கடிதக் கிறுக்கு
பெங்களூர் வருவதற்கு முன்பு வரை கடிதம் எழுதும் பழக்கம் கடுமையாக இருந்தது. கடிதத்தையும் எழுதிவிட்டு, அதை நாட்குறிப்பிலும் ஏற்றி விடுவேன். இன்னின்னார்க்கு இன்று கடிதம் எழுதினேன் என்று. கிட்டத்தட்ட இரண்டு-மூன்று நாட்களுக்கு ஒருமுறை கடிதமும் பேனாவுமாக உட்கார்ந்து விடுவேன். நமக்குத்தான் படிப்பதைத் தவிர எல்லாம் பிடிக்குமே. அதனால் படிக்க வேண்டிய காலத்தில் அதில் இருந்து தப்பித்துக் கொள்ள வைத்திருந்த டெக்னிக்குகளில் இதுவும் ஒன்றாக இருந்தது. வேலைக் கிறுக்கு பிடித்த பின் கடிதம் எழுதுதல் மெது-மெதுவாகக் குறைந்து போய் விட்டது. அத்தோடு சேர்ந்து மின்னஞ்சல் வேறு வந்து அதற்கான தேவையை இல்லாமலே செய்து விட்டது. அப்புறம்தான் எதுவாக இருந்தாலும் அப்போதே பேசித் தீர்த்துக் கொள்ள வசதியாக 'செல்'லப்பன் வந்து விட்டானே!
இந்தப் பழக்கம் எப்போது ஆரம்பித்தது என்று பார்த்தால், அது பள்ளிப் பருவத்திலேயே ஆரம்பித்து விட்டது. உறவினர்களோடும் நண்பர்களோடும் தொடர்ந்து தொடர்பில் இருப்பது ஒரு பெரிய நற்பண்பாகவும் வெற்றி பெற்றவர்களில் பழக்கமாகவும் மனதில் பதிந்து விட்டதன் விளைவு. காந்தி கடிதம் எழுதுவார், நேரு கடிதம் எழுதுவார், அவர்கள் வழியில் விடுதலைப் போரில் இறங்கிப் போராடிய என் தாத்தா நிறையக் கடிதங்கள் எழுதுவார், அவர் வழியில் அரசியல் வாழ்வில் ஈடுபட்ட, சென்னையில் இருந்த என் சித்தப்பாமார் சிலர் தொடர்ந்து கடிதங்கள் எழுதுவர் என்பதையெல்லாம் படித்தும், கேள்விப்பட்டும், பார்த்தும் அதில் ஓர் அதீத நாட்டம் உருவாகி இருந்தது. நேரு அவருடைய மகளுக்கு எழுதிய கடிதங்கள் இந்த நாட்டுக்கு எவ்வளவு வரலாற்று முக்கியமோ, அவ்வளவு முக்கியமாக என் தாத்தா அவருடைய காலத்தில் பலருக்கு எழுதிய கடிதங்கள் எங்கள் குடும்பத்தில் பேசப்படுவதைத் திரும்பத் திரும்பக் கேட்டு வளர்ந்தேன்.
பெரும் பெரும் குடும்பப் பிரச்சனைகள் பற்றிப் பேசும்போதெல்லாம் அப்பிரச்சனைகளின் போதெல்லாம் அவர் பலருக்கும் பக்கம் பக்கமாக வரைந்த கடிதங்கள் பற்றியும் பேசுவார்கள். அதிலும் ஒரே கடிதத்தை கார்பன் பேப்பர் வைத்து எழுதி, பல நகல்கள் எடுத்து, உரியவருக்கு முக்கியப் பிரதியையும், நியாயத்தை உணர வேண்டிய மற்றவர்களுக்கு நகல்களையும் அனுப்பி வைப்பாராம். அதிலும் கடைசியில் கையெழுத்துக்குக் கீழே "நகல்: இன்னின்னார்க்கு..." என்று எழுதியும் விடுவாராம். கடிதத்தைப் படித்து முடித்து விட்டுக் கிழித்துப் போட்டாலும் அத்தோடு ஒழிந்தது தொல்லை என்று ஆசுவாசப் பட முடியாது. மற்றவர்களிடம் நகல் இருக்கும். என்றைக்கிருந்தாலும் அதைப் பற்றிப் பேச்சு வரும். நகல்கூட வெளிக் கிளம்பி வரும். நேரில் பிரச்சனை என்றாலும் கூட கிளம்பிப் போய் வெளியூரில் உட்கார்ந்து கொண்டு கோபக் கனலைக் கடிதத்தில் கொட்டி அனுப்புவது வசதியான ஓர் ஆப்சனாகப் படுகிறது, இல்லையா?!
