கலாச்சார வியப்புகள் - நெதர்லாந்து - 2/2

Image result for netherlandsகலாச்சார அதிர்ச்சி (CULTURE SHOCK) என்றொரு சொல்லாடல் இருக்கிறதே ஆங்கிலத்தில். அது போல இது கலாச்சார வியப்புகள் (CULTURE SURPRISES). கலாச்சார வியப்புகள் என்பது என் பயணக் கட்டுரைகள் மற்றும் வேறுபட்ட கலாச்சாரத்தவருடனான பழக்கக் கட்டுரைகள். புதிதாக நான் போய் இறங்கும் ஊர்களைப் பற்றியும் இதில் நிறைய வரும். எனவே, இதில் நான் பேசும் விஷயங்கள் எல்லாமே கலாச்சாரம் பற்றியதாகவே இருக்கும் என்று எதிர் பார்க்க வேண்டியதில்லை. எனக்குப் புதிதாகப் பட்ட எல்லாமே இதில் வரும். பொறுத்தருள்க!

தொடரும் வியப்புகள்...

ஊழல்
இரவில் அங்கே இருக்கிற இந்தியக் கடை ஒன்றுக்குச் சாப்பிடச் சென்றோம். ஏதோ சாதாரணமாகப் பேசிக்கொண்டிருந்த போது எங்களோடு இருந்த உள்ளூர் சகாவிடம், "இங்கே ஊழல் இருக்கிறதா?" என்று கேட்டோம். குரலை உயர்த்தி அழுத்தம் திருத்தமாகச் சொன்னான், "அது எங்கள் மரபணுவிலேயே கிடையாது. ஊழல் மட்டுமில்லை. ஒரு பொருளுக்கு உரிய விலைக்கு மேல் பிடுங்க நினைக்கும் எண்ணம் கூட எங்கும் கிடையாது. எங்கள் நாட்டில் எங்கும் அதை நீங்கள் காண முடியாது". அந்தக் குரலில் இந்தியாவில் வந்து அடிபட்டுச் சென்ற ஆதங்கம் இருந்தது போல் தெரிந்தது. நம்மவர்கள் சிலர் ஏற்றுக் கொள்ளாமல் வாதிடலாம். "ஊழல் இல்லாத நாடே இல்லை. வேறு விதமான ஊழல் - வேறு தளத்தில் நடக்கும்" என்றெல்லாம் சொல்லலாம். எளிய மனிதனை நேரடியாகப் பாதிக்காமல், அவன் கண்ணை உறுத்தாமல் நடப்பதே எவ்வளவு பெரிய முன்னேற்றம்! அந்த அளவுக்கேனும் இங்கும் மாறிவிட்டால் நல்லதுதானே!

எல்லோரும் சாப்பிட்டு முடித்ததும் தானே பணம் கட்டுவதாகச் சொன்னான் உள்ளூர் சகா. நம்ம ஆள் ஒருத்தன், "இல்லை, டச்சு போட்ருவோம். டச்சா இருந்துக்கிட்டு நீ ஏன் இப்பிடி எங்களுக்கும் சேத்துக் காசு குடுக்கணும்னு துடிக்கிற?" என்றான். அதை இன்னொருத்தன் பிடித்து, "கரெக்ட்டு! ஆமா, செலவைச் சரியாகப் பகிர்ந்து கொள்கிற பழக்கத்துக்கு ஏம்ப்பா டச்சுன்னு பேர் வந்துச்சு? ஒங்க ஊர்ல எப்பவுமே எல்லாருமே சரியாப் பகிர்ந்துதான் பில் கட்டுவீங்களா? அப்பறம் ஏன் நீ மட்டும் இப்பிடிக் காசு குடுக்கப் போற?" என்றான். சிரித்துக் கொண்டே, "இல்ல... இல்ல... நாங்களும் அதுக்கு டச்சுன்னுதான் சொல்வோம். ஆனா, அது எங்க பழக்கம் இல்ல. யாராவது ஓராள் எடுத்துக் குடுத்துட்டுப் போய்க்கினே இருப்போம்!" என்றான். இன்னும் சொல்லப்போனால் டச்சு என்பதற்கு அவரவர் செலவை அவரவர் பார்த்துக் கொளல் என்பதே சரியான பொருள். அதற்குக் காரணம் ஒருவேளை அவர்கள் காசு விசயத்தில் நம்ம ஊர் மார்வாடிகள் மாதிரி கொஞ்சம் கெட்டி என்ற அவர்களைப் பற்றிய வெளியாரின் கருத்தாக இருக்கலாம்.

