புயலிலே ஒரு தோணி: இலக்கிய உலகத்தின் கரை சேராத கப்பல்
புயலிலே ஒரு தோணி: இலக்கிய உலகத்தின் கரை சேராத கப்பல்
தமிழில் எழுதப்பட்ட மிகச் சிறந்த புதினங்களில் ஒன்று என்று சொல்லப்படும் ஒரு நூலைப் பற்றிப் பலரும் பேசிக் கேட்டதில்லை என்பது வியப்பான முரண். அந்தப் புதினத்தை எழுதியவரைப் பற்றித் தேடினால், புதினத்தைவிட வியப்பான வாழ்க்கை ஒன்று நம் முன்னால் விரிகிறது. ப. சிங்காரம் எழுதிய புயலிலே ஒரு தோணி அப்படிப்பட்ட ஒரு நூல். அதன் ஆசிரியரின் வாழ்க்கையும், அவர் எழுதிய புதினத்தின் இலக்கியச் செறிவும், தமிழ் இலக்கிய உலகம் எதை நினைவில் வைத்துக்கொள்கிறது, எதை மறந்துவிடுகிறது என்ற கேள்வியை எழுப்புகின்றன.
தமிழ்நாட்டில் இலக்கிய வாசிப்பு ஒரு புறம் என்றால், இலக்கியம் சார்ந்த சந்திப்புகளும் செயல்பாடுகளும் இன்னொரு புறம் படு சுறுசுறுப்பாக நடந்துகொண்டே இருக்கின்றன. இலக்கிய வாசிப்பு என்பதே மிகச் சிறுபான்மையான ஒரு கூட்டத்தின் வேலையாக இருப்பதால், அவர்களில் பெரும்பாலோர் ஒரு குழுவாகக் கூடிக் கும்மாளம் போடுவது இயல்பான ஒன்றுதான். அந்தப் பத்துப் பேரே பல குழுக்களாகப் பிரிந்து அடித்துக்கொள்வது வேறொரு கதை. அதுவும் ஒரு போதைதான். அந்தக் கூட்டத்துக்குள் வராமலேயே, காலம் முழுக்கத் தன் அடையாளத்தை மறைத்துக்கொண்டு வாழ்ந்து முடித்தவர் ப. சிங்காரம். போதை பிடிக்காதவர்களும் இருக்கத்தானே செய்கிறார்கள்!
இரண்டாம் உலகப் போர்க் காலத்தில் தென்கிழக்காசிய நாடுகளில் ஒன்றான சுமத்ராவில், இப்போதைய இந்தோனேசியாவின் ஒரு பகுதியில், உள்ள மெடான் நகரத்தில் வாழ்ந்தவர் சிங்காரம். வட்டித் தொழிலில் ஈடுபட்டிருந்த செட்டிநாட்டு மனிதர்களுடன் அவர் வாழ்ந்திருக்கிறார். பிள்ளைப் பேற்றின்போது மனைவியை இழந்திருக்கிறார். போரின் காரணமாகத் தமிழ் இதழ்களோ நூல்களோ கிடைக்காமல் சிரமப்பட்ட காலத்தில், உலக மொழி நூல்களை நிறைய வாசித்திருக்கிறார். அவருடைய எழுத்து நடையில் அந்த வாசிப்பின் தாக்கம் இருப்பதாகச் சொல்லப்படுகிறது. பின்னர் மதுரையில் வந்து ஒரு விடுதி அறையிலேயே அடங்கி இறந்துவிடுகிறார். அந்தக் காலத்தில் தினத்தந்தி நாளிதழில் ஏதோ வேலை பார்த்திருக்கிறார். தன்னை ஓர் எழுத்தாளர் என்று அடையாளப்படுத்திக்கொள்ளக்கூட அவர் பெரிதாக முயன்றதில்லை என்கிறார்கள்.
தமிழின் தலைசிறந்த புதினங்களில் ஒன்று என்று சொல்லப்படும் நூலை எழுதியவரின் வாழ்க்கை இப்படி முடிந்துபோனது எவ்வளவு பெரிய துயரம்! அந்தப் புதினத்தைப் பதிப்பிக்கக்கூடச் சரியான பதிப்பகம் கிடைக்காமல் அவர் சிரமப்பட்டிருக்கிறார். ஓர் எழுத்தாளரின் வாழ்க்கை இப்படித்தான் அமைய வேண்டும் என்றெல்லாம் எதிர்பார்க்க முடியாது. ஆனால், ஒரு படைப்பின் இலக்கிய மதிப்புக்கும் அதன் ஆசிரியருக்குக் கிடைக்கும் அங்கீகாரத்துக்கும் இடையே இவ்வளவு பெரிய இடைவெளி இருக்கும்போது, அந்த இடைவெளியைக் குறித்துக் கேள்வி கேட்காமல் இருக்க முடியவில்லை.
கோணங்கியிடம் ஒரு முறை தமிழின் தலை சிறந்த எழுத்தாளர் யார் என்று கேட்ட போது, சற்றும் யோசிக்காமல் “சிங்காரம் தாத்தா” என்றார். சிங்காரம் தாத்தா மதுரையில் கழித்த அவருடைய இறுதிக் காலத்தில் அவரை நேரில் சந்தித்து அவருடன் நேரம் செலவிடும் பேறு பெற்றதைப் பற்றிப் பேசியதாகவும் நினைவு.
மெடானில் வாழும் தமிழர்கள்
இரண்டாம் உலகப் போர்க் காலத்து மெடான் நகரத்தில் வாழ்ந்த தமிழர்களின் வாழ்க்கையை இந்தப் புதினம் விரிவாகச் சித்தரிக்கிறது. கதையின் நாயகன் பாண்டியன். அருப்புக்கோட்டைப் பகுதியைச் சேர்ந்த நாடார் சமூகத்து ஆள். அவனைச் சுற்றி விரியும் உலகம், தென்கிழக்காசியா முழுவதும் வட்டித் தொழிலால் வேரூன்றியிருந்த செட்டிநாட்டு மனிதர்களின் உலகம். அவர்களுடன் கணக்குப் பார்க்கும் பிள்ளைமார், பிற சமூகத்தினர் எனப் பலரும் இருக்கிறார்கள்.
