தமிழன்னா என்ன பருப்பா?!

எந்த ஒரு பெருங்குழுவிலும் குறிப்பிட்ட சில உட்குழுக்கள் உயர்ந்தவர்களாகக் கருதப் படுவது இயல்பு. உயர்வு தாழ்வு என்பதைத் தவறான நோக்கம் எதுவும் கொண்டு சொல்லவில்லை. அறிவு ரீதியாக, ஆற்றல் ரீதியாக, சராசரி மக்கள் பார்வையில் படுவது பற்றி மட்டுமே பேசுகிறேன்.

ஏதோ ஒரு நூலில் கண்ணதாசன் கூட அது பற்றி ஏதோ சொல்லியதைப் படித்த நினைவு இருக்கிறது. அவர் சொல்ல முனைந்தது என்னவென்றால், இந்தியாவில் எல்லா இனங்களுமே சிறந்தவைதான் என்றாலும் தமிழர், வங்காளர், மராட்டியர் போன்றோர் இன்னும் சிறந்தோர் என்பது போன்ற ஒரு கருத்து. பின்பொரு நாளில் கர்நாடகத்து ஐயங்கார் பையன் ஒருவன் சொன்னான், “தமிழன், மலையாளி, பஞ்சாபி – இந்த மூவரையும் உலகத்தில் எந்த மூலையில் சென்றாலும் பார்க்கலாம்” என்று. அப்புறம் ஆந்திராவில் இருந்து வந்த ஒருநாள் நண்பர் ஒருவர் சொன்னார், “தமிழர்கள் அறிவாளிகள், கடுமையான உழைப்பாளிகள்” என்று. பின்பொரு காலத்தில், தமிழரையும் பஞ்சாபியையும் பிடிக்காத மலையாளப் பெண்மணி ஒருவர், “அவ்விரு இனங்களுமே ஒரே மாதிரிக் குணம் கொண்டவை; திருடர்கள் – மொள்ளமாறிகள் – சுயநல வாதிகள்; வளர்ச்சிக்காக எதையும் செய்வர்” என்பது போன்று ஒரு கருத்துச் சொன்னார். ‘நம் இனங்கள் எப்படியோ, நான் உன்னை விட நாகரிகமானவன்’ என்று உணர்த்த முயன்று நான் அமைதி காத்து விட்டேன். நான் நினைத்தபடி உணர்த்துவதில் வென்று விட்டது போல் இன்றுவரை தெரியவில்லை.

ஒரு சில வருடங்களுக்கு முன்பு பெங்களூரிலிருந்து தூத்துக்குடி விரைவு வண்டியில் ஊருக்குப் பயணப் பட்டுக் கொண்டிருந்த போது இரு கன்னடர்கள் மதுரையைப் பார்த்து விட்டுக் கேட்டார்கள், “தமிழர்கள் மிக அறிவாளிகளே, இந்த ஊரை ஏன் இப்படி நாற விட்டிருக்கிறீர்கள்?”. உடனடியாகப் பெருமையில் மிதப்பது போல் காட்டிக் கொண்டு விட்டால், அதுவே நாம் அறிவாளிகள் என்பதைப் பொய்ப்பித்து விடும் என்று பயந்து அவர்கள் சொன்னதில் நம்பிக்கை இல்லாதது போல் சிரித்தேன். அதில் ஒருவர் அதை மிகவும் கடுமையாக எடுத்துக் கொண்டு, “என்ன சிரிக்கிறீர்கள்? தமிழர்கள் அறிவாளிப் பேர்வழிகள். இன்றைக்கு மன்மோகன் சிங் கையில் 44 IAS அதிகாரிகள் தமிழர்கள்தான் இருக்கிறார்கள்!” என்று ஏதோ ஒரு புரியாத புள்ளி விபரத்தை விட்டெறிந்தார். அவர்களிடம் மகிழ்ச்சியைக் காட்டிக் கொள்ளாவிட்டாலும், வைகையின் நாற்றத்தை மீறி ஒரு சின்ன மகிழ்ச்சி என்னை அடுத்துப் பல நாட்களுக்கு ஆட்கொண்டது பற்றி உங்களிடம் சொல்லித்தான் ஆக வேண்டும். நம்பிக்கை ஒளி தெரிகிற மாதிரி யார் என்ன பேசினாலும் எனக்கு நிரம்பப் பிடித்து விடும். இப்போதுதான் புரிகிறது – எப்போதெல்லாம் பொய் நல்லதென்று. வள்ளுவர்த் தாத்தா சொன்னது சரிதான் இல்லையா? “பொய்மையும் வாய்மையிடத்து புரை தீர்ந்த நன்மை பயக்குமெனின்”! மீண்டும் ஒரு ஒருநாள் நண்பர் (கர்நாடகத்து ஐயங்கார்) சொன்னார், “உழைப்பில் உங்களை அடித்துக் கொள்ள யாரும் இல்லை” என்று. அலுவலகத்தில் ஓர் உரையாடலின் போது ஒரு கருத்து வந்தது – வங்காளரும் நாமும் வேலையில் வேகமானவர்கள் என்று. இன்னொரு நண்பர் சொன்னார் – “மேல் தட்டு என்பதில் எல்லா இனத்தவரும் இடம் பிடித்திருக்கிற ஒரே மாநிலம் தமிழ்நாடு மட்டும்தான். பொதுவுடைமை பேசிய மாநிலங்களில் கூட வளர்ச்சி என்பது ஒரு குறிப்பிட்ட சாராரிடம் மட்டுமே சிக்கிக் கொண்டிருக்கிறது” என்று. இது நானும் முழு மனதோடு ஆதரிக்கும் கருத்து.

