உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள்: கட்சிவாரிக் கணக்குகள் (2/3)

முந்தைய பாகத்தில் நீண்ட முன்னுரையும் தமிழகத்தின் இப்போதைய முதல் இரண்டு பெரிய கட்சிகள் பற்றியும் பார்த்தோம். எந்தச் சந்தேகமும் இல்லை. அவைதான் இப்போதைக்குத் தமிழகத்தின் இரு மிகப் பெரிய கட்சிகள். நமக்குப் பிடித்தாலும் பிடிக்கா விட்டாலும். இந்தப் பாகத்தில் அடுத்த நான்கு இடங்களில் உள்ள கட்சிகள் (தேமுதிக, காங்கிரஸ், பாமக, மற்றும் மதிமுக) பற்றிப் பார்ப்போம். அடுத்த பாகத்தில் மிச்சமிருக்கும் உதிரிகள் அனைவர் பற்றியும் பார்ப்போம். அவர்களும் எளிதில் தவிர்க்கத் தக்க சக்திகள் அல்லர். அவர்களுக்கென்று விரலுக்குத் தக்க வீக்கமாய் சில கணக்குகள் இருக்கின்றன. அவற்றையும் பார்த்து விடுவோம்.

தேமுதிக: ஆரம்பத்திலேயே நிறையப் பேர் சொன்னார்கள் - இந்த ஆள் எதற்கும் பிரயோசனமில்லாத ஆள் என்று. நம்ப முடியாமல்தான் இருந்தது அப்போது. இப்போது நிரூபித்து விட்டார். உள்ளாட்சித் தேர்தலை மனதில் வைத்து அடக்கி வாசித்தது சரிதான். அதற்காக செயல் படாமலே இருப்பது எப்படிச் சரியாகும்? எதிர்க் கட்சித் தலைவராக இருப்பதுதான் பேசுவதற்கு ஏதுவான பொறுப்பு. முதல்வராக இருப்பதை விட எளிதான பொறுப்பு. இதில் ஒன்றும் பிடுங்கா விட்டால் உறுதியாகச் சொல்லலாம். முதலமைச்சர் ஆனால் கண்டிப்பாக எதுவும் பிடுங்க மாட்டார் என்று. ஒரு பொறுப்பும் கிடையாது மண்ணாங்கட்டியும் கிடையாது. இதனால்தான் கட்சிக்குள் எல்லோரும் இப்போதே அண்ணன் போய் அண்ணி வருவது பற்றிப் பேச ஆரம்பித்து விட்டார்கள். இவர் இந்த அளவுக்காவது தெளிவாக இருப்பதற்கு அவரே காரணம் என்று எல்லோருமே சொல்கிறார்கள். அதனால் அவரே வந்து விட்டால் நல்லது என்றே நமக்கும் தோன்றுகிறது.

இரண்டாவது மூன்றாவது பெரிய கட்சிகளுக்கு உரிய எந்தத் தகுதியும் இல்லாத ஆள் என்றாலும், மக்கள் இவர்கள் மீது இன்னும் நம்பிக்கை வைத்திருக்கிறார்கள் என்றே காட்டியிருக்கிறது இத்தேர்தல். சட்டமன்றத்தில் பிரதான எதிர்க் கட்சியாக இருக்கிறார்கள் என்பதற்காக இவர்களைத் திமுகவை விடப் பெரிய கட்சி என்று சொன்னது நம் தப்பு. அது அவர் தப்பல்ல. இரண்டாவது பெரிய கட்சி என்று சொல்லி விட்டு, இப்போது பல இடங்களில் டெபாசிட் இழந்து விட்டதால் அவர் செல்லாக் காசு என்பது முட்டாள்த்தனம். அவருடைய வாக்கு வங்கியில் பெரிய சரிவு ஏதும் ஏற்பட வில்லை. இடம் மூன்றாவது என்றாலும் அது பெரிய வெற்றியே. காங்கிரஸ், பாமக, மதிமுகவை விட அதிக வாக்குகள் வாங்கியிருப்பது அவருக்கான இடத்தை உறுதி செய்கிறது. 

