கலாச்சார வியப்புகள்: ஒரு ஸ்பானிய நண்பனுடன் 3 வாரங்கள்!

கலாச்சார அதிர்ச்சி (CULTURE SHOCK) என்றொரு சொல்லாடல் இருக்கிறதே ஆங்கிலத்தில். அது போல இது கலாச்சார வியப்புகள் (CULTURE SURPRISES). கலாச்சார வியப்புகள் என்பது என் பயணக் கட்டுரைகள் மற்றும் வேறுபட்ட கலாச்சாரத்தவருடனான பழக்கக் கட்டுரைகள். புதிதாக நான் போய் இறங்கும் ஊர்களைப் பற்றியும் இதில் நிறைய வரும். எனவே, இதில் நான் பேசும் விஷயங்கள் எல்லாமே கலாச்சாரம் பற்றியதாகவே இருக்கும் என்று எதிர் பார்க்க வேண்டியதில்லை. எனக்குப் புதிதாகப் பட்ட எல்லாமே இதில் வரும். பொறுத்தருள்க!

என் மேற்கு நோக்கிய பயணம் பற்றிய கடந்த இடுகையின் தொடர்ச்சி இது. மேற்கு நோக்கிய என் பயணத்தைத் தொடங்குவதற்கு சற்று முன்பு மேற்கத்திய நண்பன் ஒருவனுடன் இந்தியாவிலேயே நிறைய நேரம் செலவிட ஓர் அரும் வாய்ப்புக் கிடைத்தது எனக்கு. என்னுடைய பயணத்துக்கு என்னைத் தயார் செய்து கொள்வதற்கு அது பேருதவியாக இருந்தது. நானும் இந்தியாவின் எல்லா நல்ல விஷயங்களையும் அவனுக்குக் காட்ட விரும்பினேன். ஆனால், அதற்காக அவனை எங்கும் அழைத்துச் செல்ல முடியவில்லை. அதற்குப் பதிலாக, என்னால் அவனுடன் எவ்வளவு நல்ல பிள்ளையாக இருக்க முடியுமோ அவ்வளவு நல்ல பிள்ளையாக இருந்து இந்தியாவுக்கென்று இருக்கும் பெயரைக் காப்பாற்ற என்னால் முடிந்ததைச் செய்தேன்.

எனக்குப் புதுப் புதுக் கலாச்சாரங்களைப் படிப்பதின் மீது இருக்கும் அதீத ஆர்வம் பற்றியும் அதனால் அவனிடம் அளவுக்கு மிஞ்சிக் கேள்விகள் (பல கேள்விகள் பைத்தியக்காரத்தனமானவை) கேட்பேன் என்பது பற்றியும் முதலிலேயே தெளிவாகச் சொல்லி விட்டேன். அவனும் அதைச் சரியாகப் புரிந்து கொண்டு என் எல்லாக் கேள்விகளுக்கும் சரியான - முறையான பதில்களை அளித்துக் கொண்டே இருந்தான். நானும் அவனை எதற்கும் தயங்காமல் எல்லா விதமான கேள்விகளும் கேட்க ஊக்கப்படுத்தினேன். கடைசியில், இருவருமே இவருடைய கலாச்சாரங்கள் பற்றியும் அளவிலாத உள்ளறிவு பெற்றோம் என்று நம்புகிறேன்.