இந்த எல்லா உரையாடல்களின் மூலம் புரிகிற ஒன்று – இந்தியாவில் சில இனங்கள் மற்றவர்களை விடக் கண்டிப்பாக ஒரு படி மேலே நிற்கின்றன என்பது. அதில் தமிழருக்கும் உறுதியாக இடம் உண்டு. நம்மவர்கள் மட்டும் அப்படிப் பீற்றிக் கொள்வதால் அல்ல, பிறரும் அதை ஏற்றுக் கொள்வதால்.

கலை, இலக்கியம், அரசியல், அறிவியல், பொருளியல் போன்றவை இந்த அளவிடலுக்குப் பெருமளவு அடிப்படையாக இருக்க வேண்டும். அறிவியல் தவிர்த்து இவை எல்லாவற்றிலுமே வங்கத்தவர் நிறையச் சாதித்திருக்கிறார்கள். மலையாளத்தார் சிலவற்றில் (கலை மற்றும் இலக்கியம்) நிறையச் சாதித்திருகிறார்கள். குஜராத்தியர் அரசியலில் நிறையச் சாதித்திருக்கிறார். காந்தியும் பட்டேலும் முக்கியமாகக் குறிப்பிடப்பட வேண்டும். அத்வானியும் மோதியும் (அவர் பெயர் மோடி அல்ல, மோதி) அந்தப் பட்டியலில் வருவார்களா என்பது உங்கள் அரசியல் நிலைப்பாடு பொறுத்தது. கன்னடத்தார் இலக்கியத்தில் கலக்கி இருக்கிறார்கள். இதுவரை ஏழு ஞானபீட விருதுகள் வாங்கி விட்டுப் பேசாமல் வேலையைப் பார்த்துக் கொண்டு இருக்கிறார்கள். அடுத்த பத்து இருபது ஆண்டுகளில் நெருங்கி வருகிற மாதிரி பக்கத்தில் கூட யாரும் இல்லை. தமிழர்கள் கலை, இலக்கியம், அரசியலில் ஓரளவும் அறிவியலில் பேரளவும் சாதித்திருக்கிறோம். எப்படிச் சொல்கிறேன் என்று கேட்கிறீர்களா?

மேற்சொன்ன துறைகளில் கலை தவிர மற்றவற்றை அளவிட நோபல் பரிசு இருக்கிறது. அத்துறைகளில் அதுதான் உலகத்தின் தலை சிறந்த பரிசு. கலைக்கு (இந்நூற்றாண்டில் கலைகளில் தலையாயக் கலையாகத் தலை எடுத்திருப்பது திரைப்படக் கலை) ஆஸ்கார்.

இதுவரை நோபல் பரிசு பெற்ற எட்டு இந்தியரில் இருவர் வங்காளர்; மூவர் தமிழர் (இரண்டரை என்றும் சொல்லலாம்); ஒருவர் பஞ்சாபி; ஒருவர் அன்னை தெரசா; ஒருவர் நைபால். முதல் பத்தியில் நாம் பேசியதற்கும் இதற்கும் ஏதோ ஒரு சொதப்பலான உறவு இருப்பது தெரிகிறதா இப்போது? கீழே விரிவாகப் பார்ப்போம். முடிந்தால் தெளிவாகப் பார்ப்போம்; தெளிவாக்கப் பார்ப்போம்.