இதோடு சேர்ந்து, ஆண்டுக்கொரு முறை இன்னொரு வேலையும் நடக்கும். பொங்கல் வந்து விட்டால், உற்றார்-உறாதார்-உறவினர் என்று அனைவருக்கும் பொங்கல் வாழ்த்து அனுப்புவது. நெல்லுக்கு இறைக்கிற நீரில் கொஞ்சத்தைப் புல்லுக்கும் புழுதிக்கும் திருப்பி விட்டுக் கொள்ளும் சிவகாசிக்காரர்களின் சூட்சுமங்களில் இதுவும் ஒன்று. தீபாவளி-பொங்கலின் பேரைச் சொல்லி, கொண்டாட்டங்களை மேலும் குதூகலமாக்க வெளிநாடுகளில் இருந்து கற்றுக் கொண்டு வந்த திட்டங்களில் ஒன்று. நாலணாவுக்கு ஓர் அட்டையை வாங்கி, ஏற்கனவே அதில் எழுதப் பட்டிருக்கும் லொட்டைக் கவிதையோடு சேர்த்து அதைவிடவும் சிறப்பாக ஏதாவது எழுத முயன்று, தோல்வியுற்று, அதை அஞ்சல் செய்தால், அடுத்த கலியாணத்திலோ-காது குத்திலோ பார்த்துப் பெருமைப் படும் உறவினர்களின் மகிழ்ச்சிக்கு அடிமைப் பட்டுத் தொடர்ந்த பழக்கம், அத்தோடு நிற்காது. வகுப்பறையில் பக்கத்து இருக்கையில் இருக்கும் நண்பனுக்கு, அவனையே உடன் அழைத்துச் சென்று, அவனுக்குப் பிடித்த மாதிரியான அட்டையை அவனையே தேர்ந்தெடுக்க வைத்து, அவன் முன்பாகவே அத்தனையையும் கிறுக்கி, மீண்டும் அவனையே அஞ்சல் அலுவலகம் வரை அழைத்துச் சென்று, அனுப்பி விட்டு வந்து, வந்து சேர்ந்து விட்டதை அவன் உறுதி செய்யும் வரை காத்திருக்கும் - ஒவ்வொரு நாளும் விசாரிக்கும் சுகம்... அப்பப்பா!
அப்புறம், "அந்த அட்டையில் சொன்னால்தான் வாழ்த்தா? அதைவிடக் குறைவான காசுக்கு அரசாங்கமே விற்கும் அஞ்சல் அட்டையில் அழகாகப் படம் வரைந்து நானே கிறுக்கி அனுப்பினால் அது வாழ்த்தாகாதா?!" என்று கேள்வி கேட்டு, பயக்கத்தில் - பண்பாட்டில் சிறிய மாற்றம் ஏற்பட்டது. அப்புறம் விழாக்களுக்கு வாழ்த்துச் சொல்வதே பண்பாட்டுக்கு எதிரானது என்று எண்ணி (என்னத்தையாவது மாற்றி மாற்றி யோசித்துக் குழம்பிக் குட்டையை நாறடித்தால்தானே அறிவாளி!) அதை முழுக்கவே விட்டு விட்ட பின்பும் கடிதம் எழுதுவது மட்டும் தொடர்ந்தது. பதினொன்றாம் வகுப்பு முதல் விடுதி வாழ்க்கை என்பதால், அது மேலும் உக்கிரமடைந்தது. எழுதுவதற்குப் புதிதாக நிறைய நேரமும் பழைய நண்பர்களும் இருந்தார்கள். அடுத்துக் கல்லூரி வாழ்க்கையும் விடுதியில். கூடுதல் நேரம். கூடுதல் நண்பர்கள்.
