வெறுப்பு விதைப்போருக்கு...

இந்த வெள்ளத்தில், தன்னால் முடிந்த பணியைத் தவிர வேறு எதையும் செய்யாமல் ஒரு கூட்டம் உழைத்துக் கொண்டிருக்கிறது. பணியையும் செய்து கொண்டு தன்னால் இயன்ற பிரச்சாரத்தையும் ஒரு கூட்டம் செய்து கொண்டிருக்கிறது. இந்தப் பேரிடரைத் தன் பிரச்சாரங்களுக்காக மட்டுமே பயன்படுத்திக் கொண்டிருக்கிறது ஒரு கூட்டம். இந்தப் பேரிடரும் அதைத் தொடர்ந்து நடந்த மீட்புப் பணியும் தன் பிரசாரங்களுக்குப் பெரும் பின்னடைவை ஏற்படுத்தப் போகிறதே என்று கலங்கிப் போய் இருக்கிறது ஒரு கூட்டம். இதற்கிடையில் நான் செய்ய வேண்டிய பிரச்சாரம் என்று ஒன்று உள்ளது. அதைச் செய்து விடுகிறேன்.

எங்கள் ஊரின் பெயர் நாகலாபுரம். நான் வளர்ந்த தெருவின் பெயர் பெருமாள் கோவில் தெரு. அங்கு அதிகம் வாழ்ந்தது முஸ்லிம் மக்கள். அந்தத் தெருவில் எங்கள் வீடு மட்டுமே முஸ்லிம் அல்லாத வீடு. அது ஒன்றே முஸ்லிம்களைப் பற்றிப் பேசுகிற உங்கள் நிறையப் பேரை விடக் கூடுதலான தகுதியை எனக்குக் கொடுக்கிறது என்பதை மறந்து விடாதீர்கள். பின்னாளில் பெருமாள் கோவிலின் இடது பக்கம் ஒரு பள்ளிவாசல் கட்டப்பட்டது. அதனால் பெருமாளுக்கும் பிரச்சனையில்லை. அல்லாவுக்கும் பிரச்சனையில்லை. ஒவ்வொரு தீபாவளிக்கும் முப்பது முஸ்லிம் வீடுகளுக்கும் பகிர்கிற அளவில் பலகாரம் சமைத்துக் கொண்டாடிய குடும்பம் எங்களுடையது. ஒவ்வொரு நோம்புக்கும் முப்பது வீட்டுப் பலகாரங்களைச் சாப்பிட்டு வளர்ந்தவன் நான். அந்த மக்கள் எங்கள் உறவினர்களைப் போல இருந்தார்கள். மார்கழி மாதக் கடுங்குளிரில் பெருமாள் கோவில் பஜனையில் என்னோடு அவர்களும் கலந்து கொண்டார்கள். எங்களுக்கு எது நடந்தாலும் அவர்கள்தாம் எங்களோடு உடன் இருந்தார்கள். அதனால்தான் பின்னாளில் அவர்களைப் பற்றி வெளியில் யார் என்ன தவறாகப் பேசினாலும் எனக்கு மனம் தைத்தது. எனக்குத் தெரிந்து இன்றுவரை ஒரு முஸ்லிம் கூட மதவாதம் பேசுகிறவர் இல்லை. முகநூலில் வெளிப்படையாகக் கேவலமான மதப் பிரச்சாரம் செய்கிறவரில்லை. நிகழ்ந்திருக்கும் கொஞ்ச நஞ்ச மாற்றம் கூட சமீபத்தில் நிகழ்ந்திருப்பது. அதற்கு அவர்கள் மட்டுமே பொறுப்பென்றும் சொல்ல முடியவில்லை. மற்றபடி வெறுப்புக் கதைகள் எல்லாமே வெளி மாநிலத்தில் அல்லது வெளிநாட்டில் நடப்பதாகக் கேள்விப்பட்டவை. அதனால்தான் என்னால் அவர்களுக்கு எதிரான பிரச்சாரங்களுக்குச் செவிசாய்க்க முடியவில்லை. அது இன்று நிறையப் பேருக்கு வெள்ளம் வந்து உணர்த்தியபின்தான் புரிகிறது. குறைந்த பட்சம் தமிழ்நாட்டு முஸ்லிம்கள் உங்கள் பிரச்சாரங்களுக்கு ஒத்துவர மாட்டார்கள் என்றாவது புரிந்து கொள்ளுங்கள்.