செட்டிநாட்டு வட்டித் தொழிலின் உலகத்தை இவ்வளவு விரிவாகவும் நுணுக்கமாகவும் தமிழில் வேறு எந்தப் புதினம் பதிவு செய்திருக்கிறது என்று எண்ண வைக்கிறது இந்த நூல். இங்கே வட்டித் தொழில் என்பது வெறுமனே பணம் கொடுத்து வட்டி வாங்கும் தொழில் அல்ல. அதற்கென்று ஒரு படிநிலை இருக்கிறது. மேலாள், அடுத்தாள், பெட்டியடிப் பையன் என்று வெவ்வேறு நிலைகள் இருக்கின்றன. பெட்டியடிப் பையனாக வாழ்க்கையைத் தொடங்கி, அடுத்தாளாகி, மேலாளாக உயர்வது ஒரு தொழில்சார் வளர்ச்சிப் பாதை. ஒவ்வொரு நிலையிலும் தனித்தனி வேலைகள், பொறுப்புகள், உறவுகள் இருக்கின்றன.
ஒவ்வொரு தொழிலுக்கும் அதற்கே உரிய சொற்கள் இருக்கும். அந்தத் தொழிலில் வாழ்பவர்களுக்குப் புரியும் சொற்களும், வெளியிலிருந்து பார்ப்பவர்களுக்குப் புரியாமல் போகக்கூடிய சொற்களும். அவற்றை விளக்குவதற்காக ஆசிரியர் தனியாகப் பாடம் நடத்துவதில்லை. கதாபாத்திரங்களின் வாழ்க்கையோடு அவை இயல்பாக வருகின்றன. ஒரு தொழிலின் மொழியைப் புரிந்துகொள்ளும்போது, அந்தத் தொழிலின் சமூக அமைப்பையும் புரிந்துகொள்ள முடிகிறது.
கணக்குப் பார்க்கும் வேலையில் இருப்பவர்களைப் பொதுவாகப் பிள்ளை என்று அழைப்பதும், வட்டித் தொழிலில் ஈடுபடுபவர்களைச் செட்டி என்று குறிப்பிடுவதும் இதே சமூகப் பயன்பாட்டின் ஒரு பகுதி. ஒருவருடைய சாதி அடையாளமும் அவருடைய தொழில் அடையாளமும் எப்போதும் ஒன்றாக இருப்பதில்லை. ஒரு குறிப்பிட்ட வேலையைச் செய்பவர்கள், அந்த வேலையோடு தொடர்புடைய பெயராலேயே அழைக்கப்படுவது வழக்கமாக இருக்கலாம். இந்த நுணுக்கங்களைப் பதிவு செய்வதில் புதினம் காட்டும் கவனம் குறிப்பிடத்தக்கது.
பாண்டியன் நாடார் சமூகத்தைச் சேர்ந்தவன் என்பதும், சிங்காரமும் அதே சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதும் இங்கே நினைவுக்கு வருகிறது. பாண்டியன் பாத்திரத்தில் ஆசிரியர் தன்னையும் சிறிது வைத்திருக்கலாம் என்று தோன்றுகிறது. ஆனால், அதற்கான நேரடி ஆதாரம் இல்லாமல் அதை உறுதியாகச் சொல்ல முடியாது. அதைவிட முக்கியமானது, பாண்டியன் வாழும் உலகத்தைப் பல சமூக அடையாளங்களுடன் சேர்த்துச் சித்தரிக்கும் விதம்.
இந்தப் புதினம் வட்டித் தொழிலைப் பற்றிய ஆவணம் மட்டுமல்ல. பணம், போர், பாலியல் உறவுகள், குடும்பப் பிரிவு, மொழி, சாதி, ஊர்நினைவு, வரலாறு என்று பலவற்றையும் ஒன்றாக வைத்துப் பார்க்கும் முயற்சி.
கையில் துப்பாக்கி இருந்தால் காசில்லாமலே தோசை
போர்க்காலப் புதினம் என்பதால் துப்பாக்கி அடிக்கடி வருகிறது. ஆனால், துப்பாக்கி என்பது போர்க்களத்தில் மட்டும் பயன்படுத்தப்படும் ஆயுதமாக இங்கே இல்லை. அது அன்றாட வாழ்க்கையின் விதிகளையே மாற்றக்கூடிய அதிகாரத்தின் அடையாளமாகிறது.
“கட்டுப்பாடில்லாத மனிதன் எவ்வளவு கொடிய விலங்கு!” என்ற வரியைப் படித்தபோது, இந்தப் புதினத்தோடு நமக்கு ஏதோ ஓர் உறவு ஏற்படலாம் என்ற நம்பிக்கை பிறந்தது. மனிதர்களைக் கட்டுப்படுத்தும் சமூக அமைப்புகள், சட்டங்கள், பழக்கவழக்கங்கள் எல்லாம் பலவீனமடையும்போது என்ன நடக்கும்? ஒருவனிடம் துப்பாக்கி இருந்தால், மற்றவர்கள் அவனுடன் நடந்துகொள்ளும் விதமே மாறிவிடும்.
“கையில் துப்பாக்கி இருந்தால் காசில்லாமலே தோசை” என்று ஒரு வரி வருகிறது. எவ்வளவு எளிமையான வரி! அதே நேரத்தில், பணத்துக்கும் அதிகாரத்துக்கும் இடையிலான உறவை எவ்வளவு தெளிவாகச் சொல்லிவிடுகிறது. வட்டித் தொழிலின் உலகத்தில் காசுதான் அதிகாரம். ஆனால், போர்க்காலத்தில் துப்பாக்கி காசைவிடப் பெரிய அதிகாரமாக மாறிவிடுகிறது.
ஜப்பான் அமெரிக்காவின் முத்துத் துறைமுகம் (பேர்ல் ஹார்பர்) தளத்தைத் தாக்கிய நிகழ்வு உள்ளிட்ட இரண்டாம் உலகப் போரின் பல முக்கியமான கட்டங்கள் புதினத்தில் பதிவாகின்றன. ஆனால், போர் என்பது வரலாற்றுப் புத்தகங்களில் தேதிகளுடனும் படைகளின் நகர்வுகளுடனும் முடிந்துவிடுவதில்லை. தென்கிழக்காசியாவில் வாழ்ந்த தமிழர்களின் வாழ்க்கையில் அது ஏற்படுத்திய மாற்றங்களையும் இந்தப் புதினம் பேசுகிறது.