நாம் முன்பு சொன்னது போல, இப்போது தனித்து நின்று வென்று விட்டதால், அதிமுக இவர்களை இழிவாகப் பார்க்கக் கூடாது. அது கடைசிக் காலத்தில் வேண்டாத படிப்பினையையே கொடுக்கும் தலைவிக்கு. பத்து விழுக்காடு வாக்குகள் என்பது பல தொகுதிகளில் வெற்றி தோல்வியைத் தீர்மானிப்பது மட்டுமின்றி, மக்களின் மனப்போக்கையும் மாற்ற வல்ல சக்தி என்பதை சர்க்காரியாத் தலைவரிடம் போய்க் கேட்டால் ஒத்துக் கொள்வார். இந்தம்மாவுக்கு அதெல்லாம் புரியாது. சொரிந்து விடும் தினமலர்களுக்குப் புரிந்தாலும் காட்டிக் கொள்ள மாட்டார்கள். இப்போதைக்கு மூன்றாவது அணி என்று ஒன்று அமைந்தால் அது இவர் தலைமையில்தான் அமைய முடியும். காங்கிரஸ் கட்சியோடு கூட்டணி வைத்தால் இவர் கைலாசம் போக வேண்டி வரும் என்பதைப் புரிந்து கொண்டால் நல்லது. ஆனால், அப்படி ஒன்று நடந்தால், அப்போது இவர்தான் முதல்வர் வேட்பாளர். அதற்கான நம்பர் இவரிடம் இருக்கிறது. அதில் பேச்சு வார்த்தைக்கே இடமில்லை. 

சட்டமன்றத் தேர்தலில் அதிமுகவோடு கூட்டணி வைத்ததால் இவரை இனி யாரும் நம்ப மாட்டார்கள் என்று திமுக அனுதாபிகள் பேசிக் கொண்டார்கள். அங்கே கூட்டணி வைத்ததால்தான் இன்று எதிர்க் கட்சி மரியாதை கிடைத்திருக்கிறது. ஆசைப்பட்ட ஆட்சி மாற்றம் நடந்திருக்கிறது. கூடுதல் உற்சாகத்தோடு உள்ளாட்சித் தேர்தலைச் சந்திக்கும் தைரியமும் பசையும் கிடைத்திருக்கிறது. உண்மையைச் சொல்ல வேண்டும் என்றால், முடிவுப் படி திமுக இரண்டாவது பெரிய கட்சி என்றாலும், தலைவர் சுத்த இத்த கேஸ் என்றாலும், இந்தத் தேர்தலில் உழைப்புப் படி இவர்கள்தான் இரண்டாவது பெரிய கட்சி.எல்லா இடங்களிலும் வேட்பாளர்களை நிறுத்தினார்கள். திமுகவே ஆள் நிறுத்த முடியாமல் போன பல பகுதிகளில் இவர்களின் ஆட்கள் பட்டையைக் கிளப்பினார்கள். டெபாசிட்டே இழந்தாலும் இதில் ஒரு நன்மை இருக்கிறது. அடி மட்டத்தில் கட்சிக்கென்று விசுவாசிகள் உருவாக்கி விட்டார்கள். கட்சி அமைப்பு பலப் பட்டு விட்டது. இந்த விபரம் தெரியாமல்தான் காங்கிரஸ் கட்சி தன்னை அழித்துக் கொண்டது. கழற்றி விட்ட அடுத்த நாளே கலங்காமல் தன்னுடைய வேட்பாளர்களை அறிவித்தாரே, அதுதான் இவருடைய பலம். தைரிய லட்சுமணன். சரக்கு உள்ளே போனால் யாருக்கு வராது தைரியம்?

