போர் - பாப் வூட்வர்ட்: நூலுரையாடல்
போர் - பாப் வூட்வர்ட்: நூலுரையாடல்
அமெரிக்க இதழியல் உலகில் பாப் வூட்வர்ட் ஒரு பெரும் ஆளுமை. இப்போது அவருக்கு 81 வயது ஆகிறது. இதழியலாளர்களுக்குக் கொடுக்கப்படும் விருதுகள் அனைத்தும் பெற்றவர். 1971-இல் இதழியலாளராகப் பணியைத் தொடங்கியவர், அடுத்த ஆண்டே அமெரிக்க வரலாற்றிலேயே முதல் முறையாக நிகழ்ந்த பெரும் நிலநடுக்கத்தை ஏற்படுத்தியவர். 1776 முதல் கிட்டத்தட்ட இருநூறு ஆண்டுகளாக மக்களாட்சியாக இருந்த அமெரிக்காவில், 37 அதிபர்களைக் கண்டுவிட்ட அமெரிக்காவில், அதன் அன்றைய அதிபர் நிக்ஸன் மீதே ஊழல் குற்றச்சாட்டு சுமத்தி, அதை நிறுவி, அவரை வீட்டுக்கனுப்பிய பெருமை இவரைச் சாரும். ஓர் இதழியலாளர் சாதிக்க முடிகிற ஆகப்பெரும் சாதனை இது என்று இன்றும் கருதப்படுகிறது. இதுவரை அமெரிக்க அரசியல் பற்றி 21 நூல்கள் எழுதியுள்ளார். அவை அனைத்துமே அமெரிக்க மிகை விற்பனைப் பட்டியலில் இடம் பெற்றவை. அவற்றில் 14 முதலிடத்தில் இடம் பெற்றவை. எண்ணிப் பார்க்கவே முடியாத இடங்களிலிருந்து கூட தகவல் கறக்க முடிகிற இவரைப் போன்ற ஒருவரைத்தான் உளவுத்துறையில் எடுத்துக்கொள்ள வேண்டும் என்று முன்னாள் உளவுத்துறை இயக்குநர் ஒருவரால் பாராட்டப்பட்டவர்.
ஐந்தாண்டுகள் அமெரிக்கக் கடற்படையில் பணியாற்றிய அனுபவம் அவருக்கு இந்த நூல் எழுதும் போது நிறைய உதவியிருக்கலாம். இது போர் பற்றி அவர் எழுதும் முதல் நூலும் அல்ல. இதற்கு முன்பு ஜார்ஜ் புஷ் காலத்தில் நடந்த போர் பற்றியும் விரிவாக எழுதியிருக்கிறார். புஷ்ஷோடுதான் மற்ற அதிபர் எவரை விடவும் அதிக நேரம் செலவிட்டிருக்கிறார். அவர் ஆட்சியைப் பற்றித்தான் நான்கு நூல்கள் எழுதியிருக்கிறார். இந்தக் காலத்தில் அதிபர் புஷ்ஷின் ஆட்களை இவர் திறமையாகப் பயன்படுத்தி தகவல்கள் கறந்தார் என்று ஒரு கதையும், தகவல் தருகிறோம் என்று சொல்லி புஷ்ஷின் ஆட்கள் இவருக்குத் தண்ணி காட்டி அவர்களுக்கு வேண்டியவற்றைப் பரப்பிக்கொண்டார்கள் என்று இன்னொரு கதையும் உண்டு. ஈராக் பேரழிவு ஆயுதங்கள் வைத்திருந்தது என்று புஷ் கட்டிய கதையை இவர் கேள்வி கேட்காமல் நம்பினார் - பரப்பினார் என்பது இவர் மீது இருக்கும் கறைகளில் ஒன்று. இப்போது இதைச் சொல்வதற்கு ஒரு காரணம் இருக்கிறது. இந்த நூலிலும் பைடன் ஆட்சி பற்றிய பல தகவல்கள் இவருக்கு எளிதாகக் கிடைத்திருக்கின்றன என்பது புரிபடுகிறது. அது நமக்குப் பல கேள்விகளையும் எழுப்புகிறது. அரசியல்வாதிகளுக்கும் இதழியலாளர்களுக்கும் இடையில் நடக்கும் கொடுத்து வாங்கும் விளையாட்டின் விளைவுதான் இந்த நூலுமோ என்று சிறியதாய் ஓர் ஐயம் வருகிறது. அதற்காக இந்த நூலை முழுவதுமாய் மறுதலிக்கவும் முடியாது. அதை மீறிப் பல முக்கியமான பின்னணித் தகவல்களையும் கதைகளையும் வெளிக்கொணர்ந்து கொடுக்கும் அரும்பணியை இந்த நூல் கண்டிப்பாகச் செய்திருக்கிறது.
