உள்ளூர் அரசியல்: அல்லக்கைகளும் அண்ணாச்சிமார்களும்

கீழே கொடுக்கப் பட்டிருக்கிற எதுவும் கற்பனை அல்ல. முழுக்க முழுக்கப் பல மொள்ளமாரிகளையும் அவர்களுடைய வாழ்வில் நடந்த உண்மைச் சம்பவங்களையும் மனதில் வைத்து எழுதியது. ஒரு வேளை (அழுத்தமாகச் சொல்கிறேன் ‘ஒருவேளை’!) நான் கேவலப் படுத்த நினைத்த உண்மைக் கதாபாத்திரம் யாராவது இதைப் படித்து விட்டு, ‘இது என்னைக் கிண்டல் செய்வது போல இருக்கிறது’ அல்லது ‘என் பெயரைக் கெடுக்கும் விதமாக இருக்கிறது’ என்று ஆத்திரம் அடைந்தால் பக்கத்தில் இருக்கும் சுவரில் நங்கு நங்கென்று முட்டிக் கொள்ளும் படி பணிவோடு கேட்டுக் கொள்கிறேன், உங்கள் அன்பு உறவினன்! ஒருவேளை (அதற்கான வாய்ப்பு அணுவிலும் சிறிது என்பதை நன்கறிவேன்!), ‘நானும் அரசியலில் இருக்கிறேன், ஆனால் இப்படியெல்லாம் கேவலமாக இல்லை’ என்று சொல்பவராக இருந்தால், அனைத்து மதிப்பு மரியாதைகளோடும் உங்களுக்கொரு மனப் பூர்வமான வணக்கம்.

தமிழ்நாட்டில் நடக்கிற தாங்க முடியாத கொடுமைகளில் ஒன்று, ஒவ்வொரு முறையும் ஆட்சி மாறியதும் உடனடியாகத் துணிக்கடைக்கு ஓடி கறையை மாற்றிப் பல வேட்டிகளை அள்ளிக் கொண்டு வருகிற ஈனர்களின் கதை. அதிலும் கேவலமான கூட்டம், தேர்தல் முடிவுகள் வருகின்ற வரை பழைய ஆளுங்கட்சியின் அடிப்பொடியாய் ஓடியாடி வேலை செய்து விட்டு, முடிவுகள் வந்த மறு நிமிடமே கைக்கெட்டும் தொலைவில் இருக்கிற உள்ளூர்ப் புள்ளி ஒருத்தரைப் பிடித்து, அன்று முதல் அவருக்கு அல்லக்கையாக சுய பணி நியமனம் செய்து கொண்டு, அவரிடமே செலவுக்குப் பணம் வாங்கிக் கொண்டு போய், புதுக் கறை வேட்டி எடுக்கிற கூட்டம். இதையெல்லாம் கேட்டு வேடிக்கையாகவோ நம்ப முடியாமலோ இருந்தால் உங்களைப் பற்றிச் சொல்ல விரும்புவது ஒன்றேதான். நீங்கள் தமிழ் மண்ணின் நாகரிகம் மிகுந்த பகுதியில் பிறந்த யோகக்காரர். அல்லது, கொஞ்சம் உற்றுக் கவனித்துப் பாருங்கள். ஒருவேளை, உங்கள் வீட்டுக்குப் பின்னாலும் இப்படிப் பட்டவர்கள் இருக்கக் கூடும். நல்லதை மட்டுமே பார்க்கக் கூடிய உங்கள் நற்கண்களுக்கு அவர்கள் இதுவரை படாமல் தப்பியிருக்க வேண்டும்.

அவர்களுடைய அநியாயமும் ஓரளவு மன்னிக்கத் தக்கதே. ஏனென்றால், அது பாவம் அவர்களுக்கு வயிற்றுப் பிழைப்பு. நாம் கூடுதலாக வருமானத்துக்கு வாய்ப்பிருக்கிற நிறுவனத்துக்கு அவ்வப்போது வேலையை மாற்றிக் கொள்வது போல, அவர்களைப் பொருத்த மட்டில் அது ஒரு சரியான செயலே. அல்லது, சராசரியான செயலே. ஆகா, என்ன ஒரு அழகான மொழி தமிழ்?! தனியே செய்தால் தவறானது கூட எல்லோரும் அல்லது பெரும்பாலானோர் சேர்ந்து செய்தால் சரியாகி விடுகிறது ‘சராசரி’ என்ற சொல்லில்!

