பாரதியார் கட்டுரைகள் - 3/N

தொடர்ச்சி...

"கவனி! நல்ல பச்சைத் தமிழில் சொல்லுகிறேன்; ஆணாகிய நீ கும்பிடுகிற தெய்வங்களில் பெண் தெய்வம் எல்லாம், உன் தாய், மனைவி, சகோதரி, மகள் முதலிய பெண்களினிடத்தே வெளிப்படாமல் இதுவரை மறைந்து நிற்கும் பராசக்தியின் மகிமையைக் குறிப்பிடுகின்றன. அம்மன் தாய். அவளைப் போலவே நம்முடைய பெண்கள், மனைவி, சகோதரி, மாதா முதலியோர் ஒளி வீச நாம் பார்க்க வேண்டும் என்பது குறிப்பு" என்கிறார் ஓரிடத்தில். அப்படியானால், அவருக்கே தெரிந்திருந்திருக்கிறது, அவர் முழுமையாகப் பச்சைத் தமிழில் சொல்லவில்லை எல்லாத்தையும் என்பது! பெண் தெய்வம் என்பதே நம்மைச் சுற்றியுள்ள பெண்களை மதிப்பதற்காக அமைத்துக் கொடுக்கப் பட்டது என்கிற விளக்கம் நன்றாக இருக்கிறது. அதையெல்லாம் எவ்வளவு கடைப் பிடிக்கிறோம் என்பது வேறு கதை. அப்படியாவது சாமிப் பெயரைச் சொல்லிப் பயமுறுத்தினால்தான் நம்ம பயல்கள் வழிக்கு வருவார்கள் என்றும் யோசித்துச் சொன்னாரா என்றும் தெரியவில்லை. எது எப்படியிருப்பினும் பெண்ணுரிமைக்கு உண்மையான தொண்டாற்ற முயற்சித்திருக்கிறார் என்பது மட்டும் திண்ணம்.

"சிவன் நீ; சக்தி உன் மனைவி.
விஷ்ணு நீ; லக்ஷ்மி உன் மனைவி.
பிரம்மா நீ; ஸரஸ்வதி உன் மனைவி.

இதைக் காட்டி மிருக நிலையிலிருந்து மனிதரைத் தேவ நிலையிற் கொண்டு சேர்க்கும் பொருட்டாக ஏற்பட்ட தேவப் பள்ளிக்கூடங்களே கோயில்களாம். இதைப் பூசாரிகள் மறைக்கிறார்கள்" என்கிற வரிகள், "நான் கடவுள், நீ கடவுள்!" என்று 'அன்பே சிவம்' திரைப்படத்தில் கமல் சொன்னது போலக் குழப்பிக் குருமா வைப்பது போல இருக்கலாம் நிறையப் பேருக்கு. ஆனால், அதற்குள்ளும் பலான தத்துவங்கள் எல்லாம் இருக்கின்றன. நாம் ஒவ்வொருவரும் சிவனாக-பெருமாளாக-பிரம்மனாக நம்மைக் கற்பனை செய்து கொள்ளும் போது அளப்பரிய சாதனைகளும் சேவைகளும் செய்யும் அளவுக்கான சக்தி பிறக்கிறது. நல்ல பிள்ளையாக இருக்க வேண்டும் என்கிற கட்டாயம் உண்டாகிறது. தன்னை ரஜினியாகவும் கமலாகவும் கற்பனை செய்து கொள்வோரே பெரும் பெரும் நற்பணிகள் செய்ய முடியும் என்றால், கடவுளாகக் கற்பனை செய்து கொள்வோருக்கு எல்லையா இருக்கிறது?!

கோயில்களுக்குப் போகும் போது இந்தச் சிந்தனைகள் தூண்டப்பட வேண்டும். அது நடக்கிறதா? சத்தியமாக இல்லை. வருமானம் கூட வேண்டும்-வீடு வாங்க வேண்டும்-நகைகளை வாங்கிப் பதுக்க வேண்டும்-முடிந்தால், சுற்றி இருப்போரில் நாலு பேர் நாசமாப் போக வேண்டும்... இது போன்ற சிந்தனைகள்தாம் நம்மை ஆக்கிரமிக்கின்றன. பாரதி சொல்வது போல, பூசாரிகள் எதையும் நம்மிடம் மறைப்பது போலெல்லாம் தெரியவில்லை எனக்கு. அவர்களுக்கே அந்த அளவுக்கு அறிவெல்லாம் இருக்கிறதா தெரியவில்லை. எல்லாமே பிழைப்புவாதிகள். அதற்குள் கொஞ்சம் ஏற்றத்தாழ்வையும் புகுத்த முடிந்தால் பிழைப்பு இன்னும் கொஞ்சம் நன்றாக ஓடும் என்பதற்கு அப்பாற்பட்டு ஆன்மீகமோ கோயிலோ வேறு எந்த நல்லதையும் நம் அடித்தட்டு மக்களுக்குச் செய்யவில்லை.

