தமிழ்ச்செல்வன் சிறுகதைகள் - 4/6


தொடர்ச்சி...

"அப்பாவின் பிள்ளை" என்கிற கதையும் நம்மில் பலருக்கு எளிதில் சட்டென உரைக்கும் விதமானது. தினமும் வேலைக்குச் சென்று வரும் அப்பா எப்போதும் சிடுமூஞ்சியாகவே இருப்பார். வேலை முடிந்து வீடு திரும்புகையில், இரவில் எப்போதுமே கதவை ஓங்கி ஓங்கித்தான் தட்டுவார். அதனால் அவருடைய மகனான நம் கதைத் தலைவனுக்கு அவரைக் கண்டாலே பிடிக்காது. இப்படியிருக்கையில், இவனும் ஒரு நாள் வேலைக்குப் போக ஆரம்பிப்பான். அப்படி வேலைக்குப் போன முதல் நாளே அவனை நாயாய்ப் படுத்தி, சக்கையாய்ப் பிழிந்து எடுத்து விடுவார்கள். அத்தனை அலைக்கழிப்புகளையும் தாங்கிக் கொண்டு வீடு திரும்பி, அன்றிரவு இவனும் கதவைத் தட்டும் சூழ்நிலை வரும். இவனும் தனக்குப் பிடிக்காத தந்தை போலவே ஓங்கி ஓங்கிக் கதவைத் தட்டுவான். அப்போதுதான் உணர்வான் - "நம்மளும் அப்பா மாதிரியா அப்ப?" என்று. ஒவ்வொருவரும் ஒவ்வொரு மாதிரி இருக்கிறார்கள். அதற்கான நியாயங்களை அவர்களுடைய வாழ்க்கையை வாழ்ந்து பார்த்தால் ஒழிய நம்மால் புரிந்து கொள்ள முடியாது என்கிற தத்துவத்தைச் சொல்லாமல் சொல்லும் கதை இது. இன்னொன்று, வேலைக்குச் சென்ற இடத்தில் காட்ட முடியாத கோபத்தை எல்லாம் வீட்டிலும் வீட்டில் இருக்கும் கதவிலும்தானே காட்ட முடியும் என்றும் சொல்வதாக எடுத்துக் கொள்ளலாம். இதுவும் கீழ்நடுத்தர வர்க்கத்தின் இயலாமைகளைச் சொல்கிற கதையென்றே எடுத்துக் கொள்ளலாம்.

"சுப்புத்தாய்" என்ற கதையில் சுப்புத்தாய் தீப்பெட்டி ஆபீசில் வேலை பார்க்கும் குழந்தைத் தொழிலாளி. அவளுடைய தாய்க்குக் கைப்பிள்ளை வேறு ஒன்றிருக்கும். அந்தப் பிள்ளைக்கு உடம்புச் சரியில்லாத போது டவுனுக்குப் போய் வைத்தியம் பார்க்க வேண்டிய நிலையில், மகள் வேலைக்குச் செல்லும் தீப்பெட்டி ஆபீஸ் வண்டியிலேயே அவளுடனேயே தொத்திக் கொண்டு போய் இறங்கி விடுவாள். ஆஸ்பத்திரிக்குப் போனால் கொடுக்கக் காசு வேண்டுமே. அதற்காக மகள் வேலை பார்க்கும் ஆபீசிலேயே ஐந்து ரூபாய் வாங்கிக் கொண்டு போகலாம் என்று உட்கார்ந்திருப்பாள். ஐந்து ரூபாய்க் காசுக்காக மணிக் கணக்காகக் காத்துக் கொண்டிருக்கும் போது இல்லாத கணவனைப் பற்றிக் கவலைப் படுவாள். அவளுடைய வலிகளை நினைத்து நாம் கவலைப் பட்டுக் கொண்டிருக்கும் போதே அடுத்து ஒரு பிரச்சனை. அங்கே இருக்கும் கணக்கன் அவளிடம் தவறாக நடக்க முயற்சிப்பான். இதில் எல்லாம் இருந்து விடுபட்டு, ஆஸ்பத்திரி போய்ச் சேர்ந்தால், அங்கிருக்கும் நர்சம்மா அவள் பங்குக்குப் பிடித்துக் கடித்துக் குதறுவாள். ஒவ்வொன்றும் அததுக்கு ஏற்ற மாதிரி ஆளாளுக்கு சில அடிமைகளை அடையாளம் கண்டு கொண்டு வைத்துக் கொள்ளுதுகள். அவர்களிடம் ஏறி மேய்வதன் மூலம் தன் ஈகோப் பசிக்குத் தீனி போட்டுக் கொள்வதுதான் இதுகளின் முக்கிய நோக்கம். இதற்கு இரையாவது பெரும்பாலும் அடித்தட்டுச் சாமானிய மக்களே. அந்த வலியை இந்தக் கதை முழுக்கத் திரும்பத் திரும்ப உணர முடியும்.