அந்தந்தக் கட்சிகளை நடத்துகிற தலைவர்கள் உட்பட, இன்று தமிழகத்தில் இருக்கிற எல்லோரையும் போலவே, அவ்விரு கட்சிகளுக்கும் இடையேயான கொள்கை ரீதியான வேறுபாடுகள் தெரியாதவர்கள் அவர்களும். கூடுதலாக, இவர்களுக்கு மேலும் சில அடிப்படை வேறுபாடுகளும் தெரியாது. எடுத்துக்காட்டாக, இரண்டில் ஏதாவதொரு கட்சியில் இருக்கிற ஓர் இரண்டாம் கட்டத் தலைவர் பெயரைச் சொன்னால், அவர் எந்தக் கட்சியில் இருக்கிறார் என்று கூடத் தெரியாது. பல நேரங்களில் அது தெரியாதவரின் குற்றமாகவும் இராது. ஏனென்றால், அந்தத் தலைவர் சில முறைகள் கொள்கைக் காரணங்களுக்காகக் கட்சி மாறியிருப்பார், பாவம். இதைப் படித்து என் மேல் கோபம் வருவது போல இருந்தால் தயவு செய்து மன்னித்து விடுங்கள். நல்ல வேளை இதையெல்லாம் ஆங்கிலத்தில் எழுதி என்னையும் சேர்த்துக் கேவலப் படுத்த வேண்டிய நிலையில்லாத அளவுக்குத் தொழில் நுட்பம் வளர்ந்து விட்டதே என்று கொஞ்சம் பெருமிதமாகத்தான் இருக்கிறது நம் மொழி மீது.

இரு கொள்ளைக்கூட்டங்களுமே மக்கள் நலம் பற்றிக் கவலைப் படாதவர்கள் அல்லர் என்றோ, ஆனால் நேற்றுக் கூட இரவெல்லாம் அந்தக் கவலையில்தான் தூங்கவில்லை என்பது போலப் பேசுபவர்கள் என்றோ, படிப்பாளிகள் இருக்க வேண்டிய இடத்தில் நல்ல நல்ல நடிப்பாளிகள் எல்லாம் வந்து கூடாரமடித்து விட்டார்கள் என்றோ தெரியாத பாவப்பட்ட மக்கள் அல்லது மாக்கள் அவர்கள்.

வாத்தியார் (தமிழ் நாட்டில் ஒரே ஒரு வாத்தியார்தானே இருந்தார்) இருக்கிற வரை இந்தப் பிரச்சனை இருக்க வில்லை. கட்டிப்போட்டது போலக் கிடந்தார்கள் சினிமா மயக்கத்தில். அதன் பின்பு ஒவ்வொரு தேர்தலுக்குப் பின்பும் இப்படித்தான் இருவரும் மாறி மாறி வந்து கொண்டிருக்கிறார்கள். அதற்கேற்றபடி, அல்லக்கைப் பணியளிக்கும் உள்ளூர் அண்ணாச்சியும் மாறுவார். ஒரு சில முறைகள், அண்ணாச்சியே கட்சி மாறிவிடுவதால், வேட்டிக்குத் துட்டுக் கொடுக்கும் ஆள் மட்டும் மாறாமல் இருப்பார். அந்த வகையில் குழப்பம் குறைவுதான் அல்லக்கை வேலை பார்ப்பவர்களுக்கு. ஒரு வகையில், வேட்டி வாங்கிக் கட்டுபவர், யாருக்கும் எந்தத் துரோகமும் செய்வதில்லை என்றும் சொல்லலாம். கொஞ்சம் விவரமாக இருந்திருந்தால் முறைப்படி அவருக்கு வந்திருக்க வேண்டிய காசு, இப்போது வேறு உருவத்தில் வருகிறது. அவ்வளவுதான்.

அஞ்சா நெஞ்சம் கொண்ட அண்ணாச்சி மாருக்கும் இப்படித் தங்கள் அல்லக்கைகள் கை மாறுவதில் சிரமமோ வருத்தமோ இல்லை. இடையில் ஏதாவதொரு மாநாடு இருக்கிறதென்று அழைத்தால் அன்று மட்டும் கறையை மாற்றிக் கட்டிக் கொண்டு வந்து விடுவார்கள். மேலும், தங்கள் கட்சி ஆட்சியை இழந்து விட்டு பின்பு, அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு, அவர்களே பழைய சேமிப்பில்தான் பிழைப்பு நடத்த வேண்டிய நிலை ஏற்பட்டு விட்டதால், அவர்களுக்கும் ஆட்சியோ தாமோ மாறும்வரை ஆள் தேவைப்படாது. உண்மையில், அப்போதைக்கு அவர்கள் தொல்லை இல்லாததே நல்லது என்றே கருதுவர். தானே சிக்கன நடவடிக்கையில் நிர்வாகத்தை ஓட்டிக கொண்டிருக்கும்போது எதற்கு இதெல்லாம் ஆடம்பர ஆட்டம் என்று விட்டு விடுவார். அப்போதுதான் அவர்களுக்கு காந்தித் தாத்தா சொல்லி விட்டுப் போன எளிமை மிகவும் பிடித்த கொள்கையாக இருக்கும்.

