பாரதியார் கட்டுரைகள் - 2/N
தொடர்ச்சி...
யாரைத் தொழுவது? என்ற கட்டுரைதான் நூலின் முதற் கட்டுரை. கடவுள் வாழ்த்து போல ஆரம்பிக்கும் அக்கட்டுரையில், "சிவனுக்கும் பார்வதிக்கும் விவாகம் நடந்தபோது, முதலாவது கணபதிக்குப் பூஜை நடந்ததாக வேதம் சொல்லுகிறது" என்கிற வியப்பூட்டும் தகவல் ஒன்று வருகிறது. வேதம் தெரியாததால் அப்படி வியப்பாக இருக்கிறதா என்றும் தெரியவில்லை. ஆனால், பாரதி வேதங்களை எந்த அளவுக்குக் கற்றுத் தேர்ந்திருந்தார் என்பது நன்றாகப் புரிகிறது. அவரை மிகவும் பிடித்த சிலரால் கூட அவர் மீது வைக்கப் படும் குற்றச்சாட்டுகளில் ஒன்று, அவரும் ஓர் இந்துத்துவர் என்பது. அதற்கான முக்கியக் காரணம், அவர் வேதம் படித்தார், கடவுள் நம்பிக்கை கொண்டிருந்தார், இந்து மதக் கோட்பாடுகளில் ஈடுபாடு கொண்டிருந்தார் போன்றவை. ஒவ்வொரு காலகட்டத்துக்கும் என்று மாறிக் கொண்டே இருக்கும் வரையறைகள் இருக்கின்றன. ஒருவன் ஏற்றத் தாழ்வுகளுக்கு எதிராகப் பேசும் போது அவன் எல்லா விதத்திலும் நூறு விழுக்காடு முழுமையான புரட்சியாளனாக இருக்க வேண்டும் என்று எதிர் பார்ப்பதன் மூலம் வரும் பிரச்சனை அது. ஒடுக்கப் பட்ட மக்களுக்காகப் பேசுவதையும் இந்து மதத்தின் மீது ஈடுபாட்டோடு இருப்பதையும் இரு வேறு விசயங்களாகப் பார்த்தவர் பாரதி. கிட்டத்தட்ட காந்தி போல.
ஒடுக்கப் படுவோரும் இந்துக்களே; அவர்களையும் தம் மதத்தினர் தம்மை மதிப்பது போலவே மதித்து முறையாக நடத்த வேண்டும் என்ற கருத்தை விதைத்தவர்கள். மக்களில் ஒரு சாரார் ஒடுக்கப் படுவதற்குக் காரணமே இந்து மதத்தின் அடிப்படையில் இருக்கும் கோளாறுகளும் அதன் மீது தீராத காதலும் வெறியும் கொண்டிருக்கும் இன்னொரு சாராருமே என்பவர்கள் அவருக்குப் பின் வந்தவர்கள். அதனால் அவர்களின் தொண்டராக பாரதி இராதது அவருடைய குற்றமில்லை. சாதிப் பிரச்சனையையும் மதப் பிரச்சனையையும் முடிச்சுப் போட்டுப் பேசக் கூடாது என்பவர்களும், அப்படித்தான் அவற்றைப் பார்க்க வேண்டும் என்பவர்களும், ஒரு போதும் ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ளப் போவதில்லை. தமிழகத்தில் மற்ற மாநிலங்களை விட சமூகச் சமநிலை ஓரளவு பரவாயில்லாமல் இருப்பதற்குப் பெரியார் பெரிதும் காரணமென்று சொல்கிறவர்கள் போலவே பாரதி காரணமென்று சொல்கிற ஒரு பெருங்கூட்டமும் இருக்கிறது. அதற்குக் காரணம், பாரதி பார்ப்பனராகப் பிறந்து, வேதங்கள் படித்து, தினமும் காலையில் கடவுளைத் தொழுது, மற்ற எல்லா வகையிலும் அவர்களைப் போலவே இருந்து கொண்டு சில முக்கியமான சமூகப் பிரச்சனைகளில் மட்டும் வேறுபட்ட கருத்துக்களைச் சொல்லி உள்ளுக்குள்ளேயே புரட்சி நடத்தினார். அதைப் பார்த்து ஆயிரமாயிரம் உயர் சாதியினர் தம் கருத்துக்களை மறுபரிசீலனை செய்தனர்.