"குரல்கள்" என்ற கதையில் வெடிக் கம்பெனி விபத்தில் சிக்கி இறந்து போகும் பலர் போக, உயிர் பிழைத்த மூன்று சிறுவர்களையும் அதில் முக்கியமான ஒருவனான மாரி என்ற சிறுவனையும் பற்றிப் பேசப் படுகிறது. மாரி கிறுக்குப் பிடித்தது போல் ஆகி இரவெல்லாம் கத்துவான். முதற் சில நாட்கள் அக்கம் பக்கத்தில் இருப்பவர்கள் வந்து ஆறுதலாக உடனிருப்பார்கள். நாளாக ஆக கூட்டம் குறைந்து அது ஒரு சாதாரண விசயமாகி விடும். தினமும் இரவில் திடீரென எழுந்து கத்துவதும் திரும்பப் படுத்துத் தூங்குவதும் என்று வாழ்க்கை நகர ஆரம்பித்து விடும். பட்டாசுத் தொழிற்சாலையில் விபத்து என்பது சிவகாசி என்ற ஊர் உருவான நாளில் இருந்து நடந்து கொண்டிருக்கிறது. அதற்கு முடிவு கட்ட இன்னும் ஒருவன் பிறந்து வரவில்லை. ஒவ்வொரு விபத்துக்குப் பின் பெட்டிகள் பரிமாறுவதும், நூறு பேர் செத்தால் இருபது-முப்பது என்று எண்ணிக்கையை மாற்றிச் சொல்லி ஏமாற்றிக் கதையை முடிப்பதும், பின்னர் கொஞ்ச காலத்தில் அது அப்படியே அமுங்கிப் போவதும் திரும்பத் திரும்பத் திரும்பத் திரும்ப நடந்து கொண்டிருக்கிறது. பிழைத்தவர்கள் மூவரையும் போட்டோ எடுக்க வந்து கொண்டே இருக்கும் பத்திரிகைகள் கூட இந்த விசயத்தில் இன்னும் ஒன்றும் சாதிக்க முடியவில்லை. இப்படி ஒவ்வொரு முறையும் ஊருக்குள் வருகிற ஆட்களிடம் காசு ஏதாவது கிடைக்குமா என்று ஏங்கிக் குவியும் மக்களின் வாழ்க்கை அவலம் எப்போது மாறுமோ தெரியவில்லை.

முன்பே சொன்ன மாதிரி, "வாளின் தனிமை" அடிக்கடிப் படித்த கதை. எந்த நேரமும் வாளைக் கையில் வைத்துக் கொண்டு அலையும் சுப்பையா அதன் பெருமையை எண்ணி எண்ணிப் பூரிப்பவன் என்பது மட்டும் புரிந்தது. அதற்கு மேல் ஒன்றும் புரியவில்லை. அதன் மூலம் சொல்ல வரும் கருத்து என்னவென்று புரிந்து கொள்ளும் அளவுக்கு அறிவாற்றல் இன்னும் வளரவில்லை என்பதால் அது பற்றிப் பேசாமல் போய் விடுவதே உத்தமம் என்று எண்ணுகிறேன்.

