பழையன கழிதலும் & யாதும் ஊரே!

என் நண்பன் ஒருவன் அடிக்கடி BURN THE BRIDGES என்று சொல்வான். அதன் நேரடிப் பொருள் "பாலங்களைக் கொளுத்து" என்ற போதிலும் அது சொல்லப் படும் இடம் பொதுவாக, "பழைய உறவுகளை மற்றும் நினைவுகளைக் கொளுத்து!" என்று அறிவுரைப்பவையாக இருக்கும். நம்முடைய மொழியில் சொல்ல வேண்டுமென்றால், 'பழையன கழித்தல்' ஓரளவு அதற்கு அருகில் வரும். ஆனாலும் அதில் அவ்வளவு மூர்க்கம் தெரியவில்லை. அது போகிப் பண்டிகைக்கே உரித்தான ஒரு சொல்லாடலாக நம் மனதில் பதிந்து விட்டது ஒரு காரணமா என்று தெரியவில்லை. 'பழையன கழித்தல்' என்பதே பாய்-தலையணை முதலான பழைய தட்டு முட்டுச் சாமான்களைக் கொளுத்துதல் என்றே மனதில் தோன்றுகிறது. அதே வேளையில் அவர்களின் பாலத்தைக் கொளுத்தும் வேலையென்பது உறவு, நினைவு மற்றும் அவற்றுக்கும் மேலான பலவற்றையும் குறிக்கக் கூடிய கனம் கூடிய சொல்லாடல். மேலோட்டமாக இந்தக் கருத்தில் உடன்பாடு இல்லை என்ற போதிலும் அந்தச் சொல்லாடல் மிகவும் பிடித்திருந்தது. எல்லோருக்கும் என்றில்லாவிட்டாலும் சிலருக்கு இது ஒரு முக்கியத் தேவையாக இருக்கிறது. அதில் நீங்கள் எப்படி என்று தெரியவில்லை. :)

நாம் படிக்கும் இலக்கியங்களும் பார்க்கும் படங்களும் பழசை மறக்கக் கூடாது; பிறந்த ஊர் புனித பூமி; பழங்காலத்து உறவுகள் முக்கியமானவர்கள் என்பது போல் சொல்லிச் சொல்லி இயல்பிலேயே இவற்றைப் பிடிக்காதவர்களுக்குக் கூட இவற்றின் மீது ஒரு வித 'இனம் புரியா' ஈர்ப்பை உண்டு பண்ணி விட்டன. இது நம் மண்ணுக்குரிய பண்பாகவே இருக்கிறது. நம்மை விடப் பல மடங்கு வசதியாகி விட்டவர்களைக் கூட "பழசை மறந்த பரதேசிப் பயல்!" என்று திட்டித்தான் நம் பொறாமையை வெளிப் படுத்துகிறோம். கொள்ளையடித்துச் சம்பாதித்தான் என்பது போல ஒரு பெருங் குற்றச்சாட்டாக அதை வைக்கிறோம். இயல்பிலேயே நாம் உணர்ச்சி சார்ந்த ஆட்கள் என்பதால் அந்த மாதிரியான ஓர் உணர்வு நமக்கு இருப்பதில் எந்தவிதமான ஆச்சரியமும் படுவதற்கில்லை.

இப்படியான ஒரு சொல்லாடல் கண்டு பிடித்ததில் இருந்தே வெள்ளைக்காரர்கள் இதை அதிகம் செய்யக் கூடியவர்களாக இருப்பார்களோ என்று தோன்றுகிறது. அல்லது, அதைச் செய்ய வேண்டியதற்கான தேவை அதிகம் இருந்தவர்கள் என்றும் அதற்கான காரணத்தைச் சொல்லலாம். பொதுவாகவே மேற்குலக மாந்தர்களுக்கு அது ஓர் எளிதான வேலைதானே. ஒரே வாழ்க்கையில் பல மணப் பாலங்களைக் கொளுத்தி விட்டு புதிய பாலங்கள் கட்டிக் கொள்பவர்கள் அவர்கள். மணப் பாலங்கள் அவர்களுக்கு மண் பாலங்கள். அந்த அளவுக்கு நம்மால் இருக்க முடியாது என்ற போதிலும் ஓரளவுக்கு அதைப் பழகிக் கொள்வதும் நல்லதென்றே படுகிறது.