உலகில் சீன மொழிக்கு அடுத்த படியாக அதிகமான மக்களால் தாய் மொழியாகப் பேசப்படும் மொழி என்ற சிறப்புப் பெற்றது ஸ்பானிய மொழி. அவர்களை ஐரோப்பா மற்றும் அமெரிக்கக் கண்டங்கள் முழுமைக்கும் காண முடியும். ஸ்பெயினில் பேசப்படும் ஸ்பானிய மொழிக்கும் லத்தின் அமெரிக்காவில் பேசப்படும் ஸ்பானிய மொழிக்கும் இருக்கும் வேறுபாடுகள் பற்றியும் எனக்கு நிறைய விளக்கினான். "எடு" என்பதற்கு ஸ்பெயினில் சொல்லப்படும் அதே சொல் லத்தின் அமெரிக்காவில் மிக மோசமான கெட்ட வார்த்தையாம் ("கை தட்டு" என்பதற்கு மலையாளிகள் சொல்லும் சொல் நம்மை விழுந்து விழுந்து சிரிக்க வைக்கும் கெட்ட வார்த்தை. அது மாதிரி!). பிரேசில் தவிர லத்தின் அமெரிக்காவில் இருக்கும் பெரும்பாலான நாடுகள் ஸ்பானிய நாடுகள் என்பது எனக்குப் பெரும் ஆச்சரியத் தகவல். இன்னும் சொல்லப்போனால், மெக்சிகோவிலும் அமெரிக்காவிலும் இருக்கும் ஸ்பானியர்களின் மக்கட்தொகை ஸ்பெயினில் இருக்கும் ஸ்பானியர்களின் எண்ணிக்கையை விட அதிகமாம்.

இந்தியாவுக்கு வருவதற்கு முன் அவன் லத்தின் அமெரிக்காவில் நிறைய காலம் இருந்து - சீனாவுக்கும் ஒரு முறை சென்று இருக்கிறானாம். அதுவே  அவனை என்னிடம் மேலும் சுவாரசியமான ஆளாக்கியது. அதனால் ஐரோப்பா, அமெரிக்கா மற்றும் ஆசியா ஆகிய மூன்று பகுதிகளையும் அவனால் பல விஷயங்களில் ஒப்பிட்டுப் பேச முடிந்தது. இந்தியாவும் மெக்சிகோவும் பல விஷயங்களில் ஒரே மாதிரியான நாடுகள் என்று இரண்டாவது முறையாக எனக்குச் சொன்னவன் இவன்தான். இந்த இடத்தில் நினைவு கூற வேண்டிய ஒரு சங்கதி - அமெரிக்காவில் மெக்சிகன்களுக்கு அடுத்தபடியாக அதிக அளவில் சட்டவிரோதமாகக் குடியேறி இருக்கும் கூட்டம் நம் இந்தியக் கூட்டம். இதிலேயே மிக எளிதாகச் சொல்லப்பட்டு விட்டது நம் ஒற்றுமை. சட்டவிரோதக் குடியேற்றங்கள் மட்டுமில்லை; நான் கேள்விப்பட்டவரை இன்னும் நிறைய ஒற்றுமைகள் இருக்கின்றன. சாலையோரக் கடைகள் கூட இந்தியாவில் போலே இருக்குமாம் அங்கும்.

எல்லாவற்றுக்கும் முதலில், மேற்குலகில் எல்லாமே கன கச்சிதமாக - முழு நிறைவோடு (அல்லது, துல்லியமாகச் சொல்ல வேண்டுமென்றால், கூடுதலான விஷயங்கள் கூடுதல் நிறைவோடு) இருக்கும் என்று எண்ணியதுண்டு. அப்படியே இது போலத்தான் லத்தின் அமெரிக்க மக்கள் ஐரோப்பாவைப் பற்றி நினைத்தார்கள் என்றும் சொன்னான். அவர்களுடையதுதான் மேலான நாகரிகம் எனக் கருதி நாமெல்லாம் அவர்களை ஈயடிச்சான் காப்பி அடிக்க முயல்வதாலும் அவர்களைப் போலவே நடந்து கொள்வதற்குப் பயிற்சியளிக்கப் படுவதாலும், அவனுக்கு நம்மைப் பற்றி நிறையப் புலம்ப வேண்டியிருக்கும் - நம்மை மிகவும் தாழ்வாக நினைப்பான் என்றெண்ணினேன். வியப்பூட்டும் விதமாக, நம்மைப் பார்த்துப் பெருமைப் பட நிறையக் காரணங்கள் இருந்தன அவனிடம். அது மட்டுமில்லை,  அவனால் ஏன் நம்மை அப்படி மட்டமாகப் பார்க்க முடியாது என்பது பற்றியும் அப்படி நம்மை மட்டமாகப் பார்ப்போர் யார் என்பது பற்றியும் சொன்னான். ஒருவேளை, அவனுடைய இடத்தில் வேறொருவர் இருந்திருந்தால் இந்த அளவு முதிர்ச்சி காட்டியிருக்க மாட்டார்களோ என்னவோ. அடுத்த நாட்டுக் கலாச்சாரத்துக்கு ஏற்றபடித் தன்னை மாற்றிக் கொள்ள முடிந்த அவனுடைய திறமும் அதை மதிக்கத் தெரிந்த அவனுடைய மனப்பக்குவமும்தான் அவனை எனக்கு மிகவும் சிறப்பான ஆளாகக் காட்டின.