"குதிரை வண்டியில் வந்தவன்" என்ற கதை மனித குலத்தின் மாபெரும் பிரச்சனையான மண வாழ்க்கைப் பிரச்சனை பற்றிப் பேசுகிறது. பிடிக்காத ஒருவனைக் கட்ட நேர்கிற கஷ்டம் சாதாரணமானதில்லை. ஏதோ சினிமாக்காரர்களின் புண்ணியத்தில் ஓரளவுக்கு நிலைமை இப்போது மாறியிருக்கிறது என்றாலும், பெரும்பான்மைத் தமிழ்ச் சமூகம் இன்னமும் தன் தந்தை காட்டியவனைக் கண்ணை மூடிக் கொண்டு கட்டிக் கொள்ளும் கட்டாயத்தில்தான் வாழ்ந்து கொண்டிருக்கிறது. முதற் பிரச்சனை ரஜினிகளையும் கமல்களையும் கனவு கண்டு காத்திருக்கும் பெண், சராசரி மனிதன் ஒருவனைக் கைப்பிடிக்கையில் உடைந்து போகிறாள். இன்னொன்று, பிறந்தது முதல் தன் கண் முன்னால் இருக்கும் ஆடவன் ஒருவனைக் கணக்குப் போட்டு வளர்கிறவள், வருகிறவன் எவனாக இருந்தாலும் அவனை முந்தையவனோடு ஒப்பிட்டு ஒப்பிட்டுப் பார்க்கிறாள். அவனுமே கூட ஒரு டுபுக்காக இருந்திருக்கக் கூடும். ஆனால், அவனோடு வாழ்ந்து பார்க்கும் வாய்ப்புக் கிட்டாமலே போய் விடுவதால் அவன் ஹீரோவாகவே நிலைத்து விடுவான். உடன் வாழ வேண்டிய கட்டாயத்துக்குள் தள்ளப் பட்டதால், இவன் ஜீரோவாகவே தெரிவான்.

பெண்களின் மன ஆசைகள் அனைத்தையும் நுட்பமாகப் பேசியிருக்கிறார். அக்கா-தங்கையோடு பிறக்காத பலர், வீடு திரும்பும் போது பூ வாங்கி வரக் கூடத் துப்பில்லாத கேவலப் பிறவிகளாக நாறிக் கொண்டிருக்கிறோம். இந்தக் கதையில் குதிரை வண்டியில் வந்தவன், அதெல்லாம் கூட தினமும் மிகச் சிறப்பாகச் செய்தும் கூட நல்ல பெயர் வாங்க முடியாமல் சிரமப் படுகிறான் பாவம். அது மட்டுமா, தனிக்குடித்தனமெல்லாம் அழைத்து வந்து தன் ராணியை மகாராணி போலப் பார்த்துக் கொள்வான். அப்படியிருந்தும் அவளுடைய மனதில் இடம் பிடிக்க முடியாமல் தவிப்பான். பெண்களுக்கு எதெல்லாம் பிடிக்கும் என்று சூப்பர் சூப்பராக யோசித்துச் செயல்பட்டுக் கொண்டிருப்பான். அவளோ அவளுக்கென்று சில எதிர்பார்ப்புகளும் ஆசைகளும் வைத்துக் கொண்டு வருந்திக் கொண்டிருப்பாள். தன்னை வசு என்று செல்லமாக அழைக்க வேண்டும் அவன் என்று ஆசைப் படுவாள். அவனோ பள்ளிக் கூடத்தில் போல முழுப்பெயரைச் சொல்லி அழைத்துக் கொண்டிருப்பான். ஒவ்வொரு பெண்ணுக்கும் வெவ்வேறு ஆசைகள். சித்தப்பாக்களும் அண்ணன்களும் சொல்லிக் கொடுத்தது போல பொதுவான எதிர்பார்ப்புகள் என்று எதுவும் இல்லை என்பது போலச் சொல்ல முயன்றிருக்கிறார். ஏற்றுக் கொள்ள முடியவில்லை.

காலத்தின் கோலம், இப்படி வாழ்ந்து கிழித்த இவர்கள், கொஞ்ச காலம் போன பின்பு, எதிர் வீட்டில் புதிதாகக் குடி வந்த புதுமணத் தம்பதிக்கு ஐடியாக் கொடுக்கும் அளவுக்குக் காட்சிகள் மாறி விடும். அவர்கள் குடும்ப வாழ்க்கையும் நாறிக் கொண்டிருக்கும். யார் குடும்ப வாழ்க்கைதான் மணத்தது! இவன் ஏதோ பெரிய வித்துவான் போல அவனை அழைத்து வந்து ஐடியாக் கொடுக்க உட்கார்ந்தால், அந்த நேரம்அவனுடைய மனைவி இவனுடைய மனைவியோடு பேசுவதற்காக உள்ளே நுழைவாள். வந்தவள் சும்மாயிருக்காமல், "இன்னைக்கு சமையல் உன்னோட வேலையப்பு!" என்று நினைவு படுத்திக் கொண்டு உள்ளே வருவாள். அத்தோடு கதை முடியும். அடுத்து என்னவெல்லாம் நடக்கப் போகிறது என்பது நம் கற்பனையைப் பொருத்தது. இவன் அவனைக் கெடுத்தானா அல்லது அவன் மனைவி இவன் மனைவியைக் கெடுத்தாளா அல்லது இரண்டு குடும்பங்களிலும் அமைதியும் சமாதானமும் குடி கொண்டனவா அல்லது இரண்டு  குடும்பங்களும் இன்னும் நாற ஆரம்பித்தனவா என்பது நம் வாழ்க்கையனுபவங்களைப் பொருத்து மாறும்.

