விவாதக்காரத் தமிழர்?!

நோபல் பரிசு பெற்ற பொருளியல் மேதை அமர்த்யா சென் அவர்களின் ஆங்கில நூல் “THE ARGUMENTATIVE INDIAN” வாசித்துக் கொண்டிருக்கிறேன். தமிழில் நேரடியாக மொழி பெயர்த்துச் சொல்லவேண்டுமென்றால் “விவாதக்கார இந்தியர்” என்று வரும். பொருளியல் மட்டுமல்ல, அவர் வரலாறு மற்றும் சமூகவியலிலும் கைதேர்ந்தவர்; தாகூருக்கும் சத்யஜித் ரேக்கும் அடுத்தபடியாக வங்க மண்ணில் தோன்றிய தலை சிறந்த அறிவாளி; இந்திய அளவிலும் ஒரு முக்கியமான இடம் கொடுக்கப்பட வேண்டிய அறிவாளர். அவர் சொல்ல வருவது என்னவென்றால் ஒரு ஜனநாயக நாட்டில் விவாதங்கள் மிக முக்கியமானவை. எதைச் சொன்னாலும் கண்மூடித்தனமாக ஏற்றுக் கொள்ளாமல் அதைக் கடுமையாக விவாதிக்கும் கலாச்சாரம் இந்தியாவில் தொன்று தொட்டே இருந்து வந்திருக்கிறது. அதுதான் இன்று நாம் நல்ல ஜனநாயக நாடாக இருக்க உதவுகிறது என்பது. நூல் முழுக்கவே வங்காள வாடை நிறைய அடிக்கிறது. வங்காளியாகப் பிறந்த ஒருத்தருடைய நூலில் வங்காள வாடை வருவதொன்றும் பெரும் குற்றமில்லை. அது மிக இயல்பானதே. அதற்கு அவர் “The Argumentative Bengali” (விவாதக்கார வங்காளி) என்றே பெயரிட்டிருந்தாலும் அது ஓரளவு ஒத்துத்தான் போயிருக்கும். அதைப் படிக்க ஆரம்பித்ததிலிருந்து, அந்தக் கலாச்சாரம் நம்மிடம், அதாவது தமிழர்களிடம், இருந்ததா – இருக்கிறதா என்று ஒரு கேள்வி என்னை விரட்டிக் கொண்டே இருக்கிறது. அதன் வெளிப்பாடுதான் இந்த இடுகை.

தமிழன் விவாதக்காரனா என்று பேசும் முன் நிறையப் பேசுபவனா, அதாவது சவடால்ப் பேர்வழியா என்பது பற்றிச் சிறிது பேசி விடுவோம். “நான் அப்படியெல்லாம் பேசுவதில்லை”, “என் தம்பி அப்படியெல்லாம் பேசுவதில்லை”, “என் கொழுந்தியாள் அப்படியெல்லாம் பேசுவதில்லை”, “எதற்காக இப்படிப் பொதுப் படையாக ஒரு பழியைப் போடுகிறாய்?” என்றெல்லாம் சண்டைக்கு வர எத்தனிப்பவர்களுக்கு ஒரே ஒரு முன் விளக்கம். நான் பேசப்போகிற எல்லாமே ஒரு சராசரித் தமிழனை மனதில் வைத்து. சில இடங்களில் சராசரி விதிவிலக்குகளையும் வெளிப்படையாகச் சொல்லி விடுகிறேன். அதையும் மீறி ஒரு வேளை மாற்றுக் கருத்து இருக்குமாயின் கண்டிப்பாகப் பேசலாம். அது நிச்சயமாக நம் இருவரில் ஒருவருக்குப் பயனளிக்கும்.