"கும்பிடுவோர் நித்ய அடிமைகளாகவும், தெய்வாம்சம் உடையோர் தாமாகவும் இருந்தால் நல்லது என்று பூசாரி யோசனை பண்ணுகிறான். பிறரை அடிமை நிலையில் வைக்க விரும்புவோரிடம் தெய்வாம்சம் ஏற்படாது. அப்படி இருக்கப் பல பூசாரிகள் தம்மிடம் தெய்வாம்சம் இருப்பது போலே நடித்து ஜனங்களை வஞ்சனை செய்து பணம் பிடுங்குகிறார்கள். கெட்டிக்காரன் புளுகு எட்டு நாள். எத்தனை காலம் ஒரு மோசக்கார மனிதனை மூடிவைத்து அவனிடம் தெய்வங் காட்ட முடியும்? ஆகையால் இந்தப் பூசாரிகளுடைய சாயம் சீக்கிரம் வெளுத்துப் போகிறது. ஜனங்கள் பூசாரிகளை அவமதிப்பாக நடத்தி, பழைய மாமூலை உத்தேசித்துக் கல்லை மாத்திரம் கும்பிடுகிறார்கள். அப்படிப்பட்ட கல் வரம் கொடுக்கவே கொடுக்காது. எப்படிச் சாதாரணமாக ஒரு கல்லில் நல்ல சாதுக்கள் பக்தியுடன் மந்திரம் ஜபித்துக் கும்பிட்ட மாத்திரத்தில் பகவான் நேரே வந்து நர்த்தனம் பண்ணுவாரோ, அதுபோல் யோக்யதை இல்லாத பூசாரி தொட்ட மாத்திரத்தில் பகவான் அந்தக் கல்லை விட்டுப் போய் விடுவார். அது மறுபடி சாதாரண ரஸ்தா உருளை ஸ்தானத்திற்கு வந்து சேர்ந்துவிடும்" என்கிறார்.

இதன் மூலம் வைக்கப்படும் ஒரு மாபெரும் குற்றச்சாட்டு, ஆன்மீகத்தை அழிக்கிற வேலையைப் பூசாரிகள்தாம் முன்னின்று செய்து கொண்டிருக்கிறார்கள் என்பது. இத்தகைய ஒரு கருத்தை முதன் முதலில் இவ்வளவு உரக்கச் சொன்ன பார்ப்பனர் பாரதியாகத்தான் இருக்க வேண்டும். கல்லில் உறைந்திருந்த கடவுளே எழுந்து ஓடியது அவர்களால்தான் என்றும் சாடுகிறார். இதையெல்லாம் படித்த பின்பும் பாரதியை இந்துத்துவர் என்று அழைப்பதை என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. விவேகானந்தர் போலவே இவரும் தன் மதத்தின் மீது அளவிலாத மரியாதையும் அதை அழிப்போரைப் பார்த்து ஆவேசமும் கொண்டவராக இருக்கிறார்.

"கோவிலுக்குப் போனாலும் சரி; போகாவிட்டாலும் சரி: தெய்வத்தைக் கும்பிட்டாலும் சரி; கும்பிடாவிட்டாலும் சரி; பிறரை ஏமாற்றுவதை நிறுத்தினால், தெய்வம் அருள்புரியும். துளிகூட, ஓர் அணுக்கூட மற்றவர்களை ஏமாற்றுவதே கிடையாது என்று ஒருவன் பரிபூரண சித்தி அடைவானாகில், அவனே ஈசுவரன். குருவி, காக்கை, புழு, எறும்பு - ஒரு ஜந்துவுக்கும் வஞ்சனை பண்ணக் கூடாது. வஞ்சனை இல்லாமல், 'ஏதோ உலகத்திற் பிறந்தோம். தெய்வம் விட்டதே வழி' என்று ஆற்றின் மீது மிதந்து செல்லும் கட்டைபோல் உலக வெள்ளத்தில் மிதந்து செல்ல வேண்டும். அங்ஙனம் முற்றிலும் பராதீனனாய் எவன் ஈசுவரன் மீது ஸகல பாரத்தையும் போட்டுவிட்டு நடக்கிறானோ, அவனுக்குத் தெய்வத் தன்மை உண்டாகும். இதில் ஸந்தேஹமே கிடையாது" எனும் போது ஆன்மிகம் அல்லது மதம் பற்றிய அவருடைய பார்வை தெளிவாக வெளிப்படுகிறது. 