மீண்டும் ஆட்சியோ தானோ மாறும்போது கை மாறிப் போனவர்கள் திரும்ப வரும்போது எந்த விதமான கோபமும் வராது நம் அண்ணாச்சிகளுக்கு. மாறாத விசுவாசம் கொண்டு திரியவேண்டிய கட்டாயம் ஏதுமில்லாத பணிதான் அவர்களுடையது. மாறாக, திரும்ப வரும்போது இரு கரங்கள் நீட்டிப் பெருந்தன்மையோடு வரவேற்கும் அந்த உயர்ந்த பண்பாடுதான் இந்த அண்ணாச்சிமாரைக் கடவுளுக்கு இணையாகப் பார்க்க வைப்பது.

ஒவ்வொரு முறையும் ஆட்சி மாறிய முதல் சில மாதங்களுக்கு “மேலும் 100 பேர் மேற்படி புள்ளியின் முன்னிலையில் ஆளுங்கட்சியில் இணைந்தார்கள்” என்ற செய்தி புகைப் படத்தோடு தினமும் எல்லாச் செய்தித் தாட்களிலும் வந்த மயம் இருக்கும் (எல்லாச் செய்தித் தாட்களும் என்று சொல்வது ஒரு வேளை தவறாக இருக்கலாம். ஏனென்றால், ஆட்சி மாறும் போது கட்சி மாறுகிற ஆட்கள் மட்டுமில்லை, செய்தித் தாட்களும் இருக்கின்றன எங்கள் ஊரில்!). அந்தக் கும்பலில் நூற்றில் ஒன்றாக நின்று கையைத் தூக்கி, வேண்டிய விதமாக விரல்களைக் காட்டி, புகைப் படத்துக்கு போஸ் கொடுத்து, சரக்கும் பிரியாணியும் சாப்பிட்டுவிட்டுச் செல்கிறவர்களில் நம் வேட்டிப் பார்ட்டிகள் நிறையப் பேரைப் பார்க்க முடியும்.

அடுத்த க்ரூப் கொஞ்சம் கூடுதலாகக் கடுப்படிக்கிற க்ரூப். கிளை, ஒன்றியம், நகரம் போன்ற பொறுப்புகளில் இருக்கிற அரசியல் பாரம்பரியம் இருக்கிற அண்ணாச்சிமாரைப் போலவே இவர்களும் குறிப்பிட்ட ஒரு கட்சியின் மீது ஓரளவுக்கு விசுவாசம் கொண்டவர்கள் அல்லது அரசியலில் குதித்த (தாழ்ந்து போவதற்குக் குதிக்கத்தானே வேண்டும். அல்லது, இறங்கவோ விழவோ வேண்டும்!) நாள் முதலே ஒரே கட்சியைப் பிடித்துத் தொங்காய்த் தொங்கிக் கொண்டிருப்பவர்கள். அந்த வகையில் பாராட்டப்பட வேண்டியவர்களே. கொள்கைமான்கள்.

ஆனால், தம் கட்சி ஆட்சியில் இல்லாத ஐந்தாண்டுகள் எங்கே ஒளிந்து கிடந்தார்கள் என்றே தெரியாது. ஈசல் போலக் கிளம்பி வருவார்கள். சொந்தக் காசில் கறை வேட்டி, துண்டு, கொடியெல்லாம் வாங்கிக் கட்டுபவர்கள். ஏனென்றால், அவர்களில் பெரும்பாலானோருக்கு வேறொரு வழியில் கட்சி தன் கடமையைச் செய்யும். காணவே கண்கள் கூசும். பற்றி எறியும். ஐந்தாண்டுகளாக அழுக்குப் படிந்து கிடந்த கறை வேட்டிகளையெல்லாம் எடுத்து வெள்ளாவி, பசை போட்டு வெளுத்துக் கட்டிக் கொண்டு வெளியே வந்து விடுவார்கள். வசதிக்கேற்றபடி, தன் பழைய டாட்டா சுமோவிலோ புதிய ஸ்கார்ப்பியோவிலோ கொடியைக் கட்டிக் கொண்டு, ரோட்டில் போகிற வருகிற வண்டிகளுக்கெல்லாம் தொந்தரவு கொடுப்பதும், பாவப்பட்ட மற்ற அப்பாவி வண்டி ஓட்டுனர்களிடம் பெரிய வெண்ணெய் போல வம்பிழுப்பதும், அடிக்கப் போவதும், காவல் துறையினரிடமே திமிராகவும் தெனாவெட்டாகவும் பேசுவதும், தமிழ்நாடே தன் தாத்தன் சொத்து போல நினைத்துக் கொண்டு விடைத்துக் கொண்டு அலைவதும்... அப்பப்பா! தாங்க முடியாது.

