உளறல்.காம்

எத்தனையோ அரசியல் அறிஞர்கள், ஆன்மீக ஆய்வாளர்கள், இலக்கியச் சொற்பொழிவாளர்கள், தத்துவ ஞானிகளின் பேச்சுகளும் உரைகளும் கேட்கிறோம். ஒவ்வொருவருடைய பேச்சும் ஒவ்வொரு வகையில் சிறப்புடையதாக இருக்கிறது. சிலர் பேச்சில் அனல் பறக்கிறது; சிலர் பேச்சில் இடி இடிக்கிறது; சிலர் பேச்சில் கருத்துக்கள் கொத்துக் கொத்தாய் விழுகின்றன; சிலர் பேச்சில் நகைச்சுவையும் நையாண்டியும் அருவியாய்க் கொட்டுகின்றன; சிலர் பேச்சில் அடுக்கு மொழி வசனங்கள் அழகழகாய் அலங்காரம் செய்கின்றன; சிலர் பேச்சு கவிதைகளும் பாடல்களுமாக இனிக்கின்றன. சிலர் பேச்சில் எங்கெங்கிருந்தோ மேற்கோள்கள் வந்து இறங்குகின்றன. இப்படி அத்தனை விதமான பேச்சுகளிலும் ஒவ்வோர் அழகு.

இவை எல்லாவற்றையும் விட குடிகாரர்களின் உளறலிலும் மனநிலைக் கோளாறு உள்ளவர்களின் பேச்சிலும் எனக்கொரு தனிவித சுவையை உணர முடிகிறது. சிலர் இயற்கையாகவே எது பற்றிப் பேசினாலும் தெள்ளத் தெளிவாகப் பேசும் ஆற்றல் படைத்தவர்கள். அவர்களைப் பேச விட்டுக் கேட்பதில் ஓர் அலாதி இன்பம் இருக்கிறது. அவர்கள்தாம் சரியான வாய்ப்புகள் கிடைக்கும் போது, மிகச் சிறந்த பேச்சாளர்கள் ஆவது. இயல்பாகவே பேசப் பிடிக்காதவர்கள் கூடச் சிலர், ஒரு கிளாஸ் உள்ளே போய்விட்டால் பட்டையைக் கிளப்புவார்கள். இவனுக்குள் இவ்வளவு புத்திசாலித்தனம் இவ்வளவு நாட்களாக எங்கே ஒளிந்திருந்தது என்று வியக்கிற அளவுக்குப் பேசுவார்கள். அத்தனை கருத்துக்கள், தத்துவங்கள், நக்கல், நகைச்சுவை என்று எல்லாமே தெளிவாய்த் தெறிக்கும். அவர்களின் பேச்சுகளுக்கு நான் எப்போதுமே அடிமை.

அதுபோலவே, மனநிலை பாதிக்கப் பட்டவர்களும் எவ்வளவோ தத்துவங்கள் வைத்திருக்கிறார்கள். வாழ்க்கை பற்றிப் பல விஷயங்களில் நமக்கு இல்லாத தெளிவு எவ்வளவோ அவர்களிடம் இருப்பது போலப் படும். கண்ணில் காணும் எது பற்றியும் ஒரு கருத்துச் சொல்வார்கள். நம்மிடமும் அந்தக் கருத்துக்கள் மனசினுள் கிடக்கும். ஆனால், வெளியில் வராது. நாம் பேசக் கூச்சப் படும் அவற்றை அவர்கள் பேசும்போது கேட்கக் கேட்க அவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கும். மனித இனத்தின் மூன்றில் ஒரு பங்கினர் ஏதோ ஒரு வகையில் மனநிலை பாதிக்கப் பட்டவர்கள் என்றொரு புள்ளி விபரம் சொல்கிறது. முழுநேர ஊழியர் மற்றும் பகுதி நேர ஊழியர் போல முழுநேரக் கோளாறு மற்றும் பகுதி நேரக் கோளாறு என்று இருப்பதாகச் சொல்கிறார்கள். இந்த மூன்றில் ஒரு பங்கு என்று சொல்லப் படுவோரில் பெரும்பாலானோர் அப்படிப் பகுதி நேரக் கோளாறு கொண்டோர்.

இன்னொன்று - தெளிவாகப் பேசுவோர் சரியாகப் பேசாததும் பேசவே விரும்பாதவர் அதிகமாகப் பேசுவதும் உளறல் எனப் படுகிறது. ஆக, உளறல் என்பதற்கு சரியான வரையறையே பேச்சின் சாரத்தைப் பொறுத்தது அல்ல; பேசுவோரின் பின்புலத்தைப் பொறுத்தது - பேசப்படும் இடத்தைப் பொறுத்தது - கேட்போரின் பின்புலத்தையும் பொறுத்தது. இதில் தன்னால் புரிந்து கொள்ளப் பட முடியாத பேச்சுக்களும் கூட உளறல் என்றே அழைக்கப் படுகின்றன நம்மால். நம் கருத்துக்கு எதிர்க் கருத்துக்கள் உளறல் எனப் படுகின்றன. முக்கியமான விஷயங்களில் நமக்கு எதிரான கருத்துக் கொண்டிருப்போர், எது பேசினாலும் - நாம் சொல்வதையே வேறு மாதிரிச் சொன்னாலும் கூட, அவற்றையும் உளறல் என்றே அழைக்கிறோம்; நிரூபிக்க முனைகிறோம்.

