அறிவியலில் தமிழ் முழக்கம் செழிக்கச் செய்வோம்

ஈரோட்டு மகாகவிக்கு

எட்டயபுரத்துப் பெருங்கவியின் பெயர் தாங்கிய 

சிறுவன் என் பெருவணக்கம் 


சிறுவன்?


உங்கள் செய்திகளையும் கவிதைகளையும் 

தொலைக்காட்சியாய்க் கண்டு கேட்டு வளர்ந்த 

எழுபது-எண்பதுகளின் பிள்ளைகளில் ஒருவன் நான் 


எனவே 

இன்று உங்கள் முன் 

மீண்டும் சிறுவனாகிறேன் 


நேரச் சிக்கல் மதித்து 

ஏனையோர் எல்லோருக்குமாகச் சேர்த்து 

மொத்தமாக ஓர் ஊத்தப்ப வணக்கம்!


அறிவியலில் தமிழ் முழக்கம் 


கண்டிப்பா வேணுமா?


இன்று அறிஞர் வயப்பட்டிருக்கும் அறிவியலை 

அன்றே மக்கள்மயப்படுத்தியிருந்த...

ஆமைகளும் காகைகளும் கொண்டு 

ஆழியில் திசை கண்டு ஆண்ட 

ஆதி இனம் என்னும் அகந்தையா?


உலகம் தட்டையெனும் மட்டைகளுக்கு மத்தியில் 

நாண்மீன் கோள்மீன் என்றும் 

கோள்மீன் சூழ்ந்த இளங் கதிர் ஞாயிறென்றும் 

செஞ்ஞா யிற்றுச் செலவும் அஞ் ஞாயிற்றுப் பரிப்பும் என்றும் 

ஈராயிரமாண்டு முன்பே வானியல் பாடிய இறுமாப்பா?


மறுப்பது சாவை மருந்தென லாமே என்று 

அதற்கும் முன்பே அறிவித்துச் சென்ற 

மந்திர மூலரின் மக்கள் நாமென்ற ‘சித்த’ச் செருக்கா?

மந்திர மூலரின் மக்கள் நாமென்ற ‘சித்த’ச் செருக்கா?


எல்லாமுந்தான்!


எல்லாங்கொண்டு

இன்று என்ன செய்கிறீர் என்று 

எவரேனும் கேட்கும் போது 

புடைத்த நெஞ்சம் உடைத்துத்தான் போகிறது 


உலகம் நடைபயிலும் முன்பே 

ஓடி விளையாடியவர்கள் நாங்கள் 


அது அப்ப…

இப்ப?


உலகம் பறந்துகொண்டிருக்கிறது 

நாங்களும் பறக்கிறோம் 

இறக்கை மட்டும் இரவல் வாங்கியது 


நாசாவில் எங்களவர் 

நாலாயிரம் ஏழாயிரம் என்பதெல்லாம் 

பெருமையல்ல சென்ராயன் 


சரி விடுங்கள் 

கோவித்துக்கொள்ளாதீர்கள்


அது பெருமைதான் 


ஆனாலும் அது 

பசித்தவன் பழங்கணக்கு போல்

தாழ்வுற்று வறுமை மிஞ்சியவனின் தற்பெருமை போல் 


கலைச் செல்வங்கள் யாவும் 

கொணர்ந்தங்கு சேர்த்தபின்பே உண்மை வெற்றி 


கொணர்ந்து எங்கு?

இங்கல்ல... 

அங்கு...


இது திரவியம் தேடி வந்த இடம் 

நம் முன்னோரின் ஆமை கூட...

முட்டை போடக் கூடத் தாயகம் திரும்புமாம்


இது 

நம் பயணத்தில் பாதிக்கிணறுதான் 


எனவே 

கலைத் திரவியங்கள் யாவும் 

கொணர்ந்தங்கு சேர்த்தபின்தான்

உலகம் நம் வெற்றியை ஒத்துக்கொள்ளும் 


தேர் 

நிலைக்கு வந்தபின்தானே

திருவிழாவின் வெற்றி

அதுவே தேர்நிலை - வினைத்தொகை 

அதுவே தேர்நிலை - வினைத்தொகை 


இருமொழி 

மும்மொழி 

எழுபது மொழி கூடக் கல் 

ஒரு மொழியாவது உருப்படியாகக் கற்றபின் சொல் 


ஊருக்குச் சோறு போடுவது பெருமைதான் 


எப்போது?


உன் குடும்பம் தன்னிறைவு பெற்ற பின்பு  

உன் வயிறு மட்டும் நிறைந்ததும் அல்ல 

வயிறு மட்டும் நிறைந்ததும் அல்லவே அல்ல  

வயிறு மட்டும் நிறைந்ததும் அல்லவே அல்ல  


வளமெலாம் கொள்ளை கொடுத்துவிட்டு 

வயிற்றில் ஈரத்துணி கட்டித் தூங்கிய 

முன்னோர் வாழ்வின் வலிகள் கடக்க 

அரைகுறை ஆங்கிலம் படித்து 

எட்டுத்திக்கும் எடுபிடி வேலை செய்ய வந்தோம் 


அது சரிதான் 

அப்போதைக்கு அதுதான் சரி 

அது வரைக்குந்தான் அது சரி 


நாளை 

எவனோ நாகரிகமற்றவன் 

வயிற்றுக்குச் சோறில்லாமல் வந்தேறிய கூட்டம் என்பான் 

உன் ஊரெங்கே நாடெங்கே திரும்பிப் போ என்பான் 


எல்லா மண்ணிலும் 

இந்த எல்லைச் சாமிகள் 

இருக்கத்தான் செய்கிறார்கள்


அவர்கள் கைகளும் 

அவ்வப்போது ஓங்கத்தான் செய்வ


அதைத் தாங்கிக்கொள்ளும் 

பக்குவமும் மழுங்கத்தனமும் 

பிழைக்க வந்த உங்களுக்கும் எனக்கும் இருக்கும் 

வாழத் தொடங்கிவிட்ட நம் வாரிசுகளுக்கு?