மற்ற ஊர் அரசியல்வாதிகளை விட நம்ம ஊர் ஆசாமிகள் கொஞ்சம் அதிகம்தான் பேசுகிறார்கள். பேசியே ஆட்சியைப் பிடித்த கதை இங்கு மட்டும்தானே நடந்தது. அரசியல்வாதிகள் இலக்கியம் பேச வேண்டுமென்ற எழுதப் படாத சட்டமும் இங்கேதான் இருக்கிறது. ஒரிசா மாநில முதல்வர் நவீன் பட்நாயக்குக்கு ஒரியாவே தெரியாதாம். அப்படி ஒருத்தர் இங்கே ஆட்சி செய்ய முடியுமா? “அதற்குக் காரணம் போன தலைமுறையில் அவங்க அப்பா ஏற்கனவே முதலமைச்சராக இருந்து நற்பெயர் வாங்கியவர்” என்று சொல்பவர்களுக்கு ஒரு கேள்வி. அப்படி ஒரு அப்பாவை நாம் விட்டு வைத்திருப்போமா? ‘நீ தமிழனுக்கா பிறந்தாய்?’ என்றோர் அசிங்கமான கேள்வியை வேறொரு விதமாக மிக அழகாகத் தமிழில் கோர்வையாக்கிக் கேட்டு நாறடித்திருப்பார்கள். தம் மக்களின் மொழியைக்கூடப் பேச முடியாத ஒரு தலைவர் எப்படித்தான் அவர்கள் பிரச்சனையைப் புரிந்து கொள்கிறார் அல்லது எப்படி ஓட்டுக் கேட்கிறார் என்று ஆச்சரியமாகக் கேட்கிறவர்களுக்கு ஒரு மேட்டர். நிறையப் பேச நேரம் இல்லாததாலோ என்னவோ அவர் நல்லாட்சி கொடுத்துக் கொண்டு இருப்பதாகச் சொல்கிறார்கள் நாடறிந்த அறிஞர் பலர். இன்றைக்கு இந்தியாவில் இருக்கிற முதலமைச்சர்களில் ஒழுங்காக வேலை பார்ப்பவர்களில் அவரும் ஒருவர் என்கிறார்கள்.

மற்ற பல மாநிலங்களிலிருந்து வருகிற அரசியல்வாதிகளும் மற்ற துறைத் தலைவர்களும் கூட நன்றாகப் பேசத்தான் செய்கிறார்கள். விவேகானந்தர், காந்தி, நேரு, அம்பேத்கர், தாகூர், ஜின்னா, கிருஷ்ண மேனன் (கேரளாவைச் சேர்ந்த இவர் ஐ.நா. சபையில் விடாமல் எட்டு மணி நேரம் பேசிச் சாதனை செய்தவர்), சத்யஜித் ரே, அமர்த்யா சென், வாஜ்பாய், மோதி (அவர் பெயர் மோடி அல்ல), அத்வானி மற்றும் லல்லு ஆகியோர் வெவ்வேறு கால கட்டங்களில் பெரிதாகப் பேசப் பட்ட பேச்சாளர்கள். சென்ற இடுகையில் சொன்னது போல, சிறந்த பேச்சாளர்களும் குறிப்பிட்ட பகுதிகளில் அதிகம் தோன்றி இருக்கிறார்கள். வங்கத்திலிருந்து நிறையப் பேரறிவாளிகளும் பேச்சாளர்களும் தோன்றியிருக்கிறார்கள். அதற்கடுத்து தமிழகத்திலிருந்து நிறையத் தோன்றியிருக்கிறார்கள். சிங்காரவேலர், சத்தியமூர்த்தி, டாக்டர். ராதாகிருஷ்ணன், பெரியார் மற்றும் அண்ணா ஆகியோர் இந்திய அளவில் போடப்படும் எந்தப் பேச்சாளர் பட்டியலிலும் இடம்பெறத் தக்கவர்கள். சிறந்த பேச்சாளராக இருக்க ஒருவர் அடிப்படையில் சிறந்த சிந்தனையாளராக இருக்க வேண்டும். பெரிதாகச் சிந்தனை பலம் எதுவும் இல்லாமல் வெறுமனே சொற்களை மட்டும் அடுக்குகிற வரட்டுப் பேச்சாளர்கள் நிறைய நம்ம ஊரில் இருக்கிறார்கள். மற்ற ஊர்களில் அது எப்படி என்று தெரியவில்லை. முழு நேரப் பேச்சாளர்களை விட முழு நேர எழுத்தாளர்களை விட அவை தவிர்த்து வேறு ஏதாவது சாதித்து விட்டு வந்து பேசினாலோ எழுதினாலோ அவரை நாம் அதிகம் மதிப்போம். பெரும் பெரும் சிந்தனையாளர்கள் மற்றும் சாதனையாளர்கள் நிறையப் பேர் பேச்சாற்றல் மட்டும் இல்லாமல் இருப்பதையும் நம் பொது வாழ்க்கைப் பிரமுகர்கள் பலரும் நம் அலுவலகங்களில் இருக்கிற பெரியவர்கள் பலரும் அவ்வப்போது நிரூபித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்.

