உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள்: கட்சிவாரிக் கணக்குகள் (1/3)

இது பற்றி ஏற்கனவே நிறையப் பேசவும் எழுதவும் பட்டு விட்டது. பத்தோடு பதினொன்றாக அத்தோடு சேர்த்து என்னுடைய பார்வைகளையும் பதிவு செய்து விட்டால் கொஞ்சம் நிம்மதியாக இருக்கலாம் என்றெண்ணி இந்த வாரம் அதையும் செய்து விட முடிவு. இதோ... ("அடப்பாவி, உனக்கின்னும் உள்ளாட்சித் தேர்தல் மயக்கமே தெளியலையா?!" என்கிறீர்களா?)

இந்த உள்ளாட்சித் தேர்தலின் மாபெரும் சிறப்பு - தமிழக அரசியல் வரலாற்றில் முன்னெப்போதும் நடந்திராத நல்லது ஒன்று இம்முறை நடந்தது. அடுத்தவன் முதுகில் குதிரைச் சவாரி செய்வதே தொட்டில் பழக்கமாய்க் கொண்டிருந்த நம் கட்சிகள் எல்லாம் தனித்து நிற்கும் தைரியத்தைப் பெற்றன அல்லது அந்நிலைமைக்குக் கழுத்தைப் பிடித்துத் தள்ளப் பட்டன. எப்படியாயினும் அது நமக்கும் அவர்களுக்கும் நல்லதே. குதிரைச் சவாரி என்பது சிறிய கட்சிகள் பெரிய கட்சிகள் மீது செய்வது என்பது மட்டுமில்லை. பெரிய கட்சிகள் சிறிய கட்சிகள் மீதும் அதையே செய்தன. அவர்கள் நீண்ட தூரம் செய்யும் அதே சவாரியை இவர்கள் கொஞ்ச தூரம் செய்தார்கள். அவ்வளவுதான். தூரம்தான் வெவ்வேறே ஒழிய செய்த செயல் ஒன்றுதான்.

ஒவ்வொரு முறையும் மாறி மாறிக் கூட்டணி அமைப்பதற்கும் சிறிய கட்சிகளை மட்டுமே குறை சொல்வதும் சரியாகப் பட வில்லை. அவர்கள் வழி இல்லாமல் உன்னிடம் வந்து தொங்கினால் தைரியசாலி - மானஸ்தன் நீ ஏன் அவர்களுக்கு உன் தோளைக் கொடுத்தாய்? சமூக சேவை செய்ய வேண்டும் என்றா? அவர்களிடம் இருக்கும் கொஞ்ச நஞ்ச வாக்குகளும் சிந்தாமல் சிதறாமல் தனக்கே விழ வேண்டும் என்பதற்காகவும் அவையே தப்பியும் எதிரிக்குக் கிடைத்து விடாமல் செய்ய வேண்டும் என்பதற்காகவும் அதனால் மயிரிழையிலோ வேறு ஏதோ ஓர் இழையிலோ எதிரி பிடுங்கி விடக் கூடாது (வெற்றியைத்தான்!) என்பதற்காகவும் தானே. எனவே, "என்னுடன் கூட்டணி வைத்ததால்தான் உனக்கு அத்தனை சீட்டுகள் கிடைத்தது!" என்றெல்லாம் பேசுவது பேத்தல். அவர்களுடன் கூட்டணி வைத்ததால்தான் சொற்ப வாக்குகளில் தோற்றிருக்க வேண்டிய பல தொகுதிகளில் நீ வென்றாய் என்றும் அதைத் திருப்பிச் சொல்லலாம். இது வெறும் வாதத்துக்காகப் பேசுவது அல்ல. தர்க்க ரீதியாக யோசிக்கத் தெரிந்த யாரும் இதை மறுக்க மாட்டார்கள். எனவே, இந்தத் தேர்தல் சிறிய கட்சிகள் அவ்வளவு செல்லாக் காசுகள் அல்ல என்பதையும் நமக்குக் காட்டியுள்ளது என்று சொல்லலாம். அவர்களுக்கும் ஓர் ஆற்ற வேண்டிய அரசியல்க் கடமை இருப்பதை நினைவு படுத்தி இருக்கிறது என்று சொல்லலாம்.

