தமிழின் தலைசிறந்த எழுத்தாளர்களில் சுஜாதா ஒருவர். புதுமைப்பித்தன், ஜெயகாந்தன் போன்றவர்களுக்குக் கிடைத்த இடம் அவருக்குக் கொடுக்கப்படாவிட்டாலும் அவர்களைவிட அதிகம் பேரால் போற்றப்பட்டவர். சுஜாதாவை ஏன் அவருடைய வாசகர்கள் போற்றும் அளவுக்கு இலக்கியவாதிகள் போற்றுவதில்லை என்ற கேள்வி எப்போதும் இருந்து வருகிறது. அதற்கு இதுவும் ஒரு காரணமாக இருக்கலாம் என்று தோன்றுவது, அவர் ஜெயகாந்தனைப் போல சமூகத்தின் மீது அக்கறையும் கோபமும் கொண்டு அடித்தட்டு மக்களின் பிரச்சனைகளை அதிகம் எழுதாமல், சிக்கலான சமூக-அரசியல் பிரச்சனைகளுக்குள் தலையைக் கொடுக்காமல், தன் தனிப்பட்ட மனநிறைவுக்காகவும் பொழுதுபோக்குக்காகவும் பெரும்பாலும் நடுத்தர மற்றும் மேல்நடுத்தர வர்க்க - ஓரளவு படித்த மக்களுக்காகவும் அவர்களுடைய வாழ்க்கையையே அதிகம் எழுதியவர் என்பதாக இருக்கலாம் என்பது (இது போக நம் சிற்றறிவுக்குப் புலப்படாத பல்வேறு மற்ற காரணங்களும் இருக்கக் கூடும்). ‘ஸ்ரீரங்கத்து தேவதைகள்’ படித்தபோது அதுவே மேலும் உறுதிப்பட்டது. இது ஒரு சிறுகதைத் தொகுப்பு. மொத்தம் பதினான்கு கதைகள் இருக்கின்றன. ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதத்தில் நம்மை ஈர்க்கும். அடித