உளறத் தூண்டுவது எது? உளறலை ரசிக்க வைப்பது எது? தூண்டுவது - சொல்ல விரும்பியதெல்லாம் சொல்ல முடியாத மாதிரி இருக்கும் சமூகக் கட்டுப்பாடு. அதற்கான வாய்ப்புக் கிடைக்கும்போது முழுமையாகப் பயன் படுத்திக் கொள்ள முனைகிறது நம் மனம். ரசிக்க வைப்பது - நம் ஆழ் மனதில் நினைத்திருந்து பேசத் தயங்கிய விஷயங்களை வேறொருவர் பேசும்போது அவற்றை ரசிக்கிறோம். அதையே வேறொரு விதமாகச் சொல்ல வேண்டுமென்றால், உளறுவதுதான் இயற்கை; பேசுவது செயற்கை; பிற்காலத்தில் இயற்கையான செயற்கை. மனிதன் தோன்றிய நாள் முதல் நடப்பது உளறல்; இடைக்காலத்தில் பழகியது பேச்சு. இப்போதைய நம் உளறல் ஆதி உளறலில் இருந்து சற்று வேறுபட்டது. இடைக்காலத்தில் பழகிய உளறல் எனலாம். ஆனால், பேச்சுக்குக் கொஞ்சம் முந்தைய கண்டுபிடிப்பு. உளறலுடனான அந்தப் பூர்வ உறவுதான் நம்மைச் சில நேரங்களில் உளறத் தூண்டுகிறதோ - அதை ரசிக்க வைக்கிறதோ என்றும் கூடத் தோன்றுகிறது.

எல்லாப் பேச்சுகளும் வெளிப்படையானவை அல்ல. பலர் பல நேரங்களில் உள்நோக்கங்களோடு ஏதேதோ பேசுகிறார்கள். அவை புரிந்தால் மாட்டிக் கொள்கிறார்கள். புரியாவிட்டால் உளறல் என்கிறோம். அப்படிப் பேசுவதன் உள்நோக்கம் அவர்களுக்கே புரியாமல் பேசுவார்கள். கொஞ்சம் கூடுதல் அறிவாளிகள். அவற்றை ஆழ்நோக்கங்கள் எனலாம். அவர்களுக்கே தெரியாமல், மின்னல் வேகத்தில் எது தனக்குச் சாதகமாக இருக்கும் என்று அவர்களுடைய ஆழ்மனம் கணக்குப் போட்டு விடும். அவற்றையும் நமக்குப் புரிந்து கொள்ள முடியாத போது, உளறல் என்றே ஒதுக்கி விடுவோம். அவர்களை விட அறிவாளிகள் அதையும் எளிதில் பிடித்து விடுவார்கள்.

ஆக, உளறல் என்பது உளறல் மட்டுமல்ல. உளறல்லாத பல பேச்சுக்களும் கூடத் தவறான பெயரில் மறைந்து கொண்டு நம்மை ஏமாற்றுகின்றன. சிலருக்கு அது ஒரு முகமூடியாகவும் இருக்கிறது. எனவே, எல்லா உளறல்களையும் கண்டு கொள்ளாமல் விட முடியாது. உளறல்களையும் உற்று நோக்குதல் முக்கியம். அவற்றுக்குள்ளும் அர்த்தங்கள் இருக்கின்றன. அவற்றுக்கென்றும் காரணங்கள் இருக்கின்றன.

குழந்தையும் உளறுவதாகச் சொல்கிறோம்; முதியோரும் உளறுவதாகச் சொல்கிறோம்; பைத்தியமும் உளறுவதாகச் சொல்கிறோம்; ஞானியும் உளறுவதாகச் சொல்கிறோம்; குடிகாரனும் உளறுவதாகச் சொல்கிறோம்; சராசரியும் உளறுவதாகச் சொல்கிறோம். அப்படியானால், உளறல் யாருக்கும் ஒதுக்கீடு செய்யப் பட்ட தனிச் சொத்து அல்ல. நம் எல்லோருக்கும் பொது. சிலருக்கு எப்போதும்... சிலருக்கு எப்போதாவது... எனக்கு இப்போது... :)

"சரியான உளறலப்பா..." என்கிறீர்களா??? :)

கருத்துகள்

  1. உளறத் தூண்டுவது எது? உளறலை ரசிக்க வைப்பது எது?

    சமூகத்தை நன்றாக உற்றுநோக்குகிறீர்கள்.

    பதிலளிநீக்கு
  2. உற்று நோக்குதல் பேசுவதைவிடச் சிறந்தது!
    உளறுதல் பேசாமல் இருப்பதைவிடச் சிறந்தது!

    என்ன நண்பரே புரியுதா? புரியலயா?

    புரிந்தால் இது கொள்கை!
    புரியாவிட்டால் இது தத்துவம்!

    புரிந்தும் புரியாமலும் இருந்தால் இது உளறல்!!

    பதிலளிநீக்கு
  3. நன்றாகப் புரிகிறது முனைவர் அவர்களே. கண்டிப்பாக இது கொள்கையே. :)

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம் - ஜெயகாந்தன்

நாத்திகம் - இன்னொரு மதம்!

வைகோ என்றோர் அரசியல் ஏமாளி