கலாச்சார வியப்புகள் - மீண்டும் சிங்கபுரம் - 5/7


கலாச்சார அதிர்ச்சி (CULTURE SHOCK) என்றொரு சொல்லாடல் இருக்கிறதே ஆங்கிலத்தில். அது போல இது கலாச்சார வியப்புகள் (CULTURE SURPRISES). கலாச்சார வியப்புகள் என்பது என் பயணக் கட்டுரைகள் மற்றும் வேறுபட்ட கலாச்சாரத்தவருடனான பழக்கக் கட்டுரைகள். புதிதாக நான் போய் இறங்கும் ஊர்களைப் பற்றியும் இதில் நிறைய வரும். எனவே, இதில் நான் பேசும் விஷயங்கள் எல்லாமே கலாச்சாரம் பற்றியதாகவே இருக்கும் என்று எதிர் பார்க்க வேண்டியதில்லை. எனக்குப் புதிதாகப் பட்ட எல்லாமே இதில் வரும். பொறுத்தருள்க!

தொடரும் வியப்புகள்...


குடியேற்றம் (IMMIGRATION) தொடர்பான குற்றங்களைப் பொறுத்துக் கொள்வதே இல்லை என்பது போல், குடியேறுபவர்களை வரவேற்று உபசரிப்பதிலும் சிங்கப்பூருக்கு இணை சிங்கப்பூரே. மனிதவளத் துறையின் அலுவலகத்துக்கு பணி அனுமதி (EMPLOYMENT PASS) வாங்கச் செல்லும் போது ஒரு விருந்தினருக்குக் கொடுக்கும் உபசரிப்பில் எந்தக் குறையும் இல்லாமல் கொடுப்பார்கள். பெரும்பாலான நாடுகளில் விசா வழங்கும் இடத்தில் - குறிப்பாக இந்தியர்களுக்கு - மூன்றாம் தர மரியாதைதான். அது போன்ற நடத்தையை சிங்கப்பூரில் யாரிடமும் காட்ட மாட்டார்கள். சரியாகக் குறித்த நேரத்தில் உள்ளே நுழைந்ததும் கூப்பிட்டு எல்லா வேலையையும் செய்து கொடுத்து அடுத்த பத்துப் பதினைந்து நிமிடங்களில் அனுப்பி வைத்து விடுவார்கள். ஒரு வாரத்துக்குள்அனுமதி அட்டை தயாராகி விடும். அதுவும் குழந்தை குட்டிகளோடு செல்வோரை ஒரு நிமிடம் கூட வீணடிக்காமல் வேலையை முடித்துக் கொடுத்து அனுப்பி வைத்து விடுவார்கள். இதெல்லாம் பார்க்கும் போது இதுவல்லவோ நாகரிகம் என்று வியப்பு மேலிடுகிறது. ஒரு நாட்டுக்குள் பணி நிமித்தமாக நுழையும் எல்லோரும் செல்லக் கூடிய ஓரிடத்தில் காட்டப்படும் இது போன்ற நன்னடவடிக்கை அங்கு வரும் எல்லோருக்குமே அந்த நாட்டின் மீது நன்மதிப்பை உண்டு பண்ணத்தானே செய்யும். அதனால்தான் தொழில் செய்வதற்கு உகந்த நாடுகளின் பட்டியலில் சிங்கப்பூர் முதலில் வருகிறது. இது வரை வந்துள்ள அத்தகைய பெரும்பாலான பட்டியல்களில் சிங்கப்பூர்தான் முதலிடம் பெறுகிறது.

