கலாச்சார வியப்புகள் - மீண்டும் இங்கிலாந்து - 5/9

கலாச்சார அதிர்ச்சி (CULTURE SHOCK) என்றொரு சொல்லாடல் இருக்கிறதே ஆங்கிலத்தில். அது போல இது கலாச்சார வியப்புகள் (CULTURE SURPRISES). கலாச்சார வியப்புகள் என்பது என் பயணக் கட்டுரைகள் மற்றும் வேறுபட்ட கலாச்சாரத்தவருடனான பழக்கக் கட்டுரைகள். புதிதாக நான் போய் இறங்கும் ஊர்களைப் பற்றியும் இதில் நிறைய வரும். எனவே, இதில் நான் பேசும் விஷயங்கள் எல்லாமே கலாச்சாரம் பற்றியதாகவே இருக்கும் என்று எதிர் பார்க்க வேண்டியதில்லை. எனக்குப் புதிதாகப் பட்ட எல்லாமே இதில் வரும். பொறுத்தருள்க!

வியப்புகள் தொடர்கின்றன...


இலண்டனில் மற்றவர்கள்


எந்தப் பெருநகரமும் அது கிராமமாக இருந்த காலத்தில் இருந்து இருப்போர் மட்டுமே கொண்டு இருப்பதில்லை. எல்லோரும் உள்ளே வருவதால்தான் அது நகரமாகிறது - பெருநகரமாகிறது. எல்லோரும் சேர்ந்துதான் ஒரு பெருநகரத்தைக் கட்டியெழுப்புகிறார்கள். எந்த நகரத்திலும் வெளியோர் வந்து எடுத்துக் கொண்டு மட்டும் ஓடிவிடுவதில்லை. தம் உழைப்பையும் திறமைகளையும் கொடுத்துத்தான் பதிலுக்கு எடுத்துக் கொள்கிறார்கள். அதற்கு இலண்டனும் விதிவிலக்கல்ல. இன்னும் சொல்லப் போனால், வெள்ளைக்காரர்கள் எங்கெல்லாம் போய் கொள்ளையடித்து விட்டு வந்தார்களோ அங்கிருந்து அவர்களால் செய்ய முடியாத வேலைகளைச் செய்ய ஆட்களையும் கொள்ளையடித்துக் கொண்டு வந்தார்கள். அதில் மிக முக்கியமான ஒன்று, அவர்களுடைய இராணுவத்தில் பணிபுரிய, இன்றைய பாகிஸ்தான் உள்ளிட்ட அன்றைய இந்தியாவில் இருந்து ஏராளமான ஆட்களை அழைத்துக் கொண்டு சென்றார்கள். அப்படித்தான் இங்கிலாந்தில் வெளி நாட்டவர்களின் - இந்தியர்களின் (இந்தியர் என்று சொல்லும் போதெல்லாம் இந்தியத் துணைக்கண்டத்தவர் என்று கொள்க) இருப்புக் கூடியது. அப்படிச் சென்றவர்களை வைத்து அவர்களைச் சார்ந்தோர் குடியேறினர். அப்படியே கூடியதுதான் கூட்டம். இன்று மொத்த இலண்டன் மக்கட்தொகையில் மூன்றில் ஒருவர் இந்திய-பாகிஸ்தானிய வம்சாவழியினர் என்கிறார்கள்.

சில குறிப்பிட்ட பகுதிகளில் இந்தியர்கள் குவிந்திருக்கிறார்கள். இதுவும் எல்லா ஊர்களிலும் இருக்கிற பழக்கந்தானே! வெளிப் பண்பாட்டினர் ஒன்று கூடி இருப்பதில் ஒரு கூடுதலான பாதுகாப்புணர்ச்சி கிடைக்கும். அதனால் அப்படி இருக்கிறார்கள். உள்ளூர்க்காரர்களுக்கு அதைக் கண்டால் பற்றிக் கொண்டு வரும். சென்னையில் சௌகார்பேட்டை முழுக்க மார்வாடிகள் ஒன்று கூடி இருக்கிறார்கள். பெங்களூரில் அல்சூர் முழுக்கத் தமிழர்கள் ஒன்று கூடி இருக்கிறார்கள். அது போல ஒவ்வொரு பெருநகரத்திலும் குறிப்பிட்ட சில பகுதிகள் இருக்கின்றன. அது போல, இலண்டனில் இருக்கிற பகுதிகள் பல.