இன்னொன்று - ஒரு கூட்டணி வைக்கும் போது சிறிய கட்சிகள் கொண்டு வருவது அவர்களுடைய வாக்கு வங்கி மட்டுமல்ல. ஒன்றும் ஒன்றும் சேர்ந்தால் மூன்று என்பது போல் ஒரு பலமான கூட்டணியைக் காட்டும் போது அதெற்கென்று ஓர் அலை உருவாகிறது. நடுநிலையாளர்கள் பலர் கூட்டணி பலத்தை வைத்து இந்த முறை யார் பக்கம் ஆதரவு அதிகம் உள்ளது - யாருடைய அரசியல் நிலைப்பாடு சரியாக உள்ளது என்றும் கணக்கிடுவார்கள். எனவே, பெரும் பெரும் அரசியல்ச் சாணக்கியர்கள் எல்லாம் ஏன் அப்படிச் சின்னக் கட்சிகளுக்கு அவ்வளவு மரியாதை கொடுத்தார்கள் என்று தேவையில்லாமல் மண்டையைக் குழப்பிக் கொள்ளாதீர்கள். அதனால்தான் அவர்கள் சாணக்கியர்கள்; நாம் சாமானியர்கள்.

இதில் நாம் ஏற்றுக் கொள்ள முடியாதது எதுவேன்றால், அது ஒருவரின் தகுதிக்கு மீறிக் கொடுக்கப் படும் மரியாதை. எடுத்துக்காட்டாக காங்கிரஸ் அல்லது பாமக போன்ற கட்சிகளுக்கு இதுவரை கொடுக்கப் பட்ட மரியாதை அவர்களுடைய தகுதிக்கு மீறியது என்று சொல்கிறோம். உண்மையா? ஓரளவு உண்மை. ஓரளவு உண்மையல்ல என்றும் சொல்லலாம். காங்கிரஸ் எந்தச் சந்தேகமும் இல்லாமல் தமிழ் நாட்டின் மூன்றாவது பெரிய கட்சியாக இருந்த காலம் என்று ஒன்று கண்டிப்பாக இருந்தது. அது போலவே பாமகவும் அமைப்பு ரீதியாக பலம் கூடிக் கொண்டே போன காலமொன்றும் இருந்தது. இப்போது அவையிரண்டும் ஃபியூஸ் பிடுங்கப் பட்டு விட்டன என்பது இப்போதைய கதை. அப்போது அவர்களுக்குக் கொடுக்கப் பட்ட மரியாதை கொஞ்சம் கூடுதல் என்றாலும் சுத்தமாக அர்த்தமற்றவை அல்ல. அதுவும் சென்ற முறை காங்கிரஸ் கட்சி கேட்டதெல்லாம் கொடுக்க வேண்டிய நிலைக்கு ஆளானதற்கு வேறொரு காரணம் இருந்தது. திமுக தன் கை ஓங்கியிருந்த காலத்தில் கையை வைத்துக் கொண்டு சும்மாயிருந்திருந்தால் பிரச்சனை இல்லை. அதை வைத்துக் கொண்டு கூட்டாளி கண்ணில் விரலை விட்டு ஆட்டினால், அவனுடைய நேரம் வரும்போது கூட்டாளி சும்மா இருப்பானா? அதையே வேறொரு விதத்தில் அவன் திருப்பிச் செய்து காட்டினான். அவ்வளவுதான். சரி, நம்ம மேட்டருக்கு வருவோம்.

உள்ளாட்சித் தேர்தல் பற்றிய என் முந்தைய இடுகையில் இந்தத் தேர்தல் முடிவுகள் எல்லாக் கட்சிகளுக்குமே நல்ல முடிவாக எடுத்துக் கொள்ளும் படி உள்ளன என்று எழுதியிருந்தேன். அது எப்படி என்று பார்ப்பதே இந்த இடுகையின் முக்கிய நோக்கம். எப்படி? நான் கட்சி என்று மதிக்கும் எல்லாக் கட்சிகளுக்குமே அது எப்படி என்பதை, ஒவ்வொரு கட்சிக்கும் ஒரு சில பக்கங்கள் ஒதுக்கிப் பார்வையிடுவோம். சரியா?