மக்கட் தொடர்புப் பணிகளில் இருக்கும் பெரும்பாலானவர்கள் மிகவும் நட்புறவோடு நடந்து கொள்பவர்களாகவே இருக்கிறார்கள். வேலைக்கு ஆள் எடுக்கும் போதே அதையெல்லாம் பார்த்து எடுப்பார்களா அல்லது எடுத்த பின் கொடுக்கும் பயிற்சிகளில் அதையெல்லாம் கொண்டு வந்து விடுவார்களா அல்லது இரண்டுமா என்று தெரியவில்லை. அந்த அளவு மக்களை மதிக்கிறார்கள். குறிப்பாகப் பேருந்து ஓட்டுனர்களின் பொறுமை வியப்படைய வைக்கிறது. ஒவ்வொரு நிறுத்தத்திலும் கண்ணுக்குத் தெரிகிற தொலைவில் யாராவது கையைக் காட்டி விட்டால் போதும். பொறுமையாக நின்று அவரை ஏற்றிக் கொண்ட பின்புதான் புறப்படுகிறார்கள். அது போலவே இறங்கும் போதும், பெரியவர்கள் மற்றும் பிள்ளைகுட்டி-தட்டுமொட்டுச் சாமான்கள் உடையவர்கள் அதிக நேரம் எடுத்துக் கொண்டால் சிரித்த முகத்தோடு எல்லாத்தையும் ஏற்றுக் கொள்கிறார்கள். நம் அரசாங்கத்திடம் பணம் இருந்தால் ஒவ்வோர் ஆண்டும் ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையிலான பேருந்துப் பணியாளர்களை இங்கு அழைத்து வந்து, "பாருங்கப்பா, இவங்களும் நீங்கள் பார்க்கும் அதே வேலையைத்தான் பார்க்கிறார்கள். அப்புறம் ஏன் உங்களுக்கு மட்டும் அம்புட்டுக் கோபமும் கொந்தளிப்பும் வருகிறது?!" என்று காட்டிப் பயிற்சி கொடுக்கலாம். ஆனால், நம்ம ஊரில் இருக்கும் அளவுக்குக் கூட்டமோ போக்குவரத்து நெரிசலோ இங்கே இல்லை. அதுவே பாதி மன அமைதியைக் கொடுத்து விடும் இங்கிருக்கும் ஓட்டுனர்களுக்கு. நம்மவர்களின் நிலை அப்படியா? எத்தனை பேருடைய பலமுனைத் தாக்குதல்களைச் சமாளித்து ஒவ்வொரு நாளும் அவர் பாதுகாப்பாக வீடு திரும்ப வேண்டும்!

சிங்கப்பூரின் பிரச்சனைகளில் ஒன்றாகச் சொல்லப் படுவது இங்கே இருப்பவர்கள், சாகும் வரை உழைத்துக் கொண்டே இருக்க வேண்டும் என்பது. காரணம், வெளிநாட்டவர்கள் வந்து குவிந்து ஊரின் விலைவாசியை ஏற்றி விட்டார்கள். ஆனால், உள்ளூர்க்காரர்கள் பெரும்பாலும் குறைந்த வருமானத்துடனே வாழ்கிறார்கள். அந்த வருமானத்தில் ஓரளவு வசதியான வாழ்க்கை நடத்த வேண்டுமென்றால் வீட்டில் இருக்கும் எல்லோரும் உழைத்தாக வேண்டும். வயதான பெற்றோரைப் பார்த்துக் கொள்ளும் அளவுக்குப் பிள்ளைகள் சம்பாதிக்க முடியாவிட்டால் என்ன ஆகும்? பெற்றோரும் வேலைக்குச் சென்றுதான் ஆக வேண்டும். பல மேற்கு நாடுகளில் போல வயதான பின் அரசாங்கமே எல்லாத்தையும் பார்த்துக் கொள்ளும் படியான அமைப்பு இங்கில்லை. அதனால் நம்மவர்கள் சின்னச் சின்னப் பையன்கள் கூட இங்கு வந்து சாப்ட்வேரில் சம்பாதித்து ஆட்டம் போடுவது பார்க்கக் கொஞ்சம் சீரணிக்க முடியாமல் தான் இருக்கும். ஆனாலும் அவர்கள் அப்படியெல்லாம் பொறாமைப் படுவது போலத் தெரியவில்லை. இதனால்தான் நம்மவர்கள் நிறையப் பேர், சம்பாதித்து விட்டுக் கடைசிக் காலத்தில் அதை அனுபவிக்க ஊர் திரும்பி விட வேண்டும் என்கிறார்கள் போலும். அதற்கான வாய்ப்பு இருப்பவர்கள் வேறொரு நாட்டில் போய் அனுபவிக்கலாம். மற்றவர்கள் என்ன செய்ய முடியும்? இங்கேயே இருந்து உழைத்துத்தானே ஆக வேண்டும்!