எல்லோருமே ஆட்டோக்ராப் வாங்குவார்கள்; அடிக்கடிக் கடிதம் போட்டுக் கொள்ள வேண்டும் என்று பேசிக் கொள்வார்கள்; ஆனால், கொஞ்சம் கொஞ்சமாக எல்லாம் மங்கிப் போய்விடும். மாறாக, அதெப்படி அப்படியெல்லாம் விடலாம் என்று விடாப்பிடியாகத் தொடர முயன்ற சில வேலையற்ற வீணர்களில் ஒருவனாக இருப்பதைப் பெரும் நற்பண்பாகக் கருதினேன். கொடுமை என்னவென்றால், உடனிருக்கும் போது நம்மைப் பெரிதாக மதிக்காத-நன்றாகப் பழகியிராத பல நண்பர்கள் கூட, பிரிவுக்குப் பின்பு, நம்முடைய விடாமுயற்சிக்காகவும் அவர்களுக்குக் கொடுக்கப்படும் முக்கியத்துவத்துக்காகவும் மனமிளகி நெருங்கிய நண்பர்கள் ஆகி விடுவார்கள். அருப்புக்கோட்டையில் ஓராண்டு மட்டும் என்னோடு படித்து இடையிலேயே பிரிந்து சென்ற இராமநாதபுரத்து நண்பன் ரஜினி அப்படியோர் ஆள். அது போலவே கல்லூரியிலும் ஓராண்டு மட்டும் உடன் இருந்து விட்டு காவற் துறையில் வேலை கிடைத்து இடையில் பிரிந்து டெல்லி சென்ற, வல்லநாட்டுப் பக்கம் இருந்து வந்த முத்துமாரியப்பன் இன்னோர் ஆள். இருவரோடுமே ஒரு சில ஆண்டுகள் மட்டும்தான் தொடர்பு தொடர்ந்தது. இப்போது எங்கிருக்கிறார்களோ தெரியவில்லை.
இணையத்தில் உரையாடும் வசதி (CHATTING) வந்த காலத்தில், இணைய வசதி இருந்த முக்கால்வாசிப்பேர் தெரியாத பெண்களிடம் தொடர்பு உண்டாக்கிக் கொண்டு பேசியே கரெக்ட் பண்ணும் வேலைகளில் மும்முரமாக இருப்பார்கள். சுற்றிலும் நன்கு தெரிந்தவர்கள் அத்தனை பேர் இருந்தும் தெரியாதவர்களிடம் போய் முயன்று பார்க்கிற அந்த விசித்திரத்தின் பின்னணி என்ன என்று குழம்புவேன். அதில் ஒரு சுதந்திரம். தான் தானாக இருக்க வேண்டிய கட்டாயமின்மை. கெட்டாலும் வெளியே தெரியாமல் மேன்மக்களாகவே வாழ்ந்து விட்டுப் போய் விடலாம். அது ஒருபுறம் என்றால், அந்நியர்களோடு தொடர்பு வைத்துக் கொள்வதில் ஒருவித சுகம் இருக்கிறது சிலருக்கு. இப்போதும் சமூக வலைத்தளங்களில் அதை மட்டுமே மும்முரமாகச் செய்கிற ஒரு கூட்டம் இருக்கத்தான் செய்கிறது (தவறான நோக்கத்தோடுதான் அப்படிச் செய்கிறார்கள் என்று எல்லோரையும் சொல்ல முடியாதுதானே!). அப்படி அந்தக் காலத்திலும் ஒரு கூட்டம் இருந்தது. பேனா நண்பர்கள் என்று ஒரு சிறிய கூட்டம் இருந்தது. ஊருக்கு ஒன்றிரண்டு பேர் இருப்பார்கள் (இந்தப் பேனா நண்பர்கள் கருத்தாக்கத்துக்கும் லேனா தமிழ்வாணனுக்கும் ஏதோ தொடர்பு இருப்பது போலவே தோன்றுகிறது. பழைய ஆள் யாராவது அப்படி ஏதும் இருக்கிறதா என்று நினைவு படுத்துங்கள்!).எனக்குப் பேனா நண்பர்கள் அளவுக்குப் போக விருப்பம் இருந்ததில்லை (நமக்குத்தான் அன்னியபோபியா ஆச்சே!). ஆனால் தெரிந்தவர்களுக்கு மட்டும் தொடர்ந்து எழுதிக் கொண்டு வந்தேன்.