செயற்கையான சிரிப்போடு 'ஹாய்', 'ஹலோ', 'ஹவ் ஆர் யூ?' என்றெல்லாம் கேட்கக் கற்றுத் தரும் பயிற்சிகள் மூலம் நாம் மேற்கத்திய மோகத்துக்கு ஆளாகிக் கொண்டிருந்தோம் என்றெண்ணினேன். அவன் சொன்னான், "எனக்கு இந்தியாவை மிகவும் பிடிக்கிறது. ஏனென்றால் இங்குள்ள மக்கள் மிகவும் நட்புறவோடு பழகுகிறார்கள். ஒவ்வொரு முறை அவர்களை அணுகும்போதும் புன்னகைக்கிறார்கள்."! இப்போது என் நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டு விட்டேன். ஒவ்வொரு முறையும் ஒருத்தர் உன்னிடம் வரும்போது சிரிப்பதில் அர்த்தமிருக்கிறது. அது உன்னை நட்புறவான ஆளாகக் காட்டுவது மட்டுமின்றி உன் கலாச்சாரத்தையே ஒரு படி மேலே தூக்கிக் காட்டுகிறது. நல்ல வேலையாக நம் அரசு அலவலகம் எங்கும் அவனை அழைத்துச் செல்லவில்லை. அது மட்டுமில்லை, போக்குவரத்துப் பிரச்சனைகளுக்காக நடக்கும் நம் தெருச்சண்டைகளையும் அவன் இங்கு இருந்த மூன்று வாரங்களில் பார்க்கவில்லை. தப்பித்தோம்!

ஆனால், வண்டி ஓட்டும்போது ஏன் நாம் ஒலி பெருக்கியை அவ்வளவு அடிக்கிறோம் என்று தெரிந்து கொள்ள மிகவும் ஆசைப்பட்டான். மிகவும் அக்கறையோடு கேட்டான், "எல்லோருமே அதை அதிகமாக அடித்தால் யார்தான் அதைப் பெரிதாக எடுத்துக் கொள்வார்கள்?" என்று! எனக்கே பல வருடங்களாக இந்தக் கேள்விக்கு பதில் கிடைக்காததால் என்னால் சரியான பதிலைக் கொடுக்க முடியவில்லை. அளவுக்கதிகமான மக்கட்தொகை காரணமாக மித மிஞ்சிய சப்தத்துக்குப் பழக்கப்பட்டு விட்டோம்; அதனால் அது ஒழுங்காக எங்களுக்குக் கேட்க வேண்டுமென்றால் அப்படித்தான் அடித்தாக வேண்டுமென்று சொல்லி வைத்தேன். ஏற்றுக் கொண்டது போலக் காட்டிக் கொண்டான். உண்மையிலேயே ஏற்றுக் கொண்டானா தெரியவில்லை. நம் சாலைகளில் இருக்கும் குழிகளைக் கண்டால் அவனுக்கு உயிர் பயம் வந்து விடும். அதனாலேயே இருட்டும் முன்பே வண்டி ஓட்டும் வேலைகளை முடித்துக் கொள்வான்.

