ஸ்ரீரங்கத்து தேவதைகள்

தமிழின் தலைசிறந்த எழுத்தாளர்களில் சுஜாதா ஒருவர். புதுமைப்பித்தன், ஜெயகாந்தன் போன்றவர்களுக்குக் கிடைத்த இடம் அவருக்குக் கொடுக்கப்படாவிட்டாலும் அவர்களைவிட அதிகம் பேரால் போற்றப்பட்டவர். சுஜாதாவை ஏன் அவருடைய வாசகர்கள் போற்றும் அளவுக்கு இலக்கியவாதிகள் போற்றுவதில்லை என்ற கேள்வி எப்போதும் இருந்து வருகிறது. அதற்கு இதுவும் ஒரு காரணமாக இருக்கலாம் என்று தோன்றுவது, அவர் ஜெயகாந்தனைப் போல சமூகத்தின் மீது அக்கறையும் கோபமும் கொண்டு அடித்தட்டு மக்களின் பிரச்சனைகளை அதிகம் எழுதாமல், சிக்கலான சமூக-அரசியல் பிரச்சனைகளுக்குள் தலையைக் கொடுக்காமல், தன் தனிப்பட்ட மனநிறைவுக்காகவும் பொழுதுபோக்குக்காகவும் பெரும்பாலும் நடுத்தர மற்றும் மேல்நடுத்தர வர்க்க - ஓரளவு படித்த மக்களுக்காகவும் அவர்களுடைய வாழ்க்கையையே அதிகம் எழுதியவர் என்பதாக இருக்கலாம் என்பது (இது போக நம் சிற்றறிவுக்குப் புலப்படாத பல்வேறு மற்ற காரணங்களும் இருக்கக் கூடும்). ‘ஸ்ரீரங்கத்து தேவதைகள்’ படித்தபோது அதுவே மேலும் உறுதிப்பட்டது. இது ஒரு சிறுகதைத் தொகுப்பு. மொத்தம் பதினான்கு கதைகள் இருக்கின்றன. ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதத்தில் நம்மை ஈர்க்கும்.

அடித்தட்டு மக்களைப் பற்றியும் அவர்களின் வாழ்வியற் பிரச்சனைகளைப் பற்றியும் எழுதும்போது அதில் இருக்கிற சிக்கல் என்னவென்றால், யாரைப் பற்றி எழுதுகிறோமோ அவர்களே அதைப் படிக்கும் வாய்ப்பு மிகவும் குறைவு. அவர்களுக்குப் பிழைப்பைக் காப்பாற்றிக் கொள்வதே பெரும்பாடாக இருக்கையில் நூற்றுக் கணக்கில் பணம் போட்டு வாங்கிக் கதை படிக்கவா முடிந்து விடப் போகிறது? அது வயிற்றைத்தான் நிரப்புமா? அதனால் வரவேற்பு பெரிதாக இராது. அப்படி ஒருவேளை அவர்கள் படிக்கிற மாதிரி எழுத வேண்டுமென்றால் பாணியே முற்றிலும் மாறுபட்டதாக இருக்க வேண்டும். அவர்களின் பிரச்சனைகளைப் பற்றிப் பேச முடியாது. அந்தச் சிக்கல் சுஜாதாவுக்கு இருக்கவில்லை. யார் வாழ்க்கையைப் பற்றி அதிகம் எழுதுகிறாரோ அவர்களே அதை வாசிப்பார்கள். அதனால் அதை முழுமையாக ரசித்துப் படிப்பார்கள். அதனால் அவர்களுடைய மனதில் இடம் பிடித்து விடுவது எளிது. நூல் முழுக்கப் பல இடங்களில் நம் வாழ்க்கையில் நடந்த இத்தனை நிகழ்வுகள் இவர் வாழ்க்கையிலும் நடந்துள்ளனவா என்று வியப்பான வியப்பாக இருக்கிறது. நம் தலைமுறையில் பேரூர்களில் - சிறுநகரங்களில் – நகரங்களில் பிறந்து வளர்ந்த நடுத்தர வர்க்கத்துப் பிள்ளைகள் எல்லோருக்கும் இருந்த அனுபவங்கள் அவருக்கும் இருந்திருக்கின்றன. அது மட்டுமல்லாமல், நான் பாட்டி வீட்டில் வளர்ந்தவன், படிப்புக்குப் பிந்தைய வாழ்க்கையைப் பெங்களூரில் கழிப்பவன் – களிப்பவன், தொழில்நுட்பத் துறையில் பணிபுரிபவன் என்பதால், அவர் மீதும் அவர் எழுத்துக்கள் மீதும் தனிப்பட்ட முறையில் எனக்குக் கூடுதல் ஈடுபாடு உண்டு. வீட்டுக்காரி திருச்சி என்பதால் திருச்சியைச் சுற்றிய பெயர்களும் பழக்கப்பட்டவையே. அதனால் கதைகளில் சொல்லப்படும் பெரும்பாலான இடங்கள் நமக்குப் பழக்கப்பட்டவையாகவே இருக்கின்றன.