அவை எல்லாவற்றிலும் தலையாய இடம் சௌத்தால் (SOUTHALL) எனப்படும் பஞ்சாபி-சீக்கியர்களின் இடம். பாகிஸ்தானியரும் அதிகம் உண்டு. சௌத்தால் இரயில் நிலையத்தில் இறங்கியவுடன் 'சௌத்தால்' என்று பஞ்சாபியில் எழுதியிருப்பதைப் பார்க்கலாமாம் (நான் இன்னும் போனதில்லை). இங்கிலாந்தில் இந்திய மொழி ஒன்றில் எழுதப்பட்டிருக்கும் ஒரே இரயில் நிலையம் இதுதான் என்பார்கள். வெளியில் நமக்கு வேண்டிய மாதிரி நம் மொழியில் பலகை வைத்துக் கொண்டு நம் மொழியை வளர்ப்பது வேறு. அரசாங்கமே ஒரு மொழியை அங்கீகரித்து அதைச் செய்வது வேறு. இது அரசாங்கமே பஞ்சாபியரின் இருப்பை மதித்து மரியாதை செய்ததன் அடையாளம். முதன் முதலில் பிரிட்டிஷ் இராணுவத்துக்குச் சென்ற இந்தியர்கள் உருவாக்கிய பகுதி என்கிறார்கள். உள்ளே நடமாடும் போது ஒருத்தர் கூட வெள்ளையரைக் காண முடியாதாம். முழுக்க முழுக்க இந்தியா போலவே இருக்கும் என்கிறார்கள். இந்திய வம்சாவழியினரைத் தம்மில் ஓர் அங்கமாக ஏற்றுக் கொண்டு விட்டது போலவே, இந்து-முஸ்லிம்-சீக்கியர் என்று மும்மதத்தினரையும் தம்மோடு ஐக்கியமாகிக் கொள்ள அனுமதித்திருக்கிறார்கள். குறிப்பாக சீக்கியர்கள் மீது வெள்ளையர்கள் நல்ல மரியாதை கொண்டிருப்பது போல் தெரிகிறது.

பஞ்சாபி என்பது இந்தியரிலும் உண்டு - பாகிஸ்தானியரிலும் உண்டு. குஜராத்தி என்பதில் இந்தியரும் உண்டு - பாகிஸ்தானியரும் உண்டு (ஜின்னாவே குஜராத்தி என்றுதானே சொல்கிறார்கள்!). இவையெல்லாம் எல்லையோர மாநிலங்கள். இந்தியா போல இல்லாவிட்டாலும் பாகிஸ்தானிலும் பல மொழிகள் இருந்திருக்கின்றன. அதையெல்லாம் உருது கொன்று விட்டதாகச் சொல்கிறார்கள். எனக்கொரு பாகிஸ்தான் பஞ்சாபிய நண்பன் இருக்கிறான். அவனுடைய தாத்தா பிரிட்டிஷ் இராணுவத்தில் பணி புரியச் சென்றவராம். அவர் இங்கிலாந்து செல்லும் போது இந்தியர் - பஞ்சாபி. இன்று அவர்கள் குடும்பம் பாகிஸ்தானிய - உருதுக் குடும்பம். இங்கே எப்படி இந்தி பேசினால்தான் இந்தியன் என்று ஒரு முட்டாள் கூட்டம் சொல்கிறதோ அது போல அங்கும் அப்படியொரு நெருக்கடி இருந்திருக்கிறது. மற்ற மொழி பேசிய மக்கள் எல்லோருமே அடுத்த தலைமுறையை உருது பேசியே வளரும்படிப் பார்த்துக் கொள்ள நேர்ந்திருக்கிறது. இந்தியா இந்தியா என்பதால் இந்தித் திணிப்பு பெரிதாக வெற்றி பெற முடியவில்லை. பாகிஸ்தான் பாகிஸ்தான் என்பதால் உருதுத் திணிப்பு வெற்றி பெற்று விட்டது. இதில் கொடுமை என்னவென்றால், என் நண்பனின் தாத்தா பாகிஸ்தானில் கூட இருக்கவில்லை. நாட்டைவிட்டே போய்விட்ட பின்னும் தம் மக்கள் எல்லோரும் எப்படி இருக்கிறார்களோ அப்படியே தன்னையும் மாற்றிக் கொண்டு தம் சந்ததியரையும் அப்படியே மாற்றி விட்டாராம். அதனால்தான் இன்றும் அவர்களால் தம் நாட்டோடு தொடர்பில் இருக்க முடிகிறது. இங்கிலாந்து-பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டிகளின் போது பாகிஸ்தானையே அவன் ஆதரிக்கிறான். இங்கிலாந்து-இந்தியப் போட்டிகளின் போது இந்தியக் குழந்தைகளும் இந்தியாவையே ஆதரிக்கிறார்கள். இங்கிருந்து போனவர்கள் மாறாமல் இருப்பதல்ல பெரிது. பல தலைமுறைகளுக்குப் பிறகும் அவர்களின் பிள்ளைகளும் பேரப் பிள்ளைகளும் அப்படியே தொடர்வதும், அதை மண்ணின் மைந்தர்கள் பெரிதாக எடுத்துக் கொண்டு அவர்கள் மீது தேசத் துரோகக் குற்றம் சாட்டாமல் இருப்பதும் பெரிதுதானே! அதுதானே உயர்ந்த பண்பாடு. அதே வேளையில் அவர்கள் தம் இங்கிலாந்து மீதான அன்பில் எந்த வகையிலும் குறை வைப்பதில்லை. தம்மை எப்போதும் அந்த மண்ணின் மைந்தர்களுள் ஒருவராகவே அடையாளம் காட்டியும் கொள்கிறார்கள். இது ஒரு சுவாரசியமான விசயம்.