வலது புறம் ஓட்டுவது என்பது அமெரிக்கப் பழக்கம்; மொத்த ஐரோப்பாவும் இடது புறம் ஓட்டும் பழக்கம் என்றுதான் எண்ணிக் கொண்டிருந்தேன். இப்போதுதான் புரிந்தது இடது புறம் ஓட்டுவது இங்கிலாந்தில் மட்டும் இருக்கும் பழக்கம்; மொத்த அமெரிக்காவும் மிச்சமுள்ள ஐரோப்பாவும் வலது புறம் ஓட்டுகிற பழக்கமுள்ளவையே என்று. எந்தப் பக்கம் ஓட்டுனர் உட்காருவார்; எப்படி மற்ற வாகனங்களை அவர்கள் கடந்து செல்வார்கள்; இரு முறைகளிலும் இருக்கும் வசதிகள் - சிரமங்கள் அனைத்தும் பற்றிப் பேசினோம்.

இது நம்மைக் காண வரும் மேற்கர்களுக்கும் மேற்கே செல்லும் நம்மவர்களுக்கும் இருக்கும் ஒரு வழக்கமான வியப்பு. கோயம்புத்தூரில் சந்தித்த ஆங்கிலேயர் ஒருவர் சொல்லியும் இதை முன்பு கேட்டிருக்கிறேன். அவர் சொன்னார், "பொது இடத்தில் சிறுநீர் கழிக்கிறீர்கள் ஆனால் பொது இடத்தில முத்தம் கொடுப்பதை அநாகரிகமாகப் பார்க்கிறீர்கள். எங்கள் ஊரிலோ அது அப்படியே தலை கீழ்.". இந்தப் புதிய நண்பனுக்கும் அதே வியப்புதான். அவன் சொன்னான், "எங்கள் ஊரில் பொது இடத்தில் ஒன்னுக்கு அடித்தால் சிறையில் கூடத் தள்ளப்பட வாய்ப்பு இருக்கிறது". அப்படின்னா, அங்க போகும்போது கவனமா இருக்கணும் போல. :) 

ஓர் உயிரைக் கொல்லாதபோது முட்டை எப்படி அசைவமாகும் என்று புரிந்து கொள்ள முடியவில்லை அவனால். "முட்டை என்பது முட்டை. அதெப்படி உயிராகும்?" என்பது அவன் கேள்வி. எளிதில் தப்பிப்பதற்காக "முட்டை என்பது இப்போதெல்லாம் இங்கே சைவத்துக்கும் அசைவத்துக்கும் நடுவில்" என்றேன். அது எப்படி அசைவமாகும் என்பதை விளக்க முயற்சிக்கவில்லை. முட்டையை விட பாலிலும் தேனிலும் விலங்கு வதை அதிகமோ என்று நானே நினைத்துக் கொண்டு இருக்கிறேன். 2005-இல் பாலும் தயிரும் கூடப் பருகாமல் இருக்க முயற்சித்தேன் சில மாதங்கள். ஆனால், தோல்விகரமாகப் ('வெற்றிகரமாக' என்பதற்கு எதிர்ச்சொல்!) பின் வாங்கி விட்டேன் பின்பு.

நம் தந்தூரி சிக்கன் அவனுக்கு மிகவும் பிடித்தது. அவன் கிளம்பும் முன் சில தந்தூரி சிக்கன் மசாலா பொட்டலங்கள் வாங்கிக் கொடுக்க வேண்டுமென நினைத்தேன். அதுவும் தோல்விதான். இங்கிருந்தபோது மற்ற மாமிச உணவுகள் கிடைக்காமல் சிரமப் பட்டதாகச் சொன்னான். எந்த விகிதாச்சாரத்தில் மாமிசம் சாப்பிட வேண்டும் என்பதை எனக்குச் சொல்லி கொடுத்தான். ஒரு தட்டுச் சாப்பாட்டில் ஒரு சில துண்டுகளே நம்ம ஆட்கள் சாப்பிடுகிறார்கள். ஆனால், இரண்டும் சம அளவு தின்ன வேண்டுமாம். இல்லையேல், புரதச் சத்தெல்லாம் (PROTEIN) கிடைக்காதாம். வெறும் மாவுச் சத்துதான் (CARBOHYDRATE). நாம் சுவைக்காகத் தானே சாப்பிடுகிறோம்? நம்முடைய பேரங்காடிகளில் மாமிசம் தவிர  எல்லாமே இருப்பது அவனுக்கொரு வியப்பு. நம் கசாப்புக் கடைகளில் கடைப்பிடிக்கப் படும் சுத்தம் அவனுக்கோர் அதிர்ச்சி. அவன் அதைப் பெரிய பிரச்சனையாகச் சொல்லாவிட்டாலும் அது அவனுக்கு எவ்வளவு சிரமமாக இருந்திருக்கும் என்பதைப் புரிந்து கொள்ள முடிந்தது என்னால். அதையெல்லாம் பார்த்த பின்னும் அவன் நம் மாமிசத்தைச் சாப்பிட்டதற்கு வணக்கம் போடத்தான் வேண்டும்.