மலேயர்கள் இந்தியர்களோடு ஓரளவு நெருங்குகிறார்கள் என்று சொல்லியிருந்தேன். அவர்களுடைய மொழியும் தோற்றமும் பண்பாடும் கூட நமக்கும் சீனர்களுக்கும் நடுவிலானதாகத்தான் இருக்கிறது. பல மலாய்ச் சொற்கள் வடமொழி-தமிழ்ச் சொற்கள் போல் இருக்கின்றன. 'கடை'யை 'கெடை' என்கிறார்கள். 'தண்டம்' என்பதை 'தெண்டா' என்கிறார்கள். 'மொழி'யை 'பாஷா' என்கிறார்கள். மலாய் மொழியின் மாபெரும் ஆச்சரியம், அவர்கள் அனைத்தையும் ஆங்கிலத்தில்தான் எழுதுகிறார்கள். அத்தனை மொழிகள் இருக்க, ஆங்கிலத்தை ஏன் தேர்ந்தெடுத்தார்கள் என்பது புரியவில்லை. அப்படியானால், வெள்ளைக்காரர்களின் வருகைக்குப் பின்னர்தான் எழுதவே ஆரம்பித்தார்களா? அவர்களுக்கென்று ஜாவி என்ற வேறொரு பழைய எழுத்து முறையும் இருப்பதாகச் சொல்லப் படுகிறது. ஏன் அதை மறந்து ஆங்கிலத்துக்குள் போனார்கள் என்றும் தெரியவில்லை.

இங்கிருக்கும் மலேயர்கள், தம் பெயரில் பின் அல்லது பின்டே போட்டுக் கொள்கிறார்கள். அதாவது, மகன் அல்லது மகள் என்பதற்கு அப்படிப் போட்டுக் கொள்கிறார்கள. ஒசாமா பின் லேடன் என்பது போல. ஒசாமா பின் லேடன் என்றால், லேடனின் மகன் ஒசாமா என்று பொருள். அதை அப்படியே ஆங்கிலத்தில் நம்மவர்கள் சிலர், S/O அல்லது D/O போட்டு எழுதுகிறார்கள். சுப்பையா S/O கருப்பையா என்பது போல. முழுப்பெயர் என்றால் அலுவல் ரீதியாக எழுதும் போது கூட இப்படித்தான் எழுதுகிறார்கள். அது கொஞ்சம் விகாரமாக இருக்கிறது. மற்றவர்கள் எப்படியும் போகட்டும். தமிழர் வாழ்வில் இந்த அளவுக்கு ஆங்கிலம் என்பது ஏற்றுக் கொள்ள முடியாததாக இருக்கிறது.