அரசியல் வரலாற்றில் ஒரு போர் என்பது நாடுகளுக்கிடையிலான மோதல். ஆனால், அந்தப் போரின் நடுவே வாழும் மனிதனுக்கு அது வேறு மாதிரியான அனுபவம். தொழில் தொடருமா, உயிர் பிழைக்க முடியுமா, வீட்டில் இருக்கும் மனைவியும் குழந்தைகளும் என்ன ஆவார்கள், ஊருக்குத் திரும்ப முடியுமா என்ற கேள்விகள்தான் அவனுக்கு முன்னால் நிற்கின்றன.
புதினத்தின் சில இடங்களில், ஊரில் ஆண்கள் இல்லாமல் பெண்கள் மட்டும் விடப்பட்டிருக்கும் நிலையின் வலி மிகச் சுருக்கமாக வெளிப்படுகிறது:
“ஊர்ல காணிகரை ஒண்ணுமில்லை. எங்க ஆத்தாளும் தங்கச்சியும் என்ன பாடுபடுறாகளோ... நாங்க ஆம்பளைய்க ரெண்டு பேரும் ம்ஹ்ம்... ம்ஹ்ம்...”
இந்த இடத்தில் பேச்சு முழுமையாக முடிவதில்லை. சொல்ல வந்ததைச் சொல்ல முடியாமல் தடுமாறுகிறது. அந்தத் தடுமாற்றத்தில்தான் வலி இருக்கிறது. ஊரில் தாய் என்ன பாடுபடுகிறாளோ, தங்கை என்ன செய்கிறாளோ என்று கவலைப்படும் மனிதன், தன்னுடைய நிலையைப் பற்றியும் முழுமையாகப் பேச முடியாமல் நிற்கிறான்.
போர் என்பது வெறும் துப்பாக்கிச் சத்தம் அல்ல. தொலைவில் இருக்கும் குடும்பங்களின் வாழ்க்கையில் நுழைந்து, அவர்கள் ஒருவருக்கொருவர் செய்ய வேண்டிய கடமைகளையும் உறவுகளையும் மாற்றிவிடும் ஆற்றல்.
வாழ்வது அங்கே, உள்ளமெல்லாம் இங்கே
இந்தப் புதினத்தின் முக்கியமான சிறப்புகளில் ஒன்று, சுமத்ராவுக்கும் செட்டிநாட்டுக்கும் இடையே மாறி மாறிச் செல்லும் அதன் சொல்முறை. கதாபாத்திரங்கள் வாழ்வது மெடானில். ஆனால், உள்ளமெல்லாம் தங்கள் ஊர்களில் இருக்கிறது. மஞ்சு விரட்டு, கோயிற் திருவிழா, சந்தை, கடைகள், ஊர்மனிதர்கள் என்று ஒவ்வொன்றையும் நினைத்துப் பேசுகிறார்கள். ஒருமுறை நினைத்துப் பேசிவிட்டு அடுத்த ஒன்றுக்குச் சென்றுவிடுவதில்லை. மீண்டும் மீண்டும் அவற்றை நினைவுகூர்கிறார்கள்.
வெளிநாட்டில் வாழ்பவர்கள் தங்கள் ஊரை நினைத்துப் பேசுவது ஒன்றும் புதிதல்ல. ஆனால், இந்த நினைவுகள் கதையின் ஓர் ஓரத்தில் நிறுத்தப்பட்ட அலங்காரப் பொருட்கள் அல்ல. கதாபாத்திரங்களின் வாழ்க்கையின் ஒரு பகுதியாகவே இருக்கின்றன.
நான் சிறுவனாக இருந்த காலத்தில் எங்கள் ஊரில் இருந்த சில பழக்கங்கள் இந்தப் புதினத்தில் வரும்போது, அவற்றை விளக்கிக்கொண்டு வாசிக்க வேண்டிய தேவையே இல்லை. அவை எப்படி இருக்கும் என்பது எனக்குத் தெரியும். இதுதான் ஒரு குறிப்பிட்ட மண்ணில் வாழ்ந்த அனுபவம் வாசிப்புக்குத் தரும் தனித்துவமான மகிழ்ச்சி.
செட்டிநாட்டு வழக்கத்தில் பெயரின் முதல் எழுத்தை வைத்துப் பிறரை அழைப்பது ஒரு பழக்கம். அன்பழகனை ஆனா என்றும், ஆசைத்தம்பியை ஆவன்னா என்றும், பழனியைப் பானா என்றும், பாண்டியனைப் பாவன்னா என்றும் அழைப்பார்கள். அந்த வழக்கத்தை அறியாதவர்கள் சில பெயர்களை ஒன்றாகக் குழப்பிவிடவும் வாய்ப்பிருக்கிறது.
எங்கள் ஊரிலும் சிறுவனாக இருந்தபோது இந்தப் பழக்கம் ஓரளவுக்கு இருந்தது. அதனால் புதினம் முழுவதும் இந்த முறையில் பெயர்கள் வருவது எனக்கு இயல்பாகப் புரிந்தது. ஒருவரின் பெயரைச் சுருக்கி அழைப்பது வெறும் மொழிப் பழக்கம் மட்டுமல்ல. அது ஒரு சமூகத்தின் நெருக்கத்தையும், அதன் சொந்த அடையாள முறையையும் வெளிப்படுத்துகிறது.
அதேபோல, மஞ்சு விரட்டு பற்றிய குறிப்பும் எனக்கு நெருக்கமானது. மஞ்சு விரட்டு நடைபெறும் ஊர்களில் அதற்கு மஞ்சு விரட்டு என்றுதான் பெயர். இதில் எங்கிருந்து ஜல்லிக்கட்டு என்ற பெயரைப் பிடித்துக்கொண்டு வந்தார்களோ என்று தோன்றுகிறது. ஒரு இடத்தின் வழக்குச் சொல்லை அதற்குரிய மதிப்புடன் பயன்படுத்துவதில் என்ன சிரமம் இருக்கிறது?