இவர்களையெல்லாம் செருப்பைக் கழற்றி அடித்தால் என்ன என்று தோன்றும். தோன்றத் தானே முடியும் நமக்கெல்லாம். அதிக பட்சம் இப்படியொரு வலைப் பதிவில் வந்து வயிற்றெரிச்சலைக் கொட்டலாம். வேறென்ன முடியும். இன்னொன்று செய்ய முடியும். ஊருக்குப் போவதைக் கொஞ்சம் குறைத்துக் கொள்ள முடியும். இரத்த அழுத்தமாவது கட்டுப்பாட்டில் இருக்கும்.

நீ உண்மையிலேயே உப்புப் போட்டுத் திங்கிரவனாக இருந்தால், சென்ற ஆட்சியின் போதும் இதே விடைப்போடு அலைந்திருக்க வேண்டும். அதை விட்டு விட்டுத் துப்புக் கேட்டவன் போல, திருடனைப் போல ஒளிந்து கிடந்து விட்டு, இப்போதென்ன விடைப்பு வேண்டிக் கிடக்கிறது கைப்பிள்ளை போல. பிச்சைக்காரர்கள். அந்த ஒரு கொடியைக் கட்டி விட்டால், இந்த மண்ணில் என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்று எழுதி வாங்கி விட்டது போலக் கொழுப்பு. போகிற இடங்களில் எல்லாம் கூடுதல் மரியாதை கிடைப்பது போன்ற தன்னையே ஏமாற்றிக் கொள்ளும் கோமாளித்தனமான நினைப்பு.

இதற்கெல்லாம் முடிவுதான் என்னவென்று தெரியவில்லை. இன்னும் ஒரு வருடத்தில் மீண்டும் ஒருமுறை இந்தக் கொடுமைகளை எல்லாம் பார்க்க வேண்டும். குறைந்த பட்சம் ஆட்சி மாறிய ஆறு மாதங்களுக்காவது உறவினர்கள் யாரும் வீட்டில் எதுவும் நன்னிகழ்ச்சிகள் நடத்தி அழைக்காமல் இருந்தால் நல்லது. ஊர்ப் பக்கம் போகாமல், சொர்க்கமே என்றாலும் நம்மூரு போலாகுமா என்று பாட்டுக் கேட்டுக் கொண்டு பெங்களூரிலேயே ஓட்டி விடலாம்.

கருத்துகள்

  1. hi Barathi...

    Dhideernu azhagi was not working otherwise I would have wrote this in Thamizh. first of all, I really appreciate your try. my little feedback

    - while reading the flow is getting disturbed, i think that is bcos of two things. yaedharthama poaikittu irukappa...seiyyul nadaiya marinaa irukkara feeling. atleast for me. second only few places i could relate real images to your political critics. may be adiyaenin arasiyal arivu avvalavaahathaan irukko yennavo!..

    mattrabadi...muyarchi thodara yen manamaarndha vaazhthukkal

    anbudan
    Bathra

    பதிலளிநீக்கு
  2. No problem. I agree with you. Yes. I do switch between styles. I am aware of the problem. But, I thought mixing up multiple styles like that works with some people. May be, I have to watch for that.

    On the second point, I don't think it is do with your political knowledge. That is the kind of people I have seen. Such people may not be there in your area or you may not have seen such people. To be very frank, I have seen some people in my very close circle. You know what kind of politics people in Southern districts do, right? But, I should read this through and check out if there is any exaggeration too. :)

    My sincere thanks for your feedback. It should surely help when I write something next time.

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம் - ஜெயகாந்தன்

"நான் என்னை ஒரு மேதையும் புனித வேசியும் போல் உணர்கிறேன்": அலெஹாண்ட்ரோ ஜோடராவ்ஸ்கிக்குச் சில கேள்விகள்

சாம, தான, பேத, தண்டம்