நாம் கையால் சோறு சாப்பிடுவது கண்டு பெரிதும் வியந்தான். அவனால் செய்ய முடிகிறதா என்று முயன்று பார்க்கச் சொன்னேன். நம்முடைய ஸ்டைலுக்குக் கொஞ்சம் கூடப் பக்கத்தில் வர முடியவில்லை அவனால். அதைக் கற்றுக் கொள்ள அவன் இன்னும் சில மாதங்கள் இருந்திருக்க வேண்டும். நல்ல வேளை, இலையில் சோறு போட்டு - கரண்டியில் சாப்பிடுவதை நம் பண்பாட்டுக்கே எதிரான பழக்கமாகப் பார்க்கும் சுத்தத் தென்னிந்திய உணவகம் எதற்கும் அழைத்துச் செல்லவில்லை அவனை. அவனுக்கு அதைப் பார்க்கவே சகிக்க வில்லை என்றபோதிலும் சிரமம் இல்லாமல் கையால் சாப்பிடுவது எப்படி என்பதை அவனுக்குக் காட்டி விட்டேன். அது நம் கடமை அல்லவா?!

தினமும் கடைசியில் நான் தயிர்ச் சாதம் சாப்பிட்டதால் அதுதான் நம் டெசெர்ட்டா என்றான். தலையை ஆட்டிவிட்டு நாம் சாப்பாட்டுக்குப் பின் சாப்பிடும் சோம்பு, பீடா அல்லது வெற்றிலை, பாயசம், அல்லது மற்ற இனிப்பு வகைகள் எல்லாம் டெசெர்ட் என்று அழைக்கப் படலாமா என்று யோசித்தேன். மற்றொருமுறை, நாம் ஏன் டெசெர்ட் எதுவும் சாப்பிடுவதில்லை தினமும் என்று கேட்டான். என்னுடைய முறை வந்தபோது, அவர்கள் ஏன் தினமும் டெசெர்ட் சாப்பிடுகிறார்கள் என்றும் ஒரு கேள்வி கேட்டு விட்டேன். இருவரிடமுமே இருந்தது ஒரே பதில்தான் - "அதுதான் எங்கள் கலாச்சாரம்". பீட்சாக் கிறுக்கு அவர்கள் பண்பாட்டில் இல்லை என்று கேள்விப் பட்டபோது மிக்க மகிழ்ச்சி அடைந்தேன். அவர்களுடைய உணவு வகைகளே நிறைய இருக்கின்றனவாம். சுருட்டு வாங்குவது போல துப்பாக்கி வாங்கும் பழக்கமும் அவர்களுடைய பண்பாட்டில் இல்லை என்றறிந்த போது அதை விட மேலும் மகிழ்ந்தேன்.

