உலகத் தாய்மொழி தினம்

இன்று உலகத் தாய்மொழி தினமாம். இது போன்ற தினங்களில் பெரும்பாலும் ஆர்வமில்லை. ஏதோவொரு தினமென்று சொல்லியாவது அதில் ஏதாவது ஒரு நல்லது நடந்தால் நல்லதுதானே! அந்த வகையில் இந்த தினத்தை வரவேற்போம். உலகமெங்கும் பெரும்பாலும் மொழிக்கொரு நாடு என்கிற கொள்கை இருப்பதால் பல மொழிகள் நம்முடையதைப் போல நெருக்கடிக்கு உள்ளாகாமல் இருக்கின்றன. பல மொழிகளைக் கொண்ட ஒரே மிகப் பெரிய நாடு இந்தியா மட்டுமே. ஒரு நாடு நீண்ட காலம் உயிரோடிருக்க அதன் பன்முகத்தன்மையை மதிப்பது எவ்வளவு முக்கியம் என்பதை இந்தியா முழுமையாக உணர்ந்து கொண்டுள்ளதா என்று தெரியவில்லை. ஒவ்வொருவருக்கும் அவரவர் தாய்மொழியில் படிக்கிற, படித்தால் வேலைக்குச் செல்ல முடிகிற, தாய்மொழியை மட்டுமே பயன்படுத்தி வாழமுடிகிற உரிமை உரிமைகளில் எல்லாம் தலையாய அடிப்படை உரிமை என்பதை இங்குள்ள மங்குனி மண்டையர்களுக்குப் புரிய வைக்கவே முடியவில்லை. தாய்மொழியில் பேசும் - படிக்கும் - வாழும் உரிமையைக் கோருதல் குறுகிற மனப்பான்மை என்றும், எல்லோரும் ஆங்கிலம் பேசி - படித்து - வாழும் நாளில் நாம் வல்லரசாக மாறிவிட்டதாகக் கணக்காகி விடும் என்றும் ஒரு கூட்டம் பிதற்றித் திரிகிறது. உலகில் ஒரு வல்லரசும் இன்னொரு மொழி பேசித் தன்னை வல்லரசாக அறிவித்துக் கொண்டில்லை. அடிமை இனங்கள்தாம் யார் வீட்டில் எடுபிடி வேலைக்குச் செல்கின்றனவோ அவ்வீட்டு மொழியைப் படிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றன என்கிற அடிப்படை உலக அறிவு கூடக் கொடுக்க முடியாத இந்தக் கல்விக்கு அந்த வேற்று மொழி கொடுத்திருக்கும் அடிமையுணர்வும் காரணம் என்பதை எப்படிப் புரிய வைக்க? பாரம்பரியத்தை நிலை நாட்டியே தீருவேன் என்று கிளம்பியிருக்கும் பலருக்கு எது எதுவோ அவர்களின் வெறிக்கண்களில் படுகிறது; மொழி விடுதலை என்றால் என்னவென்று கூட யோசிக்கத் தெரியவில்லை. இன்னும் கொடூரமாக, பாரம்பரியத்தை நிலைநாட்டுவதன் முக்கியக் கூறாக மொத்த இந்தியாவுக்கும் ஒற்றை மொழி என்ற ஒரு கூறு கெட்ட சிந்தனையைக் கூட ஆணித்தரமாகப் பேசுகிறார்கள். ஆங்கிலமோ வேறொன்றோ, தாய்மொழி உரிமையை இழக்கும் வேளையில், இயல்பாகவே நாம் எடுபிடி வேலைக்கு மட்டும் உரித்தானவர்கள் ஆகிவிடுவோம் என்கிற அடிப்படை அரசியலைப் புரிந்து கொள்வோம். அதை விடுத்து, மொழியைப் புனிதமாக்கி, எம்மொழி ஒன்றே செம்மொழி, மற்றவை எல்லாம் ஏதோ இரண்டாந்தரமானவை என்பது போல நரம்பு புடைக்கக் கத்தித் திரிவதில் ஒரு பயனும் இல்லை. அந்த உணர்ச்சித் தீ யெல்லாம் நாலு பேர் வீட்டில் அடுப்பு பற்ற வைக்க வேண்டுமானால் உதவலாம். நமக்கு எந்த வகையிலும் உதவாது! ஒருக்காலும் நாம் வேறொரு மொழியில் அவர்களை விட விற்பன்னர்களாகி விட முடியாது. ஒருவேளை, இயல்பிலேயே பிற மொழிகளைக் கற்றுக் கொள்வதில் ஆர்வம் இருக்கிற - ஆற்றல் இருக்கிற சிலர் வேண்டுமானால் அதில் தாக்குப் பிடிக்கலாம். பரந்த மனப்பான்மை கொண்ட அவர்கள் வேண்டுமானால் அமெரிக்கர்களாக - ஆங்கிலேயர்களாக - வடயிந்தியர்களாக மாறிக் கொள்ளட்டும். அது எல்லோருக்கும் பயனாக முடியப்போவதேயில்லை. நம்மை அழித்துத்தான் போடும். இதை உணர வைக்க இந்த தினத்தால் முடியும் என்றால் நாமும் கொண்டாடுவோம் - உலகத் தாய்மொழி தினம்! வாழ்க தாய்மொழி... ஒருசிலர் பிழைப்புக்காக அல்ல... நம் எல்லோர் வாழ்வுக்காகவும்... நம்முடைய தாய்மொழி மட்டுமல்ல... எல்லோருடையதும்!!!

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம் - ஜெயகாந்தன்

சாம, தான, பேத, தண்டம்

"நான் என்னை ஒரு மேதையும் புனித வேசியும் போல் உணர்கிறேன்": அலெஹாண்ட்ரோ ஜோடராவ்ஸ்கிக்குச் சில கேள்விகள்