சிபிஎம் இவர்களிடம் வந்தது இருவருக்கும் நல்லதாய் முடிந்தது. இதில் அதிகம் ஆதாயம் அடைந்தது தேமுதிகதான் என்று சொல்ல வேண்டும். மதுரை மற்றும் திருப்பூர் போன்ற பகுதிகளில் இடதுசாரிகளுக்கென்று ஒரு வாக்கு வங்கி இருக்கிறது. அது இவர்களுக்கு மிகப் பெரும் நன்மை பயத்திருக்கும் என்றெண்ணுகிறேன். அது மட்டுமில்லை ஒரு தேசியக் கட்சியுடன் கூட்டணி என்பது தொலை நோக்கில் அவருக்கு இன்னும் பல நன்மைகளைப் பயக்கும்.

இவருடைய வளர்ச்சியால் பெரிதும் பாதிப்படையப் போவது வைகோ. அவ்வளவு கால அரசியல் அனுபவமும் நன்மதிப்பும் இருந்தும் சினிமா மோகத்தின் முன்னால் ஈடு கொடுக்க முடியாமல் போவதை அவரால் எப்படித்தான் தாங்கிக் கொள்ள முடிகிறதோ? :(

எது எப்படியிருப்பினும், இவர்தான் இன்றைய நம்பர் மூணு. அவரால்தான் நம்பர் டூவை நெருங்க முடியும்.

காங்கிரஸ்: இந்தத் தேர்தலில் மிகப்பெரும் இழப்பு இவர்களுடையதே என்று பலர் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். எதிர் பார்த்ததுதானே என்று இன்னும் சிலர் சொல்கிறார்கள். நம் கருத்து என்ன? இரண்டும் ஓரளவு சரியே. ஓரளவே சரி. ஏன்? ஏனென்றால், தமிழகத்தைப் பொருத்த மட்டில் சவாரி செய்தே அழிந்த கட்சி காங்கிரஸ். மத்தியில் ஆட்சி அமைக்கத் தேவைப் படும் எண்ணிக்கை எப்படிக் கிடைத்தாலும் சரி, கட்சியின் வளர்ச்சி பற்றியெல்லாம் கவலைப் படாமல் பிழைப்பை நடத்தினார்கள் டெல்லி வியாபாரிகள். அவர்களும் ஆசைப் பட்ட படியே கட்சிக்குள்ளும் கூட்டணி என்ற பெயரிலும் பேராசை பிடித்த சில பிறவிகள் அவர்களுக்கு வாய்த்துக் கொண்டேதான் இருக்கிறார்கள். இவர்களுக்கு அவர்களின் அதிகார பலத்தால் நன்மை. அவர்களுக்கு இவர்களின் எண்ணிக்கை பலத்தால் நன்மை.

இப்படியே ஓடிய பிழைப்பில் வாத்தியாரின் மரணம் ஒரு வாய்ப்பைக் கொண்டு வந்து கொடுத்தது. 1989-இல் தனியாக நின்று என்னதான் நம் பலம் என்று பார்த்து விடலாம் என்று தைரியமான முடிவு எடுத்தார்கள் அண்ணல் ராஜீவும் அவருடைய அடிவருடிகளும். அந்த தைரியத்துக்கு ஒரு காரணம் இருந்தது. அது - நடந்தது சட்டமன்றத் தேர்தல்தானே என்பது. எப்படியானாலும் இரண்டு வருடங்களுக்குப் பின் வரப் போகிற பாராளுமன்றத் தேர்தலுக்குள் ஏதாவதொரு மீன் சிக்கும் என்ற நம்பிக்கையும் இருந்திருக்கும். அவர்கள் எதிர் பார்த்தது போலவே 91-இல் புதிய அதிமுக என்ற மீன் சிக்கத்தான் செய்தது. அதற்கு முன் 89 கதையைப் பேசி விடுவோம். தனியாக நிற்கலாம் என்று முடிவு எடுத்தார்களா? ஆம். எடுத்தார்கள். எந்த தைரியத்தில் அப்படி எடுத்தார்கள் என்று கேட்கிறீர்களா? காரணம் இருந்தது.