எந்தப் புரட்சிக்கும் எல்லோருடைய பங்களிப்பும் தேவை - எல்லா மாதிரியான ஆட்களும் தேவை. வெளியில் இருந்து விமர்சிப்போரும் தேவை. உள்ளுக்குள் இருந்தே கலகம் செய்வோரும் தேவை. அடித்துப் பிடுங்குவோரும் தேவை. பேசிக் கொடுக்க வைப்போரும் தேவை. REVOLUTION-ம் தேவை. EVOLUTION-ம் தேவை. "இதுதான் சரி; இது மட்டும்தான் சரி!" என்று சொல்லும் அளவுக்கு இந்த உலகம் எதற்கும் அவ்வளவு எளிதான சூத்திரங்களைக் கொண்டில்லை. உலகப் பிரச்சனைகள் யாவும் அவ்வளவு எளிதானவையும் அல்ல. ஒவ்வொரு காலகட்டத்துக்கும் ஒவ்வொரு சூழலுக்கும் வெவ்வேறு அணுகுமுறைகள் தேவைப் படுகின்றன. சில நேரங்களில் அவை முற்றிலும் முரண்பட்ட அணுகுமுறைகளாக இருக்கின்றன. சில நேரங்களில் முற்றிலும் முரண்பட்ட அணுகுமுறைகளின் கூட்டணி கூட வெல்கிறது. ஆகவே, அதில் பாரதிக்கென்று ஒரு பின்னணியும், காலச் சூழலும், அணுகுமுறையும் இருந்ததை மறக்கக் கூடாது. அவருடைய உள்நோக்கம் தெளிவாக இருந்ததா என்பதை மட்டும் பார்த்து விட்டு, மற்ற மயிர் பிளக்கும் ஆராய்ச்சிகளை ஒதுக்கி விடுவதே நல்லது.
அவர் இன்றைய இந்துத்துவர்களைப் போல வெறுப்பு விதைக்கவில்லை (அதை அவர்கள் மட்டும் செய்யவில்லை என்பதையும் அறிவேன். அவர்கள் அப்படி ஆனதற்கான காரணங்களையும் அறிவேன்!). அதனால் அவரையும் அந்தப் பெயருக்குள் அடைத்துச் சுருக்கக் கூடாது. அப்படியே அவரை ஓர் இந்துத்துவர் என்று ஆதாரங்களோடு நிரூபிக்க முடியும் என்று வாதிடுவீர்களேயானால் அத்தோடு அவர் பின்னணியையும் வாழ்ந்த காலச் சூழலையும் சேர்த்துக் கணக்கில் வைத்துக் கொண்டு வாதிடுங்கள். யாருக்குமே தன் தாய் தந்தையும் தாத்தா பாட்டியும் சொல்லிக் கொடுத்ததை மறுப்பதே மறப்பதோ அவ்வளவு எளிதில்லை (அதையும் செய்பவன்தான் முழுமையான புரட்சியாளன் அல்லது அதுதான் புரட்சியாளனின் முதற் தகுதி என்பதும் ஒரு வகையில் சரியே!).
நூறடிப் பள்ளத்தில் விழுந்திருப்பவர்களை வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பவர்களுக்கு மத்தியில் இருபதடி ஏற்றி விடுபவனும் புரட்சியாளனே. அவனையும் வேடிக்கை பார்ப்போரில் ஒருவன் போலச் சித்தரிப்பதும் பிடித்து உள்ளே தள்ளுபவர்களோடு இணைத்துப் பேசுவதும் முறையாகாது. பிடித்து உள்ளே தள்ளுபவர்களோடு உறவும் வைத்துக் கொண்டு உள்ளே கிடப்பவர்களை ஏற்றி விடவும் செய்யும் ஆட்களையும் கூட அரவணைத்துத்தான் செல்ல வேண்டும். சில உறவுகள் பிறப்பால் பிணைக்கப் பட்டவை. அவை அனைத்தையும் உதறி வந்தால்தான் உன் கையைப் பிடிப்பேன் என்பது அறிவீனம். "முதலில் உன்னை ஏற்றிவிட முயற்சிக்கிறேன். இதுதான் பெரிய பிரச்சனை. அப்புறமாக அவர்களோடு உறவை முறிப்பதா வேண்டாமா என்கிற சிந்தனைகளில் நேரத்தை வீணடிக்கிறேன்!" என்பதும் நியாயமான போக்குதானே. அப்படியில்லாமல், "வாழ்ந்தால் என்னோடு, இல்லையேல் மண்ணோடு!" என்கிற போக்கு, எந்தப் புரட்சி இயக்கத்தையும் பின்னுக்குத்தான் இழுத்துச் செல்லும்.
