நாலாரம்
மன்னர் உள்ளே நுழையும் போதே அமைச்சர் சீவலப்பேரியாரின் பக்கம் திரும்பி: "அய்யர்வாள்! பாண்டியர்கள் ஏன் கொற்கையிலிருந்து கூடலுக்கு மாறினார்கள் என்ற தெளிவான விளக்கங்கள் உம்மிடம் இருக்கின்றனவா? அப்புறம் ஏன் தென்காசிக்கு மாறினார்கள்? இது பற்றியெல்லாம் இன்று இரவுக்குள் படித்து வந்து சொல்ல முடியுமா?"
"கேள்விப்பட்டேன் அரசே! உங்கள் மனதில் ஓடும் குழப்பம் பற்றிக் கேள்விப்பட்டேன். நல்ல யோசனைதான். நாம் இப்போதே அனைத்தையும் மாற்ற வேண்டியதில்லை. இரண்டு தலைநகரங்கள் வைத்துக்கொள்வோம்."
"அதுவும் உம் காதுக்கு வந்துவிட்டதா? கெட்ட காதய்யா உமக்கு!"
"நல்ல காதென்று சொல்லும் அரசே!"
அமைச்சரின் முகத்தில் அதே வழக்கமான பெருமிதப் புன்னகை.
முதற் கூட்டத்திலேயே பெரும் பெரும் முடிவுகள் எல்லாம் எடுக்கப்பட்டன. நூலகம், காவல் நிலையம், கல்லூரி ஆகியவை முக்கியத் தீர்மானங்கள். காமராஜரிடம் அரிசி கொடுப்பதாகக் கை தூக்கியது போலவே, இப்போதும் இடம் கொடுக்கவும் வசூல் பிரிக்கவும் ஏகப்பட்ட ஆள்கள் கை தூக்கிவிட்டார்கள். ரெட்டியட்டி, சங்லிங்காரம், வௌவ்வாத்தொத்தி என்று சுற்றியிருக்கும் ஊர்க்காரர்களும் அடக்கம். அவர்கள் எல்லோருக்குமே நாலாரந்தானே அடையாளம் - அடைக்கலம் எல்லாமே! கண்ணை மூடி முழிப்பதற்குள் வேலை சடசடவென முன்னேறி, மூன்றுமே நடந்து முடிந்துவிட்டது.
*
ஆனால் அங்கிருக்கிற அரண்மனை அவ்வூர்க்காரர்களுக்குத் தம் ஊரும் ஒரு தலைநகர வரலாறு உடையதுதான் என்ற நம்பிக்கையைக் கொடுத்திருக்கிறது. எட்டயபுரத்து ஜமீனின் வடக்கு எல்லையாக இருந்ததால் இங்கும் ஓர் அரண்மனை கட்டினாராம் எட்டயபுரத்து மன்னர். முதலில் இரட்டைத் தலைநகரங்கள் வைத்துக்கொள்ள விரும்பித்தான் நாலாரத்தில் அரண்மனை கட்டினாராம். 12 மைல் தொலைவுக்கு அங்கிருந்து இங்கு சுரங்கப் பாதை கட்டினாராம். யார் அந்தத் திட்டத்தைக் கலைத்துவிட்டதோ தெரியவில்லை. இரட்டைத் தலைநகரங்களில் ஒன்றாக இருந்திருக்க வேண்டிய நாலாரம் எல்லை நகரமாக மட்டுமே இருந்து முடிந்துவிட்டது. இப்போது சுரங்கப் பாதையும் மூடிக்கிடக்கிறது.
இந்த அவமானங்களிலிருந்தெல்லாம் மீள ஒரே வழிதான் இருக்கிறது. ஊரின் இழந்த பெருமைகளையெல்லாம் மீட்க வேண்டும். அதற்கு ஊர்க்காரர்கள் நன்றாகப் படித்து முன்னுக்கு வர வேண்டும். அரசாங்கத்திலும் தனியார் துறையிலும் பெரிய பெரிய இடங்களைக் கைப்பற்ற வேண்டும். அதற்கான உதவிகளை ஊரே முன்னெடுத்துச் செய்ய வேண்டும். ஊர் என்றால் நாலாரம் மட்டுமில்லை; பக்கத்திலிருக்கிற பள்ளிவாசல்பட்டி, கவுண்டன்பட்டி, புதுப்பட்டி எல்லாப் பட்டியும் சேர்ந்ததுதான் நாலாரம். விருப்பப்பட்டால் புதூரும் சேர்ந்துகொள்ளலாம். ஊர்க்காரர்கள் என்றால் இப்போது நாலாரத்தில் இருப்பவர்கள் மட்டுமில்லை, கடந்த நானூறு ஆண்டுகளில் இங்கு வாழ்ந்தவர்கள், வேறு ஊரில் வாழ்ந்துகொண்டு இங்கு வந்து வேலை மட்டும் பார்த்துவிட்டுச் செல்பவர்கள், ஊரைவிட்டுப் போனவர்கள் என்று எல்லோரும் அடக்கம். நாலாரத்துக்காரன்னா மற்ற ஊர்க்காரர்களைப் போல இருக்கக் கூடாது. எந்தச் சீமையில் இருந்தாலும் சரி, அவன் நினைப்பெல்லாம் இங்கயேதான் இருக்கணும். குடும்பம் இங்கு இருந்தாலும் சரி, குடும்பத்தோடே ஊரைவிட்டுப் போயிருந்தாலும் சரி.
காமராஜர் மக்கள் உதவியோடேயே மதிய உணவுத் திட்டம் அறிமுகப்படுத்தணும்னு சொன்ன உடனேயே, "பள்ளியொடம் போற பிள்ளைகளுக்கு - அதுவும் நம்ம பிள்ளைகளுக்கு - சோறு போட அரிசி குடுக்குறது ஒரு பெரிய விசயமாப்பா!" என்று தமிழ்நாட்டிலேயே முதன் முதலாக் கை தூக்குன ஊர் இந்த ஊர்.