அதிமுக இரண்டாகப் பிரிந்து தேர்தலைச் சந்தித்தது. பத்து வருடங்களுக்கு மேலாக அப்போது வரை திமுக சிறப்பாக இருக்க வில்லை. அதனால், நமக்கென்று ஒரு வாக்கு வங்கி இருக்கிறது. திராவிடர்கள் எல்லோரும் அடித்துக் கொண்டு சாகையில் பிரிகிற வாக்குகள் நமக்கும் கொஞ்சம் சாதகமாக அமையும் என்று நம்பி இறங்கினார்கள். அதுவும் சரியென்றே முடிவுகள் உணர்த்தின. நூற்றுக்கும் மேலான இடங்களில் திமுக வென்றபோது 27 இடங்களில் ஜெ அணி வென்றது; மூன்றாவதாக 26 இடங்களில் காங்கிரஸ் வென்றது. நன்றாகக் கவனியுங்கள் - இது தனியாக நின்று பெற்ற வெற்றி. இதன் மூலம் புரிவது என்ன? அன்றைய சூழ்நிலையில் காங்கிரஸ் கட்சிதான் மூன்றாவது பெரிய கட்சி. வாத்தியாரின் மனைவி ஜா. வின் கட்சியைவிட - கிட்டத்தட்ட அவருடைய தோழி ஜெ. வின் கட்சி அளவுக்குப் பெரிய கட்சி.

அவர்களுக்கென்று ஒரு வலுவான வாக்கு வங்கி இருந்தது. நேருவும் இந்திரா காந்தியும் விட்டுச் சென்ற வாக்கு வங்கி. காமராஜர் விட்டுச் சென்ற வாக்கு வங்கி ஒன்றும் இருக்கிறது. அவருக்காக ஒரு கூட்டம் இருக்கிறது. அது மட்டுமில்லை, இன்றைக்கும் தென் தமிழகத்தில் நாடார் பகுதிகள் அனைத்திலும் காங்கிரஸ் கட்சி ஓர் அழிக்க முடியாத சக்தியாகத்தான் இருக்கிறது. ஐயாவும் அம்மாவும் ஓரளவு அதை உடைத்துக் கொண்டிருக்கிறார்கள் இப்போது. அந்தக் காலத்தில், "கீழே இரட்டை இல்லை; மேலே கை!" என்றுதான் எங்கள் ஊர்ப் பக்கம் உள்ள பெரிசுகள் சொல்வார்கள். வாத்தியோரோடு கூட்டணி வைத்து வைத்து - பாராளுமன்றத் தேர்தல்களில் அதிகப் படியான இடங்களில் நின்று நின்று மக்களுக்கு அந்தச் சின்னம் நன்கு பழக்கப் பட்டிருந்தது. அவருடைய காலத்துக்குப் பின்பு இவர்கள் யாருடன் கூட்டணி வைக்கிறார்களோ அவர்களுக்குத்தான் வெற்றி என்று இவர்கள் நீண்ட காலமாகவே ஒரு பம்மாத்துப் பண்ணிக் கொண்டிருக்கிறார்கள். அதுவும் உண்மைதான். அண்டப் புளுகு ஆகாசப் புளுகு என்று சொல்வதற்கில்லை. மூப்பனார் என்ற மனிதர் இருக்கும் வரை இது தொடரத்தான் செய்தது. அவர் பிரதமர் ஆகியிருந்தால் இன்னும் வளர்ந்திருப்பார்கள். அதை அறிந்துதான், தன் பிள்ளைகளின் வாழ்க்கையல்லவா பாழாகி விடும் என்று பயந்துதான் அதைக் கெடுத்தார் நம்ம தமிழைய்யா. அவர் காலத்திலேயே ஒரு மாபெரும் தோல்வியைச் சந்தித்துத்தான் மூப்பனார் இந்த மண்ணை விட்டுப் போனார். அதன் பிறகு 'சொய்ங்' என்று கீழே கீழே போய்க் கொண்டே இருக்கிறார்கள் இன்று வரை.