ஒரு மொழியின் செழுமை அதன் பெரிய இலக்கியச் சொற்களில் மட்டுமில்லை. மக்கள் தங்கள் அன்றாட வாழ்க்கையில் பயன்படுத்தும் சொற்களிலும் இருக்கிறது. அவற்றைத் துல்லியமாகப் பதிவு செய்யும் எழுத்தாளர், ஒரு காலத்தின் பேச்சையும் நினைவையும் பாதுகாக்கிறார்.
மதுரை, இராமநாதபுரம் வட்டார மொழியின் நுணுக்கங்கள்
இந்தப் புதினத்தை வாசிக்கும்போது என்னை மிகவும் கவர்ந்தவற்றில் ஒன்று அதன் வட்டார மொழி.
ஓரிடத்தில் ‘டரியல்’ என்ற சொல் வருகிறது. "இம்சை அரசன் 23-ஆம் புலிகேசி "படத்தில் நமக்குப் பிடித்த சொற்களில் ஒன்று அது. அந்தச் சொல் இந்தப் புதினத்திலும் வருவது வியப்பாக இருக்கிறது.
ஆனால், அதைவிட முக்கியமானது மதுரை, இராமநாதபுரம் பகுதிப் பேச்சை எழுத்தில் எப்படிப் பதிவு செய்வது என்ற கேள்விக்கு இந்தப் புதினம் தரும் துய்ப்பு.
“ஊசி நுழைய இடம் இருக்குதுன்னா, நம்ம ஆளுக உத்திரத்தைத் தூக்கிக்கினு போவான். என்னடான்னா, அங்கின போயி சரி பண்ணிக்கிடலாமுனு போறமும்பாங்ய.”
இந்த வரியில் வரும் ‘போறமும்பாங்ய’ என்ற சொல்லை இரண்டு மூன்று முறை படித்துப் பாருங்கள். பேச்சின் ஒலியை எழுத்தில் கொண்டுவருவதில் இருக்கும் நுணுக்கம் புரியும். மதுரை, இராமநாதபுரம் வட்டாரப் பேச்சை எழுதும்போது, எந்த எழுத்து வடிவம் அந்த ஒலிக்கு நெருக்கமாக இருக்கும் என்ற குழப்பம் நீண்ட காலமாகவே உண்டு. ‘அவிங்க’ என்பதோ ‘அவைய்ங்க’ என்பதோ சில நேரங்களில் பேச்சின் இயல்பான ஒலியைத் தருவதில்லை. ‘அவங்ய’ என்பது அந்தச் சொல்மொழிக்கு இன்னும் நெருக்கமாக இருக்கிறது என்று எனக்குத் தோன்றுகிறது.
பாண்டி நாட்டுக் கதைகளை எழுதுகிறவர்கள் இதைக் குறித்துக்கொள்ளலாம்.
ஒரு வட்டார மொழியை எழுத்தில் எழுதுவது என்பது, பேச்சில் இருப்பதை அப்படியே எழுத்தாக மாற்றிவிடுவது மட்டும் அல்ல. எந்த ஒலியை எப்படிக் குறிக்கிறோம், எந்த இடத்தில் ஒரு சொல்லைச் சுருக்குகிறோம், எந்த இடத்தில் நீட்டுகிறோம் என்பதெல்லாம் முக்கியம். எழுத்தாளர் பேசும் மொழியின் உள்ளார்ந்த ஓசையைப் புரிந்திருக்க வேண்டும்.
சிங்காரம் தாத்தா இதைச் செய்திருக்கிறார். அவருடைய கதாபாத்திரங்கள் பேசும்போது, அவர்கள் வாழும் பகுதியின் மொழியை நாம் கேட்க முடிகிறது. இது வெறும் வட்டார வழக்குச் சொற்களைத் தூவிவிடும் உத்தி அல்ல. உரையாடல்களின் ஓட்டத்திலேயே அந்த மொழி இயங்குகிறது.
செட்டிநாட்டுப் பேச்சில் வரும் எள்ளலும் கிண்டலும் புதினம் முழுவதும் இருக்கின்றன. அவற்றைச் செம்மைப்படுத்தி, இலக்கிய நடைக்கு ஏற்றதாக மாற்ற வேண்டும் என்று ஆசிரியர் நினைத்ததாகத் தெரியவில்லை. மனிதர்கள் எப்படி பேசுகிறார்களோ, அந்தப் பேச்சின் இயல்பையும் அதன் முரட்டுத்தனத்தையும் அவர் அப்படியே கொண்டுவருகிறார்.
இன்னொரு இடத்தில் ‘தன் மூப்பு’ என்ற சொல் வருகிறது. “அந்தக் காலத்தில மாதிரி, புதுசா ஒரு காரியத்தைச் செய்யிறதுன்னாப் பெரியவுக தெரிஞ்சவுகளைக் கலந்துக்கினு செய்வமுங்கிறதெல்லாம் இப்ப ஏது? அதது தன் மூப்பாகி ஆட்டம் போடுது.”
தானே தன்னை முதிர்ந்தவனாக நினைத்துக்கொள்வது. அந்தச் சொல்லில் இருக்கும் பொருள் எனக்குப் பிடித்திருந்தது. ஒருவருக்கு வயது ஏறுவது வேறு; அவர் தன்னைப் பெரியவர் என்று நினைத்துக்கொண்டு செயல்படுவது வேறு. ஒரு சொல் இவ்வளவு துல்லியமாக ஒரு மனநிலையைப் பிடித்துவிடுகிறது.
தமிழ்ப் பெருமையைப் பற்றிய கேள்விகள்
சிங்காரம் சங்க இலக்கியம் உள்ளிட்ட பழந்தமிழ் இலக்கியங்களை நன்றாகப் படித்தவர் என்பது புதினத்தின் பல இடங்களில் தெரிகிறது. ஆனால், பழந்தமிழ் இலக்கியங்களைப் படித்திருப்பவர் என்பதற்காகத் தமிழ்ப் பெருமையைப் பற்றி அவர் கேள்வியே கேட்கக்கூடாது என்று நினைக்க முடியாது.
உண்மையில், இந்தப் புதினத்தின் சுவையான பகுதிகளில் சில, தமிழர்களின் வரலாற்றுப் பெருமையைப் பற்றிய விவாதங்களில்தான் இருக்கின்றன.
“தில்லை முத்து! பண்டைநாள் பெருமை பேசி மகிழும் இனத்தாரிடம் நிகழ்காலச் சிறுமைகள் மிகுந்திருக்கும் என்பது ஆன்றோர் கண்டறிந்த உண்மை. அது போகட்டும்.”