இதுதான் எங்கள் உரையாடல்களின் உச்ச கட்டம். உலகின் எந்த மூலையிலும் குழப்பம் நிறைந்த பேசுபொருளான ஆண்-பெண் உறவுகளின் எல்லைகள் (எங்கள் இவருடைய கலாச்சாரத்திலும்) பற்றிப் பேசிய நாளில், ஒரே வாக்கியத்தில் அதை எளிமைப் படுத்திவிட்டான். "எங்க ஊரில் ஓர் இருபத்தி ஐந்து வயதுப் பெண் மூன்று அல்லது நான்கு ஆண் நண்பர்களோடு பழகியிருத்தல் மிகச் சாதாரணம்; இதுவரை தனக்கு ஆண் நண்பனே இல்லையென்று ஓர் இளம்பெண் சொன்னால் அவளுக்கு ஏதோ கோளாறு என்று அவளிடமிருந்து பதறி ஓடுவார்கள்; இங்கோ அப்படி மூன்று நான்கு ஆண் நண்பர்களோடு இருந்திருக்கிறேன் என்று ஓர் இளம்பெண் சொன்னால் அவளுக்கு ஏதோ பிரச்சனை என்று அவளிடமிருந்து தப்பி ஓடுவீர்கள்."! ஆகா... என்னவொரு கவனிப்பு - கலாசார வேறுபாட்டை விளக்க எவ்வளவு எளிதான ஒரு வழி?! :)

இங்கே இரண்டு தலைமுறைகளுக்கு முன் எதிர் பாலரிடம் கை குலுக்கிக் கொள்வது கூடத் தவறு என்று சொன்னேன் அவனிடம். குறும்பாகச் சிரித்துக் கொண்டே சொன்னான், "ஐயோ. என்னுடன் சேர்ந்த உங்க ஊர்ப்பிள்ளைகளிடம் முதல் நாளே வேறு ஒரு வேலை செய்து விட்டேன்."! என்னப்பா அது? எல்லோருக்கும் முத்தம் கொடுத்து விட்டு, "கவலைப் படாதீங்க. நான் ஸ்பெயின்காரன். அங்கெல்லாம் இது சாதாரணம்!" என்றானாம் அவர்களுடைய வெட்கத்தைப் பார்த்து விட்டு. அவர்களுடைய செட்டில் அவன் மிகப் பிரபலம் என்று ஒருவர் மூலம் கேள்விப்பட்டிருந்தேன். இப்போதுதான் புரிந்தது எப்படி அவ்வளவு பிரபலமானான் என்று. :)

நம் கட்டுமானப் பணியாளர்கள் தங்கியிருக்கும் குடிசைகளைக் கண்டு ஆச்சரியப் பட்டான். அவர்கள் உடுத்தும் கைலி அவனுக்கு ஆச்சரியமாக இருந்தது. நம் பெருநகரங்களில் மிகக் குறைவான ஆட்களே அவ்வுடை உடுத்துகிறார்கள். அது எவ்வளவு பிரபலமான உடை என்பதைக் காண அவன் நம் நாட்டுப் புறத்தைப் பார்க்க வேண்டும் என்று சொன்னேன். அவர்களுடைய ஊரில் இருக்கும் எந்தக் கருவியும் இல்லாமல் எப்படி நம்ம ஊர்க்காரர்கள் சரியான நேரத்தில் கட்டுமானப் பணிகளை முடிக்கிறார்கள் என்று புரியவில்லை அவனுக்கு. "எல்லாமே இங்கே கைவேலைதான்; ஆனாலும் வேலை முடிகிறது - அதுவும் பயன்படும் வகையில்!?"! 

ஐரோப்பியர்கள் எப்போதுமே மென்மையான நிறங்களில் - இறுக்கமான உடைகளே உடுத்துவார்களாம். நம்மில் சிலரைப் போல அடிக்கும் நிறங்களோ அமெரிக்கர்கள் போல தொள தொள உடைகளோ அணிவதில்லையாம். நல்ல வேளை, நம்முடைய திரைப்படங்கள் எதுவும் பார்க்கவில்லை அவன். ஆரஞ்சு நிற பேண்ட்டும் பள பளக்கும் பச்சை நிறச் சட்டைகளும் போடும் நம் நாயகர்கள் சிலரைப் பார்த்திருந்தால் நம்மைப் பார்த்துப் பெருமைப்பட இன்னொரு காரணம் கிடைத்திருக்கும் அவனுக்கு.