அடுத்து திரைப்படங்கள். எடுத்துக்காட்டாக, மலையாளப் படங்களை விட நம் படங்களில் பேச்சு கொஞ்சம் அதிகம்தான் போல் தெரிகிறது. அவர்களிடம் மேட்டர் அதிகம்; பேச்சு குறைவு என்று அவர்களில் சிலர் என்னிடம் அடிக்காத குறையாகச் சொல்கிறார்கள். உண்மைதான். அவர்களுடைய திரைப்படங்களில் அளவிலாத தரம் இருக்கிறது (சத்தியமாகச் சொல்கிறேன் - சனிக்கிழமை இரவு சூர்யா டி.வி.யில் வருகிற படங்களை மனதில் வைத்துச் சொல்லவில்லை இதை!). மோகன்லால் கொஞ்சம் பொறி பறக்கும் விதமாக வசனங்கள் பேசுவதைப் பார்த்திருக்கிறேன். வங்காளப் படங்களில் கண்டிப்பாக நம்மை விட அதிகமான வசனங்கள் இருக்கும் என்றுதான் நினைக்கிறேன். இந்திப் படங்களிலோ மற்ற மொழிப் படங்களிலோ நெடு நீண்ட வசனங்கள் பேசுகிற காட்சிகள் நிறைய வருகின்றனவா என்று தெரியவில்லை. பராசக்தியில் சிவாஜி பேசியதாகட்டும் கேப்டன் பிரபாகரனில் விஜயகாந்த் பேசியதாகட்டும் நீதிமன்றக் காட்சிகளுக்கென்று ஒரு மவுசு இருந்த காலம் உண்டு நம் ஊரில். அந்தக் காலத்தில் பல படங்கள் சிவாஜியின் வசனங்களுக்காகவே ஓடியதாகக் கூடக் கேள்விப் பட்டிருக்கிறேன்.

நீதித் துறையில் அல்லது வழக்கறிஞர் தொழிலில் இந்திய அளவில் நம்மவர்கள் பெரிதாக யாரும் வந்த மாதிரித் தெரியவில்லை. சுப்ரமணிய சுவாமி அவ்வப்போது ஏதாவது செய்து கொண்டிருக்கிறார். ஆனால் பெரிதாக ஏதும் பெயர் பெற்ற மாதிரித் தெரியவில்லை. சிதம்பரம் பதவியில் இல்லாத காலங்களில் முறையாக வக்கீல்த் தொழில் பார்க்கிறார் என்கிறார்கள். அவர் ஒரு நல்ல பேச்சாளர்தான். ஆனால் நாம் சொல்கிற அளவுக்குப் பெரிய வழக்கறிஞர் என்று சொல்ல முடியாது. இதுதான் நாம் ஒருவேளை வெட்டிப் பேச்சுக் கூட்டமோ என்றொரு சந்தேகத்தை எனக்கு ஏற்படுத்துகிறது. நான் குழப்பங்களைத் தீர்க்க எழுத வந்தவனில்லையாதலால் தங்களால் என் குழப்பங்களைத் தீர்க்க முடியுமாயினும் ஓகே தான். என்னுடைய குழப்பங்களைத் தீர்த்துக் கொள்வதற்காக எழுத வந்தவன் என்று வேண்டுமானால் சொல்லலாம். அல்லது தெளிய வைக்கும் முயற்சியைக் கிளப்பி விடுவதற்காக குழப்புகிறவனாகக் கூடச் சொல்லலாம். முன்னமே சொன்னேனே, வாசகரின் சிந்தனையை மட்டும் தூண்டுவதல்ல எழுத்து; எழுதுபவனின் சிந்தனையையும் தூண்டுவதுண்டு அது.