இந்த வரி எவ்வளவு நேரடியானது! கடந்தகாலப் பெருமையைப் பேசிக்கொண்டிருக்கும் சமூகத்திடம் நிகழ்காலத்தில் என்ன இருக்கிறது என்று கேட்கிறது. முன்னோர்கள் என்ன செய்தார்கள் என்பதைப் பேசுவது தவறல்ல. ஆனால், முன்னோர்களின் சாதனைகளையே தொடர்ந்து சொல்லிக்கொண்டிருப்பதால் இன்றைய தலைமுறைக்கு என்ன பயன்?
அடுத்த உரையாடல் இன்னும் கூர்மையானது:
“பழங்கதை, பழங்கதை எல்லா இனங்களுக்குமே இப்படி ஐந்தாறு பெயர்கள் உண்டு. இவர்கள் எல்லாரும் எந்த அளவில் எதைச் சாதித்தார்கள்? அலெக்ஸாண்டர் பாரசீக மகா சாம்ராஜ்யத்தை வென்றான். ஹிட்லர் ஒரே பாய்ச்சலில் பிரிட்டிஷ் - பிரெஞ்சு - பெல்ஜிய - டச்சுப் படைகளைச் சின்னாபின்னமாய்ச் சிதைத்தெறிந்தான். கிணற்றுத் தவளைக்கு அமேஸான் ஆறு, பசிபிக் ஆழி, இமயமலை எல்லாமே அந்தக் கிணற்றுக்குள்தான்.”
ஒரு சமூகத்தின் வரலாற்றுப் பெருமை அந்தச் சமூகத்தின் பார்வையையே சிறிதாக்கிவிடக்கூடும் என்ற முரண் இதில் இருக்கிறது. உலக வரலாற்றைப் பார்க்காமல், தன் இனத்தின் பெருமைகளை மட்டுமே தொடர்ந்து பேசிக்கொண்டிருப்பது ஒரு வகையான கிணற்றுத் தவளை உளநிலைதான்.
ஆனால், சிங்காரம் தாத்தா தமிழர்களின் வரலாற்றுப் பெருமையை முற்றிலும் மறுதலிப்பவர் அல்லர். அதற்கான சான்றுகளும் புதினத்தில் இருக்கின்றன. சோழர்களின் கடற்படை, தென்கிழக்காசியாவுடனான வணிக உறவுகள், தமிழர்களின் கடல் வழிப் பயணங்கள் என்று பல வரலாற்றுச் செய்திகள் வருகின்றன.
இதில்தான் அவரின் பார்வை சுவையாகிறது. ஒரு பக்கம் தமிழர்களின் கடந்தகாலச் சாதனைகளை நினைவுபடுத்துகிறார். இன்னொரு பக்கம், அந்தச் சாதனைகளை வைத்து நிகழ்காலத்தைப் பெருமைப்படுத்திக்கொள்வதைக் கேள்வி கேட்கிறார்.
“ஒரு வழுவலை வைத்துக்கொண்டு ஓர் இனத்தையே இழிவுபடுத்தக் கூடாது. உனக்கு மொத்தப் பார்வை குறைவு.”
இந்த வரியும் முக்கியமானது. ஒரு தனி மனிதனின் தவறை வைத்துக்கொண்டு ஒரு சமூகத்தையே இழிவுபடுத்த முடியாது. அதே நேரத்தில், ஒரு சமூகத்தின் கடந்தகாலச் சாதனைகளை வைத்துக்கொண்டு அதன் எல்லாச் செயல்களையும் நியாயப்படுத்தவும் முடியாது. மொத்தப் பார்வை என்பது ஒரே பக்கத்தைப் பார்ப்பது அல்ல.
தமிழர்களின் தன்மானம் எப்போது வீழ்ந்தது?
இந்தப் புதினத்தில் வரும் ஒரு கற்பனைக் காட்சி மனதில் நிற்கிறது. அரசு, மக்கள் ஒவ்வொருவரும் வேலைக்குச் செல்வதற்கு முன்பு மணியக்காரனிடம் மூன்று செருப்படிகள் வாங்கிக்கொள்ள வேண்டும் என்று ஆணையிடுகிறது. மறுநாள் அதிகாலையில் ஊருக்கு ஊர் மக்கள் மணியக்காரன் வீட்டின் முன்னால் கூடுகிறார்கள்.
“விரசாய் அடிச்சு விடுங்கையா, வேலைக்குப் போகணும் நேரமாகுது” என்று முறையிட்டு, முதுகைத் திருப்பிக் காட்டிக்கொண்டிருக்கிறார்கள். அடிப்பவரின் வேலையை விரைவாக முடிப்பதற்காக, அவரவர் சக்திக்கு ஏற்ப லஞ்சப் பணத்தையும் எடுத்துச் செல்கிறார்கள்.
பிறகு அந்தப் பகுதி முடிகிறது:
“இதுதான் தமிழினத்தின் இன்றைய நிலை. நேற்றைய நிலை.”
இரண்டாம் உலகப் போர்க் காலத்தைப் பின்னணியாகக் கொண்ட புதினத்தில் இத்தகைய நையாண்டி வருவது கவனிக்கத்தக்கது. இதை வாசிக்கும்போது, தமிழர்களின் தன்மானம் ஒரு குறிப்பிட்ட அரசியல் இயக்கத்தின் எழுச்சிக்குப் பிறகுதான் வீழ்ந்தது என்று சொல்வோரின் வாதம் நினைவுக்கு வருகிறது. சிங்காரம் முன்வைக்கும் கற்பனைக் காட்சி, அதைவிட நீண்ட வரலாற்றுப் பின்னணியில் இந்தப் பிரச்சினையைப் பார்க்கச் சொல்கிறது.
விஜயநகரப் பேரரசின் வருகைக்குப் பிந்தைய வரலாற்றையும், அதில் அரியநாதன் போன்ற தமிழர்களின் பங்கையும் புதினம் பேசுகிறது. தமிழர்களின் அரசியல் வீழ்ச்சிக்கு வெளிப்புற ஆற்றல்கள் மட்டுமே காரணம் என்று சொல்லிவிட முடியாது. உள்ளிருந்து நடந்த ஒத்துழைப்புகளும் துரோகங்களும் அதிகாரப் போட்டிகளும் வரலாற்றின் ஒரு பகுதிதான்.