அடுத்தது ஈஸ்ட் ஹாம் (EAST HAM) எனப்படும் பகுதி. நம் மொழியில் சொல்வதானால் கீழப்பட்டி என்று சொல்லலாம்! பெரும்பாலும் தமிழர் நிறைந்த பகுதி. இந்திய - ஈழத் தமிழர் இரு சாராரும் உண்டு இங்கே. மற்ற இந்திய-பாகிஸ்தானிய-வங்க தேசத்தவரும் உண்டு. இங்கும் ஓரிரு வெள்ளையரைக் கூடப் பார்க்க முடிவதில்லை. ஓரிரு நாட்கள் அங்கே போயிருக்கிறேன். வெள்ளைக்காரர்களைப் பொருத்த மட்டில், நம்மவர்கள் நாசம் செய்த பகுதி என்றும் சொல்வார்கள். இட்லி-தோசை-சாம்பார் சாதம் எல்லாம் அளவில்லாமல் கிடைக்கும் இடம். முருகன் கோயில் இருக்கிறது.

துணைக்கண்டத்தவர் அனைவரும் பெரும்பாலும் ஒற்றுமையாகவே இருக்கிறார்கள். பாகிஸ்தானியரும் வங்க தேசத்தவரும் நடத்தும் கடைகளில் கூட இந்திய உணவகம் என்றுதான் எழுதியிருக்கிறார்கள். இங்கேதான் நாயும் பூனையும் போல அடித்துக் கொண்டு சாகிறோம் (இதற்கே, "யார் நாய்? யார் பூனை?" என்று கூட யாராவது சண்டை கிளப்ப முயலக் கூடும்).

அது போலவே, வங்க தேசத்தவர் எவரும் தன்னை நாம் இங்கே சொல்வது போல வங்கதேசர் (BANGLADESHI) என்று சொல்லிக் கொள்வதில்லை. அவர்கள் அனைவருமே மேற்கு வங்கத்தில் இருந்து வந்த வங்காளியர் போலவே தம்மை வங்காளி (BENGALI) என்றே அறிமுகப் படுத்திக் கொள்கிறார்கள். அதுதானே அவர்களின் இனத்தின் சரியான பெயர். நாடுகள் என்பவை மனிதன் மிகச் சமீபத்தில் கண்டுபிடித்தவைதானே. அதையே இரண்டு இந்தியர்கள் இரண்டு விதமாகப் பார்க்கக் கூடும். நம்மைப் போன்றவர்கள் அதைக் கண்டு மகிழ்கிறோம். வேறு சிலரோ அதிலும் கோளாறு காண்கிறார்கள். "அவர்கள் வேறு. வங்காளியர் வேறு. அவர்கள் எப்படித் தன்னை வங்காளி என்றோ இந்தியன் என்றோ சொல்லிக் கொள்ள முடியும். அவர்கள் தம்மை வங்கதேசன் என்றுதான் சொல்லிக்கொள்ள வேண்டும்!" என்று சொல்கிறார்கள்.

அது போல, ஈழத் தமிழர் நிறையப் பேர் நம்மைத் தமிழராகப் பார்க்கிறார்கள். மொழி கேட்பதற்கு சிறிது வேறு மாதிரி இருப்பினும் தமிழிலேயே பேசுகிறார்கள். சிலர் இந்தியராகப் பார்த்து ஆங்கிலத்திலேயே பேசுகிறார்கள். தமிழில் பேசுவதை விரும்புவதில்லை. அதற்குப் பல காரணங்கள் இருக்கலாம். நீண்ட காலம் முன்பே சென்று குடியேறி விட்டவர்களாக இருக்கக் கூடும் என நினைக்கிறேன். ஆங்கிலத்தில் பேசும் போது அவர்கள் தம்மை இலங்கையர் (SRILANKAN) என்றே அடையாளப் படுத்திக் கொள்கிறார்கள். இப்போதைக்கு அதுதானே சரி. நமக்குத்தான் ஏனோ அப்படி அவர்கள் சொல்வதைக் கேட்கும் போதே ஏதோ விதமாகப் படுகிறது. 'ஈழம்' அல்லது 'தமிழ்' என்கிற சொல்லை வெளியாரிடம் சொல்லிப் பேசும் அளவுக்கு இன்னும் காலம் கனியவில்லை போலவே தெரிகிறது.