திருச்சியைத் தமிழகத்தின் தலைநகராக்க வேண்டுமென்று சேரப் பெருங்குழந்தை இராமச்சந்திரன் சொன்ன போது, "திருச்சி என்றால் திருச்சியா? உறையூர்தான்!" என்று உறையூரில் இருந்து ஒரு குரலாவது சொல்லியிருக்குமா என்று தெரியவில்லை. "உறையூருக்கும் முன்பு எங்கள் ஊர்தான் தலைநகரம். அதனால் இங்குதான் மாற்ற வேண்டும்!" என்று பழையாறையிலிருந்து ஒரு குரலாவது சொல்லியிருக்குமா என்று தெரியவில்லை. நிச்சயமாகச் சொல்ல முடியும், உறையூர்க்காரர்களையும் பழையாறைக்காரர்களையும் விட நாலாரத்துக்காரர்கள் ஊருக்கு உருத்தானவர்கள்.
1986-இல் நெல்லை மாவட்டம் இரண்டாகப் பிரிக்கப்பட்ட போது (இராமச்சந்திரனுக்கு இதே வேலை!), 'இதுவே பழைய நாலாரமாக இருந்திருந்தால், தூத்துக்குடி மாவட்டம் என்பதற்குப் பதிலாக நாலாரம் மாவட்டம் என்று அறிவிக்க வேண்டும் என்று போராட்டம் நடத்தியிருக்கலாம். இப்போதிருக்கிற நிலைமைக்கு முதலில் ஒரு பேருந்து நிலையம் கொண்டுவந்துவிட வேண்டும். அதுவரை வேறு எது பற்றியும் பேச வேண்டாம்!' என்று விட்டுக்கொடுத்து விட்டார்கள். மாவட்டத் தலைநகரம் என்பதெல்லாம் பேராசைதான். இங்கு வந்திருக்க வேண்டிய தாலுகா அலுவலகமாவது வந்ததா? அதுவும் இல்லை. விளாத்தியொளத்தில் போய் விட்டுவிட்டார்கள். அது கூடப் போகட்டும். ஓர் ஒன்றியத் தலைநகருக்குக் கூடவா வக்கில்லாமல் போய்விட்டோம்! அதையும் கொண்டு போய்ப் புதூரில் இறக்கினார்கள். கொஞ்ச காலம் முன்பு வரை 'நாலாரம் புதூர்' என்று சொல்லிக்கொண்டிருந்த புதூர்க்காரர்களுக்கு இப்போது அப்படிச் சொல்வதில் ஏதோ மரியாதைக் குறைவாகப் படுகிறது. 'விளாத்தியொளம் புதூர்' என்று சொல்லிக்கொள்ளத் தொடங்கிவிட்டார்கள். போதாக்குறைக்கு நாலாரத்துக்கு முன்பு புதூர் போடத் தொடங்கிவிட்டார்கள். புதூர் நாலாரமாம்! புதூர் நாலாரம்!
காமராஜரின் உடன் இருந்து மதிய உணவுத் திட்டத்தின் சிற்பியாகச் செயல்பட்டவர் நெ து சுந்தரவடிவேலு. காமராஜரும் நெ து சுவும் திட்டத்தை எப்படி நடைமுறைப் படுத்துவது என்பது பற்றிப் பேசிக்கொண்டிருக்கிறார்கள். காமராஜர் சொல்கிறார்: "நாலாரத்துக்காரங்யளப் பாத்ததுக்குப் பெறகு நான் ஒரு முடிவுக்கு வந்துட்டேன். இனி என்ன ஆனாலும் பரவால்ல. இந்தத் திட்டத்த நடமொறப்படுத்தாம நான் ஓயப் போறதில்ல. அந்தூருக்காரங்யளுக்கு முடியுறது மத்த ஊர்க்காரங்யளுக்கு எப்பிடி முடியாமப் போகும்! அதையுந்தான் பாத்துருவமே!"
அப்படி எல்லாம் இருந்தவர்களுக்கு இடையில் ஓர் இருபது முப்பது ஆண்டுகள் இந்த 'ஊர்க் கிறுக்கு' இல்லாமல் ஆகியிருந்தது. அதுதான் இழந்ததை எல்லாம் மீட்க முடியாமல் போனதற்குக் காரணம். மாசாமாசம் ஊர்க் கூட்டம் நடந்ததை மறந்துட்டு, சாதிவாரியாத் தெருக் கூட்டம் போடத் தொடங்குனப்பவே இனி இந்த ஊர் எழவே முடியாது என்பது முடிவாகிவிட்டிருந்தது. இப்போது மீண்டும் ஊர்க் கூட்டம் தொடங்கிவிட்டது. கூடவே ஊர்க் கிறுக்கும் முற்றத் தொடங்கியிருக்கிறது. எல்லாம் நல்லதுக்கே. இந்தக் கிறுக்கு நல்ல கிறுக்கு.
முதலில் ஒரு வாடகை இடத்தில் நூலகத்தைத் தொடங்கினார்கள். 'நூலகக் குழு'வின் தலைவர் ஆண்டி. ஆமாம், அந்த ஊரில் எதற்கெடுத்தாலும் ஒரு குழு போட்டுவிடுவார்கள். குழு போட்டால்தான் எந்த வேலையும் சூடு பிடிக்கும் என்பது அவர்களின் பல்லாண்டு நம்பிக்கை. பல்லாண்டு என்றால்... வெள்ளைக்காரன் காலத்திலிருந்தே! நூலகம் திறந்த அன்று, எல்லோர் முன்பாகவும் ஆண்டி தன் மகன் செழியனின் நான்கு பழைய அழுக்கேறிய நூல்களை நன்கொடையாக வழங்க வைத்தார். போட்டாக்காரர் அதை வளைத்து வளைத்துப் புகைப்படம் பிடித்தார். நாளை அது நாளிதழில் வருமாம் என்று பேசிக்கொண்டார்கள்.