தோலைக் கறுக்க வைப்பதற்காக சூரியக் குளியல் எடுத்துக் கொள்ளும் அவனுக்கு குறிப்பிட்ட வாரங்களில் சிவப்பாக மாறுவதற்கு விற்கப்படும் பூச்சுப் பொருட்களுக்கான விளம்பரங்களைப் பார்த்து மிகுந்த ஆச்சரியம். நாம் ஏன் சிவப்பாக இருக்க விரும்புகிறோம் என்று தெரிந்து கொள்ள ஆசைப்பட்டான். அரசியல் ரீதியாகச் சரியான பதில் என்னிடம் இல்லை. அவனிடம் சொல்லவில்லை என்றாலும் என்னிடமிருந்த எளிமையான - ஓரளவு அறிவுள்ள பதில், "கறுப்பாய் இருப்போருக்குச் சிவப்பாக ஆசை; சிவப்பாயிருப்போருக்குக் கறுப்பாக ஆசை". இன்னமும் அது ஒரு முழுமையான பதில் இல்லை. இன்னும் எளிதாகச் சொல்ல வேண்டுமானால், எதிரெதிர்த் துருவங்கள் ஈர்க்கும் எனலாம். எவ்வளவு சீக்கிரம் முடிகிறதோ அவ்வளவு சீக்கிரம் இரண்டும் ஒரு நடுப்புள்ளியில் சந்தித்து நிறம் சார்ந்த எல்லாப் பிரச்சனைகளும் காலத்துக்கும் ஒரு முடிவுக்கு வந்தால் நல்லதுதான்.

நம் நாட்டில் இருக்கும் சாதி அமைப்பு பற்றி அவன் அறிந்திருந்தது எனக்கு ஆச்சரியமாக இருந்தது. "அது பணியிடங்களிலோ பாட சாலைகளிலோ இப்போது இல்லையென்றும் திருமண நேரத்தில் மட்டும்தான் முக்கியத்துவம் பெறுகிறது என்றும் கேள்விப் பட்டேன்" என்றான்! 'நாம் யார்' - 'எங்கிருந்து வருகிறோம்' என்பதைப் பொறுத்து அவன் சொல்வது பாதி சரி - பாதித் தவறு என நினைக்கிறேன். மேலும், செய்யும் வேலையை வைத்து அப்படியொரு பாகுபாடு அவர்களுடைய ஊரில் இல்லையென்றும் அவனிடமிருந்து கேள்விப்பட்டேன். அதெப்படி அங்கு மட்டும் அது சாத்தியம் - இங்கு சாத்தியமில்லை என்பது இன்னும் எனக்குப் புரியவில்லை.

கையால் சாப்பிடுவது போல், அவர்கள் நாட்டிலும் சில வெளிநாட்டவர்கள் சிறு சிறு வீடுகளில் நிறையப்பேர் தங்குவதும் தரையில் படுத்துத் தூங்குவதும் அவனுக்கு அதை நினைத்துப் பார்ப்பது கூட எவ்வளவு கடினம் என்பது பற்றியும் பேசினான். நல்ல வேளை, நடு இரவில் நம் சாலையோர நடைமேடைகளை அவன் பார்க்க வில்லை. உபயம் - நம் சாலைகளில் இருந்த குழிகள் மீதான அவன் பயம்.

அவர்களுடைய பண்பாட்டில் சும்மா ஒருத்தரை மகிழ்ச்சிப் படுத்துவதற்காகப் புகழ்வது மிக சாதாரணமாம் (நம் கழகக் கண்மணிகள் அங்குதான் பயிற்சி எடுத்தனவோ என்னவோ!). நாம் ஒருவரைச் சந்திக்கும் போது, 'ஹாய்', 'ஹலோ', 'எப்டி கீரிங்க?' என்பது போல், எந்தப் பெண்ணைப் பார்த்தாலும் (அவள் அழகாய் இல்லாவிட்டாலும் கூட) 'ஏய், அழகுப் பெண்ணே', 'ஹாய், தேவதையே', 'ஹலோ, வசீகரியே' என்றெல்லாம் அழைப்பது வழக்கமாம். ஒருவேளை, நம் பெண்களெல்லாம் தேவைக்கு மேல் அதைப் பெரிதாக எடுத்துக் கொண்டிருப்பார்களோ என்று கவலை வேறு பட்டான். இருந்தாலும், அவர்களையெல்லாம் மகிழ்ச்சிப் படுத்தியதில் அவனுக்கொரு மகிழ்ச்சிதான்!

