கலாச்சார வியப்புகள் - நெதர்லாந்து - 1/2

Image result for netherlandsகலாச்சார அதிர்ச்சி (CULTURE SHOCK) என்றொரு சொல்லாடல் இருக்கிறதே ஆங்கிலத்தில். அது போல இது கலாச்சார வியப்புகள் (CULTURE SURPRISES). கலாச்சார வியப்புகள் என்பது என் பயணக் கட்டுரைகள் மற்றும் வேறுபட்ட கலாச்சாரத்தவருடனான பழக்கக் கட்டுரைகள். புதிதாக நான் போய் இறங்கும் ஊர்களைப் பற்றியும் இதில் நிறைய வரும். எனவே, இதில் நான் பேசும் விஷயங்கள் எல்லாமே கலாச்சாரம் பற்றியதாகவே இருக்கும் என்று எதிர் பார்க்க வேண்டியதில்லை. எனக்குப் புதிதாகப் பட்ட எல்லாமே இதில் வரும். பொறுத்தருள்க!

வியப்புகள் தொடங்குகின்றன...

Image result for continental europeபயணம்
ஒன்றரை வருட இடைவெளிக்குப் பின் மீண்டும் வெளிநாட்டுப் பயணம் செய்யும் வாய்ப்புக் கிடைத்தது. இடையில் பலமுறை பயணத்துக்குத் தயாராகித் தயாராகி வீணானது. இம்முறையும் அப்படியே ஆகி விட்டாலும் பரவாயில்லை என்று எண்ணிக் கொண்டிருக்கையில் பல தள்ளிப் போடல்களுக்குப் பின் நடந்தே விட்டது. இம்முறை இதற்கு முன்பு சென்றிராத ஒரு நாட்டுக்கு. நெதர்லாந்துக்கு. ஐரோப்பாவில் இதற்கு முன் ஓராண்டுக்கும் மேல் இருந்திருக்கிறேன் என்றாலும் இது வேறு விதமாக இருக்கும் என்று தெரியும். முன்பு தங்கியிருந்த பிரிட்டன் அல்லது இங்கிலாந்து இருப்பது ஐரோப்பாவில் என்றாலும் மற்ற ஐரோப்பிய நாடுகளை விடச் சற்று வேறுபட்டது. பாரதியார் சொல்வது போல, தனித்தீவாகி விட்டதால் மற்றவர்களை விடச் சற்று வேறுபட்ட பண்பாடுகள் கொண்டவர்கள். இடது புறம் வண்டி ஓட்டுபவர்கள். பிரிட்டன் தவிர்த்த மற்ற ஐரோப்பிய நாடுகள் அனைத்தும் வலது புறம் வண்டி ஓட்டுபவர்கள். இன்னும் சரியாகச் சொல்வதென்றால் பிரிட்டனும் பிரிட்டனின் அடிமைகளாக இருந்த நாடுகள் மட்டுமே இடது புறம் வண்டி ஓட்டுபவை. அந்த வகையில், வலது புறம் வண்டி ஓட்டுகிற நாடு ஒன்றுக்குச் செல்வது இதுவே முதன்முறை. பணியிடத்தில் கூட பிரிட்டனை வேறு பகுதியாகவும் ஐரோப்பாவை வேறு பகுதியாகவுமே வைத்துப் பேசிக் கொள்வார்கள். பிரிட்டன் தவிர்த்த மற்ற நாடுகளைக் 'கண்ட ஐரோப்பா' (CONTINENTAL EUROPE) என்பர். அந்த வகையில், 'கண்ட ஐரோப்பா'விற்கு இதுவே முதற் பயணம்.

இதில் ஒரேயொரு சிக்கல் - நமக்குத் தெரிந்த எந்த மொழியும் 'கண்ட ஐரோப்பா'வில் பேச மாட்டார்கள். ஆங்கிலம் அறவே இல்லாத நாடுகளும் உள்ளன. ஓரளவு பேசப்படும் நாடுகளும் உள்ளன. பெரும்பாலானவர்கள் தெரிந்து வைத்திருக்கும் நாடுகளும் உள்ளன. நெதர்லாந்து ஆங்கிலத்தை வைத்துச் சமாளித்துக் கொள்ள முடிகிற நாடு என்று கேள்விப்பட்டிருந்ததால் கொஞ்சம் நிம்மதி. இது பற்றிப் பின்னர் விரிவாக உரையாடுவோம்.