"இந்த ஆண்டிப்பய மோசமான ஆளுப்பா. நமக்கு ஒரு வார்த்த சொல்லீருந்தா நம்மளும் ஆளுக்கு ரெண்டு பழய புஸ்தகத்த எடுத்துட்டு வந்திருக்க மாட்டமா! அவன் மட்டும் பகுமானமா எல்லார் முன்னாலயும் மகன நாலு புஸ்தகம் குடுக்க வச்சு போட்டாப் பிடிச்சுக்கிட்டான்!" என்று சங்லிங்காரத்துப் பெரியவர் ஒருத்தர் சடைத்துக்கொண்டார். அதை நிறையப் பேர் ஏற்றுக்கொண்டது போலும் இருந்தது. அடுத்த சில மணி நேரங்களிலேயே ஊரோடு எல்லோரும் அவரவர் வீட்டிலிருந்த பாட்டுப் புத்தகம், பாடப் புத்தகம், 'இயேசு அழைக்கிறார்' முதலான பழைய நூல்களைக் கொண்டுவந்து கொட்டியதிலிருந்தே அவர்களின் கோபம் புரிந்தது.
ஊர்க்காரப் பையன் ஒருத்தன் (ஊர்ல காளின்னுதான் பேரு. ஆனா சென்னைல எல்லாரும் கரிகாலன்றாங்களாம்!) பதிப்பகமும் புத்தகக் கடையும் வைத்திருக்கிறான். அவன் பங்குக்கு ஒரு வண்டி அனுப்பினான். 'இவன் யார்ரா நேத்து மழைக்கு இன்னைக்கு மொளைச்சு இம்புட்டுக் குடுத்துருக்கான்!'னு பொறுக்க முடியாம அதுக்குப் போட்டியா அடுத்தடுத்து வண்டி வண்டியா வந்து எறங்கி இப்ப இடம் பத்தாமச் சிரமப்படுறாக.
ஊரோட போய் சட்டமன்ற உறுப்பினரைப் பார்த்தார்கள். உடனடியாகக் காவல் நிலையமும் கல்லூரியும் வர ஏற்பாடு செய்ய வேண்டும் என்று மனு கொடுத்தார்கள். நாலாரம் இருப்பது விளாத்தியொளம் சட்டமன்றத் தொகுதி. அது நாலாரம் சட்டமன்றத் தொகுதியாக இருந்திருக்க வேண்டியது என்பது ஊர்க்காரர்களின் மூன்று தலைமுறைக் கோபம்.
"கண்டிப்பாச் செய்யுறேன். அடுத்த வாரம் சென்னை போறேன். அப்ப மொதலமைச்சரப் பாத்து நிச்சயமா இது பத்திப் பேசுறேன்."
கையெடுத்துக் கும்பிட்டார் மணல் திருடி மாணிக்கம். மோதிரத்தில் தலைவர் படம். உடனே ஒருத்தன் கையைத் தூக்கிச் சத்தம் கொடுத்தான்:
"நாலாரம் சட்டமன்ற உறுப்பினர்..."
அனிச்சையாகவே உடனிருந்த எல்லோரும் ஓங்கி ஒரு "வாழ்க!" போட்டனர்.
மீண்டும் "நாலாரம் சட்டமன்ற உறுப்பினர்..."
"வாழ்க!"
"ஏய், யார்யா அவன்! மண்டைல ஒரு போடு போடு. நேரங்கெட்ட நேரத்துல. எங்க வந்து என்ன பேசுறதுன்னு தெரியாம... முட்டாப்பய!"
"அவன் சொன்னதுல இப்ப என்ன தப்பாயிருச்சு! சொன்னாலும் சொல்லாட்டாலும் இது நாலாராம் தொகுதிதான். இன்னைக்கில்லைன்னா நாளைக்கு!"
இதற்கிடையில், "ஏய், இவன்லாம் ஒரு ஆளாய்யா! மணல் திருடிக்கிட்டு, மண்டையச் சொறிஞ்சிக்கிட்டுத் திரியிறவன். நேரத் தூத்துக்குடி போய் நம்ம மாவட்ட அமைச்சர்ட்டப் பேசுனம்னா வேலை நாலு நாள்ல முடிஞ்சிறும்" என்று அதற்கும் ஒருவர் சென்னையிலிருந்தே ஏற்பாடு செய்தார். அவரிடம் போய்ப் பேசினார்கள். அது மட்டுமா, ஊர்க்காரர்களில் பெரிய இடத்தில் இருக்கிற எவ்வளவோ பேர் இருக்கிறார்கள்... அவர்களும் பின்னணியில் அவர்களின் வேலைகளைச் செய்ய... வேலை கச்சிதமாக முடிந்து காவல் நிலையமும் கல்லூரியும் தற்காலிகக் கட்டடங்களில் இயங்கத் தொடங்கிவிட்டன.
அடுத்து, புதூரிடமிருந்து ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தைப் பிடுங்க வேண்டும், விளாத்தியொளத்திடமிருந்து தாலுகா அலுவலகத்தைப் பிடுங்க வேண்டும், தூதுக்குடியிலிருந்து மாவட்ட ஆட்சித் தலைவரின் அலுவலகத்தை அப்படியே பெயர்த்துக்கொண்டு வர வேண்டும் என்று திட்டங்கள் தீட்டப்பட்டுக்கொண்டிருந்தன.
போன ஊர்க்கூட்டத்தில், "என்னய்யா பேசிக்கிட்டு இருக்கிங்க! தமிழ் நாட்டுக்கே தலைநகரமாகுற தகுதி நம்ம ஊருக்குத்தான்யா இருக்கு" என்றான் கவுண்டட்டி மாரியப்பன்.
"டேய், நீ யாருன்னு தெரியாதா? போன வாரம் இதே எடத்துல ரசிகர் மன்றக் கூட்டத்துல ராமராசன மொதலமைச்சர் ஆக்காம அடங்க மாட்டேன்னு சபதம் போட்டவந்தான!"