இதைத்தானே விவேகானந்தரும் சொன்னார். சாமி கும்பிடுவதும் கும்பிடாததும் ஒரு பிரச்சனையே அல்ல. மொள்ளமாரி வேலைகள் செய்யக் கூடாது. அதையும் கடவுளின் பெயரால் செய்யக் கூடாது. அதுதான் ஆன்மிகம் மற்றும் மதத்தின் அடிப்படை. நாத்திகரில் திருடர் உண்டென்பதை தமிழர் நாம் கண்ணாரக் கண்டு கொண்டிருக்கிறோம் ஒவ்வொரு நாளும். ஆனால், நாத்திகரில் தன்னலமில்லா வாழ்க்கை வாழ்ந்து மடிந்த நல்லோரும் இந்த நாட்டில் நிறைய உண்டு. சாமி-சாமி என்று நாடகமாடிக் கொண்டு, தினமும் நெற்றி நிறையப் பட்டை அடித்துக் கொண்டு, மனித வாழ்வில் சாத்தியமுள்ள அத்தனை மனிதத் தன்மை அற்ற செயல்களையும் செய்து கொண்டிருக்கிற ஒரு கூட்டமும் இருக்கத்தான் செய்கிறது. அவர்களைப் பார்க்கும் போதுதான் இரத்தம் கொதியாய்க் கொதிக்கிறது. இதையெல்லாம் படிக்கும் போது பாரதி காலத்திலேயே அத்தகையவர்கள் நிறைய இருந்திருக்கிறார்கள் - அவரைச் சுற்றியே நிறையப் பேர் இருந்திருக்கிறார்கள் என்று தெரிகிறது.

"பலஹீன ஜந்துக்களுக்கு மனிதன் எதுவரை அநியாயம் செய்கிறானோ அதுவரை கலியுகம் இருக்கும். அநியாயம் நீங்கினாற் கலி இல்லை; உலகம் முழுதும் கலி இல்லை. உலகம் முழுதும் அநியாயத்தை விட்டுச் சமீப காலத்தில் நீங்கு மென்று நினைக்க ஏது இல்லை; ஆதலால் கிருதயுகம் வரப்போவதில்லை நாம் மாத்திரம் ஏன் நியாயம் செய்ய வேண்டும்? என்று விபரீதமாக யோசித்து எவனும் தான் நடக்கும் அநியாய வழியிலே தொடர்ந்து செல்லக் கூடாது. எவன் அநியாயத்தை விடுகிறானோ, அவனுக்குக் கிருதயுகம் அந்த க்ஷணமே கைமேலே கிடைக்கும், இதில் ஸந்தேஹம் இல்லை" என்று புதுமையான விளக்கம் ஒன்று கொடுக்கிறார்.

அதாவது, 'எல்லோரும் திருட்டுப் பயலாக இருக்கும் போது நாம் மட்டும் ஏன் நல்லவனாக இருந்து நாசமாப் போகணும்?! நல்லதோ கெட்டதோ, நேரும் போது உலகம் முழுமைக்கும் சேர்ந்துதானே நேரும். பின் நாம் மட்டும் ஏன் ஏமாளியாக இருக்க வேண்டும்?!' என்கிற எண்ணம் பற்றிச் சொல்கிறார். இதுதான் இன்று நிறையப் பேரை நாசம் பண்ணும் சிந்தனை. நல்லவராகப் பிறந்தவர்கள் கூட சூழலைப் பார்த்துக் கெட்டுப் போய் விடுகிறார்கள். இப்படி வாழ்ந்தால்தான் இந்த உலகத்தில் வாழ முடியும் என்கிற தத்துவங்கள் எல்லாம் இப்படி விதைக்கப் பட்டவைதான். இதற்குப் பாரதி தரும் விளக்கம் என்னவென்றால், "கலியுகமும் கிருதயுகமும் மொத்த உலகத்துக்கும் சேர்ந்து வராது மகனே, அவனவன் செய்கிற புண்ணியத்துக்கும் பாவத்துக்கும் ஏற்றது போல ஒவ்வொரு மனிதனுக்கும் தனித்தனிக் கலியுகமும் கிருதயுகமும் கிடைக்கும்!" என்கிறார். அது உண்மையாக இருக்க வேண்டும் என்பதே நம் ஆசை. இதுவரை பார்த்த வாழ்க்கையில் அப்படி இருப்பது போலத் தெரியவில்லை. பிற்காலத்தில் மாறுகிறதா என்று பார்க்கலாம்.