மக்கள்
உள்ளூர் சகா போன முதல் நாளே முக்கியமாகச் சொன்னது, "இங்க பாரு, இங்க உள்ள பண்பாடு பத்தி சரியாப் புரிஞ்சுக்கோ. இங்க வந்து சுத்தி வளச்சுப் பேசுறது யாருக்கும் பிடிக்காது. முடிஞ்சா முடியும்னு சொல்லணும். இல்லன்னா இல்லன்னு சொல்லணும். முடியாதத முடியும்னு சொல்லிச் சந்தோசப் படுத்துற வேல இங்க செல்லாது" என்பதே. "அப்படியானால் நீங்கள் ஆங்கிலேயர் போல அல்ல, ஜெர்மானியர் போல என்று கொள்ளலாமா?" என்று எல்லாம் தெரிந்த ஏகாம்பரம் போல ஒரு கேள்வியைப் போட்டு, "அதே! அதே!!" என்று பதிலும் வாங்கி வைத்துக் கொண்டேன்.

பொதுவாகவே, டச்சு மக்கள் கடின உழைப்பாளிகள், பிறரிடமும் உழைப்பை எதிர்பார்ப்பவர்கள் (பிழிந்தெடுப்பவர்கள் என்று சொல்வோரும் உளர்), ஆடம்பர மோகம் அற்றவர்கள், கொஞ்சம் காசு விசயத்தில் கெட்டி என்றெல்லாம் சொல்லப்படுவதுண்டு. அதனால்தான் சொன்னேன் - நம்ம ஊர் மார்வாடிகள் போல என்று. நாங்கள் பார்த்தவரை, எல்லோரும் மிகவும் நல்ல முறையில் நட்புணர்வோடு பேசுபவர்களாகவே இருந்தனர். இங்கிலாந்தைப் போல அளவுக்கதிகமான நன்றி நவிழல்கள் இல்லை. இங்கிலாந்தில் நாம் நடந்து வருகிறவருக்கு ஒதுங்கி வழி விட்டாலே அதற்கொரு நன்றி சொல்வார்கள். அந்த அளவுக்கு இல்லை இங்கு. வேண்டியதில்லைதானே!

கட்டடக்கலை
நெதர்லாந்தில் இருக்கும் கட்டடங்கள் இங்கிலாந்தைப் போல மிகவும் பழமையானவையாக இல்லை. ஓரளவு புதுமையும் தெரிந்தது. சாலைகள் அனைத்திலும் மிதிவண்டிப் பாதை இருப்பது போல், எல்லா ஊர்களிலும் ஊருக்குள்ளாக நரம்பு போல் கால்வாய்கள் ஓடுகின்றன. மிக அழகாகக் கட்டப்பட்டுள்ள செயற்கைக் கால்வாய்கள். ஆம்ஸ்டர்டாமில் எல்லாத் தெருக்களிலுமே இந்தக் கால்வாய்கள் இருப்பது போலத் தெரிகிறது. ஊரின் அழகையே இவை கூட்டி விடுகின்றன. அவற்றில் படகுகளும் விடப்படுகின்றன. பல்வேறு போக்குவரத்து வசதிகளில் இதுவும் ஒன்றாகக் கருதப் படுகிறது. ஓரிரு இடங்களில் பொழுதுபோக்குக்கு மீன் பிடிக்கிற அழகையும் பார்தேன். இந்த அமைப்பு வேறு எந்த நாட்டிலும் இந்த அளவுக்கு இருக்கிறதா என்று தெரியவில்லை.

ஆம்ஸ்டர்டாம்
ஒரு வார வேலையில் போய், ஒரு வாரமும் தங்கியிருந்த ஓட்டல், பணியிடம் இவையிரண்டும் தவிர்த்து எதுவுமே பார்க்கவில்லை. கிளம்புவதற்கு முந்தைய கடைசி ஒரு நாளில் ஆமர்ச்பூர்ட்டில் இருந்து ஆம்ஸ்டர்டாமுக்கு ஓட்டலை மாற்றிப் போட்டு வந்தோம். இவ்வளவு தூரம் போய்விட்டு, அதைப் பார்க்காமல் வந்தால் எப்படி?