"யே, விடுங்கப்பா. அவன் சட்டசவய நாலாரத்துக்கு மாத்தி, அதுல ராமராசனக் கொடியேத்த வக்யலாமுன்னு ஆசைப்படுறாம் போல!"
ஊரோடு கெக்கேப்பிக்கே என்று சிரித்தார்கள். அவனும் கோபப்படாமல் உடன் சிரித்தான்.
"மாப்ள, ஒங்கப்பா எம்ச்சாறுக்கு வேல பாத்து அவர மொதலமைச்சர் ஆக்குனாரு. நீ அதே மாரி ராமராசனுக்கு வேல பாத்து மொதலமைச்சர் ஆக்காம விட மாட்ட போலயே!"
"எம்ச்சாறு வாரிசு ராமராசந்தான மச்சான்! நல்லதுக்குக் காலமில்லப்பா!"
"யே, தேவையில்லாமப் பேசாதங்யப்பா. ஊர்க் கூட்டத்துல ஊர்ப் பேச்சு மட்டும் பேசுங்க!" என்று கடிந்து முடித்துவைத்தார் ராமராஜனை எம்ஜியாரின் வாரிசாக ஏற்கப் பிடிக்காத பெரியவர் ஒருவர்.
*
ஆண்டி மகன் செழியன் பொறியியல் படித்தான். அதன் பின்பு வணிக மேலாண்மையில் மேற்படிப்பு படித்து முடித்தான். ஆண்டி பரம்பரையில் அவனே முதல் பட்டதாரி. அதுவும் எம்.பி.ஏ.
ஆண்டி சொன்னது இன்னும் அவன் உள்ளத்தை விட்டு நீங்கவேயில்லை.
"நம்ம ஊர் எழந்ததையெல்லாம் திரும்பப் பிடிக்கணும்னா அது சாதாரணக் காரியமில்லப்பா. அதுக்கு ஊர்ப்பட்ட வேலைகள் பாக்கணும். அரசியல்லயும் அரசாங்க வேலைகள்லயும் யாவாரத்துலயும் நம்ம ஆளுகள நொழைச்சு விட்டுட்டா மட்டும் போதும்னு நெனைச்சிக்கிட்டு இருக்காங்க இங்க உள்ள ஏமாளிப் பயக. அதெல்லாம் பத்தாது. நாலாரத்தான் ஒருத்தன் தொழித்துறைல பெரிய்ய ஆளா வரணும். பெரிய்யன்னா... பெரிய்ய்ய! டாட்டா பிர்லா மாரி. வரைபடத்தையே மாத்தணும். அது அவங்க மாரி ஆளுகளாலதான் முடியும். அவங்க நெனச்ச எடத்துக்கு மொதலீட்டக் கொண்டு வர முடியும். திருப்பிவிட முடியும். அரசாங்கத்தையே ஆட்ட முடியும். அப்பிடி ஒருத்தன் இங்கருந்து வரணும்."
அப்படியே செழியன் பக்கம் திரும்பி அவன் கண்களிடம் கேட்டார். "நீ வருவியா? அப்பிடி ஒரு நாளு?" விளையாட்டாகத்தான் கேட்டார்.
"வந்துறவா?"
*
படிப்பு முடிந்ததும் பெங்களூர் போனான். இவனைப் போலவே நாலாரம் போன்ற ஓர் ஊரிலிருந்து வந்த ஒருவர் நடத்தும் சிறியதொரு நிறுவனத்தில் வேலை கிடைத்தது. அவருக்கு இவனை நிறையவே பிடித்துப் போய்விட்டது. அவர் இவனில் அவரைப் பார்த்தார். அவருக்கு அறுபது வயதுக்கும் மேலிருக்கும். ஆனாலும் எல்லோரும் அவரைப் பெயரைச் சொல்லியே அழைத்தார்கள். இவனுக்கு மனம் ஒப்பவில்லை. ஆனாலும் இவனும் அதைப் பழகிவிட்டான். நேர்காணலிலேயே, முதற் சில நிமிடங்களிலேயே அதைச் சரி செய்துவிட்டார்.
"ஹாய் செழியன். நான் சீனி."
"ஹலோ சார்."
"என் பெயர் சீனி."
"ஓகே சார்."
"என் பெயர் சீனி என்றேன்!"
அவனுக்குப் புரியவில்லை.
"இங்கே எல்லோரையும் பெயர் சொல்லியே அழையுங்கள்!"
"ஓ ஓகே ஓகே!" என்று வெட்கப்பட்டுக்கொண்டான்.
என்னதான் எம்.பி.ஏ.வாக இருந்தாலும் ஆங்கிலத்திலேயே பேசினாலும் அதுக்கும் ஒரு வயது வரம்பு இருக்குல்ல.
மற்றவர்கள் இருக்கும் போது சீனி தமிழ் பேச மாட்டார். தம் அடிக்கும் நேரத்தில் தனியாக இருந்தால் சில சொற்கள் தமிழில் பேசுவார். அதுவும் கூச்சத்தோடே பேசுவார். பெங்களூரில் அது பழக்கப்பட்ட பண்பாடுதான் என்பது பின்னர் புரிந்துவிட்டது. செழியனுக்கு அவரை அண்ணாச்சி என்று சொன்னால் நன்றாக இருக்கும் போல் இருந்தது. அதன் பின்பு அவன் நண்பர்களிடம் பேசும் போது மட்டும் அவரை அண்ணாச்சி என்றே குறிப்பிடுவான்.