இந்த வாதங்களை எல்லாம் ஒரு புதினத்தின் உரையாடல்களிலிருந்து மட்டும் வரலாற்று முடிவுகளாக எடுத்துக்கொள்ள முடியாது. ஆனால், வரலாற்றை ஒரே கோணத்தில் பார்க்காமல் கேள்வி கேட்பதற்கான வாய்ப்பை அவை தருகின்றன.
என்னைப் பொறுத்தவரை, இந்தப் பகுதிகளின் வலிமை அதிலிருக்கும் நையாண்டியிலும் அது எழுப்பும் கேள்வியிலும்தான் இருக்கிறது. மக்கள் தங்களுக்குச் செய்யப்படும் அவமானத்தையே வழக்கமான ஒரு சடங்காக ஏற்றுக்கொண்டுவிட்டால், அவர்களிடம் தன்மானத்தைப் பற்றி எப்படிப் பேசுவது?
இது தமிழர்களைப் பற்றிய கேள்வி மட்டுமல்ல. அதிகாரத்துக்கு அடிபணிவதை இயல்பாக ஏற்றுக்கொள்ளும் எந்தச் சமூகத்தையும் பற்றிய கேள்வி.
கண்ணகி, கோவலன், செட்டியார்
புதினத்தின் நகைச்சுவை சில இடங்களில் நமது இலக்கிய மரபையே கிண்டல் செய்கிறது.
“பூம்புகாரில் மாவன்னாக் கோவன்னா மார்க்கா கோவலன் செட்டியார் பற்றி தங்களுக்குத் தெரிந்திருக்குமே!” என்றொரு வரி வருகிறது.
கண்ணகியின் கணவன் கோவலன். மாவன்னாக் கோவன்னா என்றால் மாசாத்துவான் மகன் கோவலன். ‘மார்க்கா’ என்பது வணிகத்தில், குறிப்பாகச் செட்டியார்கள் கடைப்பெயர் அல்லது வணிக அடையாளத்துடன் பயன்படுத்திய சொல். இந்தச் சொற்களைப் புரிந்துகொண்ட பிறகுதான் கிண்டலின் முழு சுவையும் கிடைக்கிறது.
அதோடு நிற்காமல், கோவலனின் கதையை வணிக உலகின் மொழியில் மீண்டும் சொல்லத் தொடங்குகிறது உரையாடல். கண்ணகி தாலியை விற்க மதுரைக்குச் சென்றாரா, தாலியல்ல சிலம்பு, நகை வியாபாரிகளின் சூழ்ச்சியால் கொல்லப்பட்டாரா என்று பாத்திரம் பேசிக்கொண்டே போகிறது. பிறகு மாதவியின் மகள் மணிமேகலை, கோவலனின் மாமனார் மாநாய்கன் என்று கதையின் பல பகுதிகளையும் இழுத்துக்கொண்டு வந்து கிண்டல் செய்கிறது.
இது வெறும் இலக்கியக் கதையைப் பற்றிய நகைச்சுவை அல்ல. ஒரு மரபை நன்றாக அறிந்திருப்பதால் மட்டுமே இப்படி விளையாட முடியும். கண்ணகி, கோவலன், மாதவி, மணிமேகலை ஆகியோர் தமிழ் இலக்கியத்தின் பழக்கப்பட்ட மாந்தர்கள். அவர்களை அன்றாட வணிக உலகின் மொழியில் பேச வைப்பதன் மூலம், சிங்காரம் இலக்கிய மரபுக்கும் மக்களின் அன்றாட வாழ்க்கைக்கும் இடையில் ஒரு புதிய தொடர்பை உருவாக்குகிறார்.
தமிழ் இலக்கியத்தைப் படித்தவர் என்பதற்காக அதைப் புனிதப் பொருளாக மட்டுமே அணுக வேண்டும் என்று அவர் நினைக்கவில்லை. அதனுடன் சிரிக்கவும், அதன் கதைகளைத் திரும்பிப் பார்க்கவும், அதன் மாந்தர்களை வேறொரு கோணத்தில் புரிந்துகொள்ளவும் முடியும்.
இதுதான் எனக்கு இந்தப் புதினத்தில் பிடித்த ஒரு முக்கியமான கூறு. ஆழமான இலக்கிய வாசிப்பும் எள்ளலும் ஒன்றுக்கொன்று எதிரானவை அல்ல.
பெண்களைப் பற்றிய பார்வை
புதினம் முழுவதும் வட்டித் தொழிலுக்கு அடுத்தபடியாக அதிகம் பேசப்படுவது பாலியற் தொழிலைப் பற்றித்தான் என்று சொல்லலாம். குடும்பத்தை விட்டுப் பிரிந்து வாழும் ஆண்கள், விலைமகளிரிடம் செல்வது, அவர்களைப் பற்றிப் பேசுவது என்று பல காட்சிகள் வருகின்றன.
சில இடங்களில் பெண்களைப் பற்றிய விவரிப்புகள் வியப்பூட்டும் அளவுக்கு நுணுக்கமாக இருக்கின்றன. எடுத்துக்காட்டாக, வடக்காவணி மூலவீதியில் வாழும் ‘ரங்கூன்’ ராஜசுந்தரியைப் பற்றிய விவரிப்பு. ரங்கூனைப் பார்த்திராத அவள், பரமக்குடியில் பிறந்து வளர்ந்தவள். பெற்றோர் வைத்த பெயர் நாகுலு. அவளுடைய தோற்றம், முகத்தில் இருக்கும் புள்ளிகளை மறைக்கப் பயன்படுத்தப்படும் மின்விளக்கின் நிறம் எனச் சிறுசிறு குறிப்புகளையும் ஆசிரியர் பதிவு செய்கிறார்.
எவ்வளவு நுணுக்கமான கவனிப்பு! ஒரு பெண்ணின் வாழ்க்கையைப் பற்றிய செய்தி அவளுடைய பெயரிலும், அவள் வாழும் தெருவிலும், அவள் பயன்படுத்தும் விளக்கிலும் பதிவாகியிருக்கிறது.