உட்கார வசதியாக ஊரெங்கும் அமைக்கப் பட்டிருக்கும் பெஞ்சுகள் அருமை. எந்த இடத்திலும் களைப்பாக உணர்ந்தால், பத்தடிக்குள் ஓர் இருக்கை கிடைத்து விடும். அது போலவே, கையில் குப்பையை வைத்துக் கொண்டு, சுற்றிப் பார்த்தால், பத்தடிக்குள் ஒரு குப்பைத் தொட்டியும் இருக்கும். அந்த அளவுக்கு வசதி செய்து வைத்திருப்பதால்தான் சாலைகளில் குப்பை போடாமல் பராமரிக்க முடிகிறது என்றும் சிலர் சொல்கிறார்கள். இந்தியாவில் இருக்கும் - ஆனால் இங்கே இராது என்று எதிர் பார்த்து வந்த சில பிரச்சனைகளும் இங்கே இருக்கின்றன. அவற்றுள் முக்கியமான ஒன்று, பல இடங்களில் பயமுறுத்தும் அளவுக்குக் கரப்பான் பூச்சிகள் நடமாடுகின்றன. அது போல, நம்ம ஊரில் தெருநாய்கள் போல, இங்கே தெருப் பூனைகள் நிறையத் திரிகின்றன. சாலையில் எல்லாம் வந்து தொல்லை கொடுப்பதில்லை. பெரும்பாலும் கட்டடங்களுக்குள்ளேயே அலைந்து கொண்டிருக்கின்றன. தெருநாய்கள் இங்கு இல்லவே இல்லை. வீடுகளுக்குள் வளர்த்துக் கொள்வதோடு சரி. வீடுகளில் பல்லி நடமாட்டம் ஓரளவுக்கு இருக்கிறது. நாகரிக மனிதன் முற்றிலும் அழிக்க முடியாத உயிரினங்களில் கரப்பான் பூச்சியும் பல்லியும் முக்கியமானவை என நினைக்கிறேன். மற்றபடி, எலி, பெருச்சாளி எல்லாம் இன்னும் பார்க்கவில்லை.

எப்போதாவது சில நேரங்களில் பிச்சைக்காரர்களைப் பார்க்க முடிகிறது. ரயில்களிலும் ரயில் நிலையங்களிலும் அடிக்கடி மனநிலை குன்றியவர்களைப் பார்க்க முடிகிறது. அதற்குக் காரணம், இங்கே அப்படிப் பட்டவர்களை அடைத்து வைக்கக் கூடாதாம். நல்ல விசயம்தான். அப்படியே வெளியே விட்டு விட்டால், அவர்கள் யாருக்கும் தொல்லை கொடுக்காமல் வாழ்ந்து பழகிக் கொள்வார்கள் போலும். இங்கும் சிறு சிறு சாலையோரக் கடைகளைப் பார்க்க முடிகிறது. அவற்றில் ஒரு லாட்டரிச் சீட்டுக் கடையும் பார்த்தேன். யப்பா... அதுவுமா? கடைகளில் பிளாஸ்டிக் பைகளுக்குத் தடை இல்லை. ஆகவே, பிளாஸ்டிக் பைகளின் நடமாட்டம் மித மிஞ்சி இருக்கிறது. எல்லாக் குப்பைகளையும் அழித்து விடுவதால் அது பிரச்சனையில்லை என்கிறார்கள். அது மட்டுமில்லை, சாலைகளில் குப்பை போடும் பழக்கம் இல்லாததால் பிளாஸ்டிக் கழிவுகளை நிர்வகிப்பது ஓரளவு எளிதுதான்.

வசதி படைத்த இந்தியர்களுக்கு இங்கே இருக்கும் பெரும் வசதி - பணிப்பெண்கள் அமைத்துக் கொள்ளும் வசதி. இந்தியர்களுக்கு மட்டுமில்லை, எல்லோருக்கும்தான் அது வசதி. வீட்டு வேலைக்கு வேறொரு பெண்ணை நியமித்துக் கொள்வதன் மூலம் பெண்ணுரிமையை மீட்டெடுத்து விட முடியும் என்ற கருத்தில் ஆழ்ந்த நம்பிக்கை கொண்டவர்கள் நாம் என்பதால் அப்படி அழுத்திச் சொல்ல வேண்டியதாகி விட்டது. பெரும்பாலும் இந்தோனேசியப் பெண்கள்தான் பணிப்பெண்களாகப் பணி புரிகிறார்கள் இங்கே. ஓரளவுக்கு பிலிப்பினோப் பெண்களும் இருக்கிறார்கள். இந்தியர்கள் மிகக் குறைவு. வேலையை முடித்து விட்டு வீட்டுக்குச் சென்று விடுகிற மாதிரியான பணிப்பெண்கள் மிகவும் குறைவு. வீட்டோடு தங்கி வேலை செய்யும் மாதிரியானவர்களே அதிகம். அதற்குக் காரணம், இங்கே தங்குவதற்கு ஏகப்பட்ட பணம் வேண்டும். அதனால் இங்கேயே இருப்பவர்கள் அனைவரும் அந்த அளவுக்குப் பணம் உடையவர்களாகத்தான் இருப்பார்கள். இந்தோனேசியா மற்றும் பிலிப்பின்ஸ் போன்ற நாடுகளில் இருந்து வரும் பணிப்பெண்களை வெளியில் தங்க வைக்க வேண்டும் என்றால், அதற்கு வாடகை கட்டக் கூட நாம் தரும் சம்பளம் அவர்களுக்குப் பற்றாது. அதனால்தான் இப்படியொரு ஏற்பாடு செய்து வைத்திருக்கிறார்கள்.

