இந்தியா - பன்முகப் பண்பு நோய் (MULTIPLE PERSONALITY DISORDER)
இது ஒரு நாடல்ல கண்டம்
குறைந்த பட்சம் ஓர் உபகண்டம்
சில கண்டங்களைக் காட்டிலும்
அதிக இனங்கள் அடைந்துள்ளோம்
பல்வேறு பாசைகள் பேசுகிறோம்
கூடுதல் கூட்டம் கொண்டுள்ளோம்
மாறுபட்ட மட்பரப்புகளில் மாய்கிறோம்
வேறுபட்ட வெப்பதட்பம் வெந்து குளிர்கிறோம்
பிரித்தாளும் சூழ்ச்சி கொணர்ந்தவன்
பிரிந்திருந்த எம்மெல்லோரையும்
புதியதொரு பெயர் கொடுத்து
புனைத்து வைத்து விட்டுப் போனான்
அதன் படியே
எம்மோடே இணைந்திருக்க வேண்டிய
இன்னும் சிலரை
பிறிதொரு பெயர் கொடுத்து
பிரித்தும் வைத்து விட்டுப் போனான்
பிரிந்திருந்தோரைப் பிணைத்து வைத்ததாலும் பிரச்சனை
பிணைந்திருந்தோரைப் பிரித்து விட்டதாலும் பிரச்சனை
பிரச்சனை பிரச்சனை பிரச்சனை
இன்னமும் இதுவே எங்களின் மிகப் பெரும் பிரச்சனை
பிரிந்திருந்தோர் பிணைந்ததும்
பிணைந்திருந்தோர் பிரிந்ததுமா
பெரும் பிரச்சனை?
பிரிந்தாலும் பிணைந்தாலும்
பிரச்சனையின்றிப் பிழைக்கத் தெரியாத
பிறவிக் குணமல்லவா பிரச்சனை?
மதங்களைப் படைத்தோம்
மருத்துவங்கள் கண்டெடுத்தோம்
மதிப்பற்ற பூச்சியத்தை மதிக்க வைத்தோம்
யோகக்கலை தோற்றுவித்தோம்
காமக்கலை கற்றுக் கொடுத்தோம்
வானவியல் வாழ்வித்தோம்
அணு பிறக்கும் முன்பே அதற்குப் பெயர் பெற்றெடுத்தோம்
இத்தனையும் உண்மையெனில்
இங்கே மலிந்திருக்கும்
களவுகளுக்கும் கலகங்களுக்கும்
குற்றங்களுக்கும் கொடுமைகளுக்கும்
கொலைகளுக்கும் கொள்ளைகளுக்கும்
ஒழுங்கின்மைக்கும் ஒழுக்கமின்மைக்கும்
ஊழலுக்கும் உளமற்ற வாழ்க்கைக்கும்
ஊற்றுக்கண் எங்கே ஒளிந்திருக்கிறது?
உண்மைக் காரணம்தான் எங்கே புதைந்திருக்கிறது?
ஒருவேளை
வேற்றுமையில் ஒற்றுமை பழகுகையில்
பன்முகப் பண்பு நோய் பற்றிக் கொண்டிட்டதோ எம்மை?
அருமை நண்பரே!
பதிலளிநீக்குகருத்துச் செறிவும் சந்தமும் சேர்ந்த கவின்கவி!
மிக்க நன்றி நண்பரே. மகிழ்ச்சி அளிக்கும் கருத்துரை!
பதிலளிநீக்குவேற்றுமையில் ஒற்றுமை பழகுவதால் இந்த நோய்கள் எல்லாம் வந்துவிட்டதாக தயவு செய்து நினைத்துவிட வேண்டாம். இந்த குணங்கள் எல்லாம் இந்திய துணைக்கண்டத்தின் பிறவிக் குணங்கள் (DNA Promlem).
பதிலளிநீக்கு'பாசைகள்' என்பதை 'மொழிகள்' என்று எழுதினால் மிகவும் நன்றாக இருக்கும்.
அண்ணே, இருக்கலாம். அதைத்தான் கவிதைக்காக அப்படி மாற்றிச் சொல்லிப் பார்த்தேன். :)
பதிலளிநீக்குபாசை என்பது சரியான சந்தம் வேண்டி வைத்தது. மற்றபடி, மற்ற இடங்களில் எல்லாம் நான் அதிகம் பயன்படுத்துவது மொழியே. இது போன்ற கலப்புகள் எழுத்தில் தவிர்க்க முடியாதவையாக இருக்கின்றன! :)