மேற்கு நோக்கி...

தாத்தா பொதுவுடைமை இயக்கத்தில் இருந்ததால் மேற்படிப்புக்கு ரஷ்யா அனுப்பி வைக்கப்படுவதாகச் சின்ன வயதில் அதிகம் ஆசை காட்டப்பட்டவன் நான். பொதுவுடைமையாளர்களின் பிள்ளைகளும் பேரப்பிள்ளைகளும் மேற்படிப்புக்கு அதுவும் மருத்துவம் படிக்க ரஷ்யா அனுப்பி வைக்கப்படுவது அப்போது ஒரு சாதாரணம். சோவியத் நாடு சிதறுண்ட நாளில் நான் மிகவும் பெரிதாக எடுத்துக் கொண்டிராத அந்தக் கனவும் தகர்ந்தது. அது நடந்திராவிட்டாலும் இது நடந்திராது என்றே நினைக்கிறேன். ஏனென்றால், எல்லோரும் அதைப் பேச்சுக்குத்தான் பேசினார்கள் என்று எனக்குத் தெரியும். அவ்வளவு பெரிதாக யாரும் முயற்சித்திருக்க மாட்டார்கள். ஆனால், மிகச் சின்ன வயதிலேயே வெளிநாடு பறந்து செல்வது பற்றியும் வெளிநாட்டவரோடு கலந்து வாழ்வது பற்றியும் கனவு காண அது அடித்தளமிட்டது. அது தவிர்த்து, கணிப்பொறியியல் படிக்க முடிவெடுக்கும் வரை அனுதினமும் வெளிநாட்டவரோடு வேலை செய்யும் சூழ்நிலைகள் பற்றி யோசிக்கவே வாய்ப்பிருக்க வில்லை. அதற்குள், கணிப்பொறியியல் படித்த மச்சான் ஒருவர் சாப்ட்வேர் துறைக்குள் வந்து வெளிநாடுகள் பயணப்பட ஆரம்பித்திருந்தார். அதுவே எனக்கும் உலகமெலாம் சுற்றி வரும் கனவுகளையும் காணத் தூண்டியது. யார் போட்ட கண்ணோ? அதுவும் இன்றுவரை நடந்த பாடில்லை. கனவுகளையுமா கண்ணு போடுவார்கள்?! 

என் இளமைக் காலத்தின் பெரும்பகுதியைச் செலவிட்ட - பேரூரா சிறு நகரமா என்று சொல்ல முடியாத - எங்கள் ஊரில் இரு பெரிய தேவாலயங்கள் இருந்தன. ஒன்று ரோமன் கத்தோலிக் (RC); மற்றொன்று தென்னிந்தியத் திருச்சபை (CSI). இரு தேவாலயங்களுமே சுற்றியிருக்கும் கிராமங்களில் இருக்கும் தேவாலயங்களைவிடப் பெரியவை. எங்கள் ஊர் சுற்றியிருக்கும் கிராமங்களுக்கெல்லாம் ஒரு தலைநகரம் போல. எங்கள் ஊரில் இருந்த தேவாலயங்கள் அவ்வூர்களில் இருந்த தேவாலயங்களுக்குத் தலைமையகம் போல. இந்த தேவாலயங்களில் கணிசமான எண்ணிக்கையில் பாதிரியார்கள் தங்கியிருந்தனர். அங்கிருந்துதான் சுற்றியிருக்கும் கிராமங்களுக்கெல்லாம் அவர்கள் சென்று வருவார்கள். அவ்வப்போது சில வெள்ளைக்காரர்களும் அங்குள்ள தேவாலயங்களுக்கு வந்து செல்வார்கள். அதுதான் முதன்முதலில் நான் வெள்ளைக்காரர்களைப் பார்க்கக் கிடைத்த வாய்ப்பு. அப்போதெல்லாம் வெளிநாடு என்றாலே வெள்ளைக்காரர்கள் அதிகம் இருக்கும் மேற்கு நாடுகள்தாம். பாகிஸ்தானோ இலங்கையோ வெளிநாடு என்று யாராவது சொன்னால் சிரி சிரி எனச் சிரித்திருப்போம்.