அதிமுக: சொல்லவே வேண்டியதில்லை. தொப்பிக்காரர் விட்டுச் சென்ற இரட்டை இலை மோகம் இன்னும் எம்மக்களிடம் அப்படியே இருக்கிறது என்பதை சமீபத்திய தேர்தல்கள் காட்டி விட்டன. இத்தனைக்கும் இரட்டை இலை என்பது அவ்வளவு எளிதாக மனதில் பதியத் தக்க எளிதான சின்னம் இல்லை. கை போன்று தாமரை போன்று நம் அன்றாட வாழ்க்கையில் பயன் படுத்தப் படும் சொல் அல்ல அது. இரட்டை இலை என்றோர் அரசியல்க் கட்சியின் சின்னம் இல்லை என்றால் அப்படி ஒரு சொல்லே தமிழர்கள் வாயில் பயன் படுத்தப் பட்டிருக்காது. ஒத்துக் கொள்கிறீர்களா? அது இந்த அளவு மக்களிடம் போய்ச் சேர்ந்ததற்கு அந்தத் தனி மனிதன் மீதிருந்த அளவிலாத மோகம்தான் காரணம். எத்தனைதான் தவறுகள் செய்தாலும் மக்கள் விரோதமாக நடந்து கொண்டாலும் ஒரு தேர்தலில் கோபத்தைக் காட்டி விட்டு மீண்டும் அதே சின்னத்திடம் திரும்பி வரும் ஏமாளித் தனத்தை எம்மிடம் விதைத்தது அந்த ஆள் ஏற்படுத்திய பாதிப்புதான். அவரைப் பிடிக்காத ஆட்கள் நிறையப் பேருக்கு இந்த அம்மாவைப் பிடிக்கிறது என்பதையும் இங்கு மறுப்பதற்கில்லை. ஆதிக்க மனோபாவம் முதற்கொண்டு அவர் செய்யும் அடாவடிகள் மீதிருக்கும் ஆர்வம் வரை (அதுவும் திருடர்களிடம் சமரசம் பேசாமல் அடாவடி செய்வது எவ்வளவு பெரிய நற்பண்பு?!) அதற்குப் பல்வேறு காரணங்கள். அது போலவே, இந்த அம்மாவைக் கெட்ட வார்த்தை சொல்லித் திட்டி விட்டு ஓட்டு மட்டும் இரட்டை இலைக்குப் போட்டு விட்டு வரும் ஆட்களும் நிறைய இருக்கிறார்கள். அதற்குக் காரணம் அம்மாவின் தலைவர் மீதிருக்கும் தீராத வெறி. அவர் மீது அம்மா மீது இருப்பதை விட அதிக வெறி கொண்டிருக்கிறார்கள்; அம்மா அவர் மீது வைத்திருந்த வெறியை விட அதிக வெறி கொண்டிருக்கிறார்கள் நம்மவர்கள்.

"அந்தக் காலத்தில் இருந்தே அப்படியே போட்டுப் பழக்கமாகி விட்டது. இப்போது போய்த் திடீரெண்டு மாற்று என்றால் முடியுமா?" என்று தத்துவம் சொல்கிறார்கள். பெண்டாட்டியையா மாற்றச் சொன்னோம்? அதையே சரியில்லாவிட்டால் மாற்றுகிறார்கள் இப்போதெல்லாம். ஆனால், எவ்வளவு கொடுமை செய்தாலும் ஓட்டை மட்டும் மாற்றிப் போட மாட்டேன் என்கிறார்கள் பலர். அது போன்ற ஆட்கள் இரண்டு பக்கமுமே இருக்கிறார்கள். குறித்துக் கொள்ளுங்கள் - குறிப்பிட்டு யாரையும் குறை சொல்ல வில்லை. குறைந்தது இன்னும் ஐம்பது ஆண்டுகளுக்கு - எப்போதிருந்தாலும், இந்தச் சின்னத்தை வைத்துக் கொண்டு யார் வந்தாலும் எது வந்தாலும், அவர்களுக்கு அல்லது அதுகளுக்கு நம் அரசியலில் முதலிடம் அல்லது இரண்டாவது இடம் உறுதி. இது சத்தியம்.