ஒரு வேறுபாடு என்னவென்றால் எங்கள் ஊரில் நான் வளர்ந்த காலத்தில் இருந்த கிட்டி (அவர் அதற்கு வேறு பெயர் சொல்கிறார். தமிழ்நாட்டில் ஒவ்வொரு ஊரில் அதற்கு ஒவ்வொரு பெயராக இருக்கிறது. சில பகுதிகளில் கிட்டிப்புல் என்றும் சில பகுதிகளில் கிட்டிக்குச்சி என்றும் சென்னையில் கில்லிதாண்டா என்றும் அழைக்கப்படுவது, எங்கள் ஊரில் வெறும் ‘கிட்டி’) போன்ற விளையாட்டுகள் அவர் வளர்ந்த காலத்திலேயே இருந்தது என்பது வியப்பாக இருக்கிறது. அவர் ஒரு கதையில் சொல்வது போலவே நானும் ஒருமுறை ஒரு கிலோ மீட்டர் தொலைவு காட்டுக்குள் எல்லாம் அலைக்கழிக்கப்பட்ட அனுபவம் உடையவன். நான் வளர்ந்த காலத்தில் சீரங்கத்தில் (நூலின் தலைப்பு ‘ஸ்ரீரங்கத்து தேவதைகள்’ என்றாலும் நூல் முழுக்க மக்களின் பேச்சு பாணியில் ‘சீரங்கம்’ என்றே சொல்கிறார்) கிட்டி விளையாடி இருக்க மாட்டார்கள் என்றே நினைக்கிறேன். சீரங்கத்தை விட ஓரிரு தலைமுறைகள் பின்தங்கியிருந்திருக்க வேண்டும் நாங்கள். ஏனென்றால் நான் பிறந்த பிறகுதான் எங்கள் ஊருக்குள் கிரிக்கெட் வந்தது. எனக்கிருந்த பல கிரிக்கெட் அனுபவங்கள் ஓரிரு தலைமுறைகளுக்கு முன்பே அவருக்கும் இருந்திருக்கிறது என்றால் அதுதானே பொருள். ஆனால் அப்போதே தஞ்சாவூரில் இருந்து கிரிக்கெட் ஆட வந்தவர்கள் ஆங்கிலம் பேசினார்கள் என்கிறார். நம்ம ஊரில் அது இப்போதும் இல்லை. எப்போதும் அது நடக்குமா என்றும் தெரியவில்லை.

ஆர்.கே.நாராயணின் மால்குடி போல சுஜாதாவின் சீரங்கமும் இந்திய இலக்கியங்களில் ஒரு முக்கிய ஊர் எனலாம் (“தமிழ் இலக்கியம் எப்படி இந்திய இலக்கியம் ஆகும்?” என்று யாரும் கேட்டுத் தொலைக்கக் கூடாது). சீரங்கத்தில் போலவே இளவட்டங்கள் எல்லாம் கூடிப் பேசும் ரங்கு கடை ஒன்று எல்லா ஊரிலும் இருக்கத்தான் செய்கிறது. பெரும்பாலும் அது தையற்கடையாக இருக்கும். அப்படி இளைஞர்கள் கூடும் அவையில், அவர்களுக்கு ஐடியா கொடுப்பவர்களாக வயதுக்கு மீறிய திருமணமான ஆசாமிகள் ஓரிருவரும், அவர்களிடமிருந்து ஐடியாக்கள் எடுத்துக்கொள்ள இன்னும் வயதுக்கு வந்திராத பிஞ்சில் பழுத்த பொடியர்கள் ஓரிருவரும் இருப்பார்கள். அங்குதான் பெரும்பாலான பையன்கள் அவ்வப்போது சிகரெட் வாங்கிக் கொடுத்தலுக்கு இடையில் தானும் அதைப் பழகி விடுவார்கள்.