தமிழ்நாட்டுக்குள் பார்த்தால் சில பகுதியினர் பேச்சே பிழைப்பாகத் திரிகிறார்கள். நான் பார்த்ததில் அப்படிப் பட்ட ஓர் ஊர் மதுரை. அதிகம் பேசாத மதுரைக்காரர்களை நான் அதிகம் பார்த்ததில்லை. இவர்களுக்கெல்லாம் வாயே வலிக்காதா என்ற அளவுக்குப் பேசுவார்கள். மொட்டைத் தலையனுக்குச் சீப்பு விற்கிற அளவு பேச்சாற்றல் கொண்டவர்களையெல்லாம் பார்த்திருக்கிறேன். அது போல, பிறரை விவாதங்களுக்கு இழுப்பது, பின்னர் குரலை உயர்த்திக் குண்டக்க மண்டக்கப் பேசி, எதிராளியை நிலை குலையச் செய்து விட்டு, ரெம்ப மமதையோடு எழுந்து போய் அடுத்த ஆள் தேட ஆரம்பிப்பது, இப்படியாக அன்றாட வாழ்க்கையைப் பேச்சிலேயே ஓட்டுகிற ஆசாமிகள் நிறையப் பேரை அங்குதான் அதிகம் பார்த்திருக்கிறேன்; வெளியில் பார்த்ததில்லை. அதற்கொரு காரணம் வேலை பார்க்கிற காலத்தில் வெளியேறியதாகக் கூட இருக்கலாம். மதுரைக்காரர்கள் அவ்வளவு பேசியும் பெரிதாக ஒன்றும் சாதிக்க முடியாமல் போனதற்குக் காரணம், அது போல ஆங்கிலத்தில் பேச முடியாமல் தமிழில் மட்டும் அப்படிப் பேச முடிந்ததால் இருக்கலாம். நல்ல வேலை ஆங்கிலம் நல்லாப் பேச வரவில்லை எங்க ஊர்க்காரர்களுக்கு என்று சில நேரம் தோன்றும். ஏனென்றால், அப்படி ஆங்கிலமும் பேசப் பழகிக் கொண்டு வருகிற சில பேர்வழிகள் பேச்சை மட்டுமே வைத்துப் பிழைப்பு நடத்துவதைப் பார்த்தால் வயிறு கொஞ்சம் எரியத்தான் செய்யும். பேச்சு மட்டுமே பேசிக் கொண்டிருந்தால் வேலை எப்படி நடக்கும்?!

அடுத்ததாக, ஊர்ப்பக்கம் இருந்து வருகிற எம்மைப் போன்ற ஆசாமிகளிடம் இருக்கிற ஒரு நம்பிக்கை, சென்னைக்காரர்கள் எல்லாம் பெரும் சவடால்ப் பேர்வழிகள் என்பது. “வாயிலேயே கோயில் கட்டிக் கும்பாபிஷேகம் நடத்திருவான்யா” என்று பேசிக் கொள்வார்கள். அதை ஓரளவு நானும் கவனித்திருக்கிறேன். அதைத் தன்னம்பிக்கை சம்பந்தப் பட்ட ஒன்றாகப் பார்க்கிறேன். மக்கட்பெருக்கம் நிறைந்த ஊர்களில் நிறையக் கூட்டங்களோடு கூட்டமாக வாழ்கிறபோது அது தானாகவே வந்து விடும் என நினைக்கிறேன். கிராமப் புறங்களில் இருந்து வருகிறவர்கள் சின்னச் சின்ன மேட்டர்களைப் பெரிதாக நினைத்துக் கொண்டு ஆச்சரியப் படும் நேரத்தில் நம் நகர மாந்தர்கள் பல மைல் தொலைவு முன்னால் போய் விடுகிறார்கள் என நினைக்கிறேன்.