சில நேரங்களில் அவர்கள் ஜெர்மனியில் (அல்லது ஏதோவொரு மேற்கு நாடு) இருந்து வந்திருப்பதாகவும் அவர்களுடைய மதத்துக்கு மாறினால் நாங்களும் ஜெர்மனிக்குப் (அல்லது ஏதோவொரு மேற்கு நாட்டுக்கு) பறக்க முடியும் என்றும் கேள்விப் படுவோம். பார்ப்பதற்கு எங்களைப் போலவே இருக்கும் உள்ளூர் ஆட்கள் சிலர் எப்போதும் அவர்களுடன் வருவார்கள். அவர்களைச் சுற்றிக் காட்டவும் எங்களுக்கு மிக மிகச் சாதாரணமாகப் பட்ட ஆனால் வந்தவர்களுக்குப் பெரும் ஆச்சரியமாகப் படும் விஷயங்களை விளக்கிச் சொல்லவும். உள்ளூர்க்காரர்களாக இருந்து கொண்டு - பார்ப்பதற்கும் எங்களைப் போலவே இருந்து கொண்டு (சில நேரங்களில் எங்களை விடவும் கறுப்பாக இருந்து கொண்டு) ஆங்கிலம் மட்டும் எப்படி அவ்வளவு சரளமாகப் பேசுகிறார்கள் என்று ஆச்சரியமான ஆச்சரியப்படுவோம். :)

வெள்ளைக்காரர்கள் வரும் நாட்களில் எங்கள் மைதானங்களில் பெரும் ஆட் தட்டுப்பாடு ஏற்படும். எங்கள் நண்பர்கள் எல்லோரும் வேறு மாதிரியாக இருக்கும் வெள்ளைத்தோல் விருந்தாளிகளை வேடிக்கை பார்க்கச் சென்று விடுவார்கள். அவர்களுடைய பயணத்திட்டப்படி அவர்கள் அடுத்த ஊருக்குக் கிளம்பும் வரை அவர்களையே சுற்றிச் சுற்றி வருவார்கள். அவர்களைப் பார்த்துக் கொண்டே இருப்பது, அவ்வப்போது வாய்ப்புக் கிடைக்கும்போதெல்லாம் அவர்களுடன் கை குலுக்கிக் கொள்வது, அவர்கள் செல்லுமிடமெல்லாம் பின் தொடர்ந்து செல்வது ஆகிய எல்லாமே என் நண்பர்களுக்கு அலாதியான இன்பம். ஆனாலும், நான் அவர்களோடு அவ்வளவு நெருக்கமாகப் போனதில்லை. தொலைவில் இருந்து பார்ப்பதோடு சரி.

அதன் பின்பு, அவ்வப்போது எங்காவது வெளிநாட்டுக் காரர்களைப் பார்ப்பதுண்டு. கல்லூரியில் படித்த காலத்தில் விடுதியில் தங்கியிருந்த போது அங்குள்ள நண்பன் ஒருவனைப் பார்க்க வெள்ளைக்காரர் ஒருவர் வந்திருந்தார். ஆங்கிலத்தில் பேச வேண்டுமே என்று பயந்து அப்போதும் நான் அருகில் செல்லவேயில்லை. இரண்டோ மூன்றோ பேர் மட்டும் சென்று பேசினார்கள். நாங்கள் படித்த அதே வகுப்பறையில் படித்துக் கொண்டு நாங்கள் தங்கிய அதே விடுதி அறைகளில் தங்கிக் கொண்டு ஆங்கிலம் பேசிய எங்கள் நண்பர்களை மிரண்டு போய் ஆச்சரியமாகப் பார்த்தார்கள் மற்ற அனைவரும். உங்களில் சிலருக்கு இது ஆச்சரியமாக இருக்கலாம். ஆனால், உண்மையிலேயே அப்படிப்பட்ட சூழ்நிலையில்தான் நாங்கள் வளர்ந்தோம். இதைப் படிக்கும் என் கல்லூரி நண்பர்கள் கண்டிப்பாக நான் சொல்வதை ஆதரிப்பார்கள்.