வெளியில் இருந்து பார்க்கும் பிறருக்குப் பிராமணத் தெருக்களில் – குடும்பங்களில், தம் தெருக்களில் – குடும்பங்களில் இருக்கும் பிரச்சனைகள் இராதது போலத் தோன்றும். இந்த நூலைப் படிக்கும் போது அது தவறென்று புரியும். அவர்களுக்கென்று வேறுவிதமான பிரச்சனைகள். அதே நேரம் சேரிகளிலும் பாட்டாளித் தெருக்களிலும் இருக்கிற வாழ்வியல் பிரச்சனைகள் அவர்களுக்கு இல்லை என்பதும் புரிபடும். ஆங்காங்கே வறுமையும் உறவு சார்ந்த சிக்கல்களும் பற்றிப் பேசியிருக்கிறார். வெளிநாட்டில் போய் குடியேறி விடுகிற மகனால் வரும் வலி தாங்க முடியாததாக இருக்கிறது. சின்ன வயதில் நமக்கு நாயகனாகப் படுகிற ஒருத்தன் – கோமாளி போல இருக்கிற நம்மை எப்போதும் தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொண்டிருக்கிறவன், வாழ்க்கை நாடகத்தின் பிற்பகுதியில் நம்மைப் பார்த்துப் பொறாமைப் படும்படி எல்லாம் மாறிப்போய்விடுவதும், நம்மிடமே உதவி வேண்டி வந்து நிற்பதும், இளவயதில் ஏமாளிகளாக வாழ்வோருக்கு ஆறுதலைக் கொடுக்கும் கதை. பார்க்கவே கடவுள் மறுவுருவமோ என்று வியக்க வைக்கும் அளவுக்கு ஒழுக்கத்தோடும் பிரபந்தம் பாடிக்கொண்டும் தெய்வீகத்தன்மையோடு வளர்கிற ஏழை பிராமணப் பையன் ஒருவன், பிற்காலத்தில் சென்னையில் சினிமா ஸ்டூடியோவில் முற்றிலும் மாறுபட்ட ஒரு மனிதனாக வரும்போது ஏற்படும் உணர்வு விவரித்துச் சொல்ல முடியாதது. வளமான வாழ்க்கை வாய்க்கப் பெற்று தன்னைச் சுற்றியிருக்கும் மனிதர்களுக்கு மத்தியில் அவர்களைப் போல ஒரு கண்ணியமான வாழ்க்கை வாழ வேண்டும் என்கிற நெருக்கடி நம் வாழ்வில் ஏற்படுத்தும் மாற்றங்கள் அவ்வளவு எளிதாக ஏற்றுக்கொண்டுவிட முடிபவை அல்ல. ஆனால், அது எதுவும் பெரும்பாலும் தினந்தோறும் பிழைப்புக்கே போராடும் பாட்டாளி மனிதர்களின் வாழ்க்கையைப் போல துயரமும் கொடூரமும் நிறைந்ததாக இருப்பதில்லை என்பதையும் ஒத்துக்கொள்ளத்தான் வேண்டும்.

தம் வாழ்வை வளப்படுத்திக் கொள்ளும் விதத்தில் அறிவை வளர்த்துக் கொள்ளவும், தம் பொருளியல் போராட்டங்களுக்கு நடுவில் அமைதியாக ஓரிடத்தில் இளைப்பாறுவதற்காகவும் வாசிக்க வருகிறவர்களுக்கு தம்மைவிட்டுச் சற்றுத் தள்ளியிருக்கும் மற்ற மக்களின் பாடுகளைப் பற்றி அறிந்து கொள்வதில் எப்படி ஆர்வம் வரும்? நம்மைப் போன்றவர்களின் வாழ்க்கையை நமக்குப் பிடிக்கிற மொழியில் பேசுபவர்களைத்தானே நமக்குப் பிடிக்கும்! அப்படித்தான் நமக்கு சுஜாதா மிகவும் பிடித்து விடுகிறது.

அவருடைய எழுத்து முழுக்க விரவிக் கிடக்கும் நக்கலும் நகைச்சுவையும் அவர் மீது நமக்கு தீராத காதலை ஏற்படுத்தி விடுகிறது. அதுவும் படிப்பு, பணியிடம், நண்பர்கள், அறிவியல், தொழில்நுட்பம் என்று அவர் சொல்லும் எல்லாமுமே நம்முடையவற்றைப் போன்றே இருப்பதால் நம்மைப் போன்ற ஒருத்தர் என்ற வலுவான எண்ணம் நமக்கு ஊன்றிவிடுகிறது.

பத்மநாப ஐயங்கார், திருநாராயணன், ஸ்ரீனிவாசன், ராமானுஜம், பார்த்தசாரதி போன்ற பெயர்கள் முறையே பத்தணா, திண்ணா, சீமாச்சு, மாஞ்சு, பாச்சு என்றழைக்கப்படுவது ஆராய்ச்சிக்குரிய ஒரு பழக்கமாக இருக்கிறது. ஸ்ரீரங்கம் கூட சீரங்கம் என்றுதானே சொல்லப்படுகிறது. வடமொழியில் முறையாகப் பெயர் வைத்துக் கொண்டாலும் கூட, கூப்பிடும் போது தமிழ் ஒலிப்பில் இருக்கிற மாதிரி அதை ஒரு தட்டுத்தட்டி உருமாற்றிக் கொள்வது தமிழோடு இருந்த பிணைப்பன்றி வேறென்னவாக இருக்க முடியும்?