முதலில் பெல்ஜியமும் ஒரு நாள் செல்ல வேண்டியிருக்கும் என்ற திட்டம் இருந்தது. பின்னர் நெதர்லாந்து மட்டுமே என்று மாறிவிட்டது. பாரிஸ் தாக்குதலுக்குப் பிந்தைய இப்போதைய சூழ்நிலையில் ஐரோப்பாவில் தேவையில்லாமல் சுற்றித் திரிவதே தேவையில்லாத வேலை என்பதாலும், குறிப்பாக பெல்ஜியம் மிகவும் பதட்டத்தில் இருப்பதாலும், சுற்றுவதைப் பெரிதாக விரும்பாத சோம்பேறித்தனத்தாலும் நல்லதென்று நினைத்துக் கொண்டேன். ஆனாலும் இன்னொரு நாட்டைப் பார்த்துக் கொள்கிற வாய்ப்புத் தவறிவிட்டதே என்று சிறிய வருத்தமும் இருக்கிறது. சுற்றிப் பார்ப்பதில் ஆர்வம் இருந்தால் ஒரு நாள் போய்விட்டு வந்து விடலாம். சுற்றிப் பார்ப்பதற்காகவே சுற்றுவதை விட வேலை நிமித்தமாகப் போகும் போது, அதிகம் சுற்றாமல் - அலுப்பில்லாமல் - போகிற வழியில் - வருகிற வழியில் தானாக வந்து கண்ணில் படுவதைப் பார்த்துக் கொள்வதே நமக்குப் பிடித்த கொள்கை என்பதாற்தான் அப்படி.

Image result for amersfoortகாலையில் பெங்களூரில் இருந்து கிளம்பி மதியம் துபாய் சென்று இரவு ஆம்ஸ்டர்டாம் சென்று சேர்ந்தேன். துபாய் விமான நிலையம் முன்பே சென்றுள்ள ஒன்றுதான் என்பதால், அது ஒரு பெரிய விமான நிலையம் என்பதைத் தவிரச் சொல்லப் பெரிதாக வேறு எதுவும் இல்லை. வேலை ஆம்ஸ்டர்டாம் அருகில் இருக்கிற ஆமர்ச்பூர்ட் என்கிற ஊரில். ஆம்ஸ்டர்டாம் விமான நிலையத்தில் இறங்கி, தொடர் வண்டியில் ஆமர்ச்பூர்ட்டுக்குச் செல்ல வேண்டியிருந்தது. விமான நிலையத்தில் சென்று இறங்கியதும் தொடர்வண்டிப் பயணச் சீட்டு வாங்கும் இயந்திரத்திடம் போனேன். எல்லாமே இரண்டு அல்லது மூன்று மொழிகளில் இருந்தன. டச்சு, ஆங்கிலம், போலியம் (POLISH) ஆகியவை. விமான நிலையத்தின் உள் இருக்கிற வரை ஒரு 'கண்ட ஐரோப்பிய' நாட்டில் இருக்கிற உணர்வே இல்லை. எங்கும் ஆங்கிலம் எதிலும் ஆங்கிலம் என்றே இருந்தது. சுற்றி இருப்பவர்களிடம் ஆங்கிலத்தில் பேசிப் பார்த்ததில் பெரும்பாலும் நன்றாக ஆங்கிலம் பேசினர். சிலர் திக்கித் திணறிப் பேசினர்.