தொடக்கூட மாட்டேன் என்பவர்களுக்கு மத்தியில் தோளில் கை போட்டுப் பேசும் அளவுக்கு நெருங்கி வருபவனை உற்சாகப் படுத்துவதன் மூலம்தான் அவர்களையும் மற்றவர்களையும் அடுத்த கட்ட முதிர்ச்சிக்கு அழைத்துச் செல்ல முடியும். அதை விடுத்து, அவனும் முழுமையாக மாறவில்லை - எம் வீட்டில் சம்பந்தம் செய்து கொள்ளும் அளவுக்கு இன்னும் மனம் திறக்கவில்லை என்பதை விமர்சிப்பது நியாயம்-அநியாயம் என்ற அளவில் வைத்துப் பார்த்தால் முற்றிலும் நியாயமே. ஆனால், நாம் விரும்பும் மாற்றம் வேண்டுமென்றால் அது சரியான அணுகுமுறை ஆகாது. என் அடிப்படை உரிமையை அடைவதற்கு நான் எதற்கு யாரையும் தட்டிக் கொடுத்து - தடவிக் கொடுத்து நேரத்தை வீணாக்க வேண்டும் என்கிற தார்மீக கோபம் நியாயமே. அதைக் கொஞ்சம் ஏமாற்றிப் பிடுங்கும் அளவுக்கு முதிர்ச்சியை வளர்த்துக் கொண்டால் வெற்றி இன்னும் எளிதாகும் என்பதே என் கருத்து.
"'கடவுள் எங்கும் இருக்கிறாரே? எல்லாம் கடவுள் தானே? ஊருக்கு நடுவில் ஒரு கோவிலைக் கட்டி, அதில் ஒரு கல்லையோ செம்பையோ நட்டு, அங்கேதான் எல்லோரும் வந்து கும்பிடவேண்டும் என்ற நியமம் எதற்காக?' என்றால், ஜனங்களுக்குள் ஐக்யம் ஏற்படுவதற்காக" என்கிறார். இதை இன்று நிறையப் பேர் சொல்கிறார்கள். ஆனால், சமீப காலத்தில் இதன் ஆரம்பம் பாரதியாக இருக்க வேண்டும் என்றெண்ணுகிறேன். இதில் ஓரளவு பொருள் பொதிந்திருப்பதையும் உணர முடிகிறது. கோயிலுக்குப் போகும் நிறையப் பேர், அங்கே போய் வரும் போது கிடைக்கும் மன உணர்வுகள் பற்றிப் பேசுகிறார்கள். அவை அனைத்துமே எல்லோருக்குமே கடவுள் கொடுக்கும் உணர்வுகள் போலவும் தெரியவில்லை. அங்கேயும் ஒரு கூட்டம் உருவாக்குகிறார்கள். அங்கே வருகிற கூட்டத்தில் தானும் ஒருவராக இருந்து, அங்கே நடைபெறும் பேச்சுவார்த்தைகளிலும் கருத்துப் பரிமாற்றங்களிலும் கலந்து கொண்டு திரும்பும் போது ஒரு திருப்தி கிடைக்கிறது. சமூக வாழ்க்கைக்கு (SOCIAL LIFE) வசதி செய்து கொடுக்கும் ஓரிடமாகக் கோயில் பயன் படுகிறது பலருக்கு. விளையாடுவதற்காக அல்லாமல் மைதானத்துக்கு வேடிக்கை பார்க்கவும் அங்குள்ள ஆட்களோடு அளவளாவவும் நிறையப் பேர் வருகிறார்களே! அது போல.