சிறு வயதில் நாம் வாழ்ந்த மண் மற்றும் நம்மோடு வாழ்ந்த மனிதர்கள் மீது வாழ்க்கை முழுவதும் அந்த இனம் புரியாத ஈர்ப்பு இருந்து கொண்டே இருக்கிறது. அவ்விடங்களையும் ஆட்களையும் விட்டு வெகு தொலைவு வந்து முற்றிலும் மாறு பட்ட வாழ்க்கை முறைகளுக்கு அடிமையான பின்பும் அந்த நினைவுகள் நம் மனதில் கருப்பு வெள்ளைக் காட்சிகளாக வந்து சென்று கொண்டே இருக்கின்றன. பிற்காலத்தில் அதே மண்ணில் அதே மக்களோடு அதே மாதிரியான ஒரு வாழ்க்கையை, சற்று நம்முடைய வெளி வாழ்க்கை முறைகளையும் கலந்து, வாழ வேண்டும் என்ற எண்ணம் அப்படி வெளியேறி வந்த எல்லோருக்குமே இருப்பது போலத்தான் தெரிகிறது. எதார்த்தம் என்னவென்றால் இது நினைவாகவே இருந்து விடுவதுதான் அதிக சுகம். தப்பித் தவறி அதை நனவாக்கக் கிளம்பிப் போனவர்கள் யாரும் நினைவில் இருந்த அளவு சுகம் நிசத்தில் இருந்ததாக அனுபவித்துச் சொன்னதில்லை. 'அப்படியே பெருநகர இறைச்சலிலேயே ஓட்டியிருந்தால் இதமான நினைவுகளாவது சாகும் வரை அவ்வப்போது மனதை வருடி மகிழ்ச்சிப் படுத்திக் கொண்டே இருந்திருக்குமே' என்று பெட்டி-படுக்கைகளைச் சுருட்டிக் கொண்டு திரும்ப ஓடி வந்தவர்கள்தாம் நிறைய.

காரணம் என்ன? நம் எளிய மொழியில் சொல்வதென்றால், நம் புதிய வாழ்க்கை முறை அங்கேயே இருந்து விடுகிற மக்களுடையதை விட ஆடம்பரம் அதிகமானதாக - அவர்களால் அடைய முடியாததாக - பொறாமைப் படத் தக்கதாக - பம்மாத்துப் பண்ணக் கூடியதாக இருக்கிறது. நாம் வெளியேறி வந்து புதிது புதிதான வாழ்க்கை முறைகளைப் பழகி விட்டபின்பு, அவர்களைப் போலவே - அவர்களில் ஒருவராக வாழ இயலாதவர்களாகி விடுகிறோம். இது கிட்டத்தட்ட கறுவாடானபின் கடலுக்குள் தூக்கிப் போட்டு நீந்தச் சொல்வது போல். முடியுமா அது?

பழையன கழித்தல் மேற்கர்களுக்கு ஓரளவு எளிதாக இருக்கிறது. நம்மில் சிலருக்கும் இது நிறைய எளிதாகவே இருக்கிறது. நமக்குப் பிடித்தாலும் பிடிக்காவிட்டாலும் அப்படிப் பட்டவர்களுக்குத்தான் புறவாழ்க்கை வெற்றி எளிதில் கிடைக்கிறது. அதாவது, பொருளியல் வெற்றி! "எது வெற்றி என்பதே என்னைப் பொருத்தமட்டில் வேறு!" என்று சொல்பவர்கள் இங்கே காதைப் பொத்திக் கொள்ளவும். நம்மைப் போன்ற சாமானியர்களுக்கு இதுதான் கசப்பான உண்மை. இதைப் புரிந்து கொளல் மிக எளிதான ஒன்றுதான். தாய்ப்பாசம் அதிகமுள்ள குழந்தை அம்மா காலைச் சுற்றிக் கொண்டே வருமே ஒழிய திரைகடலோடித் திரவியம் கொண்டு வராது. இந்தப் பிணைப்புகளுக்கெல்லாம் ஆட்பாடாத ஆட்கள்தாம் அத்தகைய வெற்றிகளை எளிதில் அடைய முடிகிறது. அதனால்தான் நம் ஊர்களில், "இந்த ஊரை விட்டுப் போனால்தான் முன்னுக்கு வரமுடியும்!" என்று நிறையப் பேர் அடிக்கடிச் சொல்கிறார்கள்.

இந்த மண்ணன்பு  ஒருபுறம் நம் இலக்கியங்களிலும் திரைப்படங்களிலும் புனிதமானதாகவும் உணர்ச்சிபூர்வமானதாகவும் சித்தரிக்கப் படுகிறது. இன்னொருபுறம் நம் எதார்த்த வாழ்வில் இது ஒரு சுத்த இத்த பண்பாகப் பேசப் படுகிறது. புனிதத்துக்கும் உணர்ச்சிக்கும் ஏகப்பட்ட காரணங்கள் சொல்ல ஏகப்பட்ட ஆட்கள் இருக்கிறார்கள். அது ஏன் ஒரு சுத்த இத்த பண்பாகப் பார்க்கப் படுகிறது என்பதை மட்டும் நாம் இன்று பார்ப்போம். மண்ணையும் மக்களையும் மதிக்கக் கூடாது என்று சொல்ல விழைவதல்ல நம் நோக்கம். அந்த போதைக்கு அடிமையாக வேண்டியதில்லை என்பதே நான் சொல்ல முனைவது. இப்போது பாலத்தைக் கொளுத்தி விட்டுச் செல்வதன் மூலம் பின்னர் இப்போதிருப்பதை விட வளமாக ஊர் திரும்பி அதை விட அழகான பாலங்கள் கட்ட முடியும் என்றால், அதில் என்ன தப்பு? உணர்ச்சி வசப் படாமல் நான் சொல்ல முனைவதை சரியாகப் புரிந்து கொண்டால் நன்மை பயக்கும்.

கொஞ்ச காலம் முன்பு கண்டோன்மென்ட் இரயில்வே நிலையத்தில் பெரியவர் ஒருவரைச் சந்தித்தேன். 'நீங்க எந்த ஊர்?', 'நான் எந்த ஊர்?' போன்ற விஷயங்கள் பற்றிப் பேசிக் கொண்டிருந்தோம். நம்ம பகுதிக் காரர் என்று அறிந்து இன்னும் ஆர்வமாகப் பேசினேன். என் கல்லூரி ஆசிரியர்கள் சிலர் பற்றியெல்லாம் பெயர் சொல்லி விசாரித்தார். பெரும்பாலான காலத்தை டெல்லியில் வாழ்ந்து கழித்து இப்போது ஓய்வுக் காலத்தை பெங்களூரில் கழித்துக் கொண்டிருக்கிறார். சென்னையோடு கொஞ்சம் தொடர்பு இருக்கிறது ஆனால் சொந்த ஊரோடு அவ்வளவாக இல்லை. அன்று சொந்த ஊருக்குப் போய்க் கொண்டிருந்தார். ஓய்வெடுக்கும் காலத்தில் ஊரில் செட்டிலாக வேண்டும் என்று தோன்றவில்லையா என்றேன். "அதெல்லாம் மாயை. போகிய இடங்களில் நல்ல ஆட்களைப் பழக்கிக் கொண்டால் எல்லாமே சொந்த ஊர்தான். இப்போதும் சொந்த ஊரோடு தொடர்பு வைத்திருக்கிறேன். ஆண்டுக்கு ஒரு முறையோ என்னவோ போய் வருகிறேன். மகிழ்ச்சியாகத்தான் இருக்கிறேன்!" என்றார். அந்த உரையாடலை அவ்வளவு எளிதாக மறக்க முடியுமா என்று தெரியவில்லை.

பூர்வீகம் என்பதே மனித குலத்தின் குணாதிசயத்துக்கு எதிரானது. நிறையப் பேர் சொல்வது போலச் சொன்னால், இயற்கைக்கு எதிரானது. மாற்றம்தான் இயற்கை. இன்னும் சொல்லப் போனால் செயற்கைதான் இயற்கை. "என்னடா திடீர்னு மெண்டல் போலப் பேச ஆரம்பிச்சுட்ட?" என்று குழம்புகிறீர்களா? மனிதனுக்குக் கால்கள் இருப்பது இடம் விட்டு இடம் பெயரவும், கைகளும் மூளையும் இருப்பது அதையே எளிதாக்கிக் கொள்ளவும் அதற்கான புதுப் புதுக் கண்டுபிடிப்புகளைச் செய்யவுமே. நீண்ட நெடிய மனித குலத்தின் வாழ்வில் எல்லா மண்ணுமே ஒவ்வொரு காலத்தில் வாழ்க்கைக்கு வசதியில்லாததாக ஆகத்தான் செய்கிறது. தட்பவெப்பமோ, பஞ்சமோ, வெள்ளமோ, வளத்தின் காரணமாக ஒரே இடத்தில் அளவுக்கு அதிகமான ஆட்கள் குவிதலோ, மாற்றம் நாடும் மனித மனமோ என்று ஏதோவொரு காரணமாக அந்த இடம் முன்பு போல வாழ வசதியில்லாததாக ஆகி விடுகிறது. அந்தச் சூழ்நிலையில் இடப்பெயர்ச்சி நடந்தே தீரும். அது மனித வரலாற்றில் பற்பல முறைகள் நடக்கவே செய்திருக்கிறது. சில இடப்பெயர்ச்சிகள் மிகச் சிறியவை - குறைவான தொலைவுக்குள் நிகழ்பவை. சில இடப்பெயர்ச்சிகள் மிகப் பெரியவை - கண்டம் விட்டுக் கண்டம் செல்லும் அளவுக்குத் தொலைவானவை.

நாம் எல்லோருமே இன்று நம் சொந்த ஊர் என்று சொல்லிக் கொண்டிருப்பது எதுவுமே நம் சொந்த ஊர் அல்ல. ஓரளவுக்கு இருப்பதிலேயே பழைய சொந்த ஊர் எதுவென்று கண்டு பிடிக்க வழி - நம் குலதெய்வ வழிபாடு. குலதெய்வம் என்று ஒன்று கொண்டுள்ள எல்லோருக்குமே அந்த ஊர்தான் சொந்த ஊர். பஞ்ச காலத்தில் நீண்ட தொலைவுக்கு இடம் பெயர்ந்த - அதாவது, பஞ்சம் பிழைக்கக் கிளம்பிய குடிகள் எல்லோரும் செய்த இன்னொரு வேலை என்னவென்றால், அவர்களுடைய அப்போதைய தாய் மண்ணை விட்டுக் கிளம்பும் வேளையில் அங்கிருந்த குலதெய்வ ஆலயத்து மண்ணை எடுத்துக் கொண்டு சென்று சேர்ந்த இடத்தில் ஓரிடத்தில் அதே கோவிலை மீண்டும் கட்டி எழுப்பிக் கொண்டார்கள். அல்லது, பின்னர் போன இடத்தில் இருந்து ஒருவரோ ஒரு குழுவோ கிளம்பித் தாய் மண்ணுக்கு வந்து மண் எடுத்துச் சென்றார்கள் என்று எம் குல வரலாறுகள் சொல்கின்றன. அதனால் அத்தகையவர்களுக்கு (மண்ணெடுத்துச் சென்று மறு நிர்மாணம் செய்தவர்களுக்கு!) குலதெய்வக் கோவிலை வைத்தும் அதுதான் சொந்த ஊர் என்று சொல்ல முடியாது. ஏனென்றால், குலதெய்வமும் அவர்களோடு இடம் பெயர்ந்து, அந்த வரலாறும் பிற்கால சந்ததிக்குத் தெரியாமல் போயிற்று.

அந்தக் காலத்தில் பிழைப்புக்காக பல கிராமங்களில் இருந்து சென்னை போன சில குடிகள் இன்று சென்னையில் உள்ள ஏதோவொரு பகுதியையே அவர்களுடைய பூர்வீகம் என்று சொல்லிக் கொண்டிருக்கின்றன. அவர்களின் பிள்ளைகள் ஏதோவொரு மேற்கு நாட்டில் இருந்து கொண்டு இந்தியா அல்லது சென்னை தன் சொந்த மண் என்று சொல்லிக் கொண்டிருக்கின்றன. அப்படியெல்லாம் சொல்லிக் கொண்டாலும் இங்கிருக்கும் வசதி வாய்ப்புகளை விட சென்ற இடத்தில் சிறப்பாக வாழ்க்கையை நடத்திக் கொள்வதற்கு ஏற்ற வசதி வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொள்வதிலும் அவர்களின் கவனத்தைச் செலுத்திக் கொண்டிருக்கிறார்கள். சில நூற்றாண்டுகள் கழித்து, அவர்களுடைய சந்ததிகளும் அப்படியே - அந்த மண்ணின் மைந்தர்களாகவே அங்கேயே அமர்ந்து விடுவார்கள். இங்கே விட்டுச் சென்ற அவர்களின் உடன் பிறப்புகளின் சந்ததிகள் வேறொரு குலமாக - இனமாக வாழ்ந்து கொண்டிருப்பார்கள். ஒருவேளை, ஏதோவொரு கட்டத்தில் - ஏதோவொரு கட்டாயத்தில், இரு சாராரும் வெவ்வேறு இனக்குழுக்கள் என்று மூர்க்கத்தனமாக மோதிக் கொள்ளவும் வாய்ப்பிருக்கிறது. இதெல்லாம் மனித குலம் பார்க்காத கதைகளா என்ன?

இப்படித்தான் மனித குலம் இன்று வரை வாழ்ந்து வருகிறது என்பது என் புரிதல். இப்போது சொல்லுங்கள் - பூங்குன்றனார் சும்மாவா சொன்னார்? யாதும் ஊரே யாவரும் கேளிர் என்று! எல்லாம் ஓர் அர்த்தத்தோடுதான் நம் முன்னோர்கள் சொல்லியிருக்கிறார்கள் என்று எல்லோரையும் போல் நானும் ஒருமுறை சொல்லி விடுகிறேனே! எனவே, யாதும் ஊரே யாவரும் கேளிர் என்று நாம் கருத வேண்டும் என்று மட்டுமே அவர் சொன்னதாக எனக்குப் படவில்லை; அதுதான் உண்மை என்றே அவர் சொல்லியிருக்கக் கூடும் என்பது என் ஊகம். அதனால்தான் ஐ.நா.சபை அதைத் தம் வாசகமாக ஏற்றுக் கொண்டிருக்க வேண்டும்.

இப்போது, முந்தைய சொல்லாடலுக்கு வருவோம். அதாவது, பழையன கழித்துப் பாலங்களைக் கொளுத்துதல்! யாதும் ஊரே யாவரும் கேளிர் என்கிற நிலைக்குப் போய் விட்டாலே சொந்த ஊர்ப் பாசம் - சொந்தக்காரர் பாசம் எல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக மங்கி விடும். ஏதோவொன்று இங்கில்லை என்கிற மனநிலைதானே அங்கே நம்மை அழைத்துச் செல்வது. அது எங்கும் உண்டு என்கிற மனநிலை வந்து விட்டால் எதற்குக் கறுவாடு கடலுக்குள் குதிக்க வேண்டும்? என்ன சொல்றீங்க? உண்மைதானே?! ஆனால், எல்லோரும் அப்படி நினைக்க வேண்டுமே! எங்கும் எவர்க்கும் எந்தக் காரணத்துக்காகவும் இரண்டாம் தர மரியாதை கொடுக்கப் படக் கூடாதே! மனித சமூகம் எல்லோரும் இந்நாட்டு மன்னர்கள் என்று எல்லா நாட்டிலும் எல்லோரையும் ஏற்றுக் கொள்ளும் நாள் வரும்போது பாலங்களைக் கொளுத்துதல் எளிதாகவே ஆகி விடும் என்றே தோன்றுகிறது.

இவையனைத்துக்கும் மேல், பால்யப் பருவ நினைவு என்பது இருந்து கொண்டே இருக்கட்டும். ஆண்டுக்கு ஒருமுறை குலதெய்வத்தை வழிபட்டு விட்டு, மண்ணையும் மக்களையும் கண்டு களித்து விட்டு, அவர்களோடு ஒன்றாக உட்கார்ந்து கறிச் சாப்பாடு சாப்பிட்டு விட்டு, மீண்டும் அவ்வப்போதைய இருப்பிடத்துக்கு மீண்டு வந்து, அந்த அனுபவங்களைப் பற்றிச் சிலாகித்துப் பேசிக் கொண்டிருந்து விட்டு, ஆக வேண்டிய வேலையைப் பார்ப்பதுதானே அதை விட சுகம்?! முடிந்தால் அவர்களையும் வாழ்வுக்கான வசதிகள் அதிகம் இருக்கும் பகுதிகளுக்கு அழைத்து வந்து வெவ்வேறு உலகங்களைக் காட்டிக் களித்தல் அதையும் விட சுகம். அதை விடுத்து, அங்கேயே போய் அவர்கள் கண் முன்னாலேயே - அவர்களுக்குப் பிரயோசனமாகவும் இல்லாமல் - அவர்களின் கண் உறுத்தும்படி வாழ்வதுதான் சுகம் என்று சொல்வது சொல்லத்தான் சுகம் என்றே படுகிறது.

கருத்துகள்

  1. உங்களுக்குத் தெரிந்தவன்தான்.வெள்ளி, நவம்பர் 25, 2011 10:41:00 AM

    1998லேர்ந்தா?

    உங்களின் இந்த முகம் ஆச்சரியந்தான் பாரதி!

    பதிலளிநீக்கு
  2. எனக்குத் தெரிந்தவரா? அப்புறம் எப்படி நான் இந்தச் சோலி பார்த்துக் கொண்டிருப்பது மட்டும் தெரியாமல் இருந்தீர்கள்? :)

    1998 தேதியிட்டவை பிற்காலத்தில் ஏற்றிய பழையவை. முறையாக ஆரம்பித்தது 2004 என நினைக்கிறேன்.

    எப்படியோ, வருகைக்கும் வாசிப்புக்கும் நன்றி. அடிக்கடி வந்து செல்லுங்கள்.

    பதிலளிநீக்கு
  3. உங்களுக்குத் தெரிந்தவன்தான்.ஞாயிறு, டிசம்பர் 18, 2011 8:54:00 AM

    தமிழ்மணத்துல சமீபத்துலதான் இணைஞ்சீங்கன்னு நெனைக்கிறேன். அதனாலதான் தெரியல. எனிவே, போட்டுத் தாக்குங்க.

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம் - ஜெயகாந்தன்

சாம, தான, பேத, தண்டம்

"நான் என்னை ஒரு மேதையும் புனித வேசியும் போல் உணர்கிறேன்": அலெஹாண்ட்ரோ ஜோடராவ்ஸ்கிக்குச் சில கேள்விகள்