இந்த நூல் மூன்று முக்கியமான போர்களைப் பற்றிப் பேசுவதாகச் சொல்லப்படுகிறது. முதலாவது, ரஷ்ய-யுக்ரைன் போர். இரண்டாவது, இஸ்ரேல்-ஹமாஸ் போர். மூன்றாவதுதான் முக்கியமானது. பைடன் அதிபராகத் தொடர்வதில் இருந்த சிக்கல்களைக் கையாண்டது. அமெரிக்க அதிபரும் அவருடைய ஆட்களும் தொடர்ந்து ரஷ்ய அதிபர் புடினுடனும் யுக்ரைன் அதிபர் செலன்ஸ்கியுடனும் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவுடனும் பேசிக்கொண்டே இருக்கிறார்கள். இன்னொரு புறம் டொனால்ட் டிரம்ப் மீண்டும் ஆட்சியைப் பிடித்துவிட வேண்டும் என்ற நோக்கத்தோடு தொடர்ந்து தலைவலி கொடுத்துக்கொண்டே இருக்கிறார். மூடிய அறைகளுக்குள் நடைபெறும் உரையாடல்கள் அனைத்தும் அப்படியே நமக்கு நேரில் பார்ப்பது போலப் படைக்கப்படுகின்றன. வெள்ளை மாளிகையின் சுவர்களில் ஒட்டியிருக்கும் ஒரு கண்ணுக்குப் புலப்படாத ஈ போல அவரைக் கற்பனை செய்துகொள்ள வேண்டும் என்கிறார்.
பைடன் பற்றிப் பல குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டாலும் நூல் முழுக்கவும் அவர் மீதான நம் மரியாதை கூடும் படியான தகவல்களே நிறைந்திருக்கின்றன. அமெரிக்கா கண்ட அதிபர்களிலேயே அந்தப் பொறுப்புக்குரிய முழுத்தகுதியோடும் அனுபவத்தோடும் வந்து சேர்ந்த அதிபர் இவர்தானோ என்று தோன்ற வைக்கிறது. ஒபாமா ஆட்சியில் துணை அதிபராக இருந்த போது, ஒபாமாவின் அனுபவமின்மை வெளிப்படாத அளவு பார்த்துக்கொண்ட பணி இவருடையது என்பது தொடக்கத்திலேயே சொல்லப்படுகிறது. ஒபாமா மக்கள் ஆதரவோடு பொறுப்புக்கு வந்தவர் என்றாலும், மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்ற நல்லெண்ணத்தோடே வந்தவர் என்றே வைத்துக்கொண்டாலும் அது மட்டும் இத்தகைய பொறுப்புமிக்க பணியைச் சிறப்பாகச் செய்யப் போதாது. அனுபவம் இருக்க வேண்டும். அமெரிக்க அதிபர் என்பவர் அமெரிக்காவை ஆள்பவர் என்கிற அளவுக்குத்தான் ஒபாமாவின் அனுபவம் அப்போதைக்கு இருந்திருக்கிறது. உலகம் முழுக்கவும் நடந்து கொண்டிருக்கும் பல பிரச்சனைகளைக் கையாள வேண்டும். உலகத்துக்கே பெரும் தலைவலியாக இருக்கும் பலரோடு உறவாட வேண்டும். அந்த முழுப் பொறுப்பையும் பைடனிடம்தான் ஒபாமா விட்டுவிட்டாராம். அந்த அனுபவத்தையும் பயன்படுத்தி