இரு வங்காளர் தாகூரும் அமர்த்யா சென்னும். முதலாவது இலக்கியத்துக்கு. இரண்டாவது பொருளியலுக்கு. மூன்று தமிழர் சர் சி. வி. இராமன், டாக்டர். சந்திரசேகர் மற்றும் போன வருடம் வாங்கிய அமெரிக்கத் தமிழர் வெங்கி ஆகியோர். வெங்கியின் முழுப் பெருமை நமக்குச் சேராது (ஆனால் அவருடைய இரத்தத்தில் நமக்கு அளவிலா உரிமை இருக்கிறது). சின்னப்பிள்ளையிலேயே குஜராத் போய் பின்னர் அமெரிக்கா போனவர். மூன்றுமே அறிவியலுக்குக் கிடைத்தவை. இது போதாதா நாம் அறிவாளி என்று மார் தட்டிக் கொள்ள?! என்ன கொடுமை என்றால் இராமன் அவர்களும் சந்திரசேகர் அவர்களும் ஒரு குடும்பத்து ஆட்கள். வெங்கியைச் சேர்த்துப் பார்த்தால் மூவருமே நம்ம ஊர் ஐயர் அல்லது ஐயங்கார் பிரிவைச் சேர்ந்தவர்கள். “எனவே, தமிழரெல்லாம் அறிவாளி ஆகி விட முடியாது மக்களா! நாங்கள் மட்டும்தான் அதில் அறிவாளி என்று யாரும் சண்டைக்கு வர மாட்டீர்கள்” என்று உறுதியாக நம்புகிறேன், அதில் ஓரளவு உண்மை இருப்பினும்! பஞ்சாபி (ஹர்கோபிந்த் கொரானா) வாங்கியது மருத்துவத் துறையில். அதையும் அறிவியலிலேயே சேர்த்துக் கொள்ள வேண்டும். அன்னை தெரசா அமைதிக்கு. அவர் நம் மண்ணில் பிறந்தவரல்ல, ஆனால் இதைத் தம் மண்ணாக ஏற்றுக் கொண்டவர். நைபால் இந்தியப் பெற்றோருக்கு வெளி நாட்டில் பிறந்த இந்தியர். அரை டிக்கெட்டாகத்தான் சேர்க்க முடியும் இவரையும்.

ஆஸ்கார் கதைக்கு வருவோமானால், சில ஆண்டுகளுக்கு முன்பு வரை வெகு நீண்ட காலமாக ஒரே ஒரு இந்தியர்தான் அந்தப் பரிசைப் பெற்றிருந்தார். அதுவும் ஆயுட் காலச் சாதனைக்கான பரிசு. அது சத்யஜித் ரே அவர்கள். அவரும் வங்காளர். பானு அத்தையா என்றொரு இன்னொரு பம்பாய்க்காரப் (அப்பாடா, இது ஒன்றுதான் நீண்ட நேரமாக விடு பட்டுக் கொண்டிருந்தது!) பெண்மணியும் வாங்கியிருந்தார். ஆனால் அது “காந்தி” ஆங்கிலப் படத்துக்கு என்பதால் அரை டிக்கெட்தான். சமீபத்தில் வாங்கிய மூவரில் ஒருவர் நம்மவர். இரட்டை மாங்காய் அடித்த நம் தங்கத்தின் தங்கம் ரஹ்மான். பூக்குட்டி, மலைக்கு அந்தப்புரம் (‘ர’ போடுவதா ‘ற’ போடுவதா என்று மாபெரும் குழப்பம். தவறாக இருந்தால் அது என் சொற்குற்றம். கண்டிப்பாகப் பொருட்குற்றமோ சிலேடையோ அல்ல!) இருக்கிற பக்கத்து ஊர்க்காரர். இன்னொருவர் கவிஞர் குல்சார். அவர் பஞ்சாபி. பாடல் வரிகளுக்கு வாங்கியதால் கலையிலும் சேர்க்கலாம்; இலக்கியத்திலும் சேர்க்கலாம்.

இவை தவிர்த்து விடுபட்ட சில துறைகளும் உள்ளன. கணிதத்தில் நம்ம ஊரில் தோன்றிய இராமானுஜர் போலொருவர் வேறெங்கும் தோன்றியதில்லை. வெறும் விளையாட்டாக எடுத்துக் கொள்ள முடியாத சதுரங்க விளையாட்டில் விட்டு விளாசிக் கொண்டிருக்கும் விஸ்வநாதன் ஆனந்த் நம் படைப்புதான். அதுபோலொருவர் இன்னும் இங்கு உருவாகவுமில்லை. குறுகிய காலத்தில் உருவாக வாய்ப்பும் இருப்பது போல் தெரியவில்லை.

இத்தனையையும் படித்த பின்பு உறுதியாகத் தெரிகிறது – கடந்த ஒரு நூற்றாண்டில் வெற்றிக் காற்று சில வீட்டு வாசல்களில் மட்டுமே வீசியிருக்கிறது; அதில் ஒன்று நம்ம வீடும் என்பது. ஒரு வேளை இந்த அளவிடுதலில் வேறு ஏதாவது பரிசுகளோ சாதனைகளோ சேர்த்துக் கொள்ளப் பட வேண்டுமாயின் சொல்லுங்கள். செய்து விடுவோம்.