"சிவராணி" என்ற கதையில் இரண்டு சிவாக்கள். ஓர் ஆம்பளை சிவா. ஒரு பொம்பளை சிவா. பொம்பளை சிவாதான் சிவராணி. இருவரும் ஒரே வகுப்பில் படித்தவர்கள். சிவராணிதான் வகுப்பில் எப்போதும் முதலில் வருவாள். அவள் மீது ஏற்படும் ஓர் ஈர்ப்பு கலந்த போட்டி காரணமாக மக்கு சிவா பெரும் படிப்பாளி ஆகி விடுவான். அதன் பின்பு அவளை வீழ்த்துவதே குறியாகக் கொண்டு படிப்பில் கிறுக்காகி விடுவான். இருவரும் வெவ்வேறு ஊர்களுக்குப் பிரிந்து சென்ற பின்னும் இவள் பற்றிய நினைவோடே படிப்பில் கலக்கிக் கொண்டிருப்பான். கல்லூரியில் கூட இவளுடைய ஊர்க்காரன் ஒருவனைப் பார்க்கும் போது இவளுடைய மதிப்பெண்கள் பற்றி விசாரிப்பான். அப்போதும் அவளே இவனை விட அதிக மதிப்பெண்கள் பெற்றிருப்பாள் என்று அறிவான். கடைசிவரை இவளை வெல்லவே முடியவில்லையே என்று ஏங்கி அடங்குவான். அதன் பின்பு காலம் உருண்டோடியபின் ஒரு நாளில் மதுரை பேருந்து நிலையம் அருகில் அவளைச் சந்திப்பான். எப்போதும் முதலில் வந்தவள், குழந்தையின்மையால் மண வாழ்க்கையில் கிட்டத்தட்டத் தோல்வியுற்று, தன் கணவனைத் தன் தங்கையிடமே இழக்கப் போகும் நிலைக்கு அருகில் வந்து நிற்பதைச் சொல்வாள். "படிப்பில் எப்போதும் முதலில் வந்தவள், வாழ்க்கையில் இரண்டாவது ஆவது எதனால்?", "பெண் என்பதால் மட்டும்தானே!" என்கிற கேள்வி பதிலோடு முடியும் கதை.

முதன்முறை தங்களுக்குள் ஏற்படும் தொடர்பை அவன் அப்படியே நினைவில் வைத்திருப்பது, அந்த நாளில் அவள் போட்டிருந்த உடையின் நிறமும் விதமும் கூட நினைவில் வைத்திருப்பது போன்ற நுணுக்கமான விசயங்கள் மனத்தைக் கொள்ளை கொள்கின்றன. கள்ளன் போலீஸ், ரைட்ட தப்பா போன்ற விளையாட்டுகளை ஆடிய-பார்த்த கடைசித் தலைமுறை ஆள் என்ற முறையில் அவற்றைப் பற்றிய நினைவுகளையும் அசை போடும் வாய்ப்பைப் பெற்றேன் இந்தக் கதை மூலம்.

"ஏவாளின் குற்றச்சாட்டுகள்" கதையில் மீண்டும் குடும்ப வாழ்க்கைப் பிரச்சனைகள் வந்து சிரிசிரியெனச் சிரிக்க வைத்தன. கடைசிவரை இவள் சந்தேகப் படுகிறாளா அல்லது அவன்தான் பொறுக்கியா என்று புரிபடவே இல்லை. இத்தகைய ட்யூப் லைட்டுகள் இருக்கும்வரை எமாற்றுவோரும் இருக்கத்தான் செய்வார்களோ!

