதத்தை நீட்டுகிறார். ஏற்றத்தாழ்வுகளுக்கு எதிராகக் கொடி பிடிக்கும் இடதுசாரியாக இருந்ததாலோ என்னவோ அந்த விசயத்தில் அளவிலாத ஈடுபாடு கொண்டிருக்கிறார். அது எதுவுமே அதைத் தூக்கிப் பிடிக்கும் ஆளாக இருக்கிறார் என்பதற்கான அடையாளம் அல்ல. அது பற்றியே நிறையச் சிந்தித்திருக்கிறார் என்பதையே காட்டுகிறது அது.

"ஆம்பளை எல்லா விசயத்திலேயும் வீரனா இருந்தாலும் பொம்பளைங்க விசயத்திலே அம்பேல்தான்..." என்று நக்கலடித்துச் சிரிக்கும் சின்ன நைனா, அவ்வப்போது இப்படி ஏதாவது உதிர்த்துக் கொண்டே இருக்கிறார். சென்னை எத்தனைதான் பெரிய மாநகரமாக இருந்தாலும் அதற்குள்ளும் எத்தனையோ கிராமங்கள் இருக்கின்றன. அந்தக் கிராமங்களின் உயிராக இருப்பவர்கள் இந்தச் சின்ன நைனாக்கள்தாம். "போட்டியிலேதான் இருக்குது பொம்பளைங்க ஆசை, பாசம் எல்லாம்!..." என்று ஒரு பெரிய ரோசனை வேறு சொல்வார். அதாவது, சைடில் ஒன்று வைத்துக் கொண்டால்தான் மனைவிமார் பயத்தில் கூடுதல் பாசத்தைக் கொட்டுவார்கள் என்பதுதான் அதற்கான பொழிப்புரை. அது அன்றைக்கு வேண்டுமானால் சரியாக இருந்திருக்கலாம். இப்போது சிறிது மாறி விட்டது. கலியாணத்துக்கு முன்பு அப்படியெல்லாம் பிலிம் போட்டு ஓட்டிக் கொள்ளலாம். ஒருத்திக்குப் பிடிக்கிற மாதிரி இடம் பிடித்து விட்டால் போதும், அவளைச் சுற்றியிருக்கிற எல்லோரும் போட்டா போட்டியில் சுற்றிச் சுற்றி வருவார்கள். மனைவியோடெல்லாம் அதெல்லாம் எடுபடாது. "போடா ங்கொய்யாலே!" என்று கிளம்பிப் போய் விடுவார்கள்.

"யோசிக்கிறதையெல்லாம் பேசக்கூடாதுன்னு நான் புரிஞ்சுக்கிட்டேன். பேச வேண்டாத எவ்வளவோ விஷயங்களை யோசிக்கிறோம், பேசினதையே திரும்பத் திரும்ப யோசிக்கிறோம் - பேசக் கூடாததைக் கூட யோசிக்கிறோம் - பேசிப் பிரயோசனம் இல்லேன்னு கூடச் சில சமயத்திலே யோசிக்க வேண்டியிருக்கு" என்று நிறுத்தி நிறுத்தி மாற்றி மாற்றிச் சொன்னான் என்று ரங்கா சொல்வதாக வரும் வரி, சொற்களின் சோடனையாக மட்டும் இல்லாமல் உண்மையாகவே நாம் எப்படியெல்லாம் பிரச்சனைகளைப் பெரிதாக்குகிறோம் என்று சரியாகச் சொல்கிறது. ஒரு வேலையும் இல்லாமல் உட்கார விட்டால், இதைத்தான் நம்மில் நிறையப் பேர் செய்கிறோம். வேலை நிறைய இருந்தாலும் இதற்கென்று நேரம் ஒதுக்கியும் சிலர் இதெல்லாம் செய்கிறோம்! :)

கடைசியில் கல்யாணி படுத்த படுக்கையாய் விழுகையில் அண்ணாசாமி போய் ரங்காவை அழைத்து வரும் காட்சி மனதைத் தொடுகிறது. எது எப்படியோ, சரியாக எப்போது வர வேண்டுமோ அப்போது வந்து இணைந்து விடும் ரங்கா கடைசியில் ஓரளவு நம் வெறுப்பில் இருந்து தப்பி விடுகிறான்.

கதை முடிந்த பின்பு, பின்கதை என்ற பெயரில் முடித்து வைக்கப் படாத மிச்சத்தையும் சொல்லி முடித்து விடுகிறார். வார இதழில் தொடராக எழுதிய போது, கடைசி வாரத்துக்கு அடுத்த வாரத்தில், வாசகர்களின் கேள்விகளுக்குப் பதில் அளிக்கும் விதமாக இதையெல்லாம் செய்திருக்க வேண்டும் என நினைக்கிறேன்.

பின்கதை: 1. அக்கா புருசனைத்தான் கட்டுவேன் என்று ஒற்றைக் காலில் நின்று கொண்டிருந்த சுமதி நல்ல வேலையில் அமர்ந்து, அங்கொருவரைக் கரெக்ட் பண்ணி (அல்லது பண்ணப் பட்டு) காதல்த் திருமணம் செய்து கொள்வாள். தமிழ் நாட்டில் காதற் திருமணங்களின் ஆரம்ப காலமாக இருக்கும் போலத் தெரிகிறது! 2. கல்யாணியைப் போல் வாழ்க்கையை நாடகமாகப் பார்க்க வேண்டுமென்று புரிந்து கொள்வான் ரங்கா. இந்தக் கதையின் மூலம் சொல்லப் பட்டிருக்கும் மிகப் பெரும் தத்துவம் அதுதான். 3. ரங்காவின் மகள் இந்து, இரு பெற்றோருக்குப் பிள்ளையாகி விடுவாள். ரங்கா-கல்யாணி தம்பதிக்கும் அவளுடைய சித்தி சுமதி மற்றும் அவளுடைய கணவன் தம்பதிக்கும்!

ஆனால், கல்யாணி கடைசியில் படுக்கையில் இருந்து எழுந்தாளா இல்லையா என்று சொல்லாமலே கதையை முடித்து விட்டது பல கேள்விகளை எழுப்புகிறது. இது கதைக்கு வலுச் சேர்ப்பதற்காக விடப் பட்டதா? அது கதையின் முடிவுக்குச் சம்பந்தமில்லாதது என்று விடப்பட்டதா? சுபம் சொல்லி முடிப்பது சினிமாவுக்கு மட்டுமான சூத்திரமாக இருக்கட்டும் என்று விடப் பட்டதா? வேண்டிய நேரத்தில் திரும்பி வந்து சேர்ந்து விட்டாலும் அவன் படுத்திய பாட்டில்தான் அவள் வீழ்ந்தாள் என்பதை நினைவில் இருந்து அகல விடக் கூடாது என்று விடப் பட்டதா? இவை எல்லாமுமா? இத்தோடு இன்னும் சிலவுமா?

எது எப்படியோ, இது எல்லாமே காலம் கடந்தும் பேசப் படும்!

முற்றும்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

சாம, தான, பேத, தண்டம்

உயர் தனிச் செம்மொழி?!

யுவால் நோவா ஹராரி: “21-ஆம் நூற்றாண்டுக்கான 21 பாடங்கள்” | கூகுள் உரையாடல்கள்