"ஒருவன் கலியை உடைத்து நொறுக்கினால், அவனைப் பார்த்துப் பத்துப் பேர் உடனே நொறுக்கி விடுவார்கள். இங்ஙனம், ஒன்று, பத்து, நூறு, ஆயிரம், லக்ஷம், கோடியாக, மனித ஜாதியில் ஸத்யயுகம் பரவுதலடையும் காலம் ஏற்கனவே ஆரம்பமாய் விட்டது. இதில் ஸந்தேஹம் இல்லை" என்றும் நம்பிக்கை தெளிக்கிறார். சத்திய யுகம் பரவப் போகும் காலம் ஆரம்பமாகி விட்டதா என்று தெரியவில்லை. ஆனால், ஒருவன் நல்லவனாக இருக்கும் போது அவனைப் பார்த்து மதில் மேல் பூனையாக இருக்கும் நிறையப் பேர் நல்லவனாக மாறுவார்கள். அதுவே, ஒரு கேடிப்பயல் பெரியாள் ஆனால் அவனைச் சுற்றி இருக்கும் எல்லோரும் 'கேடித்தனம் கற்றல் எப்படி?' என்ற தலைப்பில் புத்தகம் கிடைக்கிறதா என்று தேட ஆரம்பித்து விடுவார்கள். பாரதி காலத்தில் தெரிந்த நம்பிக்கைக் கீற்று, அமாவாசைக்கு முந்தைய நாள் பிறை போலும். நாங்கள் அப்படி எதையும் பார்க்க முடியவில்லை. ஒருவேளை, அடுத்த தலைமுறைக்கோ அதற்கடுத்த தலைமுறைக்கோ நல்ல காலம் பிறக்கலாம். இப்போதைக்கு அதற்கான நம்பிக்கை இல்லை.

"பாரததேசத்தில் ஒவ்வொருவனும் செய்வதற்குரிய தியானம்" என்ற தலைப்பில் ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார். "தெய்வபக்தி உள்ளவர்களாயினும், நாஸ்திகர்களாயினும், எந்த மார்க்கஸ்தர்களாக இருந்தாலும், ஒரு மார்க்கத்தையும் சேராதவர்களாக இருந்தாலும், அவர்களுக்குத் தியானம் அவசியம்" என்று பாரதி போலவே நம்பக் கூடிய ஆட்களில் நானும் ஒருவன். அதாவது, மதத்துக்கும் தியானத்துக்கும் தொடர்பில்லை என்று எண்ணுகிறேன். இன்னும் சொல்லப் போனால், ஆன்மீகத்துக்கும் மதத்துக்கும் தொடர்பு இருக்க வேண்டும் என்று அவசியமில்லை என்று எண்ணுகிறேன். கோயில்களில் கேடு நடக்கலாம். மடங்களில் புரட்டு வேலைகள் செய்யலாம். தியானத்தில் திருட்டுத்தனம் செய்யவே முடியாது. ஏனென்றால், அது ஒரு தனி மனிதனின் ஆன்மா மட்டுமே சார்ந்தது. அதைக் கவனமாகக் கையாளச் சொல்லித்தான் ஆன்மிகம் அழுத்தி அழுத்திப் பேசுகிறது. அதில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொள்கிற எவனும் (நித்தி போன்ற சில விதிவிலக்குகள் தவிர்த்து!) ஏனைய புரட்டு வேலைகளில் ஆர்வம் இழந்து விடுவான். ஆனால் நாமோ அதை மட்டும் விட்டு விட்டு மதத்தின் பெயரால் மற்ற எல்லா வேலைகளையும் செய்கிறோம்.

ஆக, ஒரு நாட்டின் விடுதலைக்குக் குரல் கொடுத்த கவிஞன் என்பதையும் தாண்டி, பாரதி தன் நாட்டின் குடிமக்கள் யாவரும் நல்வாழ்வு வாழ்வதற்கு என்னவெல்லாம் தேவை என்று உணர்ந்து (இதில் அகத்தேவை, புறத்தேவை என்று எல்லாத் தேவைகளும் அடக்கம்), தன் நெருங்கிய நண்பனுக்கோ சகோதரனுக்கோ சொல்வது போல் எத்தனையோ கருத்துக்களைச் சொல்லி இருக்கிறார். அதனால்தானே அவர் மகாகவி!

தொடரும்...

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

சாம, தான, பேத, தண்டம்

உயர் தனிச் செம்மொழி?!

யுவால் நோவா ஹராரி: “21-ஆம் நூற்றாண்டுக்கான 21 பாடங்கள்” | கூகுள் உரையாடல்கள்