அண்ணாச்சி அமெரிக்காவிலும் நான்கைந்து பேர் மட்டும் இருக்கும் ஒரு சிறிய அலுவலகம் வைத்திருந்தார். செழியனை அங்கே அனுப்பி வைத்தார். அண்ணாச்சியின் செல்லப்பிள்ளை என்ற பெயரோடு அமெரிக்கா போய் இறங்கியவன், அங்கிருந்துகொண்டே வேறொரு நிறுவனத்துக்கு மாறினான். ஐந்து நிமிடப் பாட்டில் எல்லாம் மாறுவது போல, செழியனின் வாழ்வில் மூன்று ஆண்டுகளில் எல்லாம் மாறியது. பணியில் ஒரு பெரிய இடத்தை அடைந்தான். அமெரிக்கப் பழக்கங்களை வைத்து அவனே ஒரு தனி நிறுவனம் தொடங்கும் அளவுக்குப் பெரிய ஆள் ஆனான். ஊர் திரும்பிச் சென்னையில் தன் நிறுவனத்தைத் தொடங்கினான். அது வெகு விரைவில் அமெரிக்கப் பழக்கங்களின் துணையோடு இந்தியாவின் தலைசிறந்த ஐந்து தொழில்நுட்ப நிறுவனங்களில் ஒன்றாகத் தலையெடுத்தது.
நன்றாகப் போய்க்கொண்டிருந்த கதையில் ஒரு புயல் அடித்தது. அடிக்கவிட்டால்தானே வியக்க வேண்டும்! ஒரு முறை ஊடகங்களைச் சந்தித்து, "நான் சென்னையை என் நிறுவனத்தின் தலைமையகமாகத் தேர்ந்தெடுத்ததற்காக உண்மையாகவே வருந்துகிறேன். பேசாமல் பெங்களூர் போயிருந்திருக்கலாம். அதுதான் எனக்கு எல்லாம் கொடுத்த நகரம். என் நலம் விரும்பிகளெல்லாம் அங்குதான் இருக்கிறார்கள். இருந்தாலும் சென்னையைத்தான் தேர்ந்தெடுத்தேன். ஏனென்றால், என்னால் சென்னையை வெறுக்க முடியாது. அது எனக்கு அவ்வளவு கடினம். இங்குதான் சொந்த வீட்டில் இருக்கும் உணர்வு கிடைக்கிறது. எனக்கிருக்கும் இந்த மண்ணின் மீதான காதல்தான் எல்லாத்துக்கும் காரணம். ஆனால் இனியும் என்னால் இங்கு தொழில் நடத்த முடியாது. எவரும் எந்தத் தொழிலும் செய்ய முடியாத அளவுக்கு இந்த நகரம் ஊழல்மயப்பட்டுச் சீழ் வடிகிறது. எதற்கெடுத்தாலும் பணம் கொடுக்க வேண்டியுள்ளது. கூடிய விரைவில் பெங்களூர் சென்று விடலாம் என்று எண்ணிக்கொண்டிருக்கிறோம்" என்றான்.
மறுநாள் காலை, செழியனின் அடையார் வீட்டில் தமிழகத்தின் முதலமைச்சர் இருந்தார். இருவரும் சேர்ந்து ஊடகங்களுக்கு ஒரு கூட்டறிக்கை வெளியிட்டனர்.
"நம் மண்ணின் மைந்தர் திரு. செழியன் அவர்களின் புகார்கள் அனைத்தையும் விசாரித்து நடவடிக்கை எடுக்க முதலமைச்சரின் தலைமையிலேயே ஒரு குழு அமைக்கப்படும். அடுத்த சில மாதங்களுக்கு, தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் தினமும் செழியன் அவர்களுடன் தொடர்பில் இருப்பார். முதலமைச்சர் வாரம் ஒரு முறை செழியனை நேரில் சந்திப்பார். இந்த மண்ணின் சொத்து எதையும் ஓரங்குலம் கூட வேறு எவருக்கும் விட்டுக்கொடுக்க மாட்டோம். செழியனும் அவர் நிறுவிய அனைத்தும் இந்த மண்ணின் சொத்துக்கள்."
செழியன் வளர வளர அவன் ஊரும் வளர்ந்தது. நாலாரம் வேறோர் ஊராக உரு மாறத் தொடங்கியது. ஊரில் உள்ள பள்ளிகளுக்கும் விழாக்களுக்கும் செழியனின் உதவிகள் வந்து இறங்கின. இப்போது அந்த ஊரின் இளைஞர்களுக்கும் சிறுவர்களுக்கும் ஒரு முன்னோடி இருக்கிறார். செழியனைவிடப் பெரிய கனவுகள் காணும் உரிமையை அவர்கள் பெற்றுவிட்டார்கள்.
இன்னோர் ஊடகச் சந்திப்பில், "செலவினங்களைக் கட்டுப்படுத்துவது மென்மேலும் சிரமமாகிக்கொண்டிருக்கிறது. மற்ற பல நாடுகளும் நம்மைத் துரத்தி வந்துகொண்டிருக்கிறார்கள். கூடிய விரைவில் பிலிப்பைன்ஸ், போலந்து போன்ற நாடுகள் நம்மைவிடக் குறைவான கட்டணத்துக்கு நம்மைவிட மேலான வேலை செய்து கொடுக்கும் இடத்துக்கு வந்தாலும் வியப்பதற்கில்லை. தொழில்நுட்பத் துறையில் நாம் தாக்குப்பிடிக்க வேண்டும் என்றால் புதுமையான வழிமுறைகள் கண்டுபிடித்து நம் செலவினங்களைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொள்ள வேண்டும். டிசிஎஸ், விப்ரோ போன்ற நிறுவனங்கள் கொச்சியில் அலுவலகம் போட்டுள்ளன. இன்ஃபோசிஸ் மைசூரில் போட்டுள்ளது. காக்னிசண்ட் கோயம்புத்தூரில் போட்டுள்ளது. அதுதான் சரியான வழி. இரண்டாம் கட்ட நகரங்களைத் தேடிப் போவதே நம் செலவினப் பிரச்சனைகளுக்கான ஒரே விடை" என்றான்.
ஆண்டி நினைவுபடுத்திக்கொண்டே இருந்தார். நல்ல நாலாரத்தானாக அவர் அதைச் செய்வதுதானே முறை!