அம்மையார் சொதப்பிய சொதப்பில், இவர்கள் திமுக கூட்டணியோடு வந்த போது ஒரு 40 / 40 வேறு கொடுத்தோமா இடையில்... அதில் திரும்பவும் கொஞ்சம் ஏறிக் கொண்டிருந்தார்கள். இலங்கைப் பிரச்சனை வந்தது. அதிலும் காசை வாங்கிக் கொண்டு கொலைகாரக் கைக்குத்தான் போட்டோம் நம் ஓட்டுகளை. அதற்கடுத்த வந்த சட்டமன்றத் தேர்தலில்தான் அடின்னா அடி அப்படி ஓர் அடி கொடுத்தோம். ஊழல்க் கோபமும் இருந்தது; ஈழக் கோபமும் இருந்தது. கருவறுப்போம் என்ற சீமான் போன்றோரின் பேச்சும் எடுபட்டது. ஒட்டு மொத்தத் தமிழகத்தை விடச் சற்றே வேறுபட்ட கன்னியாகுமரி மாவட்டம் மட்டுமே இவர்களுக்குக் கை கொடுத்தது. மற்றபடி அது ஒரு மரண அடி என்றே சொல்ல வேண்டும்.

எங்கெல்லாம் கட்சிக்கு உயிர் கொடுக்கப் போகிறேன் என்று ராகுல் கிளம்பினாரோ அங்கெல்லாம் உயிர் குடிக்கத்தான் பட்டது. அதில் தமிழ் நாடும் ஒன்று. இதுதான் இவர்களை வைத்திருக்க வேண்டிய இடம் என்று தமிழகம் பூரித்துப் புளகாங்கிதம் அடைந்தது. இதை நன்றாகப் புரிந்து கொண்டே துண்டுக்காரர் இவர்களைக் கழற்றி விட்டார். அவர் கழற்றி விட்ட போது நாம் எதிர் பார்த்ததோ இதை விடக் கேவலமான ஒரு தோல்வி. நாம் ஆசைப் பட்ட படியான தோல்வி இவர்கள் அடைந்து விட வில்லை. இன்னும் ஐந்தாம் - ஆறாம் இடங்களுக்குப் போய் விட வில்லை. நான்கில்தான் இருக்கிறார்கள். அப்படியானால், என்ன அர்த்தம்? அவர்களும் இந்தத் தேர்தலில் மகிழ்ச்சிதான் அடைய வேண்டும். பெரிதாக யாரும் வந்து பிரச்சாரம் செய்ய வில்லை. அவர்களுக்கே எந்த நம்பிக்கையும் இருக்க வில்லை. நகரங்களில் உள்ள மக்கள் முழுமையாக நிராகரித்து விட்டார்கள். அதையெல்லாம் கடந்து இவ்வளவு வாக்குகளும் வெற்றிகளும் பெற்றிருப்பது என்னைப் பொருத்த மட்டில் வெற்றியே. அது நமக்கு நல்லதில்லை என்றாலும் அதுதான் உண்மை.