இந்த இடத்தில் இன்னொன்றை எழுதி வைத்துக் கொள்ளுங்கள். எப்போதும் பத்திரிகைகளும் இப்போது பதிவுலகமும் இந்தக் கட்சி அழிந்து விட்டது அந்தக் கட்சி அழிந்து விட்டது என்று ஏதோவொன்றைப் பரபரப்பாக எழுதிக் கொண்டே இருக்கிறார்கள். அது சுத்தப் பினாத்தல். எந்தக் கட்சியும் அழிவதென்பது அவ்வளவு எளிதில் நடக்கக் கூடியது அல்ல என்பதையே இந்தத் தேர்தல் காட்டியுள்ளது. கடந்த நாற்பது ஆண்டுகளில் முதல் இரண்டு இடங்கள் திமுகவுக்கும் அதிமுகவுக்குமே கொடுக்கப் பட்டுள்ளன. சட்டமன்றத்தில் எண்ணிக்கை என்பது மட்டுமே ஒரு கட்சியின் பலமாகி விடாது. மக்கள் மன்றத்தில் என்ன எண்ணிக்கை என்பதைப் பார்க்க வேண்டும். அதாவது வாக்கு விகிதம் எப்படி என்பதைப் புரிந்து கொண்டு பேச வேண்டும். அதிமுக அழிந்து விட்டதாகச் சொன்ன 1996-இலும் சரி, திமுக அழிந்து வருவதாகச் சொல்லும் 2011-இலும் சரி... அவர்களுடைய வாக்கு விகிதம் மூன்றாவது இடத்துக்குச் செல்லவில்லை. பெரிதாக அவர்கள் எங்கும் டெபாசிட் இழக்க வில்லை. அப்படி ஒன்று நடந்தால்தான் ஒரு கட்சியின் அழிவு பற்றிப் பேச வேண்டும்.

சென்ற சட்டமன்றத் தேர்தலிலும் இந்த உள்ளாட்சித் தேர்தலிலும் நிரூபிக்கப் பட்டிருக்கும் இன்னோர் உண்மை - திமுகவின் குறிப்பிட்ட வாக்கு வங்கி அப்படியே அதிமுகவுக்கும் அதிமுகவின் குறிப்பிட்ட வாக்கு வங்கி அப்படியே திமுகவுக்கும் மாறி வருகிறது. வாத்தியார் காலத்தில் நகர்ப்புற - படித்தவர்களின் வாக்குகள் அப்படியே திமுகவுக்கும் கிராமப்புற - பாமர மக்களின் வாக்குகள் அப்படியே அதிமுகவுக்கும் விழும். அது அப்படியே தலை கீழாக மாறி வருகிறது இப்போது. வாத்தியாராலேயே உடைக்க முடியாத சென்னைக் கோட்டையை அம்மா உடைத்து விட்டார். அதை அப்படிச் சொல்வதை விட வாத்தியாராலேயே உடைக்க முடியாத சென்னைக் கோட்டையை அதிமுகவுக்காக திமுகவின் முதல்க் குடும்பம் உடைத்துக் கொடுத்து இருக்கிறது என்று சொல்லலாம். இது எப்படி சாத்தியமானது? நாம் முன்பே சொன்னது போல, குடும்பத்தின் குத்தாட்டங்களைப் பார்த்துச் சகிக்கும் மனப்பான்மை மக்களுக்கு இல்லை. அதுவும் படித்த - நகர்ப்புற மக்களுக்கு! அவர்களால் ஏதோ வகையில் பயனடைந்த ஒரு குறிப்பிட்ட விழுக்காட்டு மக்கள் இதில் விதிவிலக்கு.

இன்னொன்று - தினமும் செய்தி பார்க்கும்/படிக்கும் அளவுக்கு அறிவிருக்கிற யாரும் அவர்கள் ஊழலே செய்யாத உத்தமர்கள் என்று பேசுவதில்லை. ஏற்கனவே ஊர்க்காசைக் கொள்ளையடிப்பதில் பேர் போனவர்கள் அவர்களின் வண்டவாளத்தை மீண்டுமொருமுறை அறிந்து கொள்ளும் வாய்ப்புக் கொடுத்தால் யார்தான் விடுவார்? பெண்களுக்குத் தொலைக் காட்சித் தொடர்கள் போல எங்களுக்கு இவை படிக்கப் படிக்க அவ்வளவு இன்பமாக இருந்தது. தெரியுமா?