"செழியா! நாங்கள்லாம் உன்ன எந்த எடத்துல பாக்கணும்னு நெனைச்சமோ அந்த எடத்துல நீ இப்ப இருக்குற. அதவிடப் பெரிய எடம்னே சொல்லலாம். எந்த நகரத்தின் வரைபடத்தையும் மாற்றும் வல்லமை கொண்டவனா இருக்குற. எனக்கும் இந்த ஊருக்கும் நீ கொடுத்த வாக்கு ஒன்னு இன்னும் மிச்சம் இருக்கு. மறந்துறாத. நேத்து நீ டீவீல பேசுனதப் பாத்தோம். ஊர் பூராம் அதே பேச்சுதான் இப்ப. நாலாரத்தின் நேரம் வந்துருச்சு போலயே! உங்கம்பெனியோட இரண்டாம் கட்ட நகரம் நம்ம ஊர்தான? எங்கயோ போறத இங்க கொண்டாந்து விட்ற வேண்டியதுதான?"
எப்படித்தான் தொடங்கியதோ. இப்போது நாலாரத்தில் எல்லோருமே அது பற்றி பேசத் தொடங்கிவிட்டார்கள்.
அடுத்த நாள், ஊடகங்களில் செய்தியானது.
"தென் தமிழகத்தின் ஏதோவொரு மூலையில் கரிசல் காட்டுக்குள் இடம் தெரியாமல் அடக்கமாக இருக்கும் இந்தச் சிற்றூர்தான் அடுத்த தலைமுறையின் பெங்களூரா? தமிழகத்தின் சிலிக்கன் பள்ளத்தாக்கா?"
"செழியனின் கனவு நனவாகப் போகிறதா?"
"இந்தப் பப்ளிக் லிமிடெட் நிறுவனத்தின் பெரும் முடிவுகள் எடுப்பது யார்? செழியனின் அலுவலகத் தோழர்களா? குடும்ப உறுப்பினர்களா?"
வேகவேகமாக மாற்றங்கள் நிகழ்ந்தன. ஊடகங்களும் மக்களும் அடுத்த சில மாதங்களில் ஊரில் நிகழப் போகும் - ஊர் காணப் போகும் மாற்றங்கள் பற்றியும் ஊர் தன்னைப் புதிய மெய்ம்மைக்கு எப்படியெல்லாம் பழக்கப்படுத்திக்கொள்ள வேண்டும் என்பது பற்றியும் அந்த ஊர் தன்னை ஒரு தொழில்நுட்ப மையமாக மாற்றிக்கொள்ள வேண்டும் என்றால் செய்ய வேண்டிய பத்து வேலைகள் என்னென்ன என்பன பற்றியும் தினுசு தினுசாகப் பேசிக்கொண்டார்கள். நிலபுலங்கள் வாங்கி விற்று விளையாடுபவர்களின் காட்டில் மழை கொட்டத் தொடங்கியது. புதிதாக நிறையப் பேர் அந்தத் தொழிலுக்குள் வந்தார்கள். சென்னையிலும் மதுரையிலுமிருந்து நிறையப் பேர் வந்து வந்து போனார்கள். சேட்டுகளும் தெலுங்கர்களும் வந்து போனார்கள். நிறைய இடங்கள் வாங்கிப் போட்டார்கள். ஊரின் நான்கு புறமும் முப்பது கிலோ மீட்டர் தொலைவில் உள்ள சாலையோரங்களில் இருக்கும் இடங்கள் அனைத்தையும் அவர்களே வாங்கினார்கள். சாலைகள் வேகவேகமாகத் தரமேறின. மாவட்டத்துக்குப் பொறுப்பான அமைச்சர் அடிக்கடி வந்து சென்றார். பக்கத்துக்கு மாவட்டத்து அமைச்சர்களும் வந்து சென்றார்கள். நாலாரத்தை வைத்து அவர்களுக்குள் முட்டல் மோதல் என்று கூடக் கதைகள் வந்தன.
செழியன் ஆண்டு முழுக்கவும் உலகெங்கும் சுற்றிக் கொண்டிருப்பான். ஆனால் தை மாதம் முதல் வாரம் ஊரில்தான் இருப்பான். அந்த ஒரு வாரத்தில் எந்த வேலைக்காகவும் அதில் சமரசம் செய்துகொள்வதில்லை. தவிர்க்கவே முடியாமல் போய்விட்ட ஒரே ஒரு முறை தவிர வாழ்க்கை முழுக்கவும் இதில் தவறியதில்லை. இந்தத் தைப் பொங்கலுக்கு இங்குதான் இருக்கப் போகிறான். இந்த ஒரு வாரத்தில் தொழில் தொடர்பாக அவனுடன் யாருமே பேச முடியாது. கடந்த சில மாதங்களில் தன் ஊரிலும் ஊரை வைத்தும் நடைபெறும் எல்லாவற்றையும் படித்துத் தெரிந்திருந்தான். ஆனால் அதை நேரடியாகக் கண்ணால் காண்பது வேறுபட்ட உணர்வாக இருந்தது.
உடம்பெல்லாம் புழுதியை அப்பிக்கொண்டு திரிந்த தெரு சிமெண்ட் சாலை போடப்பட்டு அடையாளம் தெரியாத அளவுக்கு மாறியிருக்கிறது.
நான் கபடியும் கிரிக்கெட்டும் விளையாண்ட அதே தெருவா இது? இப்போது இந்தத் தெருவில் கபடி விளையாட முடியுமா?
ஏதோவொரு ஐரோப்பிய நகரத்தில் பார்த்த தெரு போல இருக்கிறது. சிறு வயதில் ஆங்கிலப் புதினங்களில் படித்த தெருக்களைப் போல நம் தெரு இருந்தால் எப்படியிருக்கும் என்று எண்ணினேனே. நம் வாழ்காலத்தில் இது நடக்குமா என்று சந்தேகப்பட்டிருக்கிறோமே. இதோ நடந்துவிட்டதே!