ம்ம்ம்... நினைவு வந்து விட்டது. பள்ளியில் என் உடன் படித்த நண்பன் ஒருவன் (சிவகாசி-வடமலாபுரம் தர்மபாலன்) அடிக்கடி லேனா தமிழ்வாணனுக்குக் கடிதம் எழுதிக் கொண்டே இருப்பான். அவரும் இவனுக்குச் சளைக்காமல் பதில் எழுதிக் கொண்டே இருப்பார். "நமக்கு என்ன பிரச்சனை என்றாலும் அவருக்கு எழுதலாம். அவரும் நமக்கு நல்ல ஆலோசனைகள் வழங்குவார்!" என்று வேறு சொன்னான். நமக்கு அந்த அளவுக்குப் பிரச்சனைகள் இல்லாததால் அதிலும் இறங்கவில்லை. ஆனால் நண்பர்களுக்குள் நிறையப் பிரச்சனைகளைப் பகிர்ந்து கொள்வோம். பல நேரங்களில் அருகில் இருக்கிற யாராலும் கொடுக்க முடியாத நமக்கு வேண்டிய உந்துசக்தியை தொலைவில் இருக்கிற யாரோ ஒருவரிடம் இருந்து வரும் ஒரு கடிதம் கொடுத்துவிடும். அப்படியும் பல கதைகள் உண்டு. பெங்களூர் வந்த பின்பு கல்லூரி நண்பன் நாதனுக்கு எழுதிய கடிதம் ஒன்று அவனுக்கு அப்படியான ஒரு வேலையைச் செய்ததாக அவன் சொன்னதும் மகிழ்ந்ததும் இன்னமும் நினைவிருக்கிறது.
பொங்கல் வாழ்த்தில் இருக்கிற கவிதைக்குப் போட்டியாகக் கவிதை எழுதுகிற சவாலைப் போலவே, இந்தக் கடிதங்கள் எழுதுவதிலும் ஒரு சுய-இன்பம் இருந்தது. அந்தக் கடிதங்களில் வார்த்தை விளையாட்டுகள் செய்து, அடுக்கு மொழிகளில் எழுதி, தத்துவங்கள் என்று எண்ணிக் கொண்டு பக்குவமில்லாமல் எதையாவது கிறுக்கித் தள்ளி, ஏதோ பெரிய வெங்காயம் போல உணர்ந்து நம்மை நாமே தட்டிக் கொடுத்துக் கொள்ளும் வாய்ப்பை இந்தக் கடிதம் எழுதும் பழக்கம் கொடுத்தது.