பைடன் ஆட்சி செய்தார் என்கிறார். இது போன்ற பொறுப்புகளுக்கு தேவையான அளவுக்கு அறிவு இல்லாமல் வருவதே அனுமதிக்கப்படக்கூடாது. அதற்கு வாய்ப்பில்லை என்றால் கற்றுக்கொள்ள வேண்டும் என்கிற ஆசையாவது இருக்க வேண்டும். மக்கள் தேர்ந்தெடுக்கும் அதிபர்கள் அனைவரும் அப்படியானவர்களாகவா இருக்கிறார்கள்? இதற்கு முன்பு டிரம்ப் ஆட்சி பற்றி எழுதிய ‘அச்சம்: வெள்ளை மாளிகையில் டிரம்ப்’ (Fear: Trump in White House) என்ற நூலில் அவருக்கு ஒரு சிறுவனுக்கு இருக்கும் அறிவு கூடக் கிடையாது என்று எழுதியிருப்பார். அது நினைவுக்கு வருகிறது. ஒவ்வொரு பெரும் உரையாடலிலும் பைடனின் இடத்தில் டிரம்ப் இருந்தால் எப்படியிருக்கும் என்று எண்ணிப் பார்ப்பத்தைத் தவிர்க்க முடியவில்லை.
இதற்கு முந்தைய இரண்டு உலகப்போர்களின் போது இருந்திராத சூழல் இப்போது. இரு வேறு போர்களில் எந்தப் போர் மூன்றாம் உலகப் போரில் போய் நிற்கும் என்று கணிக்க முடியாத அளவுக்கு இணையாக இரண்டு போர்களிலும் நிகழ்வுகள் நடந்தேறுகின்றன. மூன்றாம் உலகப் போர் மூண்டுவிடக் கூடாது என்பது போலவே இன்னொரு அழுத்தமும் புதிதாக இருக்கிறது. நடைபெறும் போர்களில் ஒன்று அணு ஆயுதப் போராக மாறிவிடாமல் பார்த்துக்கொள்ள வேண்டியதிருக்கிறது. நேரடியாக - அலுவல்வழி உரையாடல்கள் ஒருபுறம் நடக்கின்றன. பின்னணியிலும் பல உரையாடல்கள் நடக்கின்றன. “நாங்கள் இதைச் செய்ய மாட்டோம். நீங்கள் அதைச் செய்யக்கூடாது” என்பது போன்ற நிபந்தனைகளோடு நிகழ்த்தப்படும் உரையாடல்கள்.
பெரும்பாலும் பைடனைச் சுற்றியே வரும் கதை, மெதுவாக கமலா ஹாரிஸை உள்ளே கொண்டுவருகிறது. பைடன் எப்படி ஹாரிஸை இந்த உரையாடல்களுக்குள் கொண்டுவந்தார் என்றும் சொல்லப்படுகிறது. பைடன் சில நேரங்களில் மேடையில் தடுமாறுவதும் வேறு சில நேரங்களில் மிகத் தெளிவாகப் பேசி வியப்பூட்டுவதும் வெளியில் இருப்பவர்கள் கண்டவை. ஆனால் அவரோடு நாள்தோறும் பின்னணியில் பணியாற்றியவர்கள் வியப்போடு பகிர்ந்த ஒரு தகவல் - அவர் தனிப்பட்ட முறையில் பேசும் போது ஒருமுறை கூட வாய் குழறியதோ தடுமாறியதோ கிடையாது. ஒவ்வொரு சூழலிலும் அவர் எடுத்த முடிவுகளும் கொடுத்த கட்டளைகளும் தெள்ளத்தெளிவாக இருந்தனவாம்.