எல்லாம் கேட்கத்தான் நன்றாக இருக்கிறது. அவர்களை வைத்துச் சமாளிப்பதில் ஏகப்பட்ட சிக்கல்கள் இருக்கின்றன. நாங்கள் இரண்டு மாதங்கள் வைத்துப் பார்த்து விட்டுக் கும்பிடு போட்டு அனுப்பி வைத்து விட்டோம். அவர்களை அழைத்து வரும் நிறுவனங்கள் அவர்களை எப்படியெல்லாம் நடத்த வேண்டும் என்று நமக்கு அறிவுரைகள் சொல்கிறார்கள். அதன் படியோ அதை விடக் கெடுபிடியாகவோ நடந்து கொள்ளத் தெரிந்தவர்களுக்கு அது ஒரு பிரச்சனையில்லை. நம்மைப் போன்று பாவம் பார்க்கும் பாவிகளுக்கு வெகு விரைவிலேயே ஆப்பு வைத்து விடுவார்கள். முதல் ஆறு மாதங்களுக்கு வெளியில் விடவே கூடாது என்று சொல்கிறார்கள் அவர்களுடைய நிறுவனத்தினர். வந்த முதல் வாரமே ஏதாவதொரு புதுமையான காரணம் சொல்லி வெளியில் செல்ல வேண்டும் என்பார்கள் இவர்கள். பொய்தான் சொல்கிறார்கள் என்று தெரிந்தாலும், உண்மையாக இருந்தால் என்ன செய்வது என்று நாம் நம்பி வெளியில் விட்டால், வம்பை இழுத்துக் கொண்டு வந்து நிற்பார்கள். அடுத்தது, மொபைல் போனை அவர்கள் கையில் கொடுக்கக் கூடாது என்கிறார்கள் அவர்கள். அது அடிப்படை மனித உரிமைக்கு எதிரானது என்று விளக்கம் சொல்லி விட்டு வந்து முதல் நிமிடமே போனை எடுத்துக் கையில் நீட்டினோம். முதற் சில நாட்கள் எல்லாம் நன்றாகப் போனது. அடுத்து அதிலும் சிக்கல் ஆரம்பித்தது. வேலையில் ஆர்வம் போய், போனில் பயங்கர பிசி ஆகி விடுவார்கள்.

எல்லா வேலையையும் சொல்லிச் சொல்லித்தான் வாங்கிக் கொள்ள வேண்டும் என்று சொல்லித்தான் அனுப்பி வைத்தார்கள். ஆனாலும், 'இது கூடவா சொல்லிச் சொல்லி நினைவு படுத்த வேண்டும்!' என்று நமக்கு ஒரு வெறுப்பு வரும் மூன்றாவது வாரத்தில். பல நேரங்களில், 'இவளிடம் சொல்லிச் சொதப்பி பின்னர் அதைத் திரும்ப நாமே செய்து கொள்வதற்குப் பதில், முதலிலேயே நாமே செய்து விட்டால் என்ன?!' என்கிற நம் பாட்டாளிப் புத்திக்கு இதெல்லாம் ஒத்து வராது என்பதை உணர்ந்து, நான்காவது வாரத்தில் இருந்து அவர்கள் செய்யும் ஒவ்வொன்றையும் நாம் செய்த தவறுக்கான தண்டனையாகப் பார்க்க ஆரம்பிப்போம். அதிக பட்சம் அடுத்த ஒரு மாதத்தில், ஆள் வைத்து வேலை வாங்கும் அளவுக்கு நமக்குத் தாட்டியம் பற்றாது என்று ஒரு மனதாக முடிவு செய்து, அது முதல் என்றுமே வாழ்க்கையில் வேலைக்கு ஆள் வைத்துக் கொள்ள மாட்டோம் என்று சூளுரைக்க வைத்து விடுவார்கள்.