எத்தனை பேருடைய கனவு! அப்பாவுக்கு எவ்வளவு பெருமையாக இருக்கும்! அப்பா மட்டுமா? அப்பாவைவிட இதற்காகப் பெருமைப்படும் எத்தனை பேர் இருப்பார்களோ! இதுதானே நானும் அப்பாவும் இந்த ஊரும் வாழ்நாளெல்லாம் ஆசைப்பட்டது! இன்று நிறைவேறியிருக்கிறது.
எல்லோரையும் போல பொங்கலன்று வழக்கத்தைவிடச் சீக்கிரமே எழுந்தான். குளித்துப் புது வேட்டி கட்டி, வழக்கம் போல வீட்டுக்கு வெளியே வந்து எல்லா வீட்டுக் கோலங்களையும் ஒரு நடை போய்ப் பார்த்துவிட்டு வரலாம் என்று புறப்பட்டான். கரும்பைக் கடித்துக்கொண்டே ஒவ்வொரு வீட்டு வாசலிலும் நின்று வேடிக்கை பார்த்த போது அதை யாருமே கவனித்ததில்லை. இன்று அவன் கவனிப்பதையும் கவனிக்கிறார்கள்.
"யெக்கா, இந்த வருசமும் உங்க கோலத்துக்குதாங்க்கா முதல் பரிசு!" என்று ஒவ்வோர் ஆண்டும் எதிர் வீட்டு அமீனாக்காவிடம் சொன்ன போது இதற்கு முன்பு அவர் பட்ட மகிழ்ச்சியை எவருமே பகிர்ந்துகொண்டதில்லை. இன்று நீண்ட நேரமாக அமீனாக்கா வெளியிலேயே தன் காலத்துக்கு அருகில் நின்று கொண்டிருந்தார் போலப் பட்டது.
மற்ற கோலங்களைப் பார்க்கும் முன்பே "யெக்கா, இந்த வருசமும் உங்க கோலத்துக்குதாங்க்கா முதல் பரிசு" என்று சிரித்தான். அவருக்கு அம்புட்டு மகிழ்ச்சி. எல்லோரும் அமீனாக்காவைப் பெருமை மிளிரப் பார்த்தார்கள்.
"மாப்ள, இன்னும் ஒரு கோலத்தக்கூடப் பாக்கல. அதுக்குள்ள ஒங்க அக்கா கோலந்தான் நம்பர் ஒன்னுண்ட்டீக!" என்று அத்துருமா (அப்துல் ரகுமான்) மாமா சிரித்தார்.
செழியனுக்குத் தன் சுற்றத்தில் ஏதோ உறுத்துவது போல இருந்தது. தன்னை வழக்கத்தைவிட அதிகமான கண்களும் கேமராக்களும் தொடர்வது போலப் பட்டது. இந்தப் பார்வைகளுக்காகக் கூசுபவன் அல்ல அவன். இதைவிடப் பெரும் எண்ணிக்கையிலான கவனத்தைப் பார்த்திருக்கிறான் - சமாளித்திருக்கிறான். ஆனால் இந்த இடத்தில் அது வேறுவிதமாக இருந்தது.
நான் வளர்ந்த தெரு. இதுவரை இந்தத் தெருவில் நான் என்ன செய்தாலும் அதைப் பற்றி எவரும் கண்டுகொண்டதில்லை. திடீரென இப்போது நான் மட்டுமில்லாது என் ஊரே இந்தக் கவனத்தைப் பெற்றிருக்கிறது. நானே சமாளித்து வெளிவந்து விட்டேன். என்னை உருவாக்கிய இந்த ஊர் இதைக் கையாள முடியாமலா போய்விடும்! செழியனும் அவன் தம்பியும் ஒரு சுற்று நடந்து சென்றுவிட்டு சீக்கிரமே வீடு திரும்பிவிட்டார்கள். சிமெண்ட் தரையில் வரையப்பட்டுள்ள கோலங்கள் வெறுந்தரையில் வரையப்பட்ட கோலங்களை விட அழகாகத்தான் இருக்கின்றன. எல்லாத்துக்குமே அதற்கான தளம் அமைத்துக் கொடுத்தால் அவற்றின் அழகும் பொலிவும் கூடத்தானே செய்யும்!
காணும் பொங்கலன்று யாரையாவது பார்க்க வேண்டுமாமே! அப்படியெல்லாம் யாரும் சொல்லிக்கொடுக்கவில்லை. ஆனாலும் எல்லோரையும் போய்ப் பார்த்தோம். அந்தப் பழக்கம் அப்படியே இன்னும் தொடர்கிறது. போன தையிலிருந்து இந்தத் தை வரை நடந்த எல்லாக் கதைகளின் சுருக்கத்தையும் கேட்டுக்கொள்ள வேண்டும். வெற்றி, தோல்வி, சாதனை, இழப்பு... எல்லாவிதமான கதைகளும் இருக்கும்.
இம்முறை முதலில் தன் பள்ளி நண்பன் கண்ணன் வீட்டுக்குப் போய்விட்டு வந்துவிடலாம் என்று புறப்பட்டான். கண்ணனின் சித்தப்பா அவருக்கே உரிய புன்னகையோடு வரவேற்றார்.
"வாப்பா... வாப்பா... சாயந்தரந்தான் வருவன்னு சொல்லிக்கிட்டு இருந்தேன். எல்லாம் உன் புண்ணியந்தாம்ப்பா, நெலங்கள்லாம் வெல குண்டக்க மண்டக்க ஏறீறுச்சு. மூணே மாசத்துல... என்னமோ படத்துல பாத்த மாரி... அடுத்த பொங்கலுக்குள்ள இந்தத் தெருவுல உள்ள முக்காவாசிப் பேரு கோடீஸ்வரனா ஆயிருவம் போலயே. ஆனா என்ன, இந்தத் தெருவுல வாழ மாட்டோம். அவளதான். எவளதான் கூடப் போகுதுன்னு தெரியலையே. ஆனா கூடிக்கிட்டே இருக்குப்பா. கேக்குற காசு குடுக்குறாங்க. எங்கெங்க இருந்தோ ஆளுக வருதுப்பா. எல்லாம் உன் ஆளுகதானாப்பா? எதோ நல்லாருந்தாச் சரி, சாப்பாட்டுக்குக் கருமாயப்பட்டுக் கெடந்த மக்க இன்னைக்கு இந்த இடத்துக்கு வந்திருக்கிறதுக்கு யார் காரணம்? நீதான! பெருமையா இருக்குப்பா. ஆனா நான் விக்கப் போறதில்ல. என்ன குடுத்தாலும் குடுக்கப் போறதில்ல. எத்தன தலமுற. அப்பிடி விட்டுற முடியுமா? என்ன, நான் மட்டும் தனியா மாட்டிக்கிறுவன் போல. வீட்டச் சுத்தி பூராம் இந்திக்காரனும் தெலுங்குக்காரனுமா இருப்பான்." சிரித்தபடியே சொல்லி முடித்தார்.