Image result for amsterdam centralசுற்றிப் பார்க்கலாம் என்று கிளம்பி ஆம்ஸ்டர்டாம் நகரின் மத்தியப் பகுதிக்குப் போய் இறங்கியதுமே மூஞ்சியில் குப்பென்று வாடை குத்தியது. அனைத்து விதமான கெட்ட புகைகளும் அனுமதிக்கப் பட்ட ஊர். அது போக ஆம்ஸ்டர்டாம் என்றாலே உலகறிந்த ஒன்று இருக்கிறது. அது, அவ்வூரில் இருக்கும் சிவப்பு விளக்குப் பகுதி. ஊரின் மத்தியில் முக்கியப் பகுதியில் இருக்கிறது. அந்தக் கட்டடங்கள் அனைத்திலும் சன்னலோரம் சிவப்பு விளக்கு மாட்டியிருக்கிறார்கள். குறிப்பால் உணர்த்துகிறார்களாம்! கண்ணாடிச் சன்னல் ஓரத்தில் நின்று கொண்டு விலைப்பெண்கள் அவர்களின் வாடிக்கையாளர்களைக் கவர முயன்று கொண்டு இருக்கிறார்கள். மிகச் சாதாரணமாக ஆண்களும் பெண்களும் அப்பகுதிகளில் நடமாடுகிறார்கள். நமக்கு இது ஒரு பெரும் அதிர்ச்சியாக இருக்கிறது. இதைப் பற்றி இரண்டு வரிகள் எழுதவே இவ்வளவு கூச்சமாக இருக்கிறது. ஆனால் நூற்றாண்டுகளாக இப்படியொரு பகுதி நாம் வாழ்கிற இதே பூமியில்தான் இருந்து கொண்டிருக்கிறது. அரச அங்கீகாரத்தோடு - பாதுகாப்போடு செய்யப்படுவதுதான் இதன் சிறப்பம்சம். இது நல்லதா - கெட்டதா என்று ஒரு மண்ணும் நம் சிறிய மூளைக்குப் புரிந்து தொலைக்க மறுக்கிறது.

Image result for amsterdam dam squareஆம்ஸ்டெல் என்கிற நதியின் அணை (DAM) இருக்கும் இடம்தான் ஆம்ஸ்டர்டாம். அதன் நடுப்பகுதியான அணைச் சதுக்கம்தான் (DAM SQUARE) அங்கே பார்க்க வேண்டிய முக்கியமான இடம் என்று அங்கேயே தங்கிப் படித்துக் கொண்டிருக்கும் நண்பன் ஒருவன் சொன்னான். உடன் இருந்த நண்பரும் நானும் ஒரு நாள் முழுக்க அவற்றை எல்லாம் சுற்றிப் பார்த்தோம். அங்கேயே 'காந்தி' பெயரில் ஓர் உணவுக் கடையில் சைவமும் 'அசைவமும்' கிடைக்கிறது. மதியம் அங்கு சென்று நன்றாகச் சாப்பிட்டோம். சாப்பிட்டு முடித்து எங்கு செல்லலாம் என்று விசாரித்ததில், ஊரெங்கும் இரண்டு-மூன்று அருங்காட்சியகங்கள் உள்ளன; அவற்றில் ஏதாவது ஒன்றைப் போய்ப் பார்க்கலாம் என்றார்கள். இன்னொரு ஆப்சன் இருந்தது. அது, ஆன் பிரான்க் (ANNE FRANK) வீடு. நாங்கள் இதைத் தெரிவு செய்தோம்.

Image result for anne frank houseஆன் ப்ரான்க் வீடு
ஆங்கிலத்தில் ஆன் என்றும் மற்ற ஐரோப்பிய மொழிகளில் அன்னா என்றும் அழைக்கப்படும் இவர் பற்றித் தெரியாதவர்கள் வாசகர் உலகில் மிகவும் குறைவே. இரண்டாம் உலகப் போரின் போது ஹிட்லரின் இனவெறிக்குப் பலியாகிச் சூறையாடப் பட்ட பல்லாயிரம் யூதக் குடும்பங்களில் - குழந்தைகளில் இவளும் ஒருத்தி. குடும்பத்தில் எப்படியோ தப்பி உயிர் பிழைத்த அவளின் தந்தை, போருக்குப் பிந்தைய காலத்தில் அவளுடைய நாட்குறிப்பை 'ஒரு சிறுமியின் நாட்குறிப்பு' (THE DIARY OF A YOUNG GIRL) எனும் நூலாக வெளிக்கொணர்ந்து, அந்தப் போரின் கொடூரத்தை இந்த உலகுக்குப் புரிய வைத்த மிக முக்கியமான தடயங்களில் ஒன்றாக ஆக்கியிருக்கிறார். அத்தோடு நில்லாமல், அவர்கள் ஹிட்லரின் வெறிப்படையிடம் சிக்கி விடாமல் தப்புவதற்காக ஒளிந்திருந்த வீட்டை அரசாங்கத்தின் உதவியோடு ஓர் அருங்காட்சியகமாக ஆக்கியிருக்கிறார்.