பெங்களூரில் நான் கண்ணாரக் கண்டு வியந்த ஒன்று – நம்ம ஊரில் நமக்கு சாதாரணமாகப் படுகிற பல சங்கதிகளை இங்கே பேசும்போது இங்கே உள்ளவர்களுக்கு அது ஏதோ பெரிய தத்துவம் பேசுவது போலத் தோன்றும். “ஆகா... ஓகோ...” என்று பெருமிதப் படுவார்கள். எனக்குத் தெரிந்து அதற்கான காரணமாகப் படுவது, ஒன்று தத்துவங்களுக்கான குறைபாடு அல்லது அப்படிச் சமாச்சாரங்களைப் பேசுகிற சவடாலர்களுக்குக் குறைபாடு. ஒட்டு மொத்தமாகப் பார்த்தால் தத்துவங்களுக்குக் குறைபாடு போலத் தெரியவில்லை. இதுதான் நாம் வாய்ப் பேச்சில் வல்லவர்களோ என்று பல முறை என்னைச் சிந்திக்க வைத்தது. அதே போல, பெங்களூரில் நான் கண்ட கடும் உழைப்பாளிகளும் நம்மவர்களே; வாயிலேயே கோயில் கட்டிக் கும்பாபிஷேகம் நடத்துபவர்களும் நம்மவர்களே. இங்கிருப்பவர்களோ சாதாரணமாக வேலை பார்ப்பார்கள்; சாதாரணமாகப் பேசுவார்கள்; கல்லைக்கூடத் தூக்க முடியாமல் உட்கார்ந்து கொண்டு மலையையே பெயர்க்கும் வல்லமை கொண்ட ஆஞ்சநேயரின் அக்கா மகன் போலப் பேச மாட்டார்கள். அதுவும் பல நேரங்களில் மதிக்கும் படியாகத்தான் இருக்கிறது.

“சரிப்பா, குழப்பியது போதும். இறுதியாக என்ன சொல்கிறாய்? தெளிவாகச் சொல்” என்பவர்களுக்கு என் ஒரு வரி இதுதான் – வாய்ச் சவடாலில் கண்டிப்பாக நாம் மற்றவர்களை விட ஒரு படி மேலேதான்.

சவடால் மட்டுமில்லை. விவாதங்களும் நிறைய நடந்திருக்கின்றன இங்கே. அமர்த்யா சென் சொல்லாமல் விட்ட விவாதங்கள் நிறைய இருக்கின்றன நம்மிடம். இந்தியாவிலேயே அதிகம் கோயில்கள் இருக்கிற மாநிலம் நம்முடையது. இன்னும் குறிப்பாகச் சொல்லப் போனால், மிகச் சமீபத்தில் எடுக்கப்பட்ட ஒரு கணக்கெடுப்புப்படி, இந்தியாவிலேயே அரசாங்கப் பொது இடங்களில் – புறம்போக்கு நிலங்களில் அதிகம் கோயில் கட்டியிருக்கிற மாநிலம் தமிழகம். இது ஏன் சரியென்றும் ஏன் தவறென்றும் ரெண்டு பேர் வாதிடுவதையும் போன வாரம்தான் ஒரு வாரப் பத்திரிகையில் படித்தேன். இந்தியாவிலேயே கடவுள் நம்பிக்கைக்கு எதிராக அவ்வளவு பெரிய இயக்கம் நடந்ததும் இங்கேதான். “நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே!” என்று ஆண்டவனிடமே விவாதம் நிகழ்த்திய நக்கீரன் (இதை எழுதும் போது எந்த வாரப்பத்திரிகையின் பெயரும் என் நினைவில் வரவில்லை என்பதைப் பணிவோடு சொல்லிக் கொள்கிறேன்) வாழ்ந்ததும் இங்கேதான். இராமசாமி என்ற பெயர் கொண்ட ஒருத்தர்தான் சாமியே இல்லை என்று ஊர் ஊராகப் போய்ப் பேசினார். ஊரெல்லாம் கோயில்கள் நிறைந்த காஞ்சியில்தான் கோயில்களில் இறைவன் இல்லை என்று சொல்கிற ஒருத்தர் பிறந்தார். பின்னர் அதையும் ஓட்டுக்காக ஓரளவு மாற்றிக் கொண்டார். ஒன்பது கோள்களுக்கும் கோயில் கொண்டிருக்கிற தஞ்சைச் சீமையில்தான் கோள்களையும் நம்பவில்லை கோயில்களையும் நம்பவில்லை என்று பேசுகிற மஞ்சள்த் துண்டுக்காரர் பிறந்தார். இதை விடத் துல்லியமாகச் சொல்ல வேண்டுமென்றால் சிவபிரானை உருகி உருகிப் பாடிக் களித்த ஆரூராரின் ஊருக்கு அருகில்தான் ‘என் பிராணன் போகும் வரை எந்தப் பிரானையும் ஏற்றுக் கொள்ள மாட்டேன்’ என்று சொன்னவரின் ஊரும் (“சொல்வது மட்டும்தான்; செயலில் இல்லை” என்று சிலர் சொல்வது கேட்கிறது. விவாதிகளின் மிகப் பெரிய பிரச்சனையே அதுதானே! ‘ஊருக்குத்தானடி உபதேசம்’ கதையும் இங்கேதானே பிறந்தது!). இராமசாமி, துரைச்சாமி, தட்சிணாமூர்த்தி, நாராயணசாமி, இராமையா என்பார்தான் (எல்லாமே சாமிப் பெயர்கள்) பிற்காலத்தில் முறையே பெரியார், அண்ணாத்துரை, கருணாநிதி, நெடுஞ்செழியன், அன்பழகன் என்று வழங்கப் படலானார்.