நாங்கள் இருக்கும் இடம் க்ராய்டன். இங்கும் இந்தியரும் ஈழத் தமிழரும் அதிகம். ஈஸ்ட் ஹாம் அளவுக்கு இல்லை. ஓரளவுக்கு. இது போல வெம்ப்ளி என்றொரு இடம் உண்டு. அங்கு முழுக்க குஜராத்தியர் அதிகம். அங்கொரு பணக்காரக் கோயில் இருப்பதாகவும் கேள்விப் பட்டேன். இன்னும் போனதில்லை. இந்தியர் பகுதி என்றால் அங்கொரு கோயில் இருக்கும். உலகம் முழுக்க அதுதானே!

பெரும்பாலும் வெளியார் வருகையை ஏற்றுக் கொள்கிற பரந்த பண்பாடாகத்தான் வெள்ளையர் பண்பாடு இருக்கிறது. ஆனால் அடி மட்டத்தில் மக்கள் மத்தியில் சிற்சில பிரச்சனைகள் இருக்கக் கூடும்தான். தனித் தமிழ் இயக்கம் போல, "தமிழ்நாடு தமிழருக்கே" என்பது போல, அங்கும் ஒரு சாரார் வெளியார் குடியேற்றத்தைக் கடுமையாக எதிர்க்கிறார்கள். வெளியார் வருகையால் அவர்களுக்கு ஏற்பட்டிருக்கும் நெருக்கடிகள் பற்றி அவ்வப்போது எழுதவும் பேசவும் செய்கிறார்கள். வெளியார் கொண்டு வந்து இறக்கியிருக்கும் பாதுகாப்புப் பிரச்சனைகள் பற்றி அதிகம் விவாதிக்கப் படுகிறது. வெள்ளைக்காரர்களின் வாழ்க்கை முறையைக் கண்டு கட்டுண்டு அவர்களைப் போலவே உடையையும் நடைமுறைகளையும் காட்டிக் கொண்டு நுழைகிறவர்கள், பின்னாளில் தம் சொந்த ஊரில் இருந்தால் இருப்பதை விடக் கூடுதலாகத் தம் அடையாளங்களைக் காட்டிக் கொள்வதைப் பற்றியும் - அவர்களுடைய கண் உறுத்துகிற மாதிரி வாழ்கிற வாழ்க்கை முறைகள் பற்றியும் ஒரு சிலருக்கு வருத்தம் இருக்கிறது. "உங்கள் நாட்டில் நாங்கள் வந்து இப்படி வாழ முடியுமா?" என்று கேட்கிறார்கள். ஆங்கிலேயர் நாட்டுத் தலைநகரில் "இது ஆங்கிலேயர் பகுதி" என்று சொல்லும் அளவுக்குப் பகுதிகள் உருவாவது எப்படி வலிக்காமல் இருக்கும்?! இயல்புதானே! 'நம் முன்னோர்கள் போய் உலகம் முழுவதும் மேய்ந்ததற்கான தண்டனையை நாம் அனுபவிக்கிறோம்!' என்று சமாதானம் சொல்லிக் கொள்வோரும் இருக்கிறார்கள். மாற்று பண்பாட்டினர் கலந்து உருவாகும் ஊர்களில் இருக்கும் பெரும் பிரச்சனை - இவர்களும் அவர்களும் கலந்து இரண்டின் நன்மைகளும் கூடிப் பெருகி வாழ்க்கை இருவருக்கும் மென்மேலும் சுகமானால் நன்றாக இருக்கும். அதை விடுத்து, 'உனக்கென்று ஒரு பகுதியை உருவாக்கி நீ உன்னைப் போலவே வாழ்வாய்; எனக்கென்று இருக்கும் பகுதியில் இருந்து கொண்டு நான் என்னைப் போலவே வாழ்வேன்!' என்று வாழ்கிற வாழ்க்கை எப்படியும் கசந்துதானே தீரும் ஒரு நாள்!

வியப்புகள் தொடரும்...

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

சாம, தான, பேத, தண்டம்

உயர் தனிச் செம்மொழி?!

யுவால் நோவா ஹராரி: “21-ஆம் நூற்றாண்டுக்கான 21 பாடங்கள்” | கூகுள் உரையாடல்கள்