அந்த நூலைப் பார்க்கும் போதெல்லாம் வாங்கிப் படிக்க வேண்டும் என்று தோன்றியதுண்டு. ஆனால் இன்று வரை அந்த எண்ணம் கைகூட வில்லை. பல அருங்காட்சிகங்களை விடுத்து அங்கு செல்ல வேண்டும் என்று எடுத்த முடிவு மிகச் சரியானது என்று பின்னர் உறுதியானது. ஒரு மணி நேரம் வரிசையில் நின்று காத்திருந்து, உள்ளே போய் ஒரு மணி நேரத்துக்கும் மேல் செலவிட்டு, வெளியேறும் போது மனம் மிகவும் கனத்திருந்தது. எத்தனை கோடி உயிர்களை இழந்தாலும் மனித மனத்துக்குள் இருக்கும் போர் மோகம் போகுமா என்று தெரியவில்லை. இரண்டு ஆண்டுகள் பகலில் எப்போதும் ஆள் நடமாட்டம் இருக்கும் ஒரு வீட்டின் மாடியில் யாருக்கும் தெரியாமல் இருந்து கொண்டு, குசுகுசுவென்று பேசிக் கொண்டு, கழிப்பறையைப் பயன்படுத்தக் கூட நேரம் ஒதுக்கி, மற்ற நேரங்களில் அமைதி காத்து, நம்மால் எண்ணிப் பார்க்கக் கூட முடியாத வாழ்க்கையை வாழ்ந்த ஒரு குடும்பத்தின் கதையை ஒரு சிறுமியின் கோணத்தில் வெளிக் கொண்டு வந்து நமக்குப் படைத்திருக்கிறார்கள். ஒன்றுதான் வெளிவந்திருக்கிறது. எத்தனை ஆன்கள் இது போலக் கொல்லப் பட்டார்களோ!

Image result for anne frank houseஅவ்வளவுக்கும் மேல், யாரோ ஒரு சதிகாரனால் காட்டிக் கொடுக்கப்பட்டு, வதை முகாம்களுக்கு எடுத்துச் செல்லப் பட்டு, பறிக்கப்பட்ட உயிர்களின் நிலைமையை நினைத்துப் பார்த்தாலே உள்ளம் நடுங்குகிறது. பதிமூன்று வயதுச் சிறுமிக்குள் இவ்வளவு இருந்ததா என்று வியக்க வைக்கிறது அவளுடைய எழுத்துக்கள். அதைத்தான் அவளுடைய தந்தையும் சொல்கிறார் - "நாம் எல்லோரும் நம் குழந்தைகளைப் பற்றி நமக்கு எல்லாம் தெரியும் என்று நினைக்கிறோம். என் மகளுக்குள் எவ்வளவு இருந்தது என்று அவளை இழந்த பின்தான் எனக்குத் தெரிய வந்தது. நீங்களும் உங்கள் குழந்தைகளுக்குள் என்னவெல்லாம் இருக்கிறது என்று புரிந்து கொள்ள முயலுங்கள்" என்று.

இந்த நூலை என் மகளுக்கு எந்த வயதில் படிக்கக் கொடுப்பது என்று குழப்பம் இந்த நிமிடம் வரை நீடிக்கிறது. அவளாகவே அது பற்றிக் கேள்விப்பட்டுப் படிக்கிற நாளில் படித்துக் கொள்ளட்டும் என்று விட்டு விடலாமா என்றும் தோன்றுகிறது.

அந்தக் கனத்த மனத்தோடே ஊர் கிளம்பி வந்து சேர்ந்தேன். இன்னும் பாரம் குறையவில்லை!

வியப்புகள் இப்போதைக்கு முற்றும்...

கருத்துகள்

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம் - ஜெயகாந்தன்

சாம, தான, பேத, தண்டம்

"நான் என்னை ஒரு மேதையும் புனித வேசியும் போல் உணர்கிறேன்": அலெஹாண்ட்ரோ ஜோடராவ்ஸ்கிக்குச் சில கேள்விகள்