அது மட்டுமில்லாமல், எந்த ஊருக்குச் சென்றாலும், அங்கே செல்லும் முன் அங்கேயிருக்கிற உற்றார்-உறவினர் அனைவருக்கும் கடிதம் எழுதிச் சொல்லி விட வேண்டும். இப்போது "கால் பண்ணிட்டு வா!" என்கிறார்களே, அது மாதிரித்தான். கடிதம் எழுதிச் சொல்வது போலவே, சொன்ன நாளில் போய் நிற்க வேண்டும். அவர்கள் வேலையைப் போட்டு விட்டு எங்கும் போகாமல் உட்கார்ந்திருப்பார்கள். அப்படிப் போய்ச் சேராவிட்டால், வேலையைப் போட்டு உட்கார்ந்திருந்தவருக்குப் பயம் தொற்றிக் கொள்ளும். என்னானதோ ஏதானதோ என்று. சொன்னபடிப் போய் நிற்பது ஒன்றும் அவ்வளவு சிரமம் இல்லை அப்போது. இப்போது போலத் திடீரெனெ வருகிற எதிர் பாராத வேலை வெட்டிகளோ வெட்டி வேலைகளோ அதிகம் இல்லாத காலம் அது (நேற்றுப் பெய்த மழையில் இன்னைக்கு முளைத்த காளான், "அந்தக் காலம்", "அந்தக் காலம்" என்று பேசுவது கொஞ்சம் வேடிக்கையாகத்தான் இருக்கிறது!). ஏதோவொரு வெளியூருக்குப் போனால் அங்கிருக்கிற நம் ஆட்கள் எல்லோரையும் பார்த்து விட்டு வரவேண்டும் என்கிற பண்பாடுதான் இப்போது குறைந்து வருகிறதே. அதுவும் ஒரு வகையில் நல்லதுதானே. அதை ஓர் மனமகிழ்வாகச் செய்தார்கள் அப்போது. இருசாராருக்குமே (குறைந்த பட்சம் ஒரு சாராருக்கு) அது ஒரு பெரிய தொல்லையாகப் போய் விடுகிறது இப்போது. 'உள்ள வேலைக்கே நேரமில்லை. இதில் இது வேறயா?' என்று புலம்ப வைத்து விடுகிறது.
இது மட்டுமில்லாமல், கொரியர்க் கம்பெனிகள் வந்து வேறு இந்திய அஞ்சற் துறையைத் தேவையில்லாததாக ஆக்கி, அங்கே பணிபுரிகிற நம் உறவினர்கள் - நண்பர்கள் அனைவரும் எவ்வளவு கறி வலித்துப் போய் இருக்கிறார்கள் என்பதை நமக்கு உணர்த்தியும் விட்டன. அத்தோடு அஞ்சல் அலுவலகங்களைக் கண்டாலே முகத்தைத் திருப்பிக் கொண்டு நடக்கிற பண்பாடு வந்து விட்டது. அந்த நேரத்தில்தான் வீட்டுக்கொரு தொலைபேசி வர ஆரம்பித்துக் கொண்டிருந்தது. குறைந்த பட்சம் கையில் ஓரளவு காசு இருக்கிற அளவுக்கு வசதியாகவும் விபரமாகவும் வாழ்ந்த வீடுகளில் தொலைபேசி வர ஆரம்பித்தது. "வந்து சேர்ந்துட்டேன். கடிதம் போடுறேன்!" என்று தந்தி அடிப்பது போலச் சுருக்கமாகப் பேச ஆரம்பித்து, தொலைபேசியின் பயன்பாட்டுக் கட்டணம் குறையக் குறைய அதன் பயன்பாடு கூடியது. அது மட்டுமில்லாமல், கொரியரில் கடிதம் அனுப்புதல் என்பது இயற்கைக்கு எதிரானதாகப் பட்டதாலும், அவ்வளவு அவசரம் என்றால் நேரில் பேசுவது போலக் குரலையே கேட்டுப் பேசிக் கொள்ளலாம் என்கிற வசதி வந்த பிறகும் எதற்குப் போட்டு எழுதிப் போராட வேண்டும் என்கிற எழுதுவதன் மீதான வெறுப்பாலும் கடிதம் எழுதுவது குறைந்தது என்றெண்ணுகிறேன். எழுத்துக் கிறுக்கு பிடித்த நம் போன்றோருக்கு அதைச் சோம்பேறித் தனம் என்று சொல்லத் தோன்றும் என்றாலும், பேசி முடிப்பதை விட எழுதி இழுப்பது கூட இயற்கைக்கு எதிரானதுதானே.