பின் குறிப்பு: நம்ம ஊரில் ஒரு குடும்பத்தில் இரு இயற்பியல் மேதைகள் பிறந்தது போல (ஒருவரே இரு பரிசுகள் வாங்கியது ஒரு கதை – ரஹ்மானின் ஆஸ்கார் பற்றிச் சொல்கிறேன்), வங்கத்தில் சாதித்த மூவருக்கும் ஒரு தொடர்பு இருக்கிறது. ரேயும் சென்னும் தாகூர் நடத்திய சாந்திநிகேதன் பள்ளியில் படித்தவர்கள். வெற்றியும் சில நேரங்களில் இட ஒதுக்கீடு செய்வது போல் தெரிகிறதல்லவா?! :)

கருத்துகள்

  1. மிகவும் சுவாரஸ்யமான எழத்துக்கள். நிறைய இடங்களில் ரசித்து, புன்னகை பூக்க வைத்த வரிகள்.
    "அந்தப்புரம்"
    பகிர்வுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  2. நல்ல கட்டுரை, வாழ்த்துக்கள்.

    ஆனாலும் இதையும் கூறாமல் இருக்கமுடியவில்லை. தமிழன் பெரிய பருப்பு தான்... பொறுப்பில் இருப்பவர்கள் வைகையையும், கூவத்தையும் நாற விட்டு வேடிக்கை பார்க்கிறார்கள் அல்லவா! இன்னமும் குப்பைகளை வீதியில் கொட்டும் தமிழன் இருக்கிறான் அல்லவா!! தமிழன் பருப்பு தான்!!!

    பதிலளிநீக்கு
  3. @எட்வின்- நன்றி நண்பரே. உங்களளவு கோபம் எனக்கும் உள்ளது. அவர்களெல்லாம் வீணாய்ப்போன கழிவுப் பருப்புகள். விதியின் புண்ணியத்தில் (முட்டாப் பயகளின் புண்ணியத்தில் என்று சொன்னால் யாராவது சண்டைக்கு வருவார்கள்!) தகுதியில்லாத இடங்களை அடைந்து விட்டவர்கள்.

    பதிலளிநீக்கு
  4. ஏற்கனவே தமிழ் இன உணர்வுகொண்ட (இன உணவர்வுதானே ஒழிய வெறி அல்ல. சிந்துசமவெளி, ஹரப்பா & மொஹஞ்சதாரோ நாகரிகத்துக்கும் முந்தைய நாகரீகம் நமது என மிக உறுதியாக நம்பும் ஒரு உள்ளம் எனது ) எனக்கு, உங்களின் இந்த கட்டுரை மேலும் பல விடயங்களை விளக்கி மகிழ்ச்சி கொள்ளவைத்தது. நன்றி பாரதி.

    பதிலளிநீக்கு
  5. உண்மை...
    ஆனால் நம் நாட்டுக்குள்ளேயே சாதித்த பாரதி, அப்துல்கலாம், இளையராஜா, ஜெயகாந்தன் போன்றோரை தமிழினப் பெருமைக்கு எடுத்துக்காட்டாக காட்டக்கூடாதா? அவர்களும் வெளிநாட்டில் குடியுரிமை பெற்றிருந்தால் நாங்கள் இன்னும் கொண்டாடியிருப்போமோ என்னவோ...
    1500 வருசத்துக்கு முன்னால சீனாவுக்கு போய் இன்று சீனாவை உலகமே ஆச்சரியமா பார்க்குற தற்காப்பு கலையை கற்றுக்கொடுத்த போதிதர்மரையே நாங்கள் ஒரு படத்தை பார்த்துதானே தெரிந்துகொள்ளவேண்டியிருக்கு...

    பதிலளிநீக்கு
  6. வாசிப்புக்கும் கருத்துரைக்கும் நன்றி சனாதனன் அவர்களே.

    விடுபட்ட பெயர்களை நினைவு படுத்தியமைக்கும் நன்றி. இந்தியாவைச் சீனா வீழ்த்துதல் பற்றிப் பேசிய போது மாவோ சொன்னாராம் - "1500 ஆண்டுகளுக்கு முன்பே ஒரே ஒரு இந்தியன் வந்து மொத்தச் சீனாவையும் வென்று விட்டான்". பெருமைப்பட வேண்டிய விசயம்தான்.

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம் - ஜெயகாந்தன்

"நான் என்னை ஒரு மேதையும் புனித வேசியும் போல் உணர்கிறேன்": அலெஹாண்ட்ரோ ஜோடராவ்ஸ்கிக்குச் சில கேள்விகள்

சாம, தான, பேத, தண்டம்