மனிதனுக்குத் தன்னை அங்கீகரிக்கும் - தனக்கேற்ற மாதிரியான ஆட்கள் கிடைக்கும் ஓரிடம் தேவைப் படுகிறது. அது சிலருக்கு மைதானமாக இருக்கிறது. சிலருக்கு மரத்தடியாக இருக்கிறது. சிலருக்கு முடிதிருத்தும் கடையாக இருக்கிறது. சிலருக்கு சாராயக் கடையாக இருக்கிறது. சிலருக்கு அலுவலகமாக இருக்கிறது. சிலருக்கு அரசியல் கட்சி அலுவலகமாக இருக்கிறது. சிலருக்கு நடிகருக்கு வைக்கும் ரசிகர் மன்றமாக இருக்கிறது. சிலருக்குச் சீட்டாடும் இடமாக இருக்கிறது. அதுவே சிலருக்குக் கோயிலாக இருக்கிறது (எல்லோருக்கும் என்று சொல்லவில்லை. யாரும் கோபப் பட்டு உடல்நிலையைக் கெடுத்துக் கொள்ள வேண்டாம்!). வெள்ளிக் கிழமை ஆகிவிட்டால் அங்கு போய் நிற்கா விட்டால் கை-கால் உதறல் எடுக்கும் என்று சொல்கிறவர்களைப் பார்த்திருக்கிறோம் அல்லவா! அந்த உதறல் எல்லோருக்குமே அந்த இடத்துக்கே உரிய பொருளுக்காக இருப்பதில்லை. அந்த இடத்தில் கிடைக்கும் சமூக வாழ்க்கைக்காகவும் அப்படியான உதறல் ஏற்படுவதுண்டு. அப்படி ஒரு தேவையை எந்தக் கேடும் அளிக்காத கோயில் போன்ற ஓரிடம் கொடுக்க முடிந்தால் நல்லதுதானே! முறையான வடிகால் (CHANNELIZE) அமைத்துக் கொடுத்து விட்டால், தேவையில்லாத இடங்களுக்குச் செல்லாதே கால். அதைத்தான் பாரதி சொல்கிறார் என நினைக்கிறேன். அந்தச் சமூக வாழ்க்கையைத்தான் சில மதத்தினர் அதிகம் அவர்களுடைய ஆலயங்களில் அதிகம் பெறுவதாக உணர்கிறார்கள். சிலர் குறைவாக உணர்கிறார்கள்.
"இது தான் வேதத்தின் கடைசியான கருத்து. 'தன்னிடத்தில் உலகத்தையும் உலகத்தினிடம் தன்னையும் எவன் காண்கிறானோ அவனே கண்ணுடையவன்? என்பது முன்னோர் கொள்கை' என்றும் சொல்கிறார். இதுதான் எனக்கு ஆன்மீகத்தில் மிகவும் பிடித்த பகுதி. அதன் அடிப்படைக் காரணமே இந்த இரண்டு கால் மிருகங்கள் நிம்மதியாக இருக்க வேண்டுமே என்று எண்ணியதுதான். அதையும் சிக்கலாக்கி, இதுதான் உண்மையான கடவுள் - அதுதான் உண்மையான கடவுள் - இதுதான் உயர்ந்தது - அதுதான் மேலானது என்று வெறுப்பு பரப்ப ஆரம்பித்து விட்டார்கள். அதுதானே நியாயம் என்று அவர்களுக்கு மட்டும் புரிகிற மாதிரி வாதங்கள் வேறு வைக்கிறார்கள். நடக்கட்டும். எதில் போய் முடிகிறது என்று பார்ப்போம். ஞானி என்பவனே அடிப்படையை நினைவூட்டுபவன்தான் என்றாகி விடுகிறது பெரும்பாலான நேரங்களில். எட்டு மாடி கட்ட வேண்டும் - இருபது மாடி கட்ட வேண்டும் என்று பெரிது பெரிதாகக் கனவு கண்டு கொண்டு இருப்பவர்களுக்கு மத்தியில், "இதற்கான அடித்தளம் ஓட்டு வீட்டுக்குப் போட்டதப்பா! மாடி கட்டத் திட்டம் போட்டால், இருக்கிற இருவர்-மூவரும் இருக்க இடம் இல்லாமல் போய் விடும். அதனால் இருப்பதைக் காக்கவும் பலப்படுத்தவும் வழி பார்ப்போம்!" என்பதை நினைவு படுத்தவும் நமக்கு அவ்வப்போது ஆள் தேவைப் படுகிறது. வேதனைதான்!