ஆனால், இத்தகைய நுணுக்கமான கவனிப்புக்குப் பக்கத்திலேயே சில சங்கடமான விவரிப்புகளும் இருக்கின்றன. “மேலமாசி வீதியில் முத்துநாயகி - தாசி மகள் தாசி.” இந்த வரியைப் படிக்கும்போது மனம் கனக்கிறது. ஒரு பெண்ணின் பிறப்பும் அவளுடைய தாயின் தொழிலும் அவளுடைய அடையாளமாகச் சுருக்கப்படுவது நம்மைச் சிந்திக்க வைக்கிறது.
பெண்களைப் பற்றிய சில விவரிப்புகள் இன்றைய வாசிப்பில் எப்படிப் படுகின்றன என்ற கேள்வியும் எழுகிறது. ஒரு குறிப்பிட்ட காலத்தில் நிலவிய ஆண்களின் பார்வையை ஆசிரியர் பதிவு செய்கிறாரா, அல்லது அந்தப் பார்வையையே தனது விவரிப்பில் ஏற்றுக்கொள்கிறாரா என்பதை ஒவ்வோர் இடத்திலும் தனித்தனியாகப் பார்க்க வேண்டும்.
அதேபோல, ஒரு தமிழ் மனைவியின் நடையை மணிலா வாத்துடன் ஒப்பிடும் வரியும் இருக்கிறது. அந்த வரி நகைச்சுவைக்காக எழுதப்பட்டதாகத் தோன்றலாம். ஆனால், இன்றைய காலத்தில் இப்படியான விவரிப்பு எப்படிப் புரிந்துகொள்ளப்படும் என்பதும் கேள்விதான்.
ஒரு பழைய புதினத்தை வாசிக்கும்போது அதிலிருக்கும் எல்லாவற்றையும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதில்லை. அதே நேரத்தில், இன்றைய அளவுகோல்களை மட்டும் வைத்துக்கொண்டு அதன் இலக்கியச் சாதனைகளை மறுதலித்து விடவும் முடியாது. நமக்கு ஒத்துப்போகாத இடங்களைச் சுட்டிக்காட்டியபடியே, அது பதிவு செய்யும் சமூக உலகையும் மொழியையும் கவனிக்க முடியும்.
கடலைக் கடந்த தமிழர்கள்
புதினத்தின் இறுதிப் பகுதிகளில் தென்கிழக்காசியாவின் வரலாற்றைப் பற்றிய விரிவான விவரிப்புகள் வருகின்றன. சைலேந்திரர்களுக்கும் சோழர்களுக்கும் இடையிலான அரசியல், வணிக உறவுகள், நாகப்பட்டினத்தில் கட்டப்பட்ட சூடாமணி விஹாரம், ராஜேந்திர சோழனின் கடற்படைப் படையெடுப்பு என்று பல செய்திகள் இடம்பெறுகின்றன.
கி.பி. 1025-இல் இராஜேந்திர சோழனின் படைகள் சைலேந்திரர்களின் கடற்படையைத் தாக்கி, அவர்களுடைய துறைமுகங்களையும் நகரங்களையும் சூறையாடியதாகப் புதினம் விவரிக்கிறது. அந்தப் பகுதி வரலாற்றின் ஒரு விரிந்த காட்சியை நம் முன்னால் நிறுத்துகிறது. தமிழர்களின் கடல் வணிகம், அரசியல் உறவுகள், போர்கள், அதிகாரப் போட்டிகள் என்று பல அடுக்குகள் ஒன்றாக வருகின்றன.
இந்த வரலாற்றுப் பகுதிகளைப் படிக்கும்போது, தமிழர்களின் உலகம் தமிழ்நாட்டின் எல்லைகளுக்குள் மட்டும் அடங்கியதல்ல என்பது தெளிவாகிறது. வணிகத்திற்காகக் கடல் கடந்தவர்கள், அங்கே குடியேறியவர்கள், உள்ளூர்ச் சமூகங்களுடன் உறவுகளை உருவாக்கியவர்கள் என்று தமிழர்களின் வாழ்க்கை பல நூற்றாண்டுகளாகப் பல இடங்களுடன் இணைந்திருக்கிறது.
அதே கடல், ஒரு காலத்தில் வணிகத்திற்கான பாதையாக இருந்தது. இன்னொரு காலத்தில் போர்க்களமாக மாறுகிறது. இரண்டாம் உலகப் போர்க் காலத்தில் மெடானில் வாழும் தமிழர்களின் வாழ்க்கையும் அந்தப் பெரிய வரலாற்றின் ஒரு பகுதியாகிறது.
இங்கே புதினத்தின் தலைப்பான புயலிலே ஒரு தோணி நினைவுக்கு வருகிறது. புயல் என்பது வெளிப்புறத்தில் நிகழும் ஒரு பேரிடர் மட்டுமல்ல. மனிதர்கள் வாழும் சமூக உலகமே அவர்களுக்குக் கட்டுப்படாமல் மாறிவிடும் நிலையும் ஒரு புயல்தான். அந்தப் புயலின் நடுவே மனிதர்கள் தங்கள் வாழ்க்கையைத் தொடர்ந்து நடத்த முயல்கிறார்கள்.
மறக்கப்பட்ட எழுத்தாளரை வாசிப்பது
புயலிலே ஒரு தோணியில் எனக்கு மிகவும் பிடித்தது, ஒரே நேரத்தில் பல உலகங்களைத் தன்னுள் வைத்திருக்கும் அதன் தன்மை. இரண்டாம் உலகப் போரின் வரலாறு இருக்கிறது. வட்டித் தொழிலின் நுணுக்கங்கள் இருக்கின்றன. பாலியல் தொழிலின் உலகம் இருக்கிறது. ஊர்நினைவுகள் இருக்கின்றன. வட்டார மொழியின் செழுமை இருக்கிறது. தமிழர்களின் வரலாற்றுப் பெருமையைப் பற்றிய கேள்விகள் இருக்கின்றன. சங்க இலக்கியம் முதல் அன்றாடப் பேச்சு வரை விரியும் மொழியுலகம் இருக்கிறது.
சில இடங்களில் நகைச்சுவை. சில இடங்களில் நையாண்டி. சில இடங்களில் உள்ளத்தைக் கனக்க வைக்கும் வலி. சில இடங்களில் நம்முடைய வரலாற்றுப் பார்வையையே மறுபரிசீலனை செய்ய வைக்கும் கேள்விகள்.