பின்பொருமுறை, தேசிய மாணவர் படையில் (NCC) இருந்து கன்னியாகுமரிக்கு சைக்கிள் பயணம் சென்ற பொது, அங்கே சில வெளிநாட்டவர்களைப் பார்த்து உடன் இருந்த நண்பர்களில் ஒருவர் ஆசைப்பட்டபடி அவர்களுடன் சேர்ந்து நின்று புகைப்படம் எடுத்துக் கொண்டோம். ஏனென்று தெரியவில்லை. ஆனால், நெடுங்காலமாகவே நம்மிடம் இப்படியொரு பழக்கம் இருக்கிறது. வெள்ளைக்காரர்களோடு சேர்ந்து நின்று படம் பிடித்துக் கொள்ளும் பழக்கம். அப்போதும், மொத்தக் கூட்டத்தில் ஒரே ஒருவர் மட்டும் அவர்களோடு ஆங்கிலத்தில் பேசினார். மற்ற எல்லோருமே அதெப்படி அவர் மட்டும் அவ்வளவு நன்றாக ஆங்கிலம் பேசுகிறார் என்று ஆச்சரியப்பட்டுக் கொண்டு இருந்தோம். அவர்கள் எல்லோரும் ஆங்கிலம் பேசும் நாட்டவரா என்று கூட அப்போது தெரியாது. மேற்கர்களைக் கண்டபோதெல்லாம் நம் நினைவுக்கு வருவது ஆங்கிலம்தான். இப்போதுதான் புரிகிறது - நம்மைப் போலவே பெரும்பாலான மேற்கர்களுக்கும் அது ஓர் அந்நிய மொழி என்பது.  அவர்களில் பலருக்கு அது நமக்கு இருப்பதை விட அந்நியமான மொழி.

அடுத்து, நான் பணிபுரிந்த முதல் சாப்ட்வேர் நிறுவனத்தில் நிறைய வெளிநாட்டு வாடிக்கையர் இருக்க வில்லை. பெரும்பாலான வாடிக்கையர் உள்நாடு. இருந்த மிகச் சில வெளிநாட்டு வேலைகளிலும் இருப்பதிலேயே திறமையான சில ஆட்கள் மட்டுமே இருந்தார்கள். அதிலும் இடம் பிடிக்கும் அளவுக்குத் திறமை இராததால் வெளிநாட்டு வாடிக்கையரோடு பணிபுரியும் வாய்ப்புக் கிட்டவில்லை எனக்கு.

அடுத்து, இரண்டாவது நிறுவனத்தில் குவாலிட்டி ஆசாமியாகச் சேர்ந்ததால் வெளிநாட்டுக் காரர்களுடன் வேலை செய்யும் வாய்ப்பே இல்லாமல் போய் விட்டது.  அது முதல், உள்-வாடிக்கையர் என்பார்களே (INTERNAL CUSTOMERS) அவர்களுடன்தான் எல்லா வேலையும். சில நேரங்களில் வெளியில் இருக்கும் வாடிக்கையரை விட இவர்களைத் திருப்திப் படுத்துவதுதான் அதிக சிரமம். இப்போது கன்சல்டிங் பக்கம் வந்த பின்புதான் கொஞ்சம் நம்பிக்கை வந்திருக்கிறது. நிறையச் சம்பாதிக்கலாம் என்பதைவிட பல்வேறு பட்ட பண்பாட்டுப் பின்னணி கொண்டோருடன் பணிபுரியும் அனுபவத்தைப் பெற வேண்டும் என்பதே வெளிநாடு செல்லும் ஆசைக்கு மிக முக்கியமான காரணம். ஒரு நேரத்தில், இலங்கைக்கோ பாகிஸ்தானுக்கோ கூடச் செல்லத் தயாராக இருந்தேன். எங்காவது போக வேண்டும் என்பது மட்டும்தான் குறி.