இவை திமுகவின் இழப்புக்கான காரணங்கள். அதெப்படி வாத்தியார் காலத்துக் கிராமப் புற - பாமர மக்களின் வாக்கு வங்கியில் கை வைக்க முடிந்தது அவர்களால்? அது முன்னெப்போதும் இல்லாத மாதிரி சென்ற முறை அள்ளி அள்ளிக் கொடுக்கப் பட்ட இலவசங்கள் மூலம் சாதித்தது. வாத்தியார் பாணியிலேயே அவருடைய கட்சிக்கு ஆப்பு. அவர் இருந்திருந்தால் இதற்கெல்லாம் வாய்ப்பே கொடுத்திருக்க மாட்டார்.

இதில், திமுகவின் இழப்பு என்று நாம் பார்த்ததுதான் அதிமுகவின் ஆதாயம். திமுகவின் வளர்ச்சி என்று நாம் பார்த்தவை அதிமுக திரும்பவும் உடைத்தெடுக்க வேண்டிய - மீட்டுக் கொண்டு வர வேண்டிய பகுதிகள். அதற்கு நிறைய ஏமாற்று வேலைகள் செய்ய வேண்டும். உழைக்காமல் கிடைக்கும் எதற்காகவும் தன் நன்றிக் கடனை மறக்காமல் செய்யும் ஒரு பெருங்கூட்டம் இந்தத் தமிழ்த் திருநாட்டில் சங்க காலம் முதற் கொண்டே இருப்பதை நம் இலக்கியங்கள் மீண்டும் மீண்டும் பறை சாற்றிக் கொண்டுதானே இருக்கின்றன.

அதிமுகவுக்குக் கிடைத்த இன்னோர் ஆதாயம் - முந்தைய பாராளுமன்ற மற்றும் சட்டமன்றத் தேர்தல்களில் காசு கொடுக்கும் வேலையைத் திமுகக் காரர்கள் மட்டுமே செய்தார்கள். ஏனென்றால், அவர்களிடம் மட்டும்தான் மொங்காம் போட்ட காசு நிறைய இருந்தது. அதை இந்த முறை அதிமுகக் காரர்கள் நன்றாகச் செய்து பயிற்சி எடுத்துக் கொண்டார்கள். அந்தக் கலாசாரத்தைத் தமிழ் நாட்டுக்கு அறிமுகப் படுத்தியது அதிமுகதான். அதனால் இழந்ததும் அவர்கள்தான். இப்போது மீண்டும் அடுத்த இன்னிங்க்ஸ் தொடங்கி இருக்கிறார்கள். ஓரளவு ஆரம்ப வெற்றியும் கிட்டியிருக்கிறது. போகப் போக எப்படி இருக்கிறது என்று பார்க்கலாம். எல்லோரிடமும் காசு வாங்கிக் கொண்டு குடும்பத்தில் இருக்கிற ஒவ்வொருவரும் ஒவ்வொரு கட்சிக்கு வாக்களிக்கும் நூதன விசுவாச முறையும் இந்தத் தேர்தலில்தான் கண்டு பிடிக்கப் பட்டுள்ளது. வாழ்க சனநாயகம்! (வைகோ கேட்டால் கோபப் படுவார் - இதற்குப் பெயர் பணநாயகம் என்று!)