பாமக: இந்தத் தேர்தலின் மிகப் பெரிய இழப்பாளி பாமக என்றுதான் சொல்ல வேண்டும். சாதிக்காக ஆரம்பிக்கப் பட்ட ஓர் இயக்கம், பின்பு ஏதோ சாதிக்க உருவானவர்கள் போல் நடிப்பெல்லாம் போட்டு, ஒரு குறிப்பிட்ட சாதியினரிடம் மிகப் பெரிய அளவில் ரீச் ஆகி அதே அளவு மற்றவர்களின் வெறுப்புக்குள்ளாகி, யாராலும் மூச்சுக் காற்று கூடத் தீண்ட முடியாத சூப்பர் நடிகராக இருந்தவரை கொஞ்ச காலம் இருக்கிற இடமே தெரியாத அளவுக்கு அடங்க வைத்து, தேசிய அரசியலிலும் ஒரு நல்ல இடத்தைப் பிடித்து, ஒவ்வொரு தேர்தலிலும் இந்தாண்டையும் அந்தாண்டையும் தாவித் தாவி மனிதன் எதில் இருந்து வந்தான் என்பதை எல்லோருக்கும் நினைவு படுத்திக் கொண்டே இருந்தவர்கள். இன்று இவர்கள் பட்டிருக்கும் அடியைப் பார்த்து மொத்தத் தமிழகமும் மகிழ்கிறது. அந்த அளவுக்கு அவர்களுடைய ஆட்டங்களைச் சகித்துக் கொண்டும் சபித்துக் கொண்டும் இருந்திருக்கிறார்கள் இவ்வளவு நாட்களாக.

மதிமுக போல மாநகராட்சிகளில் மூன்றாம் இடம் வர வில்லை. நகராட்சி எதிலும் வெல்ல வில்லை. ஆனாலும் அவர்களை விடக் கூடுதல் வாக்குகள் வாங்கியிருக்கிறார்கள் என்பதே ஆறுதலுக்கு உரிய விசயம்தான். வரும் தேர்தல்களில் இந்த வாக்கு விகிதத்தைக் காட்டி சீட்டுக் கேட்டு அடம் பிடிக்கலாம். பல ஒன்றியக் குழு உறுப்பினர்கள் வந்திருப்பது இன்னும் அடி மட்டத்தில் உடைந்து நொறுங்க வில்லை என்றே காட்டுகிறது. இவர்களுடைய அழிவுக்கு கேப்டனுக்கு நிறையவே நன்றி சொல்ல வேண்டும். அவர்களுடைய வாக்கு வங்கியை மொத்த மொத்தமாகக் கொள்ளை அடித்ததே அவர்தான். எந்த இனமும் முன்னுக்கு வந்து விட்டதா இல்லையா என்பதை அளவிடுவதே அவர்கள் சங்கம் வைத்துக் கட்சி நடத்தி அரசியல் செய்கிறார்களா என்பதைப் பொருத்துத்தான் தீர்மானிப்பேன். ஒருவர் பின்னால் போய் அவருடைய குடும்பமும் சுற்றமும் வளம் கொழித்துத் திரிய வாய்ப்புக் கொடுக்காமல் இவர்கள் சிதறுவது சொந்தமாகச் சிந்திக்க ஆரம்பித்து விட்டார்கள் என்றே மகிழ்ச்சி அடைய வைக்கிறது.

கட்சிக்குள்ளும் கொஞ்சம் கரைச்சல் கேட்கிறது. அடுத்தடுத்து ஆட்கள் வெளியேறிக் கொண்டும் விமர்சித்துக் கொண்டும் இருக்கிறார்கள். வேறொருவர் பேசினால்தான் இனத்தைச் சொல்லி ஆட்கள் சேர்த்து எதிர்க்க முடியும். உள்ளுக்குள் இருக்கும் நம்மில் ஒருவரே எதிர்த்தால் எப்படிச் சமாளிப்பது? இப்படித்தான் மாட்டிக் கொண்டு விழிக்க வேண்டும். அவ்வளவு சிறப்பாகச் செயல்பட்ட ஏ. கே. மூர்த்தியை அழிக்க முயன்ற போதே சுதாரித்திருக்க வேண்டியவர்கள் கொஞ்சம் மெதுவாகச் சுதாரித்திருக்கிறார்கள். வாய்ப்பு எல்லோருக்கும் வழங்கப் பட வேண்டும் என்கிற கதையை மகனுக்குச் சொல்ல வேண்டியதுதானே? நல்லது எப்போது நடந்தாலும் நல்லதுதானே. இப்போதுதான் நடக்க ஆரம்பித்து இருக்கிறது.