இரண்டாவது நிறுவனத்தில், பிரான்சிலிருந்து வந்திருந்த வாடிக்கையர் ஆள் ஒருவருடன் பேசிக்கொள்ளும் வாய்ப்பு ஒன்று கிடைத்தது. அவருக்கு ஆங்கிலம் நன்றாகத் தெரியாததால் அது ஓர் எளிதான அனுபவமாக இருந்தது. அன்று முடிவு செய்தேன் - போனால் பிரான்ஸ்தான் போக வேண்டும் என்று. ஏனென்றால் அவர்களைவிட நான் நன்றாக ஆங்கிலம் பேச முடிவதால். அப்போது மிக வசதியாக நான் மறந்து விட்டது என்னவென்றால், அவர்களை விட நன்றாகப் பேச முடிந்த ஆங்கிலத்தோடு அவ்வளவு எளிதாக அவர்களுடைய மண்ணில் நான் பிழைப்பை ஓட்டமுடியாது என்பது. அவர்களுடைய இடத்தில் சிரமமில்லாமல் வாழ விரும்பினால் அவர்களைப் போலவே அவர்களுடைய மொழியைப் பேச வேண்டும். அதுதானே சரி?!

இரண்டாவது நிறுவனத்தில் மற்றொரு வாய்ப்பு வந்தது. நிறுவனத்துக்குள்  அனைவருக்கும் அனுப்பப்படும் சுற்றிதழ் ஒன்றுக்கு நான் ஒரு கட்டுரை எழுத ஏற்பாடு செய்யும்படி அவருடைய தனிச் செயலரிடம் ஆணையிட்டார் அமெரிக்காவில் இருந்த பெருந்தலை. இருவரும் (பெருந்தலையின் தனிச் செயலரும் நானும்) தொலைபேசியில் பேசியபோது இருவருக்குமே ஒருத்தர் பேசுவது இன்னொருத்தருக்குப் புரியவில்லை. மொழிப்பிரச்சனை என்று சொல்ல முடியாது. ஒரே மொழியை இருவரும் வேறு வேறு விதமாகப் பேசிய பிரச்சனை. அந்தப் பிரச்சனையால் அழைப்பைப் பாதியிலேயே துண்டித்துக் கொண்டோம். அப்போது ஒரு முடிவெடுத்தோம். நான் சொல்வதை அவர் எழுதுவதற்குப் பதிலாக நானே எழுதி விடுவது என்று. என் எழுத்தாங்கிலம் பேச்சாங்கிலத்தை விடப் பரவாயில்லாமல் இருந்ததால் அதுவே பின்னர் நல்ல முடிவாக மாறியது. ஆனால், இந்த அனுபவம் தொடர்ந்து ஒருவித சஞ்சலத்தை உண்டு பண்ணிக் கொண்டே இருந்தது எனக்கு. பிறவி-ஆங்கிலர் ஒருவருடனான முதல்ச் சந்திப்பு பற்றிய பயம் தொடர்ந்து கொண்டே இருந்தது.

அடுத்து, மூன்றாவது நிறுவனத்தில்... அங்கு பணி புரிந்ததாகவே நான் உணரவில்லை. இருந்ததே மிகக் குறைவான காலம். எனவே, வெளிநாட்டுக்காரர்களுடன் வேலை பார்ப்பது பற்றியெல்லாம் பேசவே வேண்டியதில்லை. பக்கத்தில் உட்கார்ந்திருந்தவர்களுடனேயே அதிகம் பேசியதில்லை அப்போது.