"...மற்றும் மைனாக்கள்" கதையில், "டவுனில் நிலா கிடையாது, திண்ணையும் கிடையாது, திண்ணையில் அப்பத்தாளும் கிடையாது" என்று ஏங்கும் குழந்தை மனம் நம்மையும் எதற்காகவோ ஏங்க வைக்கிறது. குழந்தைகளின் உளவியல் சிறப்பாகச் சொல்லப் பட்டிருக்கிறது. சித்தப்பா வீட்டில் பிரச்சனையில்லாமல் இருக்கிற சிறுவனை இழுத்து வந்து தன் தங்கை வீட்டில் போய் விடுவாள் அவனுடைய பொறுக்க மாட்டாத அம்மாக்காரி. விருப்பமே இல்லாமல் துடிக்கும் குழந்தையை ஏமாற்றி அனுப்பி வைப்பாள். 'பாதகத்தி இப்படி நம்மைப் பிரிக்கிறாளே!' என்று மனசுக்குள் துடிக்கும் அப்பாவும் சித்தப்பாவும், "நீ மனசிலே வச்சிக்கிறாதே" என்று பேசிக் கொள்கிற காட்சியில் நமக்கும் மனம் வலிக்கிறது; வேலைக்குப் போகும் தாய் தந்தை பெரும்பாலும் இப்படித்தான் தம் பிள்ளைகளைப் படுத்தி எடுக்கிறார்கள். பெண்ணுரிமையை மீட்டெடுக்கத் துவங்கியிருக்கும் இந்த நெடிய போரில் அடுத்த தலைமுறைக் குழந்தைகள்தாம் ஏக்கம் நிறைந்தவையாகவும் கவனிக்க ஆளில்லாமல் கைவிடப் பட்டவையாகவும் உருவாகப் போகின்றன. இதன் பாதிப்புகளைப் புரிந்து கொள்ள நாம் ஒரு தலைமுறை பொறுத்திருந்து ஆக வேண்டும்.

"வெளிறிய முத்தம்" என்ற கதையிலும் ஏகப்பட்ட கணவன்-மனைவிப் பிரச்சனைகள். என்னத்தைச் சொல்ல?! "முதலில் தூங்குபவர் பிரியம் குறைந்தவர்!" என்பது போன்ற வறட்டுச் சூத்திரங்கள் அப்பவே இருந்தனவா?! பாவம்தான் போங்கள். "இப்படி வெட்டிக் கணக்குகளில் வாழ்க்கையின் பொன்னான பொழுதுகளை வீணடிக்கும் இளஞ்சோடிகள் எப்போது இதையெல்லாம் விட்டு வெளியே வந்து நல்வழியில் போவார்களோ, அன்றுதான் இந்த நாட்டுக்கு முழுமையான சுதந்திரம் கிடைத்ததாக அர்த்தம்!" என்று கேப்டன் பாணியில் வசனம் பேசத் துடிக்கிறது மீசை. "கணவனும் மனைவியும் நிம்மதியாக வாழ்வதற்கு இருவரும் ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்தல் முக்கியம்!" என்கிற மாவு ஏற்கனவே நிறைய அரைத்துப் புளித்தது. அதற்கடுத்த கட்டமாக, "கட்டிக் கொடுத்தல், விட்டுக் கொடுத்தல், தட்டிக் கொடுத்தல்... அதெல்லாம் இருக்கட்டும் உடு நைனா. ஒன்னையிட்டு எனக்கு இன்னா பிரயோசனம்? அதச் சொல்லு முதல்ல!" என்று கேட்கும் காலம் வந்து விட்டது. அதற்கு ஒரே பதில், "தினமும் நான் பார்க்கும் வேலையில் எவ்வளவை நீ பகிர்ந்து கொள்ள முடியும்?" என்பதற்கான பதில் மட்டுமே. அதுவும் சிறிது இந்தக் கதையில் கிளறப் பட்டிருக்கிறது.

தொடரும்...

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம் - ஜெயகாந்தன்

"நான் என்னை ஒரு மேதையும் புனித வேசியும் போல் உணர்கிறேன்": அலெஹாண்ட்ரோ ஜோடராவ்ஸ்கிக்குச் சில கேள்விகள்

சாம, தான, பேத, தண்டம்