பிழைக்க வந்த உங்களுக்கும் எனக்கும் இருக்கும் 

வாழத் தொடங்கிவிட்ட நம் வாரிசுகளுக்கு?


அதற்காகத்தான் சொல்கிறேன் 

நாம் படைக்கும் அறிவியல் 

நம் மொழியிலும் இருக்க வேண்டும் 

அப்போதுதான் நம்மை அசலென்று உலகேற்கும் 


விழுதுக்கு வேரோடு தொடர்பறுந்து போனால் 

வெட்ட வருபவர்களுக்குத்தான் வேலை மிச்சம்!


நீ படைத்தது 

உன் மொழியில் இல்லாவிட்டால் 

காப்புரிமை உன் பெயரில் இருந்தாலும் 

கடைசியில் உனக்கு அரைப்பெருமைதான்!


ஏழாயிரம் மொழிகளில் 

எத்தனையில் அறிவியல் இருக்கிறது?


வல்லரசுகள் 

வளர்ந்த நாடுகள் 

உண்மை வல்லரசுகளைச் சொல்கிறேன் 

அறிவியலில் 

அவரவர் மொழியைத்தான் முழங்குகின்றன 


தமக்கென்று 

அறிவியல் அற்றோர் 

மொழியற்றோர் 

வேற்றுமொழி கொள்வது இயல்புதான்


ஆனால் 

அறிவியலிலும் கால் பதித்து

செம்மொழியையும் கையில் வைத்துக்கொண்டு 

ஊரெல்லாம் நெய்க்கலையும் வெண்ணெய்த்தனம்?


ஆங்கிலம் படித்தால் அகிலம் ஆளலாம்

சரி...

இஸ்ரோவுக்கு மட்டும் ஏன் 

எப்போதும் 

தமிழ்வழி படித்தவரே தலைவர் ஆகிறார்?


இதற்கான விடையில் இருக்கிறது எல்லாம் 


நாம் செழிக்க 

நம் மொழி செழிக்க 

நம் அறிவியல் செழிக்க 

நம் மொழியில் அறிவியல் வேண்டும் 


வரப்புயரத்தான் நீர் உயரும் 

நீர் உயரத்தான் நெல் உயரும் 


தன்மானம் 

தாய்மொழி 

அறிவியல் 


இதில் 

எது வரப்பு?

எது நீர்?

எது நெல்?


ஹோமோசேப்பியன்ஸ் வரலாற்றிலேயே

உயிர் கொடுத்து மொழி காக்கும் இனம் 

ஒன்றே ஒன்றுதான் 

அவ்வழி வந்தோர் நீவிர் 


உமக்குத் தெரியாததா!


இணையக் கடலில் இயங்குவோருக்குத் தெரியும் 

தொழில்நுட்பத்தில் நடைபெறும் தமிழ்ப்புரட்சி 

மெரினாப் புரட்சி போல 

தன்னெழுச்சியானது 

தலைமையின்றி உதவியின்றி 

தன்னார்வத்தாலேயே வென்றது 


தன்னார்வத்திலேயே இவ்வளவென்றால் 

இவ்வளவு வென்றால் 

தலைமையும் உதவியும் இருந்தால் எவ்வளவு இயலும்!

எனவே அதையும் வேண்டுவோம் 


அதுவும் தானாய் வராது 


ஆனால் 

மக்களாட்சியில் 

மக்கள் கேட்பதை மறுக்க முடியாது 


(இன்னைக்கு ஒத்துக்கிறிங்களா? இன்னைக்கு!)


மக்களாட்சியில் 

மக்கள் கேட்பதை மறுக்க முடியாது 


அதற்கு 

முதலில் 

மக்கள் கேட்க வேண்டும் 


அதற்கும் முன்பு 

என்ன கேட்க வேண்டும் என்று 

தெரிய வேண்டும் 

தெளிய வேண்டும் 


ஒருபுறம் 

அறிவியலில் அத்தனையையும் 

தன்னார்வத்தோடு தமிழ்ப்படுத்துவோம் 


இன்னொருபுறம் 

அறிவியலில் அத்தனையும்

தமிழிலேயே வேண்டுமென்று 

அதிகாரத்தை அழுத்துவோம் 


அதன்பின் 

அத்தனையும் அகப்படும் 


தொழில்நுட்பியைத் தோழியாக்கியவர்களுக்கு 

அவள் அக்கா அறிவியலை அணுகுவது கம்பசூத்திரமில்லை


கம்பசூத்திரமும் ‘நம்ப’ சூத்திரந்தானே!


நன்றி. வணக்கம்.

 

*நவம்பர் 20, 2021 அன்று, வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவை விழாவில் நடைபெற்ற கவியரங்கத்தில், திரு. ஈரோடு தமிழன்பன் அவர்கள் தலைமையில் 'அறிவியலில் தமிழ் முழக்கம் செழிக்கச் செய்வோம்' என்ற தலைப்பில் வாசித்தது

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம் - ஜெயகாந்தன்

சாம, தான, பேத, தண்டம்

"நான் என்னை ஒரு மேதையும் புனித வேசியும் போல் உணர்கிறேன்": அலெஹாண்ட்ரோ ஜோடராவ்ஸ்கிக்குச் சில கேள்விகள்