"உன்னுடைய ஆத்மாவும் உலகத்தினுடைய ஆத்மாவும் ஒன்று. நீ, நான் முதலை, ஆமை, ஈ, கருடன், கழுதை - எல்லோரும் ஒரே உயிர். அந்த உயிரே தெய்வம்" என்கிற வரி, பாரதி ஆன்மீகத்தில் - இந்து மதத்தில் எதைத் தேடினார் என்பதைக் காட்டுகிறது. இந்த வரி, நாம் தெய்வத்தைக் காக்க வேண்டுமா தெய்வம் நம்மைக் காக்க வேண்டுமா என்ற கேள்வியையும் எழுப்புகிறது. உன்னைச் சுற்றியிருக்கும் உயிர்களைக் காத்தாலே போதும், நீ தெய்வத்தைக் காத்தவனாகி விடுகிறாய். அப்புறம் ஏன் தெய்வம் உன்னைக் காக்க வேண்டும்?! இப்படி எல்லோரும் தன்னால் இயன்ற அளவு உலக உயிர்களைக் காத்தால், அதுவே தெய்வத்தைக் காப்பதாகவும், அதுவே அப்படியே எல்லா உயிர்களையும் காப்பதாகவும் ஆகி விடும். கடைசியில், தெய்வம் என்ற அந்த உணர்வே நம் எல்லோரையும் காத்ததாகவும் ஆகி விடும். இதுதான் தெய்வம் நம்மைக் காக்கும் இரகசியம் போலும். இது போன்ற தத்துவங்களைப் படிக்கும் போதுதான் வேதம் படிக்க வேண்டும் என்ற ஆசையே வருகிறது. எல்லா மதத்து வேதங்களையும்தான் சொல்கிறேன். "பாரதியின் கட்டுரைகளைப் படித்து இன்னொருத்தன் இந்துத்துவன் ஆகி விட்டான்; அதனால் இனி யாரையும் பாரதியைப் படிக்க விடக் கூடாது; பாரதி ஓர் இந்துத்துவன்; அவனைப் படிப்போர் இந்துத்துவர்!" என்று தூற்ற ஆரம்பித்து விடாதீர்கள் அவசரப் பட்டு. அப்புறம் உள்ளதும் போச்சுடா நொள்ளக் கண்ணா ஆகி விடும்!
"ஊரொற்றுமை கோவிலால் நிறைவேறும். வீட்டுக்குள் தனியாகச் சிலை வைத்துக் கும்பிடுவது குடும்ப ஒருமை உண்டாகும் பொருட்டாக" என்று சொல்வதும் அப்படியே. குடும்பம் சிறியதுதான். அதிக பட்சம் பத்துப் பேருக்கு மேல் இருப்பதில்லை. அதுவும் இப்போதெல்லாம் நான்கு பேருக்கு மேல் இருப்பதில்லை. அதனால் எல்லோரும் எப்போதும் ஒன்றாகவே இருக்கிறார்கள் என்றாகி விடுமா? ஒவ்வொருவரும் அவரவர்க்கான ஓர் உலகில் இருந்து கொண்டு ஒரு வீட்டுக்குள் பல உலகங்களாக வாழ்கிறோம். மிகச் சில வீடுகளிலேயே எல்லோரும் ஒன்றாக உட்கார்ந்து சாப்பிடும் பழக்கம் கூட இருக்கிறது. அப்படித் துண்டாகிக் கிடப்பவர்களை இணைக்கும் ஒரு பாலமாகவும் மதம் பயன் பட்டிருக்கிறது. "சாமி கும்பிடும் போதாவது சேருங்களேன்ப்பா!" என்று செய்த சம்பிரதாயம்தான் வீட்டுக்குள் பூசையறை என்று சொல்வதாக இதை எடுத்துக் கொள்ளலாம்.
தொடரும்...
கருத்துகள்
கருத்துரையிடுக