Image result for dutch english german frenchமொழி
பின்னர் அதற்கு இரண்டு காரணங்கள் இருப்பதைப் புரிந்து கொண்டேன். ஒன்று, ஆம்ஸ்டர்டாம் நகரைப் பொருத்தவரை ஆங்கிலமும் ஓர் ஆட்சி மொழி. இரண்டு, நெதர்லாந்து முழுக்கவே ஆங்கிலத்தை இரண்டாம் படமாகப் படிக்கிற பழக்கம் இருக்கிறது. அதற்கும் இரண்டு காரணங்கள். ஒன்று, நெதர்லாந்து ஒரு சிறிய நாடு. இரண்டு, உலகப் போரின் போது ஜெர்மனியின் பிடியில் இருந்து ஆங்கிலப் படைகள் இவர்களை மீட்டுக் கொடுத்ததால் ஒரு சிறிய நன்றியுணர்வும் நல்லுணர்வும் இருக்கிறது. நெதர்லாந்தில் பேசப்படும் டச்சு மொழி ஆங்கிலத்தை விட ஜெர்மானிய மொழிக்கு நெருக்கம் கொண்டது. பண்பாடும் கூட ஜெர்மானியப் பண்பாட்டுக்கு நெருக்கமானது என்றே சொல்கிறார்கள். ஆனாலும் ஆங்கிலமே அதிகம் பேர் தெரிந்து வைத்திருக்கிறார்கள். தொண்ணூறு விழுக்காட்டுக்கும் மேலான டச்சுக்காரர்கள் ஆங்கிலம் அறிந்தவர்கள் என்றும், முப்பது விழுக்காட்டுக்கும் மேலானவர்கள் ஜெர்மன் மொழி அறிந்தவர்கள் என்றும், பத்து விழுக்காட்டினர் பிரெஞ்சு மொழி அறிந்தவர்கள் என்றும் ஒரு புள்ளிவிபரம் அள்ளிவிடப் படுகிறது. குத்து மதிப்பாக நம்முடைய ஊரில் உள்ளபடிச் சொல்வதென்றால், சிறிய பகுதியான கேரளத்தில் உள்ள மலையாளிகளில் முப்பது விழுக்காட்டினர், தம் மொழி போன்றுள்ள தமிழை எளிதாகப் பேசுவதைப் போலவும், அரசியற் காரணங்களால் தொண்ணூறு விழுக்காட்டினர் இந்தி பேசப் பழகி விட்டதையும் ஒப்பிட்டுக் கொள்ளலாம். ஒப்பீட்டை அத்தோடு நிறுத்திக் கொள்வோம். எல்லாத்திலும் ஒப்பிட்டால் சிக்கலாகிவிடும்!

எங்கள் குழுவில் உள்ளூர்க்காரர்களும் சிலர் இருந்தனர். அவர்களிடம் எப்படி ஆங்கிலம் இவ்வளவு நன்றாகப் பேசுகிறீர்கள் என்று கேட்டபோது, அவர்களும் தாங்கள் படிக்கிற காலத்தில் ஆங்கிலம் படித்ததாகவும், பெரும்பாலானவர்கள் சில பல காலம் இங்கிலாந்துப் பக்கம் சென்று வந்ததாகவும் சொன்னார்கள். அதற்கும் மேல், ஐரோப்பாவின் சிறிய நாடுகள் அனைத்தும் அங்குள்ள மூன்று பெரும் நாடுகளின் மொழிகளில் ஒன்றை இரண்டாம் மொழியாகக் கொண்டிருப்பார்கள் என்றும் புரிந்து கொள்ள முடிந்தது. ஆங்கிலம், ஜெர்மன், பிரெஞ்சு ஆகியவையே அவை. ஸ்பானியமும் அப்படியான பெரும் மொழிதான் என்றாலும் அதன் ஆதிக்கம் இப்போது ஐரோப்பாவில் அவ்வளவு இல்லை என்றே கொள்ளலாம். ஒருவர் சொன்னார் - "தலை சிறந்த இலக்கியங்களும் திரைப்படங்களும் ஆங்கிலத்திலேயே வருவதால் சிறிய நாட்டினரான நாங்கள் எங்கள் மொழிக்கு வெளியே சென்று படிக்க வேண்டிய - பார்க்க வேண்டிய கட்டாயம் எங்களுக்கு இருக்கிறது". சரியான நியாயந்தான். ஆனாலும் பெரும்பாலான நல்ல நூல்களும் திரைப்படங்களும் டச்சு மொழியில் தரமாகவே மொழிபெயர்க்கப்பட்டு விடுவதாகவே சொல்லப்படுகிறது.