விடுதலைச் சிறுத்தைகளுடனாவது சேர்ந்து செயல் பட்டிருக்கலாம். அதையும் செய்ய வில்லை. மருத்துவரின் ஆளே என் நண்பர் ஒருவர் சொல்வார் - "பாவம் அண்ணன் திருமா. அய்யா அய்யா என்று தொங்கிக் கொண்டிருக்கிறார். அய்யா புத்தி அவருக்குச் சரியாகத் தெரிய வில்லை. சரியான நேரத்தில் ஆப்பு அடிக்கப் போகிறார். அத்தோடு மனிதன் தலை தெறிக்க ஓடப் போகிறார்!" என்று. நல்ல வேளை அப்படியெல்லாம் ஏதும் நடக்க வில்லை என்று நிம்மதிப் பட்டுக் கொள்ள வேண்டியதுதான்.

மதிமுக: இன்று இணையத்தில் செய்தி வாசிக்கிற அளவு இருக்கும் இளைஞர்களின் ஓரளவு மரியாதை பெற்றிருப்பவர் வைகோ. அவர் ஒருவரை வைத்துதான் இயக்கம் என்றாலும் அவரிடம் இன்னமும் இருப்பவர்கள் எந்த எதிர் பார்ப்பும் இல்லாமல் அவருக்காகவும் அவருடைய அரசியலுக்காகவும் மட்டுமே இருப்பவர்கள். கோடிகளுக்கெல்லாம் ஏமாறாதவர்கள். சரியோ தவறோ கொள்கையை முன் வைத்து அரசியல் செய்பவர்கள். ஜெயலலிதாவுடன் இருந்தால் மட்டும் இவரைப் புகழும் தினமலரே இவருடைய அரசியல் நேர்மையைப் பாராட்டி இருக்கிறது. எந்தப் பக்கம் இருந்தாலும் அந்தப் பக்கத்துக்கு ஓவராகவே விசுவாசம் காட்டி வீணாய்ப் போனவர்.

சட்ட மன்றத் தேர்தலில் கழற்றி விடப் பட்ட போது மூன்றாம் அணிக்கான ஓர் அரிய வாய்ப்பு உருவானது. அதை உருவாக விடாமல் செய்த பெருமை அல்லது பழி இவரையே சாரும். அதைச் செய்திருந்தால் ஒரு புரட்சி நிகழ்ந்திருக்கலாம் என்பது என் கணிப்பு. மீண்டும் திமுகதான் ஆட்சிக்கு வந்திருக்கும் என்பது வைகோ மற்றும் நம் மக்கள் பலருடைய கணிப்பு. தேர்தலைப் புறக்கணிக்கப் போவதாக ஒரு முடிவெடுத்து அறிவித்த போது அது நல்ல முடிவென்றாலும் அவரை அழிக்கப் போகிறதோ என்றுதான் தோன்றியது. அப்படி ஆக வில்லை. முதல் முறையாக அவர் எடுத்த முடிவு ஒன்று ஓரளவு ஏற்றுக் கொள்ளப் பட்டது இம்முறைதான்.