டிரம்ப் மீது கடுமையான குற்றச்சாட்டுகள் வைக்கிறார். பொறுப்பிலிருந்து விலகிய பின்பும் தொடர்ந்து புடினுடன் தொடர்பிலேயே இருந்து வந்ததாகச் சொல்கிறார். ஏழு முறை தனிப்பட்ட முறையில் புடினோடு உரையாடியிருக்கிறாராம். பெருந்தொற்றின் உச்சத்தில் அமெரிக்காவிலேயே தட்டுப்பாடாக இருந்த பரிசோதனைக் கருவிகளைப் பாதுகாப்பாக புடினுக்கு அனுப்பி அவரின் அன்பைப் பெற்றார் என்கிற தகவல் நமக்கு நம்பவே முடியாததாக இருக்கிறது. டிரம்ப் எது செய்தாலும் சரி என்கிற கூட்டத்தைப் போலவே டிரம்ப் எது செய்ததாகச் சொன்னாலும் நம்பக் கூடிய - அதிர்ச்சியடையாத ஒரு கூட்டமும் இருக்கத்தானே செய்கிறது! அதற்கு புடின் சொன்ன பதில் என்ன தெரியுமா? “என் மீது இவ்வளவு அன்பு கொண்டு இதை எனக்கு அனுப்பிவைத்த கதையை நீ வெளியில் சொன்னால், எனக்கொன்றும் பிரச்சனையில்லை. உனக்குத்தான் உன் நாட்டில் பிரச்சனை ஆகும்” என்றாராம். அதற்கெல்லாம் கவலைப்படுகிற ஆளா தலைவன்!
அமெரிக்க வரலாற்றிலேயே முதல் முறையாக ரஷ்ய அதிபர் ஒருவரை வழிபடும் அமெரிக்க அதிபர் அமைந்திருப்பது நமக்குப் பல கேள்விகளை எழுப்புகிறது. சோவியத் ரஷ்யாவை உடைத்துப் போட்டதன் மூலம் பனிப்போரில் அமெரிக்கா வென்றுவிட்டது - எல்லாம் முடிந்துவிட்டது என்று எண்ணுவது தவறோ என்று படுகிறது. புடின், ‘அதற்கான பதிலடியை என் வாழ்நாளில் கொடுக்காமல் போக மாட்டேன்’ என்று சூளுரைத்துச் செயல்படுவது போலத் தெரிகிறது. யுக்ரைன் ரஷ்யாவின் ஒரு பகுதி, யுக்ரைன் இல்லாத ரஷ்யா முழுமையான ரஷ்யாவே அல்ல என்று அவர் மனமார நம்புகிறார். அதை வலுப்படுத்தும் வகையில் நிறைய வாசித்திருக்கிறார். கோவிட் காலத்தில் கிடைத்த நேரத்தை இதற்காகவே செலவிட்டிருக்கிறார்.
ரஷ்யா யுக்ரேனைத் தாக்கப்போகிறது என்ற தகவல் அமெரிக்க உளவுத்துறைக்குக் கிடைத்துவிடுகிறது. ஒரு மாநாட்டில் சந்திக்கும் போது கமலா ஹாரிஸ் அதை நேரடியாகவே செலன்ஸ்கிக்குச் சொல்கிறார். ஆனாலும் அவர் நம்ப மறுக்கிறார். இந்த இடத்தில் அமெரிக்க உளவுத்துறையின் ஆற்றல் என்ன என்பதை நாம் உணர்ந்துகொள்ள முடிகிறது. அதே வேளையில் புடினிடமும் தொடர்ந்து பேசுகிறார்கள். யுக்ரேனைத் தாக்க வேண்டாம் என்று வேண்டிக்கொள்கிறார்கள். அப்படி ஒரு திட்டமே இல்லை என்று சொல்லிவிட்டு, அமெரிக்கா எதிர்பார்த்தபடியே யுக்ரேன் மீது தாக்குதலைத் தொடங்கிவிடுகிறார் புடின். யுக்ரேனுக்கு உதவ வேண்டும் என்பதில் தெளிவாக இருக்கிறார்கள். ஆனால் அமெரிக்கப் படை களத்தில் இறங்கவே இறங்காது என்பதிலும் தெளிவாக இருக்கிறார்கள். புடின் யுக்ரேனுக்கு எதிராக அணு ஆயுதத்தைப் பயன்படுத்த வாய்ப்பு உள்ளது என்று அஞ்சுகிறார். அது நடந்துவிடாமல் தடுக்க வேண்டிய வேலைகள் அனைத்தையும் செய்கிறார்.