வரலாறு காணாத வெற்றி என்பதெல்லாம் உண்மைதான். ஆனால், என்னதான் இருந்தாலும் இது ஓர் ஆளுங்கட்சியின் உள்ளாட்சித் தேர்தல் வெற்றி என்பதையும் மறந்து விடுவதற்கில்லை. இதே வெற்றி கண்டிப்பாகப் பாராளுமன்றத் தேர்தலில் கிடைக்கும் என்று சொல்ல முடியாது. கிடைக்காது என்று வேண்டுமானால் உறுதியாகச் சொல்ல முடியும். வழிய வரும் நல்ல காலத்தை சோதிடம் பார்த்துக் கெடுத்துக் கொள்வதில்தான் கை தேர்ந்த ஆளாச்சே அம்மா. இதே போல பாராளுமன்றத் தேர்தலில் அல்லது அடுத்து வரும் சட்டமன்றத் தேர்தலில் எல்லோரையும் தூக்கி வீச முடியாது. இப்போது வென்று விட்ட ஒரே காரணத்தால் சட்டமன்றத் தேர்தலில் உடன் இருந்தவர்களின் பங்கு ஒன்றுமில்லை என்று சொன்னால் அது அரசியல்க் கத்துக் குட்டித் தனம். முன்பே சொன்னது போல, அவர்கள் கொண்டு வந்தது வெறும் வாக்கு வங்கிகள் அல்ல. ஓர் ஆட்சிக்கெதிரான சினத்தை ஒருமுகப் படுத்தியது முதற்கொண்டு, உழைப்பும் அதற்குத் தேவையான உற்சாகமும் கொண்டு வந்தார்கள், ஓர் அலையை உருவாக்கினார்கள், ஒன்றும் ஒன்றும் பதினொன்று ஆக்கினார்கள் என்று எத்தனையோ சொல்லலாம். அதையெல்லாம் அறியாமல் சோ என்னை ஏமாற்றி விட்டார் என்று கதறுவது அறிவீனம். சோவுக்கு இப்படி ஒன்று நேர்ந்ததற்காக நாம் மகிழலாமே ஒழிய அவர் போட்ட கணக்கு கிறுக்கு என்று நாமும் சேர்ந்து கொண்டு பிதற்ற முடியாது.

திமுக: திமுக அழிந்து விட்டது என்று சொன்னவர்களுக்கு - இனி தமிழக அரசியலில் திமுக மூன்றாவது கட்சிதான் என்று சொன்னவர்களுக்கு - பதில் சொல்லியிருக்கிறார்கள் இந்தத் தேர்தலில். யார்? திமுகவா? இல்லை, மக்கள்! இப்படியொரு திமுக இருப்பதற்கு அழிந்து விடலாம் என்று நினைக்கிற ஆள்தான் நானும். அதைத்தானே 96-இல் அதிமுகவுக்கு நினைத்தோம். ஆனால், அதற்காக உண்மையை மறைக்கவோ மறுக்கவோ முடியாது. குறைந்த பட்சம் ஐயா இருக்கும் வரைக்குமாவது அவர்கள்தான் இரண்டாவது பெரிய கட்சி. அதில் எந்த மாற்றமுமில்லை.

கொடுமை என்னவென்றால், இந்தத் தேர்தலில் நிற்கவே அலறினார்கள் கட்சிக் காரர்கள். ஏதாவதொரு வழக்கைப் போட்டு உள்ளே தள்ளி விடுவார்களாம். திமுக ஆட்சியில் உள்ளாட்சித் தேர்தலில் எதிரணிக்கு வேலை பார்க்கும் ஆட்களைத் தேடித் தேடி உள்ளே போட்டார்கள். அது அடி மட்டத்தில் உள்ள ஆட்களை மட்டும்தான். அதுவும் குற்றப் பின்னணி உள்ளவர்களை மட்டும்தான். அதிமுக ஆட்சியிலும் அது நடக்கிறது. ஆனால், அது முழுக்க முழுக்க இரண்டாம் கட்டத் தலைவர்களை வளைத்து நடக்கிறது. அவர்கள் எவ்வளவு யோக்கியர்கள் என்பது நமக்குத்தான் தெரியுமே. அடி மட்டத் திமுக தொண்டர்களுக்கு இன்னும் பிரச்சனை ஆரம்பிக்க வில்லை என்றே சொல்ல வேண்டும். ஆனாலும் அவர்களுக்கு ஒரு பயம். பிள்ளை குட்டிகளை நினைத்து ஒரு கவலை. அவர்களைக் கட்சி மிரட்டிய விதமும் அருமை. "ஆட்சியில் இருந்தபோது மட்டும் காசு அடித்தாய். இப்போது என்ன கொள்ளை போகிறது? நின்றுதான் ஆக வேண்டும். இல்லையேல், நீ எதில் சிக்கினாலும் கட்சி எப்போதும் உதவாது; முடிந்தால் இன்னும் நன்றாகச் சிக்க வைக்கும்!" என்று போட்ட போட்டில் கொஞ்சப் பேர் வழிக்கு வந்து விட்டார்கள். ஆனாலும் பல நகராட்சிகளில் பல வார்டுகளில் ஆட்கள் நிற்கவே இல்லை. ஒன்றியக் குழுக்களுக்கும் அப்படியே அவ்வளவு பயம். அம்மாம் பெரிய கட்சிக்கு இது பெரும் சறுக்கல்தான். அழிந்து விட்டது என்பதை நாம் ஏற்றுக் கொள்ளா விட்டாலும் அழிவின் பாதைக்கு வந்து விட்டது என்றுதான் படுகிறது.