எதற்கெடுத்தாலும் அதென்ன இயற்கைக்கு எதிரானதா இல்லையா என்கிற வாதம் என்று பார்க்கிறீர்களா? ஒன்று காலம் கடந்து நிற்கிறது என்றால், நல்லதோ கெட்டதோ அது இயற்கைக்கு உகந்தது. மனிதன் தோன்றும் முன்பே தோன்றியது முழு இயற்கை, மனிதனோடு சேர்ந்து தோன்றியது இயற்கை, மனிதன் ஆதியில் கண்டுபிடித்தது அடுத்த இயற்கை, காலஞ்செல்ல காலஞ்செல்லக் கண்டுபிடித்தவையெல்லாம் கொஞ்சம் கொஞ்சமாகச் செயற்கைத் தன்மை கூடி விடுகிறவை. அந்தக் கணக்குப் படிப் பார்க்கையில் பேச்சுதானே இயற்கை! எழுத்து செயற்கைதானே! பேச்சும் பார்வையும் எழுத்தைவிட இயற்கை என்பதால்தானே திரைப்படமும் தொலைக்காட்சியும் இலக்கியத்தைவிட அதிகம் ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கிறது. அப்படித்தான் பாவம் கடிதமும் செத்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆன்மா சாந்தியடையட்டும்!
//இணையத்தில் உரையாடும் வசதி (CHATTING) வந்த காலத்தில், இணைய வசதி இருந்த முக்கால்வாசிப்பேர் தெரியாத பெண்களிடம் தொடர்பு உண்டாக்கிக் கொண்டு பேசியே கரெக்ட் பண்ணும் வேலைகளில் மும்முரமாக இருப்பார்கள்.// அண்ணா இந்தக் கட்டுரை எல்லா இடங்களிலும் என் வாழ்க்கையினையும் பிரதிபலிப்பது போன்று இருந்தாலும்.. இந்த இடம் தான் சிரிக்க வைத்து விடுகிறது.. தொடர்ந்து எழுதுங்கள் அண்ணா.. திடீரென்று உங்கள் வலைப்பூ .co.uk ஆகிவிட்டது???
பதிலளிநீக்குநன்றி, சகோ. மகிழ்ச்சியும். தொடர்ந்து எழுதத் தொடர்ந்து முயல்கிறேன். பார்க்கலாம். வாய்ப்பு வசதிகள் எப்படி அமைகின்றன என்று.
நீக்குஆமாம், பதிவரின் இடத்தைப் பொருத்து வலைப்பூ முகவரி தானாகவே மாறி விடுகிறது. சில நேரங்களில் இது பெரும் தலைவலியாகவே இருக்கிறது.
எப்படியிருக்கிறீர்கள் அண்ணா!!
பதிலளிநீக்குநலம். நலமறிய ஆவல். கூடிய விரைவில் அழைக்கிறேன். பேசுவோம்.
நீக்குவணக்கம்...
பதிலளிநீக்குவலைச்சரம் மூலம் உங்கள் தளத்திற்கு வருகை… தொடர்கிறேன்... இந்த வார வலைச்சர ஆசிரியருக்கு நன்றி...
உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...
மேலும் விவரங்களுக்கு கீழுள்ள இணைப்பை சொடுக்கவும்... நன்றி...
அறிமுகப்படுத்தியவர் : ராஜி அவர்கள்
அறிமுகப்படுத்தியவரின் தள இணைப்பு : காணாமல் போன கனவுகள்
வலைச்சர தள இணைப்பு : சொர்க்கமே என்றாலும்...
வணக்கம் தனபாலன் அவர்களே. வருகைக்கும் தகவலுக்கும் நன்றி. வலைச்சரம் ஆசிரியருக்கும் ராஜி அவர்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள். நானே என் தளத்துக்கு நீண்ட காலத்துக்குப் பின் வருகிறேன். அதற்கு உங்களுக்கு என் சிறப்பு நன்றிகள். :)
நீக்கு