2014-இல் புடின் கிரீமியா மீது போர் தொடுத்து ரஷ்யாவோடு இணைத்துக்கொண்டதற்கு ஒபாமா புடினைப் பெரிதுபடுத்தாமல் விட்டதுதான் காரணம் என்று பைடன் புலம்புகிறார். “அவன் என்ன வேண்டுமானாலும் செய்து கொள்ளட்டும் என்று உரிமம் கொடுத்துவிட்டோம். அதை நான் பிடுங்கிப் போடுகிறேன், பார்” என்கிறார்.
வெளியில் அமெரிக்கா இஸ்ரேலைக் கண்மூடித்தனமாக ஆதரிக்கிறது எனும் கருத்து இருக்கிறது. ஆனால் பின்னணியில் இஸ்ரேலுடன் அமெரிக்கா தொடர்ந்து உரையாடி உரையாடித்தான் போர் பெரிதாக வளர்ந்துவிடாமல் பார்த்துக்கொண்டது என்கிறார். அப்பாவி மக்களைத் தாக்குவதையும் அவர்களுக்கு மருத்துவ உதவி போகவிடாமல் தடுப்பதையும் அமெரிக்கா கடுமையாகக் கண்டிக்கிறது என்கிறார். நேதன்யாகுவோடு பேசி முடித்தபின் வெறுப்பாகி தனிமையில் பேசும் போது அவரை பைடன் மோசமான கெட்டவார்த்தைகளில் திட்டுகிறார். ‘தே*** மகன்’, ‘கெட்ட ஓ** பயல்’ போன்ற சொற்களில். புடினையும் கூட “அந்த ஓ** புடின்” என்கிறார். நேதன்யாகுவுடனும் பாலஸ்தீனியத் தலைவர் மஹ்மூத் அப்பாஸுடனும் பேசி முடித்தபின், வெறுப்பாகிப் போய், “இந்த உலகத்திலேயே பெரிய ஓத்* சூத்*னுங்க இருவரோடு ஐந்து மணி நேரம் முன்னும் பின்னும் முன்னும் பின்னும் பேசுவதில் செலவிட்டிருக்கிறேன்” என்று இரைகிறார்.
பைடன் ஆட்சியின் மிகப்பெரும் தோல்வி என்று சொல்வது, ஆப்கானிஸ்தானிலிருந்து வெளியேறிய விதம். சரியான திட்டமில்லாமல் சொதப்பித்தள்ளிவிட்டார்கள் என்கிறார். இறுதியாக, எவ்வளவோ தோல்விகளும் கோளாறுகளும் இருந்தாலும் கூட, பைடனின் மொத்தக்குழுவும் திறமையும் அக்கறையும் கொண்ட குழு. அதை வரலாறு பெருமையோடு திரும்பிப் பார்க்கும் என்கிறார்.
தேர்தலுக்கு முந்தைய மாதத்தில் டிரம்ப் அமெரிக்காவின் அதிபராக இருப்பதற்குத் தகுதியே இல்லாத ஆள் என்று திட்டவட்டமாகக் கூறும் நூலை எழுதியதை இதழியல் அறம் என்றும் கொள்ளலாம், தன் நாட்டின் அல்லது மனிதகுலத்தின் மீதான அக்கறை என்றும் கொள்ளலாம், விலை போய்விட்டாரோ என்றோ ஒரு பக்கம் சாய்கிறாரோ என்றோவும் கொள்ளலாம். எப்படியிருந்தாலும் சொல்லப்பட்டவை சிறப்பான முறையில் சொல்லப்பட்டிருக்கின்றன. நம்ப முடியாதவை போல் இருப்பவை முதற்கொண்டு எல்லாமே நம்பத் தக்கனவாகவும் இருக்கின்றன. அமெரிக்க அரசியல் பிடிப்பவர்களுக்குப் பிடித்தே தீரும் நூல்.
கருத்துகள்
கருத்துரையிடுக