இதில் இருந்து மீட்டெடுக்கும் சக்தி யாருக்கு உள்ளது என்றுதான் தெரியவில்லை. ஸ்டாலின் ஸ்டாலின் என்று சொல்கிறார்கள் சிலர். எனக்கு அதில் நம்பிக்கை இல்லை. ஸ்டாலினுக்கு வரும் கூட்டம் அவருடைய தந்தை சேர்த்த கூட்டம். அது தந்தை காலத்துக்குப் பின் நிற்குமா என்பது சந்தேகமே. பசை இருந்தால் ஒட்டும் ஆட்கள் இருக்கிறார்கள். அப்படியே ஆட்சியில் தொடர்ந்திருந்தால் இருந்திருப்பார்கள். இப்போதுதான் அது இல்லையே. "நல்ல நிர்வாகி - மேலாளர்!" என்றெல்லாம் சொல்கிற சொற்களுக்கு எவ்வளவு மரியாதை கிடைக்கும் என்று தெரியவில்லை. அழகிரியை அஞ்சாநெஞ்சர் என்றது போல இதுவும் திட்டமிட்டு அர்த்தமில்லாமல் உருவாக்கப் பட்ட பிம்பம் என்பது என் பார்வை. பார்வை சரியா பழுதடைந்ததா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். தந்தையிடம் உள்ள ஒரே ஒரு நற்குணம் - அதுவே இவருக்கும் வந்திருப்பது - எதுவென்றால், அது இவருடைய உழைப்பு. அதுதான் காப்பாற்ற வேண்டும் இவரையும் இவர் தலைமையிலேயே இருந்தால் இவருடைய கட்சியையும்! மற்றபடி, இழுக்கிற - கட்டிப் போடுகிற ஏதோவொன்று இருக்க வேண்டும். அது இருக்கிறதா அவரிடம்? வென்றிருந்தால் "ஆம்" என்றிருப்போம். இப்போது, தோற்றிருப்பதால் "இல்லை" என்போம். உண்மை என்னவென்றும் கூடிய விரைவில் பார்ப்போம்.

"கட்சியைக் காட்டிக் கொடுக்கிறார்கள்... காட்டிக் கொடுக்கிறார்கள்..." என்று கதறிக் கொண்டே இருக்கிறார் தலைவர். கட்சியைக் காட்டிக் கொடுத்தல் என்றால் என்ன அர்த்தம்? கட்சி ஏதோ திருட்டுத் தனம் செய்திருக்கிறது என்றுதானே அர்த்தம். அத்தனையையும் செய்த பின்னும் தேர்தலில் வேலை செய்யவே கட்சிக் காரர்கள் பயந்த போதும் அவர்களுக்கென்று வாக்களிக்க ஒரு கூட்டம் இருக்கிறது. அதை உடைப்பதற்கு அதிமுகவோ மற்ற கட்சிகளோ இன்னும் நிறைய வேலைகள் செய்ய வேண்டும்.