ஆனாலும் அவர்களுடைய முதன்மொழி தாய்மொழிதான். அதில் எந்த சமரசமும் இல்லை. தொடக்கக் கல்வி தாய்மொழியில்தான் கற்கிறார்கள். ஆம்ஸ்டர்டாம் நகருக்கு வெளியே ஆங்கில எழுத்துக்களை எங்கும் பார்க்க முடியவில்லை. எல்லாக் கடைகளிலும் பொருட்களிலும் டச்சு மொழியிலேயே எழுதியிருக்கிறார்கள். முதலில் டச்சு மொழியில்தான் பேச ஆரம்பிக்கிறார்கள். தெரியவில்லை என்று தெரிந்தபின்தான் ஆங்கிலத்தில் பேசுகிறார்கள். ஆனால் ஆங்கிலமொழி வெறுப்பு என்று எங்கும் இல்லை. நிறவெறியும் துளியும் இல்லை. கணிப்பொறிப் புரட்சிக்குப் பிந்தைய இப்போதைய காலத்தில் அங்கும் ஆங்கிலத் திணிப்பு கூடி வருவதாகவும், அதற்குச் சிறிதளவில் எதிர்ப்புகள் இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. அலுவலகங்களில் பல இடங்களில் ஆங்கிலமே அலுவல் மொழியாக மாறி வருவதை அவர்களில் சில குழுக்கள் சீரணிக்க முடியாமல் இருப்பதாகச் சொல்லப்படுகிறது. அது போலவே, நம் ஊரில் தமிழைவிடத் தமிழும் ஆங்கிலமும் கலந்து பேசும் தங்லீஷுக்கு ஒரு மரியாதை இருப்பது போல, அங்கும் டச்சும் ஆங்கிலமும் கலந்து பேசும் டங்லீஷ் என்கிற பண்பாடும் தலை தூக்கி வருவதாகவும் மொழியியலாளர்கள் அதைப் பெரிதும் சுவைப்பதில்லை என்றும் சொல்லப்படுகிறது. ஆனாலும் நாம் புரிந்து கொள்ள வேண்டிய - தங்லீஷுக்கும் டங்லீஷுக்கும் இருக்கும் மிகப்பெரும் வேறுபாடு, நம்முடையது அடிமை மனப்பான்மை காரணமாகத் தன்னை மேட்டுக்குடி என்று காட்டிக் கொள்வதற்காகப் படித்த நடுத்தர வர்க்கத்தாரால் செய்யப்படும் கோமாளித்தனம்; அவர்களுடையதோ வசதிக்காக சொற்களைக் கடன் வாங்கிக் கொள்கிற சோம்பேறித்தனம். அப்படிப் பார்த்தால் நாமும் தமிழில் பல வடமொழி, பாரசீக, தெலுங்குச் சொற்களைக் கூடப் பயன்படுத்துகிறோம். தமிழைக் கொன்று ஆங்கிலம் காக்கும் அடிமைப் பண்பைப் போலக் கண்டிப்பாக அது அவ்வளவு அபாயமானதில்லை.

மிதிவண்டிக் கலாச்சாரம்
Image result for netherlands bicycleஇலண்டலில் பெரும்பாலான இடங்களில் மிதிவண்டிகளுக்கென்று சாலையின் ஓரத்தில் ஒரு பாதை இருக்கும். அது பெரும்பாலும் ஒரு மிதிவண்டி செல்கிற அளவுக்கு இருக்கும். அவ்வளவுதான். இங்கோ சாலைகளில் மூன்றில் ஒரு பங்கு அளவுக்கு பெரும் பெரும் மிதிவண்டிப் பாதைகள் இருக்கின்றன. பெரும்பாலும் அவை சிவப்பு நிறத்தில் தனித்துக் காட்டப்படுகின்றன. நாடு முழுக்கவே மிதிவண்டிகளில் பயன்பாடு மிக அதிகம் என்கிறார்கள். இருசக்கர வாகனங்கள் அனைத்துமே இப்பாதைகளிலேயே செல்கின்றன. ஏகப்பட்ட மிதிவண்டிகள். விதவிதமான மிதிவண்டிகள். சாமான்கள் நிறையப் போட்டுக் கொண்டு போகிற மாதிரி வண்டிகள், குழந்தைகளை அள்ளிப் போட்டுக் கொண்டு போகிற மாதிரியான வண்டிகள், இருவர் ஓட்டிச் செல்கிற மாதிரியான வண்டிகள் என்று நாடெங்கும் மிதிவண்டிகளின் ஆட்சிதான். மற்ற எல்லாவிதமான வண்டிகளை விடவும் இந்நாட்டில் மிதிவண்டிகள் அதிகம் என்றே கொள்ளலாம். தனிப்பட்ட முறையில் உடல் ஆரோக்கியத்திற்கும் நல்லது; மாசுபாட்டைக் குறைப்பதால் நாட்டுக்கும் சமூகத்துக்கும் நல்லது.