இவை அனைத்தையும் தனித்தனிப் பகுதிகளாகப் பிரித்துப் பார்க்காமல், ஒரு சமூகத்தின் வாழ்க்கையோடு இணைத்துப் பதிவு செய்திருப்பதுதான் இந்தப் புதினத்தின் சிறப்பு.
அதன் ஆசிரியரின் வாழ்க்கையை நினைத்துப் பார்க்கும்போது ஒரு கேள்வி எழுகிறது. இவ்வளவு செறிவான புதினத்தை எழுதியவர் ஏன் பரவலான இலக்கிய ஏற்பைப் பெறவில்லை? பதிப்பகம் கிடைக்காமல் சிரமப்பட்டவர், எழுத்தாளர் என்ற அடையாளத்தைக்கூட வெளிப்படுத்திக்கொள்ளாமல் வாழ்ந்தவர், இறுதியில் மதுரையில் ஒரு விடுதி அறையில் இறந்தவர். இவை அனைத்தையும் சேர்த்துப் பார்க்கும்போது, ஒரு படைப்பாளியின் வாழ்க்கை எவ்வளவு எளிதில் மறக்கப்படக்கூடும் என்பதை உணர முடிகிறது.
ஆனால், ஓர் எழுத்தாளரைப் பற்றிய வருத்தம் மட்டும் அவருடைய படைப்பைச் சிறந்ததாக மாற்றிவிடாது. அந்தப் படைப்பை வாசித்து, அதன் மொழியை ஆராய்ந்து, அதன் கருத்துகளுடன் விவாதித்து, அதன் பலவீனங்களையும் சுட்டிக்காட்டும்போதுதான் நாம் அவரை உண்மையாக அணுகுகிறோம்.
அவரைப் பற்றிய இறுதியான தீர்ப்பைச் சொல்ல வேண்டிய தேவையும் இல்லை. அவருடைய எழுத்தை வாசிப்பதே முக்கியம்.
ஒரு சமூகத்தின் கடந்தகாலப் பெருமையைப் பற்றி மட்டும் பேசிக்கொண்டிருப்பதைச் சிங்காரம் தாத்தா கேள்வி கேட்கிறார். அதே நேரத்தில், அந்தச் சமூகத்தின் மொழி, வாழ்க்கை, நினைவுகள், வரலாறு ஆகியவற்றை மிகுந்த கவனத்துடன் பதிவு செய்கிறார். இந்த இரண்டையும் ஒன்றாக வைத்துப் பார்ப்பதுதான் அவருடைய எழுத்தின் சுவை.
தமிழர்களின் பெருமையைப் பற்றிப் பேசுவதற்கும் தமிழர்களின் வாழ்க்கையை உண்மையாகப் பதிவு செய்வதற்கும் வேறுபாடு இருக்கிறது. முதற் செயல் பல நேரங்களில் புகழ்ச்சியில் முடிந்துவிடலாம். இரண்டாவது செயலில் முரண்பாடுகளும் குறைகளும் நகைச்சுவையும் துயரமும் எல்லாம் இடம்பெறும். சிங்காரத்தின் புதினம் இரண்டாவது வகையைச் சேர்ந்தது.
புயலிலே ஒரு தோணியைப் படிக்க வேண்டிய காரணம், அது தமிழின் சிறந்த புதினம் என்று யாரோ சொல்லியிருக்கிறார்கள் என்பதற்காக மட்டும் அல்ல. அது நம்முடைய மொழியை, வரலாற்றை, சமூகத்தை வேறொரு கோணத்தில் பார்க்க வைக்கிறது என்பதற்காகவும்.
ஓர் எழுத்தாளரின் பெருமையைத் தீர்மானிப்பது அவரைச் சுற்றியிருக்கும் இலக்கியக் குழுக்களின் எண்ணிக்கையா? அவருக்குக் கிடைக்கும் விருதுகளா? அவரைப் பற்றிப் பேசப்படும் கூட்டங்களா? அல்லது அவர் எழுதிய படைப்பை வாசித்த பிறகும் அது நமக்குள் எழுப்பிக்கொண்டிருக்கும் கேள்விகளா?
சிங்காரம் தாத்தாவைப் பொறுத்தவரை, அந்தக் கேள்விகளுக்கான பதிலைத் தேடுவதற்கான சிறந்த வழி, புயலிலே ஒரு தோணியை வாசிப்பதுதான்.
தமிழ் இலக்கிய உலகம் மறந்துவிட்டதாகத் தோன்றும் ஒரு எழுத்தாளரைப் பற்றி இன்னொரு எழுத்தாளர் மிகுந்த மதிப்புடன் பேசியிருக்கிறார். அந்தப் பாராட்டைத் தொடர்ந்து நாமும் அவருடைய படைப்பை வாசிக்கிறோம். இறுதியில், அந்த எழுத்தாளர் எவ்வளவு புகழ்பெற்றவர் என்ற கேள்வியைவிட, அவர் எழுதியது நமக்கு என்ன செய்கிறது என்ற கேள்விதான் முக்கியமாகிறது.
ஒரு புயலின் நடுவே தோணி மிதந்துகொண்டிருக்கிறது. அதைச் செலுத்துபவன் யார், அது எந்தக் கரையை அடையும், அந்தப் பயணத்தில் என்னென்ன பாடுகள் கிடைக்கும் என்பதையெல்லாம் வாசிப்புதான் நமக்குச் சொல்ல வேண்டும்.
சிங்காரம் தாத்தாவைப் பற்றிப் பேசிக்கொண்டிருப்பதைவிட, அவரை வாசிப்போம். அவரைப் புகழ்வதைவிட, அவருடன் விவாதிப்போம். தமிழின் கடந்தகாலப் பெருமையைச் சொல்லிக்கொண்டிருப்பதோடு நிற்காமல், நம்முடைய காலத்தின் இலக்கியத்தையும் அதன் வாசகர்களையும் படைப்பாளிகளையும் நாம் எப்படிப் புரிந்துகொள்கிறோம் என்று கேள்வி கேட்போம்.
அதுவே புயலிலே ஒரு தோணிக்குச் செய்யக்கூடிய உண்மையான மரியாதையாக இருக்கும்.
கருத்துகள்
கருத்துரையிடுக