இழப்பதற்கு ஒன்றுமே இல்லை என்று ஆன பின்பு, அவர்களோடு இருப்பதால் நன்மையை விடத் தீமைதான் அதிகம் என்று தெரிந்த பின்பு, காங்கிரஸ் கட்சியைக் கழற்றி விட்டது நல்ல முடிவு. அவர்களுக்கும் அவர்கள் உயரம் என்ன என்பது தெரிய வேண்டும் அல்லவா? அத்தோடு பச்சோந்தி பாமகவையும் கழற்றி விட்டது அதை விட நல்ல முடிவு. ஆனால், அந்தப் பக்கம் வைகோ மாதிரி இந்தப் பக்கம் ஓர் ஏமாளிப் பையன் இருந்தார். திருமா! என்ன சொன்னாலும் கேட்டுக் கொண்டு கட்சிக் காரர்களை விட அதிகமாகத் தலைவரைப் புகழ்ந்து கொண்டு திரிந்தார். அவரை ஏன் அப்படி நட்டாற்றில் விட்டார்கள் என்று தெரியவில்லை. காங்கிரஸ் மேலிடம் கோபித்துக் கொள்ளும் என்ற பயமோ என்னவோ. அல்லது, இந்த மாதிரி அளவுக்கு மிஞ்சி நல்லவனாகத் திரிந்தால் யாராக இருந்தாலும் இந்த முடிவுதான் என்று இப்போதே ஒரு பாடம் புகட்டி விடுவோம் என்பதாலா என்றும் தெரியவில்லை.

அஞ்சா நெஞ்சர் அஞ்சா நெஞ்சர் என்று ஒருத்தர் மதுரைப் பக்கம் அநியாயத்துக்கு ஆடிக் கொண்டும் ஆட்டிக் கொண்டும் இருந்தார். இந்தத் தேர்தலின் போது அவருடைய பெயர் பற்றியே கேள்விப் பட முடியவில்லை. இது கூடத் திமுகவுக்கு ஒரு நல்ல பாடமாக இருக்கும் என நினைக்கிறேன். ஆட்சியில் இருக்கும் போது சொரிந்து விடுபவர்கள் சொல்வதை எல்லாம் நம்பி நாமே நம்மைப் பெரிதாக நினைத்து விடக் கூடாது; ஏமாந்து விடக் கூடாது. அவர்கள் பிழைப்புக்கு மாரடிப்பவர்கள். நமக்குத் தெரியாதா நம்மைப் பற்றி?

"மக்கள் நலம் மக்கள் நலம் என்றே சொல்லுவார்!" என்று பட்டுக்கோட்டை எழுதிய பாடலின் படி வாழும் தமிழினத் தலைவர், குடும்பத்துக்காகக் கட்சியை வளர்த்து இப்போது அதே குடும்பத்துக்காகக் கட்சியை அழித்து வருகிறாரோ என்று தோன்றுகிறது. குடும்பம் கட்சியை வளர்க்க வில்லை. ஆனால் அழிக்கிறதே?! கட்சியோடு வளர்ந்தவர்கள் கட்சியோடு அழியாமல் பார்த்துக் கொள்வாரா? பொறுத்திருந்து பார்ப்போம்.

நாளை எப்படியோ, இன்று - இப்போது நடந்து முடிந்த தேர்தலில், பெரும்பாலான இடங்களில் இவர்கள்தான் இரண்டாம் இடம். எனவே, எந்தவிதச் சந்தேகத்துக்கும் இடமில்லை. இவர்கள்தான் இப்போதைக்கு தமிழகத்தின் இரண்டாவது பெரிய கட்சி. இன்றைய தினம் வரை, அம்மா சொதப்பினால் (கண்டிப்பாகச் சொதப்புவார் என்ற நன்னம்பிக்கை... யாருக்குண்டோ இல்லையோ எனக்குண்டு!) அடுத்து அதில் பயனடையப் போவது இவர்களே. அது மாற வேண்டும் (இன்னும் முற்போக்கான - நல்லவர்கள் வர வேண்டும் என்கிறேன். தண்ணி வண்டி ஓனரை மனதில் வைத்துச் சொல்ல வில்லை!). ஆனால் மாறுமா? காலம் கிடக்கிறது. கழுதை நடக்கிற போது நடக்கட்டும்.

மற்ற கட்சிகளின் கணக்குகள் பற்றி அடுத்த இரண்டு பாகங்களில் பார்ப்போம்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம் - ஜெயகாந்தன்

நாத்திகம் - இன்னொரு மதம்!

வைகோ என்றோர் அரசியல் ஏமாளி