அடுத்து, இப்போதிருக்கும் நிறுவனம். முதல் மூன்றரை வருடங்கள் உள்ளுக்குள்ளேயே குவாலிட்டி வேலை. அதில் வாடிக்கையருடன் பேசுவதற்கு எந்த வாய்ப்பும் கிடையாது. எப்போதாவது சில வெளிநாட்டு அழைப்புகளில் வேடிக்கையாளனாக மட்டும் இருக்கும் வாய்ப்புக் கிடைக்கும். பெரும்பாலான நேரங்களில் அந்தப் பக்கம் இருப்பவர் என்ன சொல்கிறார் என்பதைப் புரிந்து கொள்வதே பெரிய சிரமமாக இருக்கும். சில நேரங்களில் எங்கள் அலுவலகங்களுக்கு வந்த சில வெளிநாட்டவரை நேரடியாகச் சந்திக்கும் வாய்ப்பும் கிடைத்தது. அந்தப் பேச்சுவார்த்தைகள் அனைத்துமே சுருக்கமாகவும் சுவையாகவும் முடிந்து விட்டவை.

கன்சல்டிங் பக்கம் வந்த பிறகு, இப்போதுதான் அனுதினமும் பல மேற்கர்களோடு பேச ஆரம்பித்திருக்கிறேன். முதல் நாள், முதல் தொலைபேசிக் கூட்டத்தில் கலந்து கொள்ளும் முன்பு வந்த உணர்வே ஒருவிதமானது. இப்போது தினம் தினம் அவர்களுடன் பேசுவதும் நிறைய மேற்குலக நண்பர்கள் கொண்டிருப்பதும் சாதாரணமாகி விடும் போல் தெரிகிறது. ஆனாலும், அந்த முதல் நாள் உணர்வு வேறுபட்ட ஒன்றுதான். இந்த அனுபவத்திற்காக 12 வருடங்கள் காக்க வேண்டியிருந்ததுதான் இப்போதைய ஒரே கவலை. அவர்கள் பலரோடு பணி புரியும் வாய்ப்பு இப்போது கிடைத்திருக்கிறது. இதற்கா அவ்வளவு ஆசைப்பட்டோம் என்று அற்பமாகக் கூடத் தோன்றுகிறது சில நேரங்களில்.

சென்ற மாதம் பெங்களூர் வந்திருந்த ஸ்பானிய நண்பன் ஒருவனுடன் மூன்று வாரங்கள் பணி புரிய வேண்டியிருந்தது. இதுதான் ஒரு வெளிநாட்டவருடன் வேலை செய்யக் கிடைத்த மிக நெருங்கிய அனுபவம் என்று சொல்ல வேண்டும். சுருக்கமாகச் சொல்ல வேண்டும் என்றால் அருமையான அனுபவம். நாங்கள் சேர்ந்து பணி புரிந்த மூன்று வாரங்களில் எங்கள் இருவரின் கலாச்சாரங்கள் பற்றியும் விலாவாரியாகப் பேசிக் கொள்வதற்கு எங்களுக்கு அளவிலாத நேரம் இருந்தது. பகலவனுக்குக் கீழே உள்ள இந்தப் பூவுலகில் உள்ள எல்லா விஷயங்கள் பற்றியும் பேசினோம் என்பதால், எங்கள் கருத்துப் பரிமாற்றங்களில் வியக்கத்தக்க விஷயங்கள் நிறைய இருந்ததில் வியப்பேதும் இல்லை. இந்த இடுகையை எழுத ஆரம்பித்ததே அந்த வியப்புகள் அனைத்தும் பற்றிப் பேசத்தான். ஆனால் அதற்கான முன்னுரை மட்டுமே எழுத முடிந்திருக்கிறது. எனவே, அதை ஒரு தனி இடுகையில் எழுதி விடுகிறேன். இது என் மேற்கு நோக்கிய பயணம் பற்றிய ஒரு முன்னோட்டமாக இருக்கட்டும்... மேற்கு நோக்கி...

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம் - ஜெயகாந்தன்

"நான் என்னை ஒரு மேதையும் புனித வேசியும் போல் உணர்கிறேன்": அலெஹாண்ட்ரோ ஜோடராவ்ஸ்கிக்குச் சில கேள்விகள்

சாம, தான, பேத, தண்டம்