பெருமாள் கோவிலின் வலது பக்கம் ஒரு ரோமன் கத்தோலிக்கத் தேவாலயம் இருந்தது. அதற்கு முன் சில மீனவக் கிறித்தவக் குடும்பங்கள் இருந்தன. அவர்கள் எவரும் எங்களை ஒருபோதும் மதம் மாற்ற முயன்றதில்லை. என் தாயோடு பிறந்த ஐந்து மாமாக்களைப் போலத்தான் அவ்வீடுகளில் பிறந்த மாமாக்களும் இருந்தார்கள். எங்கள் வீட்டுத் திருமணங்களின் போதெல்லாம் அவர்களும் எங்களில் ஒரு பங்காகவேதான் வந்து கலந்து கொண்டார்கள். இன்றைக்கும் மீனவர்கள் பற்றி எங்கு என்ன கேள்விப்பட்டாலும் நின்று கவனித்துச் செல்லக் காரணம் அக்குடும்பங்கள்தாம்.

இவ்வெள்ளத்தில் மற்றவர்கள் செய்த பணிகள் எல்லாம் என் காதுகளில் விழாமல் இல்லை. ஆனால் இவர்கள் இரு குழுவினரும் எவ்வளவு செய்தார்கள் என்பது பற்றி யார் சொன்னாலும் எனக்கு நன்றாகக் கேட்டது. சொல்லாமல் விட்டிருந்தாலும் கேட்டிருக்கும். திரைப்படங்களில் உயிர் போகப் போகும் நிலையில் இருக்கும் அம்மா, "என் மகன் வருவான்; என்னைக் காப்பாற்றுவான் என்று எனக்கு நன்றாகத் தெரியும்!" என்று சொல்வது போல, இப்படியொன்று நிகழ்ந்து விட்டதென்றால் இவர்கள் வருவார்கள் - தன்னால் முடிந்த அளவுக்கும் அதற்கு மேலேயும் அனைத்தும் செய்வார்கள் என்று உறுதியாகத் தோன்றியது. இவர்கள் செய்த செயல்கள் பற்றிப் படித்த ஒவ்வொரு செய்தியிலும் அவர்களில் ஒருவனாக உணர்ந்து புல்லரித்தேன்.

இப்படியெல்லாம் பேசினால் எனக்கு எந்தப் பயனும் இல்லை. ஆனாலும் சொல்கிறேன். இனால் எனக்கு நான் பணிபுரியும் இடத்தில் சம்பளம் கூட்டிக் கொடுக்கப் போவதில்லை; நான் ஒன்றும் பிறரின் மனதுக்குப் பிடித்த மாதிரிப் பேசி ஏமாற்றும் ஓட்டுப் பொறுக்கி இல்லை; ஊரில் கூட அவர்களை வைத்து ஆக வேண்டிய வேலை என்று எதுவும் இல்லை. ஆனாலும் சொல்கிறேன். அப்துல் கலாமை நம்ப முடிகிற உங்களால் இதை நம்ப முடிய வேண்டும். வெறுப்பு விதைப்பது எளிது. விருப்பு விதைப்பது கடினம். ஆனாலும் சொல்கிறேன். இது மனதில் இருந்து வருவது. அடுத்த முறை வெறுப்பு விதைக்கும் முன் அது சொந்த விதையாக இருந்தால் மட்டுமே விதையுங்கள். வெளியூர்க்காரர்களின் ஏட்டுச்சுரைக்காய் விதைகளை விதைக்காதீர்கள். விருப்பு விதைப்பதாய் இருந்தால், திருடிக் கூட விதிக்கலாம். தப்பில்லை.

இப்போது கூட இது விதி விலக்கு என்று சொல்லித் தப்ப முயல்வோர் தப்பிக் கொள்ளுங்கள். அப்படியொரு விதிவிலக்கான வாழ்க்கை கிடைத்த புண்ணியமாவது கிட்டியிருக்கிறதே எனக்கு.

அந்த வகையில் என் வாழ்வில் இருந்து என்றும் நீக்க முடியாத அன்புக்குச் சொந்தக்காரார்களான சில மாமா-மச்சான்களையும், அதற்குச் சாட்சியாக எங்கள் ஊர்க்காரர்கள் சிலரையும் இங்கே இழுத்துப் போடுகிறேன். அவர்கள் ஏதாவது சொல்ல விரும்பினால் அவர்களிடமும் கேட்டுக் கொள்ளுங்கள். யாரேனும் விடுபட்டிருந்தால் அவர்களையும் அழைத்து வாருங்கள். வெளிச்சம் போட்டுக் காட்டுவோம் உலகுக்கு. அவர்களைச் சந்தித்து, உண்மையா என்று உரசிப் பார்க்க விரும்புவோர் முகநூலுக்கு வந்து பார்த்துக் கொள்ளலாம்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம் - ஜெயகாந்தன்

நாத்திகம் - இன்னொரு மதம்!

வைகோ என்றோர் அரசியல் ஏமாளி