குளிர்
குளிர் காலத்தில் சென்றதால் அதன் அழகை முழுமையாகக் காணமுடியாது போயிற்று. ஐரோப்பாவைப் பொருத்தமட்டில் கோடை காலத்தில் சென்றால்தான் முழுமையாகக் கண்டு களித்து அனுபவிக்க முடியும். குறுகிய பகற்பொழுதுகள் ஒரு பிரச்சனை என்றால், மங்கலான வெளிச்சம் மற்றொரு பிரச்சனை. கடுங்குளிர் என்று சொல்ல முடியாது. ஓரளவுதான் குளிர். கடந்த இரண்டு ஆண்டுகளில் பனிப்பொழிவு இல்லை என்று சொன்னார்கள்.

அரசியல்-பொருளியல்-புவியியல்-பெயரியல்
நெதர்லாந்தை ஹாலந்து என்றும் பலர் சொல்லக் கேள்விப் பட்டிருப்போம். ஆனால் அது சரியல்ல என்கிறார்கள். ஹாலந்து என்பது நெதர்லாந்தின் ஒரு பகுதி மட்டுமே. அதுவே முழு நெதர்லாந்துக்கும் பிரதிநிதி ஆகிவிடாது. சிந்து சமவெளியில் இருந்து இந்தியா வந்ததால் அந்தப் பெயர் வந்தது என்பதற்காக இப்போதைய சிந்திகளை மட்டும் இந்தியர் என்று சொன்னால் சரியாகுமா? அது போல என்று வைத்துக் கொள்வோமே!

நெதர்லாந்து என்பதன் பொருள் 'கீழ்நாடு' அல்லது 'தாழ்நாடு' என்கிறார்கள். அதாவது பெரிதாக மேடுகள்/மலைகள் இல்லாமல் கடல் மட்டத்திலேயே இருக்கிற நாடாம். நடுவில் பல ஊர்கள் கடல் மட்டத்துக்குக் கீழேயும் இருக்கின்றனவாம். உலகில் மிகவும் மக்கள் நெருக்கடி மிகுந்த நாடுகளில் ஒன்றாகக் கூறப்படுகிறது. இங்கிலாந்தைப் போலவே தொடர்வண்டி வசதிகள் நன்றாக இருக்கின்றன. இங்கு நாடு விட்டு நாடு செல்லும் தொடர் வண்டிகளே நிறைய ஓடுகின்றன. செங்கன் நாடுகள் அனைத்துக்கும் ஒரே விசா என்பதால் விசாத் தொல்லைகள் இல்லை. அது ஒரு பெரும் வசதி. மக்களாட்சிதான் நடக்கிறது. ஆனாலும் இங்கிலாந்தைப் போலவே இங்கும் அரச குடும்பம் ஒன்று உள்ளது. அரசர் என்று ஒருத்தர் இருக்கிறார். பல ஐரோப்பிய நாடுகளைப் போலவே இங்கும் கடவுள் பக்தி அதிகம் இல்லையென்றும் கடவுள் மறுப்பாளர்கள் அல்லது நம்பிக்கையற்றவர்கள்தாம் அதிகம் என்றும் சொல்கிறார்கள். மொத்தத்தில் நல்ல பொருளாதாரமும் உழைப்பும் வாழ்க்கைத் தரமும் எளிமையும் உள்ள நாடு போலத் தெரிகிறது.

வியப்புகள் தொடரும்...

கருத்துகள்

  1. நானும் நெதர்லாந்து போயிருக்கிறேன். அதாவது முப்பது ஆண்டுகளுக்கு முன்பு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அருமை ஐயா! இந்தியாவைப் போலப் பெரிதும் மாறியிராது என்று எண்ணுகிறேன். அவர்கள்தாம் அப்போதே வளர்ந்து விட்டவர்கள்தாமே! ஆனால், தொழில்நுட்பத்தின் வளர்ச்சியால் சில முக்கிய மாற்றங்கள் நிகழ்ந்திருக்கலாம்.

      நீக்கு

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

சாம, தான, பேத, தண்டம்

உயர் தனிச் செம்மொழி?!

யுவால் நோவா ஹராரி: “21-ஆம் நூற்றாண்டுக்கான 21 பாடங்கள்” | கூகுள் உரையாடல்கள்