குறிப்பின்றி மணிக்கணக்காகப் பேசும் ஆசாமிகள் இங்குதான் அதிகம். அடுக்கு மொழி பேசுவதையே தன் வாழ்க்கையின் ஒரே நோக்கமாகக் கொண்ட அரசியல்வாதிகளும் சினிமாக்காரர்களும் இங்குதான் இருக்கிறார்கள். கடவுள் உள்ளாரா இல்லையா என்கிற விவாதம் மட்டுமில்லை. இன்னும் நிறைய இருக்கிறது. எல்லாவற்றுக்கும் மேல், இங்கு போல எங்கும் இவ்வளவு உட்கட்சிப் பூசல் (அதிமுக அத்வைதக் கோட்பாடு கொண்ட கட்சி என்பதால் அது விதிவிலக்கு – “கட்சி வேறு அதன் தலைமை வேறு அல்ல; தலைமைதான் கட்சி!” என்பவர்கள்) இருப்பதாகத் தெரியவில்லை. குடும்பமே கட்சியாக இருக்கிற ஒரு கட்சியில் உட்பூசல் காரணமாக ஒரு பெரும் கொலையே விழுந்தது. காங்கிரஸ் கட்சியின் உறுப்பினர்களை விடத் தலைவர்கள் அதிகம் கொண்ட மாநிலம் தமிழகம் ஒன்றாகத்தான் இருக்க முடியும். இது போதாதா நாம் எவ்வளவு பெரிய விவாதக்காரர்கள் என்று நிரூபிக்க?! எனவே, இந்த மன்றம் இறுதியாகவும் உறுதியாகவும் இப்படித் தீர்ப்பளிக்கிறது – “தமிழர்கள் விவாதக்காரர்களே! விவாதக்காரர்களே!! விவாதக்காரர்களே!!!”. அதன் பின்பு “நன்றி! நன்றி!! நன்றி!!!” (மூன்று முடிச்சுக்கு ஒரு பொருள் இருப்பது போல சில தொலைக்காட்சிகளில் மூன்று நன்றிக்கும் ஏதோவொரு பொருள் வைத்திருக்கிறார்கள்).

பின் குறிப்பு: மேற்சொன்ன படித் தீர்ப்பளிக்கும் பட்டி மன்றம் என்கிற படிவம் உலகத்திலேயே முதல் முறையாக உருக்கொண்ட இடம் இந்தத் தமிழ்த்திரு மண்ணே. ‘இறந்த கிழவியை எரிப்பதா? புதைப்பதா?’ என்கிற அளவுக்கு அது இறங்கிப் போய் விட்டாலும், திரும்பத் திரும்ப அரைச்ச மாவையே (புருசன் பொண்டாட்டி பிரச்சனைதான் இதில் மாவு) புளித்த பின்னும் அரைத்துக் கொண்டிருந்தாலும், எல்லாத் தட்டு மக்களையும் பங்கெடுக்க வைக்கும் அதன் உள்நோக்கம், நம் விவாதங்களின் மீதான காதலைக் கொடி கட்டி உயர்த்திப் பிடிக்கிறது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம் - ஜெயகாந்தன்

"நான் என்னை ஒரு மேதையும் புனித வேசியும் போல் உணர்கிறேன்": அலெஹாண்ட்ரோ ஜோடராவ்ஸ்கிக்குச் சில கேள்விகள்

சாம, தான, பேத, தண்டம்