வெவ்வேறு ஐரோப்பிய மொழிகளில் ஊர்ப்பெயர்களும் நாட்டுப் பெயர்களும் வெவ்வேறு விதமாக அழைக்கப் படும் என்று அறிந்தபோது ஆச்சரியமாக இருந்தது எனக்கு. எடுத்துக்காட்டாக, லண்டனும் ஸ்பெயினும் அவ்வாறு அழைக்கப் படுவது ஆங்கிலத்தில் மட்டும்தானாம். அவற்றை முறையே லந்த்ரேஸ் என்றும் இஸ்பானியா என்றும் தான் அழைப்பார்களாம் ஸ்பானிய மொழியில். ஸ்பானிய மொழியையே ஸ்பானிய மொழியில் இஸ்பனால் என்றுதான் அழைப்பார்களாம். எப்படியிருக்கிறது கதை!

மூட நம்பிக்கைகள் நம்முடைய பிறப்புரிமை மட்டுமல்ல; மேற்கிலும் அவற்றுக்கு நல்லதோர் இடம் இருக்கிறது என்று கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனாலும், மாடிப்படிகளுக்குக் கீழே உட்காருவது ஸ்பெயினில் ஏழு வருடக் கெட்ட நேரத்தைக் கொண்டு வரும் என்றும் சீப்பைத் தவற விடுவது பல வருட நல்ல நேரத்தைக் கொண்டு வரும் என்றும் கேள்விப்பட்டபோது வியப்பாகத்தான் இருந்தது.

ஐரோப்பிய வரைபடத்தை நன்றாகப் புரிந்து கொண்டேன். ஐரோப்பாவும் ஆப்பிரிக்காவும் எவ்வளவு அருகில் இருக்கின்றன என்பதைப் புரிந்து கொண்டேன். மொராக்கோவும் ஸ்பெயினும் நீந்திச் செல்லும் தொலைவில் இருக்கின்றன. அவர்களுடைய நாட்டிலும் எல்லோருக்கும் எல்லோரையும் தெரியும் கிராமங்களும் சிறு நகரங்களும் இருக்கின்றன; எங்கள் ஊரில் போலவே அவர்களுக்கும் உழவும் விவசாயமும்தான் முக்கியத் தொழில்கள் என்பதைப் புரிந்து கொண்டேன். ஆண்டு முழுக்க சில சிலைகள் செய்வதில் கழித்து, ஒரு குறிப்பிட்ட நாளில் அவற்றை எல்லாம் தீயிட்டுக் கொளுத்தி, அதை ஒரு திருவிழாவாகக் கொண்டாடும் பழக்கம் ஒன்று அவர்களிடமும் இருப்பது கண்டு வியந்தேன். நம்ம ஊர் விநாயகர் சதுர்த்தி போலத் தெரியுதா?

கடைசியில், அவனே ஒருமுறை சொன்னது போல, எவ்வளவு வேற்றுமை நமக்குள் - ஆனாலும் எவ்வளவு ஒற்றுமையும் நமக்குள் என்பதைப் புரிந்து கொண்டோம் இருவருமே!!!

* இன்னமும் நிறைய மறந்து விட்டதாக உணர்கிறேன். நினைவு வர வர இந்த இடுகையில் வந்து ஒவ்வொன்றாகச் சேர்த்து விடுகிறேன்.

கருத்துகள்

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம் - ஜெயகாந்தன்

"நான் என்னை ஒரு மேதையும் புனித வேசியும் போல் உணர்கிறேன்": அலெஹாண்ட்ரோ ஜோடராவ்ஸ்கிக்குச் சில கேள்விகள்

சாம, தான, பேத, தண்டம்