நல்ல பணிப்பெண்கள் கிடைத்த பலரும் அவர்களை எத்தனை வருடங்கள் ஆனாலும் விடாமல் பற்றி வைத்துக் கொண்டிருக்கும் கதைகளும் பல கேள்விப் பட்டோம். அந்த யோகம் நமக்கில்லை. என்ன செய்ய?! போகட்டும். நல்லதுதான் ஒரு வகையில். அவர்கள் நல்லவர்களாக இருப்பதும் இல்லாததும் நம் கையில்தான் இருக்கிறது என்றும் சில நல்லவர்கள் விளக்கம் கொடுக்கிறார்கள். சரியாகத்தான் படுகிறது. அலுவலகத்தில் வேலையில் சேர்ந்த முதற் சில மாதங்கள் மாங்கு மாங்கென்று உழைத்து விட்டு அல்லது அப்படி நடித்து விட்டு அடுத்து நம் வேலையைக் காட்டுவது இல்லையா?! அது போலத்தான் இதுவும். இது உலகப் பிரச்சனை. உலகத் தொழிலாளர்கள் எல்லோருக்கு எதிராகவும் அவர்களுடைய தின்று கொழுத்த முதலாளிகள் வைக்கும் குற்றச்சாட்டு! ஆகையால், அந்தச் சுழலுக்குள் சிக்காமல் மாட்டிக் கொள்வது ஒன்றே தொழிலாளர் இனத்தின் தொடர் ஆதரவாளனாக நாம் இருப்பதற்கான வழி!

வியப்புகள் தொடரும்...

கருத்துகள்

 1. சிங்கை பற்றிய பதிவு அருமை!! நானும் அங்கு சில காலம் (7 வருடங்கள்) வாழ்ந்தவன் என்கிற வகையில் தாங்கள் அவதானித்த அனைத்து விடயங்களூம் உண்மை, அப்படிச்சொல்வதை விட கிட்டத்தட்ட ஒரு சாதாரண மனிதனின் தினசரி வாழ்க்கை பற்றிய அனைத்து விடயங்களையும் கூர்ந்து பார்த்து அவதானித்து பொறுமையாக தங்கள் கருத்துக்களை பதிவு செய்திருக்கிறீர்கள்.

  எனக்கும் எனது எண்ணங்களை, குறிப்பாக சிங்கை, மலேயா பற்றி நான் பார்த்து ரசித்ததை, வியந்ததை எழுத வேண்டும் என நிறைய நாட்களாக ஒரு உந்துதல் இருந்தது. இன்று உங்கள் பதிவைப் படித்ததும் எனக்கு ஒரு ஊக்கம் கிட்டியது.

  என் கருத்துக்களை என் பாணியில் எழுத விழைந்துள்ளேன். நன்றி. நல்ல பதிவு!!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மிக்க நன்றி, சிங்கை சிவா அவர்களே. ஏழு வருடங்கள் என்பது சில காலம் அல்ல. அது ஒரு புத்தகமே போடும் அளவுக்குப் பெரும் காலம். :)

   சிங்கை மற்றும் மலேயா பற்றிய தங்கள் கட்டுரை ஆரம்பம் ஆகியிருக்கும் என நினைக்கிறேன். வாழ்த்துக்கள். முடித்த பின் சொல்லுங்கள். வாசித்து மகிழலாம்.

   நீக்கு

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

சாம, தான, பேத, தண்டம்

உயர் தனிச் செம்மொழி?!

யுவால் நோவா ஹராரி: “21-ஆம் நூற்றாண்டுக்கான 21 பாடங்கள்” | கூகுள் உரையாடல்கள்