கண்ணன் வீட்டைவிட்டு வெளியே வரும் போதும் புதிய பார்வைகள். கண்டுகொள்ளவில்லை. அதெல்லாம் எப்போதோ பழகியாயிற்று. வீடு திரும்பினான்.
"அப்பா! நம்ம ஊர் எழந்தத எல்லாம் மீட்டுறுன்ற நம்பிக்கை வந்திருச்சா இப்ப?"
"ரெம்பவே!"
*
செழியனின் அந்த முக்கியமான ஊடகச் சந்திப்பு இன்று. அவனுடைய ஊடகச் சந்திப்புகள் எப்போதுமே பெரும் கவனம் பெறுபவை. அவன் பேசும் போது எல்லோரும் கேட்பார்கள் - நிறுவனத்துக்கு உள்ளும் சரி, வெளியிலும் சரி. நிறுவனத்தை நிறுவியவர் செழியன் என்றாலும் அது ஒரு வரையறுக்கப்பட்ட பொது நிறுவனம் (பப்ளிக் லிமிடெட் கம்பெனி). ஆனாலும் வரையறுக்கப்பட்ட தனி நிறுவனம் (பிரைவேட் லிமிடெட்) போலத்தான் இயங்குகிறது. இந்திய நிறுவனங்கள் நிறுவனர்களை மதிப்பவை என்றும் சொல்லலாம். அது மட்டுமில்லை, 70%-க்கும் மேல் பங்கு வைத்திருக்கும் ஒருவரை அப்படித்தானே மதித்தாக வேண்டும்!
செழியன் இம்முறை முற்றிலும் வேறுபட்ட ஓர் உடையில் வந்திருந்தான். வெள்ளை வேட்டி, வெள்ளைச் சட்டை, வெள்ளைத் துண்டு. இந்த நாடகம் யாரும் எதிர்பார்க்காததுதான்.
"இதோ இந்தியாவின் தலைசிறந்த ஐந்து தொழில்நுட்ப நிறுவனங்களில் ஒன்றின் தலைவர்... தமிழகத்து அரசியல்வாதியைப் போல உடை அணிந்து... ஓ, அதேதான், பொங்கலன்று போட்டிருந்த அதே வேட்டிதான். அதே உடைதான். மிக எளிதாகச் சொல்லிவிடலாம். அவர் இன்று என்ன அறிவிக்கப் போகிறார் என்று. இதோ இந்த நாயகன் பிறந்து வளர்ந்து ஆளான அவருடைய சொந்த ஊரான - கடந்த சில மாதங்களாகச் செய்திகளில் அடிபட்டுக் கொண்டிருக்கும் வரலாற்று நகரான நாலாரத்தில் இருக்கும் நம் செய்தித்தொடர்பாளர் தொடர்பில் வருகிறார். அவரிடம் பேசுவோம். அவர்தான் அங்குள்ள மக்களின் உணர்வுகளைப் படம் பிடித்துக்கொண்டு இருக்கிறார். அங்குள்ள மக்கள் என்ன பேசிக்கொள்கிறார்கள்? எப்படி உணர்கிறார்கள்? நீங்களே சொல்லுங்கள்." கேமராவை நோக்கிக் கத்திக்கொண்டிருந்தார் ஓர் ஆங்கிலச் செய்தித் தொடர்பாளர்.
"ஆம். நாங்கள் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறோம். செழியன் எங்கள் ஊரின் பெருமை. இன்று உலகத் தொழில்நுட்ப வரைபடத்தில் எங்கள் ஊருக்கு ஓர் இடம் ஏற்படுத்திக் கொடுக்கப் போகிறார். அந்த அறிவிப்புக்காகத்தான் நாங்கள் பேராவலோடு காத்திருக்கிறோம்." நடு வயது மனிதர் ஒருவர் ஆங்கிலத்தில் தெறிக்கவிட்டுக் கொண்டிருந்தார். அவரைப் பார்த்தால் நாலாரத்தின் தாக்கம் மட்டும் இருப்பது போல் தெரியவில்லை. மற்ற எல்லாம் சிறப்பாக இருந்தது.
கவனம் மீண்டும் சென்னை ஊடகச் சந்திப்புக் களத்துக்கு மாறியது.
"இதுவரை தமிழகத்தில் சென்னையில் மட்டுமே இயங்கிவரும் நம் நிறுவனம் இன்னும் இரண்டாண்டுகளில் இன்னொரு நகரத்தில் இருந்தும் இயங்கத் தொடங்கும். இதன் மூலம் உலகத் தொழில்நுட்ப வரைபடத்தில் புதியதொரு புள்ளியை வைக்கப் போகிறோம் என்ற இந்தச் செய்தியை உங்களுடன் பகிர்ந்துகொள்வதில் பேருவகை அடைகிறேன். பாண்டியர்களின் தலைநகரமாக இருந்த மூவாயிரமாண்டு வரலாற்றுச் சிறப்பு மிக்க மதுரை நகரமே வருங்காலத்தில் நம் நிறுவனத்தின் தலைநகரமாகவும் ஆகலாம் என்பதையும் இந்நேரத்தில் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன்."
கருத்துகள்
கருத்துரையிடுக