விஞ்ஞானி, தொழில்முனைவோர், அறிவாளிகள், படிப்பாளிகள், உலகத்தரம் வாய்ந்த பித்தலாட்டக்காரர்கள் என்று நிறைய வலுவான கதாபாத்திரங்கள் இருக்கிறார்கள். அப்படியான சூழல் நம் எல்லா ஊர்களிலும் இருப்பதில்லை. அது சீரங்கம் போன்ற சில ஊர்களில் மட்டுமே இருக்க முடியும். ஓரளவுக்கு விஞ்ஞானி, ஓரளவுக்குப் பித்தலாட்டம் செய்கிறவர்கள் - அப்படியானவர்கள்தாம் நம் ஊர்களில் இருப்பவர்கள். சராசரிகள். ஆனால் அவர்களை வைத்து இவர் சொல்லும் கதாபாத்திரங்களைப் புரிந்துகொள்ள முடிகிறது.

சர்ச்சைக்குரிய அரசியல் பேச்சுகளுக்குள் செல்வதைத் தவிர்க்கிறார். அடையவளைஞ்சான் ஆட்கள் பெரியார் கட்சியில் இருந்தது பற்றிப் பேசும்போது கூட அவர்கள் மீது எந்த வெறுப்புணர்வும் கொண்டிருந்தது போலப் பேசவில்லை. வடகலை, தென்கலையோடு சேர்த்து மூன்றாவதாக எச்சக்கலை என்று ஒன்றையும் சேர்த்துக் கொள்வார்கள் என்று வெளிப்படையாக - விளையாட்டாகச் சொல்லிக் கடந்து விடுகிறார். அவரே சொல்கிற மாதிரி அவர்களை எல்லாம் வேடிக்கையாக எடுத்துக் கொண்டு போய்விடுகிறார். அது கூட ஒருவித அறிவாளித்தனமான அரசியல் என்றும் சிலர் சொல்லக்கூடும்.

ஒரு கதையில் திராவிடர் கழகக் கட்சி ஆள் ஒருவரின் போலி வாழ்க்கை பற்றிச் சொல்கிறார். அது போலவே தீவிர இந்துத்துவ ஆள் ஒருவர் வேதாந்தம் என்ற தன் பெயரை மறையிறுதி என்று மாற்றிக் கொண்டு திராவிட அரசியல்வாதியாக மாறி அங்கே கிடைக்கும் வசூலை வறுமையில் வாடும் இந்தி வாத்தியாருக்குக் கொடுக்கும் கதை திராவிட அரசியல்வாதிகளுக்குப் பெரும் பேசுபொருளாக இருந்திருக்கலாம். சீரங்கத்தின் வைதீக மரபைப் பெருமையாகச் சித்தரிக்கும் அதே வேளையில் அறிவியலுக்கு எதிரான மூட நம்பிக்கைகளையோ பக்தியையோ கூட விதைக்க முயலவில்லை. ஊரோடு நாலாயிரத்திவ்விய பிரபந்தம் ஓதுவார்கள் என்பது மட்டும் அடிக்கடி வருகிறது. சீரங்கத்துக்காரர் என் நண்பர் இராம்பிரசாத் கூட, “எங்கள் ஆட்கள் பிரபந்தம் எழுதியும் படித்தும் வளர்த்ததைவிடவா கருணாநிதி தமிழ் வளர்த்து விட்டார்?” என்பார். சிக்கலைக் குறைத்துக் கொள்வதற்காகக் கருணாநிதியை உரையாடலை விட்டு ஒதுக்கி வைத்துவிட்டுப் பார்த்தால், அந்த ஆதங்கத்தில் இருக்கிற நியாயம் புரியத்தான் செய்கிறது.

மொத்தத்தில், சுருக்கமாகச் சொல்ல வேண்டுமானால், அருமையான கதைகள்; திகட்டாத எழுத்து நடை; தமிழ் வாசிப்பு உலகத்துக்குள் செல்ல நினைப்பவர்கள் வாசிக்க வேண்டிய முதற் பத்து நூல்களில் இது ஒன்று எனலாம். நீங்கள் என்ன நினைப்பீர்களோ தெரியவில்லை. J

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம் - ஜெயகாந்தன்

"நான் என்னை ஒரு மேதையும் புனித வேசியும் போல் உணர்கிறேன்": அலெஹாண்ட்ரோ ஜோடராவ்ஸ்கிக்குச் சில கேள்விகள்

சாம, தான, பேத, தண்டம்