ஜெயலலிதா இவரைக் கழற்றி விட்ட போது அதிமுகக் காரர்களே அவர்களுடைய அம்மாவைத் திட்டினார்கள். அந்த அளவு அவர்களிடம் நம்பிக்கை பெற்றிருந்தார். சன் டிவியின் கருத்துக் கணிப்பில் கூட அதிமுகவின் அடுத்த ஆள் யார் என்று கேட்ட கேள்வியில் வைகோவை ஒரு பதிலாகச் சேர்த்திருந்தார்கள் (இழுத்து விட்டு வேடிக்கை பார்க்கத்தான் என்றாலும்!). திமுகவோடு இருந்த போது அந்தக் கட்சிக் காரர்கள் இவரை அதிகமாக நேசித்தார்கள். வாஜ்பாயும் "என் மகன் போல!" என்பார். மன்மோகன் சிங்கும் "என் மரியாதைக்குரிய நண்பர்!" என்பார். அந்த அளவு எந்த அணியிலும் முழுமையாக ஒன்றி விடுபவர்.

உள்ளாட்சித் தேர்தலில் இதை விடச் சிறப்பான ஒரு தீர்ப்பை அவருக்குக் கொடுத்திருக்க வேண்டும். ஆனாலும் கிடைத்ததே பெரிது என்று எண்ணிக் கொண்டும் திருப்திப் படும்படிதான் இருக்கிறது. இரண்டு மாநகராட்சிகளில் மூன்றாம் இடம். முக்கியமான காரணம் - அவர் நிறுத்திய ஆட்களின் தராதரம். இதே சூத்திரத்தை வரும் காலங்களிலும் கைக்கொண்டால் ஓரளவு முன்னேற்றம் உண்டாகலாம். குளித்தலை நகராட்சியில் பெற்றிருக்கும் வெற்றி திருச்சி மாவட்டத்தை அவருக்கு ஒரு முக்கியமான இடமாக்கி இருக்கிறது (கருணாநிதி முதன் முதலில் சட்ட மன்றத்துக்குத் தேர்ந்தெடுக்கப் பட்ட தொகுதி குளித்தலைத் தொகுதி!).

பரவலான வாக்குகளையும் வெற்றிகளையும் வைத்துப் பார்த்தால் பாமகவை விடப் பெரிய கட்சி என்று காட்டி விட்டார் என்று சொல்லலாம். ஆனால் வாக்கு விகிதம் அவர்களுக்கே அதிகம் இருக்கிறது. வரும் காலங்களில் இரு பெரும் கழகங்களோடு சேராமல் இருந்தால் நன்றாக இருக்கும். அதற்கு நிதி நிலையும் மக்கள் ஆதரவும் இடம் கொடுத்துக் கொண்டே இருக்க வேண்டும். இன்னும் பத்து வருடங்கள் கழித்து இவர் முதலமைச்சர் ஆகா விட்டாலும் பரவாயில்லை. தமிழக அரசியலில் இவருக்கென்று ஓரிடம் இருந்தே ஆக வேண்டும். அதற்கு உத்திரவாதம் கொடுப்பதாக இந்தத் தேர்தல் இருக்கிறது.

எல்லோரும் துள்ளிக் குதித்தது போல இவர் முழுமையாக இன்னும் அழிக்கப் பட்டு விட வில்லை என்பதே நமக்கு நல்ல செய்திதான். இத்தனை பணப் பட்டுவாடாக்களுக்கும் மத்தியில் (சென்ற ஆட்சியில் இவருடைய கட்சிக் காரர்களை வளைத்தார்கள்; இந்தத் தேர்தலில் இவருக்கு வாக்களிக்கும் மக்களைக் காசு கொடுத்து வளைத்தார்கள்!), அதையெல்லாம் வென்று இப்படி ஓர் இடத்தைப் பிடித்திருப்பதே இவருக்கு மாபெரும் வெற்றி. இதில் இருந்து மென்மேலும் இயக்கத்தைக் கட்டி எழுப்பட்டும் என்று வாழ்த்துவோம்.

மரியாதைக்குரிய மற்ற உதிரிகள் பற்றி அடுத்த பாகத்தில் பார்ப்போம்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம் - ஜெயகாந்தன்

நாத்திகம் - இன்னொரு மதம்!